arrow_back
50:50 அத்தியாயம் 1
50:50 chevron_right பகுதி 1 / 25

அத்தியாயம் 1

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.5/5 (2 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  – 1

நடுத்தர மக்கள் வாழும் பகுதி:

விடிந்தும் விடியாத வேளை. சூரிய பகவான் அருள் புரியாத காரணத்தினால் எங்கும் இருள் சூழ்ந்திருந்தது.

சமையல் அறையில் பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்கவே, சித்ரா மெத்தையில் புரண்டு படுத்தாள்.

அவள் புரண்டு படுக்க இடம் கொடுக்காமல், அவளை இடித்துக் கொண்டு படுத்திருந்தாள் ஐந்து வயதுக் குழந்தை சஞ்சனா. தாயின் அசைவில் குழந்தை தன் கை கால்களை உதைத்துத் திரும்பி படுத்தது.

“சித்ரா, மணி என்ன?” என்று தூக்க கலக்கத்தோடு கேட்டான் ஸ்ரீதர்.

“ஐந்து: ஐந்து” என்று கடுப்பாக சித்ரா கூற, “அது எப்படி, இவ்வளவு இருட்டிலும் சரியா சொல்ற?” என்று தூக்கத்திலும் தன் மனைவியைக் கேள்வி கேட்டான் ஸ்ரீதர்.

“ராதா எழுந்தா, மணி நாலு நாற்பத்தி ஐந்து. சமையல் அறையில் பாத்திரத்தை உருட்டினால் மணி ஐந்து: ஐந்து … ஜாகிங் போனா மணி ஐந்தரை… யோகா செய்தா மணி ஆறரை… மீண்டும் சமையல் அறைக்குச் சென்றால், ஏழேகால். நான் திருமணமாகி வந்திருக்கும் இத்தனை வருஷத்தில் அவ பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் இருந்து வேலைக்கு போயிருக்காளே தவிர, இதில் எந்த மாற்றமும் இல்லை.” என்று சலிப்பாக கூறினாள் சித்ரா.

“நல்ல விஷயம் தானே? இதுக்கு ஏன் சலிச்சிக்குற?” என்று தன் தங்கைக்குச் சாதகமாக பேசினான் ஸ்ரீதர்.

“சலிப்பு என்ன சலிப்பு… நாத்தனார் கூடமாட வேலை செய்யலைன்னு தான் எல்லாரும் சலிச்சிப்பாங்க. இங்க அவ செய்ற வேலையைக் கொஞ்சம் பகிர்ந்துக்கணுமுன்னு நினைத்தாலும் என்னால் முடியலை. அவ்வளவு வேகம், அவ்வளவு ஒழுங்கு, அவ்வளவு நேர்த்தி…” என்று தன் கண்களை உருட்டிய படி சித்ரா கூறினாள்.

“இது பாராட்டா? இல்லை தன் இயலாமையா?” என்று சித்ராவுக்கு தெரியவில்லை. ஸ்ரீதருக்கும் புரியவில்லை.

“அம்மாவும் எதுவும் சொல்றதில்லை. நீ ஏன் புலம்பற.” என்று ஸ்ரீதர் மெத்தையில் திரும்பி படுத்து சமாதானமாக கூறினான்.

“ஐயோ! அத்தை பாவம். ராதா பேசுற பேச்சுக்கு, அவ போடுற சட்டதிட்டத்துக்கு, வர போற மாப்பிள்ளையும், மாமியாரும் பாவமுன்னு இப்பவே வருத்தப்படுறாங்க.” என்று சித்ரா மெத்தையில் எழுந்தமர்ந்து புன்னகையோடு கூறினாள் சித்ரா.

‘ராதா அமைதியானவள். பேசினால் நறுக்கு தெறித்தார் போல் இருக்கும். ஆனால், அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சரியாக இருக்கும். அவள் ஒழுங்காக இருப்பாள். அதை மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பாள்’ என்று தன் தங்கையைப் பற்றி பெருமையாகச் சிந்தித்தான் ஸ்ரீதர்.

மணி ஏழு பதினைந்து

ராதா யோகாவை முடித்துவிட்டு, தன் அன்னைக்கும், அண்ணிக்கும் உதவியாகச் சமையல் அறை நோக்கிச் செல்ல, தூக்கக் கலக்கத்தோடு சிணுங்கிக் கொண்டே எழுந்து வந்த சஞ்சனா ராதாவை பார்த்த உடன், “அத்தை… என்னை பார்த்துட்டாங்க. அப்பா… பிரஷ் பண்ணுங்க” என்று தன் தந்தையை நோக்கி ஓடினாள்.

ராதாவின் தாய் மீனாட்சி, தந்தை லோகநாதன் இருவரும் இந்தக் காட்சியை பார்த்துச் சிரித்தனர். ராதா சஞ்சனாவை கனிவாகப் பார்த்தாள்.

சஞ்சனவை பார்த்துச் சிரித்து கொண்டே வந்த சித்ரா, “சஞ்சு, என் கிட்ட எப்படி ஏமாத்துற? உங்க அத்தையைப் பார்த்த உடனே அப்படியே நல்ல பிள்ளை மாதிரி ஓடுறியே?” என்று அங்கலாய்த்தாள்.

“நல்ல பிள்ளை மாதிரி என்ன? சஞ்சு குட்டி, வெரி வெரி குட் கேர்ள். என்னமா?” என்று சஞ்சனாவை பார்த்து தன் தலை அசைத்து செல்லமாக ராதா கேட்க, தன் தந்தையின் தோளில் சாய்ந்து அவளைப் பார்த்து மேலும் கீழும் சிரித்த முகமாகத் தலை அசைத்தாள் சஞ்சனா.

“பிரஷ் பண்ணிட்டு, குளிச்சிட்டு வரேன் த்தை. எனக்கு இன்னக்கி புது ஹேர் ஸ்டைல்” என்று ராதாவை பார்த்து சஞ்சனா செல்லம் கொஞ்ச, சிரித்த முகமாக தன் கட்டை விரலை உயர்த்தி, “கண்டிப்பா செய்திருவோம்…” என்று கூறினாள் ராதா.

“அது எப்படியோ, கண்டிக்கவும் செய்ற… கொஞ்சவும் செய்யற. இப்படி தான் ஸ்கூலில் எல்லாக் குழந்தையும் சமாளிப்ப போல…” என்று தனக்கு தானே சித்ரா கூற, ராதா மௌனமாகச் சிரித்தாள்.

கண்டிப்பும் அன்பும் நிறைந்தவள் ராதா.

“ராதா. ஒரு மாப்பிள்ளை வீடு. மாப்பிளை பெயர் நிரஞ்சன். நல்ல குடும்பம். அண்ணன் விசாரிச்சிட்டான். விசாரிச்சதுல நல்ல பையன்னு சொல்றாங்க. ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. அம்மா பேச்சை தட்டாத பிள்ளை. ரொம்ப உயர்வா சொல்றாங்க. மாப்பிள்ளையோட தங்கை வெளி நாட்டில் இருக்காங்க. அவங்க வந்ததும் அடுத்த மாசம் உன்னைப் பெண் பார்க்க வரோமுன்னு சொல்றாங்க. நீ என்ன சொல்ற?” என்று ராதாவின் தந்தை கேள்வியாக நிறுத்தினார்.

“அண்ணா, அண்ணி, அம்மா அப்புறம் உங்களுக்கு பிடிச்சிருந்தா, எனக்கு முழு சம்மதம் அப்பா.” என்று தன் தந்தையைப் பார்த்து நிதானமாக எந்த வித பதட்டமுமின்றி கூறினாள் ராதா.

“நம்ம பெண்ணை பற்றி தெரியாதா?” என்று ராதாவின் தாய் பெருமையாகக் கூறிக்கொண்டு சமையல் அறை நோக்கிச் சென்றார்.

“நானும் எட்டரை மணிக்குள் ஸ்கூலுக்கு போகணும்.” என்று கூறிக்கொண்டு தன் வேலையைச் செய்ய தொடங்கினாள் ராதா.

சமையல் அறைக்குள் சென்ற ராதா, “அம்மா இதை ஏன் இங்க வச்சிருக்கீங்க?” என்று கேட்டுக்கொண்டே, அந்த இடத்தை சுத்தப் படுத்தினாள்.

“இதை ஏன் ராதா இப்ப செய்ற? வேலை செய்ற அம்மா வருவாங்க.” என்று சித்ரா, காய் நறுக்கியபடியே கூறினாள்.

“அண்ணி, அவங்க வர பதினோரு மணி ஆகும். அதுவரைக்கும் இதை இப்படியே விட முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தாள் ராதா.

“ராதா. மாமியார் தான் மருமகளை, இது சரி இல்லை… அது சரி இல்லைன்னு சொல்லணும்… இது தான் கால காலமா வழக்கம். உன் கதையில் நீ சொல்லுவ போல இருக்கே…” என்று சித்ரா கேலி பேச, “போங்க அண்ணி…” என்று வெட்கப்பட்டுப் புன்னகைத்தாள் ராதா.

அதே நேரம் மேல்தட்டு வர்க்கத்தினர் வாழும் பகுதி.

தெருவில் இருக்கும் அனைவருக்கும் கேட்கும் அளவிற்கு அந்த பங்களாவில்அலாரம் ஒலித்துக் கொண்டிருந்தது.

அலாரம் சத்தத்தை தவிர, வேறு சத்தம் எதுவும் இல்லை. தோட்டக்காரர் சாய்வாக தோட்டத்தில் அமர்ந்திருந்தார். வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்மணி முகத்தை சுழித்துக் கொண்டு வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள். வீடு சிகெரெட் வாடை சூழ்ந்திருந்தது. மது அருந்தியதன் அறிகுறியாக ஆங்காங்கே பல பாட்டில்கள் சிதறிக் கிடந்தது.

ஒலித்துக் கொண்டிருந்த அலாரம் வீடெங்கும் எதிரொலித்து.

“யது… கெட் அப் … மணி ஏழரை…” என்று கீச்சு குரலில் அலறிக் கொண்டிருந்தது அந்தக் கடிகாரம்.

“டார்லிங்! ப்ளீஸ் சும்மா இரு.” என்று செல்லமாக அதன் தலையில் தட்டினான் யது.

போதை மயக்கத்தில், தன் ஒரு கண்ணை திறந்து, மணி பார்க்க, அது ஏழு முப்பத்தி மூன்று என்று காட்டியது.

இன்று மீட்டிங் இருப்பது நினைவு வர அவசரமாக எழுந்தமர்ந்து, அவன் அருகே இருந்த ஸ்விட்ச்சை அழுத்தினான்.

அவசரமாகக் காபி கோப்பையோடு ஓடி வந்தார் சமையல்காரர்.

“தேங்க்ஸ்…” என்று தூக்கம் கலந்த புன்னகையோடு கூறினான் யது.

காபி குடித்ததும் சற்று தெளிவு வரக் குளியலறை நோக்கிச் சென்றான்.

ஒரு ஆங்கில பாடலை முணுமுணுத்து தன் அறையில் தனக்கு தேவையான பொருட்களை தேடிக் கொண்டிருந்தான்.

ஆங்கில பாடலை ரசிப்பவர்களுக்கு, அவன் பாடுவது போலும், மற்றவர்களுக்கு அவன் சத்தம் செய்து கொண்டிருப்பது போலவும் இருப்பதால், அங்கு வந்த சமையல்காரர் அவனை மேலும் கீழும் பார்த்தார்.

அவரைப் பார்த்து, “என்ன?” என்பது போல் கண் உயர்த்த, “காலை உணவு என்ன பண்ணட்டும்?” என்று பவ்யமாக கேட்டார்.

“பதினைந்து நிமிடத்தில் என்ன பண்ண முடியுமோ? அது.” என்று புருவம் உயர்த்திக் கூற, சமையல்காரர் சம்மதமாக தலை அசைத்துச் சமையல் அறை நோக்கி நடந்தார்.

தன் குளியலை முடித்து, அவசரஅவசரமாக கார்ன் பிளக்ஸ் சாப்பிட்டுவிட்டு, வேகவேகமாக தன் அலுவலகத்திற்குக் கிளம்பினான் யது.

வீட்டைச் சுத்தம் செய்து கொண்டிருந்த பணியாளை பார்த்து, “ஓ… சாரி… இன்னக்கி நிறைய வேலை” என்று முகம் சுளித்து, தன் கையிலிருந்து ஐந்நூறு ரூபாயை எடுத்து அவள் முன் நீட்ட, அவள் அதைச் சிரித்த முகமாகப் பெற்றுக்கொண்டாள்.

அப்பொழுது யதுவின் பின் பக்கம் நின்று கொண்டு அவளிடம் தோட்டக்காரர், ஏதோ கண்களால் செய்கை காட்ட, “என்ன மாரிமுத்து, உன் பொண்டாட்டியிடம், ரூபாய் கொடுக்கிற அளவுக்கு வேலையும் இருக்குமுன்னு செய்தி சொல்றியா?” என்று அவன் பக்கம் திரும்பாமலே கேட்டான்.

‘இவருக்கு எல்லாப் பக்கமும் கண் இருக்குமோ?’ என்று சிந்தித்த படி, “அதெல்லாம் இல்லங்கயா… உங்க தாராள மனசு எங்களுக்குத் தெரியாதா?” என்று அசடு வழிந்தான்.

“சரி சரி… வேலையை பாருங்க…” என்று அசட்டையாக கூறினான் யது.

யது தன் அலுவலகம் நோக்கி வேகமாக காரை செலுத்த, நிதானமாக தன் வண்டியை எடுத்துக் கொண்டு தன் பள்ளிக்கூடம் நோக்கிச் சென்றாள் ராதா.

ராதா தன் வண்டியைப் பள்ளிக்கு எதிரில் இருக்கும் வண்டி நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு, பள்ளியை நோக்கிச் செல்ல, அப்பொழுது அவர்கள் பள்ளி மாணவியை வேகமாக வந்த யதுவின் கார் சிராய்த்துக் கொண்டு சென்றது.

“ஐயோ…” என்று ராதாவின் அலறலும், “அம்மா…” என்று அந்த மாணவியின் அலறலும் எதிரொலித்தது.

அதற்குள் அங்குக் கூட்டம் கூட, தன் காரை சற்று நிதானப்படுத்தி கண்ணாடி வழியாக அங்கு நடப்பவற்றைப் பார்த்தான் யது.

தன் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்து, ‘மீட்டிங்கு நேரம் ஆகிருச்சு…’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு காரை அலுவலகம் நோக்கி வேகமாகச் செலுத்தினான் யது.

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 2

அத்தியாயம்  – 2ராதா அந்த மாணவியை நோக்கிச் செல்ல, “காரில் போனா கண்ணுமுன்னு தெரியாது" என்று ராதாவிடம் கோபமாகக் கூறினாள், அவளோடு பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை.“அவங்க கீழே விழுந்ததை கவனிக்காம கூடப் போயிருக்கலாம் இல்லை? தெரியாமல் யாரையும் தவறு சொல்லக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்