29
அந்த இரவில், நகரின் மற்றொரு இடத்திலிருந்த, பார் ஒன்றில் அமர்ந்து, அவன் மூச்சு முட்டக் குடித்து கொண்டு இருந்தான்.
அவன் திவாகர்.
விஜய் தங்கை, ரூபிணியை காதலித்து, ரூபிணி கழுத்தில் கத்தி வைக்காதக் குறையாய், விஜய்க்கு சோனாவுடன் திருமணம் நடக்க காரணமாய் இருந்தவன்.
திவாகர் சட்டென்று பார்க்க, ‘தெலுங்கு பட நடிகர் நானி’ சாயலில் இருந்தான்.
குடித்தே, நெஞ்சில் இருக்கும் நெருப்பை அணைக்க நினைத்தானோ என்னவோ!…
ஆனால், ‘அது அணையாத் தீ’ என்று அவனுக்கு விளங்கவில்லை.
‘குடி என்பது, எல்லா பிரச்சனைக்கும், உடல் வலிக்கும், மன வலிக்கும் சிறந்த நிவாரணி‘ என்று இவனிடம், சொன்ன அறிவாளி எவன் என்று தெரியவில்லை.
குடித்து குடித்து, மயங்கி விழுந்து, அதன் மூலம் ஏற்பட்டுள்ள பிரச்சனையிலிருந்து தான் தப்பிக்க பார்க்கிறோம் என்பதோ, ஒவ்வொரு மனிதனும், ‘தனக்குள் இருந்து சாட்டை எடுத்து விளாசும், ‘மனசாட்சி’ என்ற நீதிபதியிடமிருந்து’ தப்பிக்கவே முடியாது என்பது ஏனோ அவனுக்குப் புரியாமல் போனது.
‘எந்த இடத்தில வாழ்கையை, கையில் கிடைத்தச் சொர்க்கத்தைத் தான் இழந்தோம்!…’ என்று அவனுக்குப் புரியவில்லை .
யாருக்குமே கிடைக்காத நற்குணவதி, அழகி, மனைவியாகக் கிடைத்தும் கூட, அவன் வாழ்வு, நான்கு வருடங்களாகப் பாலைவனமாகத் தான் இருக்கிறது.
தன்மானத்தை இழந்தான், மனைவியின் நம்பிக்கையை, காதலை இழந்தான்.
தன் மனைவி வயிற்றில், உதித்த அந்தக் குடும்பத்தின் முதல் வாரிசையும் பிறக்கும், முன்னே இழந்து விட்டான்.
இனி, இழப்பதற்கு, அவனிடம் மீதம் இருப்பது உயிர் மட்டுமே !…
அவனை, ‘விற்று’ அதில் வந்த பணத்திலிருந்து, அவன் பெற்றோர், சகோதரி, தம்பி எல்லோரும் பெங்களூருவில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுத் தான் இருக்கின்றனர்.
ஆனால், அவர்களுக்காகப் பலியான, அவனின் காதலோ, வாழ்க்கையோ, அவர்களின் கண்ணுக்குத் தெரிவதில்லை என்னும் போது தன்மானம், கெளரவம், ரோசம் இல்லாத, விலை போன பொருளாகத் தான், அவன் கண்களுக்கு அவனே தெரிந்தான்.
‘எப்படி இருந்து இருக்க வேண்டிய வாழ்வு!… பெற்றோரின் சுயநலம், பேராசை தெரிந்தப் பிறகும், ‘அவர்களால் யாருக்கும் என்று நன்மை ஏற்பட்டது இல்லை’ என்று பல முறை உணர்ந்தப் பிறகும், அவர்களின் திட்டத்திற்குத் துணைப் போய், வாழ்க்கையை இழந்து தவிப்பது தான் மட்டும் இல்லை, தன்னால் மற்றொருவனும்’ என்று நினைக்கும் போது, அவன் இதயத்தில் ரத்தம் கசிந்தது.
‘கண் கெட்டப் பிறகு, சூரிய நமஸ்காரம்’ என்பது போல, எல்லாம் இழந்து நின்ற பிறகு, உண்மை கொடூரமாகத் தெரிகிறது.
தன்னால் பாதிக்கப்பட்டவன் கூட, ஏதோ வாழ்ந்து கொண்டு இருக்கிறான்…. ஆனால், ‘அவன் போட்ட வாழ்க்கை பிச்சையில்’ வாழும் தன் நிலைமை தான் வெகுமோசம் .
‘ஒரு முறைதான்….
ஒருமுறை தான்
மனிதனின் வாழ்க்கை,
ஒருமுறைதான்.
வாழ்க்கையில் திருமணம்
ஒருமுறை தான்.
ஒரு சில, மகிழ்ச்சிகள்
ஒருமுறை தான்.
உடைந்த உறவு வருமா!
இழந்த மானம் வருமா!
இனியும் வசந்தம் வருமா!
காலம் திருப்பித் தருமா!
வெறுமை நெஞ்சை அறுக்க, வலிக்கிறதே!
ஒருமுறை தான், ஒருமுறை தான்
ஒரு சில தவறுகள், ஒருமுறை தான்
ஒருமுறை தான் தவறியதால்,
அடைகின்ற வேதனை பலமுறை தான் .
யார் விழியன் நீரை
யார் துடைக்க என்று
உறவுகளின் நினைவுகள் வரவே
வெந்து எரிகின்றோம்.
ஆதரவும் இல்லை.
ஆறுதலும் இல்லை.
இருவருமே இடியைத் தாங்கி,
இறந்து வாழ்கின்றோம் ….’
எங்கோ ஒலித்த, ‘தவமாய் தவமிருந்து பாடல்’ இவனுக்கும், இவன் மனைவிக்கும் எழுதப்பட்டது போல இருக்க, அவனையும் அறியாமல் கண்ணில் நீர் வழிய, தன் வீட்டை நோக்கித் தள்ளாட்டத்துடன் நடந்தான்.
ஊரே இரவு விளக்குகளால், மின்னிக் கொண்டு இருக்க, அவன் வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது.
‘என் வாழ்வு போலவே!…’ என்று நினைத்தவனின், உதட்டில் கசந்த புன்முறுவல் வர, வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான் பலமுறை.
பத்து தடவை அழுத்திய பிறகே, கதவைத் திறந்தாள் அவள். கதவைத் திறந்தவள், கணவனின் குடியையோ, தள்ளாட்டத்தையோ கவனிக்கும் நிலையில் இல்லை. அவள் கண்களில் உணர்ச்சி, உயிர்ப்பு இல்லை.
கணவன், பேச வருவதற்குள், அந்த வீட்டில் இருந்த, ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள் ரூபிணி.
விஜய் தங்கை, ரூபிணி.
சட்டென்று பார்க்க, ‘ நடிகை நிவேதா தாமஸ்’ சாயலில் இருந்தாள்.
மனதை நிறைத்து, அமைதிப்படுத்தும் அழகு தேவதை அவள்.
அந்த அறையின் கதவைத் தட்டி, “சாரி ரூபா!… ரொம்ப சாரிமா!… இன்னைக்கு, ஆபீசில் எழில் இருக்கானே, அவன் குழந்தைக்குப் பர்த்டேன்னு கூப்பிட்டான். போனேன்.
அந்தக் குட்டிப் பாப்பாவைப் பார்த்தவுடன், எனக்கு நம்ம குழந்தை நியாபகம் வந்துடுச்சு.
நம்ம குழந்தை, உயிரோடு இருந்தா, அதற்கு நாலு வயசு ஆகி இருக்கும் இல்லை!…
அந்தக் கொடுப்பினைத் தான், எனக்கு இல்லையே!… பேசுடீ!…. என் கிட்டே, நீ பேசி, நாலு வருஷம் அச்சுடீ!…
உயிர் போரா மாதிரி வலிக்குதுடீ.
பேசு, சண்டை போடு. அடிக்கக் கூட அடிச்சுடு.
இப்படி பேசாமல், என்னை, அணு அணுவாய் கொல்லாதே ரூபிமா… மரணவலியா இருக்குடீ.
என்னால் தாங்க முடியலை… இந்த வாழ்க்கை வாழ்வதற்க்கு, ‘சாவே மேல்’ என்று தோணுது. ஆனா, நான் செத்துட்டா, உன்னை யாருடீ பார்த்துப்பா!…” என்று கதவைத் தட்டி அழுத திவாகர், அந்த வீட்டின் உள்ளே இருந்த மாடிப்படியின் கடைசி படியில் அமர்ந்தான்.
அந்தப் படிக்கெட்டில், ஒரு விளக்கு, ஏற்றப்பட்டு, சிறு பூக்களும் இருந்ததை கண்டவன், முகத்தை மூடி அழுதான்.
“கண்ணா!… அப்பா வந்திருக்கேண்டா!… நீ சாக, இந்தப் பாவியே காரணமாகிட்டேனே!… இந்த அப்பாவை மன்னிச்சுடு கண்ணா!….” என்று அழுதவன், அந்தப் படியில், தலை வைத்து அப்படியே படுத்து விட்டான்.
அந்த படியில் தான், ரூபிணி உருண்டு விழுந்து, அவர்களின் குழந்தைக் கருவிலேயே இறந்து போனது.
அது, அவன் கருணாவிற்குச் செய்தப் பாவத்திற்கானக் கடவுளின் தண்டனை என்று தான் அவனுக்கு தோன்றியது .
ரூபிணியும், அவனும் காதலித்தார்கள். இரு குடும்பமும் சம்மதிக்க, அவன் வீட்டில் கேட்டதற்கு மேலேயே, கருணா வீட்டில், திருமணத்திற்கு செய்து கொண்டு இருந்தார்கள்.
திவாகரின் பெற்றோரின் பேராசை, ஊர் அறிந்த ஒன்று. இவர்களின் திருமணம் கைக் கூடும் சமயத்தில் தான், சோனாவும், அவள் தாத்தா கஜேந்திரனும், இவன் பெற்றோரை சந்தித்து, வீடு, வேலை, பணம் என்று ஆசைக் காட்டியது.
பதிலுக்கு, இவர்கள் செய்ய வேண்டியது கருணா, சோனாவை மணக்கச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதே.
சோனா கழுத்தில், தாலி ஏறிய மறுகணம், ‘அவர்கள் சொன்ன எல்லாம் இவர்களுக்கு வந்து சேரும்’ என்ற டீல் பற்றித் திவாகரிடம் அவன் பெற்றோர்கள் மூச்சே விடவில்லை.
“என்னமா!…. என் திருமணத்திற்கும் கருணாவிற்கும், ஏன் முடிச்சு போடுகிறீர்கள்?” என்றான் திவாகர், அங்கு நடந்து முடிந்து இருந்த, டீல் பற்றித் தெரியாதவனாய்.
“என்னடா திவா!…. இப்படி சொல்றே!… கருணா யாரு!… நம்ம வீட்டுக்கு வரப் போகும் மஹாலக்ஷ்மியின், அண்ணன்… அவனும் சோனாவும் காதலித்தார்களாம்.
கருணாவிற்கு, சோனா, கஜா அய்யாவின் பேத்தி என்பது தெரியாது போல் இருக்கு. சோனா, எவ்வளவு பெரிய கோடீஸ்வரி என்று தெரிந்ததும், கருணாவிற்கு தாழ்வுமனப்பான்மை வந்துடுச்சாம்.
சோனா, கருணா காலில் விழுந்து கதறி இருக்கு… ஆனா, அந்தத் தம்பி, ‘ஏற்றத் தாழ்வு, பணக்காரன், ஏழை, ஏணி வைத்தால் கூடன்னு…’ டயலாக் விட்டுட்டு இருக்கு….
சோனா மாதிரி, மனைவிக் கிடைக்க எத்தனை ஜென்ம தவம் செய்து இருக்கணும்…” என்றார் அவன் அன்னை.
‘பொய்யான ஒரு காதல் கதை அங்கே புனையப்பட்டு’ அவனுக்கு அவர்கள் படமே காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை அறியாத முட்டாளாய் இருந்தான் திவாகர்.
“நாம, என்ன செய்யணும் அம்மா?.” என்றான் திவாகர்.
“இவங்க காதலை வாழ வைக்க, நாம கொஞ்சம் கருணாவை மிரட்டணும் திவா!… ‘கருணா, சோனா கழுத்தில் தாலிக் கட்டவில்லை என்றால், உனக்கும், ரூபிணிக்கும் திருமணம் நடக்காதுன்னு’ சொல்லணும்.” என்றார் அவன் அன்னை.
“என்னமா லூசுத்தனமாய் இருக்கு. நேரா கஜா சார், கருணா கிட்டே பேசினாலே, பிரச்சனை தீர்ந்து விடுமே!… இதுல எதுக்கு, என் திருமணத்தை உள்ளே கொண்டு வரீங்க?” என்றான் திவாகர்.
“கஜா அய்யா, பத்து முறை நடையாய் நடந்து பேசிட்டார். பெரியவர் என்ற மரியாதைக் கூட இல்லாமல், கருணா, ‘நீங்கப் பணக்காரங்க!…’ என்று அதே டயலாக் விட்டுட்டு இருக்கார்.
சோனா, தற்கொலைக்கு வேற முயன்று இருக்கு.
உயிர் போனா வருமா?… உன் ரூபிணியின் அண்ணனுக்கு, ஒரு உயர்ந்த வாழ்வு அமைய இருக்கிறது. அவனுக்குத் தான் அதன் அருமை தெரியவில்லை. நாம அப்படியே விட முடியுமா?” என்று பேசியே பேசியே திவாகரைக் கரைத்தார்கள்.
தான் செய்வது, ‘விஜய் – சோனா காதலை வாழ வைக்கத் தான்’ என்று நம்ப வைத்து, திவாகர் கழுத்தை மட்டுமில்லாமல் விஜய், ரூபிணி கழுத்தையும் சேர்த்தே அறுத்தார்கள்.
“நான் கருணா கிட்டே பேசிப் பார்க்கிறேன்.” என்ற திவாகருக்கு தோல்வியே மிஞ்சியது.
கருணாவின் இந்த மறுப்பு, திவாகருகே கோபத்தைக் கொண்டு வந்து விட்டது.
‘இவன் என்ன லூசா!… இந்தக் காலத்தில் போய், ஏற்றத் தாழ்வு என்றெல்லாம் யோசிச்சுட்டு இருக்கான். மடையன்!… அங்கங்கே அந்தஸ்தை காரணம் காட்டி, பணக்காரர்கள் தான் காதலை உடைப்பார்கள்.
அவர்களே இறங்கி வரும்போது, காதல் கைக்கூடும் வேளையில் லூசா இவன்!…. இவனை இப்படியே விட்டால் வேலைக்கே ஆகாது…’ என்று திவாகர் மனதிற்குள் முடிவெடுத்தான்.
அங்கு, ‘கருணா-சோனா காதல்’ என்ற ஒன்றே இல்லை என்பதை அறியாத அப்பாவி, ‘மனைவியின் அண்ணனுக்கு நல்லது செய்வதாய் நினைத்துப்’ புதைகுழியில் இறங்கிய திவாகர், விஜய், ரூபிணியையும் சேர்த்தே இழுத்து சென்றான்.
கருணா சம்மதிக்கவேயில்லை. அதனால் ரூபிணி, திவாகரின் திருமணம் நிற்கும் நிலைக்கு வந்து விட்டது.
ஆனால், விதி அங்குத் தான் விளையாடி இருந்தது.
‘திருமணம் ஆகப் போகிறதே!…’ என்று ரூபிணியும், திவாகரும் அளவுக்கு மீறி பழகி இருந்ததன் விளைவு, ரூபிணி தாய்மை அடைந்து இருந்தாள்.
அதன் எதிரொலி, கருணாகரன் சோனாவின் கணவனானது.
“கருணா!… உங்கத் தங்கச்சி கழுத்தில் நான் தாலிக் கட்டத் தயார். ஆனால், முதல் முகூர்த்ததில், என் தங்கையின் கழுத்தில், நீங்கத் தாலிக் கட்டி இருக்க வேண்டும். இல்லை என்றால் எங்கத் திருமணம் நடக்காது…” என்றான் திவாகர் திட்டவட்டமாக.
சங்கரனை போல், சோனா சொல்லிய, ‘கருணாவின் மேல் காதல்’ பொய்யில் ஏமாந்த இன்னொரு முட்டாள் .
“உங்கத் தங்கையைத் திருமணம் செய்கிறேன். ஆனா, இப்படி நீங்க கேட்டதோ, திருமணம் நடக்காமல் நின்ற விஷயமோ, ரூபிணிக்குத் தெரிய வேண்டாம்… அவ தாங்க மாட்டா…” என்ற கருணா, சோனாவின் கழுத்தில் தாலி கட்டினான்.
ரூபிணிக்கும், திவாகருக்கும் அதே மேடையில், அடுத்த முகூர்த்ததில் திருமணம் நடந்தது.
தாலி ஏறிய ஒரு மணி நேரத்தில், அதை கழற்றி வீசி விட்டு, சோனா சுமனோடு சென்றதைக் கண்டத் திவாகரின் திகைப்பு, வார்த்தைகளால் சொல்ல முடியாததாக இருந்தது.
விஜய் ஒரு பார்வை, ஒரே ஒரு பார்வைப் பார்த்ததிலேயே, ‘திவாகர் செத்து விட்டான்’ என்று தான் சொல்ல வேண்டுமோ!
மனைவியோடு, தங்கள் வீட்டுக்கு வந்தவன், தாயை மாடிக்கு கூட்டிச் சென்று பொரிய ஆரம்பித்தான்.
“என்னமா!… நீ என்னவோ சொன்னே, ‘அந்தச் சோனா, உன் தங்கை!… அவ கருணாவை, உயிருக்கு உயிராய் காதலிக்கறா!… அவன் இல்லை என்றால் செத்துடுவா!… உங்க கஜா பெரியப்பா தான், அவ உயிரை காப்பாற்றியது!’ என்று சொன்னே!
இவ, ஒரு மணி நேரத்தில், கட்டினத் தாலியை அவுத்து போட்டுட்டு இன்னொருத்தனோடு போறா!…
என்னமா கன்றாவி இது!…
குமட்டிட்டு வருது.
நீ சொன்னே என்றதால் தானே, நான் கருணாவிடம், ‘உங்கத் தங்கைக் கர்ப்பிணியா இருக்கா!… அவ கழுத்தில் நான் தாலிக் கட்டணும் என்றால், நீங்க என் தங்கையைத் திருமணம் செய்ய வேண்டும் இல்ல… உங்கத் தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்துகோங்கோ.’ என்று சொன்னேன்!…” என்றான் திவாகர்.
“டேய் பைத்தியக்காரா!… அது கோடீஸ்வர வீட்டுப் பொண்ணு!…. வெளிநாட்டில் வளர்ந்தவ!… அப்படி, இப்படித் தான் இருப்பா… அன்னாடம் காய்ச்சியான அந்தக் கருணாவுக்கு, யோகம் அடித்து இருக்கு.
நமக்கும் பெங்களூருவில் வீடு, உன் தம்பிக்குத் தொழில், நமக்கு பணம் பெரியவர் இதற்காக தான் கொடுத்து இருக்கிறார். அவர் சொன்ன வேலையை செய்து விட்டோம்.
இனி அவங்களாச்சு, கருணாவாச்சு. நமக்கு என்ன!… போய் பொழைக்கும் வழியைப் பாரு…” என்று சொல்லிய தாயைக் கண்டு, இடிந்து நின்ற திவாகர் தாயின் பின் நோக்க, அவர்கள் பேசியதைக் கேட்டு, நெஞ்சைப் பிடித்து கொண்டு நின்று இருந்த ரூபிணி மயங்கி சரிந்தாள்.
ரூபிணி மயங்கிய இடம் படிகளின் ஆரம்பமாக இருக்க, படிகளில் உருண்டு விழுந்தவளின், கருக் களைந்து போனது.
ரத்த வெள்ளத்தில் மனைவியைப் பார்த்தத் திவாகருக்கு, மனதில் மரண அடி விழுந்தது.
மருத்துவமனையில் கொண்டு சேர்த்தால், அங்கு இரண்டாவது அடியாக, அவர்களின் வாரிசு இறந்தச் செய்திக் கிடைக்க, நிலைகுலைந்து போனான் திவாகர்.
ஒரு மாதத்திற்கும் மேல் ஆனது ரூபிணி வீடு திரும்ப… வீடு வந்த பிறகும், ரூபிணியின் வெறித்தப் பார்வை மாறவில்லை .
“ரூபா!… குழந்தை இறந்தது எனக்கும் வருத்தம் தான். அதற்குன்னு இப்படியே இருந்தா எப்படிம்மா!… வந்து சாப்பிடு…” என்று அழைத்தவனுக்கு தெரியவில்லை, மனைவியின் வெறிப்புக்கு, உயிர் ஓட்டம் இல்லாத நிலைக்குக் காரணம் குழந்தையின் இறப்பு அல்ல, தங்களின் துரோகம் தான் காரணம் என்று.
“எனக்கு வருத்தம் இல்லை…” என்றாள் ரூபிணி மெல்லிய குரலில் .
“வாட்!… என்ன சொன்னே!….” திவாகர் தான் அதிர்ந்து போனான்.
ஒருவேளை தன் காதில் தான், ஏதாவது கோளாறா என்று குழம்பி விட்டான்.
அவனை நேர்க் கொண்டுப் பார்த்த ரூபிணி, “உங்கக் குழந்தை இறந்ததில், எனக்கு வருத்தமே இல்லை… ரொம்ப, ரொம்ப சந்தோசம் தான்.
என் அண்ணன், எனக்கு அப்பா மாதிரி!
‘என்னைப் பகடையாக, நீ பயன்படுத்துகிறாய்’ என்பது மட்டும் முன்னரே தெரிந்திருந்தால், உன் வாரிசைக் கொன்றுட்டு, உன்னைக் காதலித்தப் பாவத்திற்காக, உன்னைத் தொட விட்டப் பாவத்திற்காக, என்னை நானே எரித்துக் கொண்டிருந்திருப்பேன்.
எனக்காக ஒவ்வொன்றையும் பார்த்துப், பார்த்துச் செய்த அண்ணனுக்கு, என்னையே எமனாக்கி விட்டாயே!… அவரும் ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை, என்னிடம் உன் அல்டிமேட்டம் சொல்லியிருந்தால், இந்தத் திருமணத்தையே நிறுத்தி இருப்பேனே!
அவரின் வாழ்வு இப்படி அழிய காரணமே, ‘உன் வாரிசு, என் வயற்றில்’ வளர்ந்தப் பாவம் தானே!…
என்னையும், என் வயற்றில் வளர்ந்த, அதையும், பகடைக்காயாக வைத்து தானே உன்னுடைய, இந்த ஆடம்பரம் எல்லாம்.
அவரின் வாழ்வு அழிந்தப் பிறகு, உங்களுக்கு மட்டும் மனைவிக், குழந்தை வேண்டிக் கிடக்குதா!…
என் அண்ணன் வாழ்வு அழிய காரணமான, இந்த வீட்டு வாரிசு அழிந்ததில், எனக்கு நிம்மதி தான். என் வாழ்வுக்காகத், தன்னைப் பலிக் கொடுத்த என் அண்ணன் எங்கே!… கேவலம், பணத்துக்காக, சொத்து சுகத்துக்காக விலை போன நீ எங்கே!…
மனுஷனா நீ எல்லாம்!…
உன்னைப் போய் உயிராய் நினைத்தேனே!… உன்னை நம்பி, திருமணத்திற்கு முன்பே என்னைக் கொடுத்தேனே!…
என் நம்பிக்கையை, உடைச்சுட்டு, என் பெண்மையை விலை பேசி இருக்காய்!… உன் வாரிசை நான் சுமக்க வேண்டுமா?… முடியாது…. என் அண்ணன் வாழாத, வாழ்வு, நீ மட்டும் வாழ்ந்து விடுவாயா!…” என்று கொதித்து எழுந்தாள் ரூபிணி.
“ஏய்!… என்னா விட்டா ரொம்ப பேசிட்டு போறே!… வாழ முடியாதுன்னா, கிளம்பி உங்க அப்பன் வீட்டுக்குப் போடீ!…” என்றார் திவாகரின் அம்மா அகிலாண்டம்.
அவரின் கன்னத்தைப் பதம் பார்த்தது ரூபிணியின் கரங்கள்.
அதிர்ந்து நின்றது திவாகர் குடும்பம்.
விளைவிக்கப்பட்ட அநீதி அந்த மென்மையான அந்த பெண்ணை சிதைத்திருக்க, சிதைந்த அந்த பெண்மையின் கோபம் அங்கிருந்தர்வர்களை மிரட்டியது.
“வாயை மூடு. இருக்கும் கோபத்திற்கு உன்னை கொல்ல கூட தயங்க மாட்டேன். மூச்!…
நான் இங்கு இருக்கும் வரை தான், உங்க உயிருக்கு உத்திரவாதம். திரும்பி நான் என் வீட்டுக்குப் போனேன், ஒன்று என் அண்ணன் உங்களை வெட்டுவார்!… வெட்டிட்டு சோனவை விவாகரத்து செய்வார்.
அப்படி செய்தால், அந்தக் கஜேந்திரன், உங்களைச் சும்மா விடுவாரா என் அருமை மாமியாரே?….
அவர் கொடுத்தப் பணம், வீடு, தொழில் என்று எல்லாத்தையும் புடுங்கிட்டு, நடு தெருவில் நிற்க வைப்பார்.
அத்தோடு நிறுத்திப்பாரா?… ஒட்டுமொத்த குடும்பத்தையும், தடயமே இல்லாமல் கல்லைக் கட்டி கடலில் இறக்கிட்டு, தான் மறுவேலை பார்ப்பார். சோ, எப்படி பார்த்தாலும் என் அண்ணன் கையாலோ, இல்லை அந்த கஜா கையாலோ உங்களுக்கு எல்லாம் சாவு நிச்சயம்.
‘டீல் வித் தி டெவில்!’ போட்டா, உயிருக்கு உத்திரவாதம் இல்லை மாதருள் மாணிக்கமே!…
வெட்கம், மானம், சூடு, சொரணை என்று ஒன்றுமே இல்லாமல், பிள்ளையைப் பணத்திற்காக விற்ற, நீ எல்லாம் உன் வாயை திறக்கக் கூடாது.
பணத்திற்காக உங்க குடும்பத்தில், இதை மட்டும் தான் செய்தீர்களா?… இல்லை எல்லோரும் ஹோட்டல், லாட்ஜ் எல்லாம் போய் இருக்கீங்களா?…
எவனுக்குத் தெரியும்?… பணம் இன்னும், ரெண்டு கட்டு அதிகமாய் கொடுத்து இருந்தால், வீட்டுப் பெண்களையே அனுப்பிக் கூடத் தான் இருப்பீர்கள்!… உங்கச் சாக்கடை எல்லாம் எனக்கு எதுக்கு?” என்றவள் பேப்பரில் ‘திவாகரை டைவோர்ஸ்’ செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு, வெளியே செல்ல முயன்றாள்.
நிதர்சனம் புரிய, “தா!… தா!… இப்போ என்ன சொல்லிட்டோம் என்று போறே!… புருஷன் பொண்டாட்டிக்குள்ள, ஆயிரம் இருக்கும்… நீ வா அகிலா!…” என்று மனைவியை உள்ளே கூட்டிப் போக முயன்றார் உலகநாதன்.
தவம் தொடரும்…





