arrow_back
வற்பனை சேரல் அத்தியாயம் 27
வற்பனை சேரல் chevron_right பகுதி 27 / 28

அத்தியாயம் 27

visibility 520
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.6/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

குருதி பலிகளையும் நிகழ்ந்த செங்களத்தையும் அறியாத பொற்பனை இந்திரவிழாவில் திளைத்திருந்தது.

விழாவின் களிப்பில், உயர்குடிப் பெண்கள் முதல் சாதாரணக் குலப் பெண்கள் வரை யாவரும் ஒன்றுகூடித் திளைத்தனர். அவர்கள் தம் கூந்தலில் செழுமையான ஐம்பால்முடித்து, அதன் மேல் ஆவி அன்ன மெல்லிய ஈர்ணி துகிலைச் சரித்து விட்டு, நறுமண மலர்களைச் சூடியிருந்தனர்.

விழாக்கோலம் பூண்ட வீதிகளில், வீரர்கள் தங்கள் அகன்ற மார்பில் சந்தனம் பூசி, அதன் மேல் ஒரு சிலர் முத்து மாலைகளும் ஒரு சிலர் புலிப் மாலைகளும் தவழ வலம் வந்தனர். அவர்களின் கறுத்தக் கூந்தல் சென்னிக்கு மேல் குடுமியாக முடிக்கப்பட்டு, அதில் வெற்றிக் குறியாகச் சிறு அரும்புகள் சூட்டப்பட்டிருந்தன.

இளைய மறவர்கள் மெல்லிய யவனப் பட்டு துகிலை இடையில் கட்டி, தங்கள் வீரத் தோள்களில் வங்கிகளும் தொடிகளும் மின்னக் காட்சியளித்தனர். தங்கள் தீர்க்கமான விழிகளால் விழாவின் களிப்பை அளவெடுத்துக் கொண்டிருந்தனர். காற்றில் கலந்த அகிற்புகையும், ஆடவர்களும் பெண்டிரும் பூசியிருந்த நறுமணக் கலவைகளும் சேர்ந்து அந்தப் பொற்பனை மாநகரத்தை ஒருவித இனிய மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. வீதி எங்கும் சுடப்பட்ட ஊன் சோற்றின் வாசனையும், அகில் புகையின் நறுமணமும் கலந்து, அந்த இரவு உறக்கத்தை மறந்த ஒரு பெரும் திருவிழாவாக உருவெடுத்தது.

மதுக்கடைகளின் முன்னே கூட்டம் அலைமோதியது. நறுமணம் வீசும் தோப்பி எனப்படும் நெல் மதுவும், பனைஞ்சாரும் விற்கப்பட்டன.

உயர்குடிப் பெண்கள் தங்கள் மாளிகைகளின் நிலாமுற்றங்களில் அமர்ந்து, வெள்ளிப் பாத்திரங்களில் ஊற்றப்பட்ட தேறலை மெல்லப் பருகியபடி, வீதிகளில் நடக்கும் கூத்துகளைக் கண்டு மகிழ்ந்தனர். மதுவின் மயக்கத்தில் அவர்களது கண்கள் செவ்வரி படர்ந்து, பேச்சுகள் குழறத் தொடங்கின. அது கொண்டாட்டத்தின் உச்சகட்டம்.

ஆனால், இந்தப் பேரொளிக்கு அப்பால், வெள்ளாற்றின் ஒதுக்குப்புறமாக இருந்த பாழ்மண்டபம் புன்னைப் பொழிலின் இருளுக்குள் புதைந்து கிடந்தது. நள்ளிரவில், அங்காடி வீதியின் கடைசி விளக்கும் அணைந்த பிறகு, மாறன் ஒரு கரிய போர்வையைத் தன் மேல் போர்த்திக்கொண்டு அங்கு நடந்தான். அவனது உள்ளம் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது.

மண்டபத்தின் உட்புறம் ஒரு சிறு விளக்கின் ஒளியில் உதியஞ்சேரல் நின்றிருந்தார். அவனது விழிகளில் தெரிந்த குரூரம், அந்த இருளிலும் மாறனை நிலைகுலையச் செய்தது. மாறன் அங்கே நுழைந்ததும், சருகுகள் நசுங்கும் ஓசை கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான்.

“மாறா! ஒரு போர் வீரன் ஏன் இருளில் இப்படித் தனியாக நிற்கிறான்?” என்ற கிண்டல் குரலுடன் உதியஞ்சேரல் தன் முகமூடியை விலக்கிக் கொண்டே வெளிப்பட்டார். உடன் அமைச்சர் குலசேகரரும் இருந்தார்.

“அரசே… இந்த நள்ளிரவில், அதுவும் இத்தகு மறைவிடத்தில் என்னைச் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சேர தேசத்தின் ஒரு குறுநில மன்னர் இப்படிப் பதுங்கி வருவது வீரத்திற்கு அழகல்லவே!” என்று மாறன் தன் சந்தேகத்தைக் குரலில் தேய்த்துக் கேட்டான்.

உதியஞ்சேரலின் சொற்கள் அந்தப் பாழ்மண்டபத்தின் இருளில் நச்சரவமாய் ஊர்ந்து வந்தன. அவனது விழிகளில் தெரிந்த அந்தக் குரூரப் புன்னகை, நிலவொளியின் மென்மையை அடியோடு அழிப்பதாக இருந்தது.

“மாறா, உன் விசுவாசம் போற்றுதலுக்குரியது. ஆனால் விசுவாசம் என்பது கண்களை மறைக்கும் திரையாக அமைந்துவிடக் கூடாது. பெருஞ்சேரல் ஒரு போர்வெறி கொண்டவன். இன்று அவன் வாள் முனையில் இருக்கும் குருதி, நாளை உன் கழுத்திலும் தெறிக்காது என்பதற்கு என்ன நிச்சயம்? உனது வீரம் இப்போது அந்தப் பெருஞ்சேரலின் நிழலில் ஒண்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், இன்று யான் வந்தது உனது வீரத்தைப் பேச அல்ல; உனது வாழ்வின் ஆதாரத்தைப் பேச!” என்று அவர் ஒரு இடைவெளி விட்டார்.

மாறன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயன்றாலும், அவனது கை விரல்கள் வாள் பிடியில் ஒருவித நடுக்கத்தை வெளிப்படுத்தின.

“மாறா, பகைவரின் செங்குருதியில் நீராடுவதையே தனது தினசரி நோன்பாகக் கொண்ட ஒருவன், தனக்கு மேலாக ஒரு வீரன் வளர்வதை ஒருபோதும் ஏற்கமாட்டான். பெருஞ்சேரலின் வாள் தன் இலக்கைக் கண்டடைய உன் கழுத்தைத் தேட இன்னும் எத்தனை நாழிகையாகும் என்று நீ கருதுகிறாய்?” என்று உதியஞ்சேரல் மெல்ல வினவினார்.

மாறன் தன் பற்களைக் கடித்துக்கொண்டு, “அமைச்சரே! வீணான கற்பனைகளை விடுத்து வந்ததன் காரணத்தை சொல்லுங்கள்…” என்று சீறினான்.

அமைச்சர் குலசேகரர் அப்போது சலனமேதுமில்லாமல் ஒரு சிறு அடி முன்னே வந்தார். தனது மேலாடையின் அடியில் மறைத்து வைத்திருந்த அந்தத் தந்தப் பேழையை மெல்லத் திறந்தார். அந்தச் சிறிய விளக்கின் ஒளியிலும், மேகங்களை விலக்கி வந்த நிலவொளியிலும், பேழைக்குள் இருந்த மங்கையின் சிலம்பு ஒரு மரணச் செய்தியைப் போல மின்னியது. மங்கை எப்போதும் தன் இடக்காலில் அணிந்திருக்கும் அந்தத் தனித்துவமான வேலைப்பாடுகள் கொண்ட சிலம்பு அது.

குலசேகரர் குரூரமான அமைதியுடன் சொன்னார், “உன் வாளின் வேகம் ஒரு பெண்ணின் மென்மையான கழுத்தில் இறங்கும் கூர்வாளை விடவும் விரைவானதா மாறா? பொறுமை கொள், ஏனெனில் அவள் உயிர் இப்போது எம் விரல்களின் அசைவில்தான் இருக்கிறது!”

மாறன் அந்தச் சிலம்பையே வெறித்துப் பார்த்தான். அவனது இதயம் ஒரு பெரும் பாரத்தால் நசுக்கப்பட்டது போன்றிருந்தது. மங்கையின் சிரிப்பும், அவளது காலடி ஓசையும் அந்தச் சிலம்பின் மினுமினுப்பில் அவனுக்குத் துயரமாகக் காட்சியளித்தன.

மாறனின் இதயம் ஒரு கணம் துடிப்பை நிறுத்தியது. ஆவேசத்துடன் தன் வாளை உருவியவன், “அமைச்சரே! ஒரு பெண்ணைக் கேடயமாகப் பிடித்து மிரட்டுவதுதான் உங்கள் தந்திரமா? மங்கைக்கு ஒரு சிறு தீங்கு நேர்ந்தாலும், இந்த மாறனின் வாள் உங்கள் இருவரின் தலைகளையும் கொய்துவிடும்!” என்று கர்ஜித்தான்.

சட்டெனப் புதர்களுக்குப் பின்னால் இருந்த வீரர்கள் வில்லில் அம்பைப் பூட்டி மாறனை இலக்கு வைத்தனர்.

“அவசரப்படாதே மாறா!” என்றார் உதியஞ்சேரல் அமைதியாக. “மங்கை இப்போது எமது பாதுகாப்பில் இருக்கிறாள். அவளது சிலம்பு கழி நோன்பு மங்கலமாக முடிய வேண்டுமா அல்லது அவளது உயிர் இந்தக் வெள்ளாற்றின் மணலில் பிரிய வேண்டுமா என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பெருஞ்சேரலன் இருக்கும் வரை நீ ஒரு ஏவலாளன் தான். அவன் வீழ்ந்தால், நீ இந்தத் தேசத்தின் பாதியை ஆளும் மன்னன். யோசி… மங்கையின் உயிரா? அல்லது அந்தச் சேரலனின் விசுவாசமா?”

மாறன் நிலைகுலைந்து போனான். அவனது கையில் வாள் இருந்தது, ஆனால் அவனது ஆன்மா மங்கையின் அந்த ஒற்றைச் சிலம்பில் சிக்கிக்கொண்டது.

“நான் என்ன செய்ய வேண்டும்?” என்று மாறன் கரகரப்பான குரலில் கேட்டான். அந்த ஒரு சொல், அவனது விசுவாசத்தின் மீதான முதல் மரண அடி.

“இந்திர விழா முடியும் இறுதி நாள் நள்ளிரவு… பெருஞ்சேரலன் மதுக் களியாட்டத்தில் இருக்கும்போது, அவனது அந்தப்புரத்தின் கிழக்கு வாசலை நீ திறந்து வைத்தால் போதும். இல்லையெனில், அடுத்தநாள் சூரியன் உதிப்பதற்குள் உன் மங்கையின் கழுத்தில் எம் வீரர்களின் வாள் இறங்கும்.” என்று குலசேகரர் விஷத்தைக் கக்கினார்.

“வஞ்சகம்… பெருஞ்சேரல் என்னை நம்பி உறங்குகிறான். அவன் உறங்கும் அறையின் கதவைத் திறக்கச் சொல்கிறீர்களா?” என்று மாறன் வேதனையுடன் கத்தினான்.

“அது வஞ்சகமல்ல மாறா, அது ஒரு புதிய விடியலுக்கான வழி. யோசி… மங்கையின் மென்மையான கழுத்தில் குருதி வழிவதைப் பார்க்க உனக்கு விருப்பமா?” என்று உதியஞ்சேரல் எச்சரித்துவிட்டு நிழலோடு நிழலாக மறைந்தார்.

மாறன் அந்தப் பாழ்மண்டபத்தின் தூணில் சாய்ந்து அப்படியே சரிந்தான். அவனது கண்கள் கலங்கின. பெருஞ்சேரலின் சிரிப்பும், மங்கையின் குறும்புத்தனமான பேச்சும் அவனது மூளையில் மோதிச் சிதைந்தன. வெளியே இந்திர விழாவின் மங்கல இசை அவனுக்கு இப்போது மரண ஓலமாகத் தெரிந்தது. ஒருபுறம் உயிர் நண்பனின் குருதி, மறுபுறம் நேசித்த பெண்ணின் உயிர். எதைத் தேர்ந்தெடுப்பது என்று தெரியாமல் அந்த வீரன் முதன்முறையாகத் தன் வாள் பிடியைத் தளர்த்தி, செயலிழந்து அமர்ந்தான்.

வெள்ளாற்றின் மெல்லிய நீரோட்டம் நிலவொளியில் ஒரு வெள்ளிச் சங்கிலியைப் போல நெளிந்து ஓடிக்கொண்டிருந்தது. நகரின் இந்திர விழா ஆரவாரம் இங்கே தேய்ந்து, அலைகளின் மெல்லிய ஓசை மட்டுமே கேட்டது.

மாறன் அந்தத் தூணில் சாய்ந்து அப்படியே சரிந்தான். அவனது கையில் இருந்த மங்கையின் அந்த ஒற்றைச் சிலம்பு, ஒரு தணலைப் போல அவனது உள்ளங்கையைச் சுட்டது.

“பெருஞ்சேரலின் குருதியா அல்லது மங்கையின் உயிரா?” இந்த வினா அவனது மண்டைக்குள் ஆயிரக்கணக்கான தேள்கள் கொட்டுவதைப் போலக் குடைந்தது

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 28

வெள்ளாற்றின் சலசலப்பு அடங்கிய அந்த நள்ளிரவில், பொற்பனையின் எல்லைக் காடு நிசப்தமான தியானத்தில் ஆழ்ந்திருந்தது. அது சாதாரணமான வனம் அல்ல; அது கொற்றவையின் கானகம். வீரமும் மரணமும் ஓரிடத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் அந்தப் புனிதம் நிறைந்த வனம், காலத்தின் ரகசியங்களைத் தன்னுள் புதைத்து…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 4

  1. Thaniபொதுக் கருத்துThani

    மாறா என்ன முடிவு எடுக்கப்போகிறான்,
    நிஐமா பதட்டமா இருக்கு .

  2. Girijapriyaபொதுக் கருத்துGirijapriya

    Iyyo maara Yenna panna pora....drogam pannidatha❤️ nice intresting ud sis ❤️

உங்கள் கருத்தைப் பகிருங்கள்