arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் 1
விழியோரத்தில்… chevron_right பகுதி 1 / 9

அத்தியாயம் 1

visibility 651
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

விழியோரத்தில் க்ளிக்

அத்தியாயம் – 1

திருமணம் முடிந்த மறுநாள் காலை. குளித்து முடித்து ஊதா நிற சேலையில் நீர் சொட்டச் சொட்ட, அந்த ஆளுயர கண்ணாடி முன் நின்று கொண்டிருந்தாள் தீபா. தன் தலை முடியை முன்னே விட்டுத் துவட்டிக் கொண்டிருந்தாள். மெத்தையில் படுத்துக்கொண்டு, தன் மனைவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். கண்ணாடியில் அவள் முன்னழகையும், அவளையும் அளவிட்டுக் கொண்டிருந்தான் அவன். தன் கணவனின் பார்வை தன்னை தீண்டுவதை உணர்ந்த அவள் முகம் சிவந்தாள். அவன் புருவங்கள் உயர்த்த, அவளுள் வெட்க புன்னகை. “அத்தான்…” அவள் உதடுகள் முணுமுணுத்தது. “அது என்ன முந்தா நாள் வரைக்கும் அர்ஜுன். நேத்திலருந்து அத்தான்?” அவன் தன் கைகளை தலைக்கு அண்டை கொடுத்துக் கொண்டே கேட்டான். தீபா, புன்னகைத்துக் கொண்டாள். “கேட்குறேன்ல?” அவன் அதிகாரம் சற்று தூள் பறந்தது. “இப்படி மிரட்டினா, ஒன்னும் நடக்காது!” கண்ணாடி வழியாகவே அவனைப் பார்த்துப்  பேசினாள். அவனை நேரில் பார்க்க, அவளுள் வெட்கம் , அதை மறைத்துக்கொண்டு, மெட்டுவிடாமல் அவள் பதில் கூறினாள். “எங்க? என்னை பார்த்து சொல்லு.” அவன் கேலியாகச் சிரிக்க, “அத்தான்…” அவள் சிணுங்கினாள். “சொல்லு… எத்தனை வருஷமா என்னை அத்தான்னு கூப்பிடுன்னு மிரட்டுறேன். நீ கூப்பிட்டியா?” அவன் கேட்க, “நீங்க மிரட்டினா அர்ஜுன்னு தான் கூப்பிடுவேன். கல்யாணத்தில் கூட என்னை மிரட்ட தான் செஞ்சீங்க. அதனால் தான் அர்ஜுன். நீங்க  அன்பா பேசினா மட்டும் தான் அத்தான்.” என்று தீபா நியாயம் பேசினாள். அவன் எழுந்து இவள் அருகில் வர, அவள் தலையை குனிந்து கொண்டாள்.  “தீபா…” அவன் கிசுகிசுப்பாக அழைக்க, “ம்…” அவன் கூற, “நானும் அன்பா பேசுவேன். நீயும் என்னை அத்தான்னு கூப்பிடு. சரியா?” அவன் கேட்க, அவன் அருகாமையில் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.   அவள் முன் இருந்த அலைபேசியை எடுத்தான். ஒரு செல்பியை க்ளிக் செய்தான். அர்ஜுன்! பாசமானவன். கண்டிப்பானவன். நேர்மையானவன். அவர்கள் தொழிலில், குடும்ப அந்தஸ்தில் அதீத முக்கியத்துவும் கொண்டவன். கோபக்காரனும்  கூட! சிறுவயதிலிருந்து, தொழில் குடும்பம் எனப் பல காரணத்தினால், இருவரும் ஒரே  வீட்டில் தான் வளர்ந்தனர். தீபாவுக்கு அர்ஜுனைப் பிடிக்கும். அவன் குறை நிறைகளோடு. அர்ஜுனைப் பற்றி முழுதாக தெரிந்தாலும், கணவனாக, அவன் கண்ணியமும், அவன் அருகாமையும், அவன் கரிசனமும், மென்மையும் அவளை இன்னும் அவன் பால் ஈர்த்தது. தீபா! குறும்புக்காரி. பிடிவாதக்காரி. நினைத்ததை முடிப்பவள். செல்வச் செழிப்பில், அவர்கள் தொழிலில் அத்தனை ஈடுபாடு இல்லாதவள். குடும்ப சட்ட திட்டங்களுக்கு, அப்பால் அவள் விருப்பம் போல் படித்து அவள் விருப்பம் போல் வேலைக்குச் செல்பவள்.  தீபாவின் மீது குடும்பத்தில் பலருக்கு வருத்தமிருந்தாலும் அவள் சுதந்திரத்தைப் பறிக்கும் எண்ணம் யாருக்குமில்லை.   அர்ஜுனை பொறுத்தவரைத் தீபா குழந்தை தான். அவள் என்ன செய்தாலும், அவள் அவன் கட்டுப்பாட்டிற்குள் என்ற இறுமாப்பு அவனிடம் எப்பொழுதுமே உண்டு.   அர்ஜுன் சிடுசிடுத்தலும், ‘அர்ஜுன்…’ என்ற சொல்லில் தீபா தான் நினைத்ததை முடித்துக் கொள்வாள் என்று அவனுக்கும் தெரியும். இப்பொழுது, ‘அர்ஜுன்…’ ‘அத்தான்…’ ஆகி, அவர்கள் நெருக்கம், அடுத்த கட்டத்திற்கு நகர்ந்ததை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. செல்பி எடுத்து பல நிமிடங்கள் கடந்தும் அவர்கள் தங்கள் நிலையிலிருந்து விலக வில்லை. “இனி… நம்ம போட்டோஸ் பர்சனல்… எந்த சோசியல் மீடியாலையும் போட கூடாது.” அர்ஜுன் கண்டிப்போடு கூறினான்.   வழக்கமாகக் கண்டித்தால், எகிறும் தீபா இன்று சம்மதமாகத் தலை அசைத்தாள். அவன் அருகாமையில் முகம் சிவந்து, இருக்கும் மனைவியோடு, மீண்டும் ஒரு செல்பி எடுத்தான் அர்ஜுன். “க்ளிக்…” என்ற சத்தம் வர, “அத்தான்! போதும்.” அவள் முகத்தில் வெட்க புன்னகையோடு விலக எத்தனிக்க, அவன் அவளை அவனோடு சேர்த்துக் கொண்டான். “உங்களோட சம்பந்தம் பண்ண உங்க பிசினெஸ் பார்ட்னர்ஸ் பல விதத்தில் காத்திருக்க, என்னை ஏன் கல்யாணம் பண்ணீங்க?” அவள் வெட்கப்பட்டுக் கொண்டே, அவன் அருகாமையை ரசித்துக் கொண்டே கேட்டாள். “ம்… இந்த கேமரா க்ளிக் பண்ற மாதிரி. நீ தான் என்னை உன் விழியோர அன்பில் என்னை க்ளிக் பண்ணிட்டியே?” அவன் உல்லாசமாகக் கூற, தன் வெட்கத்தை மறைக்க, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் தீபா. “நேற்று… கல்யாணம் சிறப்பா இருந்ததுச்சில்ல?” அவன் தலை கோதி கொண்டே கேட்க, “ம்… ரொம்ப…” அவள் அவனுக்கு இசைவாக நடந்து கொண்டே தலை அசைத்தாள்.   அவன் கைகள் எல்லை மீறிக் கொண்டே, “எல்லார் கண்களையும் மகிழ்ச்சி.” அவன் உணர்ந்து கூற, அவன் நெருக்கத்தைத் தாண்டியும் அவள் உடல் வியர்த்தது. ‘நேற்று பார்த்த அந்த கண்கள். அதில் தெரிந்தது என்ன?’ என்ற கேள்வியோடு. “என்ன தீபா? பதிலை காணும்?” அவன் அவளை விலக்கி கொண்டு கேட்க, “ஒண்ணுமில்லை… நேரமாச்சு. எல்லாரும் நம்மளை தேடுவாங்க.” அவள் கூறிக்கொண்டு விலக எத்தனிக்க, அவளை கை பிடித்து நிறுத்தினான் அர்ஜுன். “அப்படியே புது மருமக மாதிரி பில்ட் அப். நீ என்ன இந்த வீட்டுக்கு புதுசா? இருக்கிறது, உங்க அம்மாவும், எங்க அம்மாவும். நம்ம பாட்டி. இதுல வேலைகாரங்க வேற!  உனக்கு என்ன வேலை?” அவன் இவளை வம்பிழுக்க, “அத்தான்…” என்று கூறிக்கொண்டு அவள் அவனை முறைத்தாள். அப்பொழுது, “க்ளிக்…” என்ற சத்தம் அலைபேசியிலிருந்து வந்தது. தீபா, அலைபேசியை எடுக்குமுன் அவன் எடுக்க, “அத்தான்… பர்சனல் ஸ்பேஸ்.” என்று அவனைச் செல்லமாக மிரட்டினாள். ” உன் மொபைலை பாக்குற ஐடியா எனக்கில்லை. ஆனால், நானும் என் பொண்டாட்டியும் பேசுற நேரத்தில் அது யாரு நமக்கு இடையில் க்ளிக்? இப்ப போடுறேன் சைலென்ட்டில்…” அவன் அலைபேசியைத் தொட, அவன் கண்கள் ரௌத்திரத்தோடு சிவந்தது. “தீபா…. உனக்கு அறிவில்லை. நம்ம போட்டோவை எங்கயும்  போட கூடாதுன்னு நான் உன்கிட்ட எப்பலருந்து சொல்றேன். நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி கூட சொன்னேன். கேட்க மாட்டியா நீ?” அவன் கடிந்து கொள்ள, “அர்ஜுன் என் பிரெண்ட்ஸ் போட்டா நான் என்ன பண்ணுவேன்?” அவள் அவனைக் கோபமாகக் கேட்டாள்.   “உன் ஐ.டீ ல இருந்து உன் பிரெண்ட்ஸ் போட்டாங்களா?” அவன் கிடுக்கு பிடியாகக் கேட்க, அவள் மறுப்பாகத் தலை அசைத்தாள். அர்ஜுன் கோபமாக முறைத்துக்கொண்டு, அவள் அலைபேசியை விட்டெறிந்து குளிக்கச் சென்றான். தீபாவின் முகத்தில் சிந்தனை. ‘நம்ம கிட்ட எல்லாவளும் பெட் காட்டினாலே… என் பாஸ்வர்டை கண்டுபிடிச்சி போட்டோ போடுறேன்னு. எவ, போட்டான்னு தெரியலையே? இப்படி பெட் கட்டி விளையாண்டோம்முனு அர்ஜூனுக்கு தெரிஞ்சிது. நாம செத்தோம்.’ தீபா நாக்கை கடித்துக் கண்சிமிட்டினாள். அர்ஜுன் கோபமாக முறைத்துக்கொண்டு, அறையை விட்டு வெளியேறினான். அர்ஜுன் முகத்தை பார்த்த, அவன் தாயார், “டேய்… என்னடா உம்முன்னு இருக்க? இன்னைக்கும் சண்டையா?” என்று  கேட்க, இருவரும் பேச்சு வார்த்தை இல்லாமல் சாப்பிட அமர்ந்தனர். “இந்த பாருங்க, நீங்க இன்னும் சின்ன குழந்தைங்க கிடையாது சண்டை போட்டுக்க.” பாட்டியும், தாத்தாவும் அறிவுரை கூற, இருவரும் மௌனமாக அமர்ந்திருந்தனர்.   தீபாவின் தாயார் பலவிதமாக அவளுக்கு அறிவுரை கூற, “விடுங்க… அவங்க என்ன சின்ன புள்ளைங்களா? அவங்களே பேசி சமாதானம் ஆகிருவாங்க.” அவர்களுக்கு சாதமாகப் பேசினார் அர்ஜுனின் தந்தை.   ‘ஒரு சாரி கேட்டா குறைஞ்சி போயிருவாளா? திமிர். நான் தான் இவளை பிறந்ததிலிருந்து பாக்குறேனே.’ அவன் தன் மனைவியை மனதிற்குள் திட்டிக் கொண்டான். ‘அப்படியே பெரிய சி.ஈ.ஓ. ன்னு கர்வம். பொண்டாட்டி கிட்ட பேசினா தான் என்ன? நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன். என் போட்டோவை என் புருஷன் போட்டவை என் பிரென்ட்ஸ் தான் போட்ருக்கணும். அதுவும் என் கிட்ட பந்தயம் கட்டிட்டு தான் போட்டிருக்காங்க. இதுல அப்படி என்ன பெரிய தப்பு?’ அவள் தனக்கு தானே கேட்டுக்கொண்டாள் அர்ஜுனை ஓரக் கண்களால் பார்த்தபடி.   “சாப்பிட்டுட்டு கிளம்புங்க. கோவிலுக்கு போகணும்.” என்று பாட்டி கூற, இருவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.   இருவரும் சாப்பிட, அப்பொழுது அவள் நட்பு வட்டாரத்திலிருந்து ஒரு மெசேஜ் மின்னியது.   “அப்படி என்ன பாஸ்வர்ட்? எங்களால் கண்டுபிடிக்க முடியலை. நீயே உன் மேரேஜ் போட்டோ போட்டுட்ட போல?” அவர்கள் குறுஞ்செய்தி வழியாகக் கேட்க, “இந்த விளையாட்டெல்லாம் வேணாம். உண்மையை சொல்லுங்க.” இவளும் குறுஞ் செய்தி வழியாகப் பதில் அனுப்பினாள்.   “எப்ப பாரு மொபைல். உன்னை நான் கட்டிக்கிட்டேனா? இல்லை மொபைல் கட்டிக்கிச்சா?” அவள் செவிகளில் கடுகடுத்தான் அர்ஜுன்.   “நீங்க இப்படி திட்டிகிட்டே இருந்தா நான் என் மொபைலையே கட்டிக்கிறேன்.” அவளும் அவனிடம் பாய்ந்தாள்.   “இந்த மொபைலால, உனக்கு எதாவது பெரிய பிரச்சனை வரப்போகுது. அப்ப, இருக்கு உனக்கு.” அவன் சினந்து கொள்ள, “வந்தா நான் பாத்துக்குறேன். நிச்சயம் உங்க கிட்ட உதவிக்கு வரமாட்டேன்” அவள் தன் உதட்டைச் சுழித்துக்கொண்டாள்.   அதற்குள் அலைபேசியில், அவள் தோழிகளின் கிண்டல் சில நூறு குறுஞ்செய்திகளை தாண்டி இருந்தது. அதில் பாதி, தீபாவை கேலி செய்வது போல் தான் அமைந்திருந்தது.   தீபாவின் புருவங்கள் முடிச்சிட்டது. ‘யாரும் பாஸ்வேர்ட் கண்டுபிடிக்கலைன்னு சொல்றாங்களே? அப்ப..’அவள் சிந்திக்க, ‘யாரோ பொய் சொல்றா கண்டுபிடிப்போம்.’ முடிவு எடுத்துக்கொண்டு தன் கவனத்தை உணவில் திருப்பினாள். அப்பொழுது மீண்டும், “க்ளிக்…” என்னும் சத்தம். அர்ஜுன் அவளை முறைக்க, தீபாவின் கவனமோ அலைபேசி பக்கம் திரும்பியது.   அவள் உடலில் மெல்லிய நடுக்கம். சற்றுமுன் எடுத்த செல்பி இப்பொழுது சோசியல் மீடியாவில். அதிலும் ஒரு லைக்.   இதை அவள் தோழிகள் செய்திருக்க முடியாது.   ‘இப்ப தானே பிரச்சனை வருமுன்னு சொன்னான். அதுக்குள்ளே பிரச்சனை வருமா? ஒருவேளை அர்ஜுன் நம்ம கிட்ட விளையாடுறானோ?’ அவள் கண்கள் தன் அருகிலிருந்த  கணவனைச் சந்தேகத்தோடு பார்த்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 2

அத்தியாயம் - 2     தன் கணவனை அளவிடும் விதமாக பார்த்தாள் தீபா.                அர்ஜுனின் முழு கவனமும் உணவில் இருக்க, 'இப்படி எல்லாம் விளையாடுற ஆள் இல்லை அத்தான்.' தனக்கு தானே யோசித்து, முடிவு எடுத்துக் கொண்டாள்.             'யார் போட்டிருப்பா?' தீபாவின் மனதில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 1

உங்கள் கருத்தைப் பகிருங்கள்