arrow_back
விழியோரத்தில்… அத்தியாயம் – 2
விழியோரத்தில்… chevron_right பகுதி 2 / 9

அத்தியாயம் – 2

visibility 573
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் – 2

     தன் கணவனை அளவிடும் விதமாக பார்த்தாள் தீபா.

 

               அர்ஜுனின் முழு கவனமும் உணவில் இருக்க, ‘இப்படி எல்லாம் விளையாடுற ஆள் இல்லை அத்தான்.’ தனக்கு தானே யோசித்து, முடிவு எடுத்துக் கொண்டாள்.

 

            ‘யார் போட்டிருப்பா?’ தீபாவின் மனதில் குழப்பத்தோடு கேள்வி எழுந்தது.

 

        ‘கல்யாண போட்டாவை போட்டிருந்தா கூட, நேத்து அவங்களும் எடுத்திருக்கலாம். ஆனால்? இப்ப எடுத்த போட்டோ!’ அவள் மூளை அவளை குடைந்தது.

 

   ‘நம்ம ரூமில் எதுவும் கேமரா?’ அவள் சிந்திக்க, ‘ச்… சீ…’ மறுப்பாகத் தலை அசைத்துக் கொண்டாள்.

 

        அர்ஜுனின் கண்கள் இவளையே சுற்றியது. தீபா சாப்பிடாமல், தட்டையே அலைந்து கொண்டிருக்க, “தீபா… சாப்பிடு.” அவன் அக்கறையாகக் கூற, அவன் குரலில் அவளைக் கேள்வியாகப் பார்த்தாள் தீபா.

 

    “நான் உன்னைத் திட்டலை. சாப்பிடு.” அர்ஜுன் பொறுமையாக கூற, தீபா திருதிருவென்று முழித்தாள்.  “சரி… நான் கோபமும் படலை.” அவன் சமரசம் பேச, தீபா புன்னகைத்தாள்.

 

     பெரியவர்கள் இவர்களை பார்த்து சிரிக்க, தீபா அவர்களை ஒதுக்கி, தன் கவனத்தை உணவில் திருப்பினாள்.

 

           உணவை முடித்துக் கொண்டு அவர்கள் அறைக்குச் சென்றாள். அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள். 

 

  “அறையில் கேமரா இருக்க வாய்ப்பில்லை. அதுவும் அந்த போட்டோ என் மொபைலில் எடுத்தது தான்.” தனியே அவள் புலம்பிக் கொண்டிருக்க, “என்ன தீப்ஸ்… தனியா பேசிட்டு இருக்க?” கேட்டுக்கொண்டே, அறைக்குள் அர்ஜுன் நுழைந்தான்.

 

        தீபா சிரித்துச் சமாளித்தாள்.

                         ‘அர்ஜுன் கிட்ட சொல்லுவோமா?’ அவள் அறிவு சிந்திக்க, ‘சொன்னால் பல கேள்வி கேட்பான். முதலில் நண்பர்கள் கூட இதெல்லாம் ஒரு விளையாட்டான்னு கேள்வி வரும். பிரகாஷ் பெயரும் வெளிய வரும். தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன்.’  என்று சிந்தித்தபடி கோவிலுக்குக் கிளம்பினாள் தீபா.

 

         அர்ஜுன், அவளைச் சீண்டிக்கொண்டே அருகில் இருக்க, “அத்தான்… இது நீங்க தானான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.” என்று தீபா சிணுங்கினாள்.

 

       “ஏன் நான் இல்லாம வேற யாரு?” அவன் சிரிப்பினோடு புருவம் உயர்த்த, “அர்ஜுன் எப்பவும் கெத்தா ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா தான் எனக்கு தெரியும். ஆனால், நீங்க இப்ப அப்படி இல்லை.” என்று அவள் கண் சிமிட்டினாள்.

 

   “இப்ப தானே நீ என் மனைவி.” உரிமையோடு அவன் அவள் தலையில் தட்டிவிட்டு, “சீக்கிரம் வா… நேரம் ஆச்சு.” என்று வேஷ்டி சட்டையில் கிளம்பிச் சென்றான்.

           கதவை மூடி, தாழ் செய்து கொண்டுஅவள் புகைப்படங்களை அவள் மடிக்கணினிக்கு மாற்றிவிட்டு அலைப்பேசியில் அனைத்து புகைப்படங்களையும் அழித்தாள்.

   ஒரு பெருமூச்சோடு  தீபா பட்டுச் சேலைக்கு மாறி, சில நகைகளை அணிந்து கொண்டு,  கோவிலுக்குக் கிளம்பினாள்.

          சென்னையிலிருந்து சில மணி நேரப் பயணம். முதலில்  போக்குவரத்து பயணம் நிறைந்த இடமாக இருந்தாலும், அதன் பின் சற்று வயல் பரப்போடு இருந்த இடத்திற்குள் கார் நுழைந்தது. அர்ஜுன் வண்டியைச் செலுத்த, தீபா அருகில் அமர்ந்திருந்தாள். பின்னே பாட்டியும், தாத்தாவும் அமர்ந்திருக்க அவர்கள் லொடலொடத்து கொண்டிருந்தார்கள்.

   மற்றவர்கள் வேறு ஒரு காரில் வந்து கொண்டிருந்தனர். வழக்கமாக லொடலொடக்கும் தீபா இன்று அமைதியாக அமர்ந்திருந்தாள்.

 

    சோசியல் மீடியாவில் யாரோ போட்டு வைத்திருந்த, அவர்கள் புகைப்படத்தை அர்ஜுன் பார்ப்பதற்கு முன் அழித்துவிட்டாள்.

           இருந்தும் அவளுள் ஏதோவொரு பதட்டம். அவ்வப்பொழுது அவள் அலைபேசியைப் பார்த்துக்கொண்டாள். ‘யார், அவர்கள் புகைப்படத்தை இவள் ஐடியில் இருந்து போடுகிறார்களா?’ என்று அவளுள் கேள்வி.

 

    ‘சோசியல் மீடியா தளங்களின் பாஸ்வர்ட்டை மாற்றிவிடலாம்? ஆனால், இவள் அலைபேசியை இயக்குவது எப்படி?’ என்ற கேள்வி அவளுள்.

 

‘இப்ப பாஸ்வர்ட் மாத்த வேண்டாம். என்ன தான் நடக்குதுன்னு பார்த்திருவோம்.’ அவள் முடிவெடுத்துக் கொண்டாள்.

 

   அர்ஜுன் இவளை ஓரக்கண்கால், அளவிட்டு கொண்டிருந்தான். “என்ன ஆச்சு தீபா?” அவன் கேட்க, “ரொம்ப டையார்ட்.” பூசி மொழுகினாள் அவள்.

 

       “சாய்ந்து படுத்துக்கோ.” அவன் கூற, ‘இது தான் சாக்கு.’ என்று கண்களை இறுக மூடிக்கொண்டாள் தீபா.

 

                        கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசித்தனர்.  கோவிலுக்கு வெளியே சிறிய ஓடை அமைந்திருந்தது. ஓடையின் ஓரத்தில் அமர்ந்து கொண்ட அர்ஜுன், தீபாவையும் அருகே அமர்த்திக் கொண்டான். அங்கு அனைவரும்  புகைப்படம் எடுக்க, அர்ஜுன் இவளை விசித்திரமாகப் பார்த்தான்.

 

   “என்ன அத்தான்?” என்று தீபா கேட்க, “இல்லை… எப்பவும் மொபைலும், செல்பியுமா இருப்ப? இன்னைக்கு என்ன ஆச்சு?” என்று அர்ஜுன் கேட்க அகப்பட்டுக் கொண்டவளாக திருதிருவென்று ஒரு நொடி விழித்தாள்.

 

   தீபா  சட்டென்று சமாளித்து கொண்டு, “அது தான் நான் மொபைல் எடுத்தாலே உங்களுக்குப் பிடிக்கவே மாட்டேங்குதே!” என்று அவள் முகத்தைச் சுழிக்க, அர்ஜுன் சிரித்துக்கொண்டான்.

 

    “சரி… என் மொபைலில் எடுக்கறேன்.” அவன் கூற, அவள் சம்மதமாகத் தலை அசைத்தாள்.

      புதுமணத் தம்பதிகளுக்கே உண்டான உணர்வோடு விதவிதமாக படம் எடுத்துக் கொண்டார்கள்.

       அவர்கள் வீட்டிற்கு காரில் கிளம்பினர்.

            தீபா மனதில் சந்தேகம். ‘இப்பவும் அவர்கள் எடுத்த போட்டோ அவள் சோசியல் மீடியா ஐடியில் அப்லோட் ஆகிருக்குமோ?’ என்று, தன் அலைபேசியில் பார்த்துக்கொண்டாள். அப்படி எதுவும் இல்லை.

 

                          “அத்தான்… நான் ஒரு போட்டோ என் மொபைலுக்கு அனுப்பிக்கிறேன்.” என்று கூறிக்கொண்டே அவள் அலைபேசிக்கு அனுப்பிக்கொண்டாள் தீபா.

 

   “இதை ஏன் தீப்ஸ் கேட்குற…” அவன் கூறி முடிப்பதற்குள் அவள் அலைபேசிக்கு அவள் அனுப்பிய புகைப்படம் வந்திருந்தது.

                          அவள் அலைபேசியில், அந்த புகைப்படத்தை அவள் டவுன்லோட் செய்த மறுநிமிடம், அவள் சோசியல் மீடியா ஐடியில் புகைப்படம் அப்லோட் செய்யப்பட தீபாவின் கைகள் நடுங்கியது.

 

    அனைத்தையும் அழித்துவிட்டு, மௌனமாக அமர்ந்தாள்.

 

       அனைவரும் வீட்டிற்கு வர, “ஒரு முக்கியமான வேலை. வெளிய போகணும்.” என்று ஜீன்ஸ் டாப்ஸ்க்கு மாறிக் கொண்டு, தீபா கிளம்ப, ஆளாளுக்கு அவளை திட்ட ஆரம்பித்தனர்.

 

      “எதோ முக்கியமான வேலைன்னு சொல்லறா. கிளம்பட்டும்.” என்று அர்ஜுன் சம்மதம் தெரிவிக்க, “டேய்… நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு.” என்று அர்ஜுனின் தாய் எகிற, அவருக்கு ஆதரவாக தீபாவின் தாயும் தீபாவை தடுத்தார்.

 “தீபா… பத்திரமா போயிட்டு சீக்கிரம் வா. எதாவது ஹெல்ப் வேணுமுன்னா எனக்கு கால் பண்ணு.” அவன் முடித்துவிட, “தேங்க்ஸ் அர்ஜுன்.” சிட்டாகப் பறந்திருந்தாள் தீபா .

                     தீபா சொன்ன இடத்திற்கு அவள் அலுவலக தோழி சுதா வந்திருக்க , “என்ன தீபா? இன்னைக்கு இங்க வர சொல்லிருக்க, நீ இன்னைக்கு உன் ஆத்துகாரரோட…” என்று அவள் கேலி பேச முனைய, “சுதா! எதோ தப்பாபடுது.” என்று அவள் பேச்சை இடை மறித்தாள் தீபா.

    “என் மொபைலை யாரோ ஹேக் பண்ற மாதிரி இருக்கு. என் மொபைலில் இருக்குற போட்டோ எல்லாம் என் கண்ட்ரோல் இல்லாம வெளிய போற மாதிரி இருக்கு.” என்று தீபா கூற, “லூசா நீ… அதை என் கிட்ட வந்து சொல்லி என்ன பிரயோஜனம்? அர்ஜுன் கிட்டயே சொல்ல வேண்டியது தானே?” சுதா கோபமாகக் கேட்டாள்.

 

  “சொல்லலாம்… ஆனால், முதலில் நம்ம பிரெண்ட்ஸ் யாரும் விளையாட்டா அப்படி பண்றாங்களோன்னு யோசிச்சேன். இப்ப இல்லைன்னு தோணுது. பிரகாஷ் விஷயம் வீட்டுக்கு தெரியாது.” என்று தீபா யோசனையோடு கூறினாள்.

 

    “பிரகாஷ் விஷயம் தெரிஞ்சா, ஏன் அப்பவே சொல்லலைன்னு ஆயிரம் கேள்வி வரும்.” என்று தீபாவே தொடர, “பிரகாஷ் எல்லாத்தயும் மறந்துட்டான். அவன் தான் நேத்து கல்யாணத்துக்கு வந்திருந்தானே.” என்று சுதா அவள் கூற்றுக்கு மறுப்பு தெரிவிப்பது போல் தலை அசைத்துக் கொண்டே கூறினாள்.

 

 “இல்லை சுதா. அவன் பார்வை நேற்று சரி இல்லை.” தீபா தன் கண்களைச் சுருக்கி கூறினாள்.

 

   “சரி இல்லைனா?” என்று சுதா கேட்க, “தெரியல சுதா. விரக்தி… கோபம்… ஏமாற்றம்… எனக்கு சொல்ல தெரியலை.” தீபா உதட்டைப் பிதுக்கினாள்.

 

   “பிரகாஷுக்கு அந்த அளவெல்லாம் தைரியம் கிடையாது.” சுதா உறுதியாக  கூற, “தப்பு பண்றவங்கள்லாம் தைரியசாலி கிடையாது சுதா. ஏதோ ஒரு கோபம். மன நிலை குழப்பத்தில் பண்றவங்க இப்படி தான்.” என்று தீபா கூறினாள்.

 

 “இப்ப என்ன பண்றது?” என்று சுதா கேட்க, “நாம ஏன் பிரகாஷை பார்க்க போக கூடாது?” என்று தீபா கேட்டாள்.

 

    “எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை?” என்று சுதா கேட்க, “பிரகாஷ் கிட்ட பேசி பாப்போம். எதாவது விஷயம் கிடைக்குதான்னு பார்ப்போம்.”  தீபா கூற, சுதா அவளுடன் சென்றாள்.

 

   இருவரும் பிரகாஷ் வீட்டை நெருங்க, அங்கு வாசலில் கூட்டம்.

 

       இருவரும் அருகே செல்லவில்லை. இவர்கள் அங்கே விசாரிக்க, “சூசைட் கேஸ்.” என்று மட்டுமே கூறினர்.

 

              “என்ன நடந்திருக்கும் சுதா? செத்துக்கித்து போயிருப்பானோ?” தீபா சந்தேகமாக கேட்க, “ஐயோ! அப்ப, உன் மொபைலில் பேயா?” சுதா அலறினாள்.

தீபா சுதாவை முறைக்க, “நான் இப்படி எல்லாம் நிறைய சினிமா பார்த்திருக்கேன். அது மட்டுமில்லை, எங்க கிராமத்துல, எங்க ஆட்சி இந்த மாதிரி நிறைய கதை எல்லாம் சொல்லிருக்காங்க.” சுதா கண்களை உருட்டி உறுதியாகக் கூறினாள்.

   “லூசா நீ! நீயெல்லாம் ஒரு ஜர்னலிஸ்ட்? பேயும் கிடையாது. பிசாசும் கிடையாது.” என்று தீபா, சுதாவிடம் பற்களை நறநறக்க, சரலென்று தீபா திரும்பிப் பார்த்தாள்.

 

    “யாரோ நம்மளை பாக்குற மாதிரி இருக்கில்ல?” என்று தீபா சந்தேகம் கேட்க, “எனக்கு நீ இந்த விஷயத்தைச் சொன்னதிலிருந்து அப்படி தான் இருக்கு. ஆனால், அது மனுஷன்னு நினைச்சிட்டு இருந்தேன். இப்ப ஒரு வேளை…” என்று சுதா மென்று விழுங்கினாள்.

 

   “லூசு… ஏறு வண்டியில். பிரகாஷ் நிலைமையைப் பார்ப்போம்.” என்று கூறிக்கொண்டு இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர்.

     அங்கு அவர்கள் கண்ட காட்சியில் இருவரும் திக் பிரமை பிடித்தது போல் நின்றனர்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 3

அத்தியாயம் - 3                          இருவரும் ஒரு நொடி சுவரோடு சாய்ந்து நின்று தங்களை நிதானப்படுத்திக் கொண்டனர்.              "உன் புருஷன் இங்க என்ன டீ பன்றார்?" சுதா, தீபாவின் காதை கடிக்க, "தெரியலை சுதா. அர்ஜுன், நான் கிளம்பும் பொழுது வீட்டில் தான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்