அத்தியாயம் 10
அத்தியாயம் 10
“ஏன் எங்க அம்மா அப்பாவை இன்னைக்கு வர வேண்டாமுன்னு சொன்னீங்க? இன்னைக்கு மட்டும் தானா இல்லை என்னைக்குமேவா?” என்று ராதா கண்கலங்கக் கேட்டாள்.
அவள் கேட்ட கேள்வியில் அதிர்ச்சி அடைந்த யதுநந்தன், அவள் கண்ணீரை பார்த்துக் கோபமடைந்தான்.
“ராதா, என்ன இப்படி கேட்கற?” என்று அவளிடமிருந்து விலகி நின்று சுவர் மேல் சாய்ந்து கோபமாகக் கேட்டான் யதுநந்தன்.
“பின்னே வேற எப்படி கேட்பாங்க? நாம் வீட்டுக்குள்ள வரும் பொழுது, ஆரத்தி எடுக்கக் கூட யாருமே இல்லை.” என்று ராதா கடுப்பாக கூறினாள்.
யதுநந்தன் அவளை அமைதியாகப் பார்க்க, “அம்மா, அண்ணி வந்திருந்தா, இப்படிப் பாழடைந்த பங்களாவிற்குள் வந்த மாதிரி வந்திருக்க மாட்டோம்.” என்று மனத்தாங்கலாகக் கூறினாள் ராதா.
“ராதா எனக்கு இதில் எல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை.” என்று யதுநந்தன் சலிப்பாக கூற, ராதா அவனைக் கலங்கிய கண்களோடு பார்த்தாள்.
“ராதா இப்ப எதுக்கு கண் கலங்கற? ஆரத்தி எடுக்கலைங்கிறது காரணமா? இல்லை அம்மா, அப்பா வரலைங்கிறது காரணமா?” என்று யதுநந்தன் கோபமாக கேட்க, ராதா தன் உதடுகளைப் பிதுக்கி பதில் ஏதும் கூறாமல் மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“உங்க அண்ணன் குழந்தை மனமுன்னு சொல்றது இப்ப தான் தெளிவா புரியுது.” என்று யதுநந்தன் கேலியாக கூற, ராதா அவனைக் கோபமாக முறைத்தாள்.
“ஏன் எங்க அம்மா அப்பாவை இன்னைக்கு வர வேண்டாமுன்னு சொன்னீங்க?” என்று ராதா மீண்டும் அதே கேள்வியில் நின்றாள்.
“ராதா… வீட்டைப் பார்த்தே இல்லை? இப்ப உங்க அம்மா, அப்பா…” என்று யதுநந்தன் ஆரம்பிக்க, “அத்தை, மாமான்னு முறை சொல்லி சொல்லுங்க.” என்று கண்டிப்பான குரலில் கூறினாள் ராதா.
யதுநந்தன் முகத்தில் புன்னகை இழையோட, ராதாவின் கைகளைப் பற்றி இழுத்து அவளை தன்னோடு சாய்த்துக் கொண்டான்.
“கண்டிப்பா பேசலாம். ஆனால் மனுஷனை கடுப்பேத்தற மாதிரி, குதர்க்கமா பேசக் கூடாது.” என்று யதுநந்தன் குழைவாக கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் ராதா.
ராதாவின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை பார்த்த யதுநந்தன், “வீட்டை மிஸ் பண்றியா ராது?” என்று மென்மையான குரலில் கேட்டான் யதுநந்தன்.
ராதா யதுநந்தனை நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லாமல் அவன் மார்பில் சரண் புகுந்தாள்.
யதுநந்தனால் ராதாவின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது. “சாரி ராதும்மா. நீயே வீட்டிற்குள் வந்த உடனே முகம் சுழித்த, உங்க அப்பா… சாரி… சாரி மாமா என்ன நினைப்பாங்கன்னு தான் இப்ப வரவேண்டாமுன்னு சொன்னேன்.” என்று யதுநந்தன் சமாதானமாக கூறினான்.
“வீட்டில் சிகரெட் வாடை. ட்ரிங்க்ஸ் ஸ்மெல். ச்ச… கொஞ்சம் பிளான் செய்து, வீட்டை முன்னாடியே சுத்தம் செய்திருக்கலாம்ல?” என்று எரிச்சலாகக் கூறினாள் ராதா.
“எனக்கு அதெல்லாம் தெரியாது ராதா. எனக்கு இது அவ்வளவு முக்கியமுன்னு தோணலை. எல்லாவற்றையும் இப்ப எவ்வளவோ குறைச்சிட்டேன். ஸ்மோக்கிங் மொத்தமா நிறுத்திட்டேன்… ட்ரிங்க்ஸ் எப்பவாவது தான் …” என்று யதுநந்தன் கண் சிமிட்டிக் கூற, ராதா அவனை உணர்ச்சி துடைத்த முகத்தோடு பார்த்தாள்.
“கொஞ்ச நாள் டைம் கொடு. எல்லாம் சரி ஆகிரும்.” என்று கெஞ்சுதலாகவும் கொஞ்சுதலாகவும் கூறினான் யதுநந்தன்.
“வீட்டை இப்ப சரி செய்ய ஆரம்பிப்போம். சரியா?” என்று கேள்வி கேட்டு, அவனிடமிருந்து விலகி நின்று, யதுநந்தனின் பதிலை எதிர் பார்க்காமல் மேலும் தொடர்ந்தாள் ராதா.
“வேலை செய்பவர்கள் எல்லாரையும் கூப்பிடுங்க. நான் பேசணும்.” என்று ராதா தீவிரமாக கூறினாள்.
“இப்பவா?” என்று யதுநந்தன் அதிர்ச்சியோடு கேட்க, ராதா தன் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.
“ராதும்மா…” என்று யதுநந்தன் குழைவாக அழைக்க, “அப்படி ஒன்று ரொம்ப நேரம் ஆகவில்லை. இதில் எந்த மாற்றமும் இல்லை.” என்று ராதா அழுத்தமாகக் கூறினாள்.
யதுநந்தன் அனைவரையும் அழைக்க, அங்கிருந்த அனைவரும், காலையில் மண்டபத்தில் ராதாவை பார்த்திருந்தாலும் இப்பொழுதும் அவளை ஆச்சரியமாகப் பார்த்தனர்.
ராதா அனைவரிடமும் அன்பாகப் பேசினாள்.
மறுநாள் செய்ய வேண்டிய வேலையைக் கூறிவிட்டு, தானும் காலையில் ஆறு மணிக்கு வருவதாகக் கூற, அனைவரும் அவளை மீண்டும் ஆச்சரியமாகப் பார்த்தனர்.
‘ஆறு மணி நடு ராத்திரி’ என்ற எண்ணம் தோன்ற, யதுநந்தன் அவளை பரிதாபமாகப் பார்த்தான்.
அனைவரிடமும் பேசிவிட்டு ராதா அவர்கள் அறைக்குள் நுழைந்தாள். ராதா அவர்கள் அறையை நோட்டமிட்ட, வேலை செய்பவர்களின் பலனால் தூசி இன்றி அறை சுத்தமாக காட்சி அளித்தது.
“என் ரூம் நீட்டா இருக்கும்?” என்று யதுநந்தன் பெருமையாக கூற, ராதா அங்கிருக்கும் சாமான்களை எடுத்து அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.
“ஏய் என்ன பண்ற?” என்று யதுநந்தன் பதட்டத்தோடு வினவ, “பார்த்தா தெரியலை எல்லாவற்றையும் ஒழுங்கு பண்றேன்.” என்று வேலையைச் செய்தபடியே கூறினாள் ராதா.
“ராதா நீ சொல்ற அளவுக்கு இந்த இடம் மோசமா இல்லை.” என்று ராதாவை வேலை செய்ய விடாமல் அவள் முன் நின்று கடுப்பாக கூறினான் யதுநந்தன்.
“நல்லாவும் இல்லைங்க. எனக்கு இதைப் பார்த்தா சத்தியமா தூக்கம் வராதுங்க.” என்று ராதா பாவமாக கூறினாள்.
“பார்க்காத கண்ணை மூடிக்கோ.” என்று யதுநந்தன் எளிதாக வழி கூற, அவனைக் கோபமாக முறைத்தாள் ராதா.
“ராதா சோர்வாயில்லையா?” என்று யது அக்கறையாகக் கேட்க, “அதெல்லாம் இல்லைங்க. நீங்க ரெஸ்ட் எடுங்க. மத்த இடத்தை எல்லாம் வேலை செய்றவங்களோடு சேர்ந்து நான் சரி பண்றேன். நம்ம ரூமை நாம தான் சரி பண்ணனும்.” என்று ராதா கனிவாக கூறினாள்.
“ஒரு இரண்டு மணி நேரம் டைம் கொடுங்க. நான் சரி பண்ணிடுறேன். சரியா?” என்று ராதா தலை சாய்த்துக் கேட்க, யதுநந்தன் சம்மதமாக தலை அசைத்தான்.
யதுநந்தன் சோபாவில் சாய்ந்து அமர, ராதா வேகமாக வேலையில் இறங்கினாள்.
அப்பொழுது அவன் அறையில் இருந்த, அனைத்துப் பொருட்களும், வாய்ஸ் ரெகக்னிஷன் சிஸ்டம் பொருத்தியிருப்பதைப் பார்த்த ராதா அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்தாள்.
யதுநந்தன், கண் எடுக்காமல் அவள் வேகத்தையும், அவள் நேர்த்தியையும், அவள் அழகையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் கண்களில் தெரிந்த ஆச்சரியத்தைப் பார்த்த யதுநந்தன், அவன் கடிகாரத்தை செயல்பட வைத்தான்.
“யது… கெட் அப்…” என்று கீச்சு குரலில் கடிகாரம் கூற, ராதா ரசித்து சிரித்தாள்.
யதுநந்தன் புன்னகையோடு பார்க்க, “ஏன் இப்படி இந்த ரூமில் எல்லா பொருளும் பேசுது?” என்று ராதா தன் நாடியில் கை வைத்து சந்தேகம் கேட்டாள்.
“என் கிட்ட பேசுறதுக்கு இப்ப தான் நீ வந்திருக்க. இவ்வளவு நாள் என் கூட பேசுவதற்கு ஆள் வேண்டாமா? நான் இதை டார்லிங்ன்னு தான் கூப்பிடுவேன். இனி அதற்கு அவசியமில்லை.” என்று யதுநந்தன் சிரித்த முகமாகக் கூற ராதா அவனைப் பரிதாபமாக பார்த்தாள்.
ராதாவின் முகத்தை நிமிர்த்தி, அவள் கண்களை கூர்மையாகப் பார்த்து, மறுப்பாகத் தலை அசைத்தான் யதுநந்தன்.
“சின்ன வயதில் எங்க அம்மா, அப்பாவை ஒரு விபத்தில் இழந்தவன் நான். ஒரு நாளில் என் வாழ்க்கை திசை மாறிவிட்டது. எந்தத் தெய்வமும் எனக்கு நல்லது செய்யவில்லை. எந்த உறவுகளும் எனக்குத் துணை நிற்கவில்லை. இந்த உறவுகள் பணத்திற்காக என்னைச் சுற்றியது தான் நிஜம். நான் அவர்களால் அடைந்த நன்மைகளை விட இழந்தது நிறைய. தனியாகப் போராடி ஜெயித்தவன் நான். பரிதாபமாகப் பேசி என்னை ஏமாற்றியவர்கள் பலர். எனக்குப் பரிதாபம் பிடிக்காது. உன் கண்களில் நான் அன்பை மட்டும் தான் எதிர்பார்க்கிறேன் ராதா.” என்று கண்டிப்பாக ஆரம்பித்து மென்மையாக முடித்தான் யதுநந்தன்.
யதுநந்தன் மனப்போக்கை அறிந்து அவன் மனதைத் திசை திருப்பும் விதமாக, “உங்களுக்குப் பரிதாபம் பார்த்துட்டாலும்… நீங்க நாலு பேரைப் பரிதாபம் ஆக்குவீங்க.” என்று தன் தலை சிலுப்பி விளையாட்டாகக் கூற, “ஆஹான்!” என்று அவள் மனம் விரும்பும் விதமாகப் பதில் கூறினான் யதுநந்தன்.
‘இனி யதுநந்தனை ஒரு நாளும் தனிமை சூழ விடக்கூடாது. என் கொள்கைகளை தளர்த்திக் கொண்டேன்னும் யதுநந்தனிற்கு இன்பமான வாழ்க்கையை நான் தர வேண்டும்.’ என்று ராதா சூளுரைத்துக் கொண்டாள்.
ஆனால் நடைமுறை!!!
பல சிந்தனைகளோடு ராதா தன் வேலையைத் தொடர, “ராதா, நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா? நீ தனியா வேலை செய்றது எனக்குக் கஷ்டமா இருக்கு.” என்று யதுநந்தன் அவள் அருகே வந்து கூற, தன் கைகளை இடுப்பில் கை வைத்து யதுநந்தனை மேலும் கீழும் பார்த்தாள்.
“என்ன? அப்படிப் பார்க்கிற?” என்று யதுநந்தன் கேள்வியாக நிறுத்த, “உங்களைப் பார்த்தா உதவி செய்ற ஆள் மாதிரி தெரியலை.” என்று நக்கல் தொனித்த குரலில் கூறினாள் ராதா.
“பின்னே?” என்று யதுநந்தன் கண்களை சுருக்கிக் கேட்க, “உபத்திரவம் செய்ய வந்த மாதிரி இருக்கு.” என்று ராதா கண்ணடித்து கூறினாள்.
யதுநந்தன் அவள் காதை மெல்லமாக திருக, “ஐயோ… அம்மா…” என்று ராதா அலற, “உஷ்.” என்று தன் உதடுகளில் விரல் வைத்து அவளை அமைதியாக இருக்கும்படி மிரட்டினான்.
ராதா தன் காதுகளைத் தடவி கொண்டு மெத்தையில் அமர்ந்தாள்.
அவளுக்குத் தண்ணீர் கொடுத்து, “போதும் ராதா. ரூம் படு சுத்தமாகிருச்சு. நீ ரெஸ்ட் எடு.” என்று யதுநந்தன் அக்கறையாகக் கூற, ராதா சம்மதமாக தலை அசைத்தாள்.
“ராதா கண்களை மூடு.” என்று யதுநந்தன் அதிகாரமாகக் கூற, ராதா மறுப்பாகத் தலை அசைத்தாள்.
யதுநந்தன் அருகே வர, ராதா தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்.
“அது…” என்று செல்லமாக மிரட்டிவிட்டு, அவள் முன் ஒரு கிபிட் பாக்ஸை நீட்டினான்.
அதை ராதா ஆர்வமாகப் பிரிக்க, யதுநந்தன் ராதவை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவள் முன் 50:50 என்று பொறிக்கப்பட்டு, பச்சை நிற அழகிய கூஜாவும், சிகப்பு நிற கூஜாவும் கம்பீரமாக வீற்றிருந்தது. அருகே பல நிறங்களில் கூழாங்கற்கள்.
அதைப் பார்த்த ராதா முகத்தில் புன்னகை பூத்தது. ஆச்சரியத்தில் ராதா தன் கண்களை விரித்தாள்.
“கிபிட் பிடிச்சிருக்கா ராதா?” என்று யதுநந்தன் ஆர்வமாக வினவ, “இது எதுக்கு?” என்று எதிர்க் கேள்வி கேட்டாள் ராதா.
“என்ன டீச்சர் அம்மா. பதில் தெரிஞ்சிகிட்டே கேள்வி கேட்டா என்ன அர்த்தம்?” என்று அவள் அருகே அமர்ந்து கொண்டு ராதாவை குறும்பாகப் பார்த்தான் யதுநந்தன்.
“உண்மையா தெரியலை. இது எதுக்கு?” என்று ராதா மீண்டும் வினவினாள்.
“நான் செய்ற செயல் உன்னை இம்ப்ரெஸ் செய்தால், இல்லை நீ செய்ற செயல் என்னை இம்ப்ரெஸ் செய்தா இந்தப் பச்சை நிற கூஜாவில் கல்லை போடணும். ஒருவேளை எனக்கு உன் மீதோ, இல்லை எனக்கு உன் மீதோ கோபம் வந்தால், வன்முறை கூடாது… சிகப்பு நிற கூஜாவில் கல்லை போடணும்.” என்று யதுநந்தன் தீவிரமாக கூறினான்.
“இதை எங்க பிடிசீங்க?” என்று ராதா கேலியாக வினவ, “அது ஒரு பெரிய சோக கதை ராதா.” என்று யதுநந்தன் சோகமாக கூற, ராதா தன் கண்களைச் சுருக்கி பார்த்தாள்.
யதுநந்தன் மேலும் தொடர்ந்தான்.
“இப்படி ஒரு டீச்சர் கூழாங் கல்லை கூஜாவில் போடும் பொழுது விழுந்தவன் தான் நான். இன்னும் எழவில்லை.” என்று யதுநந்தன் சோகம் கலந்து கேலியாக கூற, ராதா தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
யதுநந்தன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்ப முயற்சிக்க, “யாரும் அவ்வளவு சோகமா என் கிட்ட பேச வேண்டாம்.” என்று மிடுக்காகக் கூறினாள்.
யதுநந்தன் பெருங்குரல் எடுத்துச் சிரிக்க, அங்கிருந்த தலையணையை அவன் மீது எறிந்தாள் ராதா.
“ராதும்மா… நான் தான் சொல்லிருக்கேன் இல்லை. வன்முறை கூடாது… அப்படின்னு…” என்று யதுநந்தன் குறும்போடு பார்க்க, “இதுக்கெல்லாம் கூழாங்கற்கள் போட்டா கூஜா பத்தாது. வாளி தான் வேணும்.” என்று ராதா புன்னகையோடு கூறினாள்.
ராதவை தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து, அந்தக் கூஜாக்களை காட்டி, “இந்தக் கூஜாக்கள் நாம் வாழும் வாழ்க்கையைச் சொல்லும் ராதா.” என்று மென்மையாகக் கூறினான் யதுநந்தன்.
“பச்சை மட்டும் தான் நிரம்பணும். சிகப்பு அப்படியே இருக்கனும். அப்படி தானே?” என்று ராதா தன் தலை திருப்பி அவன் முகம் பார்த்து வினவ, யதுநந்தன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
“அது எப்படி ராதும்மா முடியும்? பகல், இரவு… இன்பம், துன்பம்… ஏற்றம், இறக்கம்… எல்லாம் நிறைந்தது தான் வாழ்க்கை ராதா. தவறுவது மனித குணம். அதை திருத்திப்போம்.” என்று யதுநந்தன் நிதானமாக எடுத்துரைத்தான்.
யதுநந்தனிடம் எதிர்வாதம் செய்ய ராதாவிடம் ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும், யதுநந்தனின் மனநிலையை மனதில் கொண்டு, அவன் போக்கில் பயணிக்க முடிவு செய்து ராதா மௌனமாகத் தலை அசைத்தாள்.
“அது என்ன 50:50?” என்று கூஜாவில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைப் பார்த்து ராதா கேட்க, அவள் காதில் மென்மையாகப் பாடினான் யதுநந்தன்.
“நீ பாதி நான் பாதி கண்ணே…
இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்”
யதுநந்தனின் அன்பு தேனாய் இனிக்க, ராதா அவன் அன்பில் பாகாய் உருகி நின்றாள்.
அவர்கள் அன்பின் மீதுள்ள நம்பிக்கையில், அத்தனை கூழாங்கற்களும் தனக்கே சொந்தம் என்று பச்சை கூஜா கம்பீரமாக நின்றது.
யதுநந்தனின் குணமும், ராதாவின் கண்டிப்பும் கூழாங்கற்கள் தனக்கும் சொந்தம் ஆகும் என்ற நம்பிக்கையைச் சிவப்பு நிற கூஜாவிற்கு கொடுத்தது.
இரண்டு கூஜாக்களும் யாருக்கு முதல் கல் சொந்தமென்று அவர்கள் வாழ்க்கையை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தது.




