arrow_back
ஆலங்காய் வெண்ணிலவே அத்தியாயம்-4
ஆலங்காய் வெண்ணிலவே chevron_right பகுதி 4 / 6

அத்தியாயம்-4

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

வெண்ணிலவு4

தனது முகம் பார்த்தே தனக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் தாயின் அரவணைப்பு அடிக்கடி நினைவில் வந்து வர்ஷினியின் ஏக்கத்தைக் கூட்டியது.

எந்த ஒன்றையும் நாசூக்காக மறைத்து, மறுத்து பழக்கமில்லாதவளுக்கு மனதிற்குள் பெரும்பாரமாய் அவளது சூழ்நிலையே அழுத்திவிட, தன்னியல்பையும் மீறி உடைந்து விட்டாள்.

அதே சமயத்தில் மனைவியின் பேச்சைக் கேட்டு புரியாத குழப்பமும் சலிப்பும் செந்தூரனுக்கு… ‘இவளுக்கு என்ன தேவைன்றத இவதானே சொல்லணும்! உடம்புக்கு முடியலன்னா நேரடியா சொல்ல வேண்டியது தானே!’ மனதிற்குள் சிடுசிடுத்த நேரத்தில் சட்டென்று ஒரு பின்னடைவு!

‘அவளுக்கு முடியலன்னா நீதானேடா பாக்கணும். எந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகப் போற? சின்ன வயசுல இருந்து நாட்டு வைத்தியர் தாத்தா, இல்லன்னா கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு அம்மா கூட்டிட்டு போவாங்க! அங்கெல்லாம் இவ வருவாளா?’

ஆகப்பெரும் சந்தேகத்துடன் அவளை ஏறிட்டுப் பார்க்க அவசரமாய் கண்ணீரை துடைத்துக் கொண்டிருந்தாள் வர்ஷினி.

“ஐயோ, ஏன் அழற வர்ஷி?” பதறியவாறே செந்தூரன் கேட்ட சமயத்தில்,

“சேந்தா!” என்று அறைக்கதவை தட்டினார் மணிமாறன்.

“அப்பா கூப்பிடுறாரு வர்ஷி… நல்ல பொண்ணுல்ல… கண்ணை தொடைச்சுக்கோ, ப்ளீஸ்!” கிசுகிசுப்பாக வாயில் விரல் வைத்து கெஞ்சிய பாவனையில் அவளையும் மீறி சிரிப்பு வந்தது.

“குட் கேர்ள்!” என்றவாறே வேகமாகச் சென்று கதவைத் திறக்க, இரண்டு காபி டம்ளர்கள் இருந்த தட்டை அவன் முகத்திற்கு முன் நீட்டினார் மணிமாறன்.

அதைப் பார்த்துக் கொண்டே, “என்ன? இன்னைக்கும் காபித்தூள் அதிகமாயிருச்சா?” செந்தூரன் நக்கலாய் கேட்க,

“ஆமாடா… மொத்தமா டீ போட்டுட்டு, உடனே ஒரு டம்ளர் காபி போடணும்னா, அளவு மறந்து போயிடுது!” மகனை சமாளித்தார் மணிமாறன்.

“உன்னோட இதுவொரு தொல்ல…”

“தேடி வந்து குடுக்கிறேன்ல… இதுக்கு மேலயும் நீ சொல்லத்தான் செய்வ! எல்லாம் ரெடி பண்ணிட்டேன், பார்சல் போடணும், சீக்கிரம் வா! மருமகளுக்கு கொடுத்துட்டு, நீயும் எடுத்துக்கோ!”

“டெய்லியும் இததான் சொல்ற! இத்துனூண்டு காபிபொடிய அளவா பார்த்து போடத் தெரியாதாப்பா உனக்கு? எப்பதான் ஒழுங்கா கத்துக்க போற?”

சலித்துக்கொண்டே குற்றம் சாட்டியவனுக்கு சுட்டு போட்டாலும் அடுப்பு பற்ற வைக்கத் தெரியாது என்பதுதான் உண்மை. பவானியின் வளர்ப்பு அப்படி..!!

‘அவன் ஆம்பள!’ என உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்தே, மகனை பொத்திப் பொத்தி வளர்த்தார். களிமண்ணாய் இஷ்டம் போல் உருட்டி மிரட்டி மகனை அழகு பார்ப்பார் பவானி. அம்மாவின் கைகளுக்குள் மகன் என்றும் தலையாட்டும் பொம்மை தான்!

“பேச்சை குறைடா… சூடு போறதுக்குள்ள குடிச்சு முடி!” பதிலளித்தபடியே நிற்காமல் சென்றார் மணிமாறன்.

“என்னையே அதட்டு! நான் சொல்றதை இந்த வீட்டுல யாரு காது கொடுத்து கேக்கறா? இங்கே குடுக்குற எக்ஸ்ட்ரா காபி விசயம் மட்டும் அம்மாக்கு தெரிஞ்சது, உனக்கு காபிகாவடிதான்!” முணுமுணுத்தபடியே மனைவியிடம் வந்தான் செந்தூரன்.

“ஏய் வசீ… அப்பா சொன்னதை கேட்டேல்ல? இன்னைக்கும் காபிப்பொடிய அதிகமா போட்டாராம்!” கேலியாகச் சிரிக்க,

“நமக்கு காபி கொடுக்க அவர் சொல்ற ரீசன், அது புரியலடா உனக்கு!” பார்வையாலேயே கொட்டு வைத்தாள் வர்ஷினி.

“எப்படியோ இருக்கட்டும்! மொதல்ல இந்த காபிய குடி! அப்புறமா கீழே போலாம்!”

அவளிடம் டம்ளரை நீட்ட, நுரை ததும்பிய காபியின் மணமும் சுவையும் அப்பொழுதே நாக்கின் சுவை நரம்புகளை முறுக்கி விட்டது. எச்சில் ஊறிப் போனது அவளுக்கு…

‘ச்சை என்ன ஃபீல் இது? இவ்வளவுக்கு அலையுறேனா?’ என்று தன்னைத்தானே காறி துப்பிக் கொண்டாள் வர்ஷினி.

அடுத்த நிமிடமே மீண்டும், “சேந்தா!” என மீண்டும் மணிமாறன் அழைத்ததும்,

“என்னப்பா?” என்றபடியே அறையின் வாசலுக்கு சென்றான் செந்தூரன்.

“இந்தா… டேஸ்ட் பார்த்து சொல்லு!” என்றபடி சுண்டலும் பட்டாணியும் நிறைந்த தட்டினை கையில் கொடுத்தார்.

அறைக்குள் அவர் எப்போதும் வரமாட்டார் என்பதை அறிந்தவளாக வர்ஷினியே காபி டம்ளரோடு இப்போது வெளியில் வந்திருந்தாள்.

“என்ன அங்கிள், எப்பவும் கொஞ்சமா தானே வரும்! இன்னைக்கு என்ன தட்டு நிறைய..?” கேள்வியோடு சுண்டலை கையிலெடுத்து வேகமாய் வாய்க்குள் தள்ளினாள்.

“அள்ளிப் போடும்போது வந்துடுச்சு! இதுக்கெல்லாம் கணக்கு பாக்க முடியுமா?” சாதாரணமாய் சொன்னாலும் மருமகளின் தேவையை கணித்தவராகவே தட்டில் நிறைத்துக் கொண்டு வந்திருந்தார்.

பசிக்கு சுண்டலும், அடுத்தாக உள்ளே சென்ற காபியும் தேவாமிர்தமாக ருசித்தது. தொடர்ந்து வயிற்றுக்குள் வேகமாகச் சென்று நிறைந்து கொண்டதில், இத்தனை நேரமாய் ஆட்டி வைத்த அழுத்தம், சோர்வு எல்லாம் சட்டென்று குறைந்தது போலத் தோன்றியது வர்ஷினிக்கு!

‘இந்த பசிக்குத்தான் புரியாம அழுது தொலைச்சியா? உன் பசி உனக்கே சொல்லத் தெரியல…’ உள்மனம் கொட்டு வைக்க, அசட்டு சிரிப்பொன்றை வெளியில் உதிர்த்தாள் வர்ஷினி.

“உப்பு சரியா இருக்காம்மா?” ஆதுரமாய் கேட்ட மணிமாறனுக்கு, மருமகளின் சிரிப்பில் மனம் லேசாகிப் போனது.

மருமகள் வீட்டிற்கு வந்த நாளிலிருந்து அவளின் பசிக்கு இவர் துடித்துப் போகிறார். தன் தேவையை வாய்விட்டுச் சொல்லத் தெரியாத பெரிய வீட்டுப்பெண்ணை குறையில்லாமல் தாங்கிக்கொள்ள வேண்டுமென்கிற துடிப்பு அவரின் உள்ளத்தில்!

இயல்பிற்கு மீண்டவளாக, “எப்பவும் போல சூப்பர்! இன்னைக்கு என்ன ஸ்பெசல் அங்கிள்?” என்றவளின் பார்வை, அறைக்கு வெளியிலிருந்த காலியிடத்தில் நிலைத்தது.   

சமையல் முடிந்ததின் அடையாளமாக பொருட்கள் எல்லாம் அரைகுறையாக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் இருக்க, அருகிலிருந்த சிறிய அறையில் இரண்டு பர்னர் கேஸ் அடுப்போடு இணைந்த சிலிண்டரும் தன் கடமையை முடித்து, ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

தக்காளி, சாம்பார், தயிர்சாத வகைகள் கிளறி முடித்து, சுண்டல் பட்டாணிக்கும் தாளித்து முடித்த வாசம் அங்கே பரவியிருக்க, அந்த பரவசத்தை உள்ளிழுத்துக் கொண்டாள் வர்ஷினி.

“தக்காளி சாதம், தயிர்வெங்காயம் தான் இன்னைக்கு ஸ்பெசல்… டீயும் ரெடியாகிட்டு, இப்ப கிளம்பிடுவேன்!” என்றவரோடு இவளும் சேர்ந்து அங்கிருக்கும் இடத்தை ஒதுக்கி வைக்க ஆரம்பிக்க, அலுமினிய பேப்பர் பார்சல் டப்பாக்களோடு செந்தூரனும் வந்தமர்ந்தான். சற்றே சூடு தணியவிட்டு பார்சல் செய்வதுதான் பாக்கி!

பழனி மலையடிவாரத்தில் ரோப் காருக்கு டிக்கெட் கொடுக்கும் இடத்தில் தினசரி சாப்பாட்டு கடை போடுவதுதான் மணிமாறனின் தற்போதைய வருமானம் தரும் வேலை.

உணவு வகைகளை அடுக்கிக்கொண்டு செல்லும் டிவிஎஸ் வண்டியில் முன்னும் பின்னும் வைத்திருக்கும் கேரியல் தான் இவரது நடமாடும் மினி டிபன் சென்டர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் பசியைப் போக்கும் வகையில் எளிதான சாம்பார் சாதம், தயிர்சாதம், கொறிக்க பட்டாணி, சுண்டல், அதற்கு தோதாக சூடான டீ என தினமும் நண்பகல் பனிரெண்டு மணிக்கு ஆரம்பிக்கும் வியாபாரம், மதிய நேரத்தில் சூடுபிடித்து மூன்றிலிருந்து நான்கு மணிக்குள் விற்றுத் தீர்ந்துவிடும்.

தினசரி ஸ்பெஷலாக லெமன், தக்காளி, அல்லது வெஜ் பிரியாணி என சேர்த்து கிளறுவதும் உண்டு. நளபாகத்தில் அப்படியாக கரைக்க குடிக்கவில்லை என்றாலும் ஓரளவிற்கு பக்குவம் கற்று வைத்திருந்தார் மணிமாறன்.

தனது திருமணத்திற்கு முன், கல்யாண வீடுகளில் சமையலுக்கு உதவியாகச் சென்ற கைப்பக்குவம், வயதேறிய காலத்தில் தற்போது கை கொடுக்கின்றது அவருக்கு.

வேகவேகமாய் பார்சல் கட்டி முடிக்கப்பட்டதும், ‘வேல்ஸ் ஊறுகாய்’ ஒரு ரூபாய் மினிசாஷே பாக்கெட்டுகளையும் அதனுடன் எடுத்து வைத்தார்.

அதைப் பார்த்து, “அய்ய… இந்த பிரான்டா!? உங்க எஜமான விசுவாசம் இன்னுமா கொறையல?” வர்ஷினியின் முகம் சுளித்த பாவனைக்கு,

“ஏன் இந்த ஊறுகாய்க்கு என்ன கொறைச்சல்? நன்றிக்கும் விசுவாசத்துக்கும் எக்ஸ்பயரி டேட் கிடையாது வர்ஷினி!” என்ற மணிமாறன் சத்தமில்லாமல் சிரிக்க,

அதே நமட்டுச் சிரிப்போடு, “சொந்த வீட்டுக்கே எதிரா இருக்கியே… இது உனக்கே ஓவரா தெரியல?” போலியாக முறைத்தான் செந்தூரன்.

“ஹைஜீனிக் ஃபுட் ஐட்டம்ஸ் கொடுத்தா, யார் முகம் சுளிக்கப் போறா?” வர்ஷினி நொடித்துக் கொள்ள,

“அப்படியென்ன குறைய கண்ட இந்த ஒரு ரூபா பாக்கெட்டுல?” செந்தூரன் விடாமல் கேட்க,

“அது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!” என பேச்சை வளர்த்தாள் வர்ஷினி.

இருவரும் வம்பு வளர்த்தபோது, இரண்டு பார்சல்களை மருமகளின் கையில் திணித்தார் மணிமாறன்.

“வேணாம் அங்கிள்? வயிறு ஃபுல் ஆகிடுச்சு!”

“இப்ப இத சாப்பிட்டுக்கோ, நாலு மணிக்கு மதிய சாப்பாடு சாப்பிட்டுக்கலாம்!”

“ஐயோ… அத்தைக்கு தெரிஞ்சா திட்டுவாங்க! யார் கேக்குறது?”

“இன்னைக்கு உன் அத்த திட்ட மாட்டா! இருந்த மாவ வழிச்சு புள்ளைக்கு பொடிதோச போட்டுக் குடுத்து, காலி பண்ணிட்டா… இப்ப நீ கீழே போனா மதியத்துக்கு வச்சிருக்கிற சாதம், ரசம் வத்தலும்தான் சாப்பிடச் சொல்லுவா…” மணிமாறனின் பேச்சில், வர்ஷினியின் முகம் சுருங்கிப் போனது.

“ஏன்தான் இப்படி இருக்காங்களோ? எப்பவும் பற்றாக்குறை பட்ஜெட் மாதிரியே காலை டிபனை சுருக்குறாங்க!” வர்ஷினி முணுமுணுக்க,

“டிபன் மட்டுமா… மூணு வேள சாப்பாட்டுக்கும் அதே கதிதான்! கேட்டா வருமானம் பத்தல… மக கல்யாணத்துக்கு காசு சேக்கணும்னு நீட்டி முழக்குவா! இன்னைக்கு நீயா டிபனும் கேக்காதே… இங்கேயே சாப்பிடு!” என்றபடி பார்சல்களை அவளின் கையில் திணித்தார் மணிமாறன்.

“இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் தோச சாப்பிடாம வந்திருப்பேனே!” ஆசையாக உச்சுகொட்டி, “வரவர அம்மாவை எனிமியா பாக்க ஆரம்பிக்கிறப்பா… நல்லாயில்ல சொல்லிட்டேன்!” செந்தூரன் எச்சரிக்க, 

“உன்னை மாதிரி கண்டும் காணாம இருக்கறதுக்கு, இப்படி இருந்துடலாம்” மறைமுகமாய் பலமான கொட்டு வைத்தார் மணிமாறன்.

“என்னப்பா சொல்ற?”

“பொண்டாட்டி சாப்பிட்டாளானு ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தியா? அவகிட்ட ஒரு வார்த்த கேக்கவாவது செஞ்சியாடா? உன் அம்மா கூப்பிட்டதும் தட்ட தூக்கிட்டு சாப்பிட உக்கார்ர…” சற்று காட்டமாகவே பேசினார்.

“இவ என்ன விருந்தாளியா, தனியா வந்து கேட்டுட்டு இருக்க? அவ வீட்டுல அவளுக்கு பசிச்ச நேரத்துல சாப்பிட்டுக்க வேண்டியது தானே?” எதார்த்தமான மகனின் பேச்சில்

“அந்தளவுக்கு உறவும் உரிமையும் இந்த வீட்டுல இன்னும் இவளுக்கு கொடுக்கலடா மடையா!!” என பல்லைக் கடித்தார் மணிமாறன்.

“ம்ப்ச், அவளே இத பத்தி கேக்கல, வீணா நீ வார்த்தையை விட்டு எங்களுக்குள்ள சண்டை மூட்டி விடாதே… நானே தோசை பத்தலன்னு அரகுறயா சாப்பிட்டு வந்துருக்கேன்!” செந்தூரன் வயிற்றை தடவிக் கொள்ள,

“நீ திருந்த மாட்ட… உன்னை நம்பி வந்தவளையும் யோசிச்சு பாக்கச் சொல்றேன். நீ என்னடான்னா உன் அம்மாக்கு ஜால்ரா தட்டியே உன் ஆயுசை முடிச்சிப்ப போலிருக்கு.  எப்போதான் உனக்கு புரியப் போகுதோ?” அலுப்புடன் வாயடைத்தார் மணிமாறன்

“போதும், போதும்… ரெண்டு பேரும் பேச்சை மாத்துங்க!” என்ற வர்ஷினி,

“இந்தாடா… அர வயிரா இருக்காதே… ஃபில் பண்ணிக்கோ!” என்றபடி பார்சலை கையில் திணித்தாள்.

“எனக்கொன்னும் வேணாம், உனக்கு தானே அவர் குடுத்தாரு!“ சுணங்கிய முகத்துடன் தந்தையை முறைத்தான் செந்தூரன்.

“ரொம்ப பிகு பண்ணிக்காதே சேரா… எப்படியும் நான் சாப்பிட்டு மிச்சம் வைக்குறத நீ சாப்பிடத் தான் செய்வ… அதை இப்பவே சாப்பிட்டுக்கோ!”

“எவ்வளவு ஈசியா தூக்கி குடுக்குற?”

“இதென்ன அத்தன பெரிய விசயமா?”

“மொதலாளி வீட்டுப் பொண்ணுக்கு சாப்பாட்டோட அருமை எப்பவும் தெரியாது. ஆனா தொழிலாளி மகனுக்கு ருசியில்லாத சாப்பாட்டையும் ரசிச்சு சாப்பிடுற வித்தை தெரியும்!” சட்டென வேதாந்தம் பேசியவனை சலிப்புடன் பார்த்தாள் வர்ஷினி.

“ஆரம்பிச்சுட்டான்… இப்படி பிரிச்சு பாக்குற நேரத்துல எப்படி முன்னுக்கு வர்றதுன்னு யோசிச்சிருந்தா நீ உருப்பட்டுருப்ப…” மணிமாறனும் தன் பங்கிற்கு கடிந்துகொள்ள,

“இவனுக்கு என்ன தேவைன்னு இவனுக்கே தெரியறதில்ல அங்கிள்… அதான் இவனும் குழம்பி, மத்தவங்களையும் குழப்பி வைக்கிறான்!” வர்ஷினியின் பேச்சில் சிடுசிடுத்துப் போனது செந்தூரனின் முகம்.

பணம் சம்பாதிக்க வேண்டுமென்று செந்தூரனின் மனமெல்லாம் அடங்காத பேராசை!! நினைத்தால் மட்டும் போதுமா? அதற்கான தொழிலை, வழியை யோசிக்கும் அளவிற்கு அவனுக்கு பொறுமையும் இல்லை, தெளிவும் இல்லை.

மனிதனின் நிம்மதி என்பது, மனம் சார்ந்த விசயத்தில் இல்லை, அவனிடத்தில் இருக்கும் பணத்தை வைத்துதான் என ஆணித்தரமாய் மனதில் பதிய வைத்த அம்மாவின் அறிவுரையை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஆகாயத்தில் மணற்கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறான் செந்தூரன்.

அந்த மனதோடு சம்பாதித்த பொல்லாத பணம் தந்த சகவாசத்தால் வீண் பழிச்சொல், கஷ்டங்கள், எத்தனை எத்தனையோ தலைகுனிவுகளை சந்தித்தும், பணவேட்கை குறையாமல் அல்லாடுகிறான். வாய்ப்புகள் தன்னைத் தேடி வருமென்று பலமான நம்பிக்கை அவனுக்கு…

பார்சல் கட்டி முடித்த இடைவெளியில் அவசரமாய் எழுந்து உள்ளே ஓடினாள் வர்ஷினி.

“என்னாச்சுடா இவளுக்கு? இவ்வளவு வேகமா போறா?” மணிமாறன் அவள் சென்ற வேகத்தைப் பார்த்து கேட்க,

“தெரியலப்பா…” என்று கையை விரித்தான்.

“போயி பாரு…” அவசரமாய் மகனை அனுப்பி வைத்தவரின் மனம், மீண்டும் மருமகளுக்காக யோசிக்கத் தொடங்கியது. நான்கைந்து நாட்களாகவே அவள் சோர்வுடன் நடமாடுகிறாள் என்பதையும் குறித்துக் கொண்டது.

பத்து நிமிடம் கழித்து கப்பல் கவிழ்ந்த பாவனையில் வெளியில் வந்தவன், “ப்பா… அவளுக்கு உடம்பு சரியில்ல போல… வாமிட் பண்றா! நேத்தும் இதே கதைதான். கேட்டா ஒண்ணுமில்லன்னு மழுப்புறா… என்னப்பா செய்றது?

எந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறது? கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்கு இவ வருவாளா? இவ வந்தாலும் இவங்கப்பா ஒத்துப்பாரா?” வேகமாய் படபடத்தான் செந்தூரன்.

“டேய், எதுக்கு இவ்ளோ டென்சன் ஆகுற? அவ நம்ம வீட்டு பொண்ணு… அவள பத்திரமா பாத்துக்க வேண்டிய பொறுப்பெல்லாம் நம்ம மட்டுமே சேர்ந்தது. அதை மனசுல பதிய வச்சுக்கோ! அடுத்தவங்க பேசுறதை மனசுல வைச்சுட்டு குடும்பம் நடத்துனா வாழ முடியாது. அம்மாட்ட சொல்லிட்டு போறேன்… என்னன்னு பாப்போம்!” தந்தையின் பேச்சில் ஓரளவு சமாதானமானான் செந்தூரன்.

அறைக்குள் வந்தவனுக்கு மனைவியின் ஓய்ந்த தோற்றமே மேலும் கலவரப்படுத்தியது. தினப்படி மூன்று வேளை உணவு உண்பதையே பெரும்பேறாக நினைத்து வாழத் தொடங்கியவன், வாழ்வின் அடுத்தகட்டம் எப்படி இருக்குமென்று யோசித்தே பார்த்ததில்லை.

‘பிரச்சனை இல்லையென்றால் இப்படியே இருந்து விட்டுப் போவோம்’ என்ற விட்டேற்றியான பாவனை தான் அவனிடத்தில்… அதனாலேயே மனைவி சோர்ந்து படுத்ததும் வெகுவாகத் தடுமாறி விட்டான்.

“நீ எந்த ஹாஸ்பிடல் போவ வர்ஷி?” அறைக்குள் வந்ததும் அக்கறையாய் கேட்டான்.

“ஹாஸ்பிடல் வேணாம் சேரா… அங்கெல்லாம் நான் போக மாட்டேன். மருந்து வாடையே எனக்கு பிடிக்காது. வுவ்வாக்…” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினாள் வர்ஷினி.

“அப்ப உடம்பு சரியில்லாதப்ப என்ன செய்வ?”

“எங்கம்மா தான் கசாயமும் மாத்திரையும் குடுப்பாங்க! அதுக்கும் அடங்கலன்னா தான் டாக்டரை வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்க!” எளிதாகச் சொல்லிவிட்டு கண்களை மூடிக் கொண்டாள்.

‘டாக்டர வீட்டுக்கு கூட்டிட்டு வரதெல்லாம் நடக்கிற காரியமா? எவ்ளோ கேப்பாரோ? டாக்டரை கூட்டிட்டு வந்துட்டு ஃபீஸ அவங்க வீட்டுல வாங்கிக்க சொன்னா என்ன?’ என்றெல்லாம் யோசனை ஓடியது அவனுக்கு!

‘அப்படி மட்டும் செஞ்ச, உன் மூஞ்சிய பஞ்சராக்கிட்டு தான் அடுத்த வேலய பாப்பா உம் பொண்டாட்டி!” கொட்டு வைத்தது மனசாட்சி!

‘ம்க்கும், பொறந்த வீட்டு சாவகாசமே வேண்டாம்னு இருக்கா இவ… எதுவா இருந்தாலும் பெத்தவங்கதான் பாக்கணும்னு எங்கம்மா எதிர்பார்த்திட்டு இருக்கு. யார் சொல்றதை கேக்குறது?’ குழப்பத்திற்கு விடைதெரியாமல் பெருமூச்செறிந்தவனைப் பார்த்து,

“டோன்ட் வொரி சேரா… கைவசம் மருந்து இருக்கு. நீ உன் வீணாப் போன மூளைய போட்டு குடைஞ்சுக்காதே!” என்றவள் அறையின் ஓரத்தில் இருந்த பாட்டிலை எடுத்து, “இது எப்படி இருக்கு?” என்று கண்கள் பளிச்சிட அவன் முகத்திற்கு நேரே நீட்டினாள். 

“என்னடி இது?”

“மை ஃபேவரைட் டேஸ்டி மேங்கோ பிக்கிள்… பாத்தாலே வாய் ஊருது…” என்றவள் அந்த நேரமே பாட்டிலில் இருந்த ஊறுகாயை ஸ்பூனில் எடுத்து, பஞ்சாமிர்தம் போல கையில் வைத்து ருசி பார்த்தாள். தன் விரலால் கொஞ்சம் எடுத்து அவன் உதட்டில் வைத்து அவனையும் ருசி பார்க்க வைத்தாள்.

“எப்படி இருக்கு சேரா?” கேட்டவளின் குரலில் சோர்வு மறைந்து ஆர்வமும் உற்சாகமும் கலந்தோடியது.

“எச்சி ஊறுதுல்ல… சட்டுன்னு மைன்ட் ரெப்ரஷ் ஆயிடுச்சு!” என்றவளின் குரல் குதூகலமாய் ஒலித்தது. வயிற்றைப் புரட்டி வாந்தி எடுத்த மயக்கமெல்லாம் பறந்தே போச்சு!!

“ம்ம்… நெஜமாவே டெஸ்ட் அள்ளுதுடி… சூப்பர், நல்லா இருக்கு!” என்றவன், அவள் கையிலிருந்த பாட்டிலை எடுத்துகொண்டு வேகமாக மணிமாறனிடம் சென்றான்

“அப்பா, இதை டெஸ்ட் பண்ணு!”

“என்னடா?” என்றபடி அவரும் ருசி பார்த்து புருவம் உயர்த்தினார்.

“வர்ஷினி போட்டதா?” 

“எப்படிப்பா கரெக்ட்டா சொல்ற?”

“ருசியே சொல்லுதே… அப்படியே அவங்கப்பா கைப்பக்குவம், ரெண்டு நாளுக்கு முன்னாடி மாங்கா வேணும்னு வாங்கி வச்சுகிட்டா! இதுக்கு தானா?” மணிமாறனின் பேச்சில்

“ஊறுகா கம்பெனி ஓனர் பொண்ணுன்னு ஃப்ரூப் பண்ணிட்டா…” செந்தூரன் வெடித்து சிரிக்க,

“கேலியா பண்ற? போடா உனக்கு கிடையாது!” என கையில் இருந்ததை பிடுங்கிக் கொண்டு ஓடினாள் வர்ஷினி.

***

கீழே இறங்கி வந்த மணிமாறன், “மருமகள கூப்பிட்டு என்ன ஏதுன்னு கேளு பவானி?” புறப்படும் அவசரத்தில் அவசியமானதை சொல்லி முடித்தார்.

“ஆத்தி… உங்க அக்கறைக்கு அளவில்லையா? இப்ப என்னவாம் அவளுக்கு?” பவானி சிடுசிடுப்புடன் கேட்க,

மனைவியை அலுப்பாய் பார்த்து, “அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு முருகா… அதை மனசுல வச்சுட்டு பேசு!” என்றார்.

“ரெண்டு மாசமான என்ன செய்யணுமாம்?”

“கொஞ்சமாவது பொறுப்பான பொம்பளையா யோசிடி! நேரடியா சொல்ல வராம, நானே நீட்டி முழக்குறேன்… இவளுக்கு படம் போட்டு பாடம் எடுக்கணுமாக்கும்!” சட்டென எரிச்சலைக் கொட்டினார்.

மணிமாறன் அத்தனை சுலபத்தில் கோபத்துடன் சிடுசிடுக்க மாட்டார். அதையும் மீறிவரும் சீற்றத்தை மனைவியை அலுப்பும் சலிப்புமாய் அதட்டுவதில் காட்டிவிட்டு அடங்கி விடுவார். அதற்கே பவானிக்கு ஆயிரம் கோணலாய் முகம் கசங்கிப் போகும்.

“தொரைக்கு கோபம் வந்துருச்சு, இனி என்ன பேசினாலும் கடிச்சு கொதறி வைப்பாரு…” என முணுமுணுத்தவர், மகனின் திருமணம் முடிந்த நாள்கணக்கை விரல் விட்டு கணக்கிட்டார்.

பின்னர் முகம் சுளித்த பாவனையில்,  “ம்க்கும்… இதுங்க இருக்கிற இருப்புக்கு இது மட்டும் கொறைச்ச?” என நொடித்துக் கொள்ள,

“அவ, நம்ம மருமகடி…” என்ற கணவரின் காட்டமான முறைப்பினையும் பரிசாக பெற்றுக் கொண்டார் மனைவி.

‘உடனே சமரசக் கொடியை பறக்க விட்டு விடு!’ என மனம் அவசரமாய் எச்சரிக்க, சற்றே இறங்கி வந்தார் பவானி.

“கேக்குறேன் முருகா… எல்லாத்துக்கும் கோச்சுகிட்டு முறைச்சா எப்படி? கொஞ்சிப் பேசி சமாதானப்படுத்துற வயசா நமக்கு? புள்ளை வந்து என்ன சண்டைனு கேக்குறதுக்குள்ள சிரிச்சுட்டே கெளம்புங்க முருகா…”

மனைவியின் அனுசரணையான சம்பாஷனையில் மெலிதான புன்னகை மலர்ந்து, சமாதானத்தை பறக்க விட்டுக் கிளம்பினார் மணிமாறன்.

 

 

 

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம்-5

வெண்ணிலவு-5பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறிய சிறிய கிராமங்களில் உள்ள கடை, மார்க்கெட் சந்தைப் பகுதிகளில் வாரம் மற்றும் தினசரி தவணை வசூலிக்கும் வேலை செந்தூரனுக்கு... காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று வசூல்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்