அத்தியாயம் 9
அத்தியாயம் 9
ராதா தயக்கமான மனதோடு அமைதியாக நின்று கொண்டிருக்க, “ராதா, நீ என்ன சொல்ற?” என்று ராதாவின் தந்தை மீண்டும் வினவினார்.
ஒரு முடிவுக்கு வந்தவளாக, “அப்பா, அவங்க நல்லவங்க.” என்று நிறுத்தி நிதானமாகக் கூறினாள் ராதா.
லோகநாதன், மெலிதாக சிரித்து நாற்காலியில் இருந்த துண்டை தன் தோளில் போட்டுக் கொண்டு, “மேற்கொண்டு மற்ற வேலையைப் பார்க்கலாம்.” என்று கூறினார்.
ராதா வெட்கப் புன்னகையோடு, தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அன்று இரவு, ராதாவின் மொபைல் ஒலிக்க, “ஹலோ…” என்று மெல்லிய குரலில் கூறினாள் ராதா.
அந்தக் குரலில் தன் தனிமை தகடுபொடியானது போல் உணர்ந்தான் யதுநந்தன்.
“ராதும்மா.” என்று யதுநந்தன் குழைவாக அழைக்க, “என் பெயர் ராதா.” என்று தன் தலையைத் திருப்பி மிடுக்காகக் கூறினாள் ராதா.
அவளின் மிடுக்கான பேச்சில் யதுநந்தனின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
“எனக்கு உன் பெயர் தெரியாது. இதுவரைக்கும் நான் உன்கிட்ட கேட்டதும் இல்லை. நீ சொன்னதும் இல்லை” என்று அவளுக்கு ஏற்றார் போல் பதில் சொன்னான் யதுநந்தன்.
ராதா, “கிளுக்.” என்று சிரிக்க, “தேங்க்ஸ்.” என்று ஆழமான குரலில் கூறினான் யதுநந்தன்.
“எதுக்கு தேங்க்ஸ். நீங்க சம்மதம் சொல்ல சொன்னீங்க. நான் சொன்னேன். அவ்வளவு தான்.” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.
“ராதும்மா. உன் டீச்சர் மிடுக்கை என்கிட்டயே காட்டுற பார்த்தியா? என் மனதை ஆழம் பார்க்க நீ கேட்ட கேள்வின்னு எனக்குத் தெரியாதா?” என்று யதுநந்தன் கேலியாக கூற, ராதா அகப்பட்டுக் கொண்டவளாய் கண் சிமிட்டி, மௌனமாக இருந்தாள்.
“நான் எங்க உன்னைச் சம்மதம் சொல்லச் சொன்னேன், கதை தானே சொன்னேன்.” என்று யதுநந்தன் கூறினான்.
ராதா, “ம்க்கும்.” என்று சலித்துக் கொள்ள, “என்ன மேடம் சலிச்சிக்கிறீங்க? கதை எப்புடி?” என்று தன் காலரைத் தூக்கி விட்டுக் கேட்டான் யது.
“படு சுமார்.” என்று ராதா அலட்சியமாகக் கூறினாள். “சுமாரா?” என்று யதுநந்தன் தீவிரமாக கேட்க, “ஆமாம், படு சுமார் தான். முடிவுகள் பெண்கள் மேல் திணிக்கப்படுவதும், அவர்கள் அதை ஏற்று வாழ்வது தான் நடைமுறையில் இருக்கு.” என்று பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை எண்ணியபடி வெறுமையாகக் கூறினாள் ராதா.
அவளின் கூற்று புரிந்தாலும், அதைச் சிந்திக்கும் மனநிலையில் யதுநந்தன் இல்லை.
“ஆஹான். நான் கதையை உனக்குத் தானே சொன்னேன்…” என்று யதுநந்தன் ராதாவை வம்பிழுக்க, “என்னைச் சூனியக்கார கிழவின்னு சொல்றீங்களா?” என்று ராதா யதுநந்தனிடம் சண்டைக்குத் தயாரானாள்.
“ராதும்மா. நான் சொல்றதை கேட்கறியா?” என்று யதுநந்தன் மெதுவாகக் கேட்க, “ம்ம்ம்ம். சொல்லுங்க. பிடிச்சிருந்தா, நீங்க சொல்றபடி கேட்கறேன்.” என்று யோசனையாகக் கூறினாள் ராதா.
“நாம கல்யாண பண்ணிட்டு அப்புறம் சண்டை போடுவோம். இப்ப சமாதானமா பேசுவோம்…” என்று யது சிரிப்பை மறைத்துக் கொண்டு தீவிரமாகக் கூற, “எனக்கு முதல் டீல் ரொம்ப பிடிச்சிருக்கு. இரண்டாவது ஓகே.” என்று ராதா குறும்பாக கூறினாள்.
“மேடம், தள்ளி இருந்து பேசறதால் வாய் ரொம்ப நீளுது.” என்று யதுநந்தன் மிரட்டும் தொனியில் கூற, “பக்கத்தில் இருந்தால் என்ன பண்ணுவீங்க?” என்று கம்பீரமாக கேட்டாள் ராதா.
“சொல்லட்டுமா ராதும்மா?” என்று கம்பீரமாகவும் அன்பாகவும் யதுநந்தன் கேட்க, அவன் குரலில் சற்று பதட்டம் அடைந்தவளாக, தடுமாறினாள் ராதா.
“ராதும்மா.” என்று யது குழைவாக அழைக்க, “ம்.” என்று மேலும் தடுமாறினாள் ராதா.
ராதாவின் தடுமாற்றம் புரிந்தவனாக, அவளை மேலும் சங்கப்படுத்தாமல், “நீ நீயா இரு ராதா. எனக்கு உன் கம்பீரம், கண்டிப்பு ரொம்ப பிடிக்கும்.” என்று நிதானமாகப் பேச்சு செல்லும் விதத்தை மாற்றினான் யதுநந்தன்.
யதுநந்தன் மேலும் பேச தொடங்க, “சாப்பிட்டுட்டு தூங்குங்க. நேரம் ஆகுது…” என்று ராதா அக்கறையாகக் கூறினாள்.
யதுநந்தன் சிரிக்க, “ஏன் சிரிக்கிறீங்க? என்று ராதா கேட்டாள்.”. உன் வாழ்க்கை முறை வேற. என் வாழ்க்கை முறை வேற.” என்று பொருள் பொதிந்து கூறினான் யதுநந்தன்.
“ரொம்ப யோசிக்காதீங்க. பார்த்துக்கலாம்.” என்று வாழ்வை எதிர் நோக்கும் முடிவுடன் கூறினாள் ராதா.
“ம்…” என்று யதுநந்தன் சிந்தனையோடு கூற, “பாஸ். உங்க சுபாவத்துக்கு இது கொஞ்சம் கூட செட் ஆகலை.” என்று அவன் மனநிலையை மாற்றும் விதமாகக் கூறினாள் ராதா.
“லவ் யு சோ மச் ராதா.” என்று யதுநந்தன் உணர்ந்து கூற, ராதா அமைதியானாள்.
“நீ எதுவும் சொல்ல மாட்டியா ராதா?” என்று யதுநந்தன் ஆர்வமாகக் கேட்க, “நீங்க முதலில் சொன்ன தேங்க்ஸ் விட, இது நல்லா இருக்கு.” என்று புன்னகையோடு கூறினாள் ராதா.
அவர்கள் பேச்சு நீண்டு கொண்டு தான் போனது. முடிந்தபாடில்லை.
சில பல சந்திப்புகளோடு, சில பல பேச்சுகளோடும் அவர்களின் நாட்கள் திருமண நாட்களை எண்ணி சுகமான சுமையோடு வேகமாக நகர்ந்தது.
யதுநந்தன் பொதுவாக பேசினான். ஆனால் அவனைப் பற்றி அதிகமாகப் பகிர்ந்து கொண்டான் என்று சொல்ல முடியாது. ராதா அவளாகத் தெரிந்து கொள்ளட்டும் என்று எண்ணினான் போலும்!
ராதாவின் வீட்டில் பலவிதமாக மறுத்தும், முழுப் பொறுப்பையும் யதுநந்தன் அவன் செலவில் எடுத்துக் கொண்டான்.
அவர்களின் திருமண நாளும் வந்தது.
யதுநந்தன் சிரித்த முகமாக அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தான். ராதா அங்கு நடந்தேறிய சடங்குகளை ரசித்தபடி திருமண விழாவை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
யதுநந்தனின் சொந்தங்கள் பலர் வந்திருந்தனர். ஆனால், யாரைப் பற்றியும் இதுவரை யதுநந்தன் ராதாவிடம் பகிர்ந்து கொண்டதில்லை. ராதா அதை தன் மனதில் குறித்துக் கொண்டாள்.
திருமணம், கோலாகலமாகவும் சிறப்பாகவும் இனிதாகவும் நிறைவேறியது.
சில பல வழக்கங்களை யதுநந்தன் தவிர்த்து விட்டான். ராதாவின் வீட்டிற்குச் சென்றார்கள். யதுநந்தன் அவர்கள் வீட்டை நோட்டமிட்டான். ராதா வீட்டிலிருந்து அனைவரும் யதுநந்தன் வீட்டிற்குக் கிளம்பினர்.
“ராதா, உங்க வீட்டில் இருந்து எல்லாரும் இரண்டு நாள் கழித்து வரட்டும். நாம மட்டும் தான் இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போறோம்.” என்று ராதாவின் காதில் கிசுகிசுக்க, ராதா அவனைக் கேள்வியாக பார்த்தாள்.
யதுநந்தன் ராதாவை பார்த்துக் கண்சிமிட்ட, “அப்பா. நாம, அடுத்த வாரம் போவோம். இன்னைக்கு பொன்னும், மாப்பிள்ளையும் கிளம்பட்டுமே…” என்று ஸ்ரீதர் கூற அனைவரும் சம்மதமாக தலை அசைத்தனர்.
சஞ்சனா ராதவை கட்டிக் கொண்டு அழ, யதுநந்தன் அவளைத் தூக்கி கொண்டு கடைக்கு காரில் அழைத்துச் சென்றான்.
வீட்டில் ராதாவிற்கு பல அறிவுரை வழங்கப்பட்டது. சஞ்சனா பல பொம்மைகளோடு வீட்டிற்குள் நுழைந்தாள்.
“அத்தை. நாங்க உன்னை இரெண்டு நாளுக்கு அப்புறம் பாக்க வருவோம்…” என்று மழலை குரலில் கூறினாள் சஞ்சனா.
ராதா விடை பெற, அனைவரும் கண் கலங்கினர்.
ராதா காரில் ஏற, “மாப்பிளை…” என்று மெதுவாக அழைத்தான் ஸ்ரீதர்.
“நாம நண்பர்கள். என்னை யதுன்னு கூப்பிடலாம் ஸ்ரீதர்…” என்று தோழமையோடு கூறினான் யதுநந்தன்.
ஸ்ரீதர் புன்னகையோடு தலை அசைத்து, “ராதா, பார்க்க தான் கடினமா தெரிவா. ஆனால் குழந்தை மனம். அவளுக்குக் கண்டிப்பா பேசத் தெரியும். ஆனால் யார் மனசையும் நோகடிக்கத் தெரியாது.” என்று ஸ்ரீதர் கலங்கிய குரலில் கூற, யதுநந்தன் அமைதியாகத் தலை அசைத்தான்.
“அப்பா வளர்ப்பு. அப்பாவை மாதிரி எல்லா விஷயத்திலயும் ஒழுங்கா இருப்பா. ராதாவுக்கு தப்பு பண்ண தெரியாது. நாங்க யாரும் இதுவரை அவளைத் திட்டியதே இல்லை. திட்டற மாதிரி அவ நடந்துக்கிட்டதே இல்லை. அவளைப் பத்திரமா பார்த்துக்கோங்க.” என்று ஸ்ரீதர் கண்கலங்க, ஸ்ரீதரின் தோளில் தட்டி கொடுத்தான் யதுநந்தன்.
“உங்க எல்லாருக்கும் ராதா வாழ்க்கையில் ஒரு அங்கம். ஆனால் எனக்கு ராதா தான் வாழ்க்கை.” என்று யதுநந்தன் ஸ்ரீதரின் முகம் பார்த்து ஆழமான குரலில் கூற, இந்த ஒரு நாளில் உருவாகிய உறவு, உரிமை இரண்டையும் எண்ணிச் சிரித்தான் ஸ்ரீதர்.
“என் வாழ்வில் கிடைத்த பொக்கிஷத்தைப் பத்திரமா பார்த்துப்பேன்.” என்று ஸ்ரீதரின் கை பிடித்து உறுதி கொடுத்தான் யதுநந்தன்.
விதி அவர்களை பார்த்து சிரித்தது.
அனைவரிடமும் விடை பெற்று, அவர்கள் கிளம்ப ராதா காரில் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
தான் பிறந்து வளர்ந்த மண்ணில் இருந்து, பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் செடியின் மன நிலையே ஒவ்வொரு பெண்ணின் மனநிலையும்!
ராதாவின் மனநிலை அறிந்து யதுநந்தன் அமைதியாகக் காரை செலுத்தினான்.
யதுநந்தனின் கார் அவன் வீட்டின் முன் நின்றது.
ராதா வீட்டை ரசனையோடுப் பார்த்தாள். வாட்ச்மன் கதவைத் திறக்க, கார் உள்ளே நுழைந்தது.
அவர்கள் இருவரும் வீட்டிற்குள் செல்ல, வீடு வெறிச்சோடி இருந்தது. வீட்டில் சொந்தக்கார்கள் யாரும் இல்லாததை ஆச்சரியத்தோடு பார்த்தாள் ராதா.
வீடு சுத்தமாக தெரிந்தாலும், சுத்தமாக இல்லை என்றெண்ணினாள் ராதா. வீட்டிற்குள் இருந்த நெடியில், ராதா முகம் சுழித்தாள்.
ராதாவின் மௌனத்தைக் கலைக்கும் விதமாக, “ராதா, இன்னைக்கு சோர்வா இருப்ப. நாளைக்கு வீட்டைச் சுற்றி பார்க்கலாம்.” என்று யதுநந்தன் கூற, ராதா சம்மதமாகத் தலை அசைத்தாள்.
யதுநந்தன் படி ஏற, ராதா அவனைப் பின் தொடர்ந்தாள். அவர்கள் அறையை யதுநந்தன் காட்ட, ராதா தன் கண்களை சுழட்டி அறையை பார்வையிட்டாள். அதன் பின், ராதா குளித்துவிட்டு இரவு உடைக்கு மாறி இருந்தாள். ராதாவின் மௌனம், யதுநந்தனை சிந்திக்க வைத்து.
சிந்தனை ரேகைகளோடு, அவன் அறையின் பால்கனியில் நின்றான் யதுநந்தன்.
“ராதா…” என்று யதுநந்தன் அழைக்க, ராதா பால்கனி சென்று அவனருகே நின்றாள்.
அவள் தோள் மேல் கைபோட்டு ராதவை தன் பக்கம் திருப்பினான். அவள் தலை முடி நெற்றியில் சுருளாக விழுந்தது. யதுநந்தன் ராதாவின், முகம் நிமிர்த்தி, “நீ ரொம்ப அழகா இருக்க ராதா…” என்று கூறினான்.
ராதா மெலிதாக சிரித்தாள். “பேச மாட்டியா ராதா?” என்று யதுநந்தன் கேள்வியாக நிறுத்தினான்.




