அத்தியாயம்-3
வெண்ணிலவு–3
வேலவர்ஷினி, கார்த்திகா இருவருக்கும் ஒரே வயது. ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் படித்தவர்கள். கல்லூரி செல்லும்போது தான் பிரிந்தனர். ஆனால், ‘நண்பேன்டா!’ எனுமளவிற்கு இருவருக்கும் நட்பு பாராட்டிக் பழக்கமில்லை.
சிறுவயது முதலே படிப்பு, விளையாட்டில் துணை சேராமல், பேச்சு மற்றும் பழக்க வழக்கத்தில் எதிரெதிர் துருவமாக நின்று, வளர்ந்து விவரம் தெரியும் காலத்தில் எதிரிகளாகவே மாறிப் போயிருந்தனர்.
கார்த்திகா எப்போதும் படிப்பில் வெகு கெட்டி. அழகிலும் மற்ற விசயங்களிலும் அப்படியே! எந்த இடத்திலும் தனக்கான ஆதாயத்தை தேடிக்கொள்பவள்.
அவளுக்கு முற்றிலும் நேர்மாறாய் படிப்பில் மந்தமாய், எந்தவொரு விஷயத்தையும் அலட்சியமாய் எடுத்துக் கொள்வாள் வர்ஷினி. அவசரமாய் அசட்டுத்தனமாய் அதிரடியாய் இவள் எடுக்கும் முடிவுகள் தான், இதுநாள் வரையிலும் இவளுக்கு பலவீனமாகிப் போயிருக்கின்றது. அதையே பலமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிற முடிவோடு, முனைப்போடு திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்திருக்கிறாள்.
கார்த்திகா, பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு திண்டுக்கல் கல்லூரியில் மூன்று வருட பிஎஸ்சி(GNM) நர்சிங் கோர்ஸில் சேர்ந்து, படிக்கும் பொழுதே பணி நியமனம் பெற்று ஒன்றரை வருடமாக செவிலிப் பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.
அவள் வேலைபார்க்கும் மருத்துவமனையில் பில்லிங் செக்சனில் கேஷியராக இருக்கும் திவாகருக்கும் இவளுக்கும் அடுத்த மூன்று மாதத்தில் திருமணம் நடத்த நாள் குறிக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இருவரின் மனமொத்த காதல் திருமணம், பெரியவர்களின் சம்மதத்தோடு சுபமாய் நடைபெற இருக்கிறது. தன் காதலில் வெற்றி கண்ட பெருமிதத்தையும் திமிரையும் சற்று தூக்கலாகவே வெளிப்படுத்துவாள் கார்த்திகா.
வர்ஷினி, தன் தந்தையின் கட்டாயத்தின் பேரில் சென்னையில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி ஃபுட் டெக்னாலஜி படிப்பினை முடித்துக்கொண்டு மீண்டும் வீட்டோடு வந்து தங்கி விட்டாள்.
மேற்கொண்டு படிப்பைத் தொடர்வதிலோ, பணியில் அமர்வதிலோ அவள் அக்கறை காட்டவில்லை. தானாக வந்த வாய்ப்பினையும் தட்டிக்கழித்து விட்டாள். எப்போதும் போல, ‘அதென்ன தேவைக்கு, எனக்குதான் எல்லாம் இருக்கே!’ என்கிற மெத்தனப்போக்கு அவளை எதிலும் பின்தங்க வைத்தது.
எந்தவொரு செயலைச் செய்வதற்கும் இவளாக மனம் வைத்தால் மட்டுமே நடக்கும். யாருக்கும் எதற்கும் மசிய மாட்டாள். பெரிய வீட்டுப்பெண் என்கிற திமிரும் தெனாவெட்டும் அவளிடத்தில் சற்று அதிகப்படியாகவே உண்டு. தன் மீதான அக்கறையிலும் சுத்த சோம்பேறிதான் இவள்!
“வளந்த பொண்ணா, லட்சணமா தலைமுடிக்கு ஒரு கிளிப் போட்டுக்க மாட்டியா வேலு? ஏண்டி பரட்டையா திரியுற? இந்த வயசுல கண்ணாடி முன்னாடி நிக்காம, என் வயசுலயா நிக்கப்போற?” அவளின் அம்மா எத்தனை முறை எத்தனை விதமாய் கண்டித்தாலும், ‘எனக்கென்ன’ என்று அலட்சியமாகத் தட்டிக் கழிப்பாள்.
முயன்று தன்னைச் சீர்படுத்திக் கொண்டால் மட்டுமே எழிலரசியாக வலம் வரலாம் எனுமளவிற்கு சுமாரான அழகுடையவள் வர்ஷினி. கனிந்த வெள்ளரிப்பழமாய் மிதமாகப் பூசினாற் போன்ற உடல்வாகு, கோதுமை நிறம், குறை காணமுடியாத லட்சணங்களுடன் இருந்தாலும் தோற்றத்தில் எப்போதும் ஏனோதானோவென்று அசட்டையாகத் தான் தெரிவாள்.
அடுத்தவர் மீது என்றுமே பொறாமைப்பட்டதில்லை. கார்த்திகாவுடன் ஒருநாளும் தன்னை ஒப்பிட்டுப் பார்ப்பதையும் விரும்ப மாட்டாள். சிறுவயது முதலே அவளின் அழகைப் பார்த்து ரசிக்க என்றுமே தயங்குவதில்லை.
ஆனால் சமீப நாட்களாய் அதாவது இங்கு மருமகளாய் வந்த நாள்முதலாகத் தான் கார்த்திகாவின் அலட்டிக் கொள்ளும் அழகையும், அடங்காத பேச்சினையும் பார்த்து இயலாமையுடன் பெருமூச்சு விடுகிறாள் வர்ஷினி.
“ஏய், வர்ஷினி நில்லு!” மெதுவாக தண்ணீர் குடத்துடன் தன்னைக் கடந்து சென்றவளை அழைத்து நிறுத்தினாள் கார்த்திகா.
“என்னடி?” இவளும் நின்று பதிலளிக்க,
“அம்மாட்ட எனக்காக தோச ஊத்த மாட்டேன்னு சொன்னியாம்? வட்டமா வராதுன்னு வேற சாக்கு சொல்லியிருக்கடி!” எகத்தாளக் குரலில் கார்த்திகா திமிராகக் கேட்க, பாரத்தை சுமந்து கொண்டு நின்றவளுக்கு கடுப்பு கிளம்பியது.
“உண்மைய தானேடி சொன்னேன்!” என்றாள் சிடுசிடுப்பாக!
“பொய் சொல்றடி! எனக்குனு எது செய்யச் சொன்னாலும் உனக்கு வலிச்சு போகுது. நீ வந்ததுல இருந்து நானும் கவனிச்சுட்டே தானே இருக்கேன்!” கார்த்திகா நேர்ப்பார்வையில் குற்றம்சாட்டிப் பேச, வர்ஷினிக்கு பொறுமை பறந்தது
“உன்னோட தேவையில்லாத கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கில்ல கார்த்தி! அதுக்கு பதிலாத்தான் தண்ணியெடுக்க போயிட்டேனே! விடுவியா… வேணும்னே நிக்க வச்சு கேள்வி கேக்குறா!”
வர்ஷினி பல்லைக் கடித்து பதிலளித்த நேரத்தில், மணிமாறன் எதிரே வந்து மருமகளிடம் இருந்த குடத்தை வாங்கிக் கொண்டார்.
“அவளே கொடத்தை தூக்க முடியாம தூக்கிட்டு நிக்கிறா, நீ வேற ஏன் கார்த்தி?” வேலையோடு வேலையாக மகளைக் கடிந்து கொள்ளவும் தவறவில்லை.
“ம்ப்ச், நீ உள்ளே போ ப்பா! எல்லாம் எனக்கு தெரியும். இவளுக்குன்னா மட்டும் ஓடி வந்திருவியே!” தந்தையென்றும் பாராமல் கார்த்திகா விரட்டியடிக்க, சிறுத்த முகத்தோடு, “முருகா, முருகா!” என முணுமுணுத்தபடி உள்ளே சென்றார் மணிமாறன்.
“வயசுல பெரியவர்னு கூட பாக்க மாட்டியா கார்த்தி?”
“பேச்ச மாத்தாதே வர்ஷி! இதுவே உன் புருசனுக்கு தோசை ஊத்திக் கொடுக்கச் சொல்லியிருந்தா இப்படி சாக்கு சொல்லிட்டு எஸ்கேப் ஆகியிருப்பியா?” படு நக்கலாய் கார்த்திகாவின் பார்வையும் தோரணையும் வர்ஷினியை பதம் பார்த்தது.
இவள் பேச்சிற்கு பதில் சொல்வதற்கே வர்ஷினிக்கு பிடிக்கவில்லை. தன்னையொத்த வயதுடையவளாய் இருந்தாலும் கணவன் மனைவிக்கான அன்னியோன்யத்தை அவளிடத்தில் கடைவிரிக்க துளியும் விரும்பவில்லை. கடுப்புகளை முயன்று முழுங்கிய நேரத்தில் கார்த்திகாவின் பேச்சு வரம்பை மீறியது.
“ரெண்டுநாள் முன்னாடி புருசனுக்காக முறுவலா தோசை ஊத்தி, அதை ரெண்டு பேருமே மாறிமாறி ஊட்டி விட்டு ரொமான்ஸ் பண்ணீங்களே! அப்ப மட்டும் தோசை வட்டமா வந்துச்சா?” எள்ளி நகையாடிய குரலில் கேட்க, கோபத்துடன் விழி உயர்த்தினாள் வர்ஷினி.
“உன் லிமிட்ட கிராஸ் பண்ற கார்த்தி! ச்சீ, என்ன ஜென்மம்டி நீ! சொந்த அண்ணணாவே இருந்தாலும் அவன் பொண்டாட்டி கூட இருக்கிறதை இப்பிடியா ரசிச்சு பாப்பே!” வெறுப்புடன் காறி உமிழ்ந்தாள்.
“ஆத்தா வேலு! யோசிக்காம சாபம் கொடுத்துறாதேடி! நீங்க ரூம்ல ரொமான்ஸ் பண்றதை, நான் வந்து எட்டிப் பார்த்தா தான் தப்பு! ஹாலுக்கும் என் ரூமுக்கும் நடுவுல லேசான பிளைவுட் ஸ்க்ரீன் தான் இருக்கு. ஒரு பக்கத்துல இருந்து வேகமா மூச்சு விட்டாலே, அடுத்த பக்கம் அற்புதமா கேக்கும். உங்க சிரிப்பும் கொஞ்சலும் எனக்கு கேக்காதா?”
அடங்காமல் நியாயம் பேசியவளுக்கு பதிலடி கொடுக்கத் தெரியாமல் தலைகுனிந்தாள் வர்ஷினி. உடலெல்லாம் கூசிப் போனது. கணவனுடனான கொஞ்சல் பேச்சில் அக்கம் பக்கத்தையே மறந்துவிட்ட மடத்தனத்தை என்னவென்று மெச்சிக் கொள்வது!
அவளுக்கு அவளையே பிடிக்கவில்லை. ‘இத்தனை அசட்டுத்தனமாகவா ஒரு பெண் இருப்பாள்?’ அவளின் அம்மா மனதிற்குள் வந்து திட்டுவதைப் போல உணர்ந்தாள்.
“அவன்தான் ஆம்பள, ஹால்னு கூட பாக்காம இங்கிதமில்லாம இழையுறான்னா, உனக்காவது அறிவு வேண்டாமா? வயசுப்பொண்ணு இருக்கற இடத்துல எப்படி இருக்கனுன்ற பேஸிக் சென்ஸ் கூட இல்லாமதான் உன்னை வளத்தாங்களா?
நல்லவேளை அன்னைக்கு அம்மாவும் அப்பாவும் சஷ்டிக்கு நைட் கோவில்ல தங்க போயிட்டாங்க! இல்லனா நாக்க பிடுங்கிக்கற மாதிரி அம்மா கேக்குற கேள்வியிலே உங்க பொழப்பே நாறிப் போயிருக்கும்!” எள்ளலும் எகத்தாளமும் வழிந்தோடியது கார்த்திகாவின் பேச்சில்!
பெரியவர்கள் இல்லாத நேரத்தில் தங்களை மறந்து பேசிச் சிரித்து மகிழ்ந்தது இப்படி கண்காட்சியாகிப் போயிருக்குமென்று வர்ஷினி நினைத்தாவது பார்த்திருப்பாளா? அதுவும் நாத்தனார் பிசாசின் காதிற்கு கேட்டுத் தொலைத்து மானத்தை வாங்கி விட்டதே! அவளும் கிடைத்தது வாய்ப்பென்று அமர்க்களமாய் குற்றம்சாட்டித் தொலைக்கிறாள்!’
இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டுமென்று எடுத்துச் சொன்னால், வீம்பிற்காகவே கார்த்திகா மேற்கொண்டு பேச்சை வளர்த்து பெரும் சண்டையாக்கி வைப்பாள் என்பது வர்ஷினிக்கு தெளிவாகத் தெரியும். திருமணத்திற்கு நிற்கும் பெண்ணிற்கு இந்தளவிற்கு கூடவா நல்லது கேட்டது அலசிப் பார்க்கத் தெரியாது?
கார்த்திகாவின் குற்றச்சாட்டுக்களை தொட்டு வரும் பவானியின் ஆவேசமான சொல்லம்புகளும், இளக்கார பாவனைகளும் உயிரோடு மரித்துப் போகும் எண்ணத்தை சர்வ நிச்சயமாய் கொடுத்து விடும். அந்த அவதியை அனுபவிக்க வேண்டாமென்கிற எண்ணத்தில் மட்டுமே தற்போது பொறுமை காத்தாள் வர்ஷினி.
திருமணம் முடிந்த நாள்முதலாக இவளாகக் கற்றுக் கொண்ட பாடம் பொறுமையுடன் தன்னைத்தானே அடக்கி கொள்வது! சமயத்தில் அதுவும் முடியாமல் நிதானமிழந்து பேசி விடுபவள் தான்!
அந்த நேரமெல்லாம் மணிமாறன் அல்லது செந்தூரனின் தலைதான் பலிபீடமாக உருளும். பெண்களுக்கு இடையில் அகப்பட்டு ஆண்கள் திருதிருத்து முழிப்பதோடு அன்றைய சச்சரவுகள் நிறைவுறும்.
“காணாத புருஷனை கண்டவ மாதிரி, அவன் மேல ஓவரா உருகிட்டு கெடக்காதே! என் அண்ணனா இருந்தாலும் அந்த வெளங்காவெட்டிய மொத்தமா நம்பித் தொலைக்காதேடி! யார் என்ன சொன்னாலும் சரி, சரின்னு மண்டையாட்டிட்டு வெறுங்கைய வீசிட்டு வர மட்டுந்தான் அவன் லாயக்கு!” மேற்கொண்டு இகழ்ந்து பேசிய கார்த்திகாவை முடிந்த மட்டுக்கும் முறைத்தாள் வர்ஷினி.
“போதும் கார்த்தி! உன் வயசா இருந்தாலும் நான் உனக்கு அண்ணி! அந்த உறவுக்கு மரியாதை கொடுக்கலனாலும் பரவாயில்ல, உனக்கு தேவையில்லாத விசயத்துல தலையிடாதே! தயவுசெஞ்சு பொண்ணுங்களே கூசிப் போற அளவுக்கு வெக்கமே இல்லாம பேசாதே!
நாங்க எங்களை மறந்து இருந்ததை வேடிக்கை பார்த்துட்டு, வாய் கூசாம சொல்லிக் காட்டுறியே, அந்த நேரம் உனக்கு கூசல… அப்பவே சின்னதா சத்தம் கொடுத்திருந்தாலே நாங்களும் சுதாரிச்சு இருப்போமே! அப்ப உன் இங்கிதம் பொங்கல் சாப்பிட போயிருந்துச்சா?
அக்கறையா எனக்கு புத்தி சொன்னதுக்கு தேங்க்ஸ்! ஆனா எந்த அட்வைசும் நீ, எனக்கு சொல்றதை நான் விரும்பல! நீ சொன்ன மாதிரியே என் பேச்சுக்கு உன் அண்ணன் எப்பவும் தலையாட்டுவான்னு நம்பித்தான் அவனையே கல்யாணம் பண்ணியிருக்கேன்! எனக்கு புத்தி சொல்றதை விட்டுட்டு வேலைக்கு கெளம்புற வழியப் பாரு, நேரமாகுது!”
அசராமல் பதிலடி கொடுத்துவிட்டு வேகமாக மாடியறைக்குச் சென்று விட்டாள் வர்ஷினி. காபியின் ஆர்வத்தில் கீழிறங்கி வந்தவளின் விருப்பம் வழக்கம் போல அன்றைக்கும் நிறைவேறாமல் போனது.
காலை வெயிலில் அலைந்து, தண்ணீர் குடம் சுமந்த அசதியில் உடலும் வெகுவாகச் சோர்வடைந்திருந்தது. பசியில் வயிறும் காய்ந்து கத்தியது.
அந்த நேரத்தில் தனது துயரங்களுக்குச் செவிசாய்த்து, தன்னைத் தாங்கிக்கொள்ள இங்கே யாருமில்லை என்கிற கழிவிரக்கமே வர்ஷினியின் மனதை பெரிதாய் உலுக்கியது.
வெளியில் சொல்ல முடியாத கவலை, வருத்தம் வளர்ந்து, மனம் பாறாங்கல்லாய் கனத்துப்போக தனது அறைக்குள் வந்து கட்டிலில் சாய்ந்தாள்.
‘ஒருத்தர மட்டம் தட்டிப் பேசுறதுக்குன்னே ஏன் எல்லாரும் ஆளா பறக்குறாங்க? அடுத்தவங்க புத்தி சொல்ற இடத்துலேயே ஏன் நான் இருக்கேன்?” தன்னிரக்கத்தில் உழன்ற பொழுது செந்தூரனின் ஞாபகம் வந்தது.
‘எல்லாம் இவனால தான்! இவன் ஒருத்தன் அன்னைக்கு அமைதியா இருந்திருந்தா, கண்டவகிட்ட எல்லாம் நான் பேச்சு வாங்க வேண்டிய அவசியமிருக்கா? வேண்டாம்னு சொன்னாலும் கேக்குறதில்ல, இவன் இஷ்டத்துக்கு என்னையும் தலையாட்ட வைக்கிறான் பக்கி!’
உள்மனம் கடுகடுக்கும் பொழுதே அவனது கொஞ்சல் சிரிப்பும் கெஞ்சலாய் குழையும் அப்பாவி முகமும் நினைவில் வந்து கண்சிமிட்டியது.
‘இன்னைக்கு வரட்டும் சிரிக்கிற அந்த மூஞ்சிய பஞ்சராகிட்டு தான் மறுவேல!’ ஆவேசமான கோபம், கழிவிரக்கத்தில் கரைந்து, கணவனுடனான செல்லக் கோபத்தில் நிலைகொண்டது.
உடலின் அயர்ச்சியோ, பசியின் தாக்கமோ தன்னை மறந்து கண்ணசந்து போனாள் வர்ஷினி. காலைநேர பரபரப்பில் அசதியுடன் ஓய்வெடுக்கும் வழக்கம் அவளிடத்தில் இல்லை. இன்று என்ன காரணத்தினாலோ தன்னை மறந்து உறங்கிப் போயிருக்க, இதையறியாத பவானி தன்போக்கில் மருமகளை சாடிக் கொண்டிருந்தார்.
“என்னதான் இருக்கோ அந்த ரூமுல? ஒத்த வேலையை செஞ்சுட்டு ஒருமணி நேரம் அவ கூண்டுல போயி அடைஞ்சுக்கிறா! எல்லாம் இவனை சொல்லணும். கை நிறைய சம்பாதிக்கத் துப்பில்லன்னாலும் பொண்டாட்டிய கொஞ்சி வளக்குறதுல ஒன்னும் கொற வைக்கிறதில்ல!” வரைமுறையின்றி பேச்சு நீண்டு கொண்டே செல்ல, “முருகா, முருகா!” என்ற முணுமுணுப்பு, உச்சஸ்தாதி பெற்று பவானியின் சத்தத்தை குறைத்தது.
***
ஏ தாண்டி குதித்தேன்டி
உன் தாவணி தொட்டேன்டி
முத்தத்தாலே வேர்வை
எல்லாம் சுத்தம் செய்யேன்டி
ஆடியோ பிளேயர் திடீரென்று அலற ஆரம்பிக்க, கண்களை திறக்காமல் புருவம் நெறித்தாள் வர்ஷினி.
வந்தது யாரென்று அறிந்து கொண்டவளாக, ‘ம்ப்ச், இவனுக்கு வேற வேலை இல்லை, பாட்டு பைத்தியம்!’ மனதிற்குள் நொடித்தவாறே தூக்கத்தைத் தொடர்ந்தாள். இவள் கண்ணைத் திறக்க நினைத்தாலும் அசதியில் கண்கள் திறவாமல் சண்டித்தனம் செய்தது.
‘ரொம்ப நேரம் தூங்கிட்டேனோ!’ அரைகுறையாய் தெளிவடைந்த மூளை, யோசித்தபோது, பெண்ணவளின் பின்னோடு ஒட்டிக்கொண்ட கைகள் அவளது இடையினில் சுதந்திரமாய் உறவாட, பின்னங்கழுத்தில் மோதிய மூச்சுகாற்றில் அனலடித்தது.
ஆடியோ பிளேயர் தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க,
எசக்கி கட பிசிரு முட்டாயே
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
டென்டு கொட்டா இன்டர்வல் முறுக்கே
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க
பாட்டுடன் சேர்ந்து ஆண்குரலும் பிசிறடித்த குரலில் பாடத்தொடங்க, ‘கொடுமையே’ என காதுகளை பொத்திக் கொண்டாள் வர்ஷினி.
சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு
சுட்ட பால் போல தேகம் தான்டி உனக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு
அதில் பாலாடை மட்டும் கொஞ்சம் விலக்கு…
பின்பாட்டு பாடியவனின் கைகள் எக்குத்தப்பாக பெண்ணின் மேனியை அளக்கும் வித்தையை அரங்கேற்றம் செய்ய, பட்டென கண்களைத் திறந்து தன்மேல் அத்து மீறியவனை விலகித் தள்ளினாள். தூக்கம் பறந்தே போச்சு!
“அடிங்க… என்னடா கொஞ்சம் விட்டா ரொம்பத்தான் ஆட்டம் போடுற! நேரங்காலம் மறந்தாச்சோ?” என்றவள், ஏதோ நினைவில் வேகமாக எழுந்து சென்று அறைக்கதவை திறந்து பார்த்தாள். கார்த்தியின் பேச்சு தான் அவளை அலைகழித்து வைத்திருக்கிறதே!
பின்னர் ‘யாருமில்லை’ என்ற நிம்மதி பெருமூச்சு விட்டவளாக, அலறிக் கொண்டிருந்த பிளேயரை அடக்கிவிட்டு, மீண்டும் கட்டிலுக்கு வந்தமர்ந்தாள்.
“என்ன வசீ, ஏன் வேகமா போயி பார்த்த? யாரிருக்கா?” எதுவும் புரியாமல் கேட்டவனை காரணமேயின்றி முறைத்தாள்.
“என்னடி, எதுக்கு இப்ப பாசமா பாத்து தொலைக்கிற? அடிக்கடி உன் பாசப்பார்வையிலே கிறுக்கு பிடிச்சு நிக்கிறதே எனக்கு வேலையா போச்சு!” குறும்புப் பார்வையுடன் அவள் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினான்.
“அடங்குடா எரும! எப்ப பாரு உரசிக்கிட்டே… ச்சைய்!” வெறுப்பாய் முகம் சுளிக்க,
“மை பொண்டாட்டி, மை கேர்ள், ஆல்வேஸ் மைன்!” ஏகபோக உரிமையுடன் மனைவியின் தோளில் கைபோட்டவனாக, வாலிபச் சேட்டைகள் குறையாத முகபாவத்துடன் கேலி பேசிச் சிரித்தவனுக்கு வயது இருபத்தி நான்கு மட்டுமே!
ஆண்மையின் அடையாளமாய் சொல்லப்படும் அடர்மீசையும் புசுபுசுவென்று வளரும் தாடியும் கூட அடர்த்தியாய் இல்லாமல் ஆங்காங்கே தோல் நிறத்தை எடுத்துக் காண்பிக்க, அரைகுறையாக மாற்றம் கொண்டிருக்கும் வாலிப முகமும் கள்ளச் சிரிப்போடும் தன்னைப் பார்ப்பவனை பார்வையால் அளந்து முறைத்தாள் வர்ஷினி.
கார்த்திகாவிற்கு ஆண் வேடம் போட்டால் வரும் தோற்றம் தான் செந்தூரன். மணிமாறனின் வார்ப்பு மகன், மகளிடத்தில் அச்சாகப் பதிந்து அழகுபடுத்தியிருந்தது.
அஞ்சாத சிங்கம், திருத்தமான முகம், அழுத்தமான பார்வை எனச் சொல்லுமளவிற்கு செந்தூரனின் தோற்றம் இன்னும் மெருகேறி இருக்கவில்லை. மனமும் அத்தனை பக்குவம் அடைந்திருக்கவில்லை.
ஆறடி உயரம் மட்டுமே இவனிடத்தில் ஒழுங்கு! மற்றபடி எல்லாமே அரைகுறை தான்! முகத்தில் அதிகப்படியாய் தோன்றும் பருக்களை மறைப்பதற்காகவே தாடியை வைத்துக் கொண்டு சுற்றுவதாகச் சொல்வான்.
அதிகமாக வெயிலில் அலைவதால் இவனது மேனியின் மஞ்சள் நிறம் மங்கி கருத்து வருவதாக பவானி கவலை கொள்வதும் உண்டு. ஒல்லியான தேகம், ஆனால் பிடித்தால் இரும்புப்பிடி தான்!
“முரட்டுப்பயலே… சாப்பிடுறதெல்லாம் எலும்புக்கு தான் போகுதா? உன்னை தள்ளி விட்டே எனக்கு கை உடைஞ்சிடும் போல… நீ உரசினாலே வலிக்குதுடா!” பெரும்பாலும் வர்ஷினியின் சிடுசிடுப்பு இப்படியாகத் தான் இருக்கும்.
தானாக அமைந்த வாழ்க்கையாக இருந்தாலும் காதலையோ காமத்தையோ ஒதுக்கி வைக்காமல் இயல்பாக ஏற்றுக்கொண்டு வாழத் தொடங்கி விட்டனர் இருவரும்!
அன்றாடம் உணவு, உடை, இருப்பிடத்திற்காக வாழ்நாள் முழுதும் அலைந்து திரிபவர்களுக்கு உள்ளுணர்வின் விருப்பங்களோ, மனம் அலசி ஆராய்ந்து சொல்லும் அறிவுரைகளோ என்றுமே ஒரு பொருட்டாக இருந்ததில்லை.
‘இன்று இந்த வேலையைச் செய்ய வேண்டுமா? சரி! வேண்டாமா, அதற்கும் சரி! பிறரை வஞ்சிக்காத, ஏமாற்றாத எந்தவொரு வேலைக்கும் நான் தயார்! இந்த நொடி நிஜம்! அதை அனுபவித்து வாழ்ந்திட வேண்டும்.’ சாதாரண மனிதனின் இயல்பான மனப்போக்கு இதுதான்!
அப்படித்தான் இவர்கள் இணைந்து வாழத்தொடங்கியது. ஏனோதானோவென்று இளமையின் ரகசியத்தை அறிந்துகொண்டு வாழ ஆரம்பித்து, வயதின் கிளர்ச்சியும் வாலிபத்தின் ஆசைகளும் போட்டிபோட்டு உசுப்பேற்றியதில், இவர்களும் போட்டி போட்டுக் கொண்டே காதலை, காமத்தை கொண்டாடத் தொடங்கினர்.
அதிலும் மனைவியை கொண்டாடிக் களிப்பதில் எப்பொழுதும் செந்தூரனுக்கு அலாதி ஆர்வம். காதல் மத்தாப்புக்களை சிங்காரமாய் கொளுத்தி சரசம் செய்வதில் வல்லவன். தனிமையில் அவளை உரசாமல் இருந்தால் அவன் செந்தூரனே அல்ல!
ஆரம்ப நாட்களில் இன்பக் கிளர்ச்சியில் கணவனின் அத்துமீறலை அனுமதித்த பெண்மனம், இப்பொழுது தவிர்க்க முடியாத அவஸ்தையாக சிடுசிடுக்கின்றது. இப்பொழுதும் ஆர்வக்கோளாறில் தன் விரலால் அவளின் இதழை உரச, தீப்பார்வை பார்த்தாள் வர்ஷினி.
“என்ன வசீ, பிடிக்கலையா?” இலகுவாய் கேட்டதே அவளது கோபத்தை அதிகப்படுத்தியது.
“ஓகே, ஓகே! சமாதானம், சரண்டர்!” என்றவன் அவளை விட்டு சற்று தள்ளி அமர்ந்து, “இந்த டிஸ்டன்ஸ் போதுமா?” விரலால் இருவருக்கும் இடையே இருந்த சிறுஇடைவெளியை அளந்தபடி காண்பிக்க, “அடேய், கடுப்பக் கிளப்பாதே!” கோபமாய் பல்லைக் கடித்தாள்.
“போடி, எப்பபாரு சிடுசிடுன்னு இருக்க… உன்கூட கா!” கட்டைவிரலை நீட்டி, மடக்கி சிறுபிள்ளையாய் முகம் திருப்பிகொள்ள,
“சந்தோசம், இப்பவே இடத்தை காலிபண்ணு! வெளியே போறவன் கதவ சாத்திட்டு போ!” அசராமல் பதிலளித்து கண்மூடப் போனவளை மீண்டும் தொட்டு உசுப்பினான்.
“அறிவுகெட்டவனே, ஒரு செகண்ட்டாவது ரோசத்தோட இரேன்டா!”
“அதெதுக்கு எனக்கு? ஆமா, எதுக்காக காலையிலேயே மேலே வந்துட்ட? எந்த வேலையும் செய்யாம அப்படியே போட்டுட்டு போயிட்டேன்னு அம்மா கத்திட்டு இருக்காங்க! போயி வேகமா முடிச்சுட்டு வந்துடேன்!”
அவளது உடல், மனநிலைமை தெரியாமல் பேசிக்கொண்டே சென்றவனை கொன்று போடும் ஆத்திரம் வந்தது. அசராமல் உற்று நோக்கினாள்.
“என்ன வசீ? இப்படி பாக்குற?”
“உங்கம்மாக்கு அவங்க கவல… உனக்கு உங்கம்மா கவலையா?” இறுக்கத்துடன் பதில் பேச,
“அதுக்கென்ன இப்ப? எப்பனாலும் நீதானே செய்யணும்!” என்றான் அலட்சியமாய்!
“அன்டைம்ல வந்து தூங்கி இருக்கியே, உடம்புக்கு என்ன செய்யுதுன்னு யாருக்காவது கேக்கத் தெரியுதா? முக்கியமா உனக்கு! வந்ததும் விரட்டுற! நான் என்ன இந்த வீட்டு வேலைக்காரியா?” கண்மண் தெரியாத கோபத்தில் குரல் உயர்ந்தது.
“லூசு, நம்ம வீட்டு வேலைய நாம செய்யாம, வேற யாராவது செய்ய வருவாங்களா?” என்றவனை விழியகலாமல் உற்றுப் பார்க்க,
“இது உன் வீடு தானே வசீ!” சமாளிப்பதாக நினைத்து அசடு வழிந்தான் செந்தூரன்
“என் வீடா! சரி, நீ சாப்பிட்டியா?”
“ஒஹ், அம்மா தோசை ஊத்தி கொடுத்தாங்க! செம பசி, ஃபுல்லா சாப்பிட்டேன்!” சிரிப்போடு வயிற்றை தொட்டுக் காண்பித்தவன்,
“என்ன இருந்தாலும் அன்னைக்கு நாம சாப்பிட்ட தோசை மாதிரி வராதுல்ல… அந்த டேஸ்டே தனி!” மலரும் நினைவில் கிளர்ந்தவனின் ரசனையை கருத்தில் கொள்ளாமல்,
“பொண்டாட்டி சாப்பிட்டாளா, இல்லையானு கேக்கத் தெரியல! எப்பவும் ரொமான்ஸ் மட்டுமே ரீப்ளே பண்ணிட்டு இருக்க! என் வீடுன்னு சொன்னியே… இந்த என் வீட்டுல காலையில இருந்து இன்னும் பச்சதண்ணி பல்லுல படல எனக்கு!” என்றபடியே சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள்.
நேரம் பதினோரு மணியை தொட்டுக் கொண்டிருந்தது. நேரத்தின் வேகத்தில் பதறிய அவளின் வயிறு மீண்டும் பசியில் கத்தத் தொடங்க, புரியாத படபடப்பில் இறுக்கமாய் உணர்ந்தாள்.
‘பசிச்சா இப்படியெல்லாமா ஃபீல் ஆகும்? ச்சைய், என்ன அவஸ்தைடா இது!’ கிட்டத்தட்ட ஒரு வாரமாக தினமும் தோன்றும் வெறுப்புணர்வு தான், இன்று ஏனோ அதன் தாக்கத்தை அதிகப்படியாக உணர்ந்தாள்.
“உன்னை யாரு சாப்பிடாம மேலே வரச் சொன்னது? எதுக்காக நீ மேலே வந்த? அங்கே அம்மா பேசுறத கேக்க முடியல!” அவனுமே கோபத்தில் சிடுசிடுக்க,
“நீ எப்படி உன் அம்மா பேச்சை கேக்க முடியாம வந்தியோ, அப்படித்தான் நானும் வந்தேன்!” பதிலுக்கு இவளும் படபடத்தாள்.
“அம்மா பேசுறது புதுசா? இதுக்கெல்லாமா கோவிச்சுப்ப?”
“நீ ஈசியா சொல்லிட்ட சேரா! எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்த ஒரு வாரமா ரொம்ப அழுத்தமாவே இருக்கு மனசு, உடம்பு ரெண்டும் என்னமோ பண்ணுது. இன்னைக்கு ரொம்ப பேசிட்டாங்க! என்னால ஜீரணிக்க முடியலடா! அதோட இந்த கார்த்தியும் சேர்ந்துகிட்டா!” என்றவள் காலையில் அவளுடன் நடந்த தர்க்கத்தைச் சொன்னாள்.
“அந்த திமிரெடுத்த கழுதை இப்படிதான்னு உனக்கு தெரியாதா? நீ கேட்டதும் கரெக்டு தான்! விடு, இனிமே ஜாக்கிரதையா லவ் பண்ணுவோம்!” அசால்ட்டாய் கண்சிமிட்டி சிரித்தான் செந்தூரன்.
“ஏண்டா உனக்கு கோபமே வரலையா, அவ மேல!”
“அதுக்காக அவகிட்ட சண்டை பிடிக்கச் சொல்றியா? வேற வினையே வேணாம். ரெண்டு பேரையும் கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளிடுவாங்க!” செந்தூரன் ஓய்ந்த குரலில் கூற,
“ம்ப்ச், போடா, சரியான பயந்தாங்கோழி! உன்னைப் போயி நம்பி வந்தேன் பாரு!” நொந்த குரலில் பேசினாள்.
“ஏய், பதிலுக்குபதில் சண்டைபோட அவங்க என்ன வெளியாளா வர்ஷி?”
“ஆனா எனக்கு கஷ்டமா இருக்கு சேரா! வேண்டாத லக்கேஜா என்னை டிரீட் பண்றாங்க! இருக்க இருக்க வெறுப்பேருது எனக்கு… அதோட இந்த பசியும் சேர்ந்து உசுர வாங்கித் தொலைக்குது.
இங்கே வந்துதான் மனக்கஷ்டம், பணக்கஷ்டம்னா என்னான்றதையே தெரிஞ்சுகிட்டேன்! பசி வந்தா மனுசங்க ஏன் ஆளா பறக்குறாங்கனும் இப்பத்தான் புரியுது!” கோபத்தை அடக்கி முணுமுணுத்த வேகத்தில் அவளறியாமல் கண்ணீரும் கன்னத்தைத் தொட்டது.
‘ச்சே, என்ன இது? ஒன்னுமில்லாததுக்கு எல்லாம் அழுகை வந்து தொலைக்குது! ரொம்ப வீக் ஆகிட்டேனா?’ யோசித்துக்கொண்டே வேகமாய் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“ம்ப்ச், சீன் போடாதேன்னு என்னைச் சொல்லிட்டு, நீதான் எமோசனல் ஆகுற!” செந்தூரனும் கவலையுடன் சொன்ன வேளையில்,
“சேந்தா!” என்று கதவைத் தட்டினார் மணிமாறன்.





சூப்பர்
thanks ma