arrow_back
50:50 அத்தியாயம் – 2
50:50 chevron_right பகுதி 2 / 25

அத்தியாயம் – 2

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  – 2

ராதா அந்த மாணவியை நோக்கிச் செல்ல, “காரில் போனா கண்ணுமுன்னு தெரியாது” என்று ராதாவிடம் கோபமாகக் கூறினாள், அவளோடு பள்ளியில் பணிபுரியும் சக ஆசிரியை.

“அவங்க கீழே விழுந்ததை கவனிக்காம கூடப் போயிருக்கலாம் இல்லை? தெரியாமல் யாரையும் தவறு சொல்லக் கூடாது” என்று ராதா கண்டிப்பாக கூற, அந்த ஆசிரியை ராதாவை குழப்பமாகப் பார்த்தாள்.

 ‘ராதா எப்பொழுது சட்டம் பேசுவா? எப்பொழுது நடைமுறையை பேசுவா? என்று நமக்குப் புரியாது’ என்று எண்ணியவாறு தன் கவனத்தைக் கீழே விழுந்திருந்த மாணவியிடம் திருப்பினாள்.

 யது கம்பீரமாக நடந்து, தன் அலுவலகத்திற்கு உள்ளே செல்ல அங்கு உள்ள அனைவரும் மரியாதையாக எழுந்து நின்றனர்.

 அது ஒரு விளம்பர நிறுவனம். தந்தை தொடங்கிய மருந்து தயாரிக்கும் நிறுவனம் அவனது மேற்பார்வையில் இயங்கிக் கொண்டிருக்க, இந்த விளம்பர நிறுவனம், யதுவின் ஆசைக்காக, விருப்பத்திற்காக தொடங்கப்பட்டது.

 அவனது அறையில் இருந்த தன் தாய், தந்தை படத்தை கூர்மையாக எந்தவித உணர்ச்சியுமின்றி பார்த்தான் யது.

 சில வேலைகளை முடித்துவிட்டு, வேகமாக கான்பெரன்ஸ் ஹால் நோக்கி நடந்து செல்ல, செல்லும் வழியில் இருந்த கடவுள் சிலையை ஏளன புன்னகையோடு பார்த்தான் யது.

 மீட்டிங் முடிந்து, அனைவரும் கிளம்பி செல்ல, யது அவன் அறைக்கு வந்து தன் வேலையில் மூழ்கினான்.

 வேலைகளை முடித்து தன் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்க்க, மணி மூன்று என்று கூறியது.

 வயிறு ஏதோ முணுமுணுக்க, தான் அவசரமாகக் காலையில் கொறித்தது நினைவு வந்தது.

 உணவருந்தச் செல்லுகையில், காலையில் நடந்த சம்பவம் நினைவு வர, தன் நெற்றியைச் சுருக்கி, காரை நோக்கி நடந்தான் யது.

 யதுவின் கார் வேகமாக, பள்ளிக்கூடம் நோக்கிப் பறந்தது.

 யது பள்ளிக்குள் செல்ல, அங்கிருந்த தலைமை ஆசிரியர் மரியாதையாக எழுந்து நின்று, “வாங்க சார்.” என்று பவ்யமாக கூறினார்.

“இன்னக்கி காலையில் உங்க ஸ்கூல் பெண்ணுக்கு…” என்று யது தயக்கமாக நிறுத்தினான்.

“ஆமாம்…” என்று வேகமாக மரியாதையாக தலை அசைத்த தலைமை ஆசிரியர், “மிஸ். ராதா கூட போயிருந்தாங்க…” என்று பேசுபவரை இடைமறித்து, “நான் அவங்களை பார்க்கணும். கூப்பிடுங்க.” என்று அழுத்தமாகக் கூறினான் யது.

 ‘நான் சொல்வதை கேட்க மாட்டார் போல.’ என்று மனதிற்குள் எண்ணியவராக, “அவங்க கிளாசில் இருப்பாங்க. கிளாஸ் எடுக்கும் பொழுது வரமாட்டாங்க.” என்று பரிதாபமாக கூறினார் தலைமை ஆசிரியர்.

 ‘சம்பந்தப்பட்டவரை நேரில் பார்க்க வேண்டும்’ என்று எண்ணிய யது, அவரைக் கூர்மையாக பார்த்தான்.

 யதுவின் பார்வையின் பொருள் புரிந்து, தன் கண்ணாடியை சரி செய்து கொண்டு, அங்குப் பணி புரியும் வேலையாளை அழைத்து, ராதாவை அழைத்து வரச் சொன்னார்.

 பாடம் எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இருபது நிமிடத்தில் வருவதாகவும் ராதாவிடமிருந்து செய்தி வந்தது.

 ‘இன்னும் இருபது நிமிடம்’ என்ற எண்ணம் தோன்ற, “எந்த கிளாஸ்? எங்கு?” என்று கேட்டுக்கொண்டு வகுப்பறை நோக்கி நடந்தான் யது.

 ‘இவரைப் போன்ற பெரும் புள்ளியை நான் பகைத்து கொள்ளக் கூடாது. மீடியா, காலேஜ், மருத்துவம் போன்ற அனைத்து இடங்களிலும் செல்வாக்கு உள்ளவரை நான் எப்படிக் கட்டுப்படுத்துவது? இது அந்த ராதா பெண்ணுக்கு சொன்னாலும் புரியாது. என்ன நடக்கப் போகுதோ!’ என்று எண்ணியவராகத் தலைமை ஆசிரியர் யது செல்லும் திசையை அமைதியாகப் பார்த்தார்.

 ‘நம்மள பார்க்க, நாலாயிரம் பேர் காத்து கிடப்பாங்க. இந்த அம்மாவைப் பார்க்க நான் இருபது நிமிஷம் காத்திருக்கணுமா?’ என்ற எண்ணம் தோன்ற முகத்தை சுளித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி நடந்தான்.

 ஆசிரியர் என்றவுடன், சேலை, மூக்குக்கண்ணாடி, ஒரு பிரம்பு போன்ற எண்ணம் யதுவிற்கு தோன்றியது.

 அந்த வகுப்பறையில், நீல நிறத்தில் காட்டன் சுடிதார் அணிந்த இளம் பெண், கண்களில் கண்டிப்போடு, சிரித்த முகமாக ஏதோ விளையாட்டாகப் பேசிக்கொண்டிருக்க, ‘காலம் மாறிவிட்டது’ என்றெண்ணி மெலிதாக புன்னகைத்தான்.

 ராதா பேசிக்கொண்டிருந்த விதமும், குழந்தைகள் அவளை ஆர்வமாகப் பார்க்கும் விதமும், அவளை இடையூறு செய்ய மனம் இல்லாமல் அவளைப் பார்த்தபடி வகுப்பறைக்கு எதிரில் நின்றான்.

 கருகருவென்று நீளமான மூடி அவள் பேசுகையில் அசைந்தாடியது. நல்ல உயரம். பொதுவாக அவன் உயரத்தின் காரணமாக, அனைத்துப் பெண்களும் குள்ளமாக இருபது போன்று அவனுக்குத் தோன்றும் எண்ணம் இன்று யதுவிற்கு தோன்றவில்லை. புது நிறத்தை விடச் சற்று கூடுதலான நிறம். அவள் பேசும் பொழுது அவள் உதடுகளோடு பேசிய கண்கள். ‘பேரழகி எல்லாம் இல்லை’ என்ற எண்ணம் தோன்றியது யதுவிற்கு.

 ‘அவன் வட்டாரத்தில், இவனோடு பழக துடிக்கும் பெண்கள் அருகில் இவள் சுமார் ரகம் என்று கூறலாம்.’ என்று எண்ணினான் யது.

           ராதாவை பார்த்த உடன் முதலில் அவனுக்கு அவள் அழகைப் பற்றி தான் யதுவிற்கு எண்ணத் தோன்றியது.

 ராதாவை பார்த்துக் கொண்டிருந்த யது, அவள் பேச்சில் கவரப்பட்டு வகுப்பறையில் நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

 ராதா கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறும் குழந்தைகளின் கையில் ஸ்டிக்கர் ஓட்டினாள்.

 சிறிது நேரத்தில், “சூப்பர். எல்லாரும் பதில் சொன்னதால், இந்தப் பச்சை நிற ஜாரில், பத்து கூழாங்கற்கள்.” என்று கூறி பச்சை நிற ஜாரில் பத்து கூழாங்கற்களை வைத்தாள்.

 அதன் பின், “ஏதாவது தப்பு செய்தா, சிகப்பு ஜாரில் தான் கூழாங்கற்கள். எல்லாருக்கும் படிப்பை விட, ஒழுங்கு தான் முக்கியம். நீங்க ஒழுங்கா இருந்தா படிப்பு தானா வரும்.” என்று செல்லமாக குழந்தைகளை மிரட்ட, குழந்தைகள் வேகமாகத் தலை அசைத்தன.

 ராதாவின் பேச்சு, அவள் செய்கை இவை அனைத்தும் யதுவின் மனதில் அவள் மேல் மரியாதையை ஏற்படுத்தியது.

 மணி ஓசை ஒலிக்க, மற்ற வகுப்பு குழந்தைகள் வேகமாக ஓடுவதும், ராதாவின் வகுப்பில் இருந்து வரும் குழந்தைகள் வரிசையாக வருவதையும் கவனித்தான் யது.

 மாணவர்கள் சென்ற உடன் அங்கிருந்த நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கம்பீரமாக அமர்ந்தாள் ராதா.

 அப்பொழுது யது உள்ளே செல்ல, நாற்காலியில் சாய்ந்து தன் முகத்தை உயர்த்தி, கண்களைச் சுருக்கி யதுவை பார்த்தாள் ராதா.

 யது நின்று கொண்டிருக்க, “உங்க குழந்தை இந்த கிளஸ்ஸா?” என்று கேட்டுக்கொண்டே, ராதா அவனைக் கேள்வியாக நோக்க, ‘இவள் குழந்தைகளை பற்றி மட்டும் தான் பேசுவாள் போலும்…’ என்று எண்ணினான் யது.

 யது ராதாவை பார்த்து, “அதுக்கு இன்னும் பல வருஷம் ஆகும்.” என்று நக்கலாகக் கூறினான்.

 யதுவின் பதில் புரிந்து, “அப்படினா, நீங்க பல வருஷம் கழித்து என்னைப் பார்க்க வாங்க.” என்று சிரித்தமுகமாக கூறிவிட்டு, தன் முன் இருந்த புத்தகத்தில் இருந்து குறிப்பு எடுக்க ஆரம்பித்தாள் ராதா.

 ‘என்ன ஒரு நக்கல்!’ என்று எண்ணி யது அமைதியாக அவளைப் பார்த்தான்.

 ராதா தலை நிமிர்ந்து அவனைப் பார்த்து, “நீங்க வந்த விஷயத்தைச் சொன்னால் நல்லா இருக்கும். எனக்கு நிறைய வேலை இருக்கு…” என்று ராதா யதுவின் முகம் பார்த்து கூறினாள்.

 தான் நின்று கொண்டு, ஒரு சின்ன பெண் தன் முன் அமர்ந்து கொண்டு பேசுவது யதுவிற்கு கடுப்பை கிளப்பியது.

 ராதாவின் கறார் பேச்சால், தான் பேச வந்ததை ஆரம்பிக்கும் விதம் தெரியாமல் தர்ம சங்கடமாக உணர்ந்தான் யது.

 தன்னைப் பார்த்த உடன், தன் கம்பீரத்தில் மயங்கும் பெண்களையும், பயந்து பார்க்கும் பெண்களையும், இல்லை பிரமிப்பாக பார்க்கும் பெண்களை மட்டுமே பார்த்து பழகிய யதுவிற்கு ராதாவின் பார்வை பள்ளிக்கூடத்திற்கு வந்த உணர்வை முழுதாக கொடுத்தது.

 ராதாவின் அறையில், நின்று கொண்டிருந்ததை பார்த்து, தலைமை ஆசிரியர் ஒரு நாற்காலி அனுப்ப, ராதாவின் வகுப்பறைக்கு ஒரு நாற்காலி வந்தது.

 ‘ஓ, நீங்க கிளாஸ் மாறி வரலையா?’ என்று தன் எதிரே நாற்காலியில் அமர்ந்திருந்த யதுவை பார்த்து நக்கல் தொனித்த குரலில் கேட்டாள் ராதா.

 அப்பொழுது அங்கு வந்த தலைமை ஆசிரியர், “யது சார்…” என்று தயக்கமாக ஆரம்பிக்க, ராதா அவரைப் பார்த்து எழுந்து நின்றாள்.

 ‘யது… இதன் விரிவாக்கம் என்னவாக இருக்கும்? யாதவ், யாதேஷ், யாதவப்ரகாஷ்’ என்று ராதாவின் சிந்தனை ஓடியது.

“நான் பேசிக்கிறேன். நீங்க கிளம்புங்க.” என்று அழுத்தமாகக் கூற தலைமை ஆசிரியர் அமைதியாக வெளியே சென்றார்.

 அவர் சென்ற உடன், நாற்காலியில் அமர்ந்த ராதா, “நீங்க வந்து ஐந்து நிமிஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் நீங்க வந்த விஷயத்தைச் சொல்லலை.” என்று ராதா கடுப்பாக கூறினாள்.

“நீங்க கேட்க தயாராக இருக்கிற மாதிரி எனக்குத் தெரியலை. வந்ததிலிருந்து நீங்க என்னைக் கிளம்ப சொல்றதிலேயே குறியா இருக்கீங்க…” என்று யது கேலியாக கூற, “நான் பெற்றோர்கள் தவிர யார் கிட்டயும் பேசறதில்லை.” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.

ராதாவின் கொள்கை, அவள் பேச்சு அவனுக்குச் சுவாரசியம் தட்ட, “உங்க கிட்ட பேசுறதுக்காக நான் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?” என்று பேச்சை வளர்த்தான் யது.

 ‘யது உனக்கு நிறைய வேலை இருக்கு டா. இன்னும் சாப்பிட கூட இல்லை. இந்தப் பெண் கூட உனக்கென்ன பேச்சு?’ என்று யதுவின் மனம் அவனை இடித்துரைத்தது.

“நீங்க எதுக்கு என் கூட பேசணும்?” என்று ராதா நேரடியாகக் கேட்டாள்.

“காலைல ஒரு ஸ்டுடென்ட் கீழ விழுந்துட்டாங்க. அவங்களை நீங்க ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்கீங்க.” என்று யது நிதானமாகக் கூற, “கீழ விழலை. கார் இடிச்சிட்டு போயிருச்சு… சோ, நீங்க தான் இடிச்சிட்டு போயிருக்கீங்க. தெரிந்தே நிறுத்தாமல் போயிருக்கீங்க?” என்று தன் புருவம் உயர்த்தி, கேள்வியாக நிறுத்தினாள்.

 அவன் கையிலிருந்த ரூபாய் கட்டை எடுத்து அவள் மேஜை மீது வைத்து, “எவ்வளவு செலவாச்சோ, அதை அவங்க பரென்ட்ஸ் கிட்ட கொடுத்திருங்க. காலையில் அவசர வேலையா போக வேண்டியதாகிருச்சு.” என்று வார்த்தையில் இருந்த கனிவு குரலில் இல்லாமல் பேசினான்.

 அவன் பணத்தை கொடுத்த செயல் ராதாவின் கோபத்தை சீண்ட, “அந்த பொண்ணு ஸ்பாட் டெட்…” என்று மெதுவாக கூறிக் கொண்டிருக்கும் பொழுது அவளை இடைமறித்தான் யது.

விபத்தால் ஏற்படும் எதிர்பாரா மரண வலி அவன் அறியாததா?

 ராதாவின் அந்த சொல் யதுவை ஒரு நொடி செயலிழக்க வைத்து முதுகுத் தண்டை சில்லிட வைத்தது.

ஒரு நொடிக்குள் தன்னை சுதாரித்துக் கொண்டான் யது.

 ‘இருக்காது. அப்படி இருந்தால் தலைமை ஆசிரியர் சொல்லி இருப்பார். நான் கண்ணாடி வழியாகப் பார்த்த பொழுது, அவள் நடந்து செல்வதை கவனித்தேன்’ என்று தனக்கு தானே அழுத்தமாக நிதானமாகக் கூறிக்கொண்டு ராதாவை கோபமாக பார்த்தான்.

 ராதா கண்ணிமைக்காமல் அவனைப் பார்க்க, “என்ன பணம் பறிக்க புது யுக்தியா? உதவி செய்ற மாதிரி செய்திட்டு இப்படியும் பணம் பறிக்கும் எண்ணமா?” என்று யது அழுத்தமாகக் கேட்டான்.

“காலம் புரியாதவரா இருக்கீங்களே? ஊசலாடுற உயிருக்குத் தான் காசு பறிக்க முடியும். போன பிறகு ஐந்து பைசா வசூலிக்க முடியாது.” என்று ராதா மென்மையான குரலில் கூறினாள்.

“நீ பொய் சொல்ற.” என்று யது கோபமாக கூற, “மரியாதையா பேசுங்க. எனக்கும் உங்களை மாதிரி பேச தெரியும்…” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.

 ‘இருக்கிறது ஒரு கிளாஸ் ரூமுக்குள்ள… ஆனா நினைப்பென்னவோ, இது ஒரு ராஜ்ஜியம் மாதிரியும், இவங்க மகாராணியும் மாதிரி…’ என்று கடுப்பாக எண்ணி, அங்கிருந்து எழுந்தான்.

“நான் இன்னும் பேசிமுடிக்கலை. நீங்க அதுக்குள்ள எழுந்து போனால் எப்படி?” என்று நாற்காலியில் சாய்ந்து யாதுவை பார்த்து ராதா கேட்க, யது அவளைக் கூர்மையாக பார்த்தான்.

“அந்த பொண்ணு ஸ்பாட் டெட் ஆகிருந்தா, உங்க பணம் எதுக்கு உதவிருக்கும்?” என்று ராதா அவனைப் பார்த்து கோபமாகக் கேட்க, “அது தான் அப்படி எதுவும் நடக்கலை இல்லை…” என்று யது திமிராக கூறினான்.

“நடந்திருந்தால்?” என்று ராதா அழுத்தமாகக் கேட்க, “நீங்க செய்றது விதண்டாவாதம்.” என்று யது கோபமாக கூறினான்.

“ஓ. காலையில் இடிச்சிட்டு, சாயங்காலம் சாவகாசமா பணம் கொண்டுவந்து கொடுக்கிறது நியாயம். நான் பேசுவது விதண்டாவாதம்?” என்று ராதா அவனைப் பார்த்து கேட்க, “உங்களுக்கு இப்ப என்ன வேணும்?” என்று நிதானமாகக் கேட்டான்.

“காலையில், பணம் கொடுத்து ஹாஸ்பிடல் செலவை நான் பார்த்துட்டேன். பணம் கிடைக்கும்னு யாரும் எதையும் செய்யலை. உங்க பணத்தை எதிர்பார்த்து பரென்ட்ஸ் இல்லை. பணத்தை எடுத்துட்டு, வெளிய போங்க.” என்று கோபமாக கூறினாள் ராதா.

 எழுந்து நின்றவன் மீண்டும் நாற்காலியில் அமர்ந்து, “எனக்குக் கொடுத்து தான் பழக்கம், வாங்கி இல்லை.” என்று ராதாவின் முகம் பார்த்து அழுத்தமாகக் கூறினான்.

“பணம் மட்டும் தான் வாங்கி பழக்கம் இல்லையா? இல்லை நல்ல பெயர் கூட வாங்கி பழக்கம் இல்லையோ?” என்று ராதா நக்கலாகக் கேட்ட படி தன் வேலையைத் தொடங்கினாள்.

 ராதா கேட்ட கேள்வியில் யது அடிபட்ட பாம்பாய் அவளைச் சீற்றமாக பார்த்தான். அவனுடைய அத்தனை பழக்கவழக்கங்களும் அவன் கண்முன் தோன்றி கோபமாக மாறி கண்களில் கனலாய் எரிந்தது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் – 3

அத்தியாயம்  – 3 யது கோபமாக முறைத்துக் கொண்டிருக்க, “உண்மை சுடத்தான் செய்யும். கோபம் வரத் தான் செய்யும்." என்று யதுவின் முகம் பார்த்து கூறியபடியே தன் முன் இருந்த புத்தகத்தை மூடிவைத்தாள் ராதா.“நீங்க யார் கிட்ட பேசிகிட்டு இருக்கீங்கன்னு தெரியுமா?" என்று…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்