arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் அறுபது
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 60 / 64

அத்தியாயம் அறுபது

visibility 1
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சிலையாக அமர்ந்திருந்தவனை பார்த்த மற்றவர்களுக்கும் என்னவாயிற்றோ என்ற பதட்டம் சூழவாரம்பித்தது. ஒவ்வொருவருக்குள்ளும் பதட்டம். என்ன என்று சொல்ல முடியாத இறுக்கம்.

“என்ன ஷ்யாம்? யார் கால் பண்ணது?” அருகிலிருந்த கார்த்திக் அவனை உலுக்க, அவனால் பேச முடியவில்லை. உணர்வற்று அமர்ந்திருந்தான். என்ன சொல்வது என்றோ… என்ன பேசுவது என்றோ கூட தோன்றவில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அவனை அவனே மறந்த நிலையில் அமர்ந்திருந்தான்.

ஷ்யாமின் அதிர்ந்த முகத்தை பார்த்த கார்த்திக்கு இன்னும் பதட்டமானது.

பார்த்துக் கொண்டிருந்த முருகானந்தம், “சொல்லுங்க மாப்ள… என்னாச்சு?” என்று பதறிப் போய் கேட்க, அவன் பதில் சொல்லும் நிலையில் இருந்தால் தானே?

மற்ற யாராக இருந்தாலும் அவனது அறிவு செயல்படும். வந்த செய்தியின் உண்மை தன்மையை மனம் ஆராயக் கூடும். ஆனால் மனைவியின் விஷயத்தில் அவனது அறிவு எந்த விதத்திலும் செயல்படவில்லை.

“நானா…” நாதன் ஷ்யாமை உலுக்க, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அழைக்க, லேசாக ஸ்மரணையடைந்தவன், தலையை பிடித்தவாறு குனிந்துக் கொண்டான்.

‘கண்டிப்பா இருக்காது… இல்ல… அது மஹா இல்ல…’ மனம் உருப் போட்டுக் கொண்டிருந்தது.

“ஷ்யாம்…” கார்த்திக் இன்னும் கொஞ்சம் உலுக்க, நிமிர்ந்து பார்த்தவனின் கண்கள் அத்தனை ரத்த சிவப்பாய்! உணர்வுகளை அடக்கிக் கொண்டு, உடையாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள பெரிதும் முயன்று கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டான் கார்த்தி.

“என்னாச்சு மச்சான்?” என்று கேட்க,

“கி… கிண்டி… ஸ்டேஷன் பக்கத்துல… ஒரு ஆக்சிடென்ட்டாம்… அது ம… மகா… மாதிரி…” என்று நடுங்கியபடி, திக்கித் திணறிக் கொண்டு கூற, பைரவி நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துக் கொண்டார். ஜோதியும் நாதனும் அதிர்ந்து பார்க்க, முருகானந்ததிற்கோ நெஞ்சின் ஓரத்தில் ஒரு சிறு புள்ளியாய் வலி!

அதிர்ந்து பார்த்த கார்த்திக், தன்னை சுதாரித்துக் கொண்டு,

“அது வேற யாரோவா இருக்கும் மச்சான்… வா போய் பார்த்துடலாம்…” என்றழைக்க,

ஷ்யாம் நடுக்கத்தோடு, இடம் வலமாக தலையாட்டினான்.

“இல்ல… நான் வரமாட்டேன்…”

“ஒரு எட்டு போய் பார்த்துடலாம்… கிளம்பு…” ஷ்யாமின் பயம் புரிந்தது. ஆனால் அப்படியேவும் இருக்க முடியாதே! போய் பார்த்தால்தானே தெரியும், அது மஹாவா என்று. அவனை பொறுத்தவரை மஹா ஒன்றும் அவ்வளவு கோழையல்ல. ஷ்யாமின் கஸ்டடியில் இருக்கும் போது கார்த்திக் தான் உடைந்து அழுதானே தவிர, அத்தனை தைரியமாக இருந்தவள் அவள். அவளாவது மனமுடைந்து ரயில் முன் பாய்வதாவது? தனக்குத் தானே தைரியம் சொல்லிக் கொண்டவன்,

“மச்சான், உன் பொண்டாட்டி உலகமே அழிஞ்சாலும் நான் பாணி பூரி சாப்பிட்டிட்டு வரேன்னு சொல்ற ஆளு… அது போய்…” என்றவன், “கிளம்பு மச்சான்… போய் பார்த்துட்டு வந்துடலாம்…” எனவும், கொஞ்சம் அவனது இறுக்கம் தளர்ந்தாலும், அவனால் அந்த காரியத்தை செய்ய முடியும் என்று தோன்றவில்லை. அவளா என்று பார்த்து ருசுப்படுத்துவதே அவனைப் பொறுத்தவரை ஆயிரம் முறை இறந்து பிழைப்பதற்கு சமமாக தோன்றியது.

“முடியாதுடா… என்னால வரவே முடியாது…” பிடிவாதமாக அவன் மறுத்துக் கூறினான், நடுக்கத்தோடு.

அவனுக்கு அருகில் அமர்ந்த ஜோதி, “என்ன நானா… இப்படி பிடிவாதம் பிடிக்கற? சொன்னதுக்காக போய் பார்த்து இல்லைன்னு சொல்லிட்டு வந்துடு…” என்று அவனது தலையை தடவிக் கொடுத்தபடியே கூற, முழுவதுமாக உடைந்து விட்டிருந்தான் ஷ்யாம், சுற்றிலும் எல்லாரும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்து.

அவனது உயரம் மறந்து, அவனது பிம்பம் மறந்து, தாயின் கையை பற்றிக்கொண்டு, “எனக்கு பயம்மா இருக்கு… நான் போ மாட்டேன்…” என்று பெற்றவளிடம் தெலுங்கில் கூறியவனுக்கு நடுங்கியது. அந்த வார்த்தைகளை வெளியே எடுக்கவே சிரமமாக இருந்தது.

கண்களில் கண்ணீர் சூழ்ந்திருந்தது. அதை யாருக்கும் காட்ட விருப்பமில்லாமல் தாயின் கைகளில் முகத்தை புதைத்திருந்தான். கைகளில் ஈரத்தை உணர்ந்த ஜோதி, திடுக்கிட்டு,

“நானா… என்ன இது? ஊருக்கே தைரியம் சொல்றவன் நீ? இப்படியா? ஸ்டே ஸ்ட்ராங் கண்ணா… மஹாவுக்கு ஒன்னுமாகி இருக்காது…” என்றவர், “சரி… நீ போக வேண்டாம்… நானும் நானாவும் போயிட்டு வரோம்…” என்றவர், கண்ணீருடன் கலங்கி நின்றிருந்த கார்த்திக்கை பார்த்து, “காரை எடு கார்த்திக்… நாம போயிட்டு வந்துடலாம்…” என்று கூற, கார்த்திக் ஷ்யாமை பார்த்தான். இன்னமும் அவன் தலை நிமிர்ந்து பார்க்கவில்லை.

முருகானந்தம் நெஞ்சை பிடித்துக் கொண்டு தான் அமர்ந்திருந்தார். பைரவி எதுவும் பேசாமல் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டிருந்தார்.

“பெரியம்மா… நானும் கூட வரேன்… நாமளே போய் பார்த்துட்டு வந்துடலாம்… அண்ணா ரொம்ப இமொஷனலா இருக்காங்க…” என்று பிருந்தா கூற, நிமிர்ந்து பார்த்தவன்,

“இல்ல… நீங்க எல்லாரும் இங்கயே இருங்க… நானும் கார்த்திக்கும் பார்த்துட்டு வர்றோம்…” என்று எழுந்து கொண்டான். அவனது நடுக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.

யார் சொன்னது அவன் இரக்கமற்ற இரும்பென?

யார் சொன்னது அவன் ராட்சசன் என?

அந்த இரும்பை வளைக்கும் ஒரே நெருப்பு, அவனது மனைவி மஹாவேங்கடலக்ஷ்மி மட்டுமே!

அந்த ராட்சசன் பயம் என்பதை அறிந்ததும், அவனது மனைவி மஹாவேங்கடலக்ஷ்மியால் மட்டுமே!

எதுவும் பேசாமல் காரை எடுத்தான் கார்த்திக். இறுக்கமாகவே தான் வந்தான் ஷ்யாம். கார்த்திக்கிடம் எதுவும் பேசாமல்!

தலகுப்பாவில் அவளோடு தான் பேசியதெல்லாம் அவ்வப்போது மனதுக்குள் ரீவைண்ட் ஆகிக் கொண்டிருந்தது.

‘ஒரு நாள் நீ கண்டிப்பா ஃபீல் பண்ணுவ… இன்னைக்கு நீ ஆணவத்தோட, உன்னோட பணபலத்தால உலகமே உன்னோட காலடில இருக்கறதா நினைக்கலாம்… அப்படியும் இருக்கலாம்… ஆனா ஒரு நாள்… ஒரு நாள்… ஃபீல் பண்ணுவ… அன்னைக்கு இந்த உலகமே உனக்கு வெறுத்துப் போகும்… ஏன் நாம உயிரோட இருக்கறோம்ன்னு உன்னை நீயே வெறுக்கற சூழ்நிலை வரும்… அப்ப உன்னை விட்டு எல்லாமே போயிருக்கும்…”

அவள் கொடுத்த சாபம், அவனுக்கானதா? இல்லை அவளுக்கானதா?

உண்மையில் இந்த வாழ்க்கை அந்த நொடி மிக மிக வெறுத்துப் போனது. அவள் இல்லையென்றால் என்னவாகுவோம் என்பதை கற்பனை கூட செய்ய முடியாத நிலையிலிருந்தான் ஷ்யாம். உடனிருந்த போது கூட அவளது தேவையை அவனால் உணர முடியவில்லை.

‘ஓகே… நீ இருந்தா நான் நல்லா இருக்கேன் குல்ஃபி…’ என்ற அளவில் தான் அவனது எண்ணம் இருந்தது. ஆனால் அவள் இல்லை என்ற இந்த நேரத்தில் தான் அவளது தேவையை அவன் மிக பயங்கரமாக உணர்ந்தான். அவள் அவனுக்குள் விஸ்வரூபம் எடுத்திருந்தாள்.

‘உலக அழகிங்க எல்லாம் என் காலடில இருக்காங்க… நீ எம்மாத்திரம் மிர்ச்சி?’ என்று தான் அத்தனை அகங்காரமாக கேட்டது இப்போதும் காதில் ஒலித்தது.

அவள் ஒருத்திக்காக இத்தனை தவிப்பை அனுபவிப்போம் என தெரிந்திருந்தால் அந்த பேச்சையெல்லாம் குறைத்து இருக்கலாமோ? ஆனால் அத்தனையும் தாண்டி, அவன் மேல் அத்தனை காதலை வைத்திருந்தாளே, தன்னுடைய, தனக்கேயான அந்த மஹா எங்கே?

அவளை தொலைத்துவிட்டு புலம்பிக் கொண்டிருந்தான் அவன்!

இத்தனை நாட்களில் அவளை காதலிப்பதாக உணர்ந்திருந்தானே தவிர, இவ்வளவு தீவிரமாக அவளுக்குள் ஆழ்ந்து போயிருப்பதை அப்போதுதான் உணர்ந்தான்.

அவள் உயிரோடும் உணர்வோடும் கலந்து விட்டிருப்பதை உணர்ந்தவனால் அவளில்லாமல் இந்த உலகத்தில் ஜீவிக்க முடியும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இன்னொருத்தி ப்ளஸ் இன்னொருத்தி என்ற அந்த கணக்கீடுகள் எல்லாம் முழுவதுமாக உடைந்து சுக்கு நூறாகி இருந்து கொண்டிருந்தது.

‘வாரண்டி கேரன்ட்டி தந்துட்டு தான் லவ் பண்ண முடியுமா மிர்ச்சி? உன்கிட்ட அந்த கேரன்ட்டிய நான் இப்ப போலித்தனமா கொடுக்கலாம். ஆனா இன்னொரு ரெண்டு வருஷம் கழிச்சு உனக்கோ எனக்கோ சலிச்சு போச்சுன்னா, அதையும் கிரேஸ்புல்லா ஏத்துகிட்டு பிரியறது தான் அழகு. அதை விட்டுட்டு ஒருவனுக்கு ஒருத்தின்னு சொல்லிட்டு லைப் முழுக்க ஒரு போலியா வாழ முடியாதுன்னு சொல்றது தப்பா?’

‘ஆனா அந்த கேரன்ட்டி கூட இல்லாம உன்னால எப்படி லவ் பண்ண முடியும்? என்னை பொறுத்தவரைக்கும் லவ் வேற லஸ்ட் வேறல்ல… ரெண்டுமே ஒருத்தர் கிட்ட மட்டும் தான் பீல் பண்ண முடியும்ன்னு நினைக்கறேன்… ஆனா உன்னோட டெஃபனிஷன் வேற… லஸ்ட் வேற லவ் வேறன்னு சொல்ற அளவு உனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு… அதை ஒரு தோழியா என்னால ஏத்துக்க முடியும்… ஆனா ஒரு காதலியா மனைவியா எப்படி என்னால ஏத்துக்க முடியும்? அதை நினைச்சு பார்த்தியா?’

முதன் முதலாக இதழ் முத்தத்தை பரிமாறிக் கொண்ட அந்த தினத்தில் அவன் அவளிடம் கூறியதும் அவள் அதற்கு கொடுத்த மறுமொழியும், அவனிடம் கேட்ட கேள்வியும் நினைவுக்கு வந்தது. தன்னையுமறியாமல் தலையிலடித்துக் கொண்டான்.

அந்த கேரண்டியை இப்போது தருகிறேன் என்றது அவனது மனம். ஆனால் கேட்க அவனது மனைவி?

உள்ளுக்குள் எவ்வளவோ புலம்பல்கள். ஆனால் வெளிக் காட்டாமல் மெளனமாக அமர்ந்திருந்தான்.

காரை செலுத்திக் கொண்டிருந்த கார்த்திக் ஷ்யாமை பாவமாக பார்த்தான்.

இத்தனை காதலை, நேசத்தை அவனே எதிர்பார்க்கவில்லை. காதல் உடல் தாண்டி மனம் தாண்டிய ஆன்ம பந்தம் என்பது உண்மைதானோ!

இந்தளவு உயிராய் இருப்பவனை மகாவால் எப்படி சந்தேகப்பட முடிந்தது? இறந்த காலம் என்பது ஒவ்வொருவருக்கும் இருப்பதுதான். ஒரு சிலருக்கு ரோஜாக்களால்… ஒரு சிலருக்கு முட்களால்… அதை சரி தவறு என்பதை விட, அதை மறந்து விட்டு வாழ முயல்வது தான் வாழ்க்கை. நிமிர்ந்து நிற்கும் மூங்கில் தான் முதலில் வெட்டுப்படும் அல்லவா… வளைந்த மூங்கிலை யாரும் வெட்டுவதில்லை.

இருவரின் திருமணத்தின் வரையும் கூட கார்த்திக்கின் மனதில் குழப்பம் இருந்து கொண்டிருந்தது. ஷ்யாமை பற்றிய கணக்கீடுகள் எப்போதும் குறைவாகத்தான் இருந்து இருக்கிறது. ஆனால் இப்போது உணர்ந்தான். இவனைக் காட்டிலும் மகாவை வேறு யார் அதிகபட்சமாக காதலித்து விட முடியும்? இப்படி ஒருவனின் நேசத்தை புரிந்து கொள்ளாமல் சென்ற தங்கை மீது அத்தனை கோபமாக இருந்தது.

கிண்டி ரயில் நிலையத்தின் அருகில் காரை நிறுத்தினான். கண்களில் சோர்வையும் உறக்கத்தையும் சுமந்து கொண்டிருந்த மக்களை ரயில் துப்பி விட்டு சென்றது. அருகிலேயே ரேஸ் கோர்ஸ்… ஒருபுறம் குதிரையை வைத்து மனிதனாடும் சூதாட்டம்… மறுபுறத்தில் காலம் மனிதர்களை வைத்தாடும் சூதாட்டம், நிற்க நேரமில்லாமல், மின்சார இரயிலில் பயணித்து, அடிபட்டு மிதிபட்டு, அடிப்படை தேவைகளுக்காக பணத்தை தேடி ஓடும் மனிதர்கள்!

அந்த ஓட்டம் என்பது எதை நோக்கி என்பதைத்தான் மனிதர்கள் உணர்வதே இல்லை. வாழ்க்கையை தேடி… நிம்மதியை தேடி… உறக்கத்தை தேடி… புன்னகையை தேடி… உயிர் மூச்சை தேடி ஓடுவதும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.

“சர்… கிண்டி ஸ்டேஷன் வந்துட்டோம்… எங்க வர்றது?” என்று கார்த்திக் தான் விசாரித்தான். ஷ்யாம் இறுக்கமாகவே அமர்ந்திருந்தான்.

அந்த இடத்தை நோக்கி போன போதும் கூட, கார்த்திக்கின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

“அவளா இருக்காது கார்த்திக்…” உறுதியாக கூறினாலும், கண்களில் கலக்கம். தவறியும் அப்படி இருந்து விட கூடாது என்று.

“கண்டிப்பா இருக்காது மச்சான்…” என்றவன், அவனை சமாதானப்படுத்தி அழைத்து செல்ல, அந்த இடத்தை நெருங்கும் போதே, அவனது கால்களில் நடுக்கம்.

“இருக்காதுல்ல…” என்று ஹீனமாக கேட்க,

“கண்டிப்பா இருக்காது…” தனக்கு தானே தைரியம் சொல்லிக் கொண்டான் கார்த்திக். இந்த நேரத்தில் அவனும் உடைந்து விட முடியாது. அது ஷ்யாமை இன்னமும் உடைத்து விடக் கூடும் என்பதை காட்டிலும் தங்கையை தேட வேண்டும் அவனுக்கு.

“ஹலோ ஷ்யாம் சர்…” கைக் கொடுத்தார் அவனுக்காக அங்கே வந்திருந்த கமிஷனர்.

“ஹலோ சர்…” என்று கைக்கொடுத்தவனின் கண்களில் ஜீவனில்லை.

எதுவும் பேசாமல் அந்த பெண்ணின் சிதைந்த உடலைப் பார்த்தான். அடையாளம் காண்பதற்கும் முடியாத அளவு சிதைந்திருந்தது. ஆனால் சுடிதாரோடு இருந்தாள் அந்த பெண்.

“உப்ப்ப்ப்…” ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டான் ஷ்யாம். அந்த உடல் தன்னவளுக்கு சொந்தமானது இல்லையென்ற உணர்வில் வந்த பெருமூச்சு. ஆனால் இறந்த ஆன்மாவுக்காக பரிதாபப் பட்டவன், அருகில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கிடம், சற்று விடுதலை உணர்வோடு,

“இல்ல டா… இது மஹா இல்ல…” என்றான், சிறு கண்ணீரோடு!

பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக்கும் அதைதான் நினைத்துக் கொண்டிருந்தான்.

“அதான் சொன்னன்ல… நம்ம மகாவா இருக்காதுன்னு… நீ தான் ரொம்ப நடுங்கற மச்சான்…” என்றவனுக்கும் சற்றேயான மகிழ்ச்சி. அந்த பெண் மஹா இல்லை என்பதில்!

“அவ விஷயத்துல எனக்கு என்னைக்கு அறிவு வொர்க் பண்ணிருக்கு? இப்ப மட்டும் வொர்க் பண்ண?” என்று கேட்டான் கசப்பான புன்னகையோடு.

அங்கிருந்த சிமென்ட் இருக்கையில் சரிந்து அமர்ந்தான் ஷ்யாம். அந்த பெண் மஹா இல்லையென்றாலும் ‘மஹா எங்கே?’. மீண்டும் மீண்டும் மனம் இதே கேள்வியில் ஆழ, தொடையில் முழங்கைகளை ஊன்றி, கைகளின் மேல் தலையை குவித்து வைத்துக் கொண்டான். வாழ்க்கையில் எல்லாவற்றையும் தொலைத்து விட்ட உணர்வு!

வெளியில் எத்தனை வெற்றி பெற்றாலும், வாழ்க்கையில் தோற்று விட்டால் வாழ்வதில் அர்த்தம் உள்ளதா? மூச்சு விடவே சிரமமாக இருந்தது.

“அது என்னமோ வாஸ்தவம் தான்… அறிவு இருக்கவன், ஒரு பொண்ணுக்காக இருபது கோடியை மொத்தமா தூக்கிக் கொடுப்பானா? இப்படியெல்லாம் நீ இருந்தா, அது இன்னும் தான் தலைல ஏறி மொளகாய் அரைக்கும். கொஞ்சமாவது அதுகிட்ட கெத்து காட்டு நான் எத்தனை முறை சொல்லிருப்பேன். அப்படி இருந்து இருந்தா இப்படியெல்லாம் போக தோணுமா? உன்னை தான் சொல்லணும்…” கூடவே அவனோடு அமர்ந்தவன், ஒரு பிரச்சனை முடிந்த அந்த விடுதலை உணர்வில் ஷ்யாமை போட்டுத் தாக்கினான் கார்த்திக்.

“அத்தனையும் அவளோடது… அதை அவ புரிஞ்சுக்கல… அவ்ளோதான்… அதுக்காக நான் மாற முடியாது…” என்றவனை பார்த்து மெலிதாக புன்னகைத்தான்.

“எனக்கு வர்ற கோபத்துக்கு உன் பொண்டாட்டி மட்டும் என் கைல கிடைக்கட்டும். வெளுத்துடறேன் பாரு…” என்று கார்த்திக் பொருமினான்.

பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் நிழலாடியது!

நிமிர்ந்து பார்த்தான்!

விஜி!

கையில் இன்னமும் ஸ்டிக் வைத்திருந்தான். முகத்தில் மெல்லிய பதட்டமும் கூட!

“உங்களை இங்க வெரிபிகேஷன்க்காக கூப்பிட்டதா கேள்விப்பட்டேன் பாஸ்…” என்றவன் தயங்கியபடியே நின்றிருக்க,

“உக்காருடா…” என்றவன், அருகிலிருந்த இருக்கையை காட்ட,

“இருக்கட்டும் பாஸ்… அது மேடம் இல்லைல…” என்று கேட்டவனுக்கும் திக் திக் என்றிருந்தது. அவன் ஆசைப்பட்ட பெண் தான். அவளுக்காக அத்தனை செய்யக் கூடாத வேலைகளை எல்லாம் செய்தான் தான். இப்போது அவள் ஷ்யாமின் மனைவி என்றாலும், அவளுக்கு ஒன்றென்னும் போது விஜியால் அவனிடத்தில் இருக்க முடியவில்லை.

“ம்ம்ம்… இல்ல…” என்று கூறியவனை பார்த்த அவனது பார்வையில் சற்று நிம்மதி தெரிந்தது.

“கண்டிப்பா வந்துருவாங்க பாஸ்…” என்று தைரியம் கூறியவனின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவனது வார்த்தைகளில் பொய்மை தெரியவில்லை.

“ம்ம்ம்…” என்றபடி முகத்தை அழுத்தமாக பிடித்துக் கொண்டான்.

“உங்க மேல ரொம்ப பிரியம் வச்சு இருக்காங்க பாஸ்… அவங்களால எங்கயும் போக முடியாது…” அவ்வளவு உறுதியாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தான். அவனது பார்வையிலிருந்த கேள்வியை உணர்ந்தவன்,

“கொஞ்சம் கோபம் வரும் தான். ஆனா உங்களை அவங்க விட்டே கொடுத்தது இல்ல… கண்டிப்பா இப்பவும் வந்துடுவாங்க…” என்று உறுதியாக கூற,

“தேங்க்ஸ்டா… இப்ப வரைக்கும் என்னை விட்டுக் கொடுக்கல… விட்டுக் கொடுக்க முடியாம தான் போய்ட்டா…” என்றான் முகத்தை அழுத்தமாக துடைத்தபடி!

ஷ்யாமின் செல்பேசி அழைத்தது.

சௌஜன்யா தான் அழைத்தாள். மனம் சோர்வாக இருந்தது. அவளது பெயரை பார்க்கும் போதே வெறுப்பாக கூட இருந்தது. அதே உணர்வோடு அழைப்பை ஏற்று,

“சொல்லுங்க…” என்று கேட்க,

“சர்… மேடம்…” என்று அவள் இழுக்க,

“ம்ம்ம்… சொல்லுங்க…” என்றான். அவனுக்கு அவளிடம் பேச விருப்பமே இல்லை எனும் போது என்ன பதில் சொல்வது? அதிலும் குடும்ப விஷயத்தை எத்தனை பேரிடம் விவாதிப்பது?

“மேடம்…” என்று ஆரம்பித்து சௌஜன்யா கூறியதை நம்ப முடியவில்லை. அவனது காதுகள் கேட்டது உண்மையா என்று அவனுக்கே புரியவில்லை.

“என்ன சொல்றீங்க சௌஜன்யா?” கேட்டது உண்மையா என்று அவனுக்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“எஸ் சர்… அங்க தான் இருக்கேன்…”

“நல்லா தெரியுமா? அது மஹா தானா?” என்று பரபரப்பாக கேட்க, மற்ற இருவரும் இன்னும் பரபரப்பானார்கள்.

“கண்டிப்பா சர்… அது மேடம் தான்…” உறுதியாக கூறினாள் சௌஜன்யா.

“ஓகே… அங்கேயே இருங்க… இன்னும் அரை மணி நேரத்துல அங்க இருப்போம்…” என்றவன், இருவரிடமும் சொல்லாமல் கூட வேகமாக ஓடினான், வாகனத்தை நோக்கி.

*****

ஷ்யாம் சொன்ன அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே வந்து சேர்ந்திருந்தான். பின்னாலேயே விஜி, அவனது வாகனத்தில், டிரைவரோடு!

பரபரப்போடும் பயத்தோடும் அவள் வாசலில் காத்திருக்க, ஷ்யாமையும் கார்த்திக்கையும் கண்டத்தில் முகம் பிரகாசமடைந்தது!

மெளனமாக உள்ளே சென்றான். மெல்லிய இசை வழிந்து கொண்டிருந்தது. அதை ஊன்றி கவனிக்கும் மனநிலையோ, ரசிக்கும் மனநிலையோ அவனுக்கு இல்லை. இன்னும் சற்று நேரத்தில் அந்த இசை காதை கிழிக்கக் கூடும். ஒருவிதமான வாசனை பரவியிருந்தது. அங்கெல்லாம் முன்னர் வந்திருக்கிறான் தான், ஆனால் ஒவ்வொரு முறையும் ஜோடி மாறியிருக்கிறது. ஆனால் இப்போது நெஞ்சு திடும் திடுமென அடித்துக் கொண்டது. அவளை அங்கு கண்டுவிடுவோமோ என்ற பயம். இருக்கக் கூடாது என்றும் வேண்டிய மனம், அவளை பார்த்து விட்டால் போதுமென்றும் துடித்தது.

அது ஒரு பப். மிகவும் ஆடம்பரமான பப். ஹாலின் ஓரத்தில் ஒரு மூலையில் அமர்ந்திருந்தாள் மஹா. அவளுக்கு முன் இருந்த மது கோப்பையை வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். கண்களில் நீரின் பளபளப்பு… முகத்தில் வெறுமை… கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளை கண்டவுடன் ஓடிப் போய் இறுக்கமாக கட்டிக் கொள்ள தோன்றினாலும் கால்களில் கல்லைக் கட்டிக் கொண்டது போல தோன்றியது.

ஷ்யாமால் கால்களை அடுத்து எடுத்து வைக்க முடியவில்லை. அப்படியே நின்ற இடத்திலேயே நின்று கொண்டான். அவன் என்ன உணர்ந்தான் என்று அவனாலேயே வரையறுக்க முடியவில்லை. அவன் மது அருந்துவதையே விரும்பாதவள் அவள். அவள் மது கோப்பையுடனா? தலை சுற்றியது. வேண்டாம் என்று கத்த துடித்தாலும் வார்த்தைகள் வெளிவரவில்லை. அதிகபட்சமான அதிர்வின் முடிவில் இருந்தான்.

டான்ஸ் ப்ளோரில் இசையின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

தான் ஒவ்வொரு முறையும் ட்ரிங்க்ஸ் எடுக்கும் போதெல்லாம் அவளது அட்வைஸ் காதை கிழிக்கிறதே என்று விளையாட்டாக கூறியிருக்கிறான். ஆனால் இன்று அவளே மது கோப்பையின் முன்?

வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவனை பின்னால் வந்த கார்த்திக், தட்டி சுய உணர்வுக்கு கொண்டு வந்தான்.

ஷ்யாமின் கண்கள் சென்ற பாதையை பார்த்தவனுக்கு நிலம் கீழே நழுவியது.

தங்கையை இது போன்றதொரு இடத்தில் கண்டதே அதிர்ச்சி எனும் போது, அவள் அமர்ந்திருந்த நிலையை கண்டபோது நெஞ்சு வலிக்கும் போலிருந்தது.

“ஷ்யாம்…” அதிர்ச்சியில் அவனுக்கும் வார்த்தை வெளிவரவில்லை.

இருவரின் அதிர்ந்த முகத்தை கண்ட சௌஜன்யாவுக்கும் விஜிக்கும் சங்கடமாக இருந்தது.

தேவதையை போன்ற பெண்!

வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால், அமைதியான வாழ்க்கையில் ஆழ்ந்து இருப்பாள் என்பது திண்ணம் தான். ஆனால் ஷ்யாமுக்கு வாழ்க்கைபட்டதால் இப்படி ஒரு நிலை தேவையா என்று எண்ண தோன்றியது விஜிக்கு! ஆனால் அவனிடம் கடைசி வரை விட்டுக் கொடுக்கவே இல்லையே அவள்!

மெல்ல நடந்து அவள் முன் சென்று நின்றான் ஷ்யாம்.

சோபையை இழந்த கண்கள், மதுக் கிண்ணத்தை வெறித்துப் பார்த்தபடி!

அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது கண்களில் நிறைந்தவன் ஷ்யாம் ஒருவனே!

வெறுமையான அந்த கண்களை சந்தித்தவளின் கண்களும் வெறுமையை சுமந்தது. ஆழ்ந்து அவனை பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது! அழவில்லை… ஆனாலும் கண்ணீர் நிற்கவில்லை!

இத்தகைய நிலைக்கு ஆளாக்கி விட்டாயே என்று அவனை குற்றம் சாட்டியது அவளது விழிகள்! உதடுகள் வெப்பமாக துடிக்க, மூக்கு சிவந்து கன்னம் கன்றி, கண்கள் வீங்கி அவள் அமர்ந்திருந்த தோரணையை கண்டபோது ஷ்யாமால் தாள முடியவில்லை.

“மஹா…” கன்றிய குரலில் அவனழைக்க, அவனை பாராமல் மதுக் கிண்ணத்தை பார்த்தாள் மஹா!

உண்மையில் தன்னுடைய மனைவி இங்கு வந்து அமர்ந்திருப்பது அத்தனை அவமானமாக இருந்தது அவனுக்கு, அதிலும் மற்ற மூவரின் முன்பும் மஹா இப்படி இருப்பது ரொம்பவுமே தலையிறக்கமாக இருந்தது.

“எழுந்திரு மஹா…” நிதானமாக கூறினாலும், உள்ளுக்குள் அவ்வளவு வலித்தது ஷ்யாமுக்கு.

எதுவும் பேசவில்லை அவள், பார்வை மட்டும் மதுக் கோப்பையின் மீதே!

“மஹா…” இப்போது சற்று அழுத்தமாக அழைக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பார்வையிலிருந்த வெறுமை அவனை சுட்டது. கலங்கிய அந்த கண்களை மறைக்க அவள் எந்த பிரயத்தனமும் செய்யவில்லை.

அவள் எங்கெங்கோ சுற்றியலைந்து விட்டு அங்கு வந்து அமர்ந்து விட்டாளே தவிர, அவளது நினைவுகள் இங்கில்லை. தன்னை மறக்க வேண்டும் என்று தோன்றியது. எதுவுமே வேண்டாம்… எந்த நினைவும் வேண்டாம். கணவனின் இன்றைய செய்கையை அவளால் மறக்க முடியுமென்றும் மன்னிக்க முடியுமென்றும் தோன்றவே இல்லை.

“எழுந்திரு மஹா…” வெகு அழுத்தமாக அழைத்தவனை நிமிர்ந்து பார்த்தாள். அதில் இப்போது வெறுமையை தாண்டி வெகுவான சீற்றமிருந்தது.

“எதுக்கு?”

“வீட்டுக்கு போகலாம்மா… எழுந்திரு…” என்று அவளது கையை பிடித்தான். அவனது கையை உதறி விட்டாள் மஹா.

“முடியாது…” பிடிவாதமாக கூறினாள். உண்மையை அறியாத அந்த பேதை. எந்தவொரு விஷயத்துக்கும் இரண்டு பார்வைகள் இருக்கலாம். ஒன்று நாம் கண்டதை அப்படியே நம்புவது. இரண்டாவது ஆயிந்தரிந்து தெளிவது.

ஷ்யாம் மேல் வைத்த காதல், அந்த காதல் கொடுத்த வலி, அவனது முன் வாழ்க்கை, அந்த வாழ்க்கை இப்போதும் கொடுக்கும் உறுத்தல், அந்த வாழ்க்கையின் மீதங்கள், மஹாவின் குற்ற உணர்ச்சிகள் என்று அவளை சுழட்டியடித்துக் கொண்டிருந்த நேரத்தில் காலை சம்பவம்.

அவளை புரட்டிப் போட்டிருந்தது.

“சொல்றதை கேளு மஹா… எந்திரி…” அவனது தவிப்பெல்லாம் கோபமாகிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில், அதுவும் யார் முன்னிலையில்?

“எனக்கு எதையுமே தாங்க முடியல ஷ்யாம்… நான் என்ன தப்பு பண்ணேன்? உன்னை லவ் பண்ணி தொலைச்சது ஒரு குத்தமா? என்னை இங்க கொண்டு வந்து நிறுத்திட்டியே…” என்றவளுக்கு கண்கள் கலங்கியது. மேஜையின் மேல் கைகளை வைத்து தலையை பிடித்துக் கொண்டாள்.

“லூசு மாதிரி பேசாத மஹா…”

“போச்சு… எல்லாம் போச்சு… அவ்வளவு கௌரவமா வாழ்ந்த வாழ்க்கை எல்லாம் போச்சு… இங்க கொண்டு வந்து நிறுத்தினது தெரிஞ்சா எங்க அம்மாக்கு நெஞ்சே வெடிச்சுரும்டா…” தொண்டையை அடைத்தது துக்கத்தில், பேச முடியாமல் பேசினாள் அவள்!

“மஹா…” இப்போது வெகு அழுத்தமாக அழைத்தது கார்த்திக்.

நிமிர்ந்து பார்த்தாள்.

கார்த்திக் ஷ்யாமின் பின்னால் கோபமாக நிற்க, அருகில் விஜி வேறு!

அவனுக்கு முன் வெகு தலையிறக்கமாக இருந்தது மஹாவுக்கு.

அவனிடம் அத்தனை பேசியிருந்தாள் மஹா, ஷ்யாமை விட்டுத் தராமல்!

இப்போது அவன் முன்னிலையில் இப்படி தான் இருக்க நேரிட்டு விட்டதே என்ற குன்றல் வேறு. இதற்கு காரணம் கணவன் தான் என்ற கோபம் இன்னுமே பெரிதாக எரிந்தது.

“என்னை அத்தனை பேர் முன்னாடியும் தோற்க வெச்சுட்ட ஷ்யாம்… நான் தோத்து போயிட்டேன்…” என்றவள், வெடித்து அழ, அதை கண்ட ஷ்யாமுக்கும் கலங்கியது. ஆனால் இவள் தவறாக அல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்ற உணர்வு அவனை சீற செய்தது.

“மஹா… வீட்டுக்கு போய் பேசிக்கலான்டி… இதெல்லாம் பேசற இடமா?” என்று ஷ்யாம் கேட்க, அவனை நிமிர்ந்து வெறித்துப் பார்த்தாள். கண்களில் கண்ணீர்.

“என்னை தலை குனிய வெச்சுட்டல்ல… இனிமே எந்த முகத்தை வெச்சுகிட்டு அந்த வீட்ல உன் கூட இருப்பேன்?”

“ம்ம்ம்… இதே மூஞ்சிய வெச்சுகிட்டு தான்…” என்றவன் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளை எழுப்ப முயல,

“வரமாட்டேன்…”

“இன்னும் கொஞ்ச நேரத்துல பப் மூடிருவாங்கடி… அப்புறம் என்ன பண்ணுவ?”

‘ம்ம்ம்… என்ன பண்றது?’ என்று யோசித்தாள் மஹா. ஆனால் இவனுடனும் போக விருப்பமில்லை. தாய் வீட்டுக்கும் செல்ல விருப்பமில்லை. அவ்வளவு விரக்தியாக இருந்தது மனதுக்குள்.

நம்பிக்கையை ஒரே நாளில் உடைத்து விட்டானே என்ற விரக்தி. நேரில் பார்த்து விட்டதை ஏற்க முடியாத விரக்தி.

“எனக்கு யாரும் இல்ல… எனக்கு போகவும் இடமில்ல…” முகத்தை மூடிக் கொண்டு அழுதவளை கையாலாகாத பார்வை பார்த்தான். அப்படியென்றால் தான் யார்? அவளுக்கு தான் என்ன? உள்ளுக்குள் சுருண்டது வலி மிகுந்த கேள்வி.

அதை காட்டிக் கொள்ளாமல், “ஆஹான்… அப்படியா?” என்றவன், முக்கால் கை வரை மடித்து விட்டிருந்த சட்டையை முழங்கைக்கு இழுத்து விட்டு அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.

அவனை பல்லைக் கடித்துக் கொண்டு முறைத்தவள், தள்ளி அமர்ந்தாள்.

“ஓகே…” என்றவன், “டேய் மச்சான்… எனக்கு ஒரு பெக் சொல்லு… விஸ்கி… ராவா… நோ சோடா வித் ஐஸ்…” என்றவனை முறைத்தான் கார்த்தி.

“யோவ்… என்னய்யா பண்ற? அவ தான் புத்தி கெட்டுப் போய் இங்க வந்திருக்கான்னா, நீயும் ஜோடி போட்டுக்கிட்டு இதான் சாக்குன்னு சரக்கடிக்க உக்கார்ந்துகிட்ட…” கடுப்பாக கூற,

“யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்? பொண்டாட்டி கூட உக்கார்ந்து தண்ணி அடிக்கறதெல்லாம் நடக்கற விஷயமா? அதை என்ஜாய் பண்ண விடு மச்சான். வேணும்னா நீயும் உக்காரு…” என்று சொன்னாலும் அதிலிருந்த கோபமும் ஆற்றாமையும் கார்த்திக்கு புரியாமலில்லை. ஆனால் கணவன் மனைவி தகராறில் உள்ளே நுழைவது சரியல்ல என்று நினைத்துக் கொண்டு மெளனமாக நின்றிருந்தான்.

“ஏன் ஆம்பிளைங்களுக்கு மட்டும் தான் லவ் பெயிலியர் வருமா? அவங்க மட்டும் தான் குடிக்கனுமா? எனக்கு இங்க லைஃப்பே போய்டுச்சு… நான் குடிச்சா என்ன தப்பு?” என்று ஆவேசமாக மஹா கேட்க,

“கண்டிப்பா… யுவார் அப்சல்யுட்லி ரைட்… ஏன் நீ தாராளமா குடிக்கலாமே?! எனக்கு கம்பெனி கொடுக்க என் பொண்டாட்டியே இருக்காங்கறது எவ்வளவு பெருமையான விஷயம் தெரியுமா?”

“உனக்கு கம்பெனி வேற கொடுக்கனுமா?” என்று கொலைவெறியானவள், கண்களில் நீரோடு அவனை முறைத்தாள்.

“பின்ன? நான் உனக்கு ஊத்தி கொடுக்க, நீ எனக்கு ஊத்தி கொடுக்க… நெனச்சு பார் பார் மஹா… வாஹ்… வாரே வாஹ்… க்யா பாத் ஹே…” கிண்டலாக கூறியவனை இன்னும் முறைத்தாள்.

“வேணா ஷ்யாம்… இவ்வளவு நேரம் எப்படி இதை குடிக்கறதுன்னு யோசனை தான் பண்ணிட்டு இருந்தேன்… இப்படி பேசினா கண்டிப்பா குடிச்சுடுவேன்…” என்று மிரட்டியவளை அழுத்தமாக பார்த்தவன்,

“இப்படில்லாம் யோசிக்க கூடாது மஹா… ஒரே ஷாட்… இப்படித்தான்…” என்றவன், அவளுக்கு முன் இருந்த மதுவை ஒரே மடக்கில் அவனது வாயில் கவிழ்த்துக் கொண்டான். ‘அடப்பாவி’ என்று நினைத்துக் கொண்டவள்,

“ஏய் எரும… இதான் சாக்குன்னு குடிக்கறியா?” என்று கோபமாக கூற,

“அதை வச்சுட்டு அழகு பார்த்துட்டு இருக்க? குடிக்கறதுக்கு முஹூர்த்தம் பார்த்துட்டு இருந்தியா?” என்று ஷ்யாம் எள்ளலாக கேட்க,

“ம்ம்ம்… எனக்கென்ன பழக்கமா? பயமா இருந்துது… எங்க அம்மா என் தோலை உறுச்சுடுவாங்க… உன்னை கட்டினதுக்கு எனக்கு இந்த பழக்கம்லாம் தேவதான்… என் விதி…” என்று கோபமாக கூறியவள், “ஆனாலும் என்னை மறக்கணும்… என்னை மறந்தேயாகனும்… இல்லைன்னா எனக்கு பைத்தியம் பிடிச்சுடும்…” என்று தலைக்கு கையை வைத்துக் கொள்ள, அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“எப்படிடா… தப்பு பண்ணிட்டு இப்படி முகத்தை நேரா பார்க்கற? நான் அவ்வளவு ஏமாளியாவா தெரியறேன்?” அழுகை வெடித்து விடும் போல இருந்தது.

“அரவேக்காடு மாதிரி தெரியற… இன்னும் சொல்லனும்னா பளார்ன்னு ஒரு அரை விடனும்ன்னு தோணுது. ஆனா பொண்டாட்டியை அடிக்கறவன் ஆம்பிளையே இல்லைன்னு நான் நினைக்கறேன். இன்னும் கோபத்தை கிளராம ஒழுங்கா எந்திரி சொல்லிட்டேன்…” என்று படு கோபமாக ஷ்யாம் கூற,

“கிளம்பு மஹா… இன்னும் இங்க இருந்து குடும்ப மானத்தை சந்தி சிரிக்க வெச்சுடாத. இன்னாரோட பொண்ணு, இன்னாரோட வைப்ன்னு எல்லார் பேரும் தான் கெடும். தயவு பண்ணி புரிஞ்சுக்க…” கார்த்திக் பொறுமையாக எடுத்துக் கூற,

“ஏன் காலைல அவளோட ஒரே ரூம்ல இருந்தப்ப தெரியலையா? அப்ப போகாத மானம் தான் இப்ப போகுதா?” அழுகையினூடே அவள் கேட்க, அவனுக்கு நெருப்பின் மேல் நிற்பதை போலிருந்தது. ஒரே ஒரு விளையாட்டான பொய் எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை வேதனையாக உணர்ந்தான்.

“தயவு செஞ்சு என்னை இப்ப பேச வைக்காத கார்த்திண்ணா… இவனை விட்டுக் கொடுக்க கூடாதுன்னு என் வாழ்க்கையை விட்டுக் கொடுத்துட்டேன்… இன்னைக்கு எனக்கு நல்ல லெசன் சொல்லித் தந்துட்டான்…” என்று அழ, அவன் மௌனமாகவே அவளைப் பார்த்தபடி இருந்தான்.

அவளது நம்பிக்கை எனும் வஸ்து மொத்தமாக காணமல் போய்விட்டதை வலியோடு உணர்ந்தான்.

“மஹா… நீ தப்பா நினைச்சுட்டு இருக்க…” என்று கார்த்திக் ஆரம்பிக்க, அவனை கைகாட்டி நிறுத்தினான். ஷ்யாமின் மனதளவில் பெரும் அடி வாங்கிக் கொண்டிருப்பதை கார்த்திக் உணர்ந்தான்.

“நம்மை நம்பறவங்களுக்கு நம்ம விளக்கம் தேவையில்லை. நம்மளை நம்பாதவங்களுக்கு நாம விளக்கவே தேவையில்லை கார்த்திக்…” என்று உணர்வுகளை துடைத்த குரலில் கூற, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

எந்த கோணத்தில் பார்த்தாலும் அவனது கண்களில் பொய்மையை கண்டுபிடிக்க முடியவில்லையே!

“இல்ல சர்… என்னால தான் இந்த பிரச்சனை…” என்று சௌஜன்யா ஆரம்பிக்க, சரேலென நிமிர்ந்து பார்த்தாள். அவளுக்கும் ஷ்யாமுக்கும் இடையிலிருந்த மாயவலை அறுந்தது.

“இவ கூட இருந்தத எனக்கு தெரியக் கூடாதுன்னு நினைச்சியா ஷ்யாம்? அதனால தான் பொய் சொன்னியா?” கண்களால் சௌஜன்யாவை காட்டி கேட்க, அவன் பேசவில்லை.

“இல்ல மேடம்… நீங்க நினைக்கற மாதிரி இல்ல…” என்றாள் சௌஜன்யா.

“உன்கிட்ட கேக்கல… உன்கிட்ட எல்லாம் கேட்டுத்தான் என் புருஷனை பத்தி தெரிஞ்சுக்கனும்ன்னு எனக்கொண்ணும் விதியில்ல… நீ வாயை மூடிட்டு கிளம்பிடு… இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தன்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…” இயல்பாகவே சௌஜன்யாவின் மேலிருந்த கோபத்தில் அவளை கிழித்து தொங்க விடும் நிலையிலிருந்தாள்.

“சாரை தப்பா நினைக்கறீங்க…” என்று ஆரம்பிக்க,

“நான் அவரை பத்தி தப்பா நினைக்றேனோ, கரெக்டா நினைக்கறேனோ… அது எங்களுக்குள்ள இருக்க விஷயம். உன் வேலைய பார்த்துட்டு கிளம்பு. இன்னொரு வார்த்தை பேசின, கன்னம் பழுத்துரும்…” கோபமாக கூறியவளை புரியாமல் பார்த்தாள் சௌஜன்யா.

ஆனால் மகாவின் கோபத்தால் ஷ்யாமிடம் பகையை தான் சம்பாதித்து விட்டால்? அந்த நினைவே அவளுக்குள் பயமுறுத்தியது.

“இல்ல மேடம்… காலைல என்னாச்சுன்னா…” என்று சௌஜன்யா ஆரம்பிக்க, இருக்கையை விட்டு எழுந்த மஹா, “நீ பேசாதன்னு சொல்றேன்ல… அன்னைக்கு என் கிட்ட சவால் விட்ட, அதுக்கப்புறம் இந்த விஜியோட சேர்ந்துகிட்டு போட்டோஸ் லீக் பண்ணி அதையும் யூஸ் பண்ணிக்க பார்த்த, இப்ப இப்படியொரு வேலை பார்த்து இருக்க…” ஆவேசமாக கூறியவள், ஷ்யாமை காட்டி, “இவர் வேண்ணா உன்னை மறுபடியும் நம்பலாம்… ஆனா என்கிட்ட உன்னோட நடிப்பை வெச்சுக்காத…” என்றவள், ஷ்யாம் தடுப்பதற்குள் அவளை அறைந்து இருந்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் அறுபத்து ஒன்று

ஒரு நாள் முழுக்க பட்டினி கிடந்து அலைந்தது ஒரு பக்கம் என்றால், மனதளவில் பெரிய அடி வாங்கியிருந்த ஷ்யாமை பார்ப்பது இன்னொரு கொடுமையாக இருந்தது. அத்தனை வேதனைகளையும் வெளியே பெரிதாக காட்டிக் கொள்ளாமல் காலை முதல் அலைந்தவனுக்கு என்ன மரியாதை?அதிலும் கிண்டிக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்