அத்தியாயம் – 9
அத்தியாயம் – 9
அர்ஜுன் அங்கு நின்று கொண்டிருக்க, தீபா தன்னையும் அறியாமல் எழுந்தாள். அவன் அவளிடம் எதுவும் பேசவில்லை. கமிஷனர், அவனை வரவேற்கும் விதமாகத் தலை அசைத்தார்.
‘அர்ஜுன் அதிகார பலம் தெரிஞ்சும், நான் அவனிடம் விஷயத்தை மறைத்திருக்கக் கூடாது.’ தீபா காலம் தாழ்ந்து சிந்தித்தாள்.
‘இப்படி ஆகுமுன்னு யார் யோசிச்சா? நான் சொல்ல வந்தப்ப, அர்ஜுன் ஊரில் இல்லை.’ பழியை அவனிடமே திருப்பிக் கொண்டு தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள் தீபா.
அர்ஜுன் வந்ததும், கமிஷனர் அவர்களை வெளியே காத்திருக்கச் சொல்ல, அனைவரும் வெளியே வந்தனர்.
“தீபா… நீ செத்தன்னு நான் நினைக்குறேன்.” சுதா அவள் காதில் கிசுகிசுக்க, “ஏண்டி, எரியுற தீயில் எண்ணெய் ஊத்துற?” பானு சுதாவிடம் சிடுசிடுத்தாள்.
ஆனால், அனைவரின் முகத்திலும் ஏதோவொரு நிம்மதி. விஷயத்தை சரியான இடத்தில் கூறிவிட்டோம். அதுமட்டுமில்லை அர்ஜூனுக்கும் தெரிந்துவிட்டதால், இனி பாதுகாப்பான நிலைக்கு வந்துவிட்டோம், என்ற நிம்மதியும் கூட!
“நான் என்ன பண்ணேன். இதை முதலிலே அர்ஜுன் கிட்ட சொல்லிருக்கலாம். இவ, தான் நாமளே கிழிச்சிரலாம்ன்னு சொன்னா. சொன்னதை கேட்க கூடாதுன்னு திமிர். ” சுதா முணுமுணுக்க, “எல்லாம் என் நேரம்.” என்று முணுமுணுத்தாள் தீபா.
அர்ஜுன் வெளியே வந்து, சுதாவின் அண்ணனிடம் கை குலுக்கினான். “தேங்க்ஸ்… சரியான நேரத்துக்கு உதவி பண்ணிருக்கீங்க. நேத்து, நான் ஊரில் இல்லை. ரொம்ப பயந்திருப்பாங்கன்னு நினைக்குறேன்.” அர்ஜுன் சிரித்த முகமாகத் தலை அசைக்க, சுதாவின் அண்ணனும் தலை அசைத்து விடைபெற்றான்.
சுதா, பானு இருவரும், ‘தப்பித்தோம், பிழைத்தோம்…’ என்று கிளம்ப முயற்சித்தனர். அவர்களை தடுத்தி நிறுத்தினான் அர்ஜுன்.
‘சிக்கினோம்… தீபாவை கல்யாணம் செய்றதுக்கு முன்னாடியே நம்மளை நார்நாரா கிழிப்பார். இப்ப நாம செஞ்சி வச்சிருக்க வேலைக்கு செத்தோம்.’ இருவரின் மூளையும் ஒருசேர அவர்களை எச்சரித்தது.
“தேங்க்ஸ்…” என்றான் அர்ஜுன். இருவரும் சிரித்து வைத்தனர்.
“தீபா… இன்னும் பத்து நாளைக்கு ஆபீஸ் வரமாட்டா. நாங்க ஹனிமூன் போறோம்.” அர்ஜுன் கூற, இருவரும் தீபாவை மேலும் கீழும் பார்த்தனர். ‘இதை அர்ஜுன் இவங்க கிட்ட சொல்லியே ஆகணுமா?’ என்று கடுப்பாக அர்ஜுனை பார்த்து வைத்தாள் தீபா.
எதுவும் பேசவில்லை. அனைவரும் கிளம்பி விட, டிராவைரை அழைத்து தீபாவின் காரை எடுக்க சொன்னான்.
அர்ஜுன் வேகமாக அவன் காரை எடுக்க, தீபா அவனோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள்.
அர்ஜுன் எதுவும் பேசவில்லை. அவன் முகத்தை திரும்பி, திரும்பி பார்த்தாள்.
‘பக்கத்தில் ஒருத்தி இருக்கிறாள்…’ என்ற உணர்வே இல்லாதது போல் நடந்து கொண்டான் அர்ஜுன்.
வீட்டுக்குள் சென்று, அனைவரிடமும் அவர்கள் ஹனிமூன் கிளம்புவதாக கூறினான்.
‘இரெண்டு பெரும் சொல்லவே இல்லையே…’ என்று குறை பட்டாலும், அனைவரும் சம்மதமாகத் தலை அசைத்தனர்.
அறைக்குள் நுழைந்ததும், “எங்க போறோம்?” என்று கேட்டாள் தீபா.
“இப்போதைக்கு ஷார்ட் ட்ரிப் ஊட்டி. நெக்ஸ்ட் மந்த் ஸ்விஸ் போறோம்.” அவன் கூற, “அர்ஜுன், என் கிட்ட ஏன் சொல்லலை?” அவள் கேட்க, “எதுக்கு சொல்லணும்?” என்று கேட்டான் அர்ஜுன்.
“ஏன் பானு, சுதா கிட்ட சொன்னீங்க?” அவன் முன் முறைத்து கொண்டு நின்றாள்.
“நீ செஞ்ச வேலைக்கு, நமக்குள்ள சண்டைன்னு அவங்க நினைச்சுக்க கூடாதுன்னு சொன்னேன்.” என்று அர்ஜுன் கூற, ‘ஓ…’ என்று எண்ணிக்கொண்டாள் தீபா.
தீபா மேலும் பேச எத்தனிக்க, “கிளம்புறியா? நாம இன்னைக்கு நைட்க்குள்ள அங்க போகணும்.” என்று சிடுசிடுத்தான்.
‘தீப்ஸ்…’ என்ற அழைப்பு முழுதும் காணாமல் போயிருந்தது.
அர்ஜுனின் கோபமறிந்து, எதுவும் பேசாமல் கிளம்பினாள்.
அர்ஜுன் காரை செலுத்தினான். “கார்லயே தான் போறோமா?” என்று தீபா கேட்க, “ம்…” ஒற்றை வார்த்தையாகப் பதில் வந்தது.
இவர்கள் இருவரும் கிளம்ப, அனைவரும் சந்தோஷமாக வழி அனுப்பி வைத்தனர்.
எதுவும் பேசாமல் அர்ஜுன் காரை செலுத்த, “இப்படி சண்டை போடுறதுக்கு எதுக்கு ஹனிமூன்?” கோபமாகக் கேட்டாள் தீபா.
“பின்ன உன்னை கொஞ்சவா ஹனிமூன்?” அர்ஜுன் கடுப்பாகக் கேட்டான். “அதை நான் வீட்டிலே பண்ணிருப்பேன். அப்பா, அம்மா, அத்தை, பாட்டி எல்லாரும் சந்தோஷ பட்டிருப்பாங்க.” என்று அவன் கூற, அவனை முறைத்துப் பார்த்தாள் தீபா.
“வீட்ல வச்சு உன்னை திட்டினா, சண்டை போட்டா எல்லாரும் வருத்தப்படுவாங்கன்னு தான் இப்படி தனியா கடத்திட்டு போறேன்.” அவன் கூற, தீபா எதுவும் பேசவில்லை.
வண்டி ஊட்டியை அடைந்தது. குளிரில் வெடவெடத்து போனாள் தீபா.
ஜெர்கினை எடுத்து கொடுத்தான். ‘இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.’ எண்ணியபடி, அதை வாங்கி கொண்டாள்.
அர்ஜுன் அங்கு இருப்பவர்களிடம், ஏதோ பேசிவிட்டு வர அவர்கள் வில்லாவுக்குள் சென்றனர்.
குளித்துவிட்டு, இருவரும் இரவு உடைக்கு மாறிக்கொண்டனர்.
ஜன்னல் வழியாக, மலை அரசியின் அழகை ரசித்தாள் தீபா.
அவள் எதுவும் பேசவில்லை. பேசியும் பயன் இல்லை என்று தெரிந்தவள் போல் மௌனித்துக்கொண்டாள்.
“நாங்க உன்னை நல்லா பார்த்துக்கலையா தீபா? இல்லை உன் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்தது இல்லையா?” அந்த மௌனத்தை அர்ஜுனின் குரலே கலைத்தது.
அந்த குரலில் ஏக்கம், பரிதவிப்பு, கவலை, ஏமாற்றம், தோல்வி என அனைத்துமே கலந்து நின்றது.
“அத்தான்…” விம்மிக்கொண்டு அவனுள் சாய, அவள் எத்தனிக்க, “அங்கேயே நில்லு.” கடுமையாக ஒலித்தது அவன் குரல்.
‘அவனுக்கும் வலித்ததோ?’ அவளுக்குத் தெரியவில்லை. ஆனால், அவனின் விலகல் தன்மை அவளுக்கு கடினமாக மிக கொடூரமாக வலித்தது.
“அத்தான்…” அவள் ஏக்கமாக அழைக்க, “நான் கேட்ட கேள்விக்குப் பதில்.” அவன் உறுதியாக நின்றான்.
அவள் எதுவும் பேசவில்லை. “என்னை எத்தனை வருஷமா தெரியும்?” அவன் கேட்க, “நான் பிறந்ததிலிருந்து.” அவள் இடக்காகக் கூறினாள்.
அவள் பதிலில், அவன் கேள்வியை மாற்றினான்.
“எத்தனை வருஷமா நாம ஒரே வீட்டில் இருக்கோம்?” என்று அவன் கேட்க, “எங்க அப்பா, இறந்ததிலிருந்து…” அவள் கூற, ‘இவள் இன்று முடிவோடு தான் பதில் சொல்லுகிறாள்… என்னைத் திசை திருப்ப…’ என்று எண்ணியபடி அவ வழிக்கு தான் போகணும் என்று முடிவு எடுத்துக்கொண்டான் அர்ஜுன்.
“அன்னைலருந்து இன்னைக்கு வரைக்கும், உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லை அப்படி தானே?” அவன் நேரடியாக கேட்க, “அத்தான்…” அவள் பதறினாள்.
“அர்ஜுன்…” என்று கூறினான் விலகல் தன்மையோடு.
“இல்லை… அத்தான். வீட்டிற்கு வந்த ஆரம்பத்தில் எனக்கு உங்களைப் பிடிக்காது. நீங்க, யார் என்னை கட்டுப்படுத்தன்னு கோபம் வரும். ஆனால், அப்புறம் விளையாட்டா தான் சண்டை இழுப்பேன், வம்பு பண்ணுவேன். இதெல்லாம் உங்களுக்குத் தெரியும். தெரியாத மாதிரி கூறாத அர்ஜுன்.” அவள் தன் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு கூறினாள்.
“அப்படி தான் நானும் நினச்சேன். ஆனால், அப்படி இல்லை தீபா.” என்று அவன் மறுக்க, “அத்தான்…” என்று அழைத்துக் கொண்டே, அவள் நெருங்க, “அங்கேயே நில்…” என்று அவன் அவளை மிரட்டினான்.
“அதெல்லாம் முடியாது. அதைச் சொல்ல நீங்க யார்?” என்று அவன் மேல் சலுகையாகச் சாய்ந்து கொண்டாள் அவன் மனைவி.
அவன் இளகவில்லை. “நான்…” என்று அவன் ஆரம்பிக்க, அவன் முன் நின்று அவனை அண்ணாந்து பார்த்தாள்.
“நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்க போறீங்க அது தானே?” என்று அவள் கேட்க, அவளைக் கூர்மையாகப் பார்த்தான் அர்ஜுன்.
“கேமிங் சாப்ட்வேர் சி.ஈ.ஓ.! பிசினெஸ் டைக்கூன். பெரிய புள்ளி தான். நீங்க நினைச்சா, எல்லா பிரச்சனையும் அசால்ட்டா ஹண்டில் பண்ண முடியும்.” என்று அவன் பெருமை பாட, “நான் உன்னை என் பெருமை பாட சொல்லலை. அது எனக்கு பிடிக்காது.” என்று அவன் கறாராக கூற, வாயை மூடிக்கொண்டாள் தீபா.
அவன் அவளை மௌனமாக பார்த்தான்.
‘ஏன் சொல்லலை?’ அவன் கேட்கவில்லை. ஆனால், அவளுக்குத் தெரியும், அது தான் அவன் கேள்வி என்று.
அவளே பேச ஆரம்பித்தாள்.
“சொல்ல கூடாதுன்னு நினைக்கலை அத்தான். இது இவ்வளவு பெரிய விஷயம் ஆகுமுன்னு நான் நினைக்கலை.” அவள் கூற, அவன் அவளை ஆராயும் விதமாகப் பார்த்தான்.
“நான் உங்க கிட்ட சொல்ல வந்தேன் அத்தான். அன்னைக்கு நிலைமை சரி இல்லை. அப்புறமும் சொல்ல வந்தேன். நீங்க ஊரில் இல்லை அத்தான்.” பேச்சினோடே ஆயிரம் அத்தான் போட்டு லாவகமாக அவன் மீதே குற்றத்தைத் திருப்பினாள் தீபா.
அத்தான் என்று அழைத்துக் கொண்டு, அவன் மேல் சாய்ந்து கொண்டு, பேசும் மனைவியை எங்கனம் கோபிக்க?
அவள் தலை முடி கோதி, “முக்கியமானதே விட்டுட்டு சொல்ற தீபா? சொன்னால் , உன் வேலைக்கு பிரச்சனை வந்திரும். பிரகாஷ் விஷயம் எனக்கு தெரிய வரும்.” அவன் அடுக்க, “ஹி… ஹி…” என்று சிரித்தாள் தீபா.
“சிரிச்ச… வெளுத்திருவேன்.” அவன் அவள் காதுகளைத் திருகினான்.
“அத்தான்…” என்று அவள் சினுங்க, “என்கிட்டே சொல்லணும் தீப்ஸ். எதுனாலும், என்கிட்டே சொல்லணும். இந்த மாதிரி விஷயங்கள் பெரிய பிரச்சனைகளில் முடியறதுக்கு காரணமே, வீட்டில மறைக்கிறது தான் தீப்ஸ்.” அவன் அவள் முகம் நிமிர்த்திக் கூறினான்.
“உனக்கு ஏதாவது ஒன்னு ஆகிருந்தா, நான் என்ன பண்ணுவேன்?” என்று அவன் அவளை இறுக அணைத்து கேட்க, “அதெல்லாம் ஒன்னும் ஆகியிருக்காது அத்தான். நீங்க தான் எப்பவோ விஷயத்தை கண்டுபிடிச்சிட்ட மாதிரி தெரியுதே?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.
“கல்யாணம் முடிந்த அன்னைக்கு சாப்பிடாம, யோசிச்சிகிட்டு இருந்தியே. அப்பவே சந்தேகம் வந்திருச்சு… அப்புறம் காரில் திருட்டு முழி முழிச்சிட்டு இருந்தியே அப்ப… நல்லவ மாதிரி என் மொபைலில் போட்டோ எடுத்தியே அப்ப…” அவன் கூற, “அன்னைகேவா?” என்று கண்களை விரித்தாள் தீபா.
“ம்…” தலை அசைத்தான் அர்ஜுன், “அப்பலேர்ந்து காத்துக்கிட்டு இருந்தேன். நீ என்கிட்டே விஷயத்தை சொல்லுவன்னு. நீ சொல்லவே இல்லை. நான் தான் உன் பின்னாடி பாதுகாப்புக்கு ஆள் அனுப்பிட்டு இருந்தேன்.” அர்ஜுன் வருத்தம் தொனிக்கும் குரலில் கூறினான்.
“அத்தான் இனி எதையும் உங்க கிட்ட சொல்லாமல் இருக்க மாட்டேன். சின்ன விஷயம் கூட உங்க கிட்ட தான் முதல்ல சொல்லுவேன்.” மனைவியாக அவன் தோள் மீது தன் கைகளை மாலையாகக் கோர்த்துக்கொண்டு சமாதான படுத்தினாள்.
“அத்தான்…” அவள் சமரசம் பேச, அவன் அவளை இடையோடு அணைத்துக் கொண்டு புருவம் உயர்த்தினான்.
“யாரு அத்தான் இதெல்லாம் பண்ணது? அந்த தீ விபத்து ஆக்சிடென்ட் இல்லை. திட்டமிட்ட சதி? அப்படி தானே?” என்று கேட்டாள் தீபா.
தலை அசைத்தான் அர்ஜுன். “முதலில், நானும் ஆக்சிடெண்ட்ன்னு தான் நினச்சேன். நீ கேட்ட பிறகு தான் எனக்கும் சந்தேகம். உனக்கும், எனக்கும் ஒரே நேரத்தில் பிரச்சனை வரும் பொழுது தான் நானும் விசாரிக்க ஆரம்பிச்சேன். ” என்று அவன் பேச்சுக்கு இடைவெளி கொடுத்தான் அர்ஜுன்.
‘என்ன நடந்திருக்கும்? யார்?’ என்ற ஆவலோடு, அவன் கூறுவதைக் கேட்க, ஆவலாக அவனைப் பார்த்தாள் தீபா.
“பிசினெஸ் போட்டி தான். அது மட்டுமில்லை. அவர் பொண்ணை எனக்கு கொடுக்கணும்ன்னு நினைச்சிருக்கார். எதுவும் நடக்கலைன்னு கோபம். என் கவனத்தை திசை திருப்ப… குடும்பம், தொழில் இரண்டையும் ஒரே நேரத்தில் குழப்பம் உண்டு பண்ண இப்படி பண்ணிருக்காங்க.” அவன் தன் மனைவியிடம் கூறினான்.
“நீ ஆபிஸ் வந்து விபத்தான்னு கேட்டதில் சந்தேகம் வந்துச்சு. உன் பிரச்சனை வேற மனசில் ஓடிக்கிட்டு இருந்துச்சு. என் மூலமா விஷயத்தை அவ்வளவு ஈஸியா ஹேக் பண்ண முடியாது. நான் எந்த விஷயத்தையும் சோசியல் மீடியாவில் அவ்வளவு சீக்கிரம் போட மாட்டேன். ஆனால், நீ அப்படி இல்லை. அமுத சுரபி மாதிரி, எல்லா விஷயத்தயும் மேடம் டெய்லி போடுவீங்க.” என்று அவன் கூற, தீபா ஆமோதிப்பாகத் தலை அசைத்தாள்.
“இதுல கண்டகண்ட அப்ஸ்… பெயர் தெரியாத வெப்சைட். சோ உன்னை ஈஸியா ஹேக் பண்ணிட்டாங்க. என்னை பத்தி தெரியும். உன்னையும் ஹேக் பண்ணிட்டாங்க. மேட்டர் சிம்பிள் ஆகிருச்சு அவங்களுக்கு.” என்று அவன் கூற, தீபா சற்று அச்சத்தோடு பார்த்தாள்.
“ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம ஆளுங்க வைத்து விசாரிச்சதுல, ஓரளவுக்கு யாருன்னு தெரிஞ்சிருச்சு.” அவள் தலை முடியைக் காதோரம் ஒதுக்கி சமாதானம் பேசினான் அர்ஜுன்.
“போலீஸ் கிட்ட எல்லாம் விலாவரியா சொல்லி கம்பிளைன்ட் கொடுத்திட்டேன். பிரகாஷுக்கு ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை.” அவன் கூற அவள் சம்மதமாகத் தலை அசைத்தாள்.
தீபா அவனைக் கேள்வியாக நோக்க, “வேலை… அது தானே?” என்று அவன் கேட்க, தீபா தயக்கமாகத் தலை அசைத்தாள்.
“இவ்வளவு தைரியம் இருக்கிற உனக்கு, இந்த வேலைக்கு தான் போவேன்னு பிடிவாதம் பண்ற தைரியம் இல்லையா என்ன?” என்று அவன் கேட்க, அவன் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டும் அவன் மறைமுக சம்மதத்தையும் அறிந்து கொண்டு குறும்பாக சிரித்தாள் தீபா.
“வேலைக்கு போ. ஆனால், பாதுகாப்பா.” என்று அவன் கூறுகையில் சந்தோஷமாகச் சம்மதமாகத் தலை அசைத்தாள் தீபா.
பேசிக்கொண்டே அவன் கைகள், அவளிடம் உரிமை கொண்டாட, அப்பொழுது, “க்ளிக்…” என்று சத்தம் வர, இருவரும் அலைபேசியைப் புன்னகையோடு பார்த்தனர்.
அர்ஜுனின் அருகாமையில் அவள் விழியோரத்தில் அந்த க்ளிக் என்ற சத்தம் அன்பையும், நிம்மதியையும் மட்டுமே பரவிவிட்டது.
தீபாவின் விழியோரத்தில் வழிந்த அன்பில் அவன் க்ளிக் என்று படமாகி அவள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொண்டான் அவள் கணவன்.
அகிலா கண்ணன்

Super.. thank you
Story content is nice 👍🏻