arrow_back
Vaazha Vendum Vaa அத்தியாயம் 07
Vaazha Vendum Vaa chevron_right பகுதி 7 / 22

அத்தியாயம் 07

visibility 12
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 07

தனது அறையில் நின்றபடி தொலைவானை வெறித்திருந்தான் விபி.‌ மனம் முழுவதும் சோகம் நிரம்பி இருந்தாலும் இன்றைக்கு அவளைப் பார்த்ததில் அவ்வளவு மகிழ்ச்சி அவனுக்கு. மேல்தட்டு வாழ்க்கை. வசதிகளுக்கு எந்தக் குறைவும் எந்தக் காலத்திலும் இருந்ததில்லை.‌ ஆண்டவன் புண்ணியத்தில் அவன் முன்னோர்கள் அதற்கு வழி செய்துவிட்டுப் போயிருந்தார்கள்.

பெரிய தேயிலைத் தோட்டம்.‌ அதைத் தொட்டாற் போல பெரிய ஃபேக்டரி. இலங்கையின் தேயிலைக்கு உலக சந்தையில் நல்ல விலை இருந்ததால் இவர்கள் உற்பத்தி பல நாடுகளுக்குச் செல்கின்றன.‌ அம்மாவும் அப்பாவும் தொழிலில் மும்முரமாக இருந்ததால் குழந்தைகளுக்கு அதில் ஆர்வம் வரவில்லை.‌

தங்கை மதுவந்தி, இருபத்தி நான்கு வயது. புகழ்பெற்ற பாடசாலை ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறாள். வீட்டில் அவளுக்கு இப்போது மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்திருந்தார்கள். அவர்கள் அம்மாவிற்கு டாக்டர் தொழில் என்றால் ஓர் ஆர்வம். தன் பிள்ளைகளை அந்தத் துறையில் ஊக்குவித்துப் பார்த்தார். பலன் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டிற்கு வரும் மருமகன் ஒரு மருத்துவர்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

விஜித ப்ரியந்த. அம்மா அப்பாவிற்கு அவன் விஜி. அன்பான தங்கை. மனதுக்கு மிகவும் பிடித்தமான இராணுவத்தில் வேலை. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவளைப் பார்க்கும் வரை! என்றைக்கு அவளைப் பார்த்தானோ அன்றைக்கு ஆரம்பித்தது அவனது சோதனைக் காலம். இன்றைக்கு அவனுக்குப் பிடித்த எல்லாவற்றையும் இழந்து நிற்கிறான்.

“அண்ணா.” தங்கையின் குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தான் விஜித. இவனது அறை வாயிலில் நின்றிருந்தாள். குளியலறை வசதியுடன் கூடிய பெரிய அறை. நான்கு பேர் தங்கும் அளவிற்குப் பெரிதாக இருந்தது.

“உங்கக்கிட்டப் பேசணும்.” 

“என்ன மது?” தூங்காமல் இந்தப் பெண் என்னிடம் இப்போது என்ன பேசப் போகிறாள்?! நிதானமாக அவனருகில் வந்த தங்கை தன் அண்ணனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள்.

“அவங்க யாரு அண்ணா?”

“யாரு?”

“அதான், அந்த காயத்ரி?” இப்போது விபி தன் தங்கையை ஆச்சரியமாகப் பார்த்தான்.

“ஏன் மது? வீட்டுக்குள்ள வந்த எனக்கு நீங்கதான் அந்தப் பொண்ணை இன்ட்ரடியுஸ் பண்ணி வெச்சீங்க, இப்ப நீயே வந்து அந்தப் பொண்ணு யாருன்னு எங்கிட்டக் கேட்டா எனக்கு என்ன தெரியும்?” 

“இன்னைக்கு நீங்க போட்ட நாடகத்தை உங்க அம்மாவும் டாக்டர் ஷாரதாவும் வேணும்னா நம்பியிருக்கலாம், ஆனா நான் நம்பமாட்டேன், உண்மையைச் சொல்லுங்க.”

“ஏய்! என்ன மது நீ? தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கே, போய் தூங்கு.” தங்கையை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது என்று தோன்றியது அண்ணனுக்கு.

“நீங்க வரும் வரைக்கும் நல்லா பேசிக்கிட்டு இருந்த பொண்ணு ஃபோட்டோல உங்களைப் பார்த்ததும் திடுக்கிட்டுச்சு, உங்களை நேர்ல பார்த்ததும் அவங்க கண்ணு கலங்கினதை நான் கவனிச்சேன், அதுக்கப்புறமா அவங்க பேசவே இல்லை, கேட்ட கேள்விக்குக் கூட ஒழுங்கா பதில் சொல்லலை, சொல்லுங்க? அவங்களை உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”

“எனக்குத் தெரியாதுன்னு நான் சொல்லுறேன், இதுக்கு மேலயும் கேட்டா என்ன பதில் சொல்லுறது?” பதில் சொன்ன அண்ணனை ஒரு பார்வைப் பார்த்தவள் தனது கையிலிருந்த அலைபேசியை அண்ணன் பார்க்கும்படி காட்டினாள்.

“என்ன?” தங்கையின் அலைபேசியில் பார்வையைப் பதித்த அண்ணன் திடுக்கிட்டான்.

“டாக்டர் காயத்ரியோட ஃபோட்டோ எங்கண்ணாவோட பழைய ஃபோன்ல எப்பிடி வந்துச்சு?”

“காயத்ரி! எதுக்கு நீ…” பேச ஆரம்பித்தவன் சட்டென்று நிறுத்தினான்.

“பார்றா! காயத்ரியா? நீங்க இப்போ உங்க தங்கை மதுக்கிட்டப் பேசிக்கிட்டு இருக்கீங்க அண்ணா!” சொல்லிவிட்டுத் தங்கை வாய்விட்டுச் சிரித்தாள். விபியின் முகத்தில் அசடு வழிந்தது.

“இப்பவாவது உண்மையைச் சொல்லுறீங்களா? இல்லை இதுக்கு மேலேயும் சொல்ல ஏதாவது கதை இருக்கா?” 

“மது… ப்ளீஸ், அந்தப் பேச்சை விட்டுரு.”

“ஏன் அண்ணா? என்னாச்சு? உங்களுக்கும் அவங்களுக்கும் ஏதாவது பிரச்சினையா?”

“பிரச்சினை எல்லாம் ஒன்னுமில்லை, நான் பார்த்த வேலை அவளுக்குப் புடிக்கலை, அம்மிணி டாக்டர் இல்லையா? அதால நம்ம அடிதடி, வெட்டுக் குத்து அவளுக்குப் புடிக்கலை.”

“அப்ப செம லவ்வுதானா?”

“அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை, ஒரு தடவைதான் சந்திச்சுப் பேசினோம்.” என்றவன் அன்றைக்கு அந்த ரிசார்ட்டில் நடந்த சம்பவத்தைச் சொன்னான்.

“ஐயையோ! ஆனாலும் எங்கண்ணா வாழ்க்கையில ஆண்டவன் இப்பிடி விளையாடி இருக்கக் கூடாது.” மீண்டும் ஜன்னலோரம் திரும்பி தொலைவானை வெறித்தான் விஜித.

“இப்ப என்ன பண்ணப் போறீங்க?”

“என்ன பண்ண முடியும் மது? புடிக்காதுன்னு சொன்னவளை வற்புறுத்த முடியுமா?”

“அவங்க உங்களைப் புடிக்கலைன்னு சொல்லலையே, உங்க அடிதடி புடிக்கலை, அதை விட்டுட்டா எல்லாம் சரியாகிடுமில்லை?”

“அதான் எல்லாம் முடிஞ்சு போச்சில்லை?”

“அப்புறம் என்ன? கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே?”

“அவங்க என்னை வேணாம்னு சொல்லுவாங்க, அவங்களுக்குப் புடிக்காதுன்னு சொன்னதை நான் விட்டுட்டு அவங்க பின்னாடி போய் கெஞ்சணுமா?” 

“அடடா! இந்த ஈகோ இப்ப தேவையா அண்ணா? எங்கயோ இருந்தவங்களை இன்னைக்கு ஆண்டவன் நம்ம வீடு வரைக்கும் கொண்டு வந்திருக்கான்னா என்ன அர்த்தம்?”

“என்ன அர்த்தம்?” 

“உங்களுக்கு அவங்கதான்னு ஆண்டவன் எழுதி வெச்சிருக்கான்னு அர்த்தம், அதை மிஸ் பண்ணலாமா? சேரியில ரொம்ப அழகா இருக்காங்கல்லை?” இரகசியம் பேசிய தங்கையின் முகத்தைப் பார்க்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டான் விபி. கண்களில் இனம்புரியாத ஓர் பாவம் தோன்றியது. 

“ஆமா, அந்த ஃபோட்டோ எப்ப எடுத்தீங்க? ஏதோ ஃபங்ஷன்ல எடுத்த மாதிரி இருக்கு?”

“அது அவளோட கசின் வெட்டிங்.”

“நீங்க போயிருந்தீங்களா?”

“மினிஸ்டர் போனாரு, அதால நான் போனேன்.”சுரத்தே இல்லாமல் சொன்ன தன் சகோதரனைப் பார்த்துச் சிரித்த பெண் அடுத்தநாள் காலை இந்த விஷயத்தைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்கத் தவறவில்லை.

“அம்மா, அண்ணாக்கு எப்ப கல்யாணம்?” எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். காஞ்சனா சட்டென்று தன் மகனைப் பார்த்தார்.

“மது, பேசாம சாப்பிடு, உனக்கு ஸ்கூலுக்கு டைம் ஆச்சு.” இது விபி. மகள் இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறாள் என்றால் எதுவோ இருக்கிறது என்று பெற்றோருக்குப் புரிந்தது. 

“என்னாச்சு விஜி? எதுக்கு மது இப்போ திடீர்னு இப்பிடியொரு கேள்வி கேட்கிறா?” ப்ரெட்டில் ஜாமைத் தடவியபடி கேட்டார் லசந்த. அறுபதுகளின் ஆரம்பத்தில் இருந்தார். கண்களில் அமைதி தெரிந்தது.

“மதுக்கு வேற வேலை இல்லைப்பா, என்னை வம்பிழுக்கிறா.”

“ஏன் விஜி? உனக்கும் முப்பது ஆகப்போகுதில்லை? இவ்வளவு நாளும் உன்னோட வேலைக்கு இந்தக் கல்யாணமெல்லாம் சரிவராதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தே, இப்பதான் அதெல்லாம் வேணாம்னு தூக்கிப் போட்டுட்டே இல்லை, இனியும் ஏன் இப்பிடி இருக்கணும்? பொண்ணு பார்க்கலாமில்லை?” இது அம்மா.

“அதெல்லாம் ஏற்கனவே பார்த்தாச்சு.” வாய்க்குள் முணுமுணுத்தாலும் தெளிவாக முணுமுணுத்த மகளை ஆச்சரியமாகப் பார்த்தார்கள் பெற்றோர்கள். 

“மது! ப்ளீஸ், சாப்பிடு.”

“அவளை ஏன் அதட்டுறே? பொண்ணு ஏற்கனவே பார்த்தாச்சா? யாரு அது? உன்னோட மனசுல என்ன இருக்கு விஜி?”

“அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா.” அத்தோடு சாப்பாட்டை முடித்துக்கொண்டு எழுந்து போன மகனைப் பெற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.‌ நேற்றிரவு அவர்களுக்குள் நடந்த சம்பாஷனையை அவர்களிடம் சொன்னாள் மகள். 

அந்த பென்ஸ் ஹாஸ்பிடல் வளாகத்திற்குள் நுழைந்தது.‌ ட்ரைவர் காரின் கதவைத் திறந்துவிட இறங்கினார் காஞ்சனா. கண்கள் ஆர்வமாக அங்கிருந்த மனிதர்களை ஆராய்ந்தது.‌ தான் தேடிய நபர் கண்ணில் அகப்படவில்லை எனவும் நேராக ஷாரதாவின் அறைக்குப் போனார். ஆனால் அந்த அறையில்தான் அவர் தேடி வந்த நபர் இருக்கின்றார் என்று அவருக்குத் தெரியாது. 

“குட் மார்னிங் டாக்டர்.” கம்பியூட்டரில் கவனமாக இருந்த பெண் குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்த்தது. 

“பிஸியா இருக்கீங்களா? உள்ள வரலாமா?”

“ஐயோ மேடம்! வாங்க வாங்க, உட்காருங்க.” பரபரத்தாள் காயத்ரி. வந்திருப்பவர் லசந்த என்ற தனவந்தரின் மனைவி என்பதையும் தாண்டி விபியின் அம்மா என்ற உண்மை இப்போது அவளை வெகுவாக பாதித்தது. 

“ஷாரதா மேடமுக்கு இன்னைக்கு நைட் ட்யூட்டி.” இவள் சொன்ன தகவலைக் கேட்டபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார் காஞ்சனா. முகத்தில் புன்னகை இருந்தது.

“நான் ஷாரதாவைப் பார்க்க வரலை காயத்ரி.” 

“சொல்லுங்க மேடம், ஃபங்ஷன் பத்தி ஏதாவது தெரியணுமா?”

“இல்லைடா, நான் உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்.”

“என்னையா?” ஆச்சரியத்தையும் தாண்டி அவளுக்குக் குழப்பமே அதிகமாக இருந்தது.

“விபியோட அம்மா உன்னைப் பார்க்க வரக்கூடாதாம்மா?” இந்த நேரடிக் கேள்வியைப் பெண் எதிர்பார்க்கவில்லை. தன்னை அறியாமலேயே எழுந்து நின்றுவிட்டாள். கண்களில் கண்ணீர் நிறைந்தது. 

“மேடம்!” 

“அது நேத்து வரைக்கும், இன்னைக்குக் காலையிலதான் எனக்கு நடந்தது தெரியவந்துச்சு, அவன் அப்பிடித்தான், எல்லாத்தையும் மனசுக்குள்ள வெச்சுக்குவான், நீயாவது ஒரு வார்த்தை சொல்லப்படாதா காயத்ரி?” இதமாக வந்தது கேள்வி.

“எனக்கு… உங்க வீட்டுக்கு வரும் வரைக்கும் அது யாரோட வீடுன்னு தெரியாது.”

“ட்ரான்ஸ்ஃபர் கிடைச்சு வந்ததுக்கு அப்புறமா விஜி உங்கிட்டப் பேசலையா?” 

“…” கன்னத்தில் கண்ணீர் வழிய பெண் இல்லை என்பது போல தலையை ஆட்டியது.

“உங்களுக்கு நடந்தது என்னன்னு முழுசா தெரியாது, தெரிஞ்…”

“வேணாம்மா, எது நடந்திருந்தாலும் அது உனக்கும் விஜிக்கும் நடுவுல நடந்தது, அதுல தலையிட நான் விரும்பலை, எனக்கு ஒரேயொரு கேள்விக்கு மட்டுந்தான் இப்ப விடை தெரியணும்.”

“கேளுங்க.”

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இன்னமும் அந்த அன்பு இருக்கா?” அந்தக் கேள்வி பெண்ணை உலுக்கியது.‌ முகத்தை இரு கைகளாலும் மூடியவள் குலுங்கி அழுதாள். 

“காயத்ரி! என்ன இது?!” அவசரமாக எழுந்த காஞ்சனா இளையவளிடம் வந்தார். அவர் கரம் அவள் தலையை அன்போடு வருடிக் கொடுத்தது. 

“நடந்ததை மறந்துடலாம், இனி நடக்கப் போறதை மட்டும் நினைக்கலாம்மா.”

“என்னால கடந்த காலத்தை மறக்கவும் முடியலை, நிகழ்காலத்துல இணையவும் முடியலை மேடம்.”

“உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுதும்மா, எம் பையன் பார்த்த உத்தியோகத்துல எனக்கே உடன்பாடு இருக்கல்லை, நீ ஒரு டாக்டர், உன்னால மட்டும் அதையெல்லாம் எப்பிடி ஏத்துக்க முடியும்?”

“உங்களுக்குத் தெரியாது மேடம், ஒருநாள் கத்திக் குத்து, இங்க, இங்க மேடம்.” பதறியபடி தனது இடது புஜத்தைச் சுட்டிக்காட்டியவள்,

“பெரிய காயம், இன்னொரு நாள் துப்பாக்கியோட வர்றானுங்க, எங்கண்ணு முன்னாடியே… என்னால இதையெல்லாம் தாங்க முடியலை மேடம்.” என்றாள் மீண்டும் அழுதபடி.

“புரியுதும்மா, அவன் யாரு சொன்னாலும் கேட்கமாட்டான், நான் நாட்டுக்கு நல்லது பண்ணுறேன்னு சொல்லுவான்.”

“அதுக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்கணுமா? ஏதாவது ஒன்னு ஆகிடுச்சுன்னா என்ன பண்ணுறது?” கண்கள் கலங்கியபடி கேள்வி கேட்ட பெண்ணை அந்த நொடி காஞ்சனாவிற்கு அவ்வளவு பிடித்தது. தன் பிள்ளை மேல் எத்தனை அன்பு இந்தப் பெண்ணுக்கு இருந்தால் இவளால் இவ்வளவு தூரம் துயரப்பட முடியும்!

“நான் பேசுறேன் அவங்கிட்ட.”

“அவங்க என்னை மன்னிக்கவே மாட்டாங்க.”

“அப்பிடி நினைக்கிறவன் எதுக்காக எல்லாத்தையும் மதுக்கிட்டச் சொல்லணும்?” 

“அவங்களா சொல்லியிருக்க மாட்டாங்க.”

“எப்பிடியிருந்தாலும் அவனோட வாயில இருந்துதானேம்மா விஷயம் வந்திருக்கு, நான் விஜிக்கிட்டப் பேசுறேன், அதுசரி காயத்ரி…‌ உங்க வீட்டுல இந்த விஷயம் தெரியுமா?” 

“…” மௌனம்! அங்கிருந்த இரு பெண்களுக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை. காயத்ரியின் மனது இப்போது கலங்கிய குட்டை போல கிடந்தது. அவன் காதலை அவள் மறுத்திருக்கிறாள்.‌ அதை ஓர் தாயாக காஞ்சனா முன்னின்று சரிக்கட்ட முடியும். ஆனால் அவர்கள் உயரம் இவள் எதிர்பாராத அளவு உயரமாக இருக்கிறதே!

விபி வளமான குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பது அவனைப் பார்த்த முதல் நாளே புரிந்த விஷயம்தான். ஆனால் இத்தனை வசதியை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.‌ அந்தக் குடும்பத்தை இவள் தரப்பினர் மறுக்கப் பல காரணங்கள் இருக்கின்றன.‌ அது போதாதென்று இப்போது இதுவும் சேர்ந்து கொண்டதே!

“மேடம்…”

“காயத்ரி… ப்ளீஸ், இதுக்கு மேலயும் எதுக்காக என்னை அன்னியப்படுத்துறே?”

“ஆன்ட்டி, உங்க ஃபேமிலிக்கு முன்னால நாங்கெல்லாம் ஒன்னுமே இல்லை.”

“ஏய்! என்னம்மா பேச்சு இது? விஜிக்கு உன்னைப் புடிச்சிருக்கு, இதுக்கு மேல எங்களுக்கு என்ன வேணும்?”

“அப்பிடி நீங்க நினைக்கிறது உங்களோட பெருந்தன்மை, ஆனா எங்க வீடு ரொம்பவே தயங்கும்.”

“அதையெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம், ஆனா… விஜியோட அப்பா உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டா சம்மதிப்பாங்களா?” மாப்பிள்ளை வீடு யாதும் ஊரே யாவரும் கேளீர் என இணைய ஆயத்தமாக இருந்தது.‌ ஆனால் பெண் வீடும் அதே போல சம்மதிக்குமா? 

“பெரும்பாலும் குடும்பத்துக்குள்ளதான் கல்யாணம் பேசுவாங்க, அப்பிடி இல்லைன்னா ஊருக்குள்ள.”

“ஓ…‌ அப்ப நிறைய போராட வேண்டியிருக்குமோ?” 

“…” 

“ஒருவேளை, உங்க வீடு விஜியை மறுத்துட்டா?” இளையவளின் கண்களில் நீர் நிறைந்தது.

“வீட்டைத் தாண்டி வர்ற தைரியம் உனக்கிருக்கா காயத்ரி?” இல்லை என்பது போல அவள் தலை இடம் வலமாக ஆடியது. ஒரு பெருமூச்சோடு அவள் தலையை மீண்டும் வருடிக் கொடுத்தார் பெரியவர்.

“அந்த ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு நடக்க இருக்கிறதைப் பார்க்கலாம்மா.” என்றவர் கிளம்பிவிட்டார்.‌ அன்றைக்கு இரவு ஒரு பாட்டம் அழுது தீர்த்தபடி தன் தம்பியிடம் நடந்தது அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள் பெண். இப்போது வருண் திடுக்கிட்டுப் போனான்.

“அந்த மனுசனைத் தவிர அக்கா இனி வேற யாரையும் கட்டமாட்டா அம்மா, சொன்னா புரிஞ்சுக்கோங்க.”

“சிங்கள மனுசர் எல்லாரும் கெட்டவங்க இல்லை அப்பா, அந்த மனுசன் ரொம்ப நல்ல மாதிரி என்டு நம்மட ஊர்தானே அவ்வளவு பாராட்டிப் பேசிச்சு?” இப்படி எதையாவது சொல்லி தன் பெற்றோரிடம் சம்மதம் வாங்கிவிடலாம் என்றுதான் முன்பு எண்ணியிருந்தான் இளையவன்.‌ ஆனால் இவர்கள் உயரம் எல்லோரையும் மிரட்டிவிடுமே! எப்படிக் காய் நகர்த்துவது என்று தெரியாமல் தடுமாறினான் வருண்!

***

அந்த வார இறுதியில் வீடு வந்திருந்தான் வருண். ஃபோனில் பேசும் விஷயமல்ல இது.‌ அம்மா, அப்பாவை உட்கார வைத்து அனைத்தையும் தெளிவாகப் பேச வேண்டும். ஏற்கனவே அத்தானுக்கு ஓரளவு விஷயம் தெரியும். விபியின் உயரத்தைப் பார்த்து மருண்டு போகாத ஒரே மனிதர் இப்போது அவராகத்தான் இருக்க முடியும்.

“அத்தான், ஃப்ரீயா இருந்தா மாமா, மாமியைக் கூட்டிட்டு ஒரு நடை வீட்டுக்கு வர முடியுமா?” 

“என்னடா வருண்? ஏதாவது முக்கியமான விஷயமா?”

“அக்காவோட கல்யாண விஷயமா முடிவெடுக்க வேணும்.”

“யாராவது நல்ல மாப்பிள்ளை வந்திருக்கா?”

“ஏற்கனவே நமக்குத் தெரிஞ்ச மாப்பிள்ளைதான் அத்தான்.”

“யாருடா? அந்த விபியைச் சொல்லுறியா?!”

“ம்…”

“வருண்! உண்மையாத்தான் கதைக்கிறியா? என்னால நம்ப முடியலையே!”

“நான் கொஞ்சந்தான் சொல்லி இருக்கிறன், வீட்டுக்கு வாங்க, மீதியையும் கேட்டா நீங்க ஆடிப்போயிருவீங்க.”

“இதென்னடா வம்பா இருக்கு! எங்கட அம்மா ஒரு நாட்டியம் ஆடப்போறா?”

“அதுக்கு எங்கட அம்மா தாளம் போடுவா.”

“அப்ப என்னென்டு சமாளிக்கிறது?”

“அதுக்குத்தான் உங்களையும் கூப்பிடுறன், பேசாம வாங்க அத்தான்.” இவர்கள் இருவருமாகச் சேர்ந்து அன்று பெரியவர்களை ஒன்று சேர்த்திருந்தார்கள். சரவணகுமார் எதை, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் விறைத்துப் போய் அமர்ந்திருந்தான். ஆனால் வருண் தயங்கவில்லை. அவர்களிடம் எதைப் பேசவேண்டும் என்று நினைத்தானோ அனைத்தையும் மளமளவென ஒப்புவித்துவிட்டான்.

“என்ன தம்பி சொல்றாய்?!” கார்மேகத்தின் கண்கள் கலங்கிவிட்டன. தாமோதரன் சட்டென்று அவர் கரத்தைப் பிடித்துக் கொண்டார்.

“என்ன பொற்கொடி? இதான் நீ பிள்ளை வளர்த்த லட்சணமா?” வதனா நெற்றிக்கண்ணைத் திறந்தார்.

“என்ன அண்ணா கூத்து இது? இதுக்குத்தான் என்ட பிள்ளையை உங்கட மகள் வேண்டாம் என்டு சொன்னவளோ?”

“அம்மா! இது என்ன தேவையில்லாத பேச்சு? இப்ப எதுக்கு அந்தக் கதையைக் கதைக்கிறியள்?” தன் மனைவியோடு ஓர் நிறைவான வாழ்க்கை வாழும் சரவணகுமாருக்குப் பழைய கதை இப்போது ருசிக்கவில்லை. 

“வதனா, கடந்த காலத்தைப் பேசுறதை விட்டுட்டு இப்ப என்ன செய்றதென்டு பார்ப்பம், இதே பிள்ளை நல்லா படிச்சு டாக்டரான நேரம் உங்கட வாய்தானே புகழ்ந்து பேசிச்சு?” இது தாமோதரன். 

“அதான் இப்ப பிழையாப் போச்சு, நம்மட பிள்ளை நல்லா படிக்குதென்டு எல்லாரும் பாராட்டின உடனே தான் நினைச்சது எல்லாத்தையும் செய்யலாம் என்ட நினைப்பு வந்திட்டுது.”

“ஏன் வருண்? இதை மனசுல வெச்சுட்டுத்தான் நாம பார்த்த எல்லா சம்பந்தத்தையும் வேண்டாம் என்டு சொன்னவளா?” நலிந்த குரலில் கேட்டார் பொற்கொடி. அவருக்கு வாழ்க்கை வெறுத்துப் போனது.

“அம்மா, பாவம் அக்கா, அவளைக் குறை சொல்லாதீங்க, அந்த மனுசனை அவளுக்குப் பிடிச்சிருக்கு, அதை நான் சரியென்டு சொல்ல வரலை, ஆனா அதை நீங்க எல்லாரும் ஒத்துக்கொள்ள மாட்டியள் என்டு விலகிட்டா, அந்த மனுசனுக்கும் அப்ப ட்ரான்ஸ்ஃபர் வந்திட்டுது, அவரும் அக்காவை ஃபோர்ஸ் பண்ணலை, என்ன நினைச்சாரோ தெரியலை, ஊரைப் பார்த்துப் போயிட்டார்.”

“பிறகேன் இவள் கலியாணத்துக்குச் சம்மதிக்கல்லை?”

“சம்மதிக்கக் கூடாது என்டு நினைக்கேல்லை, அவளால சம்மதிக்க முடியேல்லை, நானே ஒரு தடவைக் கேட்டனான், அந்த மனுசனை உனக்குப் பிடிச்சிருக்கா என்டு, உனக்கென்ன விசரா என்டுதான் திட்டினவ, எல்லாத்தையும் மறந்து போகத்தான் முயற்சி செஞ்சிருக்கா, ஆனா…” 

“இந்தப் புள்ளைட இஷ்டத்துக்கு ஆடிட்டு ஊருக்குள்ள என்னென்டு தலை காட்டுறது?” வதனா எகிறினார்.

“வதனா, இப்ப ஊர் முக்கியமா? என்ட பிள்ளையோட வாழ்க்கை முக்கியமா?”

“என்ன அண்ணா பேசுறீங்க? அதுக்காக? அந்தக் குடும்பத்தைக் கூப்பிட்டு நடுவீட்டுல உட்கார வெக்கப் போறீங்களா?” 

“வேற என்ன வழி இருக்கு வதனா? உன்ட அண்ணாட மகள் கலியாணம் கட்டாம இருந்தா உனக்குச் சந்தோஷமா?”

“ரெண்டு அறையை விட்டு நாம காட்டுற மாப்பிள்ளைக்குக் கழுத்தை நீட்டு என்டு சொல்றதை விட்டுட்டு நீங்க என்ன ஆளாளுக்கு என்னெல்லாமோ பேசுறீங்க?!” 

“அம்மா, நீங்க எந்தக் காலத்துல இருக்கிறீங்க? இன்னமும் பழைய பஞ்சாங்கம் மாதிரி பேசாதீங்க, இப்ப அந்த மனுசனை காயத்ரி கட்டுறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை? அவங்கட லெவலுக்கு நம்மட வீட்டுல பொண்ணு எடுக்கிறதே பெரிய விஷயம் தெரியுமா?”

“அவங்க பெரிய மனுசங்களாவே இருக்கட்டும் சாமி, ஆனா நமக்கு வேண்டாம், நாம நம்மட லெவலுக்கே மாப்பிள்ளை பார்க்கலாம்.”

“மாமி, நீங்க வேற யாரைப் பார்த்தாலும் அக்கா கட்டமாட்டா.”

“அப்ப இப்பிடியே கலியாணம் கட்டாம இருக்கப் போறாளா உன்ட அக்கா?”

“இப்பிடியே போனா அதான் நடக்கப் போகுது.” வாய்க்குள் சரவணகுமார் முணுமுணுக்க கார்மேகம் திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

“ஏம்மா? அன்டைக்கு சோமசுந்தரத்தாரோட மகள் கொழும்பு பையனை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணினப்போ எல்லாரும் வாயை மூடிக்கிட்டுத்தானே இருந்தீங்க? அந்தப் பெடியன் டாக்டர் என்டதும் யாரும் வாயைத் திறக்கேயில்லை, அதென்ன டாக்டர் பெடிக்கு ஒரு சட்டம், மத்தவங்களுக்கு இன்னொரு சட்டமா?”

“நான் எப்ப சரவணா அந்தக் கல்யாணம் சரி என்டு சொன்னன்? வெளியூர் மாப்பிள்ளையை யாரு கட்டினாலும் வேண்டாம் என்டுதானே சொல்றன்?”

“ஆனா இன்டைக்கு இவ்வளவு பேசுற வாய் அன்டைக்குச் சும்மாதானே இருந்தது?”

“சும்மாதானே இருக்க வேணும்? ஏனென்டா சோமசுந்தரத்தார் என்னோட அண்ணா இல்லையே?” 

“மாமா, இப்ப முடிவா என்னதான் சொல்லுறியள்? விரும்பியோ விரும்பாமலோ காயத்ரிக்கு அந்தப் பெடியனைப் பிடிச்சுப் போச்சு, இதுக்கு மேல நீங்க இன்னொரு பெடியைப் பார்த்து உங்கன்ட மகள் கட்டுவாள் என்டு நான் நினைக்கேயில்லை, காயத்ரிக்கு ஒரு கலியாணத்தைப் பண்ணிப் பார்க்கிறதா, இல்லையா என்டு நீங்கதான் முடிவு செய்ய வேணும்.” கறாராகச் சொன்ன சரவணகுமார், வருணை அழைத்துக் கொண்டு வெளியே வந்துவிட்டான்.

“இது சரியா வரும் என்டு நான் நினைக்கேயில்லை வருண், எங்கன்ட சனம் இன்னமும் வெளியூர் மாப்பிள்ளை வேண்டாம், சிங்களப் பெடியைக் கட்டுறதா, ஆர்மியில இருக்கிறவன் எல்லாம் சுத்தக் காவாலி என்டு ஆயிரம் கதை சொல்லும், எனக்கு மண்டை வெடிக்குது, உன்ட அக்காக்கு வேற ஆளே கிடைக்கேல்லையா? இப்பப்பாரு, இவங்களோட மாரடிக்க என்னால ஏலுதில்லை.”

“அத்தான், இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு.”

“இன்னம் என்னடா வெச்சிருக்கிறாய்? சொல்லித் தொலை!” ஆத்திரப்பட்டான் பெரியவன்.

“இந்த அக்கா பெரிய மனுசி மாதிரி அந்த மனுசனை வேண்டாம் என்டு சொல்லியிருக்கிறா, அவங்கட அம்மா சம்மதம் சொன்னாலும் அந்த மனுசனோட மனசுல இப்ப என்ன இருக்குதென்டு யாருக்குத் தெரியும்?” 

“இப்ப அதுக்கும் நாமதான் தூது போக வேணுமா?”

“என்ட தலையெழுத்து! வேற என்ன அத்தான் செய்யலாம்? நாளைக்கு அக்காக்கு ஒரு கஷ்டம் என்டா என்னால தாங்க ஏலாது, அதைவிட இப்பவே போய் அந்த மனுசனுட்ட பேசுறது நல்லது என்டு படுது.”

“என்னமோ செஞ்சு தொலை, தனியா போகாத, நானும் உன்னோட வந்து தொலைக்கிறன்.” வீட்டுக்குள் இருந்த பெரியவர்களின் மனநிலையைக் கருத்திற் கொள்ளாது இளையவர்கள் தங்களுக்குள் திட்டங்களை வகுத்துக் கொண்டார்கள்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 08

அத்தியாயம் 08அந்த ஊர் முழுவதும் தேயிலைக் காடாகவே இருந்தது.‌ எங்கு பார்த்தாலும் சீராகப் பராமரிக்கப்பட்ட தேயிலைப் புதர்கள். மலையில் கூட நேர்த்தியாக நடப்பட்டிருந்தன. பச்சைப் பட்டாடையை உடுத்தியிருந்த நிலமகளுக்குக் குங்குமம் வைத்தாற் போல சிவப்புக் கூரையோடு காணப்பட்டது அந்த ஃபேக்டரி. "என்னடா வருண்?…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்