arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 04
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 4 / 20

அத்தியாயம் 04

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.2/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 04

இந்திரா அமைதியாக அமர்ந்திருந்தாள். கார் ‘மிரிஸ்ஸ’ என்ற இடத்தை நோக்கிப் போய்கொண்டிருந்தது. கொழும்பிலிருந்து நூற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறிய கடற்கரையோர நகரம். தென்னை மரங்கள் செறிந்த அழகிய இடம். வெளிநாட்டவர்களின் வருகை இப்போதெல்லாம் இங்கு அதிகம்.

இரண்டரை மணிநேர பயணம்.‌ ஆங்காங்கே நிறுத்தி வந்ததனால் அந்த ஊருக்கு வரும்போது மணி பதினொன்றைத் தாண்டி இருந்தது. காரை நேராக ஒரு ஹோட்டலில் கொண்டு போய் நிறுத்தச் சொல்லியிருந்தாள் பெண்.‌ இலங்கை வரும்போதே ஏர்போர்ட்டில் தேவையான அளவு பணத்தை ரூபாய்களில் மாற்றிக்கொண்டுதான்‌ வந்திருந்தாள்.

“இந்த ஹோட்டல்தான் இங்க ரொம்ப ஃபேமஸ் மேடம்.” ட்ரைவர் சொல்லவும் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு இறங்கியது பெண். அவருக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு உள்ளே வந்தாள்.

கடலை அண்மித்த பகுதியில் அமைந்திருந்தது அந்த ஹோட்டல். தனக்காக ஒரு அறையைப் பதிவு செய்துகொண்டு உள்ளே நுழைந்தாள். அவளது அறையிலிருந்து பார்த்தபோது நீலக்கடல் நிர்மலமாகத் தெரிந்தது. அதை அடுத்தாற் போல அழகிய நீச்சல் குளம்.‌ எங்கு பார்த்தாலும் நீரும் தென்னை மரங்களும் கண்ணுக்கு விருந்து படைத்தன. நான்கைந்து புகைப்படங்களை எடுத்தவள் அதை சூர்யாவிற்கு அனுப்பி வைத்தாள்.

“என்னக்கா இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கு?!” தம்பியிடமிருந்து அவசரமாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. இப்போது அவன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று கொண்டிருப்பான் என்று எண்ணியபடி ஒரு குளியல் போட்டாள். வெயில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. சுற்றிவர இருந்த கடலும் தென்னை மரங்களும் அந்த வெப்பத்தை இலேசாகத் தணித்திருந்தன.‌

ரிசப்ஷனை அழைத்தவள் குடிப்பதற்கு இளநீர் வரவழைத்தாள். குளுகுளுவென அந்தப் பானம் தொண்டைக்குள் இதமாக இறங்கியது. கண்களை மூடியவள் கட்டிலில் தலையைச் சாய்த்துக் கொண்டாள். சொல்லாமல் கொள்ளாமல் தேவனின் முகம் மனக்கண்ணில் தோன்றியது. சட்டென்று அந்த உருவம் மாறி விக்ரம் தெரிந்தது. எண்ணத்தை அதன் போக்கில் விட்டபடி அப்படியே படுத்துக்கிடந்தாள் பெண்.

இந்திரா எப்போதும் அப்படித்தான். மனதில் குழப்பம் தோன்றும்போது எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் எண்ணத்தை அதன் போக்கில் விட்டுவிடுவாள். முட்டிமோதி இறுதியாக அவள் மனமே அவளுக்கொரு முடிவைச் சொல்லும். எந்தப் பாரபட்சமும் இல்லாமல் அந்த முடிவை அதன்பிறகு ஆராய்வாள். இப்போதும் அதுதான் நடந்து கொண்டிருந்தது.

ஹீத்ரோவில் அவள் தேவனைப் பார்த்தபோது மனதில் எந்தச் சலனமும் தோன்றவில்லை. அவனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைத்தாள்.‌ அவரவர்க்கு ஆயிரம் சிக்கல்கள் இருந்ததால் அடுத்தவரை இருவருமே கவனிக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழ் பேசும் இந்த மனிதன் தன்னை ஏன் ஒதுக்குகிறான் என்றுதான் அவள் குழம்பினாள்.‌ ஆனால் அதே மனிதன்தான் பிற்பாடு அவளைத் தேடிவந்து உதவியும் செய்தான்.

நேற்றைய இரவுதான் அவன் பார்வையில் மாற்றம் தெரிந்தது. இதில் விந்தை என்னவென்றால் அந்த மாறுதலான பார்வையை அவளும் ரசித்தாள். பதில் பார்வைப் பார்த்தாள். இப்போது நினைக்கும் போதும் அந்தப் பார்வை அவளை என்னவோ செய்தது. வேண்டாம்! அவனுக்குத் திருமணம் உறுதியாகி இருக்கிறது. அந்தப் பெண் வேறு தங்க விக்கிரகம் போல அவ்வளவு அழகாக இருக்கிறாள். அவள்தான் தேவனுக்குப் பெருத்தமாக இருப்பாள்.

அலைபேசி சிணுங்கியது. விக்ரம்தான் அழைத்துக் கொண்டிருந்தான். முகத்தில் ஓர் சலிப்புத் தோன்ற அந்த அழைப்பைத் தவறவிட்டாள். இந்த வில்லங்கத்தை மடியில் வைத்துக்கொண்டு இவளுக்கு இதுபோன்ற ஆசைகள் வரலாமா? இவள் வாழ்க்கையே இடியாப்பச் சிக்கலாக இருக்கும் போது எதற்காக அதற்குள் இன்னொரு மனிதனையும் இழுக்க வேண்டும்!

அதேவேளை தேவனும் அவனது கட்டிலில் படுத்துக்கிடந்து அவனது வாழ்க்கையைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான். எப்படிச் சமாதானம் செய்தபோதும் நிதிலா தனக்கான துணை இல்லை என்பதை அவன் மனது ஆணித்தரமாக அடித்துச் சொன்னது. இந்திராவோடு அந்தப் பெண்ணை ஒப்பிட்டுப் பார்த்தது. ஒருவேளை இந்திரா என்ற பெண்ணைப் பார்த்திராவிட்டாலும் அவன் மனது நிதிலாவை ஏற்றுக்கொண்டிருக்காது. அதுதான் உண்மை.

“ஹலோ.” இந்திராவை அழைத்துச் சென்ற ட்ரைவரை இவனாகவே அழைத்தான்.

“சொல்லுங்க சார்.”

“மேடமை கொண்டு போய் விட்டுட்டீங்களா?”

“ஆமா சார்.”

“நல்ல ஹோட்டலா பார்த்துக் குடுத்தீங்களா?” அவள் எப்படியும் ஹோட்டலுக்குத்தானே போவாள். அவளுக்கு அங்கு வேறு யாரைத் தெரியும்?

“ஆமா சார்.” இவன் எதுவும் கேட்காமலேயே அவள் போன ஹோட்டல் முதற்கொண்டு அவளின் பயணம் பற்றிய அனைத்துத் தகவல்களும் தேவனுக்கு வந்து சேர்ந்தன.

“ரொம்ப நன்றிங்க.” என்றவன் ட்ரைவர் சொன்ன அனைத்தையும் அவனது டைரியில் குறித்துக் கொண்டான். ஒரு முடிவுக்கு வந்தவன் போல அடுத்ததாக தந்தையை அழைத்தான்.

“தேவன், சொல்லுப்பா.”

“அப்பா, ஃப்ரீயா இருக்கீங்களா? பேச முடியுமா?”

“ஒன்னும் ப்ராப்ளம் இல்லை, நீ சொல்லுப்பா.” அதன்பிறகு மகன் பேசிய பேச்சில் தந்தை திகைத்தாலும் எதிர்பார்த்த விஷயம்தான் என்பதால் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.

“தேவ், அவசரப்படாம இன்னும் கொஞ்ச நாள் இதைப்பத்தி யோசிக்கலாமே.”

“இல்லைப்பா, இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவில்லை, இந்த எண்ணம் எம் மனசுக்குள்ள ரொம்ப நாள் முன்னாடியே வந்திடுச்சு, அவசரப்பட வேணாம்னுதான் நானும் அமைதியா இருந்தேன், ஆனா இதுக்கு மேலயும் காலத்தைக் கடத்துறது நல்லதுன்னு எனக்குத் தோணலை.”

“உங்கம்மா என்ன சொல்லுவான்னு தெரியலையே.”

“அம்மாக்காக எல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாதுப்பா, இது என்னோட வாழ்க்கை, அதுல எந்த காம்ப்ரமைஸும் பண்ண முடியாதுப்பா, நிதிலாவோட என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்காது, ஒருவேளை அவ இந்தக் கல்யாணத்தை விரும்பலாம், ஆனா என்னால முடியாது, என்னால அவகூட ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியாது, அதையும் தாண்டி நடந்தா இது டிவோர்ஸ்லதான் போய் முடியும்.”

“சீச்சீ! என்ன வார்த்தைப் பேசுறே தேவ்! கல்யாணம் எங்கிறது ரொம்ப சந்தோஷமான விஷயம்டா.”

“கரெக்ட்பா, அந்த சந்தோஷம் எனக்கு நிதிலாவால கிடைக்கும்னு நான் நினைக்கலை, அந்தப் பொண்ணால நான் எந்த சந்தோஷத்தையும் இதுவரைக்கும் அனுபவிக்கவும் இல்லை, எனக்கு அதுதான் ரொம்ப பயமா இருக்கு.” இப்படிச் சொல்பவனிடம் என்ன பேசுவது?

“அம்மா ரொம்ப கோவப்படுவா.”

“அது எனக்கும் தெரியும், ஆனா‌ என்னால என்னப்பா பண்ண முடியும்?”

“நீ கொஞ்சம் நிதிலாகிட்டப் பேசிப் பார்க்கலாமே?”

“இதெல்லாம் பேசி வர்ற விஷயமில்லைப்பா, அந்தப் பொண்ணைப் பார்த்தா இப்பெல்லாம் எனக்கு எதுவுமே தோணமாட்டேங்குது, கால் பண்ணினா எடுத்துப் பேச முடியலை, வழக்கமா கேட்கிற நாலு கேள்வியையே கேட்கிறா, இதுல அம்மாதான் கால் பண்ணச் சொன்னாங்க தேவ்னு வேற சொல்றா, எனக்குச் சிரிக்கிறதா அழுறதான்னே தெரியலை, என்னோட வாழ்க்கையை நான் ரசிச்சு வாழணும்னு நினைக்கிறேன்பா, நீங்களும் அம்மாவும் சிரிக்கிறீங்க, சண்டைப் போடுறீங்க, ஏதாவது ஒரு விஷயத்துக்குக் காரசாரமா விவாதிக்கிறீங்க, ஆனா எங்களுக்குள்ள அப்பிடி எதுவுமே நடந்ததில்லைப்பா, எப்பவுமே நாந்தான் பேசுறேன், நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் அவ பதில் சொல்றா, அதுலயும் பாதி கேள்விக்கு அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறா, என்னால முடியலைப்பா, எனக்குன்னு வரப்போறவளைப் பத்தி நானும் நிறைய கனவுகள் கண்டிருக்கேன், எனக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கு, ஆசைகள் இருக்கு, ப்ளீஸ்பா, புரிஞ்சுக்கோங்க.”

“தேவ், அமைதியா இரு, ரொம்பப் பெரிய விஷயத்தைப் பத்திப் பேசியிருக்கே, நிதிலாவை உனக்குப் பேசும்போது கூட நான் இவ்வளவு யோசிக்கலை, தாரிணி பார்த்தா எல்லாம் கரெக்டா இருக்கும்னு நினைச்சேன், உனக்கும் பொண்ணைப் புடிச்சிருந்தது, ஆனா இப்ப நிலைமை அப்பிடியில்லை, அவங்களுக்கு நாம நம்பிக்கையைக் குடுத்துட்டோம், தடாலடியா முடிவெடுக்க முடியாது, பொறுமையா இரு.” பரதன் மாத்திரமல்ல, இந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த காமாட்சியும் குழம்பிப் போனார்.

மதியத்திற்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று இளையவனிடம் அபிப்பிராயம் கேட்க வந்தவரின் காதுகளில் இவர்கள் பேசியது விழுந்தது. விக்கித்துப் போனார். அவர் பார்க்க வளர்ந்த பையன்.‌ பெத்த மகனைப் போல பாசம் வைத்திருக்கிறார். அவன் வாழ்க்கை நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.‌ ஆனால் தேவனின் மனதுக்குள் இத்தனைக் குழப்பம், பாரம் இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

பேசி முடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்த தேவன் அங்கே காமாட்சி நிற்பதைப் பார்த்துவிட்டு அமைதியானான். அவரது திகைத்த தோற்றம் அவனுக்கும் கவலையைக் கொடுத்தது. தான் அப்பாவிடம் பேசிய அனைத்தையும் அவர் கேட்டுவிட்டார் என்று புரிந்து கொண்டான்.

“தம்பீ! என்னப்பா இதெல்லாம்?” அவர் கண்களில் நீர் நிறைந்தது. தேவன் அவர் தோளை ஆறுதலாக வருடிக்கொடுத்தான்.

“பயமாயிருக்கும்மா, இது சரிவராதுன்னு தெரிஞ்சுக்கிட்டே இறங்க பயமா இருக்கு, வாழ்க்கைம்மா, அழிச்சு அழிச்சு எழுத முடியாது, ஒரு தடவை எழுதினா எழுதினதுதான்.” அவன் சொல்லி முடிக்கப் பெரியவர் வெடித்து அழுதார்.

“தம்பிக்குக் கல்யாணம்னதும் நான் எவ்வளவு சந்தோஷப்பட்டேன், நான் பார்க்க வளர்ந்த பையன் நீங்க, எம் புள்ளைக்குக் கல்யாணம்னு மனசுக்குள்ள எவ்வளவு ஆசை, கற்பனை இருந்துச்சு!”

“உங்களுக்கே இவ்வளவு ஆசை இருக்கும் போது எம் மனசுல எவ்வளவு ஆசை இருந்திருக்கும்? அதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு ஆகணுமா? நான் வாழ்க்கையில தோத்துப் போகணுமாம்மா?”

“அப்பிடியெல்லாம் சொல்லாத ராஜா, அந்தப் பொண்ணு ஏன் இப்பிடியெல்லாம் நடந்துக்குது? பார்க்க எவ்வளவு அழகா, லட்சணமா இருக்கு!” இப்போது தேவன் கசப்பாகப் புன்னகைத்தான்.

“ஏன் தம்பி? அந்தப் பொண்ணு மனசுல வேற யாராவது இருப்பாங்களோ?” இந்தக் கேள்வியில் இளையவன் திடுக்கிட்டு நிமிர்ந்தான்.

“என்னம்மா சொல்றீங்க?!” இந்தக் கோணத்தில் அவன் சிந்திக்கவே இல்லையே! அப்படியும் இருக்குமா? நிதிலா மனதில் வேறு யாராவது இருக்கிறார்களா?!

“இந்தப் பொண்ணுங்க மனசுல என்ன இருக்குன்னு யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்துல இப்பிடியொரு பொண்ணு இருக்குமா? எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு, அம்மாக்குப் பயந்துக்கிட்டுத்தான் இந்தப் பொண்ணு கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லியிருக்கணும், இல்லைன்னா உங்களைப் போய் தள்ளி வெக்க யாருக்காவது மனசு வருமா? உங்களுக்கென்ன குறை தம்பி?” ஆங்காரமாகக் கேட்ட பெரியவரைப் பார்த்த போது சிரிப்பு வந்தது.

நேற்றைய தினம் கடற்கரை ஓரத்தில் தான் பார்த்த ஓர் பார்வையில் கட்டுண்டு நின்ற ஒருத்தி இப்போது மனக்கண்ணில் தோன்றினாள். எங்கே இவன் பக்கம் சாய்ந்து விடுவோமோ என்ற பயத்திலேயே அவள் இன்று அவசரமாகக் கிளம்பியது நினைவுக்கு வந்தது.‌ தேவனுக்கு அது சர்வ நிச்சயம்! ஓர் நொடி என்றாலும் அவள் சலனத்தை அந்தக் கண்கள் அவனுக்குச் சொன்னது. ஜன்னல் வரை நடந்து போனவன் தூரத்தில் தெரிந்த கடலை வெறித்தான்.

“என்ன தம்பி யோசிக்கிறீங்க?”

“நீங்க சொல்றதும் ஒருவேளை உண்மையா இருக்கலாம்மா, அப்பிடி இல்லைன்னா கூட என்னால நிதிலாவைக் கல்யாணம் பண்ணிக்க முடியாது.”

“அப்பா என்ன சொல்றாங்க?”

“அவசரப்படாதேன்னு சொல்றாங்க.”

“தம்பி… நான் ஒன்னு கேட்கட்டுமா?”

“என்னம்மா?”

“உண்மையிலேயே அந்தப் பொண்ணு இந்திரா யாரு?” இப்படியொரு நேரடி கேள்வியை தேவன் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்லத் தடுமாறினான்.

“நானும் உங்க வயசைக் கடந்துதான் வந்திருக்கேன், முழுசா புரியலைன்னாலும் ஓரளவு புரிஞ்சுக்க முடியுது, நல்லா கலகலன்னு வந்த பொண்ணு நேத்து நீங்க வெளியே போய் வந்ததுல இருந்து அமைதியாகிடுச்சு, ஃப்ரெண்டுன்னு சொன்னீங்க, ஆனா உங்க வருங்கால மனைவியைப்பத்தி எங்கிட்ட வந்து கேட்டுச்சு, விடிஞ்சும் விடியாததுமா இன்னைக்கு ஊரைப் பார்த்துக் கிளம்பிடுச்சு, என்னப்பா நடக்குது?”

மௌனம் அந்த இடத்தை ஆக்கிரமித்தது. கேட்ட கேள்விக்குப் பதிலை எதிர்பார்த்து காமாட்சி அங்கேயே நின்றிருந்தார். ஆனால் இளையவன் வாயைத் திறக்கவில்லை.‌ ஏதோ சிந்தித்தபடி நின்றிருந்தான்.‌

“அந்தப் பொண்ணு உங்கக் கூட படிச்சவங்களா?” இப்போது இல்லையென்று தலையை ஆட்டினான்.

“அப்ப யாரு?”

“ஃப்ளைட்ல பார்த்தேன்.”

“ஃப்ளைட்ல பார்த்த பொண்ணை வீடு வரைக்கும் கூட்டிட்டு வர்ற அளவுக்கு நீங்க பொறுப்பில்லாத புள்ளை கிடையாது.” பெரியவர் தோண்டித் துருவ ஆரம்பிக்கவும் டுபாயில் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தான்.

“சரிப்பா, இதுக்கும் அந்தப் பொண்ணு இன்னைக்கு அவசரமா கிளம்பிப் போறதுக்கும் என்ன சம்பந்தம்? ரெண்டு நாள் தங்கிட்டுப் போற எண்ணத்துலதானே வந்திருக்கு?”

“எனக்குப் பொண்ணு பார்த்திருக்காங்க எங்கிற விஷயம் நேத்துதான் அவளுக்குத் தெரியும், பீச்ல வச்சுத்தான் சொன்னேன்.”

“ஓ…” அதற்குமேல் காமாட்சிக்கு எந்த விளக்கமும் தேவைப்படவில்லை. ஓரளவிற்கு எல்லாம் புரிந்தது. இப்போது அவர் அமைதியாகிவிட்டார்.

***
நான்கு நாட்கள் கடந்து போயிருந்தன. இந்திரா தான் பணியாற்ற வேண்டிய அலுவலகத்தைக் கண்டுபிடித்திருந்தாள். அத்தனைப் பெரிதென்று சொல்ல முடியாது. ஆனால் சிறியதும் இல்லை. இன்னும் ஹோட்டலில்தான் தங்கியிருந்தாள். தொடர்ந்து அங்கேயே தங்க முடியாது என்பதால் வாடகைக்கு ரூம் எங்காவது கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தாள்.

சூர்யாவை மாத்திரம் தொடர்பு கொண்டாள். அவள் எங்கே இருக்கிறாள், என்ன செய்கிறாள் என்ற தகவல்கள் தம்பிக்கு மாத்திரமே தெரியும். ஏதேதோ சொல்லி விக்ரமின் நண்பரை ஏர்போர்ட்டிற்கு வராமல் தடுத்தவள் அதன்பிறகு விக்ரமுடனும் பேசவில்லை. வேலைப் பளு என்று காரணம் காட்டினாள்.

“அக்கா, எதுக்காக இப்போ விக்ரமை அவாய்ட் பண்ணுறே? அது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணும்.”

“சூர்யா, கொஞ்ச நாள் நான் நிம்மதியா இருக்கேன்டா.”

“சொன்னா புரிஞ்சுக்கோ, அந்த மனுஷன் நம்ம வீட்டுல உன்னைப்பத்தி ஏதாவது சொன்னா நீ அவ்வளவுதான்.”

“அதை அப்புறமா பார்த்துக்கலாம், இந்த நிமிஷம் நான் நிம்மதியா இருக்கேன், எனக்கு அதுதான் முக்கியம், இந்த ஊர் அவ்வளவு சூப்பரா இருக்கு, இங்க இருக்கிற மனுஷங்களும் அவ்வளவு ஸ்வீட்டா இருக்காங்க, பேசாம இங்கேயே இருந்துடலாம் போல இருக்கு.”

“சரியாப் போச்சு! சீக்கிரமா வீடொன்னு பாரு, இன்னும் எத்தனை நாளைக்கு ஹோட்டல்ல இருக்கப் போறே? அப்புறம் சம்பாரிக்கிறது எல்லாத்தையும் ஹோட்டல்காரனுக்குத்தான் குடுக்கணும்.”

“அதுவும் சரிதான்.” என்றவள் மாலை வேளைகளில் மும்முரமாக வீடு தேட ஆரம்பித்திருந்தாள்.‌ ஆஃபீஸ் வேலை அத்தனை சிரமமாக இருக்கவில்லை.‌ நான்கு மணியோடு வேலை முடிந்துவிடும்.‌ அதன்பிறகு வீடு தேடும் படலம். பிற்பாடு இரவு உணவை முடித்துக்கொண்டு கடற்கரை ஓரமாக நடப்பாள்.

அந்த ஊர் உல்லாசப் பயணிகளின் நகரமாக இருந்தது.‌ அழகிய கடற்கரைப் பிரதேசம் என்பதால் சதா வெளிநாட்டவர்களின் வருகை அங்கே தென்பட்டது. பெரும்பாலான ஹோட்டல்களும் கடற்கரையை அண்மித்தே கட்டப்பட்டிருந்தன. மாலையும் இரவும் சந்திக்கும் அந்த அழகான பொழுதில் அலைகள் கால்களை முத்தமிட நடக்கும் சுகம் அலாதியானது.‌ அந்த இன்பத்தை அனுபவித்தபடி நடப்பவளுக்கு தேவனின் நியாபகம் வரும்.

இந்த நான்கு நாட்களில் தன் பிரச்சனைகளை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தான் தேவன். அப்பாவை அழைத்து அன்று தன் மனதிலிருப்பதைச் சொன்னது போல அம்மாவையும் அழைத்துப் பேசினான்.‌ ஆனால் அப்பா போல அம்மா அவனை அத்தனை எளிதில் புரிந்துகொள்ளவில்லை.‌ தாரிணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டுக் கத்தவே ஆரம்பித்துவிட்டார்.

“உம் மனசுல நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க தேவ்? லட்சுமி குடும்பம் எவ்வளவு பெரிய ஆளுங்க தெரியுமா? எவ்வளவு வசதி, எவ்வளவு செல்வாக்கு! அந்தப் பொண்ணு அழகோவியம் மாதிரி இருக்கு, ஒத்தைப் பொண்ணு, அத்தனை சொத்துக்கும் ஒரே வாரிசு, அதிர்ந்து ஒரு வார்த்தைப் பேசமாட்டேங்குது, அவ்வளவு மரியாதை, எவ்வளவு ஸ்வீட்டா இருக்கா, இதெல்லாம் உனக்குக் கசக்குதா? ஒன்னுக்கும் உதவாத காரணங்கள் சொல்றே?”

“அம்மா, ப்ளீஸ்… என்னைப் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.”

“முட்டாள் மாதிரி பேசுறே, இதுல நான் என்னத்தை உன்னைப் புரிஞ்சுக்கணும்?”

“நிதிலாக்கு ஒருவேளை இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லையோன்னு எனக்குத் தோணுது.”

“லூசாடா நீ?! என்னப் பேசுறே? பொண்ணுக்கிட்டச் சம்மதம் கேட்காமலா லட்சுமி இவ்வளவு ஏற்பாடும் பண்ணியிருப்பா?”

“அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா, இந்தப் பேச்சை இதோட நாம நிறுத்திக்கலாம், எனக்கு அதுதான் சரின்னு படுது.”

“தேவ்! கொஞ்சம் யோசிச்சுப் பேசு, எங்க ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள உனக்கு நிதிலாதான்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு, இப்ப போய் அதையெல்லாம் மாத்த முடியாது, இவ்வளவு பெரிய இடத்தை வேணாம்னு சொன்னா எனக்குப் பைத்தியம் புடிச்சிருக்குன்னு எல்லாரும் நினைப்பாங்கடா! அப்பிடியென்ன குறையைக் கண்டுபிடிச்சிட்ட நிதிலாக்கிட்ட நீ? கல்யாணம் ஆனா எல்லாம் சரியாகிடும் ராஜா, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதே.” தாரிணி தன்னால் முடிந்தவரை மகனைச் சமாதானம் செய்யவே முயன்றார்.

அம்மாவின் நிலைமை என்னவென்று மகனுக்கு நன்றாகவே புரிந்தது. நண்பிகள் வட்டத்தில் அவருக்குத் தலைகுனிவு ஏற்படுவதை அவர் விரும்பவில்லை. நிதிலா அவருக்கொரு நல்ல மருமகளாக இருக்கலாம். ஆனால் தேவனுக்கு அவளால் ஒரு நல்ல மனைவியாக இருக்கவே முடியாது. இவனுக்கு மனைவி ஆகாமல் எங்கனம் தாரிணிக்கு அவள் மருமகளாக முடியும்?! அம்மாவிற்கு இது புரியாது. அம்மாவிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்தவன் அதற்கு மேல் விவாதிக்கவில்லை.

“தேவ், அம்மாகிட்ட ஆர்க்யூ பண்ணாதே, இதையெல்லாம் அவளால ஏத்துக்க முடியலை, கொஞ்சம் டைம் குடு, பொறுமையா எடுத்துச் சொல்லலாம்.” இது அப்பா.‌ அவருக்கு யார் பக்கம் பேசுவது என்றே புரியவில்லை. அம்மா தன்னைப் புரிந்துகொள்ளவில்லையே என்று மகனுக்கு வருத்தமாக இருந்தாலும் தனது முடிவில் உறுதியாக இருந்தான்.

தேவன் இலங்கைக்கு வந்து இன்றோடு பத்து நாட்களாகின்றன. இந்தப் பத்து நாட்களிலும் நிதிலாவிடமிருந்து அவனுக்கு வந்த அலைபேசி அழைப்புகளைத் தவிர்த்திருந்தான்.‌ ஒருமுறை லட்சுமி அழைத்திருந்தார்.‌ அந்த அழைப்பையும் இவன் ஏற்கவில்லை. பெண் வீடு கொஞ்சம் அதிருப்தியாக உணர்ந்திருக்கும் போலும். விஷயம் தாரிணியின் காதுகளுக்குப் போக அவர் ஒரு ஆர்ப்பாட்டமே செய்தார்.‌ ஆனால் மகன் கண்டுகொள்ளவில்லை.

“உங்க மகன் பண்ணுறதை என்னன்னு கேட்கமாட்டீங்களா?” கணவரிடம் பாய்ந்தார் தாரிணி.

“வாழப்போறது அவன், அவன் சொல்றதையும் நாம என்னன்னு கொஞ்சம் கேட்கணும்மா.”

“என்னத்தைக் கேட்கணும்னு நீங்களும் எனக்கு அட்வைஸ் பண்ணுறீங்க? இவ்வளவு நாளும் சும்மா இருந்துட்டு இப்ப வந்து கல்யாணத்துக்கு நாள் குறிக்கிறப்போ என்னென்னமோ சொல்றான்?”

“ஆரம்பத்துல நிதிலா மேல அவனும் ஆசையாத்தான் இருந்தான் தாரிணி, ஆனா போகப்போக தேவ் முகத்துல சந்தோஷம் குறைஞ்சிடுச்சு, அதை நான் கவனிச்சேன்மா, ஒருவேளை அப்பிடி எதுவுமில்லையோன்னுதான் நானா எதுவும் அவனைக் கேட்கலை, தேவ் மனசுல தன்னோட மனைவியைப்பத்தி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கு, இது அவனோட வாழ்க்கை தாரிணி, உனக்கும் லட்சுமிக்குமான நட்பை விட எனக்கு எம் பையனோட வாழ்க்கை ரொம்பவே முக்கியம்.” கறாராகச் சொன்னவர் பெண் வீட்டாரை அழைத்து நிலைமையைத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.‌

பெண் வீடு அதிர்ந்து போனது. தேவனைத் தொடர்பு கொள்ள அவர்கள் எவ்வளவு முயன்ற போதும் அவன் பிடிகொடுக்கவில்லை.‌ யாருடைய அழைப்பையும் ஏற்க மறுத்தான். ஆனால் நிதிலாவிற்கு மாத்திரம் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினான். தனது செயலுக்கு மன்னிப்பை வேண்டி அனுப்பப்பட்ட அந்தக் குறுஞ்செய்தியும் கடமைக்காக அனுப்பப்பட்டதே தவிர எந்தக் குற்றவுணர்ச்சியாலும் அல்ல!

அன்று மாலை வேலை முடிந்ததும் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்து கொண்டிருந்தாள் இந்திரா. வெயில் இலேசாக மட்டுப்பட்டிருந்தது. ஆனாலும் கடல் காற்றிற்காக உள்ளம் ஏங்கியது. இப்போதெல்லாம் அலைகளின் ஓசையும், தீண்டிச் செல்லும் காற்றின் சுகமும் இல்லாமல் அவளால் வாழ முடியாது என்ற நிலைக்கு வந்திருந்தாள். அவற்றையெல்லாம் அனுபவிக்கும் போது சொல்லாமல் கொள்ளாமல் ஒரு முகம் நியாபகத்திற்கு வரும். அது நிச்சயமாக விக்ரமின் முகம் அல்ல!

இலங்கை வந்த இந்தப் பத்து நாட்களில் மனதளவில் அவள் மிகவும் சிரமப்பட்டுவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் இந்த ஊருக்கு வந்த பிற்பாடு மனதோடு போராடுவதே பெரும்பாடாக இருக்கிறது! அவள் சொல்வதை, பிறப்பிக்கும் ஆணைகளை மனது ஏற்க மறுக்கிறது.

முன்பெல்லாம் விக்ரம் என்ற மனிதனை எங்கனம் தவிர்ப்பது, அவனைத் தன் வாழ்க்கையிலிருந்து எப்படி அப்புறப்படுத்துவது என்பதுதான் இவள் சிந்தனையாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் அப்படியில்லை.‌ மிகவும் சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தாள். விக்ரமை அப்புறப்படுத்துவது மாத்திரமல்லாது அந்த இடத்தில் இன்னொரு மனிதனை இட்டு நிரப்ப மனது துடிக்கிறது.

சிந்திக்கும் போதே மனதுக்குள் குற்றவுணர்ச்சி பரவியது. இத்தனை சுயநலவாதியாக நான் எப்போது மாறிப்போனேன்! நிதிலா எத்தனை அழகான பெண். அந்தப் பெண்ணின் முன்பாக இவள் போய் நின்றால் ஒன்றுமே இல்லை என்று ஆகிவிடுவாள். அழகு மட்டுமா? செல்வமும் நிறைந்த பெண். அந்த மனிதனுக்கு அவள்தான் பொருத்தமாக இருப்பாள். அப்படியிருக்கும் போது சிக்கல்களுக்கு மத்தியில் இருக்கும் நான் எதற்காக இப்படி யோசிக்க வேண்டும்?! முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல தனக்கு ஏனிந்தத் தகுதிக்கு அப்பாற்பட்ட, அடையமுடியாத ஆசை வரவேண்டும்?!

மனது கனத்துப் போனது. களைப்பில் உடல் சோர்ந்தது. கண்களில் நீர் நிறைந்தது. எதையும் உணராதவள் போல தன் போக்கில் ஹோட்டலுக்குள் நுழைந்தவளை வரவேற்றது ஏஸியின் குளிர்ந்த காற்று. கண்களில் திரண்ட நீர் பாதையை மறைக்க சிரமப்பட்டு நடந்தவளை நிறுத்தியது அந்தக் குரல்.

“இந்திரா!” சட்டென்று நின்றாள் பெண். இது தேவனின் குரல்.‌ அவளைப் பொறுத்தவரை தேவதூதனின் குரல். சுற்றும்முற்றும் தேடியவளின் கண்கள் அவனைக் கண்டுகொண்டன. ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள். உள்ளுக்குள் எதுவோ வெடித்துச் சிதறுவது போலவிருக்க நின்றிருந்த கண்ணீர் மீண்டும் திரண்டது. அவளது நிலையை உணர்ந்தவன் போல தேவன் எழுந்து வந்தான்.

“ஏன்? இங்க நான் வர்றதுல அப்பிடியென்ன ஆச்சரியம்?”

“எப்பிடி? நான் இங்கதான்… இருக்கேன்னு…” அவள் எங்கே போகிறாள் என்று சொல்லிவிட்டு வரவில்லையே! அப்படியிருக்கும் போது எப்படி இவனுக்கு முகவரி தெரிந்தது.

“ட்ரைவர் நல்லா தெரிஞ்சவர்தான், அப்பிடி முன்ன பின்ன தெரியாதவங்களோட உன்னைத் தனியா அனுப்புவேனா?” அந்த அக்கறை அவளுக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது இவன் இங்கே வந்திருப்பதன் நோக்கம் என்ன? கண்களில் கேள்வியைத் தேக்கி அவனையே பார்த்திருந்தது பெண்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 05

அத்தியாயம் 05கேள்வியைக் கண்ணில் தேக்கித் தன்னையே பார்த்திருந்த மங்கையை தேவனும் சில நொடிகள் பார்த்திருந்தான்.‌ களைத்துச் சோர்ந்திருந்தாள். தனக்குமே விடை தெரியாத ஒரு கேள்வியை அவள் கேட்கும்போது அவன் எங்கனம் பதில் செல்வான்?! வார்த்தைகளைக் கோர்க்கத் தடுமாறியவன் வேறு பேசினான்."ஏதாவது குடிக்கலாமா…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 4 கருத்துகள் உள்ளன

  1. இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று… இந்த வரிகள் தான் நியாபகம் வருது…

உங்கள் கருத்தைப் பகிருங்கள்