30
கிடைத்த வீடு, பணம், தொழிலை விட, அவர்கள் என்ன முட்டாள்களா!
“ஒரு நிமிஷம்!… இங்கு நான் இருக்க வேண்டும் என்றால், இனி நீங்க யாரும் இங்கு இருக்கக் கூடாது. உங்களை எல்லாம் பார்த்தா… அப்படியே, பத்திட்டு வருது.
இருக்கும் கோபத்தில், வெறியில், நைட் நீங்கத் தூங்கும்போது, கல்லைத் தூக்கி போட்டு, மொத்தக் குடும்பத்தையும் கொன்று விடுவேன். என்னைக் கொலைக்காரி ஆக்காதீங்க!…. போங்க வெளியே!…” என்றாள் ரூபிணி.
“ஏய்!… நாங்க ஏண்டீ, வெளியே போகணும்?… இது எங்க திவா, சம்பாதித்தச் சொத்து!…” என்று மீண்டும் எகிறினார் அகிலாண்டம்.
“ஓஹ்!… அப்படியா!… சரி நீங்க இருங்க. நான் என் அண்ணனை, அனுப்புகிறேன்…” என்றவளின் பேச்சில், பேய் அறைந்தது போல நின்றனர் அவன் குடும்பத்தினர்.
“போன்னு சொன்னா, இந்த வயசான காலத்தில், நாங்க எங்கே போவோம்?” என்று மூக்கை சிந்தினார் அகிலாண்டம்.
‘இவ கிட்டே எகிறினா வேலைக்கே ஆகாது… திறந்து விடு, கண் டாமை…’ என்று அகிலாண்டம் பிழியப் பிழிய அழ, அதையெல்லாம் வெறுப்புடன் பார்த்துக்கொண்டு நின்றாள் ரூபிணி.
“அதான், உங்க மூத்தப் பிள்ளையை விற்று, பெங்களூருவில் ஒரு வீடு வாங்கி இருக்கீங்கல அங்கே போங்க. நான் இங்கு, ‘உங்க மகனின் மனைவி’ என்ற போர்வையில் இருக்கும் வரை தான், உங்களுக்கு இவரை விற்று கிடைத்த எல்லாமும் இருக்கும்… சாய்ஸ் ஹிஸ் யுவர்ஸ்!…” என்றாள் ரூபிணி நக்கலாக.
சொல்லி விட்டுத் தன் அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள். அது தான் அவள் கடைசியாகப் பேசியது. அதன் பிறகு, நான்கு வருடங்களாக அவள் பேசியதே இல்லை.
ரூபிணியின் முதல் பேச்சிலேயே, ஊமையாகிப் போய் இருந்தான் திவாகர்.
அவன் நியாயவாதி!
‘உன் தங்கை, அவள் உயிரைக் காப்பாற்று!… சோனாவிற்கு உதவு!’ என்று தாய் சொல்லியதை நம்பியவன்.
கடைசியில் தான், ‘பேரம் பேசப்பட்டு விற்கப்பட்டு இருக்கிறோம்!’ என்று புரிந்து விட, நொறுங்கிப் போனான்.
ஒரே நாளில் மனைவி, குழந்தை, மானம், ரோசம் எல்லாம் இழந்து பிணமாய் மாறிப் போனது போல உணர்ந்தான்.
ரூபிணியின் குற்றம் சாட்டும் பார்வை, அவனைச் சாட்டைக் கொண்டு விளாசியது. அவளின் வார்த்தைகள், ஒவ்வொன்றும் தீக்கங்குகளாய் மாறி அவனைச் சுட, அந்தக் கேள்விகளில் உள்ள நியாயத்தில், அவனே வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான்.
அவன் பெற்றோர், தங்கை, தம்பி உடன் பெங்களூரு குடிப் பெயர்ந்தார்கள். தம்பி, தங்கை திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், அவனோ வாழ்க்கையை வெறுத்த நடைப்பிணமாகத் தானே இருக்கிறான்.
அதைப் பற்றி, அவன் குடும்பத்திற்கு கவலை இல்லை என்னும் போது, இவர்களுக்காகத் தான் பகைத்து கொண்ட மனைவியை, நினைத்து நெஞ்சு வலித்தது.
அவளுக்காகத் தான் எதையும் செய்யவில்லை. ஆரம்பம் முதலே, ‘தான் அவளிடமிருந்து எடுத்தது தான் அதிகம்’ என்ற உண்மை அவனைச் சுட்டது.
அந்தப் படிகளிலே, அவன் உறங்கி விட, நள்ளிரவில், கதவைத் திறந்து வெளியே வந்த ரூபிணி, கணவனின் நிலையைக் கண்டுச் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து விட்டாள்.
அவனை மன்னிக்கவோ, அவன் செய்ததை மறக்கவோ முடியவில்லை அவளால்.
‘நம்பிக்கைத் துரோகம்!’ அல்லவா அவளின் உயிரினும் மேலான, அவன் செய்தது. தன்னை, தன் மானத்தை, தன் வயிற்றில் வளர்ந்தக் கருவை அல்லவா கேடுகெட்ட ஜென்மத்திற்காக அவனும், அவன் குடும்பமும் பணயம் வைத்தது.
இன்று சோனாவிற்காக, இந்த அளவு இறங்கியவன், நாளை அவள் வேறு எதுவும் கேட்டாலும் செய்யத் துணியமாட்டான் என்று என்ன நிச்சயம்!.
‘இல்லை செய்ய முடியாது!’ என்றால், அவன் குடும்பம் தான் அவனைச் சும்மா விட்டு விடுமா!… அவன் அன்னை ஒருவர் போதுமே!
தனக்குச் செய்தது ஒருவித துரோகம் என்றால், தன்னால் தானே தன் அண்ணன், சோனாவை மணக்க வேண்டி வந்தது.
திருமணம் நிச்சயம் ஆன உடனே, ‘கணவன் என்ற உரிமையைத் தான் இவனுக்குக் கொடுத்ததால் தானே’ தன் அண்ணன் பணிய வேண்டி வந்தது!
இல்லை என்றால், இவர்களை எல்லாம் தூக்கிப் போட்டுப் பந்தாடி இருப்பானே!…
தங்கை வாழ்வு, மானத்திற்காகப் பலி ஆனவன் வாழ்க்கைக் கேள்விகுறியாக இருக்கும் போது, தான் மட்டும் எப்படி கணவனோடு வாழ முடியும்!
ஒரு பக்கம் காதலுக்கு நடந்த துரோகம், இன்னொரு பக்கம் அண்ணனுக்கு, தன்னால் நடந்த அநியாயம்.
இதற்கு விடிவுக் காலம் தான் என்று!…
கண்களில் இருந்து, நீர் வழிய, இரவு முழுவதும் அப்படியே அமர்ந்து இருந்தாள் ரூபிணி.
‘தாம்பத்தியம்’ என்பது உடலை தாண்டிய, மனதின் தேடல்.
அது பலருக்கு கிடைப்பதில்லை என்பதே நிதர்சனம்.
அந்த தேடலின் பதில், ‘தன் துணையாக இருக்கும் போது, வாழ்வு சுவர்க்கம் தான்.
கிடைக்காதப் பலருக்கு தினமும் முள் பாதைத் தான்’.
இந்த முள் பாதையில், சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்த இரு இதயங்களுக்கான மீட்சி!…
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மறுநாள் காலை பொழுது புலர்ந்து விட, ‘யார், யாருக்கு எது காத்திருக்ககிறது’ என்ற எதிர்பார்ப்புடன் முதலில் மதுரா வீட்டிற்கு ஒரு விசிட்.
‘கார்த்திக்கின் வாழ்வில், விளக்கு ஏற்றியே தீருவேன்!’ என்ற கொள்கையுடன், மதுரா, ஊர்வசி வீட்டுக்குப் போக ரெடியாகி வந்தாள்.
மகளின் அலங்காரத்தில், அவளின் அழகில், பவானி மட்டும் அல்ல, அந்த வீட்டில் இருந்த அனைவரும் ஒரு கணம், கண் இமைக்கவும் மறந்து தான் போனார்கள்.
“என்ன மதுரா, புதுசா புடவை எல்லாம் கட்டிட்டு ரெடியாகி இருக்கே!… என் கண்ணே பட்டுடும், போல கோயில் சிலை மாதிரி அம்சமா இருக்கே!… மறக்காம சுத்திப் போடணும்…” என்றார் பவானி, விடிந்தும் விடியாததுமாக மகள், ‘எங்கேயோ கிளம்புகிறாளே!’ என்ற கவலை அவருக்கு.
நேரிடையாக கேட்க முடியாது அல்லவா!
“என் தோழி, ‘ஊர்வசின்னு’ இருக்கா. உங்களுக்கு அவளைத் தெரியாது. அவ வீட்டில் வளைகாப்புன்னு கூப்பிட்டு இருக்கா. கார்த்திக் கூட்டிட்டுப் போறான். தனியா போக யோசிச்சுட்டு இருந்தேன். அவனும் வரேன்ன்னு நைட் பேசிட்டு இருக்கும் போது சொன்னான்.
சரி, அதான் பாடிகார்ட் கிடைச்சுட்டானே என்று கிளம்பிட்டேன். அவன் தான் கார் ஓட்டிட்டுக் கூட வர போறான்…” என்று அடுத்து அடுத்து வர போகும் தாயின் கேள்விகளுக்கு ஒரே பதிலில், பதில் அளித்து விட்டாள்.
‘கார்த்திக்கோடு மகள் போகிறாள்’ என்றதும் பவானிக்கு, வேறு எதுவும் தேவை இருக்கவில்லை.
“சீக்கிரம் வந்துடுங்க…” என்றவர், ஜோடியாக போகும் இருவரையும், ‘சீக்கிரம் தம்பதிகளாக பார்க்க பேராவல்’ எழுந்தது .
பாவம் பவானி!…
மகள் செல்வதே தரகர், வேலை பார்க்கத் தான், அதுவும் தன் கார்த்திக் அண்ணனுக்காக’ என்பதை அறியாதவர், கற்பனையில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி, பேரன் பேத்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
“என்னடா!… மங்கூஸ் மண்டையா!… பதினோரு மணிக்கு முன்னாடி உனக்குச் சூரியனே உதிக்காதே!… என்ன இன்னைக்கு, எனக்கு முன்னாடி ரெடியாகி நிற்கறே!… என்ன நைட் புல்லா, பூரணிக் கூட டூயட்டா!…” என்றாள் மதுரா, கிண்டலாக.
“ச்சே!… போடி!… நானே தப்பு செய்யறோமோன்னு, பயத்துல இருக்கேன்!… நீ வேற, நேரம் காலம் தெரியாம, எனக்கு இது ஒத்து வரும்ன்னு தோணலைடீ!…
அந்தப் பொண்ணு தான், ஏதோ புரியாம லவ் பண்ணுது… இதுல எவ்வளவு இருக்கு தெரியுமா!…” என்றான் கார்த்திக் வேதனையோடு.
“ஓராயிரம் கூட, இருக்கட்டும் கார்த்தி!… உன் மனசுக்கு, ‘பூரணியை பிடித்து இருக்கா இல்லையா?…’ என்று மட்டும் சொல்லு.
மத்த எதைப் பற்றியும் கவலை, உனக்கு வேண்டாம்… உன் குணத்திற்கு ஏற்றப் பெண் அவள் தான்.
இத்தனை வருடம், உன் கூடவே வளர்ந்து இருக்கேன். அவ தான், உனக்குச் செட் ஆவா… சொல்லுடா, பூரணியைப் பிடிச்சு இருக்கா இல்லையா?…” என்றாள் மதுரா.
“பிடிச்சு இருக்குடீ! …” என்றான் கார்த்திக், ஒரு பெரு மூச்சோடு.
‘தேவை இல்லாமல், அரக்கக் கூட்டத்திற்குள் நுழைகிறோமோ!’ என்ற எண்ணத்தை, கார்த்திக்கால் விளக்க முடியவில்லை.
‘ஒருத்தருக்கு இருவராய், சேது, கருணா மாட்டி முழிப்பது போதாததா!…
இதில் தானும் மாட்ட வேண்டுமா?’ என்ற எண்ணத்தில் இருந்தவனின் மனக்கண்ணில், பூரணி முகம் எழும்ப, ‘இருத்தலைக் கொள்ளி எறும்பாய்’ ஆனது அவன் நிலை.
அதே சமயம், ஊர்வசி வீட்டு மாடி ஹாலில், சோகமே உருவாக ஒரு மூலையில் , தூணின் மேல் சாய்ந்து நின்று இருந்தாள் பூரணி. கீழே நடக்கும் எதிலும் அவளால் கலந்து கொள்ள முடியவில்லை .
‘தனக்கு என்று எதுவுமே கிடைப்பதில்லை’ என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். பிரியக் கூடாத வயதில், சொந்த சகோதிரியின் குணத்தால், பெற்றோரைப் பிரிந்து, எல்லோரும் இருந்து, ‘அன்புக்கு ஏங்கும் அனாதை ஆக்கப்பட்டவள்’ அவள்.
கண் காணாதத் தூரத்தில், ஒரு ஹாஸ்டெலில் அவள் வாழ்வு. ஊர்வசியைத் தவிர, வேறு உண்மையான நட்பு அவளுக்கு இல்லை.
எதுவுமே இல்லாத அவளுக்கு, ‘ஒரே நாளில் அனைத்துமாக நான் இருக்கிறேன்’ என்று செய்கையால் உறுதி அளித்து விட்டான் கார்த்திக்.
கார்த்திக் மேல் கொண்ட காதலால், மீண்டும் உயிர்த்து எழுந்தாள் அந்தப் பாவை .
கனவில், அவனோடு, யார் என்றே தெரியாமல், மனைவியாக வாழ்ந்து கொண்டு இருந்தவளுக்கு நிதர்சனம் புரிய வைக்கப்பட்டது அவள் குடும்பத்தால்.
அந்த மாதம் அவளைப் பார்க்க வந்த பெற்றோர், அந்த முறை புலம்பியது சோனாவின் அடுத்தப் பலியாடு ஆன மதுராவை பற்றி!
சோனா, ‘மதுராவை வைத்து, விஜயையை எப்படி எல்லாம் டார்ச்சர் செய்கிறாள்’ என்று என்று பெற்றோர்கள் சொன்னதைக் கேட்டு, முகம் அறியாத மதுரா என்ற பெண்ணின் மேல் பூரணிக்கு இரக்கம் ஏற்பட்டது.
மதுராவை, சோனாவிடமிருந்து காப்பாற்றத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருப்பதாகவும், பவானியிடம் இதைப் பற்றிப் பேசி இருப்பதாகச் சொன்னவர்கள், மதுராவிற்கு ஏற்பாடு செய்து இருக்கும், மாப்பிளை போட்டோவைக் காட்ட, மின்னாமல் முழங்காமல், பூரணித் தலையில் இடி இறங்கியது.
முதலில், சகோதரியால் குடும்பத்தை இழந்து, பெற்றோர் இருந்தும் அனாதை போல் ஹாஸ்டலில் வாசம் என்று பாதி வாழ்க்கைக் குடும்பத்துடன் வாழாமலே கழிந்தது என்று இருந்தவளுக்கு, மொத்த வாழ்க்கையையும், ‘சகோதரி!’ என்று தனக்கு முன்னால் பிறந்தவளால், அழிந்து விட்டது என்று தான் தோன்றியது.
யாரைத் தன் உயிராய் நினைத்து, வாழ்ந்து கொண்டிருந்தாளோ, யாரை இன்னும் ஒரு முறையாவது பார்த்து விட மாட்டோமா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தாளோ, அவனின் நிழற்படம் அவளின் முன் நீட்டப்பட்டது.
“யாருமா இவர்?…” மகள், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுக் கேள்வி கேட்பதை அறியாமல்.
“இது கார்த்திக்மா…. மதுராவை கட்டிக்கப் போறவன்… ரெண்டு குடும்பமும், ரொம்ப கிளோஸ். மதுரா, பிறக்கும் முன்பே, ‘இவளுக்குத் தான் கார்த்திக்!’ என்று முடிவு செய்து விட்டார்கள் பாப்பா.
இப்போ, இவங்களுக்கு தான், சோனா எதையும் விபரீதமாகச் செய்வதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும் கருணா ரொம்பவே துடிக்கிறான்…” என்றார் சேது.
அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டு, அவர்கள் சென்று விட, அங்கு அந்தப் பெண் குற்றுயிர் ஆகிப் போனாள்.
ஆற்றுவார், தேற்றுவாரின்றி அழுகையில் கரைந்தாள் அவள்.
ஊர்வசியும், ‘செமஸ்டர் லீவு’ என்று சென்று இருக்க, அங்கு அவளைத் தேற்ற ஆள் இல்லாமல் போனது.
‘ஒரு பெண்ணாய் மதுராவிற்கு ஏதாவது ஆகும் முன், அவள் கார்திக்கை மணக்க வேண்டும்’ என்று தன்னைத் தானே தேற்றிக் கொண்டாள்.
ஆனால், கார்த்திக்கின் மனைவியாய், அவனைக் காதலித்து விட்டவளால், அந்த எண்ணத்தைத் தாங்க முடியாது உள்ளுக்குள் கதறினாள்.
இதயத்தின் வலி நாளுக்கு நாள் அதிகமானதே ஒழிய, குறையவில்லை. வாழ்க்கை வெறுத்து போய் இருந்த சமயத்தில் தான் ஊர்வசி, அவளை வற்புறுத்திச் சென்னையில் நடக்கும் அவளின் வீட்டு நிகழச்சிக்கு கூட்டி வந்தது.
கிளம்பி வந்த பூரணியின் மனதில், தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் எண்ணம் தான் மேல் ஓங்கி இருந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும், வீட்டுக்குப் போவதாகச் சொல்லி விட்டு, பீச்சிலோ, ரயில் தண்டவாளத்திலோ, தன் வாழ்க்கையாய் முடித்துக் கொள்ளூம் எண்ணத்தில் தான் வந்து இருந்தாள் அவள் .
ஆனால், ஊர்வசியோ தோழியின் மாற்றத்தை உணர்ந்து, அவள் வீபரீதமான முடிவு எடுக்கும் முன், அவளின் வாழ்வை மீட்டு தரக் கார்த்திக் மெயில் id வாங்கி, அவனைத் தொடர்புக் கொண்டாள்.
பூரணியின் நல்ல நேரமோ, இல்லை பலரைச் சோதித்தது போதும் என்று விதி நினைத்ததோ என்னவோ, அந்த மெயில் id தவறாகி, மதுராவை சென்று அடைந்தது பூரணியின் காதல்.
அந்த உண்மையான காதலை நிறைவேற்ற மதுரா தயார் ஆகி, பூரணியின், தவத்திற்கான வரத்தை கொடுக்கக் கார்திக்கை அழைத்து வந்து விட்டாள்.
‘சிலது ஏன் நடக்கிறது’ என்று நடக்கும் போது, நமக்குப் புரியாது.
‘பிக் பிட்சர்!’ என்று சொல்வார்களே, அது போல் வாழ்க்கை என்னும் நாடகத்தில் எது, ஏன், எதற்காக நடக்கிறது என்ற விடை, பல சமயம் நமக்குக் கிடைப்பதில்லை.
‘பூரணியின் காதலை’ காப்பாற்றக் கிளம்பி வந்து கொண்டிருந்த மதுரா, அந்தச் சமயம் அறியவில்லை, தான் காப்பாற்ற வேண்டியக் காதல், பூரணியின் காதல் மட்டும் இல்லையென்ற உண்மை.
அதுவரை மதுராவை, இருட்டில் வைத்து விஜய் உட்பட, பலர் ஆடிக் கொண்டிருந்த ஆட்டத்தின் அடிப்படை, மதுராவிற்கு ஓரளவிற்கு தெளிவாக மதுராவை, சுமந்தக் கார், ஊர்வசி வீட்டின் போர்டிகோவில் வந்து நின்றது.
தவம் தொடரும்…





