அத்தியாயம் 7
அத்தியாயம் 7
“நான் கேட்ட கேள்விக்கு பதில். ஏன் என்கிட்டே சொல்லலை?” என்று ராதா கறாராக நிற்க, யதுநந்தன் அவளை சங்கடத்தோடு பார்த்தான்.
ராதா சிறிதும் மனம் இளகாமல் யதுநந்தனின் பதிலுக்காக அவனைக் கூர்மையாக பார்த்தாள்.
“ராதா… உன்னைப் பார்த்த அந்த முதல் நாள் என் மனதில் குழப்பம் உண்டானது நிஜம். என்னை இதுவரை யாருமே அத்தனை தைரியமாகக் கண்டித்தது இல்லை. அந்த கண்டிப்பு என்னை கவர்ந்திருக்கணுமுன்னு நினைக்கிறேன்.” என்று யதுநந்தன் மெதுவாகக் கூறினான்.
‘நான் என்ன கேட்டேன்? இவன் என்ன சொல்லுகிறான்?’ என்ற ராதா சிந்தித்தாள்.
ஆனால் ராதாவை பேசவிடாமல், யதுநந்தன் மேலும் தொடர்ந்தான். “நிரஞ்சன், உன்னை வருங்கால மனைவின்னு சொல்லும் பொழுது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…” என்று ராதாவின் முகம் பார்த்து கூறினான்.
“நிரஞ்சனை அழித்து, உன்னை ஏதோ ஒரு நிர்பந்தத்திற்கு உட்படுத்தியோ… இல்லை கடத்தி கொண்டு போயாவது கல்யாணம் செய்யணுமுன்னு நான் நினைத்தேன்.” என்று குற்ற உணர்ச்சியோடு கூறினான் யதுநந்தன்.
“என்ன? என்னை மிரட்டுவது போல இருக்கு.” என்று ராதா யதுநந்தனின் கண்களை கூர்மையாகப் பார்த்து கேள்வியாக நிறுத்த, “ஆமாம், அப்படி மிரட்டிய உடனே நீங்க பயந்துட்டு தான் மறு வேலை பார்ப்பீங்க.” என்று யதுநந்தன் ராதாவை பார்த்து சலிப்பாகக் கூறினான்.
“அட… நான் பயப்பட மாட்டேங்கிறதில்ல இவ்வளவு சலிப்பா?” என்று ராதா மீண்டும் வினவ, யதுநந்தன் புன்னகைத்தான்.
“நீங்க சொல்றதெல்லாம் சினிமா கதை மாதிரி நல்லா தான் இருக்கு. ஆனால், நீங்க சொன்னதை எல்லாம் ஏன் செய்யலை? உங்க பணபலம், அதிகார பலம் முன் நாங்கெல்லாம் ஜுஜுபி தானே.” என்று ராதா நக்கல் தொனித்த குரலில் சந்தேகம் கேட்டாள்.
“ஒரு பெண்ணை நிர்பந்தப் படுத்துவது தவறுங்கிற எண்ணம் ஒருபுறம்… என்னால் உன்னைக் கல்யாணம் செய்துக்க முடியும். ஆனால் மிஸ்.ராதா என்னை ஒரு நாளும் மன்னிக்க மாட்டங்க. அதனால் தான் அப்படி செய்யலை.” என்று ஆழமான குரலில் கூறினான்.
‘இது என்ன பதில். இது என்ன குரல். என் மனதைத் தொட்டு செல்லும் குரல்’ என அதிர்ச்சியாக அவனைப் பார்த்தாள் ராதா.
“நீ எனக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. நீ என் மேல் வைத்திருக்கும் மரியாதையை இழக்க நான் விரும்பவில்லை. ஒரு நல்ல நட்பாவது மீதி இருக்கட்டுமேங்கிற எண்ணம்.” என்று யதுநந்தன் தெளிவாக கூறினான்.
பேச்சு செல்லும் திசையை எண்ணி பயந்தவளாக, “இதுக்கும் நான் கேட்ட கேள்விக்கு என்ன சம்பந்தம்?” என்று ராதா பேச்சு செல்லும் திசையை மாற்றினாள்.
“இல்லை. இதெல்லாம் உன்கிட்ட சொல்லணுமுன்னு தோணுச்சு. சொல்லிட்டேன்.” என்று ராதாவின் எண்ணங்களை அவள் முகத்தில் படிக்க முயன்றபடி கூறினான் யதுநந்தன்.
உணர்ச்சி துடைத்த ராதாவின் முகத்தில், கேள்வி மட்டுமே நின்றது.
‘பதில் சொல்லவில்லை என்றால் ராதா விடமாட்டாள்’ என்று எண்ணியவனாக மேலும் தொடர்ந்தான்.
“நிரஞ்சன் தப்பா பேசினான். அவன் எண்ணம், பேச்சு எதுவும் சரியில்லை. அது தான் வேலையை விட்டு அனுப்பினேன்.” என்று தன் பற்களைக் கடித்து கோபத்தை அடக்கிச் சிடுசிடுத்தான் யதுநந்தன்.
“அப்படி என்ன பேசினான்?” என்று ராதா மீண்டும் கோபமாக கேட்க, “ஷட் அப் ராதா. என்னால் சொல்ல முடியாது.” என்று அவளை விட அதீத கோபத்தில் கத்தினான் யதுநந்தன்.
யதுநந்தனின் குரலில் அங்கிருந்த சிலர் திரும்பிப் பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த ரௌத்திரம் ராதாவை சில்லிட செய்தது.
“சரி… சொல்ல வேண்டாம்.” என்று ராதா குரல் கம்ம கூறினாள்.
“ஏன் சொல்ல முடியாது?” என்ற கேள்வி ராதாவின் அறிவு, அவள் மனம் அனைத்தையும் தாண்டி வெளிவந்தது.
ராதாவின் கண்களை ஊடுருவது போல் பார்த்து, “நீ என்னைப்பற்றி என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியாது ராதா. உன்னை பார்த்தது தான் மூன்று முறை. நான் உன்னைப் பார்த்த நாள் முதல், நீ என் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்க ராதா. நீ சொல்ற ஸெல்ப் டிசிப்ளின். அது என்கிட்டே இல்லை. அது தான் காரணமோ என்னவோ? ஐ அட்மைர் தட் மோஸ்ட் இன் யூ…” என்று நிறுத்தி தன் கண்களை இறுக மூடினான்.
கண்களை இறுக மூடி, ராதாவின் மேல் உள்ள காதலை சாமர்த்திய சாலித்தனமாக மறைத்துக் கொண்டான் யது.
“உன்னை நான் நல்ல விதமாக நினைப்பது ஒரு விஷயமே இல்லை. ஆனால், வேறு யாராவது உன்னைப் பற்றி தப்பா பேசுறது மட்டுமில்லை… நினைத்தால் கூட என்னால் அனுமதிக்க முடியாது. அதுக்கான தண்டனையை அவங்க அனுபவித்தே ஆக வேண்டும். நிரஞ்சனுக்கு அப்படிப் பட்ட தண்டனை தான் நான் கொடுத்தது.” என்று யதுநந்தன் கூற ராதா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
ஆனால் யதுநந்தனின் குரலில் இருந்த அழுத்தம், அதை என்னவென்று கூறுவது?
“நிரஞ்சனின் கேவலமான சிந்தனையே தப்புன்னு சொல்ற நான், அவன் பேசியதை என் வாயால் சொல்லுவேன்னு நினைக்கிறியா?” என்று அருவருப்பாக கேட்டான் யதுநந்தன்.
“என் உயிர் உள்ள வரை அது நடக்காது.” என்று யதுநந்தன் ஆணித்தரமாகக் கூற, ராதாவின் கண்கள் கலங்கியது.
“இப்ப எதுக்கு இப்படி பேசுறீங்க?” என்று பதட்டமாக கேட்டாள் ராதா.
“நான் யார் உனக்குன்னு நீ கேட்டால், ஒரு பெண்ணுக்கு மரியாதை கொடுக்க நான் யாராகவும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.” என்று யதுநந்தன் நிதானமாகக் கூற, ராதாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நான் உனக்கு ஒரு நண்பனாகவாது இருக்கவேண்டுமென்று நினைத்தேன்.” என்று யதுநந்தன் அவள் கலங்கிய கண்களைப் பார்த்து தயக்கமாகக் கூறினான்.
ராமாயணத்து ராமனை விட மஹாபாரத துரியோதனன் உயர்ந்தவன் என்று தன் தோழிகள் கூறுவதைக் கேட்டு சிரித்த காலம் ராதாவிற்கு நினைவு வந்தது.
ராதாவிற்கு தான் படித்த சம்பவமும் அவள் நினைவுக்கு வந்தது.
“விளையாடிக் கொண்டிருந்த துரியோதனின் மனைவி கணவன் வருவதைப் பார்த்து எழுந்து கொண்டாள். ஆட்டத்தில் தோற்பதை தவிர்க்கத் தான் எழுந்திருக்கிறாள் என்று எண்ணி துரியோதனின் மனைவியைப் பிடித்து உட்கார வைக்க கர்ணன் முனைய, அவள் இடுப்பில் அணிந்திருந்த மேகலை என்ற ஆபரணம் அறுந்து அதில் உள்ள மணிகள் சிதறி ஓடின.
அங்கு வந்த துரியோதனன் அந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்டான்.
‘சீதையை தீக்குளிக்கச் செய்த ராமனை விட, மஹாபாரதத்தில் தன் மனைவியைப் பார்த்து அந்த முத்துக்களை எடுக்கவோ கோர்க்கவோ என்று கேட்ட துரியோதனன் எத்தனைச் சிறப்பானவன்!’ என்று எண்ணினாள் ராதா.
இந்த எண்ணம் மேலோங்க, ராதாவின் கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது. யாதுநந்தனை பார்த்து, “இவன் யார்?” என்ற கேள்வி முதல் முறையாக அவள் மனதில் உதித்தது.
அவளைச் சமாதானம் செய்யும் விதம் தெரியாமல், ராதாவை கனிவாகப் பார்த்தான் யதுநந்தன்.
தன் தந்தையின் உடல்நிலை, நிரஞ்சன் பேசிய பேச்சு, என அவளின் அழுத்தம் கண்ணீராக வழிந்து ஓடுவதைப் புரிந்து கொண்டாலும் அவனால் அவள் அழுகையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ராதா குனிந்து தன் முகத்தை மூடிக் கொண்டு விசும்ப, அவள் முன் மண்டியிட்டு, “ராதும்மா…” என்று அன்பாக அழைத்தான்.
ராதா தன் மூச்சை உள்ளித்து, தன் கண்களை துடைத்துக் கொண்டு, “தேங்க்ஸ்…” என்று அவன் முகம் பார்த்து கூறினாள் ராதா. அந்த வார்த்தைக்குப் பின் இருந்த உணர்ச்சிகளை புரிந்து கொண்டவனாக மறுப்பாக தலை அசைத்துப் புன்னகைத்தான்.
ராதா அவனைக் கேள்வியாக பார்க்க, “எனக்கு இந்த ராதவை சுத்தமா பிடிக்கலை.” என்று முகம் சுழித்து கூறினான் யதுநந்தன்.
“உங்களுக்கு எதுக்கு ராதவை பிடிக்கணும்?” என்று ராதா புருவம் உயர்த்திக் கேட்டாள்.
ராதாவின் குறும்பு பேச்சு மீண்டுவிட, “யாருக்கு தெரியும்? நண்பன் நண்பனாகத் தான் எந்நாளும் இருப்பான்னு எனக்குத் தோணலை…” என்று தெனாவட்டாக கூறினான் யதுநந்தன்.
அவன் பேச்சு புரிந்தும் புரியாதது போல் மௌனம் காத்தாள் ராதா.
ராதாவின் மனநிலை அறிந்து, யதுநந்தன் அந்தப் பேச்சை வளர்க்கவில்லை.
நொடிகள், நேரமாகி, நேரம், நாட்களாகின. ராதாவின் தந்தை உடல் நிலை தேறி வீடு திரும்பினர். ராதா தன் ஆசிரியப் பணியை செவ்வன செய்துகொண்டிருந்தாள்.
நாட்கள், மாதங்களாக மாறியது. யதுநந்தனிற்கு ராதவை சந்திக்க பல காரணம் கிடைத்தது. காலம் இனிதாகவே நகர்ந்தது.
அப்பொழுது, ராதா பள்ளியில் வேலையை முடித்துக் கொண்டு, வீட்டிற்குக் கிளம்புகையில் தன் மொபைலை எடுத்துப் பார்த்தாள்.
அந்த குறுஞ் செய்தியை பார்த்த ராதாவின் நெஞ்சு வேகமாக துடித்தது.
தன் வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாகக் கிளம்பினாள் ராதா.
அதே மாலை வேளையில், யதுநந்தன் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாமல், அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.
‘சமாளித்து விடலாம்’ என்று தனக்கு தானே கூறிக் கொண்டாலும், ‘மீண்டும் நான் துர்பாக்யசாலியாகி விடுவேனோ?’ என்ற கேள்வி யதுநந்தனின் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது.




