அத்தியாயம் – 8
அத்தியாயம் – 8
தீபா அழைத்ததும், அவன் தன் அலைபேசியை உடனே எடுத்தான். “அத்தான்…” அந்த அழைப்பில், அவள் காதல், அவள் தேடல் அவன் உயிர் வரை தொட்டு மீண்டது.
“தீப்ஸ்… ஏதும் பெரிய பிரச்சனையா?” என்று அவன் கேட்க, அவளால் சொல்லவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. “அத்தான்… நீங்க எங்க? ஏன் இன்னும் வீட்டுக்கு வரலை?” அவள் கேள்விகளை முன் வைத்தாள்.
“நான் உனக்கு போன் பண்ணேன் தீபா. சுவிட்ச் ஆப்ன்னு வந்தது. வீட்ல சொல்ல சொன்னனே. சொல்லலியா உன்கிட்ட?” அவன் கேள்வி இப்பொழுது சற்று கோபமாக ஒலித்தது.
‘ஏதோ பேசினாங்களே… நான் தான் கவனிக்கலையோ?’ தீபா சுதாரித்துக்கொண்டாள்.
“அத்தான்… நான் தான் உங்களை தேடி அவசரமா நம்ம ரூமுக்கு வந்துட்டேன்.” அவள் கூற, “என்ன விஷயம்?” ஆழமாக ஒலித்தது அவன் குரல்.
“நீங்க எங்க அத்தான்?” அவள் தன் காரியத்தில் கண்ணாக நின்றாள். ‘நான் நேரில் அத்தான் கிட்டப் பேச வேண்டும்.’ அவள் அறியவில்லை. திருமணம் முடிந்து சில நாட்கள் மட்டுமே ஆகி இருந்தாலும், காலம் கடந்து விட்டது என்று.
“ஒரு அவசர வேலையா வெளியூர் கிளம்ப வேண்டிய சூழ்நிலை தீபா.” அவன் பதில் நறுக்கு தெறித்தார் போல் வந்தது.
“ஓ…” அவள் குரல் உள்ளே இறங்கியது.
“எப்ப வருவீங்க அத்தான்?” என்று தீபா கேட்டுவிட்டு, தன் நாக்கை கடித்துக் கொண்டாள்.
“முடிந்த அளவு சீக்கிரமா. ஓரிரு நாளில்!” அவன் குரலில் அத்தனை உற்சாகமில்லை.
“சரி அத்தான்.” என்று கூறி அவள் அலைபேசி பேச்சை முடித்துக்கொண்டாள்.
தீபா அழைத்து விஷயத்தைப் பானுவிடமும், சுதாவிடமும் கூற, அவர்கள் பிரகாஷை பார்த்துவிட்டு தீபாவின் வீட்டுக்கு வந்தனர்.
தீபா அவர்களை உபசரித்து அவள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“பிரகாஷ் இஸ் க்ரிட்டிக்கல்.” என்று சுதா வருத்தத்தோடு கூறினாள்.
“யாரு பண்றா?” என்று பானு கேட்க, அவர்கள் கேள்வி மீண்டும் தொடங்கிய இடத்திலே நிற்பது போல் சுதா உணர்ந்தாள்.
“இதை தான் நாம முதலில் இருந்து கேட்கறோம். போட்டோ போடுறான். ஸ்டேட்டஸ் போடுறான். நீ டெலீட் பண்ற. இதை தவிர, வேறு என்ன நடந்துருக்கு? நம் கண்டுபிடிப்பில் ஒரு முன்னேற்றமும் இல்லை.” சுதா சலிப்பினோடே கேட்டுக்கொண்டு முடித்தாள்.
“நிறைய நடந்திருக்கு சுதா. எல்லாத்தையும் சேர்த்துப் பார்த்தால் எனக்கு புரியுது.” என்று தீபா தன் நமட்டை கடித்தபடி கூறினாள்.
அவள் செய்கை அவள் பதட்டத்தைக் காட்டியது.
“முதல் முறையா, நீயும் நானும் பிரகாஷை சந்தேகப்பட்டு பார்க்க போனோம். அப்பாவும் அர்ஜுன் கிட்ட சொல்ல முடியாதபடி, அர்ஜுன் ஆபிசில் ஆக்சிடென்ட்.” தீபா கூற, மற்ற இருவரும் ஆமோதிப்பாகத் தலை அசைத்தனர்.
“ஆபிசில் நான் பார்த்த காட்சி என்னை வாயடைக்க செய்திருச்சு. அன்னைக்கே எனக்கு சந்தேகம் தான்.” என்று தீபா கூற, “ஓ… எதிரி நமக்கு இல்லையா? அர்ஜுனுக்கா?” என்று பானு ஆச்சரியமாகக் கேட்டாள்.
“எஸ். அப்படி தான் இருக்கனும். என்னை குழப்பி, அர்ஜுன் குடும்ப வாழ்க்கையும் ஸ்பாயில் பண்ணனும். அட் தி செம் டைம், அர்ஜூன்க்கு ஆபிஸிலேயும் குழப்பத்தை உண்டு பண்ணிருக்காங்க. யாருன்னு தான் நாம கண்டுபிடிக்கணும். வி நீட் போலீஸ் ஹெல்ப்.” என்று தீபா கூறினாள்.
“அப்ப பிரகாஷ்…” என்று சுதா சந்தேகம் எழுப்ப, “அவன் தானா வலையில் சிக்கிருக்கான். இடையில் வந்தவனை, நம்மளை கண்காணிச்சிட்டு இருக்கிறவங்க யூஸ் பண்ணிட்டாங்க.” என்று பானு விளக்கம் தெரிவித்தாள்.
“இதை அர்ஜுன் கிட்ட சொல்லுவோம். பிரச்சனை தீர்ந்தது.” சுதா எளிதாக கூற, “இல்லை… நாம அவங்களை நெருங்கிறதுக்கு முன்னாடி, சஸ்பெக்ட் நம்மளை நெருங்கிட்டான். இல்லை நெருங்கிட்டா. அத்தான், இன்னைக்கு ஊரில் இல்லை. வெளியூர் போயிருக்காங்க. எனக்கு தெரிஞ்சி, ஏதோ ஒரு சிக்கல் ஏற்பட்டிருக்கும். இல்லை ஏதோ ஒரு சிக்கலை உருவாக்கிருக்காங்க.” என்று தீபா யோசனையோடு கூறினாள்.
“இப்ப என்ன செய்ய?” என்று சுதா பதட்டமாகக் கேட்க, “யார் முதலில் விஷயத்தை வெளிய கொண்டு போறோமுன்னு தான் இப்ப முக்கியம். இல்லைனா, பிரகாஷ் விஷயத்தை உனக்கு எதிராவே கூட திருப்பலாம்.” பானு கூற, தீபா, ‘ஆம்…’ என்பது போல் தலை அசைத்தாள்.
“என் அண்ணன் கிட்ட, சொல்லி கமிஷனரை பார்க்கலாம். என்னால முடியும். விஷயம் இவ்வளவு தூரம் போகுமுன்னு நான் அப்ப நினைக்கலை.” சுதா சோகமாக கூற, “நாங்களும் நினைக்கலை. நீ ரொம்ப பீல் பண்ணாத.” என்று இருவரும் சுதாவைச் சமாதானம் செய்தனர்.
அவர்கள் அலைபேசி மூலம், அவர்கள் திட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
இரவு நேரம் கடந்துவிட்டதால், தீபா வீட்டில் தங்குவதாக முடிவு செய்து கொண்டனர்.
மூவருக்கும் பல கேள்விகள். ‘அர்ஜுனின் எதிரி அர்ஜுன் மொபைலை ஹேக் செய்யவில்லை? ஆனால், தீபாவுடையதை எப்படி ஹேக் செய்தனர்? எப்படி அனைத்து விஷயங்களையும் கண்டுபிடித்தனர்?’ பல கேள்விகளுக்கு, இவர்களுள் பல அனுமானங்கள் எழுந்தாலும், பதில் கண்டுபிடிக்க முடியாமல் அந்த இரவை உறக்கம் இல்லா இரவாகவே கழித்தனர்.
மறுநாள், இவர்கள் மூவரும், சுதாவின் அண்ணனோடு கமிஷனரை பார்க்கச் சென்றனர்.
அவர் அனைத்தையும் கேட்டுக்கொண்டு, அமைதியாக இருந்தார். ஒரு நொடிக்குப் பின், தக்க அதிகாரியிடம் பேசினார். மீண்டும் அங்கு மௌனமே நிலவியது.
அப்பொழுது, அவருக்கு ஓர் அழைப்பு வந்தது, “ம்…” கொட்டிக்கொண்டு, அவர் கூறுவதைக் கேட்டுக்கொண்டார்.
அதன் பின் தீபாவை ஆழமாகப் பார்த்தார். “நீங்க ஜர்னலிஸ்ட்?” நக்கலாகக் கேட்டார்.
“உங்களை பத்தின விஷயத்தை தேடி அலையே வேண்டாமுன்னு நீங்களே எல்லா விஷயத்தையும் உங்க சோசியல் மீடியாவில் கொடுத்துருக்கீங்க?” அவர் கூற, தீபா அவரை தடுமாற்றமாகப் பார்த்தாள்.
“நீங்க மட்டுமில்லை, படிச்சவங்க, படிக்காதவங்க எல்லாரும் இப்படி தான் இருக்கீங்க.” அவர் சலிப்பாகக் கூறினார்.
“உங்க போட்டோ… உங்க விருப்பம்… உங்க வேலை… உங்க வேலை மேல உங்களுக்கு இருக்கிற விருப்பம்… அது மட்டுமில்லை, உங்களை பாதிச்ச விஷயம்… அப்படின்னு எல்லாமே நீங்களே ஸ்டேட்டஸ் போட்டிருக்கீங்க. உங்களை நான் ஃபாலோவ் பண்ணா போதும், உங்க சரிதையை நானே எழுதலாம்.” அவர் கூற, மூவரும் திருதிருவென்று முழித்தனர்.
“இது மட்டுமில்லை… உன் நண்பர்கள் ஐடியை பார்த்தா கொஞ்சநஞ்சம் விட்டுப் போன விஷயத்தையும் கண்டுபிடிச்சிரலாம்.” அவர் நக்கல் பேசினார். “இதுல ஆண் நபர்கள் வர , கரஷ்ன்னு உங்க பெயரை போட்டு வச்சிருக்காங்க. நீங்க அதை கவனிச்சிருப்பீங்களான்னு கூட தெரியலை. ஆனால், உங்களை கண்காணிக்கணும்னு நினைச்சா, இதெல்லாம் தெரிஞ்சிக்கலாம்.” என்று கமிஷனர் கூறினார்.
இந்த செய்தி அவர்களுக்கு சற்று அதிர்ச்சி தான்.
“எங்களை பத்தி தெரிஞ்சிக்கிட்டாங்க. ஆனால், எப்படி எல்லாத்தயும் ஹேக் பண்ணாங்க?” என்று தீபா கேட்க, “நீங்க பல இடங்களில் ப்ரீ வைஃபை (wifi) யூஸ் பண்ணிருக்கீங்க. நிறைய கேம்ஸ் டவுன்லோட் பண்ணிருக்கீங்க. எல்லாத்தையும் யோசிக்காம அக்செப்ட் கொடுத்துருக்கீங்க. இதுல ப்ரீ கூப்பன் கொடுத்தா பல வெப்சைட்ல ஷாப்பிங் பண்ணிருக்கீங்க.” அவர் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே கூறினார்.
அனைவரும் கமிஷனரை கேள்வியாக பார்க்க, “பலர் பண்றாங்களே? இது தானே உங்கள் கேள்வி?” என்று அவர் கேட்க, இவர்கள் ஆமோதிப்பாகத் தலை அசைத்தனர்.
“ப்ரீயா இருக்குமுன்னு இஷ்டப்படி எல்லாத்தயும் யூஸ் பண்ண கூடாது. எல்லாரும் பாதுகாப்பா இருக்கனும். தேவைப்பட்டா, இப்படி யூஸ் பண்ற யாரை வேணும்ன்னாலும் ஹேக் பண்ணலாம். நாங்க இதை தான் சொல்றோம். நாங்க சொல்றதை யாரும் கேட்கறதில்லை. பிரச்சனை வரும் பொழுது இங்க வரீங்க. ஒரு கம்பிளைன்ட் கொடுத்திட்டு போங்க.” என்று அசட்டையாக முடித்தார்.
அவர்கள் அவரை பார்க்க , “எனக்கு இந்த மாதிரி ஆயிரம் கேஸ் இருக்கு. நீங்க ஜர்னலிஸ்ட் அப்படின்னு தான், நான் இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்தேன். நாலு பேருக்கு எடுத்து சொல்லுங்க.” என்று அறிவுரை கூறினார்.
அவர்கள் தலை அசைக்க, “நீங்க இன்னும், உங்கள் வீட்டில் சொல்லலை. அது நீங்க பண்ற முதல் தப்பு.” அவர் கூற, தீபா குற்ற உணர்ச்சியோடு தலை அசைத்தாள்.
அப்பொழுது அவர் அருகே இருந்த தொலைப்பேசி ஒலிக்க, “உள்ள வர சொல்லுங்க.” என்று கூறினார்.
அங்கு வந்த மனிதரை மூவரும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!