arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் ஐம்பத்து எட்டு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 58 / 64

அத்தியாயம் ஐம்பத்து எட்டு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

காரை மிதமான வேகத்தில் இருபுறமும் பார்த்தபடி செலுத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். எதிரில், பக்கவாட்டில் என்று எங்காவது மஹாவின் முகம் தென்படுகிறதா என்று கண்களில் கலக்கத்தோடு பார்த்தபடி இருந்தான்.

அவனை வெறுமையாக பார்த்துவிட்டு போனவள் தான்.

எங்கு சென்றாள் என்று தெரியவில்லை.

அவள் சென்றவுடன், எப்படியும் வீட்டுக்கு சென்றுவிடுவாள், உண்மையை எடுத்துக் கூறி சமாதானப்படுத்தலாம் என்று நினைத்துக் கொண்டு, பேசியில் அவளை அழைக்க, ரிங் போய்க்கொண்டிருந்தது.

மஹா எடுக்கவே இல்லை. அதற்கும் முன்னதாகவே அறைக்குள் அடுத்தப் பட சம்பந்தமாக டிஸ்கஷனில் இருந்த கார்த்திக்கும் இயக்குனர் மதியும் வெளியே வந்துவிட, அருகில் கோபத்தோடு நின்று கொண்டிருந்த ஸ்ரீராம் குழப்பமடைந்தான்.

இருவர் மட்டுமாக போவதாக தானே நினைத்தான். இதென்ன இவர்களும் இருக்கிறார்கள் என்றால்? மனதுக்குள் பயம் பீடித்துக் கொண்டது. தான் அவசரப்பட்டு மஹாவை வர சொன்னது தவறோ என்று தோன்றவாரம்பித்து இருந்தது.

ஆனால் அவனை எதுவும் கேட்காமல் ஷ்யாம் மஹாவின் செல்பேசிக்கு தொடர்பு கொள்ள முயல, அது அணைக்கப் பட்டுள்ளது என்றே மீண்டும் மீண்டும் தெரிவிக்க, ஷ்யாமுக்குள் நடுக்கம்.

“மச்சான்… வீட்டுக்கு கூப்பிட்டு மஹா வந்தா இன்பார்ம் பண்ண சொல்லு” என்று அவசரமாக கார்த்திக்கிடம் கூற,

“ஏன் மச்சான்? என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டான்.

அவனுக்கு மஹா வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை.

அருகிலிருந்த சௌஜன்யா தான், “மேடம் வந்தாங்க கார்த்திக் சர்… ஆனா எதுவும் பேசாம கிளம்பிட்டாங்க…” என்ற போது தான் எதுவோ பிரச்சனை என்று கார்த்திக்கு புரிந்தது.

ஷ்யாமை பார்க்க, அவன் பதட்டமாக, செல்பேசிக்கு முயன்றபடியே இருந்தான்.

“அவளோட செல் எங்க இருக்கு?” யோசனையாய் கார்த்திக்கிடம் கேட்க,

“மஹா கிட்ட தாங் மாமா செல் இருக்கு. என்கிட்ட பேசிட்டு தான் வந்தா…” என்று ஸ்ரீராம் சற்று பயத்தோடு கூற, அவனை வெறுமையான முகத்தோடு பார்த்தான்.

“நீங்க தான் மகாவை இங்க வர சொன்னதா?” என்று ஒரு மாதிரியான குரலில் ஷ்யாம் கேட்க,

“எஸ் மாமா…” என்றபடி தலைகுனிந்தான். அவன் நினைத்தது போல இல்லையே. தான் செய்தது தவறல்லவா!

“உங்க பேர் என்ன…?” என்று அவனது பெயரை மறந்து விட்டவன், சற்று இழுக்க,

“ஸ்ரீராம் மாமா… உங்க கல்யாணத்துல பார்த்த ஞாபகம் இல்லைங்களா?” என்று கேட்க,

“ம்ம்ம்… என்ன சொல்லி இங்க வர சொன்னீங்க?” நேரடியாக கேட்கவும், ஸ்ரீராம் மென்று முழுங்கினான்.

‘என்ன மனிதன் இவன். கிளி மாதிரி பெண்டாட்டி இருந்தாலும், குரங்கு மாதிரி வைப்பாட்டி தேவைப்படுமாம். அது போல அல்லவா இருக்கிறான். எத்தனை வசதி வாய்ப்பிருந்தும் என்ன? இது போன்ற ஒரு வாழ்க்கையை மஹா வாழ வேண்டுமா? அவளுக்கென்ன குறைச்சல்? மருத்துவராக போகிறாள். இன்னும் மேலே படிப்பாள். கட்டாயமாக மற்றவர் நிமிர்ந்து பார்க்கும் படியான வாழ்க்கையைத்தான் வாழ போகிறாள். இதில் இது போன்ற கழிசடைகளை சேர்க்க வேண்டுமா?’ என்றெல்லாம் மனதுக்குள் ஷ்யாமுக்கு சம்மட்டி அடி கொடுத்துக் கொண்டிருந்தான் ஸ்ரீராம்.

சற்று முன்பு வரை மனதுக்குள் அத்தனை விதமாக ஷ்யாமை அர்ச்சித்துக் கொண்டிருந்தான். இப்போது அப்படியே மாறிவிட்டதே!

ஆனால் தவறு செய்பவர்கள் இப்படி நேருக்கு நேராக நின்று பேசிக் கொண்டிருக்க மாட்டார்களே!

இப்போது தவறியது தான் அல்லவா!

தோழியின் வாழ்க்கையில் தானே கலகமேற்ப்படுத்தியது போல அல்லவா ஆகிவிட்டது. மனதுக்குள் வெகுவாக சங்கடமாக உணர்ந்தவன்,

“ஐ ஆம் சாரி மாமா… பார்த்தவுடனே டென்ஷனாகிட்டேன். கோபத்துல மகாவுக்கு கூப்பிட்டு, நீங்க சௌஜன்யாவோட இங்க இருக்கறதா சொல்லிட்டேன்…” என்று குற்ற உணர்வோடு மெல்லிய குரலில் கூற, ஷ்யாம் தலையில் கைவைத்துக் கொண்டான்.

“ச்சே… இது தெரியாம… நான் வேற…” என்று தலையிலடித்துக் கொண்டான். தான் விளையாட்டாக கூறிய பொய்யின் வீரியத்தை நினைக்கும் போது மனதுக்குள் நடுக்கமேற்பட்டது. அவன் சொன்னது வெறும் விளையாட்டான பொய். அவள் தன்னை கண்டுக்கொள்ள வேண்டாம் என்பதற்காக கூறியது. அவள் இந்த சூழ்நிலையில் அவனது வார்த்தைகளில் உண்மையை எதிர்பார்த்து அழைத்தாள் என்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லையே!

உன்னிடம் உண்மையாக இருக்கிறேன் என்று கூறிக்கொண்டே இப்படி ஒரு பொய்யை அவள் கேட்டால் என்ன நினைப்பாள்? ஆனால் அது சீரியசாக சொல்லப்பட்ட பொய் கிடையாது என்பதை அவள் அறியமாட்டாளே!

“என்ன ஷ்யாம்? என்னாச்சு?” என்று கார்த்திக் கேட்க, ஷ்யாம் மதியை பார்த்து, “நீங்க கிளம்புங்க மதி… உங்களுக்கு கால் பண்றேன்…” எனவும் அவர் விடைபெற்றார். வெளியாட்களை வைத்துக் கொண்டு குடும்ப விஷயங்களை பேச வேண்டுமா என்று எண்ணம் தான்!

சௌஜன்யாவை நோக்கி, “நீங்களும் கிளம்புங்கமா. இந்த அட்வர்டைஸ்மென்ட் பண்றோம். முழுசா வொர்க் அவுட் பண்ணிட்டு உங்களுக்கு மேனேஜரை கால் பண்ண சொல்றேன்…” என்று அவளையும் அப்புறப்படுத்த முயன்றான்.

அவளோ, “சாரி சர். என்னால ஏதோ குழப்பம்ன்னு நினைக்கறேன்..” என்று இழுக்க,

“இல்லம்மா. இது ஃபேமிலி மேட்டர். உங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல. நாங்க பார்த்துக்குவோம்…” என்று முடிக்க நினைக்க,

“சர், முன்னாடி எதுவேண்ணா மேடம் கிட்ட நான் பேசியிருக்கலாம். ஆனா இப்ப அப்படி எந்த நினைப்பும் இல்ல. எனக்கு இப்போதைக்கு என்னோட கேரீர் தான் முக்கியம். அதை பத்தி மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கேன். உங்க மேல எனக்கிருந்த க்ரஷ் எல்லாம் பாசிங் க்லௌட்ஸ் மாதிரி… ப்ளீஸ்… மறந்துடுங்க…” ரொம்பவும் தயவாக கூற,

“இட்ஸ் ஓகே. ஐ டோன்ட் மைன்ட்…”

“சர்… நான் எதாவது பண்ணிட்டேன்னு நினைச்சு, என்னோட கேரீரை…” என்று இழுக்க, அவளை அழுத்தமாக பார்த்தான்.

“உங்க கேரீரை ஸ்பாயில் பண்ணனும்ன்னு நினைச்சு இருந்தன்னா அதை எப்பவோ பண்ணியிருப்பேன். எங்க ஆட் பிலிமுக்கு உங்களை பிக்ஸ் பண்ண நினைச்சுருக்க மாட்டேன். எதையும் நான் நினைச்சும் பார்க்கல. தேவையில்லாம எதையும் நினைக்காம கிளம்புங்க…” கறாராக கூறிய ஷ்யாமை சற்று பயத்தோடுதான் பார்த்தாள் சௌஜன்யா.

அதே உணர்வு தான் கார்த்திக்கும். அவன் விளையாட்டாக, கேலியாக, குறும்பாக பேசும் சந்தர்ப்பங்களை மனதில் வைத்துக் கொண்டே எல்லா நேரமும் அவனை அணுக முடியாது என்று தெளிவாக அறிந்து கொண்டிருந்தான்.

உதாரணம், நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல். யார் யாரை எப்படி கவிழ்க்க வேண்டுமோ அத்தனையும் செய்திருந்தான். பணத்தால் அடிக்க வேண்டியவர்களை பணத்தாலும், மிரட்டி வழிக்கு கொண்டு வர வேண்டியவர்களை மிரட்டியுமாக தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்க தலைவராக கார்த்திக்கை பதவியேற்க வைத்து இருந்தான்.

அந்த வகையில் ஷ்யாமை பார்த்து அரண்டு போயிருந்தான் கார்த்திக்.

அவனை, ‘தி கிங் மேக்கர்’ என்று அவ்வப்போது தனக்கு தானே சொல்லிக் கொள்வது வாடிக்கையாகி இருந்தது.

இந்த தேர்தலை அவன் இந்தளவுக்கு ஒரு ஈகோ விஷயமாக எடுத்துக் கொண்டதற்கு ஒரே காரணம், விநாயக மூர்த்தி.

அவர் சொன்ன வார்த்தைகள்.

முன்பும் கூட சங்க நிர்வாகிகள் அவனுக்கு சில குடைச்சல்களை கொடுத்து இருக்க்கின்றனர் தான். ஆனால் தன்னை இந்தளவுக்கு இறக்கிக் கூறியதும் இல்லாமல், விருது வழங்கும் விழாவில், மஹாவை இணைத்து சில்மிஷமாக அவர் குறிப்பட்டதை தனக்கு ஏற்பட்ட பெரிய இழுக்காக நினைத்துக் கொண்டான்.

ஒரு சில வார்த்தைகளுக்கே இப்படி ஒருவரை கட்டம் கட்டி அடிக்கிறான் என்றால், நினைக்கும் போதே கார்த்திக்கு தலை சுற்றத்தான் செய்தது.

இத்தனை நாட்களில் ஷ்யாமை பற்றி புரிந்து கொண்டதெல்லாம் ஒன்று தான்.

உண்மையாக பழகும் பட்சத்தில் உயிரையும் கூட கொடுப்பவனை, சற்று சீண்டி விட்டாலும், துரோகம் செய்ய நினைத்தாலும், உயிர் போவதே பரவாயில்லை என்று எண்ண வைத்து விடுகிறான் என்பதுதான்.

ஆனால் இத்தனை ராட்சத்தனமாக வெளியே உலா வருபவன், மனைவியிடத்தில் அப்படி பம்மிக் கொண்டிருப்பது தான் நகைச்சுவை.

“புலி ஏன் மச்சான் அங்க மட்டும் பூனையாகிடுது?” முந்தைய தினம் தான் சிரித்தபடியே கேட்டான், ஒன்றாக காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது!

“என்னடா பண்றது? புலிய பட்டினி போட்டே பூனையாக்கி வெச்சுருக்கா…” என்று சிரிப்பவனின் புன்னகைக்கு பின்னால் ரொம்பவும் வலியிருக்கிறதோ என்று தோன்றியது.

“ஏன் ஷ்யாம்? ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்க,

“பிரச்சனை இல்லைன்னா தான் ஆச்சரியம் டா. உன் தங்கச்சிக்கு தினம் எதாவது ஒரு சண்டை போடாம இருந்தா சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாக மாட்டேங்குதாம்…” என்று மீண்டும் சிரிக்க,

“அப்படி என்னதான் சண்டை போடுவா? எனக்கே புரியலையே…” குழப்பமாக அவனை பார்க்க,

“காலைலருந்து ஈவினிங் வரைக்கும் நல்லாத்தான் போகும். அப்புறம் தான் இருக்கு மேட்டரே… என்னடா பேசி என்னை ஆப் பண்ணலாம்ன்னு ப்ளான் பண்ணிட்டே இருப்பா. அதனாலேயே அவ வர்றதுக்கு முன்னாடியே நான் கவுந்தடிச்சு தூங்கிருவேன். இந்த அழகுல என்னைக்காவது லிக்கர் எடுத்துட்டா அன்னைக்கு நான் செத்தேன். சிகரெட் பிடிச்சே எத்தனை நாளாச்சுன்னு தெரியல…” சிரித்துக் கொண்டே கூறியவனை பார்த்து சிரித்தாலும் கார்த்திக்கு உறுத்தியது. இவையெல்லாம் அரசல் புரசலாக தெரிந்தவை தான்.

“ஆடிய ஆட்டமென்ன… பேசிய வார்த்தையென்ன…” வேண்டுமென்றே ஷ்யாமை கிண்டல் செய்து பாடியவனை பார்த்து சிரித்தான்.

“என்ன வேண்ணா சொல்லு கார்த்திக்… ஐ டோன்ட் பாதர்… அவ எத்தனை சண்டை போட்டாலும், அதுல இருக்க ஒரே விஷயம் என்னன்னா…” என்று நிறுத்த, கார்த்திக் கேள்வியாய் பார்த்தான், புன்னகையோடு!

“லவ் அண்ட் லவ் ஒன்லி…”

“ஏன் இவ்வளவு கஷ்டம் ஷ்யாம்? ஒரு அண்ணனா சொல்லலை… மச்சானாவும் சொல்லலை… உன்னோட ப்ரெண்டா கேக்கறேன்… மஹா விஷயத்தை நீ ஈசியா சால்வ் பண்ணலாம். ஆனா பர்பசாவே ரொம்ப டவுன்ப்ளே பண்ணிட்டு இருக்க… அதான் ஏன்னு புரியல…”

கார்த்திக் கூறுவதும் உண்மைதான். ஷ்யாம் நினைத்தால் எளிதாக முடிக்கலாம். ஆனால் அவள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் போய் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு அதுதான் தோன்றியது.

“ம்ம்ம்… ரைட்… ஆனா நான் ரெண்டு விதமான மஹாவை பார்த்துட்டேன். என் மேல முழுசா நம்பிக்கை வெச்சு, நான் தப்பே பண்ணாக் கூட, ஏதாவது காரணம் இருக்கும்ன்னு நம்பின என்னோட பிரண்ட் மஹா. இப்ப இருக்கவ, நம்பிக்கை இருந்தாலும் பொசெசிவ்னஸ் ஓவராகி, விட்டுட்டு போய்டுவேனோன்னு பயம் அதிகம் இருக்கற என்னோட பொண்டாட்டி. ஆனா அதுக்காக நான் ப்ரூவ் பண்ணிட்டே இருக்க முடியாது…

லைப்ல நாம ப்ரூவ் பண்ணிட்டே தான் இருக்கணும்னா வாழ முடியாது… அவங்க அவங்களா புரிஞ்சுக்கணும்… அதுக்கான ஸ்பேசை அவளுக்கு நான் கொடுக்கறேன்… நானும் அவளோட பயம், சந்தேகம், விருப்பு வெறுப்பெல்லாம் புரிஞ்சுக்கனும்… ரொம்ப வேகமா ரிலேஷன்ஷிப்குள்ள போயாச்சு… இப்ப இந்த ஸ்பேஸ் இல்லைன்னா அதே வேகத்தோட வெளிய வந்துட வேண்டியதுதான் கார்த்திக். ஒன்னு நான், இல்லைன்னா அவ… அவ்வளவுதான்…”

“ஏன் இவ்வளவு பெரிய வார்த்தை சொல்ற ஷ்யாம்?”

“எஸ்… மேரேஜ்ங்கற இன்ஸ்டியூஷன் மேலேயே பெருசா நம்பிக்கை இல்லாம இருந்தவன் நான். ஒரே நாள்ல முழுசா நான் மாறிட முடியுமான்னு உள்ளுக்குள்ள மஹா யோசிக்கறா. அதுவும் கரெக்ட் தான? அவளுக்கு அந்த நம்பிக்கையை நான் படிப்படியாத்தான் கொடுக்க முடியும். இந்த ஸ்பேஸ் இல்லைன்னா அந்த நம்பிக்கை ஆட்டம் கண்டுடும்.

பிரெண்ட்ஸா மட்டும் இருந்தப்ப நான் எவ்வளவோ சொல்லிருக்கேன். அத்தனையும் இப்ப பேக்ஃபயர் ஆகுது. இரண்டு பேருக்கும் சண்டைங்க்றது எப்பவுமே இருக்கறதுதான். இன்பாக்ட் ஒரு சண்டைல தான் எங்க ரிலேஷன்ஷிப்பே ஸ்டார்ட் ஆச்சு. ஆனா ப்ரெண்ட்ஸா இருந்தப்ப இருந்த நம்பிக்கை, இப்ப குறைஞ்சு போச்சுன்னு நினைக்கறேன். அதை தான் எப்படி மீட்டு கொண்டு வர்றதுன்னு தெரியல. அவளா புரிஞ்சுக்கனும். புரிஞ்சுக்குவா… புரிஞ்சுட்டு வரட்டும்…” என்று கூறியவனை ஆழ்ந்து பார்த்தான்.

“பேசாம கொஞ்ச நாள் பெசன்ட்நகர்ல இருக்கட்டுமே… என்னதான் ஹஸ்பன்ட் அன்ட் ஒய்ப்பா இருந்தாலும் கொஞ்சம் இடைவெளி அவசியம். இந்த மாதிரி நேரத்துல தனிமையும் அவசியம். அவங்களை அவங்களே சுய பரிசோதனை செஞ்சுக்கணும். காயப்படுத்திகிட்டே, காயப்பட்டுகிட்டே எத்தனை நாள் வாழ்ந்துட முடியும் சொல்லு?”

“எத்தனை பிரச்சனை இருந்தாலும் அதை மட்டும் என்னால பண்ணவே முடியாது. சண்டை போட்டாலும் என் கூடவே இருந்து சண்டை போடட்டும். உனக்கு தெரியாது கார்த்திக்… முன்னவெல்லாம் எனக்கு தூக்கமே வராது. மாத்திரையும் போடுவேன். தென் லிக்கரும் எடுப்பேன். முன்ன மஹா கூட திட்டி இருக்கா. ரெண்டும் டேஞ்சரான காம்பினேஷன்னு. ஆனா இப்பவெல்லாம் நான் மாத்திரையே போடறதில்ல… படுத்தா தூங்கற அளவுக்கு மாறி இருக்கேன்…”

“அதுக்காக இப்படி ரெண்டு பேரும் எலியும் பூனையுமாவா? எவ்வளவு நாளைக்கு ஷ்யாம்?” என்றவனை ஆழ்ந்து பார்த்தவன்,

“எஸ்… எப்படி இருந்தாலும் கூடவே தான் இருக்கணும்… அது எவ்வளவு நாளைக்குன்னு எல்லாம் கிடையாது… லைப் லாங்… அவளால ஏத்துக்க முடிஞ்சா ஏத்துக்கட்டும்… இல்லைன்னா இப்படியே இருந்துட்டு போறேன். ஐ டோன்ட் ஹேவ் எனி இஷ்யுஸ்…”

“டூ மச் மச்சான்… இதுக்கு கல்யாணம் பண்ணாமலே இருந்து இருக்கலாம்.”

“ஏன் கார்த்திக்… மஹா லைப் ஸ்பாயில் ஆகுதுன்னு நினைச்சுட்டு இருக்கியா?”

“எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம் தான்… முதல்ல மஹாவுக்கு அண்ணன் மட்டும் தான். இப்ப நீ என்னோட மச்சான், ப்ரென்ட், பிலாசபர் அன்ட் கைட். உங்க ரெண்டு பேரையுமே விட்டுக் கொடுக்க முடியாது…” தெளிவாக கார்த்திக் கூறிவிட புன்னகைத்தான்.

“தேங்க்ஸ்… ஆனா கல்யாணம் பண்ணாம இருந்து இருக்கலாமேன்னு நினைக்காத. நான் ஒரு செக்கன்ட் கூட அப்படி நினைச்சது இல்ல…”

“ஆனா… இவ்வளவு கஷ்டத்தை தாண்டி…” என்று கூற வந்தவனை கையமர்த்தியவன்,

“கல்யாணமே பண்ணிக்க முடியாதுன்னு சொன்னா கார்த்திக். பண்ணா அது நரகமாத்தான் இருக்கும்னா… பரவால்ல அந்த நரகத்துலையே நானும் இருக்கேன்னு சொல்லித்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சேன். இப்ப அந்த நரகத்தை அனுபவிக்க கஷ்டமா இருக்குன்னு நான் புலம்பினா எப்படி?” என்று இயல்பாக கூறியவனை அதிர்ந்து பார்த்தான்.

“என்ன மச்சான் சொல்ற?”

“ம்ம்ம்… விஜி அனுப்பின வீடியோஸ் பார்த்துட்டு…”

“ஆனா ட்விட்டர்ல லீக் ஆனது வெறும் பிக்சர் தான?”

“ம்ஹூம்… தனியா இவளுக்கு வீடியோ அனுப்பியிருக்கான்…”

“உப்ப்ப்… என்ன மச்சான்? மகா பார்த்தது வெறும் பிக்சர்ன்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருக்கேன்…” அதிர்ந்தான் அவன்! எப்படி வீடியோவை பார்த்துவிட்டு தங்கையால் தாள முடிகிறது?

“இல்ல… அப்படி இருக்கும் போது அவ உடனே என்னோட நல்ல ரிலேஷன்ஷிப்ல இருக்கனும்ன்னு நினைக்கறது முட்டாள்தனம் இல்லையா? எப்படி முடியும் அவளால? நான் அவகிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன். நான் இப்படிதான் இருந்தேன்னு. ஆனா அதெல்லாம் என்னோட வார்த்தை மட்டும் தான். தியரிட்டிக்கல். ஆனா பிராக்டிகலா அதையெல்லாம் பார்த்தா யாராலும் தாங்க முடியாது கார்த்திக். என்னாலேயே அதையெல்லாம் கடந்து வர முடியல. பாவம்டா அவ…”

“ப்ச்… இதுவும் கடந்து போகும்…” என்று சிரித்தபடி அவன் சொன்னதை இப்போது நினைத்துப் பார்த்தான்.

இத்தனை புரிதலான கணவனை மஹா ஏன் புரிந்து கொள்ளக் கூடாது? இத்தனை காதலை யார் கொட்டக் கூடும்?

கேட்பதற்கு சுலபமாக எளிதாக இருக்கலாம். ஆனால் ஒரு அறையிலிருந்து கணவன் வெளியே வர, அவனுக்கு பின் இன்னொரு பெண், அதிலும் எந்த மாதிரியான பிரச்சனைகளை கடந்து வந்த பின், அவளை பார்த்தால் யாராலும் ஜீரணிக்க முடியாதுதான். அவற்றை ஜீரணிக்க அவர்கள் ஸ்பெஷல் மேக்காக இருக்க வேண்டும். அல்லது எந்த கவலையும் இல்லாத குழந்தையாக இருக்க வேண்டும்.

முதிர்ந்தும் முதிராத மஹாவை போன்ற உண்மையை எதிர்பார்ப்பவர்களால் இந்த நெருப்பாற்றை நீந்தி கடப்பது சிரமம்.

சௌஜன்யா கவலையாக ஷ்யாமை பார்த்து,

“ஓகே சர்… ஏதாவதுன்னா கால் பண்ணுங்க. மேடம் கிட்ட நான் ஏதாவது எக்ஸ்ப்ளைன் பண்ணனும்ன்னா பண்றேன். டோன்ட் மிஸ்டேக் மீ சர்…” என்ற சௌஜன்யாவிடம்,

“தேவைப்படாது… நீங்க கிளம்புங்க…” என்று ஷ்யாம் முடிவாக கூறிவிட, கார்த்திக் ஸ்ரீராம் பக்கம் திரும்பி,

“என்ன ஸ்ரீராம்? இப்படி பண்ணிட்ட?” என்று கண்டன குரலில் கேட்டான்.

“சாரி ண்ணா… இப்படின்னு நான் நினைக்கவே இல்ல… இது என்னோட ஃபால்ட் தான்…” என்று பாவமாக கூற,

“அவனை விட்டுடு கார்த்திக். என் தப்பு தான். அவ கிட்ட விளையாட்டா சொன்ன பொய்… உண்மைய சொல்லிருந்தா அவளுக்கு கோபம் வந்து இருக்காது…”

நெற்றியை சுரண்டிக் கொண்டே ஷ்யாம் கூற,

“நீ ஏன் மச்சான் பொய் சொன்ன? சொன்னப்பவே நினைச்சேன்…” யோசனையாய் கார்த்திக் கேட்டான். அவனது முகத்தில் கவலைக் கோடுகள்.

“இன்னைக்கு கல்யாணமாகி நூறாவது நாள் கார்த்திக். அவளுக்கு சர்ப்ரைஸா கிப்ட் பரெசன்ட் பண்ணலாம்ன்னு நினைச்சேன். வெளிய சுத்திட்டு இருக்கேன்னு சொன்னா உஷாராகிடுவான்னு தான், ஹாஸ்பிடல்ல மன்த்லி ஆடிட்டிங்ல பிசியா இருக்கேன்னு சொன்னேன். அது இப்படி க்ராஸ்பயர் ஆகும் ன்னு நினைக்கவே இல்ல…” கார்த்திக்கிடம் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் செல்பேசியில் பிசியாக இருந்தது.

மகேந்திரனை அழைத்தவன், “மகி, மேடம் வீட்டுக்கு வந்துட்டாங்களா?” என்று கேட்க, அவன் “இன்னும் இல்லங்க…” என்று கூற,

“சரி வந்தா எனக்கொரு கால் பண்ணிடு…” என்று கூறி விட்டு வைத்தான்.

இன்னமும் பெசன்ட் நகரும் போகவில்லை. கார்த்திக் பைரவியை அழைத்து அதை உறுதிப் படுத்தியிருந்தான். போயஸ் கார்டனும் போகவில்லை.

அப்படியென்றால் அவள் நடுவில் தான் எங்காவது இருக்க வேண்டும் என்று முடிவு செய்தவன், ஏதோவொரு எதிர்பார்ப்பில் அவசரமாக கீழே இறங்கினான்.

ஒருவேளை பார்க்கிங்கில் இருப்பாளோ?

“கார்ல வந்தாளா ஸ்ரீராம்?”

“ஆமாங் மாமா… கார்ல தான்… நான் தானே கீழ வந்து மஹாவை ரிசீவ் பண்ணேன்…” எனவும் கார்த்திக் முறைத்தான்.

“ரொம்ப முக்கியம். ரெண்டும் சேர்ந்து அரவேக்காட்டுத்தனமா செஞ்சுட்டு…” என்று ஸ்ரீராமுக்கு மட்டும் கேட்பதை போல முனக, ஸ்ரீராம் அவனை சங்கடமாக பார்த்தான்.

“சாரி ண்ணா…” என்று தலை குனிய,

“இட்ஸ் ஓகே ஸ்ரீராம். நீங்க நல்லதுதான நினைச்சீங்க?” என்றவன் கார் பார்க்கிங்கை அணுக, நல்ல பிள்ளையாக நின்றிருந்தது மஹாவின் மினி கூப்பர்.

எங்கிருந்தோ அவசரமாக ஓடி வந்தார் செக்யுரிட்டி.

“சார்… உங்க பேர்?” ஷ்யாமை பார்த்து கேட்க,

“ஷ்யாம்… என்ன சொல்லுங்க?” நெற்றியை சுருக்கியபடி கேட்க,

“உங்க கிட்ட சாவியை கொடுக்க சொல்லிட்டு போனாங்க ஒரு மேடம் சார்…” என்று அவர் கூற, திடுக்கிட்டான் ஷ்யாம்.

மெளனமாக கார்த்திக்கை பார்த்தான்.

நினைத்ததை விட பெரிதாக்கி கொண்டிருக்கிறாளே. கொஞ்சமாவது பொறுமை வேண்டாமா? சட்டையை பிடித்து கேட்க வேண்டியதுதானே? அது என்ன கார் சாவியை கொடுத்து விட்டு செல்வது?

இருவரின் மனதிலும் இதுதான் ஓடிக்கொண்டிருந்தது.

“என்ன ஷ்யாம் இப்படி சொல்றார்?” கார்த்திக் பதட்டமாகி விட்டான்.

ஸ்ரீராமின் முகத்தில் இன்னுமே பதட்டம் தெரிய, இருவரையும் கையமர்த்தி விட்டு,

“அவங்க எப்படி இருந்தாங்க?” என்று கேட்க, அவர் கூறிய அடையாளங்கள் மஹாவுக்கு ஸ்பஷ்டமாக பொருந்தியது.

கோபித்து கொண்டு காரை ஏன் எடுக்காமல் சென்றாள் என்று யோசித்துக் கொண்டே காரின் சாவியை வாங்கி கார் கதவை திறக்க, அங்கே மஹாவின் செல்பேசி அனாதையாக கிடந்தது.

கோபத்தில் சென்றிருக்கிறாள் தான். ஆனால் மிகவும் யோசித்து தான் சென்றிருக்கிறாள். அவனை முழுவதுமாக மறுத்துவிட்டு சென்று விட்டாளா?

வேண்டாம் என்றா? போதும் என்றா?

நெஞ்சுக்குள் தோன்றிய சுள்ளென்ற வலி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டிருந்தது.

எப்படியும் பெசன்ட் நகர் தான் செல்வாள் என்று நினைத்துக் கொண்டே கார் டேஷ் போர்டை திறந்து பார்க்க, மஹாவின் பர்ஸ் அங்கே இருக்க, ஷ்யாம் இன்னுமே பதட்டமாகினான்.

பர்சையும் விட்டுவிட்டு, பேசியையும் விட்டு விட்டு எங்கு செல்வாள்?

நடந்தே சென்று விடுவாளா?

ஷ்யாமுக்கு உள்ளுக்குள் அலாரம் அடித்தது.

“கார்த்திக் என் காரை எடுத்துட்டு நீ ஒரு பக்கமா போ… எப்படியும் நடந்து தான் போவா போல… எல்லாமே இங்க இருக்கு…” என்று வேகமாக கூறியவன், ஸ்ரீராமை நோக்கி, “நீ எதுல வந்த ஸ்ரீராம்?” என்று கேட்க,

“நான் டூவீலர்ல வந்தேன் மாமா…” என்றான்.

“அப்படீன்னா நீ ஒரு பக்கம் போ…” என்று கூற,

“ஓகே மாமா…” என்றவன், அவனது மற்ற நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்தான், மெசேஜில்!

“என்ன ஸ்ரீராம்?” கார்த்திக் கேட்க,

“யாரை மஹா காண்டாக்ட் பண்ணாலும் இன்பார்ம் பண்ண சொன்னேன் ண்ணா…” என்று கூற,

“ஓகே ஸ்ரீராம். ஆனா வெளிய யார்கிட்டயும் அவுட் பண்ண கூடாதுன்னு சொல்லிடு. சிங்கிள் நியுஸ் லீக் ஆனாலும் மீடியால விதவிதமா கதை ரெடி பண்ணிடுவாங்க… ஹோப் யூ அன்டர்ஸ்டேன்ட்…” என்ற ஷ்யாமின் கூற்றை அப்படியே ஒப்புக் கொண்டான்.

“சியூர் மாமா…” என்றவன், அவசரமாக அவனது வண்டியை எடுக்க ஓடினான். ஓடியவனை பார்த்தவன், கார்த்திக் புறம் திரும்பி,

“அட்லீஸ்ட் போன் இருந்தாலாவது மஹா எங்க இருக்கான்னு தெரிசுக்கலாம் கார்த்திக். அதையும் பர்பசா விட்டுட்டு போயிருக்கான்னா… எனக்கு பயமா இருக்குடா…”

வாழ்க்கையில் இரண்டாம் முறையாக பயம் என்பதை உணர்ந்தான் ஷ்யாம்! முதலில் தலகுப்பாவில், மஹாவுக்கு ஏதோ ஆகிவிட்டதோ என்று பயந்தவன், இன்றும் அதே மஹாவுக்காக தான் பயந்தான்.

அன்று அவள் அவனுக்கு என்னவென்று அவனே அறியாத நேரம். ஆனால் இன்றுள்ளவள் அவனது உயிரின் பாதி! அவனது வாழ்வின் மீதி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஐம்பத்து ஒன்பது

மதியம் முதல் மஹாவை தேடி ஒய்ந்து இருந்தனர். ஸ்ரீராமும் அவனது நண்பர்களும் ஒரு பக்கம், கார்த்திக் ஒரு பக்கம், சிவச்சந்திரனும் அவனது டீம் ஒரு பக்கம், இளங்கவி என்று ஒரு படையே சென்னையை சலித்து எடுத்துக் கொண்டிருந்தது.“பார்க் ஹாயாட்ல இருந்து போனா…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்