arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் ஐம்பத்து ஏழு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 57 / 64

அத்தியாயம் ஐம்பத்து ஏழு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

நீண்ட இடைவெளிக்குப் பின் சுஷ்ருதாவிற்கு வந்திருந்தாள் மஹா. ஷ்யாம் எப்போதும் வருவதுதான். தினம் ரவுண்ட்ஸ் போகும் போதெல்லாம் ஒரு நிமிடம் விஜியையும் பார்த்துவிட்டுத்தான் போவதும். அப்போது உடனிருக்கும் மருத்துவரிடம் அவனைப் பற்றிக் கேட்டுக் கொள்வானேயன்றி அவனிடம் பேச மாட்டான்.

விஜியும் அவனது முகத்தை ஏறிட்டும் பார்க்க மாட்டான். விஜிக்கு துணையாக அப்போதிருந்து விஜியின் தாய் மரகதமும் அவ்வப்போது அவனது சகோதரனும் இருந்தனர். எதுவாக இருந்தாலும் மரகதத்திடம் பேசிக் கொள்வது வழக்கமாக இருந்தது.

விஜியின் முகத்தை ஆழமாக பார்க்க முயல்வான் ஷ்யாம். அதில் என்ன இருக்கிறது என்று படிக்க… ஆனால் அதில் அவனது வெறுப்பும், ஆற்றாமையும், கோபமும் மட்டும் தான் தெரியும். இத்தனை வருடங்களாக பார்த்து பழகிய அவனை இந்த சூழ்நிலையில் ஏற்பது சற்று கடினமாகத்தான் இருந்தது.

அவனிடம் பேச பிடிக்கவில்லை தான். அவன் செய்தது அப்படியான துரோகம், ஆனால் அதற்கான தன்னுடைய எதிர்வினையும் ரொம்பவே அதிகம் எனும் போது என்ன செய்வது?

“எப்படி இருக்கீங்க விஜி?” பெரிய புன்னகையோடு வந்த மஹாவை பார்த்து லேசாக புன்னகைத்தான்.

கழுத்தில் பொன் தாலி. எப்போதும் போல எளிமையான காட்டன் புடவை. இடது கையில் ஸ்ட்ராப் வாட்ச். வலது கையில் மெல்லிய வளையல். உடன் அவளது கணவனாக ஷ்யாம். உரிமையாக அவனது மனைவியை பார்த்த பார்வையிலிருந்த காதல்.

விஜியின் உணர்வுகளை வார்த்தையால் வடிக்க முடியவில்லை. என்னதான் தன்னைத் தானே அவன் சமாதானம் செய்து கொண்டிருந்தாலும் அவன் முழுமையாக மஹாவை இழந்து விட்டான் என்பதை தலையிலடித்து புரிய வைத்தது விதி!

ஷ்யாமோடு மஹாவை சேர்த்து வைத்த விதி, அவளை தன் முன்னேயே கொண்டு வந்து நிறுத்துவது எத்தனை பெரிய கொடூரம்?

அந்த கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தான் விஜி.

ஷ்யாம் அவனது முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். வலுக்கட்டாயமாக விஜி மகாவை நோக்கி புன்னகைக்கிறான் என்பது புரிந்தது. அந்த புன்னகையில் கண்டிப்பாக ஜீவன் இல்லை. கண்களில் ஒளி இல்லை.

விரட்டி விரட்டி அடிக்க சொன்னவனே அவன் தான். ஆனால் இப்போது அவனது கோபம் நீர்த்து போயிருந்தது.

“வாங்க மேம்… எப்படி இருக்கீங்க?” என்று கேட்ட விஜியை சிரித்தபடி பார்த்தாள் மஹா.

“இதை நாங்க கேக்கணும்… நீங்க கேக்கறீங்களா?” விளையாட்டாக கூற, சிறு முறுவல் விஜியின் முகத்தில்.

“புது பொண்ணு, கல்யாணமாகி வந்து இருக்கீங்க… அப்ப நான் தான் கேக்கணும்…” சந்தோஷமாக சொல்வதை போல காட்டிக் கொண்டாலும் அவனுக்குள்ள ஏமாற்றத்தை உணர்ந்தாள். மெளனமாக ஷ்யாமை ஏறிட, அவன் கையை கட்டிக் கொண்டு எந்த உணர்வையும் வெளிக்காட்டிடாமல் நின்றிருந்தான். அவன் எதுவும் விஜியிடம் பேசுவான் என்பது உறுதியில்லை. மஹாவுக்காக வந்திருக்கிறான், அவ்வளவே!

“நல்லா இருக்கோம்… உங்களுக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் போலவே…” என்று விஜியையும் மரகதத்தையும் ஒரு சேர பார்க்க,

“ம்ம்ம்… ஆமா…” என்று மேலும் கீழுமாக தலையசைத்தான் விஜி.

“ஆல் தி பெஸ்ட் விஜி…” என்று உளப்பூர்வமாக கூறிய மஹாவை ஆழ்ந்து பார்த்தவன்,

“தேங்க்ஸ்…” என்றான்.

“இன்னும் ஒரு டூ மந்த்ஸ் ஜாக்கிரதையா தான் இருக்கணும் விஜி… வெய்ட் தூக்காதீங்க… ரொம்ப கஷ்டப்பட்டு நடக்காதீங்க… வாக்கர் யூஸ் பண்ணுங்க… அப்பப்ப ரிவியு வந்து பாருங்க…” என்று வரிசையாக அவன் செய்ய வேண்டியதை மஹா கூற,

“சியூர் மேம்…” என்று அவன் முடித்து விட, என்ன பேசுவது என்று தெரியாமல் இருவரின் முகத்தையும் பார்த்தாள்.

சற்று நேரம் மௌனத்தில் கழிய, மஹா சங்கடமாக ஷ்யாமை பார்த்தாள்.

இவன் ஒரு வார்த்தையாவது அவனிடம் பேசலாமே என்ற எண்ணம் தான். மருத்துவமனையில் அட்மிட் செய்தது முதலே அவனிடம் எந்தவிதமாகவும் பேசவில்லை அவன். மனநிலை சரியில்லாத போது பேசியிருக்கிறான். ஆனால் அதன் பின், சற்றும் இறங்கி வந்து அவனிடம் பேசவே இல்லை.

அவன் என்ன நினைக்கிறான் என்பதும் மஹாவுக்கு புரியவில்லை.

விஜி செய்தது தவறு தான். அதை மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் வேண்டும் என்று தான் ஆசைப்படவில்லையே… ஒரு வார்த்தை… ஒரே வார்த்தை, ‘நல்லா இருக்கியா விஜி?’ என்று கேட்டால் எதுவுமாகி விட போவதில்லை. அப்படிப் பார்த்தால், விஜி செய்தது ஒரு பங்கு என்றால், அதற்கு ஷ்யாம் ஆற்றிய எதிர்வினை யாருமே எதிர்பாராதது, காலத்துக்கும் மறக்க முடியாதது. விஜியை அடித்து துவைத்து மழுங்கடித்து படுக்கப் போட்டவனை யார் கேள்வி கேட்பது? மருத்துவம் பார்த்து விட்டால் சரியாகி விடுமா?

இந்த விஜியாவது ஏதாவது பேசுவானா என்று பார்த்தாள். அவனும் கொஞ்சமும் அசையாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் இருந்தது விஐபி சூட். ராஜ மரியாதையோடும் முழு கவனிப்போடும் தான் அது வரை இருந்தும் வந்தான். ஆனாலும் இருவருக்குமிடையில் உடைந்த உறவு உடைந்தது தானே!

இருவரையும் ஒட்ட வைக்க முடியாது… அப்படி ஒட்ட வைப்பதும் அவளது எண்ணமுமல்ல. ஷ்யாமின் உணர்வுகளுக்கும் தான் மரியாதை கொடுக்க வேண்டும். அவனுடைய அந்தரங்கத்தை விஜி அரங்கத்தில் ஏற்றியிருக்கிறான். அந்த ஒரு காரணத்திற்காக தான் ஷ்யாம் அந்தளவு இறங்கி இவனை அடித்தது என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறாள். அப்படியிருக்கும் போது அவனை இன்னும் இன்னும் நெருக்கவும் சங்கடமாக இருந்தது.

சரி… இதற்கு மேலும் யாரையும் சங்கடபடுத்த வேண்டாம் என்று முடிவு செய்து, எழுந்து கொள்ள நினைக்கும் போது, தொண்டையை கனைத்த ஷ்யாம்,

“ம்ம்ம்ம்… எப்படி இருக்க விஜி?” என்று கேட்க, விஜியின் கண்களில் சிறு ஆச்சரியம். அவனறிந்த ஷ்யாமுக்கு மன்னிக்கவே தெரியாது.

அவனது அணுகுமுறை என்பது மீனுக்கு வாலைக் காட்டு, பாம்புக்கு தலையை காட்டு என்பதாக மட்டும் தான் இருக்கும். யார் யாரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் என்பதையும், எப்படிப் போனால், எதை தட்ட முடியும் என்பதையும் முழுவதுமாக அறிந்தவன். அதனால் எப்போதும், மிஸ்டர் கூல் தான், தொழிலை பொறுத்தவரை.

அவ்வளவு எளிதில் கோபம் வந்து விடாது அவனுக்கு. ஆனால் கோபம் வந்து விட்டால், அவ்வளவுதான். வேண்டாமென்று முடிவெடுத்து விட்டால், அது வேண்டாம் தான். அதற்கு வேறெந்த அர்த்தமும் கிடையாது.

ஆனால் இப்போது தன்னிடம் பேசிய ஷ்யாமை, உண்மையிலேயே சற்று ஆச்சரியமாகத்தான் பார்த்தான் விஜி.

“நல்லா இல்ல பாஸ்…” இறுக்கமாகி விட்ட முகத்தோடு கூறினான். உண்மையில் அவன் நன்றாக இல்லை. கண்ணை மூடினால் அவன் தன்னை மவுன்ட் ரோடில் நிர்வாணமாக ஓடவிட்டு அடித்த காட்சி மட்டும் தான் நினைவிலாடியது.

அதை நினைக்கும் போதெல்லாம் அத்தனை கோபம் வந்தது.

ஷ்யாமை கொன்று விடும் ஆத்திரம்… ஆனால் இன்னொரு மனம், அவன் புறம் இருந்த தவறையும் சொன்னது. ஆனால் வென்றதென்னவோ ஷ்யாம் மீதான கொலைவெறி தான்.

அவனது பதிலை எந்தவிதமான உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் கேட்டுக் கொண்டவன், வெளியே நின்றிருந்த இளங்கவியை கண்ணைக் காட்டி வர சொன்னான்.

வெளியே சென்றிருந்த அவனது சகோதரன் பத்ரியும் உள்ளே வந்தான். அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சகோதரனுக்கு விபத்து என்பது மட்டும் தான். பரவிய வாட்ஸ்அப் வீடியோக்களில் கூட அவனது முகம் தெளிவாக இல்லாததால் அது விஜி தான் என்பதை அவர்கள் யாருமே அறியவில்லை.

அவனது குடும்பத்தை பொறுத்தமட்டில், விஜி ஷ்யாமிடம் வேலை பார்க்கிறான். தங்களது குடும்பத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவன். ஷ்யாமிடம் வேலை பார்த்ததால் அவர்களது மருத்துவமனையிலேயே வைத்து ராஜ வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவன் என்பது வரை தான் அவர்களது புரிதல்.

அத்தனையும் ஷ்யாம் கண்ட்ரோல் என்பதால் அவனைத் தாண்டி இவர்களிடம் யாரும் பேசுவதும் இல்லை. அதனால் விஜியின் குடும்பத்தை பொறுத்தவரை ஷ்யாம் நல்லவன்… மிக மிக நல்லவன்.

“ண்ணா… எப்ப வந்தீங்க?” பாசமாக கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த பத்ரியை பார்த்து சிரித்தான் ஷ்யாம்.

“இப்பதான் ஒரு டென் மினிட்ஸ் ஆச்சு பத்ரி…” என்று கைகடிகாரத்தை பார்த்தான்.

“ஜூஸ் குடிக்கறீங்களா ண்ணா? நான் வாங்கிட்டு வரேன்..” என்று அவசரமாக பறக்க பார்த்தவனை,

“ஒரு நிமிஷம் இரு பத்ரி… அதெல்லாம் வேண்டாம்…” என்று இழுத்துப் பிடித்து நிறுத்தினான்.

இருவரையும் பார்த்த விஜி, “பத்ரி… என்னடா கிளியர் பண்ணிட்டு வந்துட்டியா?” என்று கேட்க,

“ம்ம்ம்… முடிச்சுட்டேன் ண்ணா…” என்றபடி அவன் கையிலிருந்த ரசீதுகளை விஜியிடம் கொடுக்க, கேள்வியாய் பார்த்தான் ஷ்யாம்.

“என்ன விஜி? என்னாச்சு?” என்று மஹா கேட்க,

“பில்ல செட்டில் பண்ணிட்டானான்னு கேட்டேன் மேம்… அவ்வளவுதான்…” என்று விஜி கூற,

“ஏன்? எதுக்காக நீங்க பில்லை செட்டில் பண்ணனும்?” என்று கேட்டாள் மஹா.

“என்னோட பில்லை நான் தான மேம் செட்டில் பண்ணனும்?” என்று விஜி கூற,

“உங்களுக்காக நாங்க பண்ண மாட்டோமா?” என்று கேட்ட மஹாவின் கேள்வியில் முகம் கசங்கியது அவனுக்கு. ஆனால் கண்கள் மின்ன பார்த்தான் ஷ்யாம், சிறு புன்னகையோடு.

“வேணாம்… ப்ளீஸ்… இதுவரைக்கும் பாஸ் எனக்கு நிறைய பண்ணிருக்கார்… அதுவே போதும்மா… இந்த பில்லை நான் தான் செட்டில் பண்ணனும்…” வாதிட்டவனை பார்த்த ஷ்யாம்,

“மஹா… அவனை விடு… அவன் இஷ்டம்…” என்றவனை, பாவமாக பார்த்தாள் மஹா.

“இல்லைங்க… நான் என்ன சொல்ல வரேன்னா…” என்று ஆரம்பிக்க,

“மஹா… ஸ்டாப் இட்… கொஞ்ச நேரம் பேசாத…” என்று இறுக்கமான முகத்தோடு கிளியர் கட்டாக முடிக்க, அதற்கும் மேல் அவளால் பேச முடியவில்லை. பார்த்துக் கொண்டிருந்த விஜிக்கு, உள்ளுக்குள் வலித்தது. மஹாவேங்கடலக்ஷ்மி விஜய் என்ற அவனது கனவு, கனவாகவே போய்விட்டதில் வந்த வலி. மனதை மாற்றிக் கொண்டதாக நினைத்தாலும், நிதர்சனத்தை எதிர்கொள்ளும் போது வேதனையாக இருந்தது.

மகாவை அடக்கிய ஷ்யாம், விஜி புறம் திரும்பி,

“அடுத்தது என்ன பண்ணலாம்ன்னு நினைக்கற விஜி?” நேராக அவனை நோக்கி கேள்வி வீசியவனை என்னவென்று புரியாமல் பார்த்தான் விஜி.

“என்ன சொல்றீங்கன்னு புரியல பாஸ்…” பல்லைக் கடித்துக் கொண்டு இறுக்கமாக கேட்டான். அவனால் இப்போது ஷ்யாமை எதிர்த்து நிற்க முடியாது, உடல்நிலை அப்படி! இந்த நிலையில் தன்னை அமர வைத்துவிட்டு ஷ்யாம் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது?

ஆனால் அவனது கோபத்தை சற்றும் கண்டுக் கொள்ளாமல்,

“ஏதாவது பிசினஸ் மாதிரி செய்யறதா இருந்தா சொல்லுடா…” என்று கேட்க, விஜி மெளனமாக அவனை பார்த்தான். ஒருவகையில் அவனுக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது.

“இங்கயே பைனான்ஸ்ல லைன் போடலாம்ன்னு நினைக்கறேன் பாஸ்…” என்று அவனது முகத்தை பார்க்காமல் கூறினான். இதை ஷ்யாம் எந்தளவு வரவேற்பான் என்று தெரியவில்லை. தன்னிடம் வேலை பார்த்தவன் தனக்கு எதிராக இறங்குவதா என்று எதிர்க்கலாம். ஆனால் அவன் எதிர்த்தாலும் இதுதான் என்று எண்ணிக் கொண்டான். இனி மோதல் என்பது அவனது வியாபார சாம்ராஜ்யத்துடன் தான் என்பது அவனது தீர்மானமான முடிவு.

அதை கேட்டவுடன் ஷ்யாமின் முகம் அத்தனை பிரகாசமானது!

“சூப்பர்டா… பண்ணு… ஏதாவது ஹெல்ப் வேணும்னா சொல்லு…” வெகு எதார்த்தமாக கூறியவனை ஆச்சரியமாக பார்த்தாள் மஹா.

அதே ஆச்சரியம் விஜிக்கு இருந்தாலும், “உங்க பாசிடிவ் நெகடிவ்ன்னு எல்லாமே தெரிஞ்ச எதிரியை நீங்க உருவாக்கிக்கிட்டீங்க பாஸ்… எனக்கே ஹெல்ப் பண்றேன்னு வேற சொல்றீங்க?” அத்தனை இறுக்கமாக, முறுக்கிக் கொண்டு கூற,

“நீ எதிரின்னா எனக்கு சந்தோஷம் தான்டா… நான் இப்படிதான்னு சொல்லிட்டு எனக்கு எதிரா என்ன வேண்ணா பண்ணு விஜி… ஆனா முதுகுல மட்டும் நீ குத்தி இருக்கக் கூடாது…” என்றவனை விஜியால் நேராக இப்போது பார்க்க முடியவில்லை.

உள்ளுக்குள் முள் குத்தியதை போல இருந்தது.

“இனிமே எல்லாம் ஸ்ட்ரைட் டீலிங் தான் பாஸ்… ஒரு நாள் இல்ல ஒரு நாள், நீங்க எனக்கு பண்ணதை நான் உங்களுக்கு பண்ணுவேன்…” கிட்டத்தட்ட சபதமிடுவதை போல கூறியவனை பார்த்து புன்னகைத்த ஷ்யாம்,

“விஜி… நீ என்கிட்ட தொழில் கத்துகிட்டவன்… உனக்கு என்னோட ப்ரோஸ் அன்ட் கான்ஸ் அத்தனையும் தெரியும்ன்னு எனக்கும் தெரியும்… அப்படி ஒருத்தன் எனக்கு எதிர்ல நிப்பேன்னு சொல்றது தான் ஆம்பிளைத்தனம்… என்ன வேண்ணா பண்ணு… பார்த்துக்கறேன்… விஷ் யூ ஆல் தி பெஸ்ட்…” என்று நிறுத்தியவன், “பணம் எவ்வளவு வேணும்ன்னு சொல்லு…” என்று கேட்க, சத்தியமாக அந்த கேள்வியை மஹாவால் நம்பவே முடியவில்லை.

அவளது கண்கள் வெளியே தெறித்துவிடும் போல இருந்தது. தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டாள். அத்தனையும் உண்மைதான். ஆனால் ஏன்? எப்படி? அதே அதிர்வுதான் விஜயிடமும்!

“வேணா பாஸ்… உங்க கிட்ட இருந்து எனக்கு எதுவும் வேணாம்…” அழுத்தமாக கூறியவனை புன்னகையோடு பார்த்தவன்,

“ஓகே… பணம் அக்செப்ட் பண்ண மாட்ட… ஆனா இதையெல்லாம் உனக்கே திருப்பி எழுதி கொடுத்துட்டேன்… வெச்சுக்க…” என்று இளங்கவிக்கு கண்ணைக் காட்ட, அவன் அவனிடமிருந்த பைல்களை விஜி அமர்ந்திருந்த படுக்கையின் மேல் வைத்தான்.

அத்தனையும் விஜியிடமிருந்து எழுதி வாங்கப்பட்ட சொத்து பத்திரங்கள்.

மஹாவுக்கு உண்மையிலேயே இதயம் வெளியே எம்பி குதித்து விடும் போல இருந்தது.

இவன் என்ன செய்கிறான்? என்ன விஷயம் நடக்கிறது? இதையெல்லாம் முடிவு செய்து கொண்டுதான் இங்கு வந்தானா? ஆனாலும் கடைசி வரை தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே!

இளங்கவி கொடுத்த பத்திரங்களை வெறித்துப் பார்த்தான்.

“இது உனக்கு நான் கொடுக்கற காம்பன்சேஷன் இல்ல… நீ இதைதான் ஆசைப்பட்ட… நீயே வெச்சுக்க…” என்று கூற, விஜி மௌனமாகவே தான் இருந்தான். என்ன சொல்வது? என்ன செய்வது? புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவழியாக அதிர்விலிருந்து மீண்டவன்,

“வேண்டாம் பாஸ்…” இன்னும் அழுத்தமாக கூறினான்.

“டேய்… இதுக்காகத்தான் என் முதுகுல குத்தின… இந்த சொத்துக்காகத்தான் அவ்வளவு வருஷமா நான் உன் மேல வெச்ச நம்பிக்கைய உடைச்ச… இந்த சொத்துக்காகத்தான் என்னை நீ கேவலப்படுத்துன… ஆஃப்டர்ஆல் இதெல்லாம் வெறும் கல்லும் மண்ணும் டா… இன்னும் நூறு வருஷம் கழிச்சு யார் கிட்ட இருக்குமோ? ஆனா உன் மேல நான் வெச்ச நம்பிக்கையை மொத்தமா அழிச்ச பார்… ச்சே… எனக்கு இதெல்லாம் வேண்டவே வேண்டாம் விஜி… எதுக்காக ஆசப்பட்டியோ அதை நீயே வெச்சுக்க…” என்று பேசி முடித்தவன், எழுந்து கொண்டான்.

மருத்துவர், அந்த சொத்துக்களை எழுதி வாங்கியதில் தான் அவன் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்று கருத்து சொன்னதிலிருந்து மனதுக்குள் இதே யோசனைதான். கூடவே இன்னும் பல யோசனைகள்.

உண்மையில் அத்தனை மனவேதனையாக இருந்தது ஷ்யாமுக்கு. என்னதான் விஜி துரோகம் செய்திருந்தாலும் ஒரு காலத்தில் மிக நெருக்கமானவன் அவன்! உள்ளும் புறமும் அறிந்த ஒரே பிறவி. அவனது துரோகத்தை கண்டிப்பாக இறுதி மூச்சு இருக்கும் வரை மறக்கவே முடியாது.

வெகு நேரம் அந்த பத்திரங்களையே வெறித்து பார்த்தபடி இருந்தான் விஜி. உள்ளுக்குள் இருந்த குற்ற உணர்வு இப்போது பல மடங்காகி இருந்தது. ஆனால் அதை ஷ்யாம் முன் காட்டிக் கொள்ளளவும் அவனால் முடியவில்லை.

“வேணும் வேண்டாம்ன்னு நீ முடிவு பண்ண முடியாது… எல்லாத்தையும் உன் பேருக்கு தான செட்டில்மென்ட் பண்ணிட்டேன்…”

“வேணாம் பாஸ்… என்னை நீங்க ரொம்ப சங்கடப்படுத்தறீங்க… ” என்று நிறுத்தியவனை, ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம். ரொம்பவுமே கசப்பாக புன்னகைத்தான்.

“உன்னை கடைசி வரை என்னோட விஜின்னு ரொம்ப நம்பிட்டு இருந்தேன்டா…” அத்தனை இறுக்கமாக வார்த்தைகளை கூறியவனை ஆழ்ந்து பார்த்த விஜி, மனதை இறுக்கமாக அழுத்திய உணர்வுகளிலிருந்து விடுபட முடியாமல் தவித்தான்.

அந்த நம்பிக்கையை அவன் உடைத்து விட்டான். தன்னிடம் வேலை பார்ப்பவன் என்று சற்றும் நினைக்காமல் நட்பு பாராட்டியவன் ஷ்யாம். அந்த நட்பை கொச்சைப் படுத்திவிட்டான்.

இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தவனை தான் கஞ்சா மயக்கத்தில் அவனிருந்தபோது உபயோகித்தான். நான்கு வருடமாக கணக்குகளில் கை வைத்தான். அவனது காதலை ஜீரணிக்க முடியாமல் மீடியாவில் அவதூறு பரப்பி விட்டான். அதிலும் அவனது காதலியை கீழ்த்தரமாக மிரட்டியதை நினைத்துப் பார்த்த போது ரொம்பவுமே தன்னை நினைத்து அருவருப்பாக இருந்தது. நீ ஆசைப்பட்டால் போதுமா? அன்று மஹா கேட்ட கேள்வி நினைவுக்கு வந்தது.

‘இது இல்லைன்னா அதுன்னு போக நானென்ன அவ்வளவு ஈசியான ஆளா விஜி… நான் மஹாவேங்கடலக்ஷ்மி…’ என்று அத்தனை நிமிர்வாக சொன்ன பெண்ணை நினைத்தும் பார்க்க முடியவில்லை.

எரிகின்ற அடுப்பின் மேல் நிற்பது போலிருந்தது!

“ம்ம்ம்… எஸ் பாஸ்… நான் போன பாதை சரியா இல்ல… ஒத்துக்கறேன்…” என்று இடைவெளி விட்டவன்,

“சௌஜன்யா கிட்ட கஞ்சாவை கொடுத்து உங்களுக்கு எப்படியாவது கொடுக்க சொன்னது நான் தான் பாஸ்… எப்படி இருந்தாலும் கணக்குல கை வச்சதை நீங்க பிடிப்பீங்கன்னு தெரியும். அப்படி மாட்டினா அதுல இருந்து தப்பிக்க தான் அப்படி பண்ணேன்…” என்று தலை குனிந்தபடி கூற, அதிர்ந்தாள் மஹா!

“என்ன சொல்றீங்க?” அதிர்வின் உச்சத்தில் அவள் கேள்வி கேட்க, அதை முன்னமே அறிந்திருந்த ஷ்யாமுக்கு அது பெரியதான பாதிப்பை தரவில்லை.

“சாரி மேடம்… முட்டாள்தனமான செய்கைன்னு இப்ப புரியுது. யாருக்குமே கிடைக்காத பொக்கிஷத்தை நானே தவற விட்டுட்டேன்… அது பாஸ் ப்ரெண்ட்ஷிப். நான் ஒரு முட்டாள்…”

“அப்படீனா அந்த போட்டோஸ் வீடியோஸ் எல்லாம்?”

“அந்த போதை மயக்கத்துல இருந்தப்ப எடுத்தது…” தலை குனிந்து கொண்டான்.

“ஏன் இத என்கிட்ட சொல்லல?” ஷ்யாமை பார்த்து மஹா கேட்க,

“என்ன சொல்ல? இப்படி ஏமாளியா இருந்து இருக்கனே… அதை சொல்ல சொல்றியா? கஞ்சா மயக்கத்துல இருந்தேன்… அதனால என்னை எக்ஸ்கியுஸ் பண்ணுன்னு சொல்ல சொல்றியா மஹா?”

உணர்வில்லா முகத்தோடு ஷ்யாம் கேட்க,

“ஐ ம் ரியலி சாரி பாஸ்…” தலை குனிந்தவாறே கூறினான் விஜி.

“இனிமே நெஞ்சுல குத்து விஜி… முதுகுல வேணாம்…” அத்தனை வெறுமை அவனது குரலில்!

“என்கிட்ட இருக்க டாக்குமெண்ட்ஸ் எல்லாத்தையும் கொடுத்துடறேன்… வீடியோஸ் உட்பட… இனிமே நேருக்கு நேரா உங்களை பேஸ் பண்ணுவேன்…” உறுதியாக கூறியவனின் தோளை சிரித்தபடி தட்டிக் கொடுத்தான் ஷ்யாம்.

“இதுதான்டா ஆம்பிளைத்தனம். இவன் தான் என்கிட்ட தொழில் கத்துகிட்ட விஜி. இனிமே நீயும் ஒரு பாஸ் டா… என்னை என்ன பாஸ்ன்னு சொல்ற?” என்று கிண்டலடித்தவன், அவனது தோளில் கை போட்டுக் கொண்டு, “நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு எந்திருச்சு வா… எனக்கும் போட்டி இல்லாம போரடிக்குது… விளையாடலாம்…” என்று சிரித்தவன், அதுவரை மலங்க மலங்க விழித்துக் கொண்டு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த மரகதத்தையும் பத்ரியையும் பார்த்து,

“ம்மா… இதெல்லாம் ஜாலியா நாங்க பேசிக்கறது… தப்பா நினைச்சுட்டு பயப்படாதீங்க… நல்லா பார்த்துக்கங்க… சீக்கிரம் தேறி வரட்டும்… ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா பையன் அடங்கிடுவான், என்னை மாதிரி…” என்று சிரிக்க, மரகதமும் சிரித்தார்.

“அண்ணா… நீங்களே சொல்லிக்கறீங்க…” என்று பத்ரி சிரித்தான். இவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. அதை அண்ணன் தங்களிடம் மறைக்கிறான் என்பதும் புரிந்தது.

“வேற வழி? இல்லைன்னா சோறு கிடைக்காது தம்பி…” என்று சிரித்தவன், அவனது தலையைப் பிடித்து ஆட்டிவிட்டு, கிளம்பத் தயாரானான்.

அவனையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளின் முகத்தில் மெல்லிய முறுவல்.

ஷ்யாமின் இந்த முகம் மகாவுக்கு புதிது. மிகவும் புதிது! இன்னும் எத்தனை முகங்கள் தான் இவனுக்கு? இன்னும் எத்தனை எத்தனை ஆச்சரியங்களை தரப் போகிறான் இவன்? வியப்பாக நினைத்துக் கொண்டிருக்கும் போதே, அவர்களிடம் கூறிக் கொண்டு அவளது கையை பிடித்தபடி கிளம்பியிருந்தான்.

எதுவும் பேசாமல் அவனை தொடர்ந்தாள், அவன் இழுத்த இழுப்பிற்கு தகுந்தவாறு! அவன் மேல் காதல் வழிந்து கொண்டிருந்தது. அவனை அவ்வப்போது கண்களால் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

வீடு போய் சேரும் வரை இருவருக்குமே பேச்சு என்பது சிறிதும் இல்லை. அவன் ஏன் இதை செய்தான் என்று மஹா கேட்கவில்லை. எதற்காக கொடுத்தான் என்றும் கேட்கவில்லை. ஒருவிதமான மோன நிலையில் வீட்டுக்கு வந்தவள், யோசனையாகவே இருந்தாள். அன்று அவளுக்கு விடுமுறை. அதனால் தான் காலையிலேயே விஜியை பார்க்க வேண்டும் என்று கூற, அவளை தனியாக அங்கு விட மனம் வராததால் தானும் உடன் சென்றான் ஷ்யாம்.

“என்ன? ஒரே யோசனையா இருக்கீங்க ஹெர் ஹைனஸ்?” என்று கேட்டு, மெளனமாக மதிய உணவை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்தான், அவ்வப்போது செல்பேசியை பார்த்தபடி!

‘பார்வையே சரியில்லையே… ஏடுகொண்ட்லவாடா நீ என்னதான் ப்ளான் பண்றேன்னு சொல்லிட்டு பண்ணு… பிரிப்பர் பண்ணவே விடாம அடிக்கறது ரொம்ப தப்பு…’ மனதுக்குள் ஒரு விதமான பயமா? இறுக்கமா? தெரியவில்லை. ஆனால் மனைவிகளிடமிருந்து விசாரணையில் தப்பிப்பது என்பது அரும்பெரும் சாதனை என்பது மட்டும் புரிந்தது.

“எப்படி அவனுக்கு அத்தனையும் திருப்பிக் கொடுத்த ஷ்யாம்?” அமைதியை உடைத்துக் கொண்டு அவள் கேட்க,

“ப்ச்… அதுக்காக தான மஹா அவன் அத்தனையும் பண்ணினான்… அதான் நீயே வெச்சுக்கடான்னு சொல்லிட்டேன்…” டைனிங் டேபிளில் அமர்ந்தபடி வெகு சாதாரணமாக கூறவும்,

“ரொம்ப பெரிய விஷயம் பண்ணிருக்க ஷ்யாம்… இதான் உன்கிட்ட எதிர்பார்த்தேன்…” அவனுக்கு உணவை பரிமாறியபடியே உள்ளுர உணர்ந்தவாறு கூறினாள்.

“ரொம்ப பெரிய கனவெல்லாம் வெச்சுக்காதடி. எந்த விஷயத்தையும் கால்குலேஷன் இல்லாம செய்ய மாட்டேன். இப்ப இதை திருப்பிக் கொடுத்ததன் மூலமா அவனுக்குள்ள ஒரு குற்ற உணர்வை தூண்டி விட்டேன். அவன் தானா பண்ணதை ஒத்துகிட்டு டாக்குமெண்ட்ஸ கொடுக்க ஒத்துகிட்டான். அவ்வளவுதான்…” என்று சிரிக்க,

“அவன் கிட்ட அவ்வளவு நல்லதனமா பேசினியேடா…” நிச்சயமாக மஹா அதிர்ந்திருந்தாள். கரண்டியிலிருந்த சாப்பாட்டை தட்டில் வைக்க மறந்து கைகள் அந்தரத்தில் நின்றன. அவளது கையை பிடித்து உணவை தனது தட்டுக்கு இடம் மாற்றியவன், அவளுக்கு முன்பிருந்த தட்டிலும் உணவை பரிமாறிக் கொண்டே, அவளை நேராக பார்த்தவன்,

“ஆமா பேசினேன் மஹா. இப்பவும் நான் சொன்னதுல எல்லாம் எந்தவிதமான மாறுதலும் இல்ல. அதெல்லாம் நான் உணர்ந்து உண்மையா சொன்னதுதான். ஆனா அந்த டாக்குமெண்ட்ஸ் எனக்கு ரொம்ப முக்கியம். அதெல்லாம் இல்லாம தான் ராவ் க்கு என்பது லட்சம் அழுதேன். இன்னும் என்னவெல்லாம் பண்ணி வெச்சு இருக்கான்னு எவ்வளவு அகழ்வாராய்ச்சி பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா? கண்டிப்பா இன்னும் நிறைய கொடுக்கல் வாங்கல்ல அவனோட வேலைய காட்டியிருப்பான்.

அவன் கூட பேச்சுவார்த்தை இல்லைன்னா எப்படி அவனை ரீச் பண்றது? என்னென்ன கோல்மால் பண்ணிருக்கான்னு எப்படி தெரிஞ்சுக்கறது? இந்த சொத்தெல்லாம் ஒரு பெரிய விஷயமில்ல… சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிச்சு இருக்கேன்… அவ்வளவுதான்… ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆகி, இளங்கவி கூடத்தான் வீட்டுக்கு போனான். டாக்குமெண்ட்ஸ ஹேன்ட் ஓவர் பண்ணிட்டான். இப்ப தான் கவி மெசேஜ் பண்ணிருக்கான்.” என்று முடித்த ஷ்யாமை விழி விரிய பார்த்தாள்.

சத்தியமாக அவனை புரிந்து கொள்ள இன்னொரு ஜென்மம் தேவைப்படும் என்று தான் தோன்றியது. தனக்கு முன்பிருந்த உணவையே வெறித்துப் பார்க்க தோன்றியது. அவன் கவலை இல்லாமல் சாதத்தோடு குழம்பையும் பிசையத் துவங்கினான்.

“இப்படிக் கூட கீழ இறங்கியும் போவியா?” ஏதோவொரு உணர்வு நெஞ்சை அடைப்பது போல இருந்தது.

“இது கீழ இறங்கறது இல்ல டார்லிங்… தந்திரம். அவனை மிரட்டி பார்த்தாச்சு, அடிச்சும் பார்த்தாச்சு, படுக்கவும் வெச்சாச்சு. ஆனா அந்த டாக்குமெண்ட்ஸ அவன்கிட்டருந்து வாங்க முடியல. உன்கிட்ட ஏதாவது சொல்வானான்னு கண்காணிச்சோம். எதுவுமே நடக்கல. ஒரு சில விஷயம் மட்டும் தான் உன்கிட்ட பேசினான், நம்ம மேரேஜுக்கு முன்னாடி நீ தனியா பார்த்தப்ப. அப்புறம் எப்படித்தான் அந்த டாக்குமெண்ட்ஸ வாங்கறது? பென் டிரைவ்ஸ் அவன் கிட்ட இருக்கற வரைக்கும் எனக்கு டேஞ்சர் தான். அவனை அடிக்கறதுக்கு முன்னாடியே பணம் எவ்வளவு வேணும்ன்னு கேட்டேன். அவன் ஒத்துக்கல. அதான் அடிச்சு படுக்க வெச்சேன்.” என்று நிறுத்தியவன், சாப்பிட்டபடியே, அவளை ஆழ்ந்து பார்த்தவன்,

“இன்னமும் அவனை பக்கத்துல இருந்து பார்த்துதான் செயல்பட விடனும் மஹா. என்னிக்கிருந்தாலும் என் வீக்னஸ் எல்லாம் தெரிஞ்ச அவன் டேஞ்சரான ஆள் தான். பக்கத்துல இருக்கற மாதிரி இருந்தாலும் உள்ளுக்குள்ள ஒரு விலகல் இருக்கணும். இல்லைன்னா இவனை மாதிரி ஆளுங்களை ஹேண்டில் பண்ண முடியாது…” என்று முடிக்க, சோர்வாக அவனைப் பார்த்தாள். இடது கையால் அவளுடைய தட்டில் குழம்பை ஊற்றியவன், சாப்பிடு என்று சைகை செய்ய, அந்த உணவு உள்ளே இறங்கும் என்று தோன்றவில்லை.

இதுபோன்ற தந்திரங்கள் எல்லாம் அவள் அறியாதவை. தெரியாதவை. ஒரு வார்த்தையை பேசினால் கூட அதற்கான உள்ளர்த்தமும் ஒன்றாகத்தான் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாத மஹாவுக்கு அவனது செய்கை வெகு உறுத்தலாக இருந்தது.

ஷ்யாமை பொறுத்தவரை, அவனது மனதை உரைத்தான். இதை வேறு யாரிடமும் கூறிவிட மாட்டான். ஆனால் தன்னுடைய மனைவி தன்னைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டிலும், அது போன்ற நிகழ்வுகளில் எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று அவளுக்கு கற்றுத்தர வேண்டும் என்று நினைத்தான், அவனுக்கு ஏற்றார் போல!

காரணம் மெடிக்கல் காலேஜ் என்பதை டீம்ட் யுனிவர்சிட்டியாக்க வேண்டும். எதிர்காலத்தில் அதன் சட்டபூர்வமான பொறுப்பு அவனது மனைவியிடம் என்று தீர்மானித்து இருக்கும் போது, அவள் பேசும் நியாயங்களை எல்லாம் ஏற்க முடியாது, அவனை பொறுத்தமட்டில்!

“அப்படீனா ஒரு மனுஷனோட குற்ற உணர்வை தூண்டி விட்டா நாம எதை வேண்ணா சாதிச்சுக்கலாம். இல்லையா?” என்று கேட்க, சிங்கம் வான்ட்டடாக வண்டியில் ஏறியது, அதுவே அறியாமல்!

“ம்ம்ம்… கண்டிப்பா…” என்றான் மெல்லிய புன்னகையோடு!

அவனை அமைதியாக பார்த்தவள், “அப்படிதான் எனக்கும் குற்ற உணர்வை தூண்டி விட்டுட்டு இருக்கியா ஷ்யாம்?”

அவனிடம் குரலை உயர்த்தாமல், கோபப்படாமல், சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அவள் கேட்ட கேள்வி நிச்சயம் ஒரு கண்ணி வெடி என்பதை அவன் அறிவான்.

இதற்கு பதில் கூறினால் அந்த கண்ணி வெடியில் தானே காலை வைத்தது போல ஆகிவிடும். கூறாவிட்டாலோ அந்த கண்ணி வெடியிலிருந்து காலை எடுத்ததாகி விடும். இரண்டுமே ஆபத்தானது அல்லவா!

‘அந்த ஆபத்தான மிருகம் நம்மளை நோக்கித் தான் வருது கேப்டன்’ மனம் அலறியது. புரையேறியது. கண்ணாடி டம்ப்ளரிலிருந்த நீரை அருந்தினான்.

எதையும் காட்டிக் கொள்ளாமல் மஹாவை பார்த்தவன், “உனக்கெதுக்கு குற்ற உணர்வு வரணும் மஹா? தப்பு பண்ணதெல்லாம் நான் தானே?” என்று கேட்க,

“ஆமா. அதான் எனக்கும் புரியல. தப்பு உன் பக்கமிருக்கு. ஆனா எனக்குள்ள ஒரு வகையான குற்ற உணர்வை தூண்டி விட்டு இருக்க. அதான் எப்படின்னு புரியாம இருந்தேன். இப்ப தான் புரியுது ஷ்யாம். மனுஷங்க மனசோட விளையாடறது உனக்கு புதுசு இல்லைன்னு நல்லாவே புரியுது.”

அமைதியாக அவள் கேட்ட தொனியில் நிச்சயம் அவனுக்குள் ஏதோவொன்று அசைந்தது.

“உனக்குள்ள இருக்கறது குற்ற உணர்ச்சி கிடையாது மஹா. அது லவ். அன்கண்டிஷனல் லவ். அந்த லவ்க்கும், நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியாத உன்னோட இயல்புக்குமான ஒரு க்ளாஷ் தான் இப்ப நீ கடந்துட்டு இருக்க உன்னோட மனநிலை. அது எனக்கு நல்லா புரிஞ்சதுனால தான், நீயா வெளிவரனும்ன்னு வெய்ட் பண்றேன் மஹா. நான் உன்னோட குற்ற உணர்ச்சியை எந்த விதத்திலும் தூண்டி விடலை…”

சாப்பாட்டை தயிரோடு நாசூக்காக பிசைந்து கொண்டே, ரொம்பவும் தெளிவாக கூறியவனை வெறித்துப் பார்த்தவள்,

“எந்தவொரு சிச்சுவேஷனையும், விஷயத்தையும் நமக்கேத்த மாதிரி மாத்திக்கறது ஒரு கலைன்னா, நீ அதுல பிக்காஸோ டா. ஆனா அதை என்கிட்டவும் ட்ரை பண்ற… ரொம்ப குழப்ப பார்க்கற…” என்றவளை உணர்வில்லாமல் பார்த்தான்.

“எந்தவிதமான தந்திரத்தையும் கையாளாம, நான் நானா இருக்கறது உன்கிட்ட மட்டும் தான் மஹா. ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி ட்ரான்ஸ்பரன்ட் வித் யூ. நான் பண்றது தப்பாவே இருந்தாலும், நான் என்ன நினைக்கறேன்னு உனக்கு தெரிஞ்சு இருக்கனும்ன்னு நினைக்கறேன். உன்கிட்ட இருந்து மறைக்க எனக்கு எதுவுமே இல்ல. நான் எந்த முகமூடியும் போடலை. ஆனா என்ன? கொஞ்சம் இமோஷனல் இடியட் ஆகிட்டு வரனோன்னு மட்டும் தோணுது…”

****

நாட்கள் அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. மஹா ஹவுஸ் சர்ஜனாக வேலை பார்க்கும் மருத்துவமனையில் அவர்களது கடைசி நாள். இங்கு முடித்துவிட்டு, ஏதேனும் ஒரு கிராமத்தில் அல்லது நடுத்தரமான நகரத்தின் அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் வேலை பார்க்க வேண்டும் என்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த பணி. மருத்துவ கல்லூரியை சேர்ந்த அந்த மருத்துவமனையில் அவர்களுடைய பணி காலம் முடிந்து இருந்தது.

“அடுத்தது என்னடா ப்ளான்?” நண்பர்கள் குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, விகாசினி கேட்டாள். அவளும் அவர்களது வகுப்புத் தோழி. ரொம்பவும் பேசமாட்டாள். அமைதி. கேட்கும் கேள்விக்கு பதில் என்று இருப்பவள். அவர்களது குழுவில் ஸ்ரீராம் மட்டும் இல்லை. யாரையோ சந்திக்க வேண்டும் என்று வெளியே சென்றிருந்தான்.

மஹா, பிருந்தா, விகாசினி, சேஷா, செந்தில், ஸ்ரீராம் எல்லாரும் ஒரே குழு. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்பவர்கள். வகுப்பறையில் இருந்ததை விட, ஹவுஸ் சர்ஜன் செய்ய வந்த போது நன்றாகவே இறுகி விட்டிருந்தது அவர்களுடைய நட்பு.

“கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆவறதுதான் ப்ளான். ஆனா என்ன இவ அண்ணன் இன்னும் அசைய மாட்டேங்கறாங்க…” பிருந்தா சிரிக்க,

“அந்தளவு கார்த்தியை பயம் காட்டி வெச்சுருக்க செல்லோ…” என்று மஹா வாய்விட்டு சிரித்தாள்.

“அடடா… உன் அண்ணன் ரொம்ப பயப்படுறவங்க ல்ல…”

“அப்கோர்ஸ்… பாவம்.. அவன் ஒரு அப்புராணி. உன்னோட கோல்மால் தெரியாம ஏதோவொரு வீக் பாயின்ட்ல லவ் பண்றேன்னு சொல்லிட்டான் போல…” என்று சிரித்தாள்.

“பாயிண்ட்டா சொன்ன மஹா…” என்றான் செந்தில், ஹைஃபை கொடுத்தவாறே! அவனது வேலையே பிருந்தாவை கிண்டலடித்தே ஒரு வழியாக்குவதுதான். சமயத்தில் விகாசினியும் சிக்கி விடுவாள். ஆனால் மஹா சிக்குவதில்லை. அவளிடம் வாய் கொடுத்தால் மீள முடியாது என்பதும் ஆட்டி வைத்து விடுவாள் என்பதும் செந்திலுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் மகாவிடம் மட்டும் வேலையை காட்ட மாட்டான்.

“ஆனா எப்படி சகோ உன்னை வெச்சு மாமா மேய்க்கறாரு?” என்று கேட்டான். அவளிடமே அவ்வப்போது இப்படி கூறி வாங்கியும் கட்டிக் கொள்வான்.

“ஏன் உன்னை வெச்சு சேஷா மேய்க்கலையா லூசே?” சேஷா அவனுடைய காதலி. வருங்கால மனைவி.

“ஏன்னா நான் அவ்ளோ நல்லவன், வல்லவன், நாலும் தெரிஞ்சவன், அறிஞ்சவன், புரிஞ்சவன், அன்பானவன் இப்படி நிறைய சொல்லலாம் சகோ. ஏதோ சேஷாவுக்கு ரொம்ப லக்…” என்று நீட்டி முழக்க, அருகிலிருந்து சேஷா முறைத்தாள்.

“மூதேவி… மொதல்ல சாக்ஸை துவைச்சு போட்டுத் தொலை… நாறுது…”

“அது உன்னோட சாக்ஸ் சேஷு டார்லிங். உன் ரூம்லருந்து சுட்டுட்டு வந்தேன்…” பெருமையாக செந்தில் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டாள் சேஷா. அவளும் விகாசினியும் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். அவ்வபோது நண்பர்கள் விசிட் அடிப்பது வழக்கம். மஹா எப்போது ஷ்யாமை கண்டாளோ, இவை அத்தனையும் நின்று போயிருந்தது. அவளது வாழ்க்கையை மொத்தமாக ஆக்ரமித்துக் கொண்டான் ஷ்யாம். சிந்தனை, செயல், கனவு, நினைவு என்று அத்தனையும் அவன் மயமாக்கி இருந்தான்.

“எலி பொந்தை பழைய சாக்ஸ் வெச்சு அடைச்சு இருந்தேன். ஒரு நாள் அதைக் காணோம். சரி எலிதான் தூக்கிட்டு போய்டுச்சுன்னு நினைச்சா, தூக்கினது அந்த எலி இல்ல, இந்த…” என்று சேஷா நிறுத்த, சிரித்த செந்தில், “மாமன் புலிதான…” என்று கண்ணடிக்க,

“போடா… பெருச்சாளி…” என்று சேஷா திட்ட,

“இவளுங்க முன்னாடி மாமனை இப்படி டேமேஜ் பண்ணக் கூடாது தங்கம்…” பாவமாக அவன் கூற,

“ஒரு அழுக்கு சாக்ஸை ஆட்டைய போட்டவனை வேற எப்படிடா சொல்வாங்க?” என்று சேஷா கேட்க, சுற்றியிருந்த அனைவருமே வாய்விட்டு சிரிக்க, மஹாவின் செல்பேசி அழைத்தது.

ஸ்ரீராம் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

என்ன இவன் அழைக்கிறான் என்று யோசித்தவாறே பேசியை காதுக்கு கொடுத்தாள்.

“என்னடா?”

“மஹா…” என்று அவன் தயங்க,

“சொல்லு ஸ்ரீ…” என்றாலும் அவன் புறம் சற்று அமைதியாக இருந்தது.

“ம்ம்ம்…”

“என்ன ஸ்ரீ? ஏதாவது பிரச்சனையா?” சற்று தீவிரமான குரலில் கேட்டாள் மஹா.

“ம்ம்ம்… தெரியல மஹா… ஆனா எனக்கு நல்லவிதமா படலை…” என்றான் ஸ்ரீராம்.

“என்னன்னு சொல்லுடா…”

“நான் இங்க ஒருத்தரை மீட் பண்றதுக்காக பார்க் ஹயாட் வந்தேன்…” என்று தயங்கியவாறே நிறுத்த, மஹாவுக்கு உள்ளுக்குள் திக்கென்று இருந்தது.

“சொல்லுடா…”

“அங்க ஷ்யாம் மாமாவ பார்த்தேன் மஹா…” அவன் எப்போதும் ஷ்யாமை மாமா என்றே அழைக்க பழகியிருந்தான். அவன் மட்டுமல்ல, அவளது நண்பர்கள் அனைவருக்கும் அவன் ‘மாமா’. நண்பிகளுக்கு ‘அண்ணா’.

“சரி அதுக்கு என்னடா? ஏதாவது வேலையா போயிருப்பாங்க..” என்று சாதாரணமாகத்தான் சொன்னாள்.

“இல்லடி… சௌஜன்யாவும் கூட இருக்கா…” என்று அவன் தயங்கியவாறே கூற, அவளுக்கு தலை சுற்றியது. ஸ்ரீராம் நல்ல நண்பன். அவன் பொய் சொல்ல வாய்ப்பில்லை என்பது தெரியும். அவன் கூறிய விஷயத்தில் அதிர்ந்தவள், மௌனமாகவே இருக்க, அவன் தொடர்ந்தான்.

“ரூமுக்குள்ள போய் ஒரு மணி நேரமாகுது. அவங்க ரூமுக்கு பக்கத்துல இருக்க ரூமுக்கு வெளியத்தான் நான் இருக்கேன். முதல்ல நானும் சீரியஸா நினைக்கல மஹா. ஆனா இப்ப எனக்கு நெருடலா இருக்கு. பயமாவும் இருக்குடி. ப்ரெஷர் ஏறிப் போய் நின்னுட்டு இருக்கேன்…” என்று ஒரு மாதிரியான குரலில் கூறி முடிக்க, தன்னை தானே நிதானித்துக் கொண்டவள்,

“பைனான்ஸ் சம்பந்தமா எதாவது பேச்சுவார்த்தையா இருக்கும் ஸ்ரீ…” என்றாள் சற்று அழுத்தமாக. “இல்லைன்னா உனக்கு அவங்களை அடையாளம் தெரியலையாடா?” என்றும் கேட்டு வைக்க,

“லூசா நீ? மாமாவை எனக்கு தெரியாதா? அவருக்குத்தான் என்னை அடையாளம் தெரியல. பக்கத்துல நான் நின்னுட்டு இருந்ததை கண்டுக்காம சௌஜன்யாவோட ரூமுக்குள்ள போனாங்கனா நீயும் இப்படி கேக்கற?” அவனுக்கு கோபம் வந்துவிட்டது.

இவர்களது திருமணத்தில் எத்தனை அலம்பல் செய்திருக்கிறோம், குழுவாக! முகம் கூடவா அவனுக்கு நினைவிருக்காது?

அவள் மெளனமாக இருக்க, “சரி… உன்னோட வாட்ஸ்அப் ஓபன் பண்ணி பார். உனக்கு ஸ்நாப்ஸ் அனுப்பறேன்…” என்று கூறிவிட்டு வைத்தான்.

அவசரமாக வாட்ஸ்அப்பை திறந்தாள். இந்த வாட்ஸ்அப்பை கண்டுபிடித்தவன், இவளது வாழ்க்கையில் நிறைய விளையாடி பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டவளை வரவேற்றது ஸ்ரீராம் அனுப்பியிருந்த படங்கள்.

சௌஜன்யாவோடு இருந்தது சாட்சாத் ஷ்யாம் தான். இருவருமாக காரிடாரில் நடந்து வரும் படமும், ஜோடியாக அறைக்குள்ளே நுழைவதையும் அனுப்பி, ‘மாமா?’ என்று கேள்வியும் கேட்டிருந்தான்.

‘நீ இன்னும் அங்க தான் இருக்கியா?’ என்று மெசேஜில் கேட்ட மஹாவுக்கு ஆமென்று பதில் கொடுத்தான் ஸ்ரீராம்.

உடனே ஷ்யாமுக்கு அழைத்தாள்.

அவளது இருண்டு போன முகத்தை பார்த்தவர்கள் என்னவாயிற்று என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, பிருந்தா கையை சுரண்டி என்னவென்று கேட்டாள். ‘சொல்றேன்’ என்று கண்ணசைத்தவள், ஷ்யாம் போனை எடுப்பதற்காக காத்திருந்தாள்.

“சொல்லுடி பொண்டாட்டி…” என்று உற்சாகக் குரலில் அழைப்பை ஏற்றவனை என்ன கேட்பது? குழம்பியது மஹாவுக்கு… சௌஜன்யாவுடன் நீ இருக்கிறாயா என்று கேட்பதா? ச்சே… அவளுக்கே அசிங்கமாக இருந்தது. அதைக் காட்டிக் கொள்ளாமல் குரலை சாதாரணமாக வைத்துக் கொண்டு,

“ஷ்யாம்…கொஞ்சம் அர்ஜன்ட்… எங்க இருக்க?” என்று கேட்க,

“ஹாஸ்பிடல்ல இருக்கேன் மஹா…” என்றானே பார்க்கலாம்.

அவளது காலுக்கு கீழே பூமி பிளந்து விடும் போல இருந்தது. அதிர்ச்சியில் நெஞ்சில் சுருக்கென்றது. எதற்காக மறைக்கிறான்?

“எந்த ஹாஸ்பிடல்?” புரியாமல் கேட்டாள் மஹா.

“எத்தனை ஹாஸ்பிடல்டி இருக்கு? சுஷ்ருதா தான். காலைலருந்து மன்த்லி ஆடிட்டிங் நடந்துட்டு இருக்கு மஹா” என்று கூற, அவளது கைகள் நடுங்கியது.

“ஓ… சரி… இட்ஸ் ஓகே…” என்று மஹா சட்டென முடிக்கப் பார்க்க,

“என்ன மஹா? என்ன விஷயம்?” என்று சாதாரணமாக கேட்க,

“ஒண்ணுமில்ல. கொஞ்சம் வேலை. நீ இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோனுச்சு…” என்று கூறினாள், ஒரு சிறு நம்பிக்கையோடு.

“இல்லடி… காலைலருந்து வேலை நெட்டி முறிக்குது. பிருந்தாவை கூட்டிட்டு போயேன். ஈவினிங் பார்க்கலாம்…” என்று முடிக்க,

“ஓகே…” என்று வைத்து விட்டாள்.

கண்கள் கலங்கும் போல இருந்தது. அருகிலிருந்த நண்பர்களின் முன் உடைந்து விடக் கூடாதே! கண்ணை சிமிட்டி சிரமப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டவள், ஸ்ரீராமை அழைத்தாள்.

“ஸ்ரீ… எங்கடா இருக்க?”

“அங்கேயே தான் இருக்கேன் மஹா…” அவனது குரலிலும் சற்றான கசப்பு.

“அங்கேயே இருடா… இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்…” என்று கூறியவள், அனைவரிடமும் சொல்லி விட்டு காரில் பறந்தாள் பார்க் ஹயாட் நோக்கி.

சொன்னபடி பத்து நிமிடங்களில் வந்த மகாவோடு ஷ்யாம் இருந்த ஃப்ளோருக்கு போனான் ஸ்ரீராம்.

இருவருமாக அறைக்கு வெளியே காத்திருக்க, தன்னையே வெறுத்து, அருவருத்து போனாள் மஹா.

யாருக்கும் இந்த மாதிரி ஒரு நிலை வந்துவிடக் கூடாது கடவுளே என்று வேண்டியபடி!

அவ்வப்போது அவளது தோளை தட்டிக் கொடுத்தான் ஸ்ரீராம், அவளுக்கு தைரியம் கொடுத்தாலும், அவனுக்கே உள்ளுக்குள் அவ்வளவு கோபமாக இருந்தது. இவ்வளவு நேரம் அறைக்குள் இருவர் மட்டும். என்ன உலக சமாதானம் பற்றிய பேச்சுவார்த்தையா நடக்கிறது?

இருபது நிமிடங்கள் கழித்து அந்த சொர்க்க வாசல் திறந்தது.

வெளியே வந்த ஷ்யாம், கைகளை கட்டிக் கொண்டு, கண்களில் நீர் சூழ, கலக்கத்தோடு நின்று கொண்டிருந்த மஹாவை பார்த்து அதிர்ந்து நின்றான். மஹா இங்கு வருவாள் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவள் எதுவும் பேசாமல், அவனுக்கு பின்னால் நின்றிருந்த சௌஜன்யாவை பார்க்க, அவள் இயல்பாக நின்றிருந்தாள்.

அவனது கண்களையே ஆழ்ந்து பார்த்தாள். அதில் அவளால் பொய்மையை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஒருவேளை அவ்வளவு சிறப்பான நடிகனாகி விட்டானா அவளது கணவன்? தன்னிடம் கிடைக்காததை கிடைக்குமிடம் நோக்கி போக துவங்கி விட்டானா? அவனது தேவை, அவளா இல்லையென்றால் அதுவா?

மனதுக்குள் போராடிய போராட்டத்தை கண்ணீர் வெளிப்படுத்த பார்க்க, இமைகளை கொட்டி கண்ணீரை அடக்கினாள்.

அழ மாட்டேன். அழக் கூடாது. யாருக்காக அழுவது?

அவனை ஆழ்ந்து பார்த்தவளுக்கு தொண்டையடைத்தது.

“மஹா…” என்று அழைத்த ஷ்யாமை திரும்பியும் பார்க்காமல் விடுவிடுவென்று கிளம்பியிருந்தாள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஐம்பத்து எட்டு

காரை மிதமான வேகத்தில் இருபுறமும் பார்த்தபடி செலுத்திக் கொண்டிருந்தான் ஷ்யாம். எதிரில், பக்கவாட்டில் என்று எங்காவது மஹாவின் முகம் தென்படுகிறதா என்று கண்களில் கலக்கத்தோடு பார்த்தபடி இருந்தான்.அவனை வெறுமையாக பார்த்துவிட்டு போனவள் தான்.எங்கு சென்றாள் என்று தெரியவில்லை.அவள் சென்றவுடன், எப்படியும் வீட்டுக்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்