அத்தியாயம் முப்பத்து ஐந்து
குழம்பிய மனநிலையில் அமர்ந்திருந்தான் கார்த்திக். அன்று கடைக்கும் செல்லவில்லை. காலையிலிருந்து ஷ்யாமுடன் இருந்ததில் உள்ளுக்குள் பதற்றமாக இருந்தது. மதிய உணவு அவனுடன் தான் கழிந்தது. மற்றவர்களிடம் காட்டும் முகத்தைத் தன்னிடம் காட்டவில்லை என்பதை உணர்ந்து தான் இருந்தான். தான் எவ்வளவு கீழாக அவனைப் பேசினாலும் அவன் சற்றும் கவலைப் படாமல் ஒவ்வொன்றுக்கும் தன்னை கூடவே இருத்திக் கொள்கிறான் என்பதை நினைத்து மகிழ்வதா, பயப்படுவதா? அதை காட்டிலும் அவன் கொடுத்த ‘ஷாக்’கை எந்த வகையில் சேர்ப்பது? அவன் சற்றும் எதிர்பாராதது ஆயிற்றே!
இத்தனை வருடமாக கூடவே இருந்த விஜிக்கே இந்த கதி என்றால்… மற்றவர்களை நினைத்தும் பார்க்க முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டான்.
அதிலும், கையெழுத்துக்காக அவனை மிரட்டி உருட்டியதை நினைத்தால் பகீரென்றது. கடைசியில் வேறு வழியில்லாமல் விஜியும் கையெழுத்திட்ட அந்த நேரத்தை நினைத்தால் இப்போதும் கார்த்திக்கு நடுங்கியது.
ஷ்யாம் மெளனமாக அமர்ந்து அவனை பார்வையிட்டுக் கொண்டுதான் இருந்தான், காக்டெயிலை பருகிக் கொண்டே!
அத்தனை கொடூரம் விஜியின் பார்வையில். உன்னை விட்டு விட மாட்டேன் பார் என்றது அந்த பார்வை!
விஷ்ணுவையும் இளங்கவியையும் அழைத்த ஷ்யாம், “இந்த நிலைமைல விஜி டிரைவ் பண்ண வேண்டாம்… நீங்க ரெண்டு பேரும் கூட போங்கடா… வீட்ல விட்டுட்டு வாங்க…” எனவும், அவனை முறைத்தான் விஜி.
“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு…” என்று நிறுத்தியவன், “வேண்டாம் பாஸ்… நான் எதுவும் பேச விரும்பலை… இதுக்காக வாழ்நாள் முழுக்க வருத்தப்பட போறீங்க…” என முடித்துவிட்டு போக, அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன், கார்த்திக்கை நோக்கி தன் பார்வையை திருப்பினான்.
அதுவரை கார்த்திக் பேஸ்தடித்தது போல அமர்ந்திருந்தான்.
“என்ன கார்த்திக் மச்சான்? ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று சிரிக்க, ‘மச்சானா? இந்த முறைக்கு எல்லாம் குறைச்சலில்லை’ என்று நினைத்துக் கொண்டான்.
“இல்லைங்க… ஒன்னும் இல்லை…” நழுவலாக பதில் கூற,
“அதெல்லாம் கண்டுக்காதீங்க… வேற வழி இல்ல… இப்படிதான் இருந்தாகணும்… ஒன்னும் தெரியாத மாதிரி இருந்தா தலைல மொளகாய் அரைச்சுட்டு போய்டுவாங்க…” வெகு இயல்பாக கூறியவனை விழி விரித்துப் பார்த்தான் கார்த்திக்.
“ஆனா விஜியை ரொம்ப நம்பினேன்… யார் மேல ரொம்ப நம்பிக்கை வைக்கிறமோ அவங்க தான் அத்தனை துரோகத்தையும் பண்ணிட்டு போயிடறாங்க…” என்றவனின் குரலில் அத்தனை வலி.
“ஆமா… நானும் லட்டுவ ரொம்ப நம்பினேன்… ஆனா யாரோ ஒருத்தனுக்காக சப்போர்ட் பண்றா… என்னை டீல்ல விட்டுட்டா…”
“உங்க லட்டு உங்களை சப்போர்ட் பண்ணலைன்னா உங்க மேல பாசம் இல்லைன்னு ஆகிடுமா கார்த்திக்? தப்புன்னா அதை தப்புன்னு மட்டும் தான் அந்த லட்டுக்கு சொல்ல தெரியும்… சரின்னு சொல்லவே சொல்லாது… அது நீங்களா இருந்தாலும் சரி, அந்த யாரோ ஒருத்தனா இருந்தாலும் சரி…” என்று புன்னகை மாறாமல் கூறியவனை இன்னமுமே ஆச்சரியமாக பார்த்தான் கார்த்திக்.
எத்தனை நம்பிக்கை… இந்த நம்பிக்கை தான் கார்த்திக்கை அரட்டியது!
பதில் ஏதும் பேசாமல் ஷ்யாமை பார்த்தவனை, “ஒரு முக்கியமான விஷயம் கார்த்திக்…” என்று அவன் அழைப்பதற்கும், ஷ்யாமின் செல்பேசி சிணுங்கவும் சரியாக இருக்க, பேசியை எடுத்தவன், கார்த்திக்கிடம் திரும்பி,
“உங்க ஆள் நம்பர்ல இருந்து உங்க பாசமலர் லட்டு தான் கால் பண்றா…” என்று புன்னகைக்கவும் கார்த்திக்கு புரை ஏறியது. ‘தன்னுடைய ஆளா? பிருந்தாவா? அது இவனுக்கு எப்படி தெரியும்?’
“சொல்லுடா…” என்று ஆரம்பித்தவனை,
“அண்ணா உன் கூட த்தான் இருக்கானா?” என்று அவள் கேட்க,
“ம்ம்ம் ஆமா…” என்றவன், “உன் அம்மா சொன்னாங்களா?” என்று கேட்க,
“ம்ம்ம் ஆமா… போன் பண்ணேன்… அண்ணாவை நீ கூப்பிட்டதா சொன்னாங்க… ஏன்டா? என்ன விஷயம்?” என்று கேட்க,
“நத்திங்… சும்மா லஞ்சுக்கு கூப்ட்டு இருந்தேன்…” என்றவன், “ஏன் கார்த்திகிட்ட பேசணுமா?” என்று கேட்க,
“இல்ல… பரவால்ல… ஈவினிங் பார்த்துக்கறேன்…” என்றவள், சற்று இடைவெளி விட்டு, “எதுவும் பிரச்சனையா ஷ்யாம்?” என்று கேட்க, அதை கேட்டு மெலிதாக சிரித்தவன்,
“அதெல்லாம் ஒன்னும் இல்ல…” என்று கூறியவன், “உன் அண்ணனுக்கு அவன் ஆள் கூட என்னவோ பேசணுமாம்… கொஞ்சம் கொடேன்…” என்று கார்த்திக்கை மாட்டிவிட, மஹா சிரித்தாள். கார்த்திக்கு தான் திக்கென்று இருந்தது.
“டேய்… எனக்கு காது குத்திட்டாங்கடா…” என்றவள், சற்று கிசுகிசுப்பாக, “ரெண்டும் இன்னும் சமாதானமாகல… மூஞ்சை தூக்கி வெச்சுட்டு அலையுதுங்க…” என்று கூற,
“இங்க இருக்க விக்கெட் ரொம்ப வீக்கா இருக்கே… அது கூடவா இந்த சீனை காட்டுது?” என்று கேட்க,
“ஓய்ய்யி… உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா என் அண்ணனை வீக் விக்கேட்டுன்னு சொல்வ…” என்று கேட்டவளின் தொனியில் சிரித்தவன்,
“பின்ன… யாரோ என்னவோ சொன்னாங்கன்னு அப்படியே நம்பறான்? அவனுக்கா யோசிக்க தெரியாது? மண்டைல க்ரே மேட்டர்ன்னு ஒன்னு இருக்குமே… அதை யூஸ் பண்ணவே மாட்டானாடி உன் அண்ணன்? அதான் இன்னைக்கு முழுசா இங்கயே இருன்னு இருக்க வெச்சுட்டேன்… ஒரு ரெண்டு வருஷம் கூட இருந்தா பிக் அப் பண்ணிடுவான்…” கார்த்திக்கை பார்த்துக் கொண்டே தான் பேசினான் ஷ்யாம். தன்னை வைத்துக் கொண்டே தன்னை இப்படி பேச தனி தைரியம் வேண்டும் தான் என்று எண்ணிக் கொண்டான் கார்த்திக்.
நேரடியாக கார்த்திக்கை திட்ட முடியாது. இப்படிதான் ஆராயாமல் நம்புவாயா என்று கேட்க முடியாது. என்ன இருந்தாலும் மச்சானாக போகிறவனாயிற்றே! மஹா ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ள மறுத்தாலும் அவள் தனக்குத்தான் என்பதில் சந்தேகமே இல்லாத உறுதி அவனுக்கு.
“தெய்வமே… அவன் ஜ்வல்லரியை டெவலப் பண்ணட்டும்… இந்த கர்மம் எல்லாம் வேண்டவே வேண்டாம்… போதும் சாமி… நீயே கட்டிட்டு அழு…” எனவும்,
“ஏன்டா? என்னாச்சு?” எனவும்,
“இல்ல ஷ்யாம்… நமக்கெல்லாம் இது ஒத்து வராது… வேண்டாம்…”
“என்ன ஒத்து வராது? நான் தான் சொல்லிருக்கேன்ல… கார்த்திக் என்னோட பொறுப்பு மஹா…” எனவும், கார்த்திக் சற்று வியந்து பார்த்தான். இப்படியெல்லாம் ஷ்யாம் கூறுவதை அவனால் நம்ப முடியவில்லை.
“பார்க்கலாம் ஷ்யாம்…” என்றவள், “சரிடா ப்ரேக் முடியப் போகுது…” என்று வைக்க முயல,
“ஏய் லூசு ஒன் மினிட்” என்றவன், “இன்னைக்கு ஈவினிங் ஃப்ரீயா?” என்று கேட்க,
“ஏன்டா ?” என்று கேட்க,
“அவார்ட் பங்க்ஷனுக்கு இன்வைட் வந்திருக்கா?” என்று ஒரு விருது வழங்கும் விழாவை குறிப்பிட்டு இவன் கேட்க,
“ம்ம்ம் ஆமா கார்த்திக் சொல்லிட்டு இருந்தான்…” எனவும்,
“பங்க்ஷனுக்கு வர்றியா?” என்று கேட்க,
“அதெல்லாம் அம்மா விட மாட்டாங்க… இதுக்கெல்லாம் தடா தான்…” என்று சிரிக்க,
“பரவால்ல… சொல்லிட்டு இன்னைக்கு ஈவினிங் வா… அப்படியே அம்மா பர்த்டேக்கு கிஃப்ட் வாங்கனும்ன்னு சொல்லியிருந்தன்ல… அதையும் முடிச்சுடலாம்…” என்று அழைத்தாலும், அவனது குரலில் ஏதோ வேறுபாடு இருப்பதை கண்டுகொண்டாள்.
“ஏன் ஷ்யாம்? வாயிஸ் வேற ஒரு மாதிரியா இருக்கு? டிஸ்டர்ப்ட்டா இருக்கியா?” என்று சற்று இறங்கிய குரலில் கேட்க,
“ம்ம்ம்…” என்றான்.
“என்னடா?”
“ஈவினிங் வா… நேர்ல பேசலாம்…” எனவும்,
“யோசிக்கறேன் பாஸ்…” என்றவள், “ஓகே டா… பை…” என்றபடி வைத்து விட, கார்த்திக்கை புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.
சற்று நேரத்திற்கு முன் ஒருவனை அடித்து கட்டபஞ்சாயத்து செய்து, அடாவடியாக கையெழுத்து வாங்கிய ஷ்யாமா இவன்? வெளியே அத்தனை பேரிடமும் ஒரு முகம்… தங்கையிடம் மட்டும் வேறு முகம்!
விஜியை அடித்து கையெழுத்திட வைத்ததும் இல்லாமல், அப்போதே அதை ரெஜிஸ்டராரை வைத்து பதிவும் செய்தவனை மெளனமாக பார்வையிட்டு கொண்டிருந்த கார்த்திக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.
அந்த பதிவாளர் வெளி வராண்டாவில் காத்துக் கொண்டிருந்தார்.
“ஒரு நிமிஷம் கார்த்திக்…” என்றபடி, இளங்கவி வைத்திருந்த டாக்குமெண்ட்சை ஒருமுகமாக கவனத்தை குவித்து முழுவதுமாக பார்வையிட்டான்.
ஒவ்வொரு வரியையும் அவன் ஆழ்ந்து படிப்பதை உணர முடிந்தது.
“ஓகே கவி…” என்று அதில் கையெழுத்திட்டவன், “கார்த்தியோடது ரெடியா?” என்று கேட்க, “ரெடி பாஸ்…” என்று டாக்குமென்ட்டை நீட்டியவனை பார்த்து புன்னகைத்தவன், கார்த்தியை, “வாங்க கார்த்திக் மச்சான்…” என்றழைக்க, இவனுக்கு திடுக்கிட்டது.
இவன் எதற்காக தன்னை அழைக்கிறான் என்ற அதிர்வு!
இவனுக்கும் தனக்கும் கணக்கெல்லாம் முடிந்து விட்டதே… இனியும் என்ன என்ற கேள்வி மருட்டியது!
“ஆக்சுவலா இதை அப்புறமா செஞ்சுக்கலாம்ன்னு தான் விட்டு வெச்சுருந்தேன்… ஆனா இந்த ரெய்ட்ல ட்வென்டி சி சிக்கிருக்கு… அதுக்கு கணக்கை காட்டியேயாகனும்… வேற வழி இல்ல…” என்றவனை, என்னவென்று பார்த்தான் கார்த்திக்.
“அதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?”
“ம்ம்ம்…” என்று நெற்றியை சுரண்டியவன், “அது உங்க கிட்ட இருந்து வந்தது… அதை ஆல்ரெடி கணக்குல கொண்டு வந்தாச்சு…” என்று கூற,
“தென் வாட்?” என்று கார்த்திக் கேட்க, ஷ்யாமுக்கு தயக்கமாக இருந்தது. அதுவரை மகாவிடம் கூட இதை சொல்லவில்லை. தான் செய்ததற்கு அவளிடம் செய்தியை கூட தெரிவிக்கவில்லை. இதற்கு அவள் எப்படி எதிர்வினையாற்றுவாள் என்பதை அவனால் கணிக்க முடியவில்லை.
“இங்க இருந்து உங்களுக்கு போனதுக்கு கணக்கு கொண்டு வரலை… காலேஜ் லேண்ட் பர்சேஸ்காகன்னு அந்த ட்வென்டி சி யை யூஸ் பண்ணதா சொல்லியாச்சு… அதுக்கு நாம டாக்குமெண்ட்ஸ் சப்மிட் பண்ணியாகணும்…” எனவும்,
“எதை சொல்றீங்க ஷ்யாம்?”
“தியேட்டரை பர்சேஸ் பண்றதுக்காக உங்களுக்கு கொடுத்த ட்வென்டி சி யை சொல்றேன் கார்த்திக்…” என்று இயல்பாக கூற, கார்த்திக் அதிர்ந்தான்.
“என்ன சொல்றீங்க?” அவனுக்கு அது மிகவும் புதிய தகவல்… மிகவும் அதிர்ச்சியும் கூட… அடிப்படையே ஆட்டம் கண்டது அவனுக்கு!
“அப்புறமா பேசிக்கலாம்… இப்ப வேலைய முடிச்சு இவரை அனுப்பி விடலாம்…” என்று பதிவாளரை காட்டி கூறவும் கையை காட்டி அவனை நிறுத்தினான்.
“என்ன சொல்றீங்க? முழுசா சொல்லிட்டு போங்க…” என்று அழுத்தமாக கேட்டான் கார்த்திக். அவனுக்கு இப்போது தெரிந்து கொண்டாக வேண்டும். இவன் தான் தியேட்டரை வாங்கியது என்றால் எதற்காக மகாவை கஸ்டடி எடுக்க வேண்டும்? அதிலும் தியேட்டரை வாங்கினானே தவிர, இன்னமும் ரெஜிஸ்டர் கூட செய்யவில்லையே. எந்த நம்பிக்கையில் இருபது கோடியை கொடுத்தான்?
ஒன்றா இரண்டா? அதிலும் சிறிய தொகையா என்ன?
இருபது கோடியை அசால்ட்டாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன காரணம்?
அதிலும் அந்த பணத்திற்காக தான் மஹாவை கஸ்டடி எடுத்தான் அல்லவா!
எதற்காக கஸ்டடி எடுத்தான்? எதற்காக இவனே பணத்தையும் கொடுத்தான்?
“அப்புறமா பேசிக்கலாம் கார்த்திக்…” என்று அங்கிருந்து நழுவப் பார்த்தான் ஷ்யாம்.
“இல்ல சொல்லுங்க… நீங்க தான் வாங்கினீங்களா?”
உதட்டை குவித்து ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், கைகளை கட்டிக் கொண்டு,
“ம்ம்ம்… ஆமா…” என்று கூற,
“ஏன்?”
“ஏன்னா? நான் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் கார்த்திக்? நீங்க வித்தீங்க… நான் வாங்கினேன்… அவ்வளவுதான்…” என்று இயல்பு போல முடித்து விட்டு போக,
“அது எப்படி அவ்வளவு ஈசியா சொல்றீங்க ஷ்யாம்? அப்ப அப்படி ஒன்னும் நீங்க ஈசியா இருக்கல… எப்படி இது நடந்ததுன்னு தான் கேட்டேன்…”
“ஏன்னா?! ம்ம்ம்ம்….” என்று நெற்றியை சுரண்டியவன், “உங்க தங்கச்சியை வெச்சு சமாளிக்க முடியல… எனக்கு பைத்தியம் பிடிச்சுடும் போல… நாம தான் பணம் கொடுத்தா தான் விடுவோம்ன்னு கெத்தா வேற சொல்லிட்டோமா?! வேற வழியில்லாம நானே கொடுத்து, நானே அந்த பிசாசை அனுப்பி வெச்சுட்டேன்…” என்று சிரிக்காமல் கூறிக் கொண்டு வந்தவன், கடைசியில் அடக்க முடியாமல் சிரித்து விட,
ஆனால் கார்த்தியால் சிரிக்க முடியவில்லை, “இதை நான் நம்ப மாட்டேன்… அதோட அப்படிப்பட்ட ஆளும் கிடையாது நீங்க… ஒரு ரூபாயா இருந்தாலும் அதை கணக்கா வசூல் பண்ணிடுவீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்… நீங்க இருபது கோடியை சும்மா தூக்கி கொடுத்தீங்கன்னு சொன்னா நான் நம்பனுமா?”
“சும்மா எங்க கொடுத்தேன்? தியேட்டரை வாங்கிட்டு தானே கொடுத்தேன்?”
“இன்னும் நீங்க வாங்கவே இல்ல… நான் பணமே வாங்கலைன்னு சொன்னா கூட நீங்க லீகலா ஒன்னும் பண்ண முடியாதுன்னு உங்களுக்குமே தெரியும்…”
“ம்ம்ம்ம்… எஸ்… ஐ நோ…” என்று மெலிதாக சிரிக்க,
“அப்புறம் எதுக்கு இந்த டிராமா ஷ்யாம்? நான் பார்த்த வரையில எங்கயோ இடிக்குது…”
“எங்கயும் இடிக்கல கார்த்திக் மச்சான்… அதுபாட்டுக்கு தான் இருக்கு…” என்றவன், “இந்த பேச்சை விடுங்க… வேலைய முடிக்கணும்… அதோட தியேட்டரை நான் தான் வாங்கினேன்னு உங்க கூட பொறந்தது கிட்ட நீங்க சொல்லாம இருந்தா போதும்… எங்கண்ணனை ஏமாத்திட்டியான்னு என்னை போட்டு உலுக்கிடும்…”
“நீங்க ஒன்னும் ஏமாத்தின மாதிரி தெரியல… அர்ஜன்ட்டுக்கு நான் சேல்ஸ் பண்ணேன்… ஆக்சுவலா அந்த ப்ராபர்ட்டிக்கு டுவென்டி அதிகம்… பேரம் பேசியிருந்தா நான் குறைச்சு இருப்பேன்… ஆனா அப்படியே கொடுத்து வாங்கினது நிஜமா இடிக்குது…” கார்த்திக் உண்மையை தான் கூறினான். அதிலும் உணர்ந்து தான் கூறினான்.
“இருக்கட்டும்… ஒன்னும் ப்ராப்ளம் இல்ல…” என்று அந்த விஷயத்தை முடிக்க பார்த்தாலும் கார்த்திக் விடுவது போல இல்லை.
“நீங்க முதல்ல சொல்லுங்க…” என்று அவன் பிடிவாதமாக நின்று விட,
“ஆக்சுவலா மஹாவை கொஞ்சம் பயமுறுத்தத்தான் கஸ்டடி எடுத்தேன்… உங்க பண விஷயம் எனக்கு செக்கன்றி தான்…” எனவும், அதிர்ந்து பார்த்தான் கார்த்திக். இது புதிது அல்லவா!
“வாட்….”
“ம்ம்ம்… யாரும் உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத மாதிரியும் செஞ்சு பார்த்தேன்… ஆனா மசிவேனான்னு இருந்தா…” எனவும், கார்த்திக் பல்லைக் கடித்தான். தன் தங்கை மசியவில்லை என்று தன்னிடமே கூறுகிறானே என்ற கோபம்.
“என்ன சொல்றீங்க?” என்றவனின் குரலில் சூடு தெறித்தது.
“எனக்கு மகாவோட வாய்ஸ் ரொம்ப பிடிக்கும் கார்த்திக்… மெஸ்மரைசிங் வாய்ஸ்… ஒரே ஒரு பாட்டு பாடுன்னு தான் கேட்டேன்… இன்னமும் போக்கு காட்டிட்டு இருக்கா…” என்று வெகு தீவிரமான குரலில் கூற, அதுவரை முறைத்துக் கொண்டிருந்த கார்த்திக், சட்டென சிரித்து விட்டான்.
“அடப்பாவி… போயும் போயும் ஒரு பாட்டுக்கு இருபது கோடியா? உங்களுக்கே ஓவரா தெரியலையா?” என்றவன், “லட்டு பாடும்ன்னு தெரியும்… ஆனா அதோட வாய்ஸ் இவ்வளவு வொர்தா என்ன?” என்று விளையாட்டாகக் கேட்க, ஷ்யாம் சிரித்தான்.
“வெறும் பாட்டுன்னு இல்ல… கொஞ்சம் சண்டை… உங்க தங்கச்சிக்கு வாய் கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ்… நம்ம ஈகோவ ரொம்ப ஹர்ட் பண்ணிட்டா… எவ்வளவுதான் ஹர்ட் பண்ணாலும் நான் பண்ணினதும் கொஞ்சம் அதிகம்… கஸ்டடி அளவுக்கெல்லாம் போயிருக்க கூடாது… ஒன்ஸ் வேற மாதிரி போகுதுன்னு தெரிஞ்சவுடனே மகாவை அப்புறமும் வெச்சுருக்க மனசில்ல… அதான்… நானே கொடுத்து நானே வாங்கிட்டு போயிட்டு வா தாயேன்னு சொல்லிட்டேன்…”
“உங்க அப்பால்லாம் கூடத் திட்டினாங்களே… அப்பவாவது சொல்லி இருக்கலாமே ஷ்யாம்? நான் தான் டுவென்டி சி கொடுத்தேன்னு…”
“நான் மொக்கை வாங்கினதை தண்டோரா போட்டுச் சொல்லனுமா? அப்படி வேற ஆசையா?” என்றவன், சிரித்து விட்டு, “ஆனாலும் ஷீ இஸ் வெரி ப்ரீஷ்யஸ் டூ மீ… அவளோட குணத்துக்கு இருபது கோடி என்ன? இன்னும் எவ்வளவு வேண்ணாலும் கொடுக்கலாம்… ஏன்? மொத்தத்தையும் தூக்கி கொடுத்தாலும் தப்பில்ல…” என்றவனின் கண்களில் அவ்வளவு காதல்! அனைத்தையும் தூக்கிக் கொடுத்து விடுவான் என்று கட்டியம் கூறியது அவனது பார்வை. திடுக்கிட்டது கார்த்திக்கின் மனம்! ஏற்பதா வேண்டாமா என்று ஊஞ்சலாடியது.
“இப்பவும் இந்த தியேட்டரை இப்ப ரெஜிஸ்டர் பண்ற ஐடியா இல்ல… கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணும்போது பார்த்துக்கலாம்ன்னு தான் நினைச்சேன்… ஆனா ஐடி ரெய்ட்… கணக்கை சப்மிட் பண்ணனும்… அந்தப் பணத்தை ரிலீஸ் பண்ணனும்… அதான் பண்ணிடலாம்ன்னு உங்களை வரச் சொன்னேன்…” என்று முடிக்கவும், யோசனையாக அவனைப் பார்த்தான்.
அவனாக இன்னமும் காதலை வெளிப்படையாகச் சொல்லவில்லை. தங்கையும் சொல்லவில்லை. அவளுக்கு இவன் காதல் தெரியுமா என்பது தெரியவில்லை. ஆனால் ஷ்யாம் காதல் வயப்பட்டு இருக்கிறான் என்பதை அவனது பார்வை சொன்னது. மகாவை பற்றிப் பேசும் போது அவனது கண்கள் கனவில் மிதந்தது.
காதல் வயப்பட்டிருந்த கார்த்திக் இதைப் புரிந்து கொண்டான்.
ஆனால் அதை ஒப்புக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பது தான் புரியவில்லை.
ஷ்யாம் காதல் வயப்படலாம். ஆனால் அவனது முன்கதை சுருக்கமெல்லாம் தெரிந்த தான் எப்படி இதை ஒப்புக்கொள்ள முடியும்? தான் பிருந்தாவுக்கு உண்மையாக இருப்பதை போல, தங்கைக்கும் உண்மையான ஒருவனை தானே தேடித் தர முடியும்? ஆனால் ஷ்யாமை பற்றி அறிந்தும் தான் ஒப்புக்கொள்ள முடியுமா?
‘அவனைப் பார்க்கனும்ன்னா நீ நடிகையா இருக்கணும்…’
‘ஒரு அழகான நடிகையா பார்த்து அனுப்பி விடு… கொஞ்சம் லூஸ்ல விடுவான்…’
ஷ்யாமை பற்றி அவனிடம் வந்து விழுந்த விமர்சனங்கள் இப்போதும் காதில் ஒலித்தது.
இதைத் தங்கையால் தாங்கிக் கொள்ள முடியுமா? நாளை இன்னொருத்தியை பிடித்திருக்கிறது என்று அவள் பின்னால் சென்று விடமாட்டானா இவன்?
இருக்கும் இடம் அப்படி!
மயக்கவென்றே முற்றுகையிடுபவர்கள் அதிகம்! எத்தகைய நிலைக்கும் ஒப்புக்கொள்ளும் பெண்களும் அதிகம், புகழுக்காக, பணத்துக்காக, சுகத்துக்காக என்று! சுற்றிலும் உப்பு நீரால் சூழப்பட்ட இடத்தில் நல்ல நீரை தேட முடியுமா?
“சாரி ஷ்யாம்… நான் தான் உங்களைப் புரிஞ்சுக்காம…” என்றவன், “ஆனாலும் மஹா கிட்ட ரொம்ப பழக வேண்டாம் ஷ்யாம்… உங்களை கண்ட்ரோல் பண்ண முடியாது தான்… ஜஸ்ட் எ ரிக்வஸ்ட்… அவளோட லைப்… எனக்கு ரொம்ப முக்கியம்…” மிகவும் தயவான குரலில் வேண்ட, அவனை பார்த்துச் சிரித்தான்.
“எனக்குப் பொண்ணுங்க கிட்ட ஒரே இன்டன்ஷன் தான்னு யார் உங்ககிட்ட சொன்னது கார்த்திக்?” சாதாரண குரலில் கேட்டவனை வெற்றுப் பார்வை பார்த்தான் கார்த்திக்.
“இல்ல ஷ்யாம்…” என்று தயங்க,
“எனக்கு எல்லா பழக்கமும் இருக்கு… ஐ அக்செப்ட்… ஆனா அத்தனையும் மகாவுக்கு தெரியும்… ஆனாலும் அவ என்னை நம்புவா… நான் உண்மையை மட்டும் தான் பேசுவேன்னு அவ நம்புவா கார்த்திக்… நான் அவ கிட்ட உண்மையா இருப்பேன்னு கண்டிப்பா நம்புவா… என் அம்மாவுக்கு அப்புறம் அந்தளவு என்னை நம்பற ஒரே ஆத்மா என்னோட மஹா மட்டும் தான்…” சீரிய குரலில் தீவிரமான மனோபாவத்தில் அவன் கூற, கார்த்திக் அவனது வார்த்தைகளில் அமிழ்ந்து போனாலும், அவனை இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அண்ணனாக!
“அவளுக்கு இன்னமும் வெளியுலக அனுபவம் இல்ல ஷ்யாம்…”
“அப்படி உங்க தங்கச்சியை குறைச்சு கணக்கு போட்டுடாதீங்க… ரொம்ப தெளிவு, தைரியம், துணிச்சல்… எல்லாமே உங்களைவிட அதிகம்…” என்று சிரித்துக் கொண்டே, அவனிடம் இளங்கவி நீட்டிய டாக்குமென்ட்களில் கவனத்தை செலுத்தினான்.
முழுவதுமாகப் பார்த்து விட்டு, கையெழுத்தை போட்டு, கார்த்திக்கிடம் நீட்ட, அவன் வாங்கி மேலோட்டமாக பார்த்துவிட்டுக் கையெழுத்திட முயன்றான்.
“முழுசா படிச்சு பாருங்க கார்த்திக் மச்சான்…” என்று அவனை ஊக்க,
“ம்ம்ம்… என்கிட்ட நீங்க என்ன மொத்த சொத்தையா எழுதி வாங்கிட போறீங்க? அப்படியே வாங்கினாலும் என்ன? அது தங்கச்சிக்கு தானே போகும்…” என்றவன், கையெழுத்திட, அவனது வார்த்தைகளைக் கேட்ட ஷ்யாமின் முகம் புன்னகையில் மிதந்தது.
“நீங்க கற்பூரம் மச்சான்…” என்று சிரிக்க,
“வேற வழி? விதி…” என்று சலிப்பாகக் கூறியவன், “உங்களை எந்தளவு நம்பறான்னு தான் நானும் பார்க்கிறேனே… அவ பிடிவாதம் பிடிச்சா அப்பா வேண்டாம்ன்னா சொல்லப் போறாங்க? இல்ல அம்மா வேண்டாம்ன்னு சொல்லப் போறாங்களா? நம்மளை மதிக்க ஆளிருக்கா என்ன?” என்று பெருமூச்சு விட,
“நான் இருக்கேன் உங்களுக்கு…” என்று ஷ்யாம் சிரிப்போடு கூற,
“ரொம்ப முக்கியம்…” என்று கடுப்பானவன், “ ஆனா எனக்கு மகாவோட கண்ல என்னைக்கும் கண்ணீரை பார்க்கக் கூடாது… அப்படி பார்த்தன்னா உங்களைக் கொலை செய்ய கூடத் தயங்க மாட்டேன்…” என்று முடித்துக் கொண்டு எழுந்து விட்டான்.
“என்னை அழ வைக்காம இருக்க சொல்லி அவளுக்கு அட்வைஸ் பண்ணுங்க மச்சான்…” என்று சிரிக்காமல் கூறியவனின் தொனியில் உண்மையிலேயே கார்த்திக் சிரித்து விட்டான்.
அதே சிரிப்போடு மதிய உணவையும் உண்டு முடித்துவிட்டு வர, இயக்குனர் மதியும், பிரானேஷும் வந்திருந்தனர்.
கார்த்திக்கின் தயாரித்துக் கொண்டிருக்கும் படத்தில் நாயகனாக நடிப்பவன் பிரானேஷ். அந்தப் படத்தை இயக்குபவர் மதி.
இருவரையும் ஆச்சரியமாகப் பார்த்தான் கார்த்திக்.
ஏகப்பட்ட பிரச்சனைகளைச் செய்து விட்டு மதி படத்தை விட்டு ஒதுங்கி இருந்தார். தயாரிப்புச் செலவுகளை இழுத்து விட்டதோடு, தேவையில்லாத காட்சிகள், சரியான இயக்கம் இல்லாதது என்பதற்கும் பொறுப்பில்லாத பதில். அதோடு ப்ரானேஷின் தொந்தரவு வேறு. கொடுத்த கால்ஷீட்டில் வேறு படத்தில் நடிக்கப் போக, கார்த்திக் பொறுமை இழந்து போய்த் தான் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டான்.
பணம் மொத்தமாக முடங்கிக் கிடக்கிறது தான். ஆனாலும் என்ன செய்வது?
மீண்டுமாக இன்னொரு பிரச்சனையில் சிக்க கார்த்திக் தயாராக இல்லை. அதுவும் இப்போதுதான் முருகானந்தமும் தேறி வந்திருக்கிறார் எனும்போது பிரச்சனைகளை இழுத்து விட்டுக் கொள்ள முடியாது.
கைக்கழுவி விட்டு, டவலால் கையைத் துடைத்தபடி வந்தவனிடம், அவசரமாக டவலை வந்து வாங்கினான் மகேந்திரன்.
“மட்டன் பிரியாணி கலக்கிட்ட மகி… சூப்பர்…” என்று மகேந்திரனை பாராட்ட, அவனது முகத்தில் அத்தனை சந்தோஷம்.
சிரித்தபடியே கார்த்திக்குடன் சேர்ந்தவாறு ஹாலுக்கு வர, அவனைக் கண்டு எழுந்து நின்றனர் மதியும் பிரானேஷும்.
புன்னகையோடு கார்த்திக்கை பார்த்து, புருவத்தை உயர்த்தினான் ஷ்யாம். கார்த்திக்கின் முகத்தில் லேசான குழப்பம். எதற்காக இவர்கள் வந்திருகிறார்கள் என்று!
அவர்களை பார்த்துப் புன்னகை புரிந்த கார்த்திக் வேறு எதுவும் பேசாமல் சோபாவில் அமர, ஷ்யாம் அவனுக்கு அருகில் அமர்ந்தபடி,
“வாங்க…” என்றழைத்தவன், “மகி” என்று குரல் கொடுத்தான்.
மகி அவசரமாக வந்து நிற்க, இருவரின் புறமும் திரும்பியவன்,
“என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்க,
“பரவால்ல ஜி…” என்று தயங்கியபடியே மறுத்தான் பிரானேஷ். அதே பதில் தான் மதியிடமும். இன்னமும் அவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு, “உக்காருங்க…” என்ற ஷ்யாமின் வார்த்தைக்கு, சோபாவின் நுனியில் அமர்ந்தான் பிரானேஷ். மதி விழுந்து விடுவதை போலதான் அமர்ந்திருந்தார்.
அத்தனை பயம் அவனிடம்!
அவர்களுக்கு மட்டுமல்ல… பீல்டில் இருக்கும் அனைவருக்குமே ஹைதராபாத் ஷ்யாம் என்றால் சிம்மசொப்பனம் தான்!
அவனிடமிருந்து அழைப்பு என்றாலே நடுங்குபவர்களும் இருக்கின்றனர்! கார்த்தியை பொறுத்தவரை இந்த பீல்டுக்கு புதிது என்பதால் அவ்வளவாகப் பரிட்சயமில்லை.
கார்த்திக்கிடம் அத்தனை பேசியிருந்தனர் அந்த இருவரும்!
ஆனால் இங்கே பம்முவதை பார்த்தால் கார்த்திக்கு சிரிப்பு தான் வந்தது.
“ரெண்டு காபி மகி…” என்று மகேந்தரனிடம் கூறிவிட்டு, “கார்த்தி மச்சான், உங்களுக்கு?” என்று கார்த்தியை பார்த்துக் கேட்க,
“பிரியாணி டேஸ்ட் போய்டும் மச்சான்…” என்ற சிரித்துக் கொண்டே கூறிய கார்த்தியின் ரசனையைக் கண்டு, “அடடா… என்ன ரசனை…” என்று வாய்விட்டுச் சிரித்தான்.
மகேந்திரனின் புறம் திரும்பியவன், “ரெண்டு போதுன்டா…” எனவும் அவன் தலையாட்டிவிட்டு அவசரமாக அகன்றான்.
“அப்புறம்? எப்படி போயிட்டு இருக்கு மதி?” என்று எப்போதும் போல ஆரம்பிக்க,
“சாரோட படம் தான் பண்ணிட்டு இருக்கேன்…” என்று தயங்கியவாறு கூற, திரும்பி பிரானேஷை பார்த்தான் ஷ்யாம். அவன் கேட்பதற்கு முன் முந்திக்கொண்ட பிரானேஷ், “சாரோட படம் தான் பண்ணிட்டு இருக்கேன்ஜி…” என்று கூற,
“ம்ம்ம் அப்படியா?” என்று நெற்றியை சுரண்டியவன், “ஏதோ பிரச்சனைன்னு மச்சான் சொன்னாரே…” என்று கார்த்திக்கை பார்த்தவாறே கேட்க, உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது கார்த்திக்கு.
தன்னிடம் அத்தனை சவடால் விட்ட இந்த இருவரும் இப்படி பயந்து கொள்வதை பார்க்கும்போது ஏதோ நாடகத்தைப் பார்ப்பது போலத் தோன்றியது.
“என்ன மச்சான்?” என்று கார்த்தியை கேட்க, தோளைக் குலுக்கிய கார்த்திக், “நீங்களாச்சு அவங்களாச்சு…” என்று முடித்துவிட,
“என்ன மதி?” என்று மதியை பார்த்து ஷ்யாம் கேட்க,
“ஐயோ… பிரச்சனைல்லாம் ஒன்னும் இல்லங்க ஜி…” என்று பதறினார் மதி.
“அப்புறம் ஏன் படம் அந்தரத்துல நிக்குது? பணம் என்ன உங்க வீட்டு மரத்துல காய்க்குதா?” கத்தியைச் சொருகுவது போல ஷ்யாம் கேள்வியைச் சொருக,
“அய்யா தான் பணம் இல்லைன்னு….” என்று மதி இழுக்க,
“என்ன பணம் இல்லைன்னு? ஃபர்ஸ்ட் காபி பேஸ்ல தானே படம் பண்ண ஒத்துக்கிட்டீங்க?” என்றவனின் கேள்விக்கு அவரது தலை தானாகத் தலையாடியது.
“ஆமாஜி…”
“எவ்வளவு?”
“பன்னிரண்டு சி… ஆர்டிஸ்ட் சம்பளம் இல்லாம ஜி…” குரல் சிறியதாகி விட்டிருந்தது.
“மச்சான் கொடுத்தாரா?” இறுக்கமாகக் கேட்க,
“கொடுத்தாங்க ஜி…” இன்னமும் கீழே போய்விட்டிருந்தது.
“அப்புறம் ஏன் நீங்க முடிக்கல?” நியாயமான கேள்வி தான். ஆனால் மதி எப்படி பதில் சொல்வார்? அவர் நல்ல இயக்குனர் தான். முதல் காப்பி கையில் கொடுக்கும் வரைக்குமாகத் தான் அவர் ஒப்பந்தம் போடுவதும் ஆனால், அந்தத் தொகைக்குள் அவர் படத்தை முடித்ததாக வரலாறு இல்லை. இரண்டு மடங்காகச் செலவை இழுத்து விடுவதில் மன்னன்.
சரியாகத் திட்டமிடாதது, நேர விரயம் செய்வது, நடிகர்களின் கால்ஷீட்டை வீணடிப்பது, ஸ்பாட்டிலேயே பணியாளர்களிடம் பிரச்சனை செய்வது என அனைத்தும் உண்டு.
மகேந்திரன் காபியை கொண்டு வந்து இருவருக்கும் தர, நடுக்கத்தோடு எடுத்துக் கொண்டார்கள் இருவருமே!
“கொஞ்சம் இழுத்துட்டு போய்டுச்சு ஜி…” என்று மதி பம்மினார்.
“கொஞ்சம் இழுத்துட்டு போகல… பன்னிரண்டு, இருபத்தியஞ்சு ஆகியிருக்கு…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
இவனுக்குத் தெரியாதது என்ன தான் இருக்கிறது என்று ஷ்யாமை ஆச்சரியமாகப் பார்த்தான் கார்த்திக்.
“தப்பு தான் ஜி….” உடனே ஒப்புக் கொண்டார் மதி.
“அதை எப்படி சரி செய்வீங்கன்னு எனக்குத் தெரியாது மதி… நீங்கத் தான் சரி செய்தாகணும்…” என்று கறாராக ஷ்யாம் கூற, அவர் விழித்தார்.
“எப்படின்னு…” என்று அவர் இழுக்க,
“இன்னும் பணமெல்லாம் கொடுக்க முடியாது… நீங்கப் படத்தை முடிச்சு கைல கொடுக்கறீங்க…” கொஞ்சமும் தயங்காமல் கூற,
“அவ்வளவு பணம்…” என்று இழுத்தார் மதி. எப்படியும் முடிக்க இன்னுமே ஒன்றாவது தேவைப்படும் என்று கார்த்தியிடம் கூறியிருந்தார். அதனால் தான் படமாவது ஒன்றாவது என்று கிடப்பில் போட்டிருந்தான் கார்த்திக். ஒன்று கொடுத்தால் இன்னுமொன்று என்று கேட்பார் மதி.
“அதெல்லாம் கொடுக்க முடியாது மதி… போட்ட அக்ரீமென்ட் படி டுவல்வ் சி ல நீங்க முடிச்சு இருக்கணும்… அதுக்கு மேல உங்களால மச்சானுக்கு லாஸ்… இதுக்கும் மேல உங்களுக்குக் கொடுக்க முடியாது… படத்தை முடிச்சு கொடுக்கறீங்க… அவ்வளவு தான்…” என்று வெகு தீவிரமாகக் கறாரான குரலில் கூறி முடிக்க, அங்கு வந்து நின்றனர், விஷ்ணுவும் இளங்கவியும்!
“இல்லைன்னா நீங்கப் பண்ண லாஸ்க்கு கார்த்தி மச்சானுக்கு காம்பன்சேஷன் கொடுக்கறீங்களா?” என்று ஷ்யாம் தொடர்ந்து கேட்க, மதி விழி பிதுங்கினார்.
“முடிச்சு கொடுத்துடறேன் ஜி…” வேறு வழி இல்லாமல் ஒப்புக் கொண்டார் மதி. இளங்கவி நீட்டிய காகிதங்களை விழி பிதுங்கப் பார்த்தார்.
அவர் ஒப்புக்கொண்டதை எழுத்து வடிவில் கொடுத்திருந்தார்கள்.
“சைன் பண்ணுங்க மதி…” என்றவன், “இன்னும் பத்து நாள்ல கைக்கு ஃபர்ஸ்ட் காபி வந்தாகணும்…” என்று முடிக்க,
“சரிங்க ஜி…” என்றபடி கையெழுத்திட்டார் மதி.
திரும்பி பிரானேஷை ஷ்யாம் பார்க்க,
“கேக்கற டேட்ஸ கொடுத்துடறேன் ஜி…” என்று அவசரமாகக் கூறினான் அவன்.
“அதிகமா சம்பளம் கேக்கறதா சொல்றாங்களே…” என்று ஷ்யாம் நெற்றியை சுரண்ட,
“அப்படியெல்லாம் இல்லஜி…” என்று இன்னமும் அவசரமாக் கூறினான்.
“ஓகே…” என்று முடித்து விட, காபியை அவசரமாகக் குடித்து முடித்தவர்கள், அதைக் காட்டிலும் அவசரமாக இடத்தைக் காலி செய்தனர்!
“இவனுங்களை எல்லாம் ரெண்டு வெச்சு வேலை வாங்கறதை விட்டுட்டு, எனக்கு இந்த பீல்டே வேண்டாம்ன்னு ஓடுவீங்களா மச்சான்? அப்புறம் நமக்கு என்ன மரியாதை இருக்கு?” என்று ஷ்யாம் கேட்க, பதில் கூற மறந்து போய் அவனையே பார்த்திருந்தான் கார்த்திக்.
உண்மையிலேயே அதிர்ந்து தான் போயிருந்தான்.
இது போன்ற அடாவடிகளுக்கு அவன் சற்றும் பழக்கமில்லாதவன்!
அவன் உண்டு, அவனது நகைக் கடையுண்டு என்றிருந்தவன்!
திரைப்படம் தயாரிப்பதை அவன் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அத்தனையும் அவனது தந்தையின் பொறுப்பு மட்டுமே என்று இருந்தவன்.
ஷ்யாமை கண்டவனுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது என்பதுதான் உண்மையாக இருக்கும். இவனது அடாவடிகளை தங்கையால் சமாளிக்க முடியுமா என்று விழி பிதுங்கிப் போயிருந்தான்.
ஆனால் மஹாவை சமாளிக்க முடியாமல் திணறும் ஷ்யாமுக்காக ஒருநாள் தான் வாதாட வேண்டியிருக்கும் என்று அவன் அறியவில்லை!
மேலிருப்பவர்கள் மேலேயே இருப்பதில்லை… கீழிருப்பவர்கள் கீழேயே இருப்பதும் இல்லை. கீழிருப்பவன் மேலே போவதும் மேலிருப்பவன் கீழே வருவதும் தான் இயற்கையின் விதி!
அந்த விதி… ஷ்யாமின் வாழ்க்கையை சூறையாட காத்திருப்பதை யார் உரைப்பார்கள்?





