arrow_back
50:50 அத்தியாயம் 23
50:50 chevron_right பகுதி 23 / 25

அத்தியாயம் 23

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  23

 ராதா மயங்கி விழுந்த அந்த நொடி, யதுநந்தனின் அகங்காரம் நொறுங்கி, கோபம் சிதறி அன்பு மேலோங்கியது.

“ராதா… ராதா…” என்று யதுநந்தன் பதட்டத்தோடு அழைக்க அனைவரும் அங்குச் சூழ்ந்தனர்.

 தண்ணீர் தெளிக்க, சற்று நிதானமடைந்து அங்குச் சோர்வாக சாய்தமர்ந்தாள் ராதா.

“ராதா…” என்று யதுநந்தன் அவளை அணைத்துக் கொண்டு, மென்மையாக அழைத்தான்.

 ராதா அழுத்தமாக, பிடிவாதமாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு யதுநந்தனிடம் பேச வேண்டும். அவனிடம் சண்டை போட வேண்டும். சட்டையைப் பிடித்து நான்கு கேள்வி கேட்க வேண்டும்.

 ஆனால் அங்கு அனைவரும்இருந்ததால் அமைதி காத்து, மெளனமாக அமர்ந்திருந்தாள் ராதா.

“ராதா… ஹாஸ்பிடல் போய் ஒரு செக் பண்ணிக்கலாம்.” என்று யதுநந்தன் மென்மையாகக் கூற, “ம். ச்…” என்று சலிப்பாக குரல் எழுப்பினாள் ராதா.

“எனக்கு ஒன்றும் இல்லை. சரியாகச் சாப்பிடலை… தூங்கலை… அது தான் அந்த மயக்கம்.” என்று அழுத்தமாகக் கூறினாள் ராதா.

“நாங்களும் அதைத் தான் சொல்றோம் ராதா… பாரு மயக்கம் வரும் அளவுக்குப் பலவீனமா இருக்க.” என்று பொறுமையாக கூறினான் யதுநந்தன்.

“பரவாயில்லை. உங்களுக்கு என் மேல் அக்கறை இருக்கு.” என்று ராதா யதுநந்தனுக்கு மட்டும் கேட்பது போல் முணுமுணுக்க, “இதைக் கொஞ்சம் சத்தமா சொல்றது.” என்று அவள் காதில் கிசுகிசுத்தான் யதுநந்தன்.

 ராதா அவனைக் கோபமாக முறைக்க, “ராதா… கிளம்பு வீட்டுக்கு போறோம்.” என்று கம்பீரமாக கூறினான்.

 ராதா மறுப்பாகக் கூற எத்தனித்து அவனைப் பார்க்க, யதுநந்தனின் கண்கள் அவளைக் கூர்மையாக பார்த்தன.

அவன் கண்களில் இருந்த அன்பு, கட்டளை, பாசம், காதல் அல்லது கண்டிப்பு எதுவென்று ராதாவிற்கு தெரியவில்லை கட்டுண்டு அமைதியாகக் கிளம்பினாள்.

 ஆனால், அவள் மனம் எரிமலையாகக் குமுறியது.

 ராதாவை தொடர்ந்து அவள் அறைக்குச் சென்ற யதுநந்தன், “நம்ம வீட்டில் சண்டை போட்டுக்கலாம். இப்ப என் கூட வா ராதா.” என்று மென்மையாகக் கூறினான்.

“நீங்க என்னைப் பார்க்க வருவீங்கன்னு… நான் தினமும் எதிர்பார்த்தேன் தெரியுமா? நீங்க வரமாட்டிங்கன்னு அந்த இறைவன் சொல்லியிருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்.” என்று ராதா கண்கலங்க கூறினாள்.

“நீ வேறு எங்கயாவது இருந்திருந்தால், நான் உடனே வந்திருப்பேன்… நீ உன் வீட்டில் இருப்பதால், நீ கூப்பிடணுமுன்னு நினைத்தேன் ராதா.” என்று யதுநந்தன் சமாதானமாக கூற, “எது என் வீடு?” என்று மீண்டும் அதே கேள்வியில் நின்றாள் ராதா.

“நான் தான் நம் வீட்டில் போய் சண்டை போடலாமுன்னு சொன்னேனே… இப்ப எதுக்கு தேவை இல்லாமல் பேசிகிட்டு?” என்று ராதாவிடம் சமாதானமாக பேசி, அவளை அங்கிருந்து கிளப்ப முயற்சித்தான் யதுநந்தன்.

 யதுநந்தன், காரை செலுத்த ராதா மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளுள் குற்ற உணர்ச்சி மேலோங்கியிருந்தது. அவன் மீது கோபம் இருந்தாலும், தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று சிந்தித்து கொண்டிருந்தாள் ராதா.

 ‘பிரச்சனைகளைக் கண்டு ஓடும் அளவுக்கு நான் கோழை ஆகிவிட்டேனா?’ என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டாள் ராதா.

 வீட்டிற்கு சென்றவுடன் வீட்டைப் பார்வையிட்டாள் ராதா. அவள் இருந்தால், எப்படி ஒழுங்காக இருக்குமோ அதே போல் இருந்தது. யதுநந்தன் அதைச் செய்திருக்கிறான், என்று அவள் மனம் மகிழ்ச்சி அடைந்தது.

 ஆனால் யதுநந்தனை தனியாகச் சந்திக்கும் பலம் ராதாவிற்கு குறைந்தது கொண்டே இருந்தது. யதுநந்தன் ராதாவை கவனித்துக் கொண்டிருந்தான். ராதாவின் மனப்போக்கை அவனால் கணிக்க முடிந்தது.

 ‘ஆனால், அன்று நான் ஏன் ராதாவின் மனப்போக்கைக் கணிக்கவில்லை.’ என்று யோசனை செய்தான்.

 சிறிது நேரம் கழித்து, “ராதா… வா தூங்குவோம்.” என்று கூறினான் யதுநந்தன்.

 அவர்கள் அறைக்குச் சென்று, ராதா தாழிட்டு உள்ளே செல்ல, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து அவளைக் கூர்மையாக பார்த்தான் யதுநந்தன்.

“ஏன் ராதா இப்படிப் பண்ண?” என்று குரலில் வேதனையோடு ஆழமாகக் கேட்டான் யதுநந்தன்.

 ராதா எதிர்பார்த்த கேள்வி, ஆனால் அதை அவன் கேட்கும் பொழுது இப்படி வலிக்கும் என்று அவள் நினைக்கவில்லை.

 ராதா மெளனமாக நிற்க, “தெரியாமல் கூட நீ இந்த தவறை செய்திருக்கக் கூடாது.” என்று யதுநந்தன் ராதாவின் முகம் பார்த்து மென்மையாகக் கூறினான்.

“தெரிந்து தான் செய்தேன்.” என்று ராதா நிறுத்தி நிதானமாகக் கூறினாள்.

 ‘இவள் என் ராதா.’ என்று அவன் மனதில் கோபம், வருத்தம் அதையும் தாண்டி, பெருமை குடி கொண்டது.

“உங்களை விட்டுவிட்டு நான் போகணுமுன்னு நினைத்தது தப்பு தான். ஆனால், தப்பு உங்க மேலயும் இருக்கு. குழந்தை இல்லைனா என்ன? இப்ப மருத்துவம்  நல்ல வளர்ந்திருச்சு… ஆயிரம் வழிகள் இருக்கு… இல்லைன்னா ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமுன்னு சொல்லிருக்கணும். அதை விட்டுவிட்டு, டாக்டர் ரிசல்ட்டை  ஒளிச்சு வைக்கிறது… குட்டி மீன் வாங்கி தொட்டியில் விடுறது… தப்பு செய்துவிட்டு அந்தக் குற்ற உணர்ச்சியில் என்கிட்டே பேசுவதைத் தவிர்ப்பது… எல்லாம் நீங்கள் செய்தது… அதனால் தான், உங்களை கஷ்டப்படுத்த வேண்டாமேன்னு நான் கிளம்பிட்டேன்.” என்று ராதா கூற, யதுநந்தன் அவளைக் காதல் பொங்கப் பார்த்தான். அவள் மீதான கோபத்தை அவன் அன்பு பஸ்பமாக்கி கொண்டிருந்தது.

 யதுநந்தனின் அருகே சென்று, “நான் இனி குழந்தை பற்றி யோசிக்க மாட்டேன்… குழந்தை பற்றி பேச மாட்டேன்… நான் வருத்தப்படவே மாட்டேன்… நீங்க எனக்காக வருத்தப்படாதீங்க… எனக்கு உங்களைத் தவிர வேறு எதுவும் தேவை இல்லை.” என்று ராதா மனம் திறந்து கூற, அவளை தன் கைவளைவிற்குள் கொண்டு வந்து சம்மதமாக தலை அசைத்தான் யதுநந்தன்.

“ராதும்மா…” என்று அவன் மென்மையாக அழைக்க, அந்த அழைப்பில்… அந்தக் குரலில்… தன் உயிர்… தன் நாடி, நரம்பு அனைத்தும் அவன் வசம் சென்றதை உணர்ந்து அவனைத் தன்னவனாக்கி பார்த்தாள் ராதா.

“ராதும்மா… எப்படி இந்த திடீர் ஞானோதயம்?” என்று அவன் கேலியாக வினவ, “அதுவா… ஒரு மாசம் உங்களைப் பிரிந்து இருந்தேன் இல்லை… நீங்கள் தினமும், என்னை வந்து பார்த்து… அன்பாகப் பேசி… அப்படியே உங்க அன்பை என் மேல் கொட்டிய விதத்தில் வந்த ஞானோதயம்.” என்று ராதா கடுப்பாக கூறினாள்.

“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தான் யதுநந்தன்.

“ஸ்ரீதர் கிட்ட உன்னைப் பற்றி தினமும் கேட்பேன் ராதா. நீ என் கண்காணிப்பில் தான் இருந்த…” என்று அவன் சமாதானமாக கூற, “ஏன் எங்க அண்ணன் ஸ்ரீதரை இங்க கூட்டிட்டு வந்து வைத்திருக்க வேண்டியதுதானே? என்னை ஏன் கூட்டிட்டு வந்தீங்க?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது ராதாவின் கண்களில் அந்த சிவப்பு கூஜா பட்டது.

 அவனிடமிருந்து விலகி, ராதா அந்த சிவப்பு கூஜா அருகே சென்றாள்.

 வேகமாக, அந்தக் கற்களை எண்ணினாள் ராதா.

 அதில் முப்பத்து ஒன்று கற்கள் இருக்க, “இது என்ன கணக்கு?” என்று யதுநந்தனை பார்த்துக் கேட்டாள் ராதா.

“நீ என்னை விட்டுவிட்டுப் போனதுக்கு ஒன்று. ஒரு மாதமாக நீ வராமல் இருந்ததுக்கு நாளுக்கு ஒன்று. ஆக மொத்தம் முப்பத்து ஒன்று.” என்று யதுநந்தன் கணக்கு கூறினான்.

“ஆகா… என் ஆருயிர் கணவன் என்னை அழைக்கக் கூட வராமல், செய்த அதி முக்கிய வேலை இதுதானோ?” என்று ராதா ராஜா தோரணையில் யதுநந்தனை பார்த்து நக்கலாகக் கேட்டாள்.

 ஆனால், அவள் குரலில் வருத்தம் தெரிந்தது.

“ராதா… உன்னை இது இவ்வளவு வருத்தப்படுத்தும்முன்னு நான் நினைக்கலை.” என்று சமாதானமாக கூறினான் யதுநந்தன்.

 ராதா மறுப்பாகத் தலை அசைத்து, “இல்லை… நான் உங்களை வருத்த படுத்திருக்கேன். அதனால் தானே இந்த சிவப்பு கூஜாவிற்கு வேலை வந்திருக்கிறது. அப்படி தானே?” என்று வருத்தமாகக் கேட்டாள் ராதா.

“லூசு… அப்படி எல்லாம் இல்லை. எனக்கென்ன, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.” என்று யதுநந்தன் அந்த சிவப்பு கூஜாவைச் சரிக்க முயல, மறுப்பாகத் தலை அசைத்து ராதா அவனைத் தடுத்தாள்.

 

“நீங்க இந்த 50:50 கூஜாவைக் கொடுத்த பொழுது, நான் கேட்ட கேள்வி ஞபாகம் இருக்கா?” என்று கேள்வியாக நிறுத்தி, யதுநந்தன் பதில் ஏதும் கூறாமல் அவளைக் பார்க்க, மேலும் தொடர்ந்தாள் ராதா.

“இந்த சிவப்பு கூஜா காலியாகவே இருக்கனும்மான்னு நான் கேட்டேன்… அதற்கு நீங்க, பகல், இரவு… இன்பம், துன்பம்… ஏற்றம், இறக்கம்… எல்லாம் நிறைந்தது தான் வாழ்க்கை ராதா. தவறுவது மனித குணம். அதை திருத்திப்போம். அப்படின்னு சொன்னீங்க.” என்று ராதா கூற, “இப்ப நீ என்ன சொல்லற ராதா?” என்று மெதுவாகக் கேட்டான் யதுநந்தன்.

“நாம சண்டை போடுவோம்னு சொல்லிருந்தா யாரவது நம்பி இருப்பாங்களா?” என்று ராதா கேட்க, மறுப்பாகத் தலை அசைத்து, “இப்ப எதுக்கு இந்த தேவையில்லாத பேச்சு?” என்று கோபமாக கேட்டான் யதுநந்தன்.

“பல விவகாரத்துகளுக்கு காரணம் கணவனும் மனைவியும் வெளிப்படையாக பேசிக் கொள்ளாததும், அவசர முடிவுகளும் தான்.” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.

“நாம் செய்த தவறுக்கு அடையாளமாக நிரப்பட்ட கூஜா நிரம்பியதாகவே இருக்கட்டும். நாம் எதிர் காலத்தில் இந்தத் தப்பை திரும்பச் செய்ய கூடாதில்லையா.” என்று ராதா சிரித்த முகமாகக் கூறினாள்.

 கடந்த காலத் தவறுகளை மாற்றி அமைக்க முடியாவிட்டாலும்… எதிர் காலத்தில் எல்லாருக்கும் திருத்தி கொள்ளும் சந்தர்ப்பம் நிச்சயமாக அமையும்… அதை நாம் நிகழ் காலத்தில் கற்றுக்கொள்ள வேண்டும்.

 ராதா சொல்வதை உணர்ந்து தலை அசைத்தான் யதுநந்தன்.

 அவர்கள் சுவாரசியமான பேச்சில் மீன் தொட்டியை கவனிக்கவில்லை.

 மறுநாள் காலை மீன் தொட்டியில் புதிதாக இரண்டு மீன் குட்டிகள் நீந்திக் கொண்டிருந்தன.

 ராதா அதைப் பார்த்து எதுவும் பேசாமல், தான் மேற்கொண்ட சபதத்தின் காரணமாக அமைதியாகச் சென்றாள்.

 யதுநந்தனின் கண்கள் ஓர் குறுஞ்சிரிப்போடு அவளைத் தொடர்ந்தது.

“ராதா… வா ஹாஸ்பிடல் போகணும். ஜெனரல் செக் அப்.” என்று கூற, இருவரும் எந்தவித எதிர்பார்ப்புமின்றி மருத்துவமனை நோக்கிச் சென்றனர்.

 அங்க மருத்துவர் ராதாவை பல கேள்விகள் கேட்க, ராதா யோசனையாகப் பதில் கூறினாள்.

“இல்லை… பல வருடங்கள் ஆகிருச்சு… எதுவும் சரியாக இல்லை… அது தான் நான் கவனிக்கவில்லை.” என்று தடுமாற்றத்தோடு கூறினான்.

“என் கணக்கு  சரியாக இருந்தால் உங்களுக்கு இப்ப மூன்று மாசம். ஸ்கேன் எடுக்கணும்.” என்று அவர் கூற, ராதா யதுநந்தனை பார்த்தாள்.

 யதுநந்தன் கண்ணசைக்க, ராதா அவர்களோடு சென்றாள்.

 சிறிது நேரம் கழித்து, “அவங்க இப்ப மூணு மாசம்…” என்று மேலும் மருத்துவர் கூறியதை கேட்டு யதுநந்தன் அதிர்ச்சி அடைந்தான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 24

அத்தியாயம்  24 அந்த அறையில் மருத்துவர் எதிரே யதுநந்தன் அமர்ந்திருந்தான். மருத்துவர் யதுநந்தனுக்கு நல்ல அறிமுகமானவர் என்று அவர் பேச்சில் தெரிகிறது.“இவ்வளவு நாள் கவனிக்காமா இருந்திருக்கீங்க?" என்று தன் பேச்சைத் தொடங்கினார் மருத்துவர். யதுநந்தன் அவரைக் குற்ற உணர்ச்சியோடு தர்மசங்கடமாக பார்த்தான். மருத்துவர்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்