arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் முப்பத்து ஆறு
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 36 / 64

அத்தியாயம் முப்பத்து ஆறு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

டக் இன் செய்யப்பட்ட ஸ்கை ப்ளு ஹாஃப் ஹேன்ட் ஷர்ட், டீப் ப்ளு பேன்ட், கண்களை மறைத்த ரேபான், இடக்கையில் ஒரிஸ் டைவர்ஸ், வலது கையில் செம்பு காப்பு, காலில் பளபளத்த ஃபார்மல் ஆலன் எட்மன்ட் என்று அட்டகாசமாகத் தன்னுடைய ஜாகுவாரிலிருந்து லக்ஷ்மி ஜெம்ஸ் வாசலில் இறங்கினான். விருது நிகழ்ச்சிக்காக முன்னமே தயாராகி விட்டவன், முதலில் பர்சேஸ் முடித்து விடலாமென்று கூற, கார்த்திக் அவனுடைய கடைக்கு வரச் சொல்லியிருந்தான்.

மிகவும் பாரம்பரியமான கடை. டி நகரில், மூன்று மாடிகளில் மிகவும் ஆடம்பரமாக இருந்தது! மூன்று தலைமுறையைக் கண்டுவிட்ட நிறுவனம். நகைகளோடு ரத்தினங்களுக்காகவும் பெயர் பெற்றது. கார்த்திக் தான் இப்போது நிர்வகித்துக்கொண்டிருந்தான்.

ஒவ்வொரு தளத்தின் சிசிடிவி பதிவுகளையும் பார்வையிட்டபடி சுற்றிலும் பார்வையை பதித்தபடி இருந்தான்.

காரிலிருந்து ஷ்யாம் இறங்கும் போதே உள்ளிருந்து கவனித்து விட்டிருந்தான் கார்த்திக். உடன் மகாவும் இருந்தாள், கூடவே பிருந்தாவும்!

கார்த்திக்கை முறைத்தபடி!

கார்த்திக் சமாதானக் கொடியைப் பறக்க விட்டாலும், அசைவேனா என்றிருந்தாள்.

முன்னரே, “பிருந்தா… உன்னை நான் அப்படி சொன்னது தப்புதான்… விட்டுடேன்… தெரியாம பேசிட்டேன்…” என்று அவளது காலில் விழாத குறையாகவும் கெஞ்சிப் பார்த்து விட்டான்.

கண்களிலோரம் வழிந்த துளி கண்ணீரை யாருமறியாமல் சுண்டி விட்டவள்,

“என்னைப் பிரிச்சு பார்த்துட்டீங்கல்ல…” என்று அவனிடம் சிக்காமல் போக, பாவமாக தங்கையைப் பார்த்தான்.

“ப்ரோ கூச்சமே பார்க்காம கால்ல விழுந்துடு…” என்று சிரிக்கவும், அவளது தலையில் தட்டினான் அவளது தமையன்.

“நீ தான்டி அவளுக்கு ஏத்தி விடற…” எனவும்,

“அடப்பாவிபய மக்கா… என் மேல இப்படியொரு பழியா? ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தலாம்ன்னு பார்த்தேன் பாரு… எனக்கு இதுவும் வேணும்… இன்னமும் வேணும்…” என்று அவள் கூறவும்,

“வேணும் வேணும்ன்னு மட்டும் சொல்லு… ஆனா அதை கரெக்ட் பண்ணிடாத…” என்று சலித்துக் கொண்ட தமையனை,

“டேய் அண்ணா… கரெக்ட் பண்ண வேண்டியது நீ தான்டா…” என்று சிரிக்க,

“அதுதான முடியவே மாட்டேங்குது…” என்றுக் கூறிக் கொண்டிருக்கும்போது தான் ஷ்யாம் காரிலிருந்து இறங்கினான்.

வாலட்பார்க்கிங்காக சாவியை கொடுத்துவிட்டு, நிமிர்ந்து லக்ஷ்மி ஜெம்சை பார்த்தான். அவனையும் அறியாமல் புன்னகை பூத்தது. நமக்கு உரிமையான இடம் என்ற எண்ணம் தோன்றும்போது நம்மையும் அறியாமல் வரும் புன்னகை அது.

அவனது அந்த வசீகரத்தில் மஹா மயங்கினாளோ இல்லையோ, கார்த்திக் ஒரு சில நொடிகள் மயங்கி நின்றான் என்பதுதான் உண்மை. வெகுசிலருக்கே அந்த வசீகரம் இயற்கையிலேயே அமையப் பெற்றிருக்கும். Aura என்ற ஒன்று… அதில் தான் கார்த்திக் மயங்கினானோ?

இங்க கார்த்திக் மயங்கறதுதான் ரொம்ப முக்கியம் என்று சமூகம் கழுவி ஊற்றுவது அடியவளின் காதுகளில் ஒலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் சற்று அதிகமாக சைட்டடித்து விட்ட காரணத்தினால் வேறு வழி இல்லாமல் மஹா புறமாகச் சென்று விடுகிறேன். சமூகம் பொறுத்தருள்க!

“ஹாய் மச்சான்…” என்றபடி கார்த்திக் ஷ்யாமை நோக்கிப் போக, யாருடா அது மச்சான்? என்று மஹாவும் பிருந்தாவும் வாசல் பக்கமாகத் திரும்ப, அங்கு ஷ்யாமை கண்டதில் அவளது இதயம் லயம் தப்பி துடித்தது.

தந்தைக்கு ஒய்வு தேவை என்பதால் அவரை விட்டுவிட்டு இவர்கள் நேராகக் கடைக்கு வந்துவிட, அவனும் சேர்ந்து கொள்வதாகத் தான் திட்டம். ஆனால் அவனது தோற்றமே சொன்னது, வெகுசிரத்தை எடுத்துப் பக்காவாக வந்திருக்கிறான் என்று!

எதிரிலிருந்த கண்ணாடியில் தன்னை பார்த்துக் கொண்டாள். பழுதொன்றும் கூற முடியாது. ஆனாலும் அப்படியொன்றும் அலங்காரமில்லை. நீட்டான காட்டன் சுடிதார். எப்போதும் போல இறுக்கமாக வாரிப் பின்னிய தலை. என்ன ஒன்று முகம் எண்ணெய் வழியாமல் இருந்தது. கண்களில் மை. உதட்டுக்கு லேசான பிங்க் லிப் கிளாஸ். இடது கையில் ஃபாஸ்ட் ட்ராக். வலது கையில் மெல்லிய பிரேஸ்லெட். கழுத்தில் மிக மெல்லிய செயின், வைர பென்டன்ட்டுடன். காதில் ஒற்றைக் கல் சாலிடர் வைர கம்மல். மிக எளிமையாகத் தோன்றியது.

பங்க்ஷன் என்றதற்கும் இவ்வளவு தான் செய்து கொள்ள தோன்றியது. ஆனால் இப்போது அவனது தோற்றத்தைக் கண்டபோது தான் சற்று சிரத்தை எடுத்திருக்க வேண்டுமோ என்று தோன்றியது. அவனுடன் செல்லும்போது அவனளவு இல்லையென்றாலும் சற்றேனும் பார்க்கும்படியாக இருக்க வேண்டாமா என்று கேட்டது அவளது மனம்.

ஆனாலும் அசட்டையாக ஒதுக்கித் தள்ளினாள்.

அவனுடனிருக்கும் போதெல்லாம் ஒன்றை மட்டும் கவனித்து இருக்கிறாள். சுற்றி இருக்கும் பெரும்பாலான பெண்களின் கண்கள் அவனைத் தடவி மீள்வதை! சற்று எரிச்சலாகக் கூட இருக்கும்… அப்படியென்ன இவனிடம் இருக்கிறது என்று! உற்று பார்த்தாலும் இவளது கண்களுக்கு அவனிடம் ஒன்றுமே தென்படவில்லையே!

இப்போதும் சுற்றிலும் பார்த்தாள். சேல்ஸ் பெண்கள், நகை வாங்க வந்த பெண்கள் என்று முக்கால்வாசி பெண்களின் கண்கள் அவன்மேல்… ஏனோ அனல் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு… பற்களை நறநறவெனக் கடித்தாள்.

அதோடு கார்த்திக்கின் ‘மச்சான்’ என்ற அழைப்பு வேறு!

முறைத்துக் கொண்டே இருந்தவன் எப்படி இப்படி?

ஒரே பிரியாணி ஆளையே மாற்றி விடுமா என்ன?

தான் பிரியாணியில் மயங்கினால் அதை ஒப்புக்கொள்ள முடியும். ஏனென்றால் ஆல்ரெடி மஹா ஒரு பிரியாணி வெறியை என்பதை சமூகம் அறியும்… ஆனால் கார்த்திக் அப்படியல்லவே… அவன் ஒரு பிரியாணிக்கு மயங்கி விடுபவனா என்ன?

அவளைப் பார்த்தவனின் கண்களில் மின்னல் வந்துவிட்டு போனாலும் அடுத்த நொடி அவன் சற்று அதிர்வது தெரிந்தது.

மிகவும் இயல்பாக கார்த்திக்கின் தோளில் ஒற்றைக் கையைப் போட்டுக் கொண்டவன், வலது கையைப் பாக்கெட்டில் விட்டபடி மகாவை பார்த்தபடியே வந்தான்.

“இப்ப எதை வெச்சு வம்பு வளர்க்க போற மஹா குட்டி?” அருகில் நின்றிருந்த பிருந்தா அவளது காதைக் கடித்தாள். ஆரம்பத்தில் இருவருக்குமான பிணக்குகளை மனதில் கொண்டு!

“ரொம்ப ஆசைப்படற போல இருக்கே செல்லோ?”

“நானா? நீதான் ஆத்தா குதிச்ச… ஆனாலும் செப்பல் ஷாட் லாம் விட்ட பாரு… அத்தைகிட்ட ஒரு நாள் சொல்லணும்…” என்று மீண்டும் காதைக் கடித்தவளை முறைத்தாள் மஹா.

“அண்ணியாரே… உங்க குடுமி என் கைல…” எனவும்,

“தெய்வமே… மீ எஸ்கேப்…” என்று அவள் கூறுவதற்கும், ஷ்யாம் அருகில் வருவதற்கும் சரியாக இருக்க, அவனை பார்த்துப் புன்னகைத்தாள் மஹா.

“கலக்கலா வந்திருக்க? யாரையோ ஹெவியா இம்ப்ரஸ் பண்ண போற போல…” என்று அவள் எப்போதும் போலக் கலாய்க்க, மற்றவர் அறியாத வண்ணம் முறைத்தபடி அருகில் வந்தான்.

“என்னடி… கிளம்பாம இருக்க?” என்று கேட்க,

“ஏன்டா… கிளம்பி தானே வந்திருக்கேன்…” தன்னுடைகளை பார்வையிட்டபடியே கூற,

“இப்படியேவா வரப் போற?” அதிர்ந்தான் ஷ்யாம்.

“ஆமா… ஏன் கேக்கற?” அவளுக்குப் புரியவில்லை. இவன் என்ன சொல்ல வருகிறான் என்று! சற்று எளிமையான அலங்காரம் தான்… ஆனாலும் தவறென்ன இருக்கிறது?

கார்த்திக்கின் புறம் திரும்பியவன், “என்ன கார்த்திக் மச்சான்? நீங்களாவது சொல்லியிருக்க கூடாதா?” என்று கேட்க, அதுவரை அவனும் கவனிக்கவில்லை. அது போன்ற நிகழ்சிகளுக்கு இந்த அலங்காரம் போதாதல்லவா!

“சாரி மச்சான்… கவனிக்கல…” என்று அவன் நெற்றியை தேய்க்க,

“உங்க ஆளைப் பார்த்துட்டு, என் ஆளை விட்டுட்டீங்க…” அவனது காதில் கிசுகிசுத்தவனை பார்த்து மெலிதாக வெட்கத்தோடு சிரித்த கார்த்திக்,

“அப்படி இல்ல மச்சான்… யோசிக்கவே இல்ல…” என்று கூற, நடுவே இடையிட்டாள் மஹா.

“ஹலோ… என்ன மச்சான் மச்சான்னு பாசப்பயிரை வளர்த்துட்டு இருக்கீங்க? டேய் அண்ணா… ஒரு பிரியாணிக்காக இப்படி மாறிட்டியேடா…” கலாய்த்தவளை பார்த்துச் சிரித்த கார்த்திக்,

“ஆமா லட்டு… மட்டன் பிரியாணி செம டேஸ்ட்…” என்று அவளது வயிற்றில் நெருப்பை பற்ற வைத்தான். அவனை முறைத்தவள்,

“போடா போடா… எனக்கு பைரவி பிரியாணி இருக்கு…” என்று வம்படிக்க, ஷ்யாமா அதில் கலந்து கொள்ளாமல் அவளைப் பார்த்து முறைத்தபடி இருந்தான்.

“லூசு… திங்கறதுலையே இரு…” என்று கடுப்படித்தவன், “பங்க்ஷனுக்கு ஒரு சாரி கட்டி கொஞ்சம் சிம்பிள் ஜ்வெல்ஸ் போட்டு இருக்கலாம்ல… பேக்கு மாதிரி இப்படியா வருவாங்க?” எதைப் பற்றியும் கவலைப் படாமல் அவளைக் குதறும் மூடுக்கு சென்றிருந்தான் ஷ்யாம். நேரம் வேறு ஓடிக்கொண்டே இருக்க, அவனுக்கு டென்ஷனாக இருந்தது. அவன் லூசு பேக்கு என்றதும், அவளுக்கும் கோபம் மூக்கின் மேல் வந்தமர்ந்து கொள்ள,

“ஆமா நான் லூசுதான்… என்னை எதுக்கு கூட்டிட்டு போற? போ… வேற யாராவது நல்ல்ல்லா அலங்காரம் பண்ணிட்டு வந்தா, அவங்களை கூட்டிட்டு போ…” என்றவள், சற்று தூரத்தில் நின்று கொண்டு ஷ்யாமையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைக் காட்டி, “அது கூட சாரி கட்டி அழகா இருக்கு… அதையே தள்ளிட்டு போ… பிசாசு…” என்று பொரிய, அவள் காட்டிய பெண்ணைப் பார்த்தவனுக்கு அவனது கோபம் காணாமல் போக, மெலிதாகச் சிரித்துக் கொண்டான். பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் கூடப் புன்னகை மலர்ந்தது.

“ஃபிகர் நல்லாத்தான் இருக்கு குல்பி…” என்று சிரித்தவன், “ஆனா அவ புருஷன் விடணுமே… நீ வேண்ணா கேட்டுப் பாரேன்…” என்று கூற, ஒரு கணம் முறைத்தவள், மறு கணம் சிரித்து விட்டாள். அவனது குல்பி என்ற அழைப்பே, அவனது கோபம் குறைந்ததை கூறியது. கோபப்படுவதை போலக் காட்டிக் கொண்டாலும் அவனது அந்த ‘குல்பி’ என்ற அழைப்பு அவளுக்கு மிகவும் பிடித்தமானது. மனதுக்கு நெருக்கமானது.

இருவரின் வாக்குவாதத்தைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற இருவரும் கூடச் சிரித்து விட, மூவரையும் பார்த்து,

“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது?” என்று இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு மகா கேட்க,

“பக்கா லூசு மாதிரிதான் தெரியுதுடி…” என்ற ஷ்யாமை பார்த்து முறைத்தவள்,

“இப்ப என்னதான்டா சொல்ல வர்ற?”

“ஒழுங்கா போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா…” முடிவாக அவன் கூறிவிட,

“இனிமேல்லாம் போய் மாத்திட்டு வர முடியாது… இப்படியே வர்றதுன்னா வரேன்… இல்லைன்னா வரமாட்டேன்…” என்று முரண்டு பிடிக்க, உதடுகளைக் குவித்து பெருமூச்சை வெளியேற்றியவன்,

“ப்ளீஸ் மஹா… நம்ம ஸ்டேடஸ்க்கு தகுந்த மாதிரி போகணும்… நமக்குன்னு ஒரு மரியாதை இருக்குல்ல… அதைக் காப்பாத்த வேண்டாமா?” என்று அவன் தான் இறங்கி வந்து கேட்க வேண்டியதாயிற்று.

“அதென்ன நம்ம? உனக்குன்னு சொல்லிக்க…” என்று பல்லைக் கடித்தாள் மஹா.

“சரிடி… எனக்குத் தான்… என் கூட வந்தா அந்த மரியாதைய நீயும் தான் மெய்ன்டெயின் பண்ணனும்… குட்டிம்மால்ல… ப்ளீஸ் போய் நல்ல சாரி கட்டிட்டு வா மகா…”

“அப்படீன்னா நான் வரலை…நீ மட்டும் போ…” என்று அவள் கழண்டு கொள்ள பார்க்க,

“அடியே…” என்று பல்லைக் கடித்தவன், அவளிடம் எகிறினால் வேலைக்காகாது என்று புரிந்து கொண்டு, “ஃப்லிம்பேர் அவார்ட்ஸ்… முக்கியமான க்ரூப்… நான் அவார்ட் கொடுக்கணும் மகா… ஃபிரன்ட் சீட்ஸ்ல இருப்போம்… மீடியா கவரேஜ் முழுசா இருக்கும்… பாக்கியவதி பைனான்ஸ்க்கும் லக்ஷ்மி பிலிம்ஸ்க்கும் எந்தப் பிரச்னையும் இல்லைன்னு நாம ப்ரூவ் பண்ணனும்ன்னா அங்க இந்த மாதிரி சில எட்டிகுவைட்ஸ் மெய்ன்டெயின் பண்ணித்தான் ஆகணும்… அப்பத்தான் உன் அண்ணனோட படம் வியாபாரமாகும்… இல்லைன்னா நஷ்டம் எனக்கில்ல… உன் பாசமலருக்கு தான்… இப்ப சொல்லு… வர்றியா வரலையா?”

அவன் கூறியது அத்தனையும் உண்மைதான். ஆனால் அவனது உள்ளகிடக்கை வேறு. தன் காதலியை உலகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டும்… அதற்கு அவன் மெனக்கெடவே தேவையில்லை. இவனோடு வந்தாலே போதும், தீப்பற்றிக் கொள்ளும். அதை நினைத்துத் தான் ஷ்யாம் இத்தனை பிரயத்தனப் பட, மகாவோ அவன் அனுப்புகின்ற பாலை எல்லாம் சிக்ஸருக்கு அனுப்பி விட்டுக் கொண்டே இருந்தாள்.

“அதுக்கு எதுக்கு நான்? பேசாம இவனையே கூட்டிட்டு போ… உன்னோட எட்டிகுவைட்ஸ் மெய்ன்டெயின் பண்ணு…” என்று சாதாரணமாகக் கூறியவளை, என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.

பொறுமை பறந்து விடும் போல இருந்தது.

“சொன்னா புரிஞ்சுக்கடி… ஒரு சாரி தானே கட்ட சொல்றேன்… சிலிண்டருக்கு உறைய போட்ட மாதிரி இருக்கு இது…” என்று கிட்டத்தட்ட கெஞ்ச, சிலிண்டர் என்று கூறியதற்கு முறைத்தாலும் அவளுக்கும் சற்று சங்கடமாக தான் இருந்தது. அவளும் தான் என்ன செய்வாள்? சும்மாவே சோம்பேறி, சேலையை சுற்ற வேண்டுமா என்று கேட்பவள். சுடிதார் அணிவது என்பது அவளைப் பொறுத்தவரை எளிது. சேலை என்றால் உடம்பில் நான்கு முறை சுற்றி, ஃப்ளீட்ஸ் எடுத்து சொருகி, பின் செய்து என்று ஷப்பா என்று பெருமூச்சு விடுவாள்.

“நீ சொல்றது ஓகே… ஆனா இனிமே வீட்டுக்கு போய் சாரி கட்டி…” என்று இழுத்தவள், “முடியாதுடா…” என்று முடிக்க,

“சரி இங்கயே ஏதாவது ரெடி பண்ண முடிஞ்சா ஒழுங்கா பண்ணிட்டு வருவியா?” அவனுக்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

“ம்ம்ம்… பாக்கலாம்…” என்று ஒப்புதல் கொடுக்க, வேகமாக யோசித்தான்.

“ப்ரோ ரெடிமேட் ப்ளவுஸ் இருக்குமே…” என்று பிருந்தா ஐடியா கொடுக்க, அவனது முகம் ஒளிர்ந்தது.

“தெய்வமே… வாழ்க…” என்றவன், மஹாவின் புறம் திரும்பி, “என்ன சொல்ற மஹா?” என்று கேட்க, அவள் யோசித்தாள்.

“சாரி எடுத்து…. கட்டி… அப்புறம்…. மேக் அப் பண்ணி…. ஓ மை கடவுளே… மீ பாவம்… நோஓஓ…” என்று வேகமாக இடம் வலமாக தலையாட்டினாள்.

“உன்னையெல்லாம்…. ச்சே…” என்றவன், “ஊர்ல ஆளாளுக்கு அம்பது பிகரை மெயின்டெயின் பண்றானுங்க… இவ ஒருத்தியை வெச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே…” என்று கார்த்திக்கின் காதில் புலம்ப, அதுவரை சிரித்துக் கொண்டே இருவரையும் பார்வையிட்டு கொண்டிருந்தவன், இப்போது வாய்விட்டு சிரித்தான்.

பார்வையிலேயே அனைவரையும் மிரட்டிய அந்த ஷ்யாம் எங்கே போனான் என்று தேடினான் கார்த்திக்.

“சார் என்னத்தை தேடறீங்க?” என்று கேட்க,

“இல்ல மத்தியானம் ஒரு மானஸ்தன் இருந்தான்… அவனை காணலை…” என்று கிண்டலடிக்க,

“தேடாத அவன் கிடைக்க மாட்டான்… என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா?” இருவருமே ஒருமைக்கு மாறியிருந்தார்கள்.

“விஜி கிட்ட கூட நீ இவ்வளவு பேசல மச்சான்…” கார்த்திக் கிண்டலாக கூற,

“அவன் மனுஷன்…” என்று சலிப்பாக கூற,

“அப்ப இந்தம்மா?” தங்கையை காட்டி சிரித்துக் கொண்டே கேட்க,

“தெய்வம்…” என்று மேலே பார்த்து கையெடுத்து வணங்கியவன், “ஏடு கொண்ட்ல வாடா…” என்று வேண்ட, யோசித்துக் கொண்டிருந்த மஹாவுக்கு ஞானோதயம் வந்து,

“யார் அது விஜி?” என்று தமையனை கேட்டாள். அவள் மறந்து விட்டாள். அவனை நினைவே இல்லை.

கார்த்திக்கும் ஷ்யாமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அவர்களின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

‘டேய் உன்னோட பேர் கூட அவளுக்கு தெரியாதுடா….’ என்று கூறிய ஷ்யாமின் வார்த்தைகள் கார்த்திக்கின் காதில் ஒலித்தது. தங்கையை எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறான் என்று சற்று கர்வமாக கூட இருந்தது. சிலபல தவறுகள் இருந்தாலும், இவனை காட்டிலும் இன்னொருவன் மகாவை புரிந்து கொள்ள கிடைப்பானா என்பது சந்தேகம் தான். தானே தேர்ந்தெடுத்தால் கூட, அவன் ஸ்த்ரீலோலனாக இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? இவனிடம் உள்ள வெளிப்படைத் தன்மை அவனிடம் இருக்குமா? நிச்சயமாக இருக்காது என்று உறுதியாக கூறியது மனது.

அவனையும் அறியாமல் ஷ்யாமை பார்த்து சொந்தத்தோடு உரிமையாக சிரித்தான்.

“விஜி யாருன்னு உனக்கு தெரியாதா லட்டு?” கார்த்திக் கேட்க,

“இல்லையே? ஏன்? இவனோட புது கேர்ள் ஃப்ரெண்டா?” ஒருமாதிரியான குரலில் கேட்க,அவசரமாக மறுக்க முயன்ற கார்த்திக்கை தடுத்த ஷ்யாம்,

“ஆமா லட்டு… என்னோட புது கேர்ள் ஃப்ரென்ட் தான்…” என்று கூற,

“அப்படீன்னா அவளை கூட்டிட்டு போடா… என்னை ஏன் இப்படி தொந்தரவு பண்ற?” கடுப்பாக கூறினாள் மஹா.

“வாவ்… குட் ஐடியா… என்ன மச்சான்… விஜிக்கு சேலை கட்டி விட்டுடலாமா?” என்று கார்த்திக்கை பார்த்து கண்ணடிக்க,

“பண்ணாலும் பண்ணுவ மச்சான்…” என்று சிரித்தான் கார்த்திக். மகாவிடம் திரும்பியவன், “லூசு… ஷ்யாம் கூடவே இருப்பான்ல…” என்று எடுத்துக் கொடுக்க, அவளுக்கு நினைவு வந்தது.

“ஓ அந்த அல்லக்கையா?” என்றதும், இருவருமே குபீரென்று சிரித்து விட,

“ஓய்… என்னோட பிஏவ பார்த்தா உனக்கு அல்லக்கை மாதிரி தெரியுதா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க,

“நீதான் மெச்சிக்கணும் உன்னோட அல்லக்கையை… ஆளும் அவன் மூஞ்சியும்… அவன் முழியும் சரியில்லை… பார்வையும் சரியில்லை…” என்று கடுப்பாக கூறி விட்டு, “உனக்கு வேற உருப்படியான பிஏவே கிடைக்க மாட்டானா?” என்று கேட்க, ஷ்யாமின் முகத்தில் அத்தனை புன்னகை. அவன் கூறியதை போல விஜியை அவள் பொருட்டாக கூட நினைக்கவில்லை என்பது அவனது மனதுக்கு அவ்வளவு நிம்மதியை தந்தது.

காதலை சொல்லும் போது கூட, விஜயாக இருந்தால் மகாவை நிம்மதியாக வைத்துக் கொள்வான், தன்னுடைய காதல் அவளை கண்டிப்பாக காயப்படுத்தும் என்று தான் எண்ணினான். காதலை சொல்ல யோசித்தான். ஆனால் எப்போது முத்தமிட்டானோ அப்போது உணர்ந்து கொண்டான், மஹாவை விட்டு விட முடியாது என!

முடிவு செய்து கொண்டாலும் இப்போது வரை அந்த குற்ற உணர்வு அவனது மனதை அழுத்திக் கொண்டிருந்தது. அவன் மேல் நடவடிக்கை எடுக்க அத்தனை யோசித்தான். அவனது அத்தனை யோசனையும் மகாவுக்காக மட்டுமே. ஆனால் அவனது அத்தனை குற்ற உணர்வையும் மஹா ஒற்றை வரியில் இல்லாமல் ஆக்கியிருந்தாள்.

‘நீ இப்படி சொன்னதுக்காகவே உனக்கு என்ன வேண்ணாலும் பண்ணலாம் குல்பி…’ என்று எண்ணிக் கொண்டு,

பிருந்தாவிடம் திரும்பியவன், “பிருந்தா… ஒரு ஹெல்ப் பண்ணுமா…” என்றவன், “கொஞ்சம் கிராண்டா ஒரு டைமன்ட் நெக்லஸ்… மேச்சிங் ஆக்சசரிஸ்… எடுத்து வைமா… இந்த லூசை என்ன பண்றதுன்னு பாக்கறேன்…” என்றவன், மகாவின் கையை இழுத்துக் கொண்டு போக பார்க்க,

“ஷ்யாம்… கையை விடு…” பொது இடத்தில் வைத்து இப்படி செய்கிறானே என்ற எரிச்சலில் கடுப்பாக கூற,

“இன்னும் உன்கிட்ட கெஞ்சிட்டு இருந்தா அங்க பங்ஷன் முடிஞ்சு போய்டும்…” என்றவன், கால் மணி நேரத்தில் அவளை அழைத்துக் கொண்டு திரும்பி வந்தான். கையில், சேலையோடு!

பிருந்தாவிடமிருந்து நகைப் பெட்டியை வாங்கி அவளிடம் கொடுத்தவன், கார்த்திக்கின் தனிப்பட்ட அறையில் அவளை தள்ளிவிட்டு,

“பத்து நிமிஷத்துல கிளம்பி வர்ற மஹா… லேட் ஆகுது…” கறாராக கூறியவன், நிமிடத்துக்கு ஒருமுறை கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.

சரியாக பத்து நிமிடத்தில் அந்த பிங்க் நிற சேலையணிந்து, பிருந்தா எடுத்து வைத்த நகைகளை அணிந்து இறுக்கமாக பின்னிய தலைமுடியை தளர பின்னி, தயாராக இருந்த ஜாதி மல்லியை வழிய விட்டுக் கொண்டு, இடது கையில் அந்த வேலைப்பாடமைந்த தங்க கடிகாரத்தை அணிந்தவாறே வந்தவளை பார்த்து இப்போது மூச்சு விட மறந்தது ஷ்யாம் தான்.

அதிலும் அந்த பிங்க் நிற ஜார்ஜெட் சேலைக்கு அவசரமாக சேர்க்கப்பட்ட அந்த சிறிய கை வைத்த தங்க நிற ப்ளவுஸ் அழகாக பொருந்தி போக, அந்த நிறத்துக்கும் அவளது நிறத்துக்கும் வேறுபாடே தெரியவில்லை.

ஒற்றையில் வழிய விட்டிருந்த புடவையில் அவன் மொத்தமாக வீழ்ந்திருந்தான்.

“கார்த்திக் கிளம்பிட்டியா?” என்றவள், அவசரமாக ஷ்யாம் புறம் திரும்பி, “என்னடா ஓகே வா?” என்று கேட்க, சொல்லாமல் கொள்ளாமல் தலையாட்டினான்.

அவன் எதுவும் கூறவில்லையே என்று நிமிர்ந்தவள், “என்ன ஒன்னும் சொல்லலை?” என்று கேட்க, குறும்பாக புன்னகைத்தவன், கார்த்திக்கையும் ஓரக்கண்ணால் பார்த்தபடி,

“வசனமாடா முக்கியம்? படத்த பாருடா…” என்று விவேக்கின் குரலில் கலாய்க்க, கேட்ட பிருந்தாவுக்கும் கார்த்திக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை. கார்த்திக் வெடித்து சிரிக்க, அவனது அந்த வசனத்தையும் அவர்களது சிரிப்பையும் கண்டு பல்லைக் கடித்தவள்,

“வேண்டாம்… கார்த்தி முன்னாடி அடி வாங்காத…” ஒற்றை விரலை காட்டி எச்சரிக்கை செய்தவளை, பார்த்து சிரித்தவன்,

“நீ என்ன கொடுத்தாலும் எனக்கு ஓகே டார்லிங்…” என்று கண்ணை சிமிட்ட, இப்போது கார்த்திக் தான் வெட்கத்தோடு சற்று தள்ளிப் போக வேண்டியிருந்தது. அதே வெட்கத்தோடு கார்த்திக்கின் அருகில் வந்த பிருந்தா,

“செம மேட்ச் ல… மகாவுக்கு…” என்று கூற,

“ம்ம்ம்… ஆமா… இதே மாதிரி எப்பவும் இருந்தா போதும்…” மனம் நிறைய கூறியவனுக்கு இன்றைய ஷ்யாம் மட்டுமே நினைவில் இருந்தான். வேறெதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும் அவன் விருப்பப்படவில்லை.

பிருந்தா அவளது வீட்டுக்கு கிளம்ப, அதே சிரிப்போடும் விளையாட்டோடும் விருது வழங்கும் விழாவுக்கு கிளம்பினர். பிருந்தாவை விட்டுவிட்டு விழாவுக்கு வந்துவிடுவதாக கார்த்திக் அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப, இவர்கள் இருவருமாக மட்டும் இவனது காரில்!

அந்த இடத்தினுள் நுழைகையில் மகாவுக்கு இதயம் படபடவென அடித்துக் கொண்டது. இது போன்ற விழாக்களுக்கு எல்லாம் பைரவி விட்டதில்லை. தந்தை மட்டும் தான் வருவது. சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வந்ததாக நினைவு.

இப்போது ஷ்யாம் கூறியதால் அனுமதி கொடுத்திருந்தார். ஆனாலும் இவன் எப்படித்தான் அனைவரையும் மயக்கி விடுகிறான் என்பதுதான் புரியவில்லை. வெட்டுவேன் குத்துவேன் போலீசில் கம்ப்ளைன்ட் செய்வேன் என்று குதித்த கார்த்திக் இப்போது மச்சான் பயிரை வளர்த்துக் கொண்டிருந்தது தான் ஆச்சரியம்!

வரும் வழியெல்லாம் அவளை கண்களால் மென்று தின்று கொண்டிருந்தான் ஷ்யாம், ஒரு வார்த்தையும் பேசாமல்!

அவனது அந்த பார்வை, அவளுக்குள் ஏதேதோ செய்தது.

தோழமை தான் என்று அவனிடம் பிடிவாதம் பிடித்த மனது இப்படியெல்லாம் எண்ணலாமா என்று அவசரமாக அந்த நினைவுகளை அழிக்க முயன்றாள்.

அவனுக்கும் தனக்கும் எந்த விதத்திலும் சரி வரவே போவதில்லை என்று மீண்டும் மீண்டுமாக கூறிக் கொண்டாள்.

‘எனக்கு ஒரு தடவை பார்த்துட்டா சலிச்சு போய்டுது… எதுவா இருந்தாலும்…’ என்று கூறிய ஷ்யாமை வலுகட்டாயமாக நினைத்துப் பார்த்தது மனது. திக்கென்று இருந்தது!

ஆனால் இன்னொரு மனமோ, ஏரியில் வைத்து அவன் தனக்கு கொடுத்த ஆழமான முத்தத்தையும், ‘இன்னைலருந்து நான் உன் ப்ராபர்ட்டி…’ என்றதையும் நினைத்தது.

அவளையும் அறியாமல் அவளது உடல் கூசி சிவக்க, அவளை கண்களால் தின்று கொண்டிருந்தவனை நிமிர்ந்து பார்க்க கூச்சமாக இருக்க, வேறு புறம் திரும்பிக் கொண்டு தன்னை சமன் செய்து கொண்டாள்.

அவன் கூறியதை போல தான் தோழமை என்ற லிமிட்டில் இல்லையோ?

‘ஹிப்போக்ரட்… ஃப்ரெண்டுன்னு சொல்லாத… அந்த லிமிட்ல நீயும் இல்ல… நானும் இல்ல…’ மீண்டும் மீண்டுமாய் அவளது காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெட்கத்தில் சிவந்த அந்த முகத்தை அவனுக்கு பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது.

விழா நடக்கும் வென்யுவில் ஓரமாக வண்டியை நிறுத்தியவன், அவள் புறம் திரும்பினான். அது சற்று ஒதுக்குப்புறமான இடம். இவன் ஏன் இவ்வளவு தள்ளி நிறுத்துகிறான் என்று மஹா யோசிக்கும் போதே,

“மஹா…” கிசுகிசுப்பாக அழைத்த அவனது குரலில் தான் எவ்வளவு மயக்கம்!

அந்த மயக்கத்தை அவளுக்கு கடத்தியிருந்தான் அந்த ஷ்யாமளன்!

“ம்ம்ம்…” என்றவாறு அவன் புறம் திரும்ப,

“சாரில உன்னை பாக்கும் போது…” என்று எச்சிலை விழுங்கினான். அவனது கண்கள் அவளை இன்ச் பை இன்சாக தழுவிக் கொண்டிருந்தது.

“ம்ம்ம்…” தலைகுனிந்து கொண்டாள், வெட்கத்தில்!

அவளுக்கு அருகில் வந்து, அவளது முகத்தை கையில் ஏந்தி, “ஐ ஃபீல் லைக் கிஸ்ஸிங் யூ…” என்று கிறக்கமாக கூற, இவள் கூச்சத்தில் நெளிய, கைகள் சில்லிட்டது. கண்கள் தாமாக மூடிக் கொள்ள, அதற்கும் மேல் நிதானிக்க முடியவில்லை அவனால்!

உதட்டை எடுத்துக் கொண்டவன், கொஞ்சமும் அவசரப்படாமல், நிதானமாக சுவைக்க, மூச்சுக்காற்றுக்கு தவித்தாள் அவள்!

அவனுக்குள் பூகம்பம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவளது வெட்கத்தை முழுவதுமாக தின்று தீர்த்து விடும் வேகம் அவனுக்கு. வெறும் முத்தம் யுத்தம் செய்யக் கூடுமா?

அவனுக்குள் நடந்ததே!

சத்தமில்லாமல் ஒரு யுத்தம்!

சில்லென்ற உணர்வு அவளுக்குள். அடி பாதம் வரை உடல் கூசிச் சிலிர்த்தது. கொஞ்சமும் மறுக்கத் தோன்றவில்லை. இன்னமும் ஆழ்ந்து விட சொன்னது அவளது மனது. பொதுவிடம் என்ற கூச்சம் அவளை தடுத்தாட்கொண்டிருந்தது!

முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தவளின் சம்மதம் அவனுக்குள் சிலபல அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தது. அந்த நொடியே அவளை தனியாக கவர்ந்து சென்று அவனது கனவுகளை மெய்ப்பித்து கொள்ள வேண்டும் என்பது போன்ற உணர்வு… நிதானமாக அவளது உதடுகளை விடுவித்தவன், மென்மையாக கண்களில் முத்தமிட்டான்.

அவனது உதடுகள் கரித்தது…

அவளது கண்களில் மெல்லிய கண்ணீர் திரை!

அவளை விடுவித்து, “என்ன மஹா?” என்று கேட்க, அவளால் அவனது கண்களை பார்க்க முடியவில்லை.

“ஐ ஃபீல் லைக்… லைக்…” வார்த்தைகளுக்கு தடுமாறியவள், “பயமா இருக்கு…” திக்கித் திணறியபடி கூற, அவளது அந்த பயமும் வெட்கமும் கூச்சமும் தனக்கு மட்டுமே உரியது என்ற உணர்வில் அவளை முழுவதுமாக விழுங்கி விடுவதை போல பார்த்தான்.

அவளை இன்னமும் நெருங்கி அமர்ந்தவன், அவளது இடையை தன்னை நோக்கி இழுத்து,

“எதுக்கெல்லாம் பயமா இருக்குன்னு சொல்லு… கிளியர் பண்ணிடலாம்…” விஷமமாக புன்னகைத்தான். உதடை கடித்துக் கொண்டு அவனை முறைத்தாள் அவள்.

அவளது உதட்டை இழுத்து விடுவித்தவன், “அத ஏன்டி கஷ்டப்படுத்தற?” என்றவன், அவளது உதடுகளை மீண்டும் நாட, அவளது தேகமெங்கும் வெட்க சிவப்பு!

“விடு ஷ்யாம்…” ஐஸ்க்ரீம் குரல் அவனது காதில் குழைந்து காணாமல் போக, அவளை விடும் எண்ணமே இல்லாமல், மெதுவாக அவளை விட்டான். புருவத்தை உயர்த்தி மென்மையாக புன்னகைத்து, “கொஞ்சம் சரி பண்ணிக்க…” என்றவன், தானும் தன்னை ஆராய்ந்து கொண்டு,

“மஹா…” என்றழைக்க, அவளால் நிமிர்ந்து அவனை பார்க்க முடியவில்லை.

“போலாமா?” என்று கேட்க, மெல்ல தலையாட்டினாள்.

பார்க்கிங்கிலிருந்து இறங்கி நடந்து வந்தவர்களை கேமராக்கள் சூழ்ந்து கொண்டது… வெளிச்சங்கள், மின்னி மின்னி மறைந்தது…

உண்மையில் அவள் பயந்து போனாள். அந்த கேமரா வெளிச்சம் புதிது… மிகவும் புதிது… அதிலும் மேலே வந்து விழுந்து விடுவதை போல படம் பிடிக்க, அதில் அவள் இன்னுமே பயந்து பின்னடைய பார்க்க,

திரும்பி அவளைப் பார்த்தவன், கையை பிடித்து இழுத்து, அவளது இடையை தன்னோடு வளைத்துக் கொண்டான். அவளை பாதுகாப்பாக அழைத்து போக வேண்டும் என்பது மட்டுமே அந்த செயலில் தொக்கி நிற்க, அவள் இன்னும் நடுங்கிப் போனாள்.

அதோடு அவளை நடந்தி செல்ல, பார்த்த ஒவ்வொருவரின் புருவமும் உயர்ந்தது.

எத்தனை பழக்கங்கள் இருந்தாலும், பகிரங்கமாக யாரையுமே அழைத்து வந்தது இல்லை. முதன் முறையாக ஒரு பெண்ணோடு ஷ்யாம் வந்திருக்கிறான் என்பது அந்த விழாவில் தலைப்பு செய்தியானது.

“சர்… மேடமை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்…” மகாவை காட்டி நிருபர்கள் கேட்க, பதில் கூறாமல் புன்னகையோடு கடந்து செல்ல முயன்றான்.

“சர்… எப்ப கல்யாணம்?” என்ற வகையான கேள்விகளுக்கும் அவன் பதில் கூறவில்லை.

“சர்… சௌஜன்யா அவ்வளவு தானா?” ஒரு நிருபர் கோக்குமாக்காக கேட்டு வைக்க, சௌஜன்யாவா? அது யார் என்று தான் எண்ணினான்.

“சௌஜன்யாவா, அது யார் பாஸ்?” என்று பதிலுக்கு இவன் கேட்க, தலைகுனிந்தபடி இதை கேட்டுக் கொண்டிருந்த மகாவுக்கு உண்மையில் அந்த கேள்வியால், அவள் அடுப்பின் மேல் அமர்ந்ததை போல இருந்தது. இன்னொரு பெண்ணோடு அவனது பெயர் சேர்ந்து ஒலிப்பதை கூட அவள் விரும்பவில்லை. அவளிடம் அவன் எதையுமே மறைக்காமல் கூறியிருந்தாலும், அந்த களம் என்பது அவளுக்கு பதட்டத்தை கொடுத்தது. பிடிக்கவில்லை. தனக்கு மட்டுமே சொந்தமான பொருளை விட்டுக் கொடுக்க முடியாத, விட்டுக் கொடுப்பதையும் நினைக்க முடியாத நிலையில் இருந்தாள் மஹா!

“என்ன சர்… இப்படி கேட்டுட்டீங்க?” என்று அந்த நிருபர் வியக்க,

“பாஸ்… நம்ம ஹோம் மினிஸ்ட்ரி பக்கத்துல இருக்காங்க… குடும்பத்துல கும்மி அடிக்க பார்க்கறீங்களே…” என்று சிரித்தவனை பார்த்து அங்கிருந்த அனைவருமே சிரிக்க, மெல்ல அங்கிருந்து நழுவினான்.

கேமராக்களிடமிருந்து தப்பித்து இருக்கையை நோக்கி வந்தவனை, பார்ப்பவர்கள் அனைவருமே மரியாதையாக எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க, அனைத்தையும் சிறு புன்னகையோடு ஏற்றுக் கொண்டு சென்றான். அனைத்தையும் ஒரு ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டிருந்த மகாவுக்கு ‘சௌஜன்யா’ என்ற பெயர் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

விழா அமைப்பாளர்கள், அவசரமாக வந்து அவர்களது இருக்கைக்கு அழைத்துப் போக, ஷ்யாம் மகாவின் கைகளை விடாமல் பற்றியபடி இருந்தான்.

அவர்கள் இருவரையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்,

சௌஜன்யா!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் முப்பத்து ஏழு

மெளனமாக கடற்கரை மணலில் கால் புதைய நடந்து கொண்டிருந்தாள் மஹா. உடன் ஷ்யாம்!உத்தண்டி வீட்டுக்கு பின்னாலிருந்த கடற்கரையை தான் அவள் தஞ்சமடைந்து இருந்தாள். மனதுக்குள் சொல்ல முடியாத பயம்... ஏதோவொரு அச்சம். என்னவென்று அவளுக்கு சொல்ல தெரியவில்லை. மனதை கவ்வியது.சௌஜன்யாவின் கண்களை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்