arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் நாற்பது
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 40 / 64

அத்தியாயம் நாற்பது

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. பைரவி நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தார். வாசலில் மாக்கோலம்… மாவிலைத் தோரணம்… ஆட்களை வைத்து வீட்டை முழுவதுமாக தலைகீழாக மாற்றியிருந்தார்.

முருகானந்தத்திற்கு உடல்நிலை சற்று தேறியிருந்ததால் அவர் நடமாடிக் கொண்டிருந்தார். ஆனால் முழு வேலையும் கார்த்திக் மட்டுமே தன் தோளில் சுமந்தான்.

அவனுக்கு அது சந்தோஷம் தான். சந்தோஷத்தின் உச்சியில் நின்றிருந்தான். தன்னுடைய காதலுக்கும் பச்சை கொடி காட்டப்பட்டுவிட்ட நிலையில், தங்கையின் திருமணத்திற்கு லக்ன பத்திரிக்கை எழுதுவதற்கான விழா அது.

மிக நெருங்கிய சொந்தங்களையும் நண்பர்களையும் மட்டும் அழைத்து இருந்தனர், செல்பேசியின் வாயிலாகவே!

அத்தனை விரைவாக இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தது வேறு யாராக இருக்க முடியும்? விழா நாயகன், ஷ்யாம் மட்டுமே!

அன்று அவள் அழுததை ஷ்யாமால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவளை விட்டு தன்னால் தனித்திருக்க முடியும் என்றும் தோன்றவில்லை. முதலில் எம்பிபிஎஸ் முடிக்கட்டும் என்று எண்ணியிருந்தான். ஆனால் இப்போதோ, திருமணம் முடித்து விட்டு படிக்கட்டும், தானே மேற்கொண்டு படிக்க வைப்பதாகவும் கூறி ஒரே மூச்சாக ஆத்மநாதனிடம் பிடிவாதம் பிடித்து மகாவின் வீட்டில் பேச செய்திருந்தான்.

“டேய் தம்பி… இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் வைக்கணுமா? அந்த புள்ளை காலேஜை முடிக்கட்டுமேடா… அதுவும் டாக்டருக்கு படிக்கற புள்ளை… படிப்ப கெடுக்காத சாமி…” என்று கூறிப் பார்த்தார்.

“அதெல்லாம் முடியாது நானா… எவ்வளவு சீக்கிரம் வைக்கறீங்களோ அந்தளவு நல்லது… இல்லைன்னா நானே பண்ணிக்கறேன்… என்ன சொல்றீங்க?” குறும்பாக கேட்டவனை பார்த்து சிரித்தார் நாதன், உடன் ஜோதியும் சேர்ந்து கொள்ள,

“விட்டா பண்ணிடுவான் பாவா… நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அனௌன்ஸ் பண்ணவன் இவன்… இவனை நம்பி அந்த பொண்ணை விட்டுவைக்க முடியாது…” என்று தெலுங்கில் கூறிவிட்டு சிரித்தார் ஜோதி.

“ம்மா… அது நானே எக்ஸ்பெக்ட் பண்ணலை… அப்படியாகிடுச்சு… அன்எவிட்டபில் சிச்சுவேஷன்…” என்று அவரிடம் விளக்கினாலும், பெரியவர்கள் அனைவருக்குமே அதுவொரு குறையாக தங்கி விட்டதை மறுக்க முடியாது.

அவனது காதலை யாருமே மறுக்கப் போவதில்லை. இரு வீட்டிலுமே ஒரு மாதிரியாக முடிவு செய்து தான் வைத்திருந்தனர் என்றாலும், தங்களை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக அவன் செய்த செயல் அனைவரையும் காயப்படுத்தி இருந்தது.

தன்னால் முடிந்தவரை அனைவரையுமே சமாதானப்படுத்தத்தான் விழைந்தான்.

பைரவியை சமாளிக்க முடியாமல் திணறினான் என்றாலும் முருகானந்தம் உதவிக்கு வந்து விட்டார்.

அத்தனை நாட்களில் அவனை கவனித்துக் கொண்டிருந்தவருக்கு அவன் மேல் மிகுந்த நல்ல அபிப்ராயம் வந்து விட்டிருந்தது. அதுவுமில்லாமல் அவரை பொறுத்தவரை மகளது பெயர் ஒரு முறைதான் அந்நிய ஆணுடன் சேர்த்து எழுதப்பட வேண்டும். அது ஷ்யாமுடன் நடந்து விட்டது எனும் என்று நினைத்தார். அதை அவனைக் கொண்டு மட்டுமே சரி செய்யவும் முடியும் என்ற நம்பிக்கை.

அவரது வார்த்தையை மீறவில்லை பைரவி.

நாதனும் முருகானந்தனுமாக ஜாதகக் கட்டை தூக்கிக் கொண்டு ஆஸ்தான ஜோதிடரை கலந்தாலோசித்த போது தான் சிறு நெருடல் வந்தது இருவருக்கும்.

“பையன் ஜாதகம் நம்பர் ஒன்… எந்த விஷயமா இருந்தாலும் இவனை மிஞ்ச முடியாது… என்ன வந்தாலும் நிப்பான்… ஜெய்ப்பான்… ஸ்ரீகிருஷ்ணர் ஜாதகம்…” என்றவர், மகாவின் ஜாதகத்தை பார்த்து விட்டு, “பொண்ணு ஜாதகம், ரொம்ப அமோகம்… ஆனா சீதாபிராட்டி ஜாதகம்…” என்று தயங்க,

“ஏன் சங்கரா? என்ன விஷயம் சொல்லு…” என்று முருகானந்தம் ஊக்க,

“சீதாதேவி மாதிரி புருஷன் மேல பிரியம் வெச்சு இருக்கறது நல்ல விஷயம் தான்… ஆனா இடையில ராவணன் வர்றானே முருகா…” என்று இன்னமும் இழுத்தார்.

“என்ன சொல்ற சங்கரா?”

“ஆமா… சீதாப்பிராட்டி லோகமாதா தான்… ஆனா அவ பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? அவளை மாதிரி வாழ்ந்துட முடியுமா? கட்டிகிட்டவன் கூட குடும்பமும் நடத்தாம, எங்கேயோ அந்நிய தேசத்துல கைதியா ஒரே சிந்தனையோட அவனையே நினைச்சுட்டு இருந்தவளுக்கு கடைசி வரைக்கும் சுகப்படலையே? வாழ்க்கை அவளுக்கு என்ன கொடுத்துடுச்சு? பதிவிரதைன்னு நிரூபிச்சு என்ன சாதிச்சுட்டா? புள்ளைப் பேறுக்குக் கூட புருஷன் காரன் இல்லாம… எங்கேயோ அநாதையால்ல நின்னா? அவளை லோகமாதான்னு சேவிக்கலாம் முருகா… ஆனா அவளை மாதிரி இருன்னு நம்ம பெண்டுகளை சொல்லக் கூடாதுங்கறது என்னோட கருத்து…” என்றவரை கவலையாக பார்த்தார் ஆத்மநாதன்.

முருகானந்தம் தீவிரமாக யோசித்தார்.

“அப்படீன்னா பொருந்தலையா சங்கரா?” என்று கேட்க,

“அதெல்லாம் இல்ல… பத்து பொருத்தம்ன்னு பார்த்தா ரொம்ப பொருந்தி வருது… இந்த பொண்ணை விட்டா வேறு யாரையும் இவன் கட்ட மாட்டானே…” என்று புருவத்தை உயர்த்தியபடி இவர் கேட்க, அவசரமாக தலையாட்டினர் இருவருமே!

“பையன் பிடிவாதத்துல தான் இந்த கல்யாணமே பேசிருக்கோம் சங்கரா …” என்றவரை பார்த்து சிரித்தார் அவர்.

“கண்டிப்பா… வேற வழியே இல்ல… இவனுக்கு இவ தான்… இவளுக்கு இவன் தான்… உன் பொண்ணு கிழிச்ச கோட்டை இவன் தாண்ட கூட மாட்டான்… டெல்லிக்கு ராஜானாலும் பள்ளிக்கு பிள்ளைங்கற மாதிரிதான்… ஆனா…” என்று முருகானந்தத்தை பார்த்து இழுக்க,

“ஆனா என்ன?” என்று நாதன் அவசரமாக கேட்டார்.

சொல்வதற்கு முன் நிரம்பவும் யோசித்தவர், கண்களை மூடி தியானித்து, சோழிகளை எடுத்தது கட்டையின் மேல் உருட்டினார்.

அவர் எதிர்பார்த்த ஒன்று வரவில்லை. முகம் சுருங்கியது. தொண்டையை கனைத்துக் கொண்டவர்,

“நிறைய கஷ்டத்தை பார்க்கணும்… அதுவும் ரெண்டு பேருக்குமே இது திருமணத்துக்கு நல்ல நேரமில்ல… ரெண்டு வருஷம் தள்ளி நடந்தா எந்தவிதமான பிரிவும் இல்லாம, எந்த உறுத்தலும் இல்லாம நல்லபடியா வாழுவாங்க… ஆனா இப்ப நடந்தா நிறைய சிக்கலை பார்க்கணும்… பிரிவுக்கு போகும், இன்னும் எத்தனையோ சிக்கல்கள் இருக்குன்னு சோழி சொல்லுது…” என்று முடித்துவிட, நாதன் யோசனையாக நண்பரை பார்த்தார்.

“மாப்பிள்ளை கிட்ட வேண்ணா சொல்லிப் பார்க்கலாமா மச்சான்?” என்று கேட்க,

“ஒத்துக்கவே மாட்டான் மாப்ள… அவன் பிடிச்சா பிடிவாதம் தான்… அப்படியொரு வறட்டு பிடிவாதம்…” நாதன் கவலையாக கூறினார்.

“என்ன பண்றது? நிலைமை இதுதான்னு அவர் கிட்ட சொல்லலாமே…” சிறிய குரலில் அவர் கூற,

“நீ வேற… மொத வேலையா உன் பொண்ணை எப்படியாவது சரிகட்டி கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பான்… பரவால்லையா?” என்று கேட்க, ஜெர்க்கானார் முருகானந்தம்.

“முருகப்பெருமானே… என்ன பண்றதுன்னே புரியலையே…” என்று புலம்ப,

“எல்லாத்தையும் அந்த முருகன் கிட்ட விட்டுடு மாப்ள… அவன் மேல பாரத்தை போட்டுட்டு நாம கட்டி வெச்சுடலாம்… அப்புறம் மருமகளாச்சு, அந்த முரட்டு பயலாச்சு… எப்படியும் நம்ம ராசாத்தி கிழிச்ச கோட்டை அந்த பய தாண்ட மாட்டான்னு சொல்லிட்டாங்க… அது நமக்கும் தெரியும்ல…” என்று எப்போதும் போல பெரிய குரலில் சிரிக்க, அந்த சிரிப்பில் முருகானந்தமும் இணைந்து கொண்டார்.

“சரி அப்படீன்னா நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் ஒரு நல்ல நாளா பார்த்து குறிச்சு கொடு சங்கரா…” என்று முருகானந்தம் கூற,

“மாப்ள… இருக்கறதுலையே பக்கத்துல இருக்க முகூர்த்தமா பார்க்க சொல்லிருக்கான் அந்த பய… இல்லைன்னா நானே கட்டிக்கறேன்… நீங்க ஆசீர்வாதம் மட்டும் பண்ணா போதும்ன்னு மிரட்டிட்டு இருக்கான்யா…” என்று மீண்டும் பெரிதாக சிரித்தார்.

அதை கேட்ட முருகானந்தத்திற்கும் பெருமகிழ்ச்சி.

அத்தனை பிரியமாய் காதலாய் பெண்ணுக்கு கணவன் கிடைக்கப் போகும் மகிழ்ச்சி!

“எல்லாரையும் கூப்பிடவாச்சும் நமக்கு டைம் கிடைக்கணுமே மச்சான்? வேலை எம்புட்டு கெடக்கு…” அவரது கவலை அவருக்கு.

“அதெல்லாம் பார்த்துக்கலாம் மாப்ள… உம் ன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும்… ஒரு லாரி ஆளுங்களை நான் இறக்கிடுவேன், கல்யாண வேலைய பார்க்க… நீ கவலைப்படாத மாப்ள…” என்று நாதன் கொடுத்த தைரியத்தில் முகூர்த்தத்தையும் குறித்து வந்துவிட்டார்.

அதற்கு பின் வேலைகள் அத்தனையும் ஜெட் வேகத்தில் பறந்தன.

நிச்சயத்தை சிறு அளவில் வீட்டில் வைத்து செய்து லக்ன பத்திரிக்கை எழுதி விடலாம் எனவும், திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தி விடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இரண்டுக்கும் இடையில் ஒரு மாதம் இடைவெளி இருக்க, அதற்கே இருவரையும் முறைத்தான் ஷ்யாம். அன்று இவர்கள் குடும்பமாக முருகானந்தம் வீட்டிற்கு சென்றிருந்தனர். பைரவி, கிருஷ்ணம்மாளோடு அமர்ந்துக் கொண்டு பச்சை பட்டாணி உரித்துக் கொண்டிருந்தார் ஜோதி. அவர்கள் வீடுகளில் அப்படித்தான். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும் சமையலறை பெண்களின் ராஜ்ஜியம் மட்டும் தான். அதை மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை. எத்தனை பெரிய இடமாக இருந்தாலும் அப்படித்தான். மஹாவும் மருத்துவத்திற்கு படித்தாலும் முடிந்தளவு சமையலும் பழகி தான் இருந்தாள்.

“நான் தான் உங்களை இயர்லியஸ்ட் பாசிபிள் டேட்டா பார்க்க சொன்னேனே நானா…” என்று பல்லைக் கடித்தவனை பார்த்து சிரித்தார்.

“டேய் உன் அவசரத்துக்கு எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது… நீயும் ஒரே வாரிசு… மாப்ள வீட்லயும் மொத கல்யாணம்… எல்லாத்தையும் செஞ்சு பார்க்கனும்ன்னு எங்களுக்கும் ஆசையா இருக்காதாடா?” என்று நாதன் கேட்க,

அருகில் அமர்ந்து கொண்டு அவ்வப்போது பார்வையால் பிருந்தாவை தழுவிக் கொண்டிருந்தவனை பார்த்து, “மச்சான், இந்த கல்யாணத்துக்கு ஏன்தான் இத்தனை ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷன்ஸ் வெச்சு இருக்காங்களோ? பேசாம கையெழுத்தை போட்டமா, விருந்தை வெச்சமான்னு இருந்து இருக்கணும்… இந்த ஒல்டீஸ் எல்லாம் வேஸ்ட்…” என்று கார்த்திக்கை வம்பிழுக்க,

“ரொம்ப கரெக்ட் மச்சான்… இவங்க இன்னும் ப்ளாக் அன்ட் ஒயிட்ல இருந்தே வெளிவரல…” என்று ஹைபை கொடுத்தவனை பார்த்து விஷமமாக சிரித்த ஷ்யாம்,

“ஆமா மச்சான்… உன்னோட கல்யாணத்தை பிருந்தாவோட கலர்புல்லா நான் சொல்ற மாதிரி பண்ணிக்க… இவங்களை கூப்பிட கூட வேண்டாம்…” என்று கண்ணடித்தவன், அனைவரின் முன்பும் போட்டுக் கொடுத்து விட்டு மீண்டும் விஷமமாக சிரிக்க, அதிர்ந்த கார்த்திக் ஓடுவதற்கு தயாரானான்.

“கார்த்திக்க்க்க்க்… என்ன இது?” முருகானந்தமும் நாதனும் சேர்ந்தே அதிர்ந்தனர். பைரவிக்கு இது இலைமறை காய் மறையாக தெரியும் என்பதால் பெரிதாக அதிரவில்லை. சாதாரணமாக எடுத்துக் கொண்டார். அதோடு பிருந்தா அவருக்கு அன்னியமொன்றும் இல்லையே… மஹாவோடு கூடவே வளர்ந்த பெண்ணென்பதால் அவருக்குமே மகிழ்ச்சி தான்!

மகாவோடு அமர்ந்திருந்த பிருந்தா தான் மயங்கி விழுந்து விடுவதை போல படபடத்துக் கொண்டிருந்தாள். அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னமும் தந்தையிடம் கூட தெரிவிக்காமல் எப்படி இங்கு பேசுவது என்று தயக்கமாக மஹாவை பார்த்தாள். அவளும் சங்கடமாக ஷ்யாமை பார்க்க, அவனோ வெகு இயல்பாக,

“ஏன் ஷாக்காகறீங்க? பிருந்தாவை விட நல்ல பொண்ணா நீங்க பார்த்துட போறீங்களா?” என்று முருகானந்தத்தை பார்த்து கேட்டும் வைத்தான் அவன்.

“இல்ல மாப்ள… அது வந்து…” என்று இழுத்தவரை,

“அதெல்லாம் வேண்டாம் மாமா… பிருந்தா என்னோட சிஸ்டர் மாதிரி… அதோட மஹா கூடவே வளர்ந்த பொண்ணு… அந்த பாசம் நிறைய இருக்கு… கட்டி வெச்சா எப்பவுமே மகாவோட ஒட்டுதலா இருக்கும்… கார்த்திக்கு பிருந்தாதான்…” என்று முடித்தவனை அதிர்ச்சியாக பார்த்தான் கார்த்திக்.

இவன் முடிவு செய்துவிட்டால் போதுமா? வேறு யாரும் முடிவு செய்ய வேண்டாமா? இவனுக்கு எல்லாமே இப்படித்தானா? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போல… எதையும் நிதானமாக யோசிப்பதில்லை. முடிவு செய்தால் செய்தது மட்டுமே… ஆனாலும் இப்படி தைரியமாக தான் விஷயத்தை உடைத்திருக்க முடியாது என்று எண்ணினான் கார்த்திக்.

அந்த தைரியம் இவனுக்கு மட்டுமே இருக்கிறது என்றும் மனதுக்குள் பாராட்டிக் கொண்டான்.

“ஏன் முருகு… இன்னும் என்ன யோசிக்கற… பிருந்தா நம்ம புள்ளைடா…” என்று கிருஷ்ணம்மாளும் ஒப்புக்கொள்ள, அனைவரும் யோசனையில் அமர்ந்திருந்த முருகானந்தத்தை பார்த்தனர்.

அனைவரையும் பார்த்தவர், நாதனிடம், “மச்சான்… பிருந்தா அப்பா கிட்ட நீங்க பேசறீங்களா?” என்று கேட்க,

அவரும் தலையாட்டினார்.

முருகானந்தம், “ஏன் கண்ணு… அப்பா ஊர்ல இருக்காங்களா?” என்று அவளிடம் கேட்க, அவள் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே,

“இருக்காங்க அங்கிள்…” என்று பயந்துக் கொண்டே கூறினாள். விட்டால் அழுதுவிடுவாள் போல!

“அப்படீன்னா இன்னைக்கு சாயந்தரம் வீட்டுக்கு வர்றோம்ன்னு சொல்லிடறியா தங்கம்?” என்ற நாதனை பார்த்து வேகமாக தலையாட்டினாள் பிருந்தா.

அவளது தலையாட்டலை பார்த்து சிரித்த நாதன்,

“என்ன கண்ணு படிச்சுருக்க?” என்று கேட்க, முருகானந்தம் முந்திக் கொண்டு,

“நம்ம மகாவோட ப்ரெண்டு தான் மச்சான்… ரெண்டு பேரும் டாக்டருக்கு தான் படிக்கறாங்க…” என்று கூறவும்,

“அட பரவால்லையே…” என்று சிரித்தார். “நம்ம வீட்ல ரெண்டு டாக்டருங்க இருந்தா சந்தோஷம் தானே?”

“சந்தோஷம் தான் மச்சான்… ஆனா அவங்க அப்பாரு ஒதுக்கணும்ல…” என்ற கேள்வியோடு நிறுத்த, பிருந்தா கலவரமாக விழித்தாள்.

தோளை குலுக்கிக் கொண்ட ஷ்யாம், “அதெல்லாம் ஒத்துக்க வெச்சரலாம்…” ரொம்பவும் சாதாரணமாகக் கூறினான்.

“டேய்… நாங்க தான் உனக்கு பயப்படுவோம்… ஊர்ல இருக்கவங்க எல்லாம் பயந்துருவாங்களா?” என்று சிரித்தார் நாதன்.

“நானா… பிருந்தா யாரு பொண்ணு தெரியுமா?” என்று கேட்டு புருவத்தை உயர்த்தியவன், “நம்ம ஜிஎஸ் தான்…” என்று கூறவும், ஆச்சரியமாக பார்த்தார் நாதன்.

“சுப்பிரமணியம் பொண்ணாம்மா நீ?” எனவும், அவள் மாங்கு மாங்கென்று தலையாட்டினாள்.

ஜிஎஸ் என்பது அவர்களது மருத்துவமனை. சுப்ரமணியத்தை தெரிந்தவர்கள் அனைவரும் ஜிஎஸ் என்று தான் அழைப்பது. அந்த பழக்கத்தில் தான் அவன் கூறினான். வேறு பிரிவினர் என்றாலும் நாதனுக்கு மிகவும் நல்ல நண்பர். நன்கு அறிமுகமானவர் என்பதால் அவருக்கு சந்தோஷம்.

“யோவ் மாப்ள… போய்யா… நீ ரொம்ப கொடுத்து தான் வெச்சுருக்க…” என்று உரிமையாக முருகானந்தத்தின் தோளில் தட்டி அவரது சந்தோஷத்தை வெளிப்படுத்த, முருகானந்தமும் முகம் விகசிக்க புன்னகைத்தார்.

“டேய் கார்த்தி… புள்ளை படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறமா கல்யாணமா? இல்லன்னா இப்பவே பண்ணி வைக்கணுமா?” என்று அவனது தந்தை வெடியை கொளுத்திப் போட, அவரை அதிர்ந்து பார்த்தனர் இருவருமே!

பிருந்தா வெகுவாக வியர்த்து போனாள்.

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்ப்பா… முதல்ல இந்த ரவுசை மேனேஜ் பண்ணுங்க…” என்று ஷ்யாமை கைகாட்ட,

“அது கஷ்டம் மருமகனே…” என்று சிரித்தார் நாதன்.

“டேய் மச்சான்… கஷ்டமே இல்லாம உன்னோட லவ்வுக்கு ஓகே வாங்கி தந்தா இதுவும் பேசுவ… இன்னமும் பேசுவ…”

“மச்சான்… இன்னைல இருந்து நீ தான் என்னோட தெய்வம்… மத்த எல்லா தெய்வத்தையும் நான் டைவர்ஸ் பண்ணிடறேன்…” எனவும், ஷ்யாம் சிரித்தான்.

“என்ன இது… இவனும் மச்சான், நீயும் மச்சானா? என்னடா முறை இது?” என்று நாதன் சிரித்தபடி கேட்க,

“பழகிடுச்சு நானா…” என்றவன், மகாவை பார்த்து, “ஏய்… போய் பாவாவுக்கு குடிக்க தண்ணி கொண்டு வா…” என்று வேண்டுமென்றே ஏவ, அவள் முறைத்து விட்டு, எழுந்து கிச்சனுக்கு சென்றாள்.

“மச்சான்… ரொம்ப தைரியமா பேசற போல… அது சரி யார் அது பாவா?” என்று கிண்டலாக கார்த்திக் கேட்க,

“வேற யார்? நான்தான்…” என்றவன் முன் தண்ணீர் சொம்பை நங்கென்று வைத்தாள்.

“பொண்ணுன்னா பொறுமை வேணும்… இப்படி நங்குன்னு சொம்பை வைக்க கூடாது, அமைதி வேணும்… இப்படி காளியாத்தா மாதிரி முறைக்க கூடாது, பயபக்தியா புருஷன் காலை தினமும் தொட்டு கும்பிட்டுட்டு தான் போகணும்… மொத்தத்துல பொண்ணு… பொண்ணு மாதிரி இருக்கணும்…” படையப்பா வசனத்தை அவனுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டு அவளுக்கு முன் அதே சேட்டையை செய்து கொண்டு ரஜினியை போலவே வசனம் பேச, அதை கேட்டவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

அதிலும் புருஷன் காலை என்று அவனது காலைக் காட்டியவனை மற்ற நேரமாக இருந்தால் மிதித்து இருப்பாள். இப்போது வருங்கால மாமியாரும் மாமனாரும் வேறு இருப்பதால் பொறுத்துக் கொண்டு போக வேண்டியிருந்தது.

ஆனால் அவன் ‘பொண்ணு பொண்ணு மாதிரி இருக்கணும்…’ என்று கையை அவளது முகத்துக்கு முன் ஆட்டியபடி பேச, அவளது கோபம், எவரெஸ்ட்டை தொட்டது.

ஆனால் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் சிரித்து விட, அவளுக்கு வந்த கோபத்தில் அவன் முன் இருந்த சொம்பை எடுத்து அவன் மேலேயே கவிழ்த்தாள்.

நீராபிஷேகம் தான்!

பைரவியும் முருகானந்தமும், “பாப்பா… என்ன பண்ற?” என்று பதற, நாதன் சிரித்து விட்டார்.

ஜோதி அதற்கும் மேல், “இன்னும் ரெண்டு சொம்பு ஊத்திவிடு மஹா… அப்பதான் அடங்குவான்… டேய் பொண்ணு பொண்ணு மாதிரி இருக்கனுமா?” என்று சிரிக்க, முகத்தை துடைத்துக் கொண்டு அவளையே பார்த்தவன்,

“தேங்க்ஸ்டி பொண்டாட்டி… அப்படியே பாவாவுக்கு முதுகும் தேய்ச்சு விட்டுடு…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கண்ணடிக்க, இழுத்துப் பிடித்த மூச்சை முறைத்தபடி வெளியே விட்டாள்.

“என்ன பாப்பா? மாப்பிள்ளை விளையாட்டாத்தானே பேசறாரு … நீ எதுக்கு இப்படி பண்ண?” என்று பைரவி கோபமாக கேட்க,

“இல்லம்மா…” என்று விழித்தாள். அவன் மேல் கோபத்தில் தண்ணீரை அபிஷேகம் செய்து விட்டாளே தவிர, அதை செய்த பின் தான் எப்போதும் போல யோசித்தாள். இத்தனை பேர் முன்பும் இப்படி செய்தது தவறு என்று பைரவி மண்டையில் அடிக்காத குறையாக அவளை முறைத்தார்.

“அவர் கிட்ட சாரி கேளு…” என்று பைரவி உக்கிரமாக கூறினார். மாமியாரின் முன்பு முதல் கோணல் முற்றிலும் கோணலாகி விடுமே என்ற பயம் அவருக்கு. என்னதான் அவர்கள் அதை பெரிதாக எடுக்காதவர்கள் போல காட்டிக் கொண்டாலும் எந்த தாயும் இதை வரவேற்க மாட்டார்.

இதென்ன இந்த பெண்ணுக்கு இப்படியொரு அவசர புத்தி என்று கோபமாக வந்தது.

“ப்ச்… அத்த… இதெல்ல்லாம் ஒரு விஷயமா? இது எதுக்கு சாரி கேக்கணும்?” என்றவன், மஹாவை நோக்கி, “ரிலாக்ஸ் மகா…” என்று புன்னகைத்தான்.

அவன் கூறுவதில் பைரவிக்கு ஒப்புதல் இல்லை. ஆனால் மாப்பிள்ளை இப்படி சொல்லும் போது என்ன சொல்ல?

“ரொம்ப இவளுக்கு செல்லம் கொடுக்காதீங்க…” என்று மகாவை முறைத்தவாறே கூற, அவன் சிரித்தான்.

“விடும்மா… விடும்மா…” என்று கார்த்திக் நடுவில் பஞ்சாயத்துக்கு வந்தான்.

“மஹா… மாப்பிள்ளைய கூட்டிட்டு போய் ட்ரெஸ்ஸ ட்ரையர்ல போட்டுக் கொடு…” என்று கடுப்பாக கூற, ஷ்யாமின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பாக பிரகாசமானது.

அந்த பிரகாசத்தை பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், அவனிடம் கிசுகிசுப்பாக, “மச்சான்… உன்னோட பிளானே இதுவா? இல்ல பைரவி அகஸ்மாத்தா உன்னோட பிளானை நடத்தி வைக்குதா?” என்று யோசனையாக கேட்க,

“பொறாமை பிடித்த உலகமடா இது…” என்று அலுத்துக் கொண்டான்.

“நடத்து நடத்து…” என்று சிரித்தான் கார்த்திக்.

எதுவும் கூறாமல் முறைத்தபடி மொட்டை மாடியை நோக்கி போனாள் மஹா. கையில் எதையோ எடுத்துக் கொண்டு அவள் பின்னால் போனவன், மிகவும் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு,

“ஒய்… உனக்கு ஒழுங்கா வாஷ் பண்ண தெரியுமா?” என்று கேட்க,

இவள் முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு,

“ம்ம்ம்… தெரியாதுன்னா என்ன பண்ண போற?” என்று கேட்க,

“நான் சொல்லி தரேன்னு உனக்கு நான் சொல்லிக் கொடுப்பேன்…” என்று கண்ணை சிமிட்ட,

“அடங்கு… சட்டைய மட்டும் கழட்டி கொடுத்துட்டு கீழ போ…” என்று கறாராக கூற,

“என்னடி இப்பவே சட்டைய கழட்ட சொல்ற?” என்றவனின் குரலில் குறும்பு வழிந்தது.

“வேண்டாம் என்னை கொலைவெறியாக்காத…” என்று விரலை நீட்டி எச்சரித்தாள்.

“ஓம் ஷாந்தி… ஓம் ஷாந்தி… கழட்டி தரேன்… ஆனா என்னால அப்படியே கவர்ச்சியா கீழ போக முடியாது…” என்று வேண்டுமென்றே அவளிடம் வம்பிழுக்க,

“ரொம்ப முக்கியம்…” என்றவள், ட்ரையரை ஆன் செய்துவிட்டு, “கொடு…” என்று கேட்க,

“என்ன?” என்று விஷமமாக அவளைப் பார்த்தபடி ஷ்யாம் கேட்க,

“சட்டை தான்டா…” எனவும்,

“ஏன்? உன் கை சும்மாதானே இருக்கு?” என்று வம்பிழுக்க,

“டேய் இப்ப தர்றியா? இல்லையா?” முறைத்தபடி கறாராக கேட்க,

“மேடம் ஏன் இவ்வளவு சூடா இருக்கீங்க?” என்ற அவனது கேள்விக்கு, இன்னமும் முறைத்தாள்.

“ம்ம்ம்ம்…” என்று பல்லைக் கடிக்க,

“சூயிங் கம் வேணுமா குல்பி?” என்று அவன் கண்ணை சிமிட்ட, கோபமாக இருந்தாலும் வெட்கத்தில் முகம் சிவந்தது. அதை அவனுக்கு காட்டாமல் திருப்பிக் கொண்டவள்,

“ச்சீ பே…” என்றவள், “இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்ன்னு சொன்னா கேக்கவே மாட்டேங்கற…” கோபம் சற்று குறைந்தாலும் அவளது நிலையிலிருந்து கீழ இறங்கி வரவில்லை.

சட்டையை கழட்டி அவள் கையில் கொடுத்தவன், அவள் டிரையரில் போடும் வரை நிதானித்து விட்டு, அவளை பின்னோடு அணைத்துக் கொண்டான்.

“உன்னை விட்டுட்டு இருக்கறது ரொம்ப கஷ்டமா இருக்குடி…” என்றவன் அவளது பின்னங்கழுத்தில் மென்மையாக முத்தமிட, கூச்சத்தில் சிலிர்த்தாள். அவனது அணைப்பும் முத்தமும் அவளை வேறொரு உலகத்துக்கு அழைத்து சென்றது. சுற்றுப்புறமும் சூழ்நிலையையும் சிரமப்பட்டு நினைவில் கொண்டு, தன்னை மீட்டவள்,

“படிக்கறது இப்பதான் படிக்க முடியும்…” அவனது அணைப்பில் வாகாக இருந்தபடியே கூற,

“படிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு…” என்றவனை,

“அப்படியே நான் படிச்சு கிழிச்சுட்டாலும்… இப்பவே புக்கை திறந்தா உன்னோட நினைப்பாவே இருக்கு… இன்னும் மேரேஜுக்கு அப்புறமெல்லாம் கஷ்டம் டா…” கறாராக ஆரம்பித்து சிணுங்கலில் முடித்தாள் மஹா.

அவளது அந்த சிணுங்கல் அவனை ஜிவ்வென்று போதையிலாழ்த்த,

“கள்ளி… சொல்லவே இல்ல…” என்று அவளை இன்னமும் இறுக்கிக் கொள்ள,

“என்ன?” அவனை விலக்கிவிடுவதை போல பாவனை செய்து கொண்டே கேட்க,

“உன் பாவா மேல இவ்வளவு நினைப்பா இருக்குன்னா என்கிட்டே ஒரு தடவை சொல்ல மாட்டியா?” என்று கேட்க,

“ம்ம்ம்… ரொம்ப முக்கியம்…” என்று கடுப்பானாள் மஹா.

இரு வீட்டிலும் ஒப்புக் கொண்டாலும் இருவரும் நேரில் பார்த்து பேச சந்தர்ப்பமே கிடைக்காமல் இருந்தது. இப்போதும் கூட குடும்பமாக பேசத்தான் வந்தார்கள். பார்ப்பது என்று இல்லாமல் பேசியில் கூட வெகு அளவான பேச்சுதான். இருந்த போனை, கார்த்தி உடைத்து விட, அவள் அப்போதிருந்தே பேசி உபயோகிப்பதில்லை. இவளோடு பேச வேண்டும் என்றால் கார்த்திக்கு தான் அழைப்பான் ஷ்யாம். அவனது போனில் எவ்வளவு பேசிவிட முடியும்? அளவாக பேசிவிட்டு வைத்து விடுவான். இவளுக்குத்தான் அது போதாமல் இருந்தது.

ஆனால் இப்போது வரைக்குமே, தன்னிடம் செல்பேசி வாங்கித்தர சொல்ல மாட்டாளா என்று காத்திருந்தான் ஷ்யாம்.

ஆனால் அவள் கேட்கவே இல்லை. கேட்பதாகவும் இல்லை. கேட்டுவிட்டால் அவனோடு பழகிய மற்ற பெண்களுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய் விடுமோ என்ற பயம் உள்ளுக்குள் அரித்துக் கொண்டிருந்ததை அவன் அறிய மாட்டான்.

“எனக்கு ரொம்ப முக்கியம்…” என்றவன், முத்தமிட்டபடியே மீசையால் உராய, அவளுக்குள் அணுகுண்டு வெடித்தது. நெஞ்சம் திடுமென அடித்துக் கொண்டது. ஆனால் அந்த கண்ணி(கன்னி) வெடியில் சிக்கியது ஷ்யாம் தான். அவனால் தன்னை மீட்டுக் கொள்ளவே முடியவில்லை. சுகமாக அவளுக்குள் ஆழ்ந்து விட உத்தரவிட்டது ஹார்மோன்கள்.

ஒருவாறாக சுதாரித்துக் கொண்ட மஹா, சுற்றிலும் பார்த்தாள். அக்கம் பக்கத்து வீட்டு மொட்டை மாடிகள் எல்லாம் காலியாகத்தான் இருந்தன. ஆனாலும் பயமாக இருந்தது. யாரேனும் பார்த்து விட்டால் என்ற பயம்!

இந்த நிலைமை நீட்டித்தால் யாரேனும் மொட்டை மாடிக்கு வந்து விடும் வாய்ப்புகள் இருப்பதால், அவசரமாக அவனிடமிருந்து விலக முயல, அவளது கையை பிடித்து தன் கையேடு இறுக்கி பிடித்து வைத்துக் கொண்டு அவளை நிதானமாக நின்று ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம்!

“கீழ போ ஷ்யாம்…” என்று அவனை அனுப்ப முயல,

“மஹா… டூ யூ லவ் மீ?” என்ற அவனது கேள்விக்கு என்ன பதில் கூற?

“இல்லாம பின்ன?” என்ற பதில் கேள்வி கேட்டாள்.

“அப்புறம் ஏன் என்கிட்ட எதுவும் உரிமையா கேக்க மாட்டேங்கற?” என்று கேட்க, அவள் என்ன கேட்க வேண்டுமென்று நினைக்கிறான்?

“என்ன சொல்லு ஷ்யாம்?” என்று கேட்க,

“செல்போன்…” என்றவன், “என்கிட்ட கேக்கவே கூடாதுன்னு நீ முடிவு பண்ணி வெச்சு இருக்க…”

“முடிவெல்லாம் பண்ணல டா…” என்று அவளது இதழ்கள் பொய் சொன்னாலும் கண்கள் உண்மையை உரைத்து விட,

“என் பொண்டாட்டிக்கு நான் வாங்கிக் கொடுக்கணும்ன்னு நினைக்கறேன் குல்பி…” என்றவனை, தயக்கமாக பார்க்க, அவளிடம் அந்த பார்சலை நீட்டினான் ஷ்யாம்.

வாங்காமல் தரையை பார்த்தபடி நின்றிருந்தாள்.

‘நான் ஐபோன் வாங்கி தருவேனான்னு எத்தனை பேர் வெய்ட் பன்றாளுங்க தெரியுமா? என்னோட ஒர்த் உனக்கு தெரியலடி…’

‘அவங்க என் பின்னாடி வர்றதுக்கு நான் எதையுமே ஸ்பென்ட் பண்ணதில்லை டார்லிங்… என் கூட இருந்ததையே பெரிய விஷயமா நினைச்சு தான் வந்திருக்காங்க… நான் அவங்களுக்காக டைம் ஒதுக்குவேனான்னு காத்துட்டு இருந்திருக்காங்க… தெரியுமா?!’

முன்னர் அவன் கூறிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவளது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது!

தானும் அந்த லிஸ்ட்டில் இணைய போகிறேனா?

அவன் மேல் கரை காண முடியாத அளவுக்கு காதல் இருக்கிறதுதான். அதை அந்த கார் சம்பவத்தின் போது செயல்முறை விளக்கமாக தானே உணர்ந்தும் ஆயிற்று. ஆனால் இது போன்ற வார்த்தைகள் எப்போதுமே தன்னை வஞ்சிக்குமா என்ன?

சற்று பயமாக கூட இருந்தது மகாவுக்கு!

அவனை தன்னால் காயப்படுத்த முடியாது. அப்படி காயப்படுத்த முயன்றால் காயப்படுவது தானாகத்தான் இருக்க முடியும்.

அவளது யோசனையை பார்த்தவன், அவளது கையை பிடித்து பார்சலை கொடுத்துவிட்டு,

“உனக்கு ஓகே ன்னா வெச்சுக்க… இல்லைன்னா குப்பைல தூக்கி போட்டுடு… ஆனா திரும்ப வாங்கிக்க மாட்டேன்…” என்றவன், அவளிடம் மேற்கொண்டு எதையும் பேசாமல் ஒரு பெரிய துண்டை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டு கீழே போயிருந்தான்.

****

சுற்றிலும் நெருங்கிய சொந்தபந்தம் மட்டும். விழா தாறுமாறாக களைக்கட்டியிருந்தது. வீட்டிற்கு அளவாகத்தான் அழைத்திருந்தார்கள். அதுவே முழுவதுமாக நிறைந்து விட்டது. இதில் இரண்டு மூன்று நிருபர்கள் வேறு விஷயம் கசிந்து படையெடுக்க முயல, ஷ்யாமுடைய பவுன்சர்கள் அவர்களை உள்ளேயே விட வில்லை.

இருவர் பக்கமும் இருந்த கசின்ஸ் இருவரையுமே கலாய்த்து கிண்டலடித்து இன்னமும் ஓயாமல் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

நடு கூடத்தில் இரு புறமும் விளக்கு ஏற்றி வைத்து, நிறைநாழி வைத்து, பூஜை செய்து, அலங்கார சீர் தட்டுக்களை அடுக்கி வைத்திருந்தனர் ஜோதி பக்கத்தினர்.

சம்பந்திமார்கள் எதிர் எதிராக அமர்ந்திருக்க, அவர்களுக்கு பின் மற்றவர்கள் சுற்றி அமர்ந்து இருந்தனர்.

இலக்கின பத்திரிக்கையை எழுத, அவர்களது சமுதாயத்தின் பெரியவர் ஒருவர் தயாராக அமர்ந்திருந்தார்.

கையில் சந்தனத்தை அள்ளிய நாதன், முருகானந்தத்தின் நெற்றியில் பூசினார். அதே போல முருகானந்தமும் சிரித்துக் கொண்டே செய்ய,

“யோவ்… நம்ம நெத்திக்கு ஏத்த மாதிரி பூசுய்யா…” என்று சம்பந்தியாகிவிட்ட நண்பனை கலாய்த்தார்.

“மச்சான்… நம்ம நெத்திக்கு பூசனும்னா நாலு மரத்தை அழிக்கனும்ல…” என்று பதிலுக்கு கிண்டலாக கூற, சுற்றியிருந்தவர்கள் கொல்லென்று சிரித்தனர்.

இருவரும் சிரித்துக் கொண்டே வம்பிழுத்துக் கொண்டே முறைகளை செய்து முடித்தனர்.

“ஸ்ரீமான் ஷ்யாமள பிரசாத்… சௌபாக்கியவதி மகாவேங்கடலக்ஷ்மி இருவருக்குமான விவாக லக்ன பத்திரிக்கை….” என்று ஆரம்பித்து லக்ன பத்திரிக்கையை வாசித்து முடித்தார் அந்த பெரியவர்.

ஷ்யாமுக்கும் சரி, மகாவுக்குமே சரி, மகிழ்ச்சியில் முகம் விகசித்தது.

“அண்ணா… பொண்ணுக்கு ஆடத் தெரியுமா? பாடத் தெரியுமா?” என்று அவனது தம்பி முறையில் இருந்தவர்கள் மகாவை வம்பிழுக்க,

“அடடா… அதெல்லாம் தெரியாமையே இந்த பப்ளிமாசை ஓகே பண்ணிட்டேன்டா…” என்று வேண்டுமென்றே அத்தனை கசின்சையும் வைத்துக் கொண்டு மகாவை வம்பிழுத்தான் ஷ்யாம்.

“அப்படியா? மஹா… ஷ்யாமுக்கு உன்னை பிடிக்கலையாம்… நான் வேற நல்ல பையனா பார்க்கறேன்…” என்று கார்த்திக் அவன் பங்குக்கு கலாய்த்தான்.

“ஓஓஓஹோஓஓ…” என்று சுற்றியிருந்த இளவட்டம் கத்தியது.

மகா அனைத்தையும் ரசித்தபடி, அலங்கார பூஷிதையாக நடுக்கூடத்தில் அமர வைக்கப்பட்டு இருந்தாள்.

அரக்கு நிற பட்டு சேலை. இடையை தழுவிய ஒட்டியாணம், வெகு நேர்த்தியான நகைகள்… அழகான பின்னலில் வழிந்த மல்லிகை… அளவான மேக் அப்… சுருக்கமாக வானத்து தேவதையாக, அம்மன் சிலையாக பிருந்தாவோடு வந்து அமர்ந்தவளை வைத்த கண்ணை எடுக்காமல் பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“கொஞ்சம் இந்த பக்கமும் பார்க்கலாம் மாமா…” என்று ஒரு ஆர்வக்கோளாறு கிண்டல் செய்ய,

“மேக்னெட் அந்த பக்கமாவே இழுக்குது மாப்ள…” என்று அவர்களாகவே கிண்டல் செய்து கொள்ள, இவன் வெகுவாக சிரிப்பை அடக்கியபடி அமர்ந்திருந்தான்.

கலாட்டாவாக போய்க்கொண்டிருக்க, மகாவுக்கு மோதிரம் அணிவிப்பதற்காக அத்தனை பேரின் கலாட்டாவுக்கு இடையில் எழுந்தான் ஷ்யாம்.

அவனுக்காக காதலுடன் தலைகுனிந்து காத்துக் கொண்டிருந்தவளின் முன்பு நின்றவன், அவளது மென்மையான விரல்களை பற்றினான்.

நடுங்கியது அவளுக்கு. ஷ்யாமுக்கும் உள்ளுக்குள் பதட்டமிருந்தாலும், மகாவோடு இணையும் அந்த நாளை எண்ணி ஆர்வத்தோடு காத்திருந்தான்.

அன்று கொடுத்த செல்பேசியை அவள் அன்று தான் உபயோகிக்கத் துவங்கியிருந்தாள். அதுவரை அவளை அவன் அழைக்கவே இல்லை. அவளாக செல்பேசியை ஏற்றுக் கொண்டு அவனுக்கு அழைக்கட்டும் என்ற நல்ல எண்ணம் தான்.

அன்று காலை வரைக்குமே ஒரு மாதிரியாக கனமாகத்தான் இருந்தது அவனுக்கு. செல்பேசியை உபயோகிக்க மாட்டாளா என்ற தவிப்பு இருந்தது உண்மை.

காலை அவளது மெசேஜ் வரும் வரை மட்டுமே!

அவளது வாட்ஸ் அப் செய்தியை பார்த்தவுடன் மனம் இறக்கைக் கட்டி பறந்தது.

அதிலும் அவனது பரிசை பிரித்து புகைப்படம் எடுத்து, அதிலும் தன்னோடு செல்பி எடுத்து அதை அவள் அனுப்பி வைத்திருந்தாள்.

“சோ கியூட் டார்லிங்…” என்று தன்னையும் அறியாமல் அவனது வாய் முனுமுனுத்தது.

இப்போது அதே சந்தோஷத்தோடு அவளுக்கு வைர மோதிரம் அணிவிக்க, அவளது முகம் விகசித்தது, மகிழ்ச்சியில்!

கார்த்திக் அவளிடம் இன்னொரு மோதிரத்தைக் கொடுத்து, ஷ்யாமுக்கு அணிவிக்கும் படி கூற, அவள் நடுங்கும் கரங்களால் அவனது கரத்தை பற்றப் போக, அவளிடம் தன் கரத்தை கொடுக்காமல் போக்கு காட்டினான், சிரித்தபடி!

இங்கும் அங்குமாக போக்கு காட்டியவன், ஒரு வழியாக கொடுக்க, வெட்கப் புன்னகையோடு அவனுக்கு மோதிரத்தை அணிவித்து விட்டாள் மஹா.

கையில் அவன் வாங்கித் தந்த ஐபோனுடன் கண்களில் காதலும் கனவுமாக இரவு படுக்கையில் சாய்ந்தவளை அழைத்தது மெசேஜ் டோன்.

“வான்ட் டூ மீட்… ப்ளீஸ் வெய்ட் அட் காஃபி டே…” என்ற மெசேஜை யார் அனுப்பியது என்று பார்த்தாள். எதுவோ தெரியாத எண்.

அலட்சியமாக தவிர்த்தாள்!

ஷ்யாமுக்கு இருப்பது இரண்டு எண்கள் மட்டுமே… அதிலிருந்து வரவில்லை. யார் என்று தெரியாமல் ஊக்குவிக்கக் கூடாது என்பதால் அதை கண்டுக்கொள்ளவில்லை.

“ப்ளீஸ் டோன்ட் அவாய்ட்… வெரி அர்ஜன்ட்…” என்றது அடுத்த மெசேஜ்…

உதட்டை பிதுக்கினாள் மஹா!

இப்போது அந்த எண்ணிலிருந்து கால் வந்தது.

வெகு தயக்கமாக பார்த்தாள் மஹா.

இதென்ன சங்கடம் என்று யோசித்தாள். யாராக இருக்கக் கூடும் என்று தெரியவில்லை. தெரியாமல் எடுக்கவும் விரும்பவில்லை.

அடித்து ஓய்ந்தது!

“ப்ளீஸ் பிக் அப் தி கால்….” அடுத்த மெசேஜ்.

முடியாது என்று முடிவு செய்து கொண்டாள்.

திரும்ப அழைத்து ஓய்ந்தது அந்த எண்!

இவள் எடுக்கவே இல்லை.

அடுத்து விடாமல் பத்து முறை அழைத்து ஓய்ந்தது. மகாவுக்கு உள்ளுக்குள் பயம் பீடித்துக் கொண்டது. யாரோ கலாட்டா செய்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது. ஒருவேளை ஷ்யாமே செய்வானோ விளையாட்டுக்கு… இவளை பயமுறுத்தவென?

வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததற்கான நோட்டிபிகேஷன்!

திறந்து பார்த்தாள்.

அந்த எண்ணிலிருந்து ஒரு புகைப்படம் வந்திருந்தது!

புகைப்படத்தை கைகள் நடுங்க டவுன்லோடு செய்தாள்.

கால்களுக்கு கீழே இருந்த பூமி நழுவத் துவங்கியது…

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் நாற்பத்து ஒன்று

படத்தை பார்க்கும் போது இதயம் தாங்க முடியாத வலியில் துடித்தது. வேதனையும் அவமானமுமாக உணர்ந்தாள். அது அத்தனை நெருக்கமான புகைப்படம். சௌஜன்யா போதையில் கண் சொருக அரைகுறை ஆடைகளோடு இருக்க, அவளை முத்தமிட்டு கொண்டிருந்தான் ஷ்யாம்.எவரெஸ்ட் சிகரத்திலிருந்து கீழே யாரோ தள்ளி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்