arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் அறுபத்து ஒன்று
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 61 / 64

அத்தியாயம் அறுபத்து ஒன்று

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

ஒரு நாள் முழுக்க பட்டினி கிடந்து அலைந்தது ஒரு பக்கம் என்றால், மனதளவில் பெரிய அடி வாங்கியிருந்த ஷ்யாமை பார்ப்பது இன்னொரு கொடுமையாக இருந்தது. அத்தனை வேதனைகளையும் வெளியே பெரிதாக காட்டிக் கொள்ளாமல் காலை முதல் அலைந்தவனுக்கு என்ன மரியாதை?

அதிலும் கிண்டிக்கு போலீசார் அழைத்தபோது போது ஒவ்வொரு நொடியும் அவன் மாண்டு மீண்டதை முழுக்க அறிந்த கார்த்திக்கால் மகாவின் செயலை ஏற்கவே முடியவில்லை.

இதை அப்படியே விட்டால் மேலும் ரசாபாசமாகி விடும் என்பதை உணர்ந்தவன், சௌஜன்யாவை அப்புறப்படுத்த நினைத்தான்.

“சாரிம்மா… சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்… நீங்க கிளம்புங்க…” சௌஜன்யாவை பார்த்துக் கூறியவனை எரித்து விடுவதை போல பார்த்தாள் மஹா.

“ஏன் சாரி சொல்ற அண்ணா?”

“இங்க நீ இருக்கன்னு சொன்னதே இந்த பொண்ணுதான். சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்க நினைச்சா தான் பாப்பா. ஆனா இப்ப அந்த பொண்ணு மேல தப்பில்ல… நீ கண்ணை மூடிட்டு வார்த்தைய கொட்டிகிட்டு இருக்க…” என்று கார்த்திக் கூற, மகாவுக்கு இன்னமும் கோபம் குறையவில்லை.

ஷ்யாம் விஜியை பார்த்து, “கிளம்புடா…” என்று முடித்துவிட, விஜி மனதில் பாரத்தோடு தலையசைத்தான்.

“ஒரு விஷயம் மட்டும் மேம் கிட்ட சொல்லிடறேன் பாஸ்…” என்ற விஜியை கேள்வியாய் பார்த்தான்.

மஹா இப்போதிருக்கும் நிலைமையில் என்ன சொன்னாலும் அதை அவள் தவறாக கொள்ளத்தானே வாய்ப்பு அதிகம் என்ற உண்மையை புரியாமல் இவன் ஏதாவது சொல்லிவிடப் போகிறானா?

மஹா பக்கம் திரும்பிய விஜி, “உங்க கிட்ட முன்னாடியே சொன்னதுதான் மேம்… நான் பண்ணது தப்பு… மன்னிக்கவே முடியாத தப்பு… அதையும் பாஸ் மன்னிச்சு இருக்கார். இனிமே நான் கண்டிப்பா உண்மையா இருப்பேன். அதை மட்டும் நான் சொல்லிடறேன். உங்க ரெண்டு பேர் மத்தில இவ்வளவு பிரச்சனைக்கும் அடிப்படை காரணம் நானாத்தான் இருக்கணும். அதுக்கு நான் ரொம்ப வருத்தப்படறேன்… தயவு செஞ்சு மறந்துடுங்க…” என்று கண்களில் நீரோடு கூறிய விஜியை வியப்பாக பார்த்தான் ஷ்யாம், கார்த்திக்கும் கூட!

முன்னமே தகைந்து வந்திருந்தான் தான். ஆனால் இது நேரடியாக அவன் கேட்கும் மன்னிப்பு… மஹா நிம்மதியாக இருக்க வேண்டும் என்று அவன் இப்போது நினைப்பது புரிந்தது. இனி கண்டிப்பாக தவறு செய்ய மாட்டான். ஒருவரை தண்டிப்பதை காட்டிலும் மன்னிப்பது பெரிய மாற்றங்களை கொண்டு வருகிறது என்பதை உணர்ந்தான் ஷ்யாம். ஷ்யாம் விஜியை மன்னித்ததும் ஏதோவொரு வகையில் இவனது தேவைக்காகத்தான் என்றாலும் கூட இவ்வளவு பெரிய மாற்றத்தை விஜியிடம் கொண்டு வந்திருக்கிறதே!

“டேய்… பழச பேசாதடா… விடு…” ஷ்யாம் விஜியின் தோளை தட்டிக் கொடுத்தபடி கூற, அவன் மறுத்து தலையசைத்தான்.

“இல்ல பாஸ்… என்னால இனியும் உங்க லைப்ல பிரச்சனை வர வேண்டாம். நான் அவ்வளவு தப்பு பண்ணிருந்த நேரத்தில கூட, உங்க கிட்ட சண்டை போட்டுட்டு என்னை பார்த்தாங்க இவங்க… எனக்காக உங்க கிட்ட வாதாடினாங்க… எனக்கும் தெரியும்…” என்றவனுக்கு தொண்டையடைத்தது.

“டேய்…”

“இல்ல பாஸ்… நீங்க சொத்தெல்லாம் திருப்பி கொடுத்ததால நான் எல்லா டாக்குமெண்ட்சையும் கொடுக்கல… முதல் காரணம் நீங்க என்னை ஏத்துகிட்டீங்க… நானும் நீங்க பண்ணினதை மறக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன். ரெண்டாவது காரணம் இவங்க தான்… யார் கொடுப்பாங்க அப்படி ஒரு கேர்? ஆனா அத்தனையும் உங்களுக்காக பண்ணாங்க… உங்க இடத்துல இருந்து எனக்கு பண்ண வேண்டிய கடமையா நினைச்சு பண்ணாங்க… அதுக்கு நான் மரியாதையை கொடுக்கலைன்னா நான் என்ன மனுஷன்? இந்த தேவதைப் பொண்ணோட வாழ்க்கை நிம்மதியா இருக்கனும்ன்னு நான் நினைக்கறேன் பாஸ்… இனியும் என்னால அவங்க நிம்மதி போக வேண்டாம்… அவங்க கோபம் ஒவ்வொன்னும் நியாயமானதுதான்…” என்று கூற, அவனது வார்த்தைகள் ஷ்யாமின் மனதின் அடியாழம் வரை ஊடுருவியது. விஜியை அணைத்துக் கொண்டான்.

“டேய்… நீ எப்பவுமே என்னோட விஜி தான்டா…” என்று தோளை தட்டிக் கொடுத்தான்.

“இங்க நீங்க பிரச்சனை இல்ல விஜி… என் புருஷன் என்கிட்ட பொய் சொல்லிட்டாங்க… அதை என்னால தாங்க முடியல… அவ்வளவுதான்…” என்றவள், யாரையும் பார்க்காமல் பார்வையை எங்கோ பதித்தாள்.

சௌஜன்யாவை மஹா அடித்தது தவறாக பட்டாலும், ஒரு நேரத்தில் ஷ்யாம் மேலிருந்த மயக்கத்தில் மஹாவிடம் சவால் விட்டு, பின் மஹா சொன்னதை போல சந்தர்ப்பத்தை உபயோகிக்க நினைத்ததற்கு இது தேவைதான் என்று கார்த்திக் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

“சரிடா… கிளம்பு… நான் பார்த்துக்கறேன்…” என்று ஷ்யாம் முடித்து விட, இருவருமே கிளம்பினார்கள். கார்த்திக் புறம் திரும்பினான் ஷ்யாம்.

“கார்த்திக், உன் தங்கச்சிய காருக்கு கூட்டிட்டு போ…” அழுத்தமாக கூறினான். சௌஜன்யாவை அவள் அடித்ததை யார் நியாயப்படுத்தினாலும் ஷ்யாமால் ஜீரணிக்க முடியவில்லை. நெஞ்சோரம் வலித்தது. தன்னுடைய நேர்மையை இவள் சந்தேகப்பட்டு, அவனை விட்டு வந்து, இப்போது அவளது சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துவது போல இப்படியொரு செயலை செய்திருக்கிறாளே என்ற வேதனை நெஞ்சை அறுத்தது.

“முடியாது… நான் வர மாட்டேன்…” திட்டவட்டமான குரலில் மஹா கூற,

“கார்த்திக்… உன்னை கூட்டிட்டு போன்னு சொன்னேன்…” இத்தனை நாட்களாக இல்லாத இறுக்கம் அவனது குரலில்.

“நான் வர முடியாது…” மஹாவும் அதே பிடிவாதத்தோடு கூற,

“கார்த்திக்…” மிக மிக அழுத்தமாக, குரலை இன்னும் கொஞ்சம் உயர்த்தி அவன் கூறிய தொனியில் நிச்சயமாக கார்த்திக் அதிர்ந்தான்.

அதீத கோபத்தின் போது மட்டுமே அவனது தொனி இப்படி இருக்கும். சாதரணமாக கோபப்படாதவன், கோபமென்று வந்துவிட்டால், அவனாடும் ருத்திர தாண்டவத்தை இவனன்றி யார் அறிய முடியும்?

ஷ்யாமை வெறுப்பாக பார்த்துவிட்டு, கண்களை கொட்டி கண்ணீரை அடக்கி வேறு புறம் பார்த்தவள், உதட்டை மடக்கி துடித்த இதழ்களை அடக்கினாள்.

காலை முதலே அவளது உலகம் அவனோடு நின்று போயிருந்தது.

கண்டிப்பாக தனக்கு துரோகம் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை மிகுதியாக இருந்தது. அந்த நம்பிக்கை மிகுதியாக இருந்ததால் தான் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டதும். ஆனாலும் அந்த வீடியோ காட்சிகளை மறக்க முடியாமல், அவனையும் ஏற்க முடியாமல் அவள் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், அவளை சற்றும் தொந்தரவு செய்யவில்லை. அதை காட்டிலும், எதை பற்றியும் கவலை இல்லாமல், அவளோடு உடனான நேரங்களை மகிழ்ச்சியோடு அனுபவித்தது தான் அவளது காதலை இன்னமும் அழுத்தமாக அவன் மேல் படர வைத்துக் கொண்டிருந்தது.

“உன்னை வெச்சு ஊறுகாய் போட்டுட்டு இருப்பேன்னு நினைச்சியா?” என்று ஒருமுறை கேட்டவன், அதற்கு முற்றிலும் எதிராக அத்தனை கண்ணியமாக இருக்க, அவன் மேல் இருந்த காதல் இப்போது அவளுக்கு ஏக்கமாக மாறியிருந்தது. அவனது தொடுகைக்கும், அணைப்புக்கும் வெகுவாக ஏங்கி போயிருந்தாள்.

தொடுவான், அணைப்பான், முத்தமிடுவான்… ஆனால் அத்தனையிலும் ஒரு விதமான ஒதுக்கம் தெரிந்தது. முதன் முதலாக தலகுப்பாவில் அவளை முத்தமிட்ட அந்த நிமிடங்களை நினைத்துப் பார்த்தாள்.

மனதுக்குள் சொல்லத் தெரியாத குளுமை!

அவளது உயிரை வேரோடு பிடுங்கி எடுத்து கொண்டு அவனோடு உருக்கி அவனுக்குள்ளே கரைந்து விட்டதை போன்ற அந்த உணர்வை எந்த காலத்தில் அவளால் மறந்து விட முடியும்? வன்மையாகத்தான் முத்தமிட்டான்… ஆனால் அத்தனை மென்மையாக, பூவை கொய்வது போல, பூக்குவியலில் குளிப்பது போன்ற சில்லென்ற அந்த உணர்வை இப்போதும் மறக்கவே முடியவில்லை. ஒரு முத்தம் யுத்தம் நிகழ்த்துமா? கண்டிப்பாக பூகம்பமே கண்டது அவளுக்குள்! முன்னரே கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன், முழுமையாக அவளை கொள்ளைக் கொண்டதும் அப்போதுதானே!

ஆனால் அடுத்த ஒரு சில நொடிகளில் காரண்டி வாரண்டி கொடுத்துவிட்டு காதலிக்க முடியுமா என்று கேட்டானே… முழுமையாக உள்ளுக்குள் உடைந்து போனது மனது! அவன் எத்தகையவன் என்பதை அப்போதுதான் மனம் முழுமையாக உணர்ந்தது. அவனது காதலே வேண்டாம் என்று முடிவு செய்தவளுக்கு அவனது நட்பை அது போல வெட்டி விட முடியவில்லை. அவனது புத்திசாலித்தனமும், நகைச்சுவை உணர்வும், பேச்சும், செயலும் அவளை அத்தனை வசீகரித்து இருந்தது.

குறும்பு கிருஷ்ணன் வெண்ணை திருடினாலும் அவனை வெறுக்க முடியுமா?

அப்படித்தான் இருந்தது அவளது நிலை!

ஆனால் பிருந்தாவன கோபியருள் ஒருத்தியாக அவளால் இருக்க முடியாது! அது அவளது சுயமரியாதைக்கு பெரும் இழுக்காயிற்றே!

அதன் பின் எத்தனையோ மாற்றங்கள்… ஒரு நாள் முழுமையாக கிருஷ்ணனின் ராதையாகினாள்!

உத்தண்டி வீட்டில் அவனோடு மொத்தமாக ‘நீதானே’ என்று மயங்கிய அந்த பொழுது!

தோளில் உரசிய மூச்சுக்காற்றின் வெப்பம், அவளுக்குள்ளும் உணர்வு தீயை பற்ற வைத்த அந்த வேளை. தீயை பற்ற வைத்தவன், முத்தமிட்டு முத்தமிட்டு, அந்த தீயை கொழுந்து விட்டெரிய செய்து வெப்பத்தை கூட்டிக் கொண்டேயிருக்க, அந்த கனம் தாங்க முடியாமல் அவன் மார்பை தஞ்சம் கொண்டிருந்த அந்த கணங்களை அவளால் மறக்கவே முடியவில்லை.

வீடியோவை பார்த்த அந்த கோபம் வெகுவாக குறைந்திருக்க, அவனோடு மயங்கியிருந்த நேரமெல்லாம் நினைவுக்கு வந்து அன்றைக்கு அவளை பழைய மஹாவாக்கியிருந்தது.

அதிலும் காலை எழுந்தது முதலே அத்தனை மகிழ்ச்சியாகத்தான் வலம் வந்து கொண்டிருந்தாள். திருமணமாகி நூறாவது நாள். கண்டிப்பாக ஷ்யாமுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டும் என்று கடந்த மூன்று நாட்களாகவே அவளது மனதுக்குள் ப்ளான் ஓடிக் கொண்டிருந்தது.

அத்தனை கசடுகளையும் மறந்து விட வேண்டும் என்று உரு போட்டுக் கொண்டே இருந்தாள். தன்னை உயிராக தாங்கும் கணவனுக்கு இத்தனை நாட்களில் என்ன சிறப்பாக செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி வேறு மனதை வருத்திக் கொண்டிருந்தது.

அத்தனைக்கும் காரணம், அவனது காதல்! இருவருக்குமான உறவு என்பது பூ மலர்வது போல மென்மையாக, இயல்பாக இருக்க வேண்டும் என்ற அவனது எண்ணம்! அதை எத்தனையோ தடவை கூறியும் இருக்கிறான்.

“நானும் உன்னை ரொம்ப லவ் பண்றேன்… நீயும் அப்படித்தான்… உனக்குள்ள இருக்க இன்ஹிபிஷனை நீயா உடைச்சுட்டு வெளிய வா மஹா… உனக்காக நான் வெய்ட் பண்றேன்னு மட்டும் ஞாபகத்துல வெச்சுக்க…” என்று அவன் இப்போதெல்லாம் அடிக்கடி குறிப்பிட ஆரம்பித்து இருந்தான்.

‘டேய் மடையா… அந்த இன்ஹிபிஷனை நான் உடைக்க முடியாது… நீதான் உடைக்கணும்…’ என்று மனம் அவ்வப்போது சண்டித்தனம் செய்யவாரம்பித்து இருந்தது.

ஆனால் அந்த நூறாவது நாள் என்ற அந்த தினம், அனைத்தையும் உடைத்திருந்தது!

அவனுக்காக யாருமறியாமல் மோதிரம் வாங்கியவள், அதை அழகாக பேக் செய்து வைத்திருந்தாள். அதை அவனுக்கு அன்று இரவு அணிவித்து இனிய அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது அவளது ப்ளான்.

காலை முதலே அவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டு தானிருந்தாள்.

“டேய் மாமா… நான் உனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டா?” ஷேவ் செய்து கொண்டிருந்தவனிடம் கெஞ்சலாக அவள் கேட்க, அவளை புன்னகையோடு பார்த்தான்.

எப்போதுமே அவனுக்கு ஷேவ் செய்து விடுவதில் ஒரு தனி ஆர்வம் உண்டு. ஆனால் ஒழுங்காக அதை செய்யவும் தெரியாது. அழுத்தி இழுத்தால் கன்னத்தில் கிழித்து விடுமோ என்று பயந்து கொண்டே லேசாகத்தான் இழுப்பாள். அதில் ஷேவிங் க்ரீம் மட்டும் தான் வரும். அதனாலேயே அவள் பார்க்கும் முன்னே ஷேவ் செய்து முடித்து விடுவது அவனது வழக்கம். இன்று சற்று அவன் ஏமாந்து விட, அருகில் வந்து நின்று கெஞ்சியவளை மூக்கை சுருக்கிக் கொண்டு கல்மிஷமாக பார்த்தான்.

“ம்ம்ம்… தாராளமா பண்ணு… ஆனா ஒரு கண்டிஷன்…” என்று கூறியவன், புருவத்தை உயர்த்தி கண்ணை சிமிட்டி சம்மதம் கேட்க, அவள் புன்னகையோடு,

“ம்ம்ம்… கண்டிஷனா?” என்று இழுத்தவள், “என்னன்னு சொல்லு…” என்று அவனுக்கு அழகு காட்டினாள்.

“அதாவது…” என்று ஆரம்பித்து, “அடிக்க மாட்டல்ல…” என்று குறும்பாக கேட்டவனை, செல்லமாக புன்னகையோடு முறைத்தவள்,

“ஏதோ கோக்குமாக்கா தான் கேக்க போற…”

“தெரியுதில்ல… அப்புறமும் ஏன்டி வம்பு பண்ற?” கண்ணடித்தவன், ஷேவ் செய்வதில் பிசியாக இருக்க, இவள் முறைத்தாள். ஆனால் முறைத்தால் இப்போது வேலைக்காகாது என்று முடிவு செய்து கொண்டு,

“மாமா… ப்ளீஸ் மாமா… ஒரே ஒரு தடவ… ப்ளீஸ் மாமா…” என்று கெஞ்ச,

“என்னடி இப்படி இறங்கிட்ட? இதே மாதிரி வேற எதுக்காவது கொஞ்சுனா கூட ஒரு யூஸ் உண்டு… போயும் போயும் ஷேவ் செய்யவா?” என்று அவன் தலையிலடித்துக் கொள்ள,

“ப்ளீஸ்… ஒரு தடவ… ப்ளீஸ் மாமா…” கண்ணையும் மூக்கையும் சுருக்கிக் கொண்டு உதட்டை குவித்தபடி கெஞ்சியவளை சில்மிஷமாக பார்த்தவன், ஷேவிங் க்ரீமை அவளது மூக்கில் அப்பி விட, மூக்கை விடைத்து முறைத்தாள்.

“ஏய்… உன்னோட ஆசைக்காக என் மூஞ்சிய வெச்சு ரிஸ்க் எடுக்க முடியுமா? அதுவும் கழுத்துல ரேசரை வெச்சுதான் என்னை மிரட்டுவ வேற… ஓடுடி…” என்று அவளை விரட்ட,

“அது போன மாசம்…” அப்பாவியாக அவள் கூற,

“ம்ம்ம்ம்ம்… ஆஹான்… இது இந்த மாசமா?” என்று கேட்க, அவள் வேகமாக தலையாட்டினாள்.

“ஓகே… உன்னை ஷேவ் பண்ண விட்டா எனக்கென்ன கிடைக்கும்?” வரவை பற்றி கவலைப்பட்டான் அவளது கணவன்!

“ம்கூம்…” என்று இடித்தவள், “ச்சே… உன்னை மாமான்னு கூப்பிட்டது எல்லாம் வேஸ்ட்…” என்று நொடித்துக் கொள்ள,

“நீ மாமான்னு கூப்பிட்டா, எனக்கு வாம்மான்னு காதுல விழுது… அதுவும் கிக்கா…” என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டி கூற,

“ம்ம்ம்… விழும் விழும்…”

“ஏய் பொண்டாட்டி… அந்த பாவா என்னாச்சுடி? அது இன்னும் கிக்கா இருக்குமே…” என்று ஒரு மாதிரியான குரலில் கூற,

“கிக்கு வேணுமா கிக்கு?” என்று அவனது மண்டையில் கொட்டியவள், அவளது கையிலிருந்த ரேசரை வலுக்கட்டாயமாக பிடுங்கி அவனோடு நெருங்கி நின்று ஷேவ் செய்ய, அவளது வெற்றிடையில் அவனது கைகள் படர,

“டேய் கையை எடுத்துடு… என் கைல என்ன இருக்குன்னு தெரியும்ல…” என்று மிரட்டலாக கூறுவது போல கூற,

“என் கை சும்மா இருக்கேடி பொண்டாட்டி…” என்று கிறக்கமாக கூற,

“சும்மா இரு இல்லைன்னா எதையாவது சுமந்துட்டு இரு… அதுக்காக எதுக்குடா அங்க வைக்கற?” என்று கூறினாலும், கண்கள் சொருகியது அவளுக்கு.

“நீ அந்த வேலைய பாரு… நான் இந்த வேலைய பார்க்கறேன்…” என்று அவளிடம் வம்பிழுத்து, அவனது கன்னத்திலிருந்த ஷேவிங் க்ரீமை எல்லாம் அவளது கன்னத்துக்கு இடம் மாற்றி, ஒரு வழியாக ஷேவ் செய்து முடித்து, குளித்து, அவனோடு வம்பு வளர்த்துக் கொண்டே விளையாட்டாகத்தான் மருத்துவமனைக்கு கிளம்பினாள் மஹா.

இப்படி தன் மேல் உயிராக இருப்பவன், சௌஜன்யாவுடன் இருக்கிறான் என்பதை ஸ்ரீராம் கூறியபோது அவளால் நம்பவே முடியவில்லை. கண்டிப்பாக இருக்காது என்று வெகு உறுதியாக நம்பினாள். அதை அவனிடமும் கூறினாள். வாட்ஸ்அப்பில் படங்களை பார்த்தபோது கூட அதை அவளால் ஏதோவொரு சமாதானம் சொல்லிக் கொள்ள முடிந்தது. ஆனால் அவன் மருத்துவமனையில் இருப்பதாக பொய் சொன்ன போது காலுக்கு கீழே நிலம் நழுவியது போன்ற உணர்வு! பழைய படங்களில் காட்டப்படுவது போல, வீசும் காற்று நின்றதை போல, கடல் அலை ஒய்ந்து விட்டதை போல… என்று பலவிதமான எண்ணங்கள்.

அதிர்ச்சி… அதிர்ச்சி… மிகப்பெரிய அதிர்ச்சி மட்டுமே!

பேச முடியவில்லை… யோசிக்க முடியவில்லை… அருகில் யார் இருக்கிறார்கள் என்பதும் கூட தெரியவில்லை! அந்த வெறுமைக்கு அளவுகோலில்லை!

கண்கள் கலங்கியது… ஆனாலும் மனம் தைரியம் கூறியது! கண்டிப்பாக இது பொய்யாகத்தான் இருக்குமென்று! வேறு எதாவது காரணம் இருக்கலாம்.

அறைக்கு வெளியே காத்திருந்த போது எத்தனை முறை இறந்து பிழைத்தாள் என்பது கணக்கே இல்லை. ஆனால் ஸ்ரீராம் சொன்னது உண்மையான போது அவளது நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.

காரணம் ஷ்யாம் சொன்ன அந்த ஒற்றைப் பொய்!

சௌஜன்யாவை பார்த்த போது அத்தனை ஆத்திரமாக வந்தது.

எவ்வளவோ ஆசையாக கனவு கண்டு வைத்திருக்க, அத்தனையும் ஒற்றை நொடியில் சீட்டுக் கட்டைப் போல சரிந்ததை அவளால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை. ஷ்யாமை திரும்பிப் பார்க்கவும் பிடிக்கவில்லை. இனி வாழ்நாள் முழுவதுமே பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து கொண்டு தான் கால் போன போக்கில் நடந்தாள்.

அவன் வாங்கித் தந்த காரை பார்க்கும் போது மிளகாயை அரைத்து உடலில் பூசியதை போல இருந்தது.

இந்த வெறுமையை என்னவென்று சொல்வது?

காத்திருந்து கர்ப்பம் தரித்தவள், குழந்தையை காணும் முன், கர்ப்பம் கலைந்ததை போல…

எல்லோரும் இருந்தும் யாரும் இல்லாமல் கழிக்கும் முதியவளின் இரவை போல…

உயிர் போகும் வலி…

ஆனால் பேச முடியவில்லை…

இது அத்தனை எளிதான வெறுமையில்லை… அவன் என்ற பிம்பம் கலைந்த அந்த வெறுமை!

அந்த வெறுமை அத்தனையையும் வெறுக்க சொன்னது… பெற்றவர் உற்றவர் என்று அனைத்தையும் மறக்க சொன்னது… நியாய அநியாயங்கள் பின்னுக்கு சென்றது!

எதுவுமே வேண்டாமென நடந்தவள், மெளனமாக மின்சார ரயிலில் ஏறி அமர்ந்தாள். கையில் பணமில்லை… செக்கிங் செய்தால் கொடுக்க டிக்கட்டுமில்லை… இரண்டு மாநில சினிமா துறையை ஆள்பவன், அவனது மனைவி வித் அவுட்டில் பயணிக்கிறாள்!

நினைத்த போதே அவளுக்குள் வெறுமையான கசப்பான புன்னகை, இதழ்கடையோரம்!

எந்த ஸ்டேஷனில் இறங்குவது? என்ன செய்வது என்றெல்லாம் தோன்றவில்லை. ரயில் எங்குமே நிற்காமல் போய் கொண்டே இருக்காதா என்று தோன்றியது. ஒரு நான்கைந்து முறை பீச்சிலிருந்து தாம்பரம் போனது அந்த ரயில்.

அவள் அசையாமல் வெறுமையாக அமர்ந்திருந்தாள் அதே இடத்தில்!

கண்கள் அவ்வபோது கலங்கிக் கொண்டிருந்தது. அறிவு செயல் இழந்து இருந்தது. படித்த படிப்பும் நினைவில்லை… பார்க்கும் வேலையும் நினைவில்லை… பசியில்லை… தாகமில்லை… எதுவும் தோன்றவில்லை…

இறங்க வேண்டும் என்று தோன்றியது. எந்த இடமென்று தெரியவில்லை.

இறங்கினாள்… நடந்தாள்… மனம் போன போக்கில்… கடைசியாக வந்து சேர்ந்த இடம் ஏதோவொரு முருகன் கோவில்!

அவளறியாமல் வந்திருந்தாள்!

வந்தவள், ரொம்ப நேரம் முருகனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்!

இப்படி ஒரு நம்பிக்கை துரோகத்தை அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. அடுத்து ஒரு நொடி அங்கு நின்றிருந்தால் கூட அவளது இதயம் வெடித்திருக்க கூடுமே!

அதிலும் அத்தனை அலட்சியமாக சௌஜன்யா… அவளது பார்வையில் என்ன இருந்தது? பார்த்தாயா… உன்னை வென்று விட்டேன் என்றா?

அவள் வெற்றி பெற்றால்? இவள் யார்? எதற்காக இந்த திருமணம்? எதற்காக இத்தனை ஏமாற்று நாடங்கங்கள்?

மனம் அதன் போக்கில் சிந்தித்துக் கொண்டிருந்தது.

இரவு வெகு நேரமாகியதும் தெரியவில்லை… கோவில் நடை மூடப் போவதும் தெரியவில்லை…

கோவில் பாதுகாவலர், “ம்மா… கோவில் நடைய சாத்த போறோம்…” என்று இவளது தோற்றம் கண்டு தயங்க, மெளனமாக வெளியேறியவள் எப்படி அந்த பப்புக்குள் நுழைந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. மற்ற நேரமாக இருந்திருந்தால் கண்டிப்பாக உள்ளே சென்றிருக்க முடியாது. கால்கள் உள்ளே நுழைந்திருக்காது. ஆனால் அவளிருந்த மனநிலை அனைத்தையும் மறக்க செய்தது.

அமர்ந்து விட்டாளே தவிர, அவளால் தன்னையே ஜீரணிக்க முடியாமல் தான் அமர்ந்திருந்தாள். அவளுக்கு அனைத்தையும் மறக்க வேண்டும். நினைவுகள் சுமையாக இருந்தது.

குடித்துப் பார்த்தால் அனைத்தையும் மறக்க முடியுமா? முக்கியமாக அந்த வீடியோவை! ஷ்யாம் சொன்ன பொய்யை!

அவன் தனக்கு துரோகம் செய்வான் என்பதை அவளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை.

பேரர் கொண்டு வந்து வைத்த மதுக்கிண்ணத்தை பார்த்துக் கொண்டே இருந்தாள். குடிக்கும் தைரியம் வரவில்லை. சிறு வயது முதல் போதிக்கப் பட்டிருந்த ஒழுக்க விதிகளும், தனக்குத் தானே விதித்துக் கொண்ட சுயக் கட்டுபாடுகளும் அவளுக்கு முன் சீன பெருஞ்சுவராக இருந்தன.

ஆனாலும் எப்படி அனைத்தையும் மறப்பது?

வேதனை தாள முடியாமல் மதுவை பார்த்துக் கொண்டிருக்க, நிமிர்ந்து பார்க்கும் படி சொன்னது மனது!

அவளையே பார்த்தபடி ஷ்யாம்!

வெகுவான ஒய்ந்த தோற்றம்… அத்தனை சோர்வாக இருந்தான்!

கண்களில் நீரோடு அவனை பார்த்தாள்!

ஓடிப்போய் அவனை கட்டிக் கொண்டு விடு என்று மனம் அவளை தள்ளிவிட்டது… ஆனால் கால்களில் குண்டை கட்டி விட்டதை போல, அசைவை மறந்து இருந்தன அவளது கால்கள்!

அவனழைத்த போது கோபம் கொந்தளிக்க வார்த்தைகளை கொட்டினாள். இத்தனை நாளாக சேர்த்து வைத்திருந்த கோபங்கள்!

அதிலும் சௌஜன்யாவை பார்க்கும் போதே அத்தனை ஆத்திரம் கிளம்பியது. இவளால் தானே? இவள் தானே காரணம் என்று ஒரு மனம் கூறினாலும், ஒரு கை ஓசை கேட்குமா என்று கேட்டது இன்னொரு மனம். ஷ்யாம் ஒத்துழைக்காவிட்டால் இவளுக்கு என்ன வேலை என்று வேறு கேட்டு அவளது மனதை பியித்து எரித்தது மனசாட்சி!

ஆனால் இவளை அப்படியே விட்டு விடவும் முடியவில்லை. இவள் தன் வாழ்நாளில் மறக்கவே கூடாது என்று எண்ணிக் கொண்டாள். எத்தனை தைரியம் இருந்தால் சவால் விட்டிருப்பாள். அன்றைக்கே அறை விட்டிருந்தால், அவனுக்கு அருகில் நெருங்கியிருப்பாளா என்று கேட்டது மனம்!

ஆனால் எத்தனை நாள் இவனை இப்படியே கண்காணிக்க முடியும்?அது அசிங்கமல்லவா! தன்னை இப்படி ஒரு நிலையில் நிறுத்திய சௌஜன்யாவை எரிப்பதை போல பார்த்தாள்.

அத்தனை ஆத்திரம்… ஆத்திரம் கண்ணை மறைத்தது!

****

“இல்ல… நான் வர மாட்டேன்…” என்றவள், எதிர் பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.

அதிர்ந்து பார்த்த கார்த்திக், ஷ்யாமை பார்க்க, அவனது முகம் உணர்வை தொலைத்து இருந்தது. தவறே செய்யாமல் தண்டனை கிடைப்பது என்பது?!

அவசரமாக கார்த்திக் அவனது தங்கை பின்னே ஓடினான்.

“ஏய் மஹா… என்ன லூசா நீ?” கோபமாக அவளது கையை பிடித்து நிறுத்த, அவனது கையை உதறியவள்,

“ஆமா லூசு தான் ண்ணா… உனக்கு கூட நான் முக்கியமில்லாம போயிட்டேன்ல…” என்று பரிதாபமாக மஹா கேட்க, அவளை அணைத்துக் கொண்டான்.

“டேய் குட்டிம்மா… நீ எனக்கு முக்கியம் தான். ஆனா அவசரகுடுக்கை மாதிரி நீ பண்றதை பாக்கறப்ப கோபமா வருதுடா…” என்று கார்த்திக் அக்யாயானப்பட,

“எனக்கு யாரும் வேண்டா ண்ணா… என்னை விட்டுடு…” என்று அவனை மீறி போக முயல,

“சரி எதுக்காக இப்படி குதிக்கற? கார்த்திக் முயன்றளவு அவளை மடை மாற்ற பேசினான்.

“இந்த வீணா போனவனை கட்டினேன் பாரு… நான் பைத்தியமா அலைய வேண்டியதுதான்…” கோபமாக கொதித்தாள். அடக்கி வைத்திருந்த லாவா எல்லாம் எரிமலை குழம்பாக வெளியே வந்தது.

“வார்த்தைய அடக்கு பாப்பா…என்ன பேச்சு பேசற?” என்ற கார்த்திக்கை,

“எதுக்கு அடக்கணும்? அவ்வளவு நம்பினேன்… எவ்வளவு தெரியுமா லவ் பண்ணேன்?அதுவும் இன்னைக்கு நூறாவது நாள் ண்ணா… அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு எவ்வளவோ ப்ளான் பண்ணி… ச்சே… வெறுத்து போச்சு… வேண்டாம்… போதும்… வாழ்ந்ததும் போதும்.. பட்டதும் போதும்..” மனம் வெறுத்து கூறியவளை உணர்வில்லாமல் பார்த்தான் ஷ்யாம்.

“சத்தியமா எதையும் என்னால மறக்க முடியல… ஆனா இவனுக்காக கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்டேன்… இவனை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு… ஆனா இவன்…” கோபத்தில் கொதித்தாள். அவளை பாவமாக பார்த்தான் கார்த்திக்.

“மாமா கூட கேட்டாங்க… கல்யாணத்தை நிறுத்திட்டடான்னு? ஆனா அப்படி நின்னுட்டா இவன் மனசு கஷ்டப்படுவான்னு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்… ஆனா இவனுக்கு…” என்று பல்லைக் கடித்தவளுக்கு கண்ணீர் கொட்டியது.

“என்னை எதால அடிச்சுக்கறதுன்னே தெரியல… என்னத்த கண்டு இவனை லவ் பண்ணி தொலைச்சேன்னு தெரியல… போகவும் முடியல… இருக்கவும் முடியல…” என்றவள் உடைந்து அழ, அவளை உணர்வற்ற பார்வை பார்த்தான் ஷ்யாம்.

“அந்த வீடியோவை மறந்து தொலைக்கனும்ன்னு நானும் என்னன்னெவோ ட்ரை பண்ணேன் ண்ணா… ஈவன் குடிக்கலாம்ன்னு கூட நினைச்சேன்… குடிச்சா எல்லாம் மறந்துடுமா கார்த்தி அண்ணா?” பாவமாக தேம்பியபடி கேட்ட தங்கையை அணைத்துக் கொண்டான்.

“லூசே…” என்றவனுக்கும் கண்கள் கலங்கியது.

“இப்ப இதுக்கும் சேர்த்து குடிக்கத்தான் நினச்சேன். அப்புறம் எல்லாத்தையும் மறந்துடலாம்… அப்புறம் இவன் யார் கூட போனா என்னன்னு நானும் இந்த கேவலத்துக்குள்ள மெர்ஜ் ஆகிடுவேன்… அதை தான இவன் எதிர்பார்க்கறான்…” என்று அழுகையோடு அவள் கூற,

“இப்படி பேசாத பாப்பா…” என்றான் கார்த்திக்.

“பேசுவேன்… ஏன்னா அவ்வளவு ஹர்ட் ஆகிருக்கேன்… என் லைஃப்பே இவன் தான்னு இருந்தேன் கார்த்தி ண்ணா… எப்படி பேசாம இருக்க முடியும்?” என்று கேட்க,

“வேண்டாம் பாப்பா… தப்பு டா இது…”

“பைரவி எப்படியெல்லாம் பார்த்து பார்த்து வளர்த்தது… எல்லாம் நானும் குடிச்சு சீரழிய தான்… இல்லையா?” என்று கேட்டவளை முறைத்தான் கார்த்திக்.

“பாப்பா நிதானமா பேசு…” சற்று கோபமாக கார்த்திக் கூற,

“ஏன்? ஒரே ரூம்ல அவளோட இருந்து இருக்கானே… அதை பாத்ததுக்கு அப்புறமும் எப்படி நிதானமா இருக்க சொல்ற?”

“ஏன் பாப்பா? உனக்கு பொறுமைன்னு ஒன்னு இருக்கவே இருக்காதா? அந்த ரூம்ல இவங்களை மட்டும் தான் பார்த்தியா? நான் உன் கண்ணுக்கு தெரியலையா? இல்லைன்னா டைரக்டர் மதி உனக்கு தெரியலையா?” என்று கேட்க, அதிர்ந்து குழப்பமாக பார்த்தாள்.

“பொய் சொல்லாத கார்த்தி ண்ணா…”

“நான் எதுக்கு பொய் சொல்றேன்? வேணும்னா அந்த ஹோட்டல் வீடியோ புட்டேஜ் எடுத்து செக் பண்ணு. நாங்க உள்ள இருக்கமா இல்லையான்னு தெரிஞ்சுடாதா?” என்று கேட்க,

“கார்த்திக்… ஸ்டாப் இட்… அவ கிட்ட இதையெல்லாம் சொல்லித்தான் என்னை ப்ரூவ் பண்ணனுமா?” ஷ்யாம் நிதானமாய் கேட்டாலும் அதில் மறைந்திருந்த கசப்பை கார்த்திக் அறிந்திருந்தான்.

மௌனமாய் கணவனை பார்த்தாள்.

அத்தனை குறும்பாக, சில்மிஷமாக எப்போதும் விளையாட்டாக இருந்த அவனது கண்கள், இப்போது உயிர்ப்பே இல்லாத ஜடமாய்!

வலித்தது!

“இதையெல்லாம் சொல்லி என்னை நான் ப்ரூவ் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்ல. எந்த நிலைமைல யார் சொன்னாலும் நம்பியிருக்கக் கூடாது கார்த்திக். நம்பிட்டா… அதுவே எனக்கு ரொம்ப பெரிய அடி. அப்படி நம்பி, என்னை வந்து வேவு பார்த்து… அதுக்கப்புறம் விட்டுட்டு போய், என்னை அசிங்கப்படுத்தி… இப்ப அந்த பொண்ணை அடிச்சு… இன்னும் என்னை கேவலப்படுத்தி… ச்சே… போதும் கார்த்திக்…” என்று காயப்பட்ட குரலில் கூற, மெளனமாக அவனை பார்த்தாள்.

“ஒரே ரூம்ல இருந்தா தப்பு பண்ணிதான் இருக்கனும்ன்னு சொல்றாளே உன் தங்கச்சி… ஒரே ரூம்ல தான் நூறு நாளா என் கூட இருந்தா…” என்றவனுக்கு அதற்கும் மேல் சொல்ல முடியவில்லை. தொண்டையடைத்தது.

ஆனால் அவன் சொல்ல வந்ததை அவள் புரிந்து கொண்டாள். நெஞ்சம் வலிப்பது போலிருந்தது.

தான் செய்தது தவறா?

புரியவில்லை. என்ன செய்வதென தெரியவில்லை.

“கல்யாணம் ஆன் நாள்ல இருந்து விதவிதமா என்னை என்னன்னெவோ கேட்டு இருக்கா. மனசு வலிக்கும். ஆனாலும் தப்பு என் பக்கம் இருந்ததால எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். இவளா மாறணும்ன்னு விட்டுக் கொடுத்தேன் கார்த்திக். ஆனா இன்னைக்கு நடந்தது, வேற லெவல்…” என்றவன் நிறுத்தி எங்கோ பார்த்தான். அதுவரை அவளுடன் நேராக பேசவே இல்லை என்பதை உணர்ந்தாள்.

“நம்பிக்கை இல்லாத ஒரு ரிலேஷன்ஷிப்ப வலுக்கட்டாயமா பிடிச்சு வெச்சுட்டு இருக்கேன்ல… நான் முட்டாள்… வெளிய என்னவா இருந்து என்ன யூஸ்டா? நான் பர்சனல் லைப்ல தோத்துட்டேன்… ரொம்ப கேவலமா தோத்துட்டேன்…” என்றவனது வார்த்தைகளிலிருந்த அந்த வலியை மஹாவால் உள்வாங்க முடியவில்லை.

அவ்வளவு அடர்த்தியாக இருந்த வலியை அவன் எப்படி தனியே அனுபவிப்பான்?

மெல்ல நடந்து காரை நோக்கிப் போனாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் அறுபத்து இரண்டு

வீட்டுக்குள் நுழையும் போதே பைரவியின் அர்ச்சனையோடு தான் உள்ளே நுழைந்தாள். ‘இவன் வேணும்னே இங்க கூட்டிட்டு வரானோ? அவன் பேச முடியாததை எல்லாம் பைரவியை வெச்சு பேச வைக்கத்தான் ப்ளான் பண்றான்...’ உள்ளுக்குள் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. அதை நினைத்துக் கொண்டே அவனை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்