arrow_back
50:50 அத்தியாயம் – 6
50:50 chevron_right பகுதி 6 / 25

அத்தியாயம் – 6

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம்  6

 ராதா யதுநந்தனின் சட்டையை பிடித்துக் கொண்டு, “ஏன் இப்படி பண்ணீங்க?” என்று கோபமாக கேட்டாள்.

 ராதா தன்னை குற்றம் சாட்டுவது யதுவிற்கு வருத்தத்தை அளிக்க, அவள் தன்னை கேள்வி கேட்கும் முறை கட்டுக்கடங்கா கோபத்தை உண்டு பண்ணியது.

 அவள் கைகளை கொத்தாகப் பிடித்து தூக்கி எறியும் வெறி கனலாய் கிளம்ப, ராதாவின் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.

யதுநந்தனின் கண்களில் தெரிந்த கோபம், எதிரே இருப்பவரை நடுங்கச் செய்யும் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அதற்குச் சிறிதும் பயமின்றி, “ச்ச…” என்று வெறுப்பாகக் கூறிவிட்டு தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள் ராதா.

 யதுநந்தனின் கோபம் ராதாவை பாதிக்கவில்லை.

 ஆனால், ராதாவின் முகத்திலிருந்த வாட்டம் யதுவை பாதித்தது. தந்தைக்கு உடல் நிலை சரி இல்லாத நேரத்திலும், தன் பயத்தை, வலியை மறைத்து அனைவரையும் தாங்கி நின்று தைரியமாக அவள் கையாண்ட விதம் யதுநந்தனை ஈர்த்திருந்தது.

ராதா மறைக்க நினைத்தாலும், அவள் முகம் வாட்டத்தைக் காட்டியது. ராதாவின் வாடிய முகம், கனலாய் எரிந்து கொண்டிருந்த அவன் கோபத்தை வடியச் செய்தது.

 ‘என் கோபத்தை ராதா இப்பொழுது தாங்கி கொள்ள மாட்டாள்.’ என்று தனக்கு தானே எண்ணிக் கொண்டு, “என்ன நடந்ததுன்னு நீ சொல்லவே இல்லையே ராதா?” என்று தன் முகம் பார்க்காமல் சுவரைப் பார்த்து நின்று கொண்டிருந்த ராதாவிடம் பொறுமையாகக் கேட்டான் யதுநந்தன்.

 ‘இவளுக்கு என்ன தெரியும். எதுவரை தெரியும் என்று எனக்குத் தெரிய வேண்டும்.’ என்ற சிந்தனை ஓடியது யதுவின் மனதில்.

“ஏன், என்ன நடந்ததுன்னு உங்களுக்குத் தெரியாதா?” என்று வேகமாகத் திரும்பி யதுவின் முகம் பார்த்து கடுப்பாகக் கேட்டாள் ராதா.

“தெரியாததால் தான், தெரிஞ்சிக்கலாமுன்னு கேட்கறேன்.” என்று கைகளை தன் மார்பின் குறுக்கே இறுகக் கட்டிக்கொண்டு ராதாவை கூர்மையாக பார்த்துக் கேட்டான்.

“ஓ தெரியாது. உங்களுக்குத் தெரியாது. அப்படி தானே! தெரிஞ்சிக்கோங்க. எங்க வீட்டில் எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருந்தாங்க. அவர் பாஸ் அவரை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. வேலையை விட்டு அனுப்பிச்சது மட்டும் இல்லை, வேறு எங்கேயும் வேலைக் கிடைக்க முடியாதபடி பிளாக் மார்க் குத்தி அனுப்பிச்சிட்டார்.” என்று கூறி ராதா யதுநந்தனை வெறுப்பாகப் பார்த்தாள்.

 ராதா பேசுவதற்கு மறுப்பேதும் கூறாமல், யதுநந்தன் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக நின்றான்.

 ராதா மேலும் தொடர்ந்தாள். “மாப்பிள்ளைக்கு வேலைப் போனதுக்கு நான் தான் காரணம். என் ராசி, என் நேரமுன்னு சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டாங்க. ஊரெல்லாம் தெரிஞ்ச பிறகு இப்படி கல்யாணம் நின்னு போச்சேன்னு வருத்தப்பட்டதில் எங்க அப்பாவுக்கு இப்படி ஆகிருச்சு.” என்று கடுங்கோபமாக ஆரம்பித்து, சொல்லிலடங்கா வேதனையோடு முடித்தாள் ராதா.

“வேலைப் போன விஷயம் தெரிஞ்சா, நீங்க கல்யாணத்தை நிறுத்திருவீங்கன்னு மாப்பிள்ளை வீட்டில் முந்திக்கிட்டாங்க.” என்று விட்டெறியாக கூறினான் யதுநந்தன்.

“யார் நிறுத்தினா என்ன, உங்களுக்குக் கல்யாணம் நிக்கணும். நீங்க நினைத்தது நடந்திருச்சு.” என்று ராதா நக்கலாகக் கூறினாள்.

“உன் கல்யாணம் நிற்பதால் எனக்கு என்ன லாபம்?” என்று யதுநந்தன் கூர்மையாக கேட்டான்.

“லாபம். சரியான வார்த்தை. நீங்க ஒரு தொழிலதிபர் இல்லையா? உங்க விஷயத்தில் எல்லாமே லாப கணக்கா தான் தெரியும். சின்ன பெண் அடிப்பட்டு விழுந்தாலும் அது பணமாகத் தான் தெரியும். வயதான மனிதர் படுத்துக்கிடந்தாலும் அதிலும் லாபம் மட்டும் தான் தெரியும்.” என்று ராதா யதுநந்தனை க்ரோதமாக பார்த்தபடி கூறினாள்.

“ஆமாம். நான் ஒரு தொழில் அதிபர். என் கண்ணில் எல்லாம் லாப கணக்கா மட்டும் தான் தெரியும். இப்பவும் எனக்கு லாபம் மட்டும் தான் தெரியுது. சுயபுத்தி இல்லாமல், ராசி, நேரம்… இப்படிக் கண்டதையும் காரணம் காட்டி கல்யாணத்தை நிறுத்திய ஒருத்தன் உனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுக்க மாட்டான். உன் நிதானத்திற்கும், நிமிர்வுக்கும், கம்பீரத்துக்கும், முற்போக்கு சிந்தனைக்கும் நிரஞ்சன் பொருத்தமான ஆளே கிடையாது. உன் வேகத்தை அவன் தாங்க மாட்டான் ராதா.” என்று யதுநந்தன் வேகமாக ஆரம்பித்து, பொறுமையாக முடித்தான்.

“ஆஹா. என் சுய ஒழுக்கத்திற்கும், நான் வாழற கோட்பாடுகள் நிறைந்த வாழ்க்கைக்கும் பொருத்தமான ஆள் யார் சார்? நீங்களா?” என்று தன் கண்களை இடுக்கி யதுநந்தனை பார்த்து எள்ளலாகக் கேட்டாள் ராதா.

 அந்தச் சூழ்நிலையிலும் ராதா பேசிய நயாண்டி, யதுவின் முகத்தில் சிறு புன்னகையை வரவழைத்தது.

 ‘யது. சிரிச்சி தொலைத்திராத. அப்புறம் டீச்சர் பிரம்பு எடுத்து வெளுத்தாலும் வெளுத்திருவாங்க…’ என்று எண்ணித் தோன்றிய புன்னகையை மறைத்து ராதாவை மௌனமாகப் பார்த்தான்.

 ராதா கேட்கும் கேள்விக்குப் பதில் கூற முடியாமல் மௌன மொழியைப் பின்பற்றினான் யதுநந்தன்.

“என்ன பதிலை காணும்?” என்று ராதா விடாப்பிடியாகக் கடுப்பாக கேட்க, “ராதா, கல்யாணம் நின்றதில் அவ்வளவு வருத்தமா?” என்று ராதாவின் முகத்தை ஆழமாகப் பார்த்தபடி கேட்டான் யதுநந்தன்.

“எனக்கு எங்க அப்பாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் கவலையும் இல்லை. எதைப் பற்றிய சிந்தனையும் இல்லை…” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.

 நிம்மதி பெருமூச்சு விட்டவனாக, “ராதா.” என்று மென்மையாக அழைத்தான்.

“உங்களைச் சந்தித்தது மூன்று முறையாக இருக்கலாம். நாம் சந்தித்தது கூட ஒரு நல்ல சந்திப்பாக அமையலை. ஆனாலும் உங்க மேல் ஒரு நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருந்தேன். நீங்க இப்படிச் செய்திருக்க வேண்டாம்…” என்று ராதா பொறுமையாக கூறினாள்.

 ராதாவின் முகத்தை ஆராயும் விதமாகப் பார்த்தான் யதுநந்தன். அவள் கோபம் வடிந்திருந்தது.

 ‘உங்க மேல் நம்பிக்கை.’ என்று ராதா கூறிய வார்த்தை யதுநந்தனுக்கு புன்னகையை வரவழைத்தது. சில நிமிடங்களுக்கு முன் ராதா தன் சட்டையைப் பிடித்தது நினைவு வர அந்தப் புன்னகை பெரிதாக விரிந்தது.

 அப்பொழுது மருத்துவமனைக்குள் நுழைந்தான் நிரஞ்சன்.

 ‘நான் அவசரப்பட்டுவிட்டேன். தேவை இல்லாமல் பேசிவிட்டேன். இப்பொழுது அம்மாவைச் சமாளிக்க முடியாது. ராதாவை பேசி சமாளிச்சிரலாம். அவளைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்று வாக்கு கொடுக்க வேண்டும்…’ என்று எண்ணியவனாக ராதா தந்தை இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு வேகமாக நடந்தான்.

 அப்பொழுது ராதா, யதுநந்தன் இருவரும் பேசி கொண்டிருப்பதைப் பார்த்தான் நிரஞ்சன். அவன் அவசர புத்தி விரைவாக வேலை செய்தது.

“ஓ. இவர் தான் நீ வேணும்னு என்னை வேலையை விட்டு தூக்கினார்ன்னு நினைத்தேன். இதில் நீயும் கூட்டா?” என்று யதுநந்தன், ராதா இருவரையும் பார்த்து சத்தமாகக் கேட்டபடியே அவர்கள் அருகில் வந்தான்.

 ராதாவிடம் அவள் குடும்பமும், யதுநந்தனும் மறைக்க நினைத்த விஷயத்தை நிரஞ்சன் கூற, அவனை அதிர்ச்சியோடு பார்த்தான் யதுநந்தன்.

 ‘இந்நேரம் நிரஞ்சனிடம் தன் கோபத்தை காட்டுவது, நிலைமையை இன்னும் மோசமாக்கும்.’ என்றெண்ணி யதுநந்தன் செய்வதறியாது தன் கை முஷ்டியை இறுக பிடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான்.

நிரஞ்சன் ஏதாவது பேசி, அந்த வார்த்தைகள் ராதாவை காயப்படுத்தும் என்றெண்ணி அமைதியாக இருக்க முடிவு செய்தான் யதுநந்தன்.

 நிரஞ்சன் அருகே சென்று, “என்ன சொன்னீங்க?” என்று ராதா அழுத்தமாக நிதானமாகக் கேட்டாள்.

 நிரஞ்சன் கூறும் வார்த்தைகள் அவளை காயப்படுத்தும் என்றறிந்தவனாக அவள் கைகளை பிடித்து, “ராதா, வேண்டாம் விடு.” என்று கூறினான் யதுநந்தன்.

“நிரஞ்சன் இங்கிருந்து கிளம்பிடு…” என்று யது கோபமாக அவனை எச்சரிக்க, யதுநந்தனை பின்னே தள்ளிவிட்டு நிரஞ்சன் முன் வந்து நின்றாள் ராதா.

“என்ன சொன்னீங்க? கம் அகைன்.” என்று அழுத்தமாகக் கேட்டாள் ராதா. அவள் குரலில் அவன் பேசியதன் பொருள் தெரிந்தாக வேண்டும் என்ற வெறி இருந்தது.

“என்ன குரலை உயர்த்துற? பெண்ணா அடக்கமா பேசு. உங்க அப்பா கிட்ட சொன்னேன். தாங்க முடியாமல் இங்க வந்து படுத்திட்டார். ஏதோ உன்னைக் கல்யாணம் செய்து இதைச் சரி செய்யலாமுன்னு பார்த்தேன். என்ன சொன்னேன்? என்ன சொன்னேன்னு, திரும்பத் திரும்ப கேட்கற? உன் நடத்தையைப் பற்றி தான் சொன்னேன். உன்னைப் பற்றி தான் டி சொன்னேன்.” என்று நிரஞ்சன் ஒவ்வொரு வார்த்தையாக அழுத்தமாகக் கூறினான்.

 இந்த வார்த்தைகளில் ராதா நிலைகுலைந்து விடுவாள் என்று அஞ்சி யதுநந்தன் ராதவை பதட்டமாகப் பார்த்தான்.

 நிரஞ்சன் அருகே சென்ற ராதா, அவன் கன்னத்தில் பளார், பளார் என்று இரு முறை அறைந்தாள் ராதா.

“யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்ற? உன் பேச்சால், என் அப்பா இப்ப இங்கிருந்தாலும்…, கல்யாணம் நின்று, உன்கிட்ட இருந்து நான் தப்பித்த விஷயத்திற்காகவே எங்க அப்பா கம்பீரமா எழுந்து வருவார்…”, என்று வீரா வேசமாகக் கூறினாள் ராதா.

 ‘தன் பேச்சில் சோர்ந்து, சுருண்டு விழுவாள்…’ என்ற நிரஞ்சனின் எண்ணத்திற்கு மாறாக வெகுண்டெழுந்த ராதவை சற்று பயந்து பார்த்தான் நிரஞ்சன்.

குனியக் குனிய குட்டும் உலகம் தானே இது!

அவள் பின் நின்று கொண்டிருந்த யதுநந்தனின் முகபாவனை நிரஞ்சனின் பயத்தை அதிகரித்தது.

 தன் அவசர புத்தியை மனதிற்குள் நொந்து கொண்டான் நிரஞ்சன். ராதாவின் கோபம் அவளின் நேர்மையைப் பேசியது.

“யாரை பற்றி பேசுற? ஒரு பெண்ணை பற்றி என்ன வேணாலும் பேசுவியா? சொல்லு. திரும்பச் சொல்லு.” என்று ராதா மீண்டும் கேட்க, நிரஞ்சன் தன் கன்னத்தில் கை வைத்து அதிர்ச்சி அடைந்தவனாக நின்றான்.

 வெறி அடங்காதவளாக, அவனை அதே வேகத்தில் மீண்டும் அறைந்தாள். “டீ போட்டு பேசுற. பொண்ணுங்கனா மரியாதை கொடுக்கணும். உன் இஷ்டபடி பேசக் கூடாது. பொண்ணுங்க நாங்க ஒழுங்கா இருந்தா மட்டும் போதாது. ஆண்கள் நீங்க பார்க்கிற பார்வையும் ஒழுங்கா இருக்கனும். அப்படின்னா எல்லாம் சரி ஆகிரும்.” என்று தன் ஆள் காட்டி விரலை உயர்த்தி அவனை மிரட்டினாள் ராதா.

 அங்கு நடப்பவற்றை அமைதியாக யதுநந்தன் பார்த்துக் கொண்டிருக்க, “சார். இவ்வளவு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு. நீங்க இப்படி வேடிக்கை பார்த்திட்டு இருக்கீங்க?” என்று பதறியபடி யதுநந்தனிடம் கேட்டுக் கொண்டே நிரஞ்சன், ராதா இருவருக்கும் இடையில் சென்றான் ராதாவின் சகோதரன் ஸ்ரீதர்.

 நிரஞ்சனை பார்த்து, “இனி உங்களுக்கும், எங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அது தான் பெண் வேண்டாமுன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடீங்கள்ல? தயவு செய்து பிரச்சனை பண்ணாம கிளம்புங்க.” என்று ஸ்ரீதர் பக்குவமாக கூற, நிரஞ்சன் ராதவை கோபமாக முறைத்துக் கொண்டு கிளம்பினான்.

 ராதாவின் தலையை மென்மையாகத் தடவி, “அப்பாவுக்கு சரி ஆகிருச்சு. நீ ஏன் தேவை இல்லாமல் அவன் கிட்ட சண்டை வளர்கிற?” என்று ஸ்ரீதர் மென்மையாகக் கேட்டான்.

“இல்லை அண்ணா. அவன் தப்பா பேசுறான்.” என்று ராதா குற்றம் சாட்டும் குரலில் கூற, “தெரியும். விடு ராதா. ஊரில் நாலு பேர் நாலு விதமா தான் இருப்பாங்க. உன்னால் எல்லாரையும் திருத்த முடியாது ராதா. தப்பானவங்கன்னு தெரிந்தா நாம் தான் அங்கிருந்து விலகிரணும்.” என்று ராதாவிடம் கண்டிப்பாகக் கூறினான் ஸ்ரீதர்.

 ராதா சமாதானம் அடையாதவளாகத் தன் அண்ணனின் சொல்லுக்காக தலை அசைத்தாள்.

“நான் உன்னைத் தேடி தான் இங்கு வந்தேன். அம்மாவை வீட்டில் விட்டுவிட்டு வரேன். நீ இங்க இரு.” என்று கூற ராதா மௌனமாகத் தலை அசைத்தாள்.

“யது சார் ரொம்ப நன்றி. உங்க உதவியால் தான் எல்லாம் எளிதாக முடிந்தது. நீங்களும் இங்கயே தான் இருக்கீங்க. உங்களுக்கும் களைப்பா இருக்குமே.” என்று குரலில் வாஞ்சையோடு கூறினான் ஸ்ரீதர்.

“ஒன்னும் பிரச்சனை இல்லை. நீங்க வர வரைக்கும் நான் இங்க இருக்கேன். நீங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க.” என்று குரலில் கனிவோடு கூறினான் யதுநந்தன்.

 ஸ்ரீதர் தன் தாயோடு வீட்டுக்குச் செல்ல, ஐ.சி.யூ க்கு வெளியே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தாள் ராதா.

 அவள் அருகே அமர்ந்த யதுநந்தன், “ராதா, ரொம்ப சோர்வா இருக்க. குடிக்க, ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?” என்று அக்கறையாகக் கேட்டான்.

 ராதா பதில் கூறாமல் அமர்ந்திருக்க, “ராதா ஏதாவது கேட்டா பதில் சொல்ல மாட்டியா?” என்று கடுப்பாக கேட்டான் யதுநந்தன்.

 ராதா ஏளனமாகப் புன்னகைத்து, “நான் கேள்வி கேட்கும் பொழுது நீங்க பதில் சொன்னீங்களா?” என்று ராதா சுவரை பார்த்தபடி கேட்க, “ராதா…” என்று தடுமாற்றமான குரலில் அழைத்தான் யதுநந்தன்.

“நான் உங்களை கேள்வி கேட்கும் பொழுதும், எல்லாப் பிரச்சனைக்கும் நீங்க தான் காரணமுன்னும் சொல்லும் பொழுதும் ஏன் அமைதியாக இருந்தீங்க? நிரஞ்சன் பேசியது உங்களுக்கு தெரிந்திருக்கு. நிரஞ்சன் உங்க கிட்டயும் தப்பா பேசிருக்காருன்னு உங்க முகம் சொல்லுது. எங்க வீட்டிலும் சொல்லலை. நீங்களும் சொல்லலை.” என்று வருத்தமாக கூறினாள் ராதா.

“எல்லாம் தெரிந்தும், ஏன் என்கிட்ட சொல்லலை?” என்று ராதா தீவிரமாக கேட்டாள்.

“ஏன் நிரஞ்சனுக்கு கொடுத்த அறையில் ஒன்றை எனக்கு கொடுக்கலாமுன்னு பார்க்கரியா…” என்று தீவிரமான முகபாவனையோடும், கண்ணில் குறும்பு புன்னகையோடும் யது கேட்க, “நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்” என்று ராதா கண்டிப்பாக கூறினாள்.

“நீ எப்பவும் சீரியஸா தான் இருக்க ராதா. இப்படி சீரியஸாவே இருந்தால் உண்மையில் சீரியஸாகி இதே மருத்துவமனைக்கு வரும்படி ஆகிரும்…” என்று நக்கல் தொனித்த குரலில் யதுநந்தன் கூற அவன் கேலி புரிந்தும் புரியாதவளாக அவனை ஆழமாக பார்த்தாள் ராதா.

“நான் கேட்ட கேள்விக்குப் பதில்…” என்று ராதா கறாராக நிற்க, யது அவள் கேள்விக்கு பதில் கூறினான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 7

அத்தியாயம்  7“நான் கேட்ட கேள்விக்கு பதில். ஏன் என்கிட்டே சொல்லலை?" என்று ராதா கறாராக நிற்க, யதுநந்தன் அவளை சங்கடத்தோடு பார்த்தான். ராதா சிறிதும் மனம் இளகாமல் யதுநந்தனின் பதிலுக்காக அவனைக் கூர்மையாக பார்த்தாள்.“ராதா... உன்னைப் பார்த்த அந்த முதல் நாள் என்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்