33
“என்னங்க!… கண்ணா, இப்படி இருக்கான்!… நீங்க அமைதியா இருக்கீங்க!…” என்றார் கனகா, அதிர்ந்தவராய் .
“ரண வைத்தியம் செய்து இருக்கேன் உன் மகனுக்கு!… பைத்தியம் முத்திப், ‘போய்த் தேவதாஸாக அலைந்தான்’ இல்லை, அதான் வேப்பிலை அடித்தேன்!…
உன் மகனுக்குப் பிடித்து இருக்கும் பைத்தியத்திற்கு, வேப்பிலை மரத்தையே வேரோடுப் பிடிங்கி, அடித்தால் கூடப் போதாது தான்.
என்ன முழிக்கறே!.. மதுராவும், கார்த்திக்கும் இந்த விழாவுக்கு வந்து இருகாங்க… அவங்க, இருவரும் சிரித்து பேசுவதைக் கண்டதும், இந்தத் தியாகச் செம்மலால் பொறுக்க முடியவில்லை.
பொறாமை!… காதுல புகை வருது… செம தீயல், கருகல்.
அதான், ‘சின்னசிறுசுங்க!…. தனிமையில் அப்படி, இப்படி இருப்பாங்க… கிஸ், ஹக் எல்லாம் நடக்கும்… அவன் குழந்தைக்குத் தாய் என்று ஏத்தி விட்டேன்…’
சார், ‘திருமணம், திருமணம்’ என்று குதித்தார். ஆனா, இதை எல்லாம் யோசிக்கல போல் இருக்கு!… அவங்க நெருக்கத்தைப் பார்த்து… வீர வசனம் பேசியவர், பேய் அடித்தது போல் இருக்கான்…
அவனை அப்படியே விடு. இனி மேலாவது யோசிக்கட்டும்.
இவனும், இவன் லாஜிக்கும்!… இவன் செய்யும் அலம்பலுக்கு, நேரா மதுராவிடம் போய், ‘அம்மா, தாயே!…
இந்த லூசு, உன்னை, அவன் காலேஜ் டேல இருந்து, லவ் செய்துட்டு இருக்கான்.
சோனாவை, இவன் திருமணமே செய்யலை.
திருமணம் செய்தும், உன் நினைவில், ப்ரஹ்மச்சாரியாகத் தான் இருக்கான். தயவு செய்து இவனைக் காப்பாற்று.’ என்று சொல்லிடலாம் போலிருக்கு.
பைத்தியம்!…
லூசு!….
க்ராக்கு!…” என்று பொரிந்து விட்டு உள்ளே செல்ல, அவர்கள் பேச்சைக் கேட்ட மதுரா திக்ப்ரமை பிடித்து அமர்ந்திருந்தாள்.
‘சோனாவின் பழிவாங்கலுக்கு, தான் ஆளான காரணம் இது தான்.
விஜய் தன்னை, அவன் கல்லுரி நாட்களில் காதலித்து இருக்கிறான். அந்த விஷயம், சோனாவிற்கு தெரிந்து இருக்கிறது.
அதை வைத்துத் தான் அந்தச் சைக்கோ, இன்னொரு மிருகத்துடன் சேர்ந்து தனக்குக் கட்டம் கட்ட ஆரம்பித்து இருக்கிறாள்.
இவர்களிடமிருந்து, இவர்களே அறியாமல் தன்னை, விஜய் காப்பாற்றி வருகிறான்!…
கடந்த ஒரு வருடமாய்!…
இனி என்ன ?’
இந்தக் கேள்வித் தான் எப்படி யோசித்தாலும், பூதாகரமாக, மதுராவின் மனதில் எழுந்தது.
பூரணிக் காதலுக்கு, உதவ வந்த மதுராவிற்கு முன்னால், ‘இன்னொரு உயிரின் காதலுக்கான தவம்!’ பற்றிய விவரம், விதி சொல்லி விட இனி மதுரா, என்ன முடிவு எடுப்பாள்?
இங்கு தவம் இருக்கும் இரு உயிர்கள் விஜய், சூர்யா –
இருவரின் காதல் மதுராவின் மேல்.
இந்த இருவரில், எவர் காதல் கை சேரும்?
இங்குத் தவத்திற்கான பலன் அவர்களைச் சென்றடையுமா?
விடையில்லா கேள்விகள்!
பதில் இல்லா வினாக்கள்!
ஊர்வசி வீட்டில், பூரணியின் காதலை கார்த்திக்குடன், சேர்க்க வந்த மதுராவிற்கு, சோனாத் தன்னை கட்டம் கட்டும் காரணம், விஜய் தன் மீது கொண்டுள்ள காதலால் தான் என்பது தெரியவர, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல், பலதையும் யோசித்து படிக்கட்டிலேயே அமர்ந்திருந்தாள்.
மதுரா, எந்த நிலையில் இருந்தாளோ, அதை விட பல மடங்கு விஜய், துடித்து கொண்டிருப்பதை, விஜய் முகம் காட்டிக் கொடுக்க, கீழே விஜய்யும், அவனுக்கு சற்று அருகில், மதுராவும், மனதால் துடித்து கொண்டிருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய்யை பார்க்கும் போதெல்லாம், ‘ஏதோ சூழலில் சிக்குவது’ போன்ற உணர்வும், ‘புரிந்திருக்க வேண்டிய ஒன்று, புரிபடாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருப்பதாய் தோன்றும்’ அதே எண்ணம், மீண்டும் மதுராவிற்கு எழ, ‘அடுத்து என்ன செய்வது’ என்று யோசித்து தன்னை மீட்டு கொண்டாள்.
அதற்குள் விஜய்யும், தன்னை மீட்டுக் கொண்டிருக்க, மீண்டும் உணர்ச்சிகள் எதையும் காட்டாதப் போலி முகமூடியின் பின் ஒளிந்து கொண்டவனாய், சேதுவைத் தேடி பெருமூச்சுடன் உள்ளே சென்றான்.
பாவானியிடம் பேசிவிட்டு, சில நண்பர்கள் அழைத்திருக்க, அவர்களிடமும் பேசி விட்டு, வெகுசாவதானமாக வந்த கார்த்திக், மதுரா சிலைபோல், படிக்கட்டில் அமர்ந்து யோசித்து கொண்டிருப்பதை கண்டான்.
‘அய்யோ!… இவ யோசிக்க ஆரம்பித்தாலே, அது யாருக்காவது ஆப்பாகத் தானே முடியும்!… எதுக்கு, இப்போ இந்தக் காட்ஜில்லா இப்படி யோசிக்குது?…’ என்று மனதிற்குள் மிரண்டவன்,
“மதுரா!… மதுரா!…” என்று ஒன்றுக்கு ரெண்டு முறை, கூப்பிடப் பிறகு அவளின் மௌனம் தொடர, மதுராவின் தோள் தொட்டு அசைத்து அவளை மீட்டான்.
“என்னடீ!… எந்தக் கோட்டையைப் பிடிக்க, இந்த யோசனை?…” என்றான் வியப்புடன்.
“ஒரு கோட்டையைப் பிடிப்பதா, இல்லை விடுவிப்பதா என்று யோசித்து கொண்டிருந்தேன்…” என்றாள் மதுரா, தன்னை மீட்டுக் கொண்டவளாய்.
“தாயே!…
அங்காள பரமேஸ்வரி!…
நீ சாதாரணமாய் பேசினாலே, எவனுக்கும் புரியாது. அதுலேயே, ஓராயிரம் அர்த்தம் இருக்கும்… உன் அப்செர்வேசன் அப்படிப் பட்டது.
விவேக் மாதிரி, ரைட் இண்டிகேட்டர் போட்டு, லெப்ட்டில் கைக்காட்டி, நேரா போய் எல்லோரையும் குழப்பி விடுவே!…
இதுல, இது மாதிரி சங்கேதப் பாஷையில் எல்லாம் பேசினே!… மீ ரொம்ப பாவம்!… உன் அளவுக்கு எல்லாம், என் மூளை வேலை செய்யாது….” என்றான் கார்த்திக், முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு.
“ஒன்றும் இல்லைடா…. உன் மாமனார், மாமியார், பெரிய மாமியார், மச்சான் வந்திருக்கார். அவங்களை எப்படி சமாளிப்பது என்று யோசிச்சுட்டு இருக்கேன்.” என்றாள் மதுரா.
“என் மாமனார் என்றால் பூரணி அப்பா, அம்மா, பாட்டி, கருணா சாரையா சொல்றே!…” என்று மிரண்டான் கார்த்திக்.
“எதுக்கு, இப்போ இப்படி பம்மரே?” என்றாள் மதுரா.
“இல்லைடீ… இன்னும் நான் பூரணி கிட்டே, என் லவ்வையே சொல்லலை…. அதற்குள், இவங்க என்ட்ரி கொடுத்து இருக்காங்களே!… அதான்.” என்றான் கார்த்திக்.
“சுபஸ்ய சீக்கிரம் என்று கேள்விப்பட்டது இல்லையா!…. வாடா பார்த்துக்கலாம். திருமணப் பெண்ணைத் தூக்குவது எல்லாம் அந்தக் காலம்…. இந்தக் காலம், ‘மாமனார் குடும்பத்தையே தூக்குவது’ தான்…
யாம் இருக்க பயமேன்!…” என்றாள் மதுரா.
“நீ இருப்பது தான்டீ பயமே!…. எதையாவது ஒண்ணு செய்து வைப்பியே!….” என்றான் கார்த்திக்.
“சும்மா புலம்பாம வாடா… ஹீரோயினை எவ்வளவு நேரம் தான், காக்க வைக்கிறது!…” என்று கார்த்திக்கை, இழுக்காதக் குறையாய், கையைப் பிடித்து இழுத்து சென்றாள் மதுரா.
‘என் இனிய தமிழ் மக்களே!…’ என்று காமெராவை, அப்படியே ரெண்டாம் மாடிக்கு ஷிப்ட் செய்து, அங்கு மதுராவால், ‘கார்த்திக் கதைக்கு ஹீரோயின்’ என்று அழைக்கப்பட்ட பூரணி, ‘என்ன செய்து கொண்டிருக்கிறாள்’ என்று இவர்கள் ஏறி வருவதற்குள் பார்த்து விடுவோம்.
பிடித்துக் கொண்டு இருந்தத் தூணை விட்டுட்டு, அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, குலுங்கிக் குலுங்கி அழுதுக் கொண்டு இருந்தாள் பூரணி.
படி ஏறி வந்த கார்த்திக்கும், மதுராவும் கண்டது பூரணியின், இந்த அழுகையைதத் தான்.
பூரணியின் கண்ணீரைக் கண்ட கார்த்திக், முழுதும் பிளாட் ஆகி விட, மதுராவுக்கு பக்கம் பக்கமாக வசனம் பேசும் வேலை மிச்சமானது.
பூரணியிடம் ஓட முயன்றவனை தடுத்து நிறுத்திய மதுரா, “இருப்பா!… நான் போய்ப் பேசி, முதலில் குழப்பத்தைத் தீர்க்கிறேன்… கூப்பிடும் போது நீ வா!…” என்று பால்கனிக்கு சென்றவள் சத்தமாகத் தொண்டையை கணைத்தாள்.
யாரோ வந்து இருக்கும் சத்தம் கேட்க, தன் கண்களைத் துடைத்துக் கொண்ட பூரணி, ஒரு புன்னகை கொடுத்து விட்டு, வேறு அறைக்குச் செல்ல முயன்றாள்.
“ஹலோ!… கவிதாயினி!…. நில்லுங்க மேடம்!….. யெல்லோ சுடிதார்!… உங்களைத் தான்…. கொஞ்சம் நில்லுங்கப்பா…” என்றாள் மதுரா.
“என்னையா கூப்பிடுறீங்க?…” என்றாள் பூரணி.
“ஆமாம் மிஸ். கவிதாயினி!… உங்களையேத் தான்…” என்றாள் மதுரா.
மதுராவைக் கண்டு, ஒரு கணம் திகைத்தவள், ‘அப்பா!… என்ன அழகுடா, சாமி!…’ என்று பூரணி நினைக்க,
‘எப்பா!… பார்பி பொம்மை மாதிரி, எவ்வளவூ கியூட்டா இருக்கா!..
Chubby பார்பி!…
செம்மையான ரசகுல்லா!… மச்சம்டா கார்த்தி உனக்கு…’ என்று நினைத்தாள் மதுரா.
பூரணி, அசப்பில் பார்க்க அப்படியே, ‘நடிகை ஹன்சிகா மோத்வானி’ மாதிரி இருந்தாள்.
முகத்தில் ஒரு அமைதி, குழந்தைத்தனம்.
பார்ப்பவரை நிச்சயம் திரும்பிப் பார்க்கத் தூண்டும், அழகுப் பதுமை பூரணி.
ஆனால், அதைப் பற்றிய கர்வம் துளிக் கூட இல்லாதவள்.
இரு பெண்களும், ஒருவரின் அழகை கண்டு, மற்றொருவர் பிரமித்து நின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
“மேடம் !… நான் கவிதாயினி இல்லை… என் பெயர் அன்னபூரணி. நீங்க யாரோ என்று நினைத்து என்னிடம் பேசுறீங்க…” என்றாள் பூரணி.
“எனக்குக் கன்போர்மா தெரியும். நீங்கத் தான் கவிதாயினி என்று… கவிதாயினி என்றால் பேரு என்று நினைத்துடீங்களா!… கவிதை எழுதுறவங்களையும், ‘கவிதாயினி’ என்று கூப்பிடலாம்.” என்றாள் மதுரா.
“ஐயோ!… எனக்குக் கவிதை எல்லாம் எழுதத் தெரியாது…. படம் வரைவேன். அவ்வளவுத் தானுங்க… கவிதை எல்லாம் படிக்க வேண்டும் என்றால் தெரியும்…” என்றாள் பூரணி.
“ஐயோ!… உங்களுக்குக் கவிதை எழுதத் தெரியாதா!… அப்போ இந்தக் கவிதை, நீங்க எழுதலையா?… படிக்கிறேன் கேளுங்க…. செமையா இருக்கு.
‘யாருமில்லை….
யாருமில்லை…
என் மரணத்திற்கு,
யாரும் காரணமில்லை!…
மூளை இல்லை….
மூளை இல்லை ….
எனக்குச் சுத்தமா மூளை என்பதே இல்லை.
பெத்தவங்களை தவிக்க விட்டுப் போக,
நினைக்கும் என்னை
நாலு அறை விட்டாலும் தவறில்லை…’
செய்யப் போறேன்…
செய்யப் போறேன் …..
தற்கொலை தான் செய்துட்டு
சாகப் போறேன்…’ மூன்று புள்ளி, ஒரு ஆச்சரியக்குறி!
அடடா!… அடடா!… பிரமாதம்!… கவிதை!… கவிதை!…” என்ற மதுராவின் பேச்சைக் கேட்ட, பூரணி திகைத்துப் போனாள்.
உள்ளே வந்த பெண்ணின் கையில் இருக்கும் லெட்டர், தான் எழுதிய மரணவாக்கு மூலம் என்பதையும், அதைப் படித்துத் தான், ‘கவிதை என்று அந்தப் பெண் கிண்டல் செய்து கொண்டிருக்கிறாள் என்பது புரிய, பூரணி அடுத்து என்ன சொல்வது, பேசுவது என்று புரியாமல், பூரணி பேந்தப் பேந்த விழித்தாள் .
பூரணி அருகே வந்த மதுரா, ஓங்கி ஒரு அறை விட்டாள்.
“அப்படி என்னடீ காதல்!… பெத்தவங்களை விட, நாலு வருடம் முன் பார்த்தவன் உசத்தி ஆகிட்டான்?… ஏற்கனவே உன் அக்காவால், மனசு உடைந்து போய் இருக்கிறவங்களுக்கு, ஒரே நிம்மதி நீ மட்டும் தான்.
நீ செத்து போனா, அவங்க நிலைமை என்ன என்று யோசித்தாயாடீ!…
சோனாவால், செத்துச் செத்து பிழைக்கறவங்க, உன்னால் ஒரேடியா போய்ச் சேர்ந்து இருப்பாங்க… சரி, இதற்குப் பதில் சொல்லு.
லவ் பண்றியே, அதை அந்தக் கார்த்திக்கிடம் முதலில் சொன்னாயா?… இல்லை தானே!…
சரி, வீட்டில் உள்ளவர்களிடமாவது சொன்னாயா!…
இல்லை, அந்தக் கார்த்திக் பேமிலி, அவன் கட்டிக்கப் போறவ கிட்டேயாவது சொன்னாயா?
நீ, உன் வாயைத் திறந்து சொல்லாமல், மத்தவங்களுக்கு உன் மனதில் இருப்பது எப்படிடீ புரியும்?
பாவி!..
தற்கொலை செய்துக்கறவங்க, நிம்மதியா போய்ச் சேர்ந்துடறீங்க… ஆனா, பெத்தவங்க, உடன் பிறப்புகள் , நண்பர்களுக்கு ஏண்டீ ஆயுள் தண்டனைக் கொடுக்கறீங்க!.
உன்னைப் பெத்த ஒரே காரணத்திற்காக, வாழ்நாள் முழுதும் உன் பெற்றோர் சிலுவை சுமக்க வேண்டுமா!…
மத்தவங்களை உயிரோடு கொன்னுட்டு, அப்படி என்னடீ காதல் வேண்டி இருக்கு உனக்கு?
காதலிக்க தெரிந்த உனக்கு, அதற்காகப் போராடும் தைரியம் இல்லாதவ எல்லாம் எதுக்குடீ காதலிக்குறீங்க?
இந்த நாட்டில், ‘திருமணம் ஆகாத, ஒரு பெண்ணின் தற்கொலை’ என்பது எப்படியெல்லாம் விமர்சிக்கப்படும் என்று தெரியாதச் சின்னக் குழந்தையா நீ!…
‘எவனையோ நம்பி ஏமாந்துடுச்சுன்னு’ வாய் கூசாம உன் பெண்மையை விமர்சிப்பார்கள்.
செத்தும் கூட, உன்னை உயிரோடு சாகடிப்பார்கள்…
அணுஅணுவாய் உன் குடும்பம், மற்றவர்கள் வாய்க்கு மெல்லும் அவல் ஆகிவிடும்.” என்று பொரிந்தவள், மேலும் ஒரு அறை பூரணிக்கு விட்டாள்.
கன்னத்தைப் பிடித்து கொண்டு திகைத்து நின்றாள் பூரணி.
“யா …யாருக்கா நீங்க?…” என்றாள் திக்கித் திணறி .
“ஹ்ம்ம்!… உன் பாட்டி!… கேக்குறா பார் கேள்வியை, நீ எந்த லூசை நினைத்துத் தற்கொலை வரை, போக முடிவு செய்தியோ, அந்த லூசுக்கும், எனக்கும் தான் மேரேஜ் செய்ய, எங்க வீட்டுப் பெருசுங்க முடிவு செய்து இருக்காங்க.
என்ன புரியலையா?…
என் பெயர் மதுராக்ஷி!…
உன் சித்தப்பா சங்கரன், குன்னூரில் இருக்காரே, அவரின் மகள்.
உனக்கு அக்கா முறை!
நீ லவ் செய்யும் கார்த்திக்கும், எனக்கும் தான் திருமணம் என்று மேடம் சாக முடிவு எடுத்து இருக்கிறீங்க.
உங்கச் சக்காளத்தி!….” என்றாள் மதுரா.
“நீங்களா மதுரா!…” என்று திகைத்துப் போனாள் பூரணி.
‘இவங்கத் தான், விஜய் மாமா, லவ் செய்த மதுராவா!… இவங்களை தான் சோனா, டார்ச்சர் செய்யறாளா!.. இப்போத் தான் புரியுது இவங்களுக்கு, கார்த்திக்கும் ஏன் சீக்கரம் மேரேஜ் செய்யணும் என்று ஏன் சொல்லறாங்க என்று… இவ்வளவு அழகா இருந்தா, அந்தச் சோனாப் பிசாசு, எப்படி சும்மா இருக்கும்!’ என்று தனக்குள் பேசிக் கொண்டாள் பூரணி .
“ஹலோ!… ஹலோ!…
எர்த் காலிங் பூரணி!…
எர்த் காலிங் பூரணி!…
வானத்துல பறக்கறத விட்டுட்டு பூமிக்கு வா செல்லம்!…
இங்க பாரு, எனக்குத் திருமணம் நடக்கணும்… நீ செத்தக் கில்ட்டிப் பீலிங் எல்லாம் வேண்டாம்… சோ, உனக்கு ஏற்கனவே மாப்பிளை பார்த்துட்டேன்.
என் மேரேஜுக்கு முன்னாடி, உனக்கு மேரேஜ் ஆகணும்.
பையன் ரொம்ப நல்லவன்.
அக்மார்க் அம்மாஞ்சி.
உன்னைப் பார்த்தவுடன் பிளாட் ஆகிட்டான்.
‘கட்டினால் உன்னைத் தான் கட்டுவேன் என்று ஒத்தைக் காலில்’ நிற்கிறான் என்றால் பார்த்துக் கொள்ளேன்.
உங்க அப்பா, அம்மா கிட்டே பேசித் தேதி முடிவு செய்யப் போறேன்.” என்றாள் மதுரா.
“அய்யோ!… வேண்டாம்… வேண்டாம்…. ப்ளீஸ் மதுரா!… வேண்டாம். என்னால் வேறு யாரையும் மேரேஜ் செய்ய முடியாது. நான் ப்ரோமிஸ் செய்யறேன்… நான் தற்கொலை செய்துக்க மாட்டேன்… சத்தியமா… ப்ளீஸ்!… எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்….” என்று கை எடுத்துக் கும்பிட்டவளின் கண்களில் அருவியைக் கண்ணீர் கொட்டியது.
“அந்த மாப்பிளை, நான் என்றால் கூட வேண்டாமா?” என்றது அவளுக்குப் பின்னால் இருந்து ஒரு குரல் .
அந்தக் குரல், பூரணியின் உயிர் வரை ஊடுருவ, கேட்டதை நம்ப முடியாமல் திகைத்துத் திரும்பியவள், அவள் இதய நாயகனே முன் நிற்பதைக் கண்ட உடன், மயக்கம் போட்டு விழுந்தாள்.
அவள் கீழே விழும் முன், அவளைத் தாங்கிப் பிடித்தான் கார்த்திக்.
“ஏன்டா!… ‘அழகுல மயங்குறது என்று சொல்வார்களே!…’ அது இது தானா!… உன் மூஞ்சியை கிட்டேக் காட்டாதே என்று சொன்னேன் இல்லை!… பாரு…. பச்ச புள்ள மயங்கிருச்சு…” என்றவளை முறைத்தக் கார்த்திக், பூரணியை அங்கு இருந்த சோபாவில் படுக்க வைத்து, மயக்கம் தெளிய முகத்தில் நீர் தெளித்தான் .
தண்ணீர் பட்டதும் பதறி எழுந்து அமர்ந்தாள் பூரணி.
கார்த்திக்கையும், மதுராவையும் மாறி, மாறிப் பார்த்து விழித்துக் கொண்டு இருந்தாள் பூரணி.
“பூரணி செல்லம்!… ஒரு டவுட் கண்ணு …. உனக்கு விங்ஸ் வைச்சுட்டு, நாலு தேவதைங்க சுத்தி நின்று பாட்டுப் பாடி, டான்ஸ் ஆடினா மாதிரி ஏதாவது தெரிஞ்சுதா!….
இல்லை, ‘மொழி’ படத்தில் ப்ரித்விராஜ் சொல்வது போல் ‘லைட் எரிஞ்சி, மணி அடிச்சுதா!… இந்த சிசுவேஷனுக்கு அது செட் ஆகுமா?… இல்லை ‘த்தம்தானா தந்தன தான்’ செட் ஆகுமா?
அதெல்லாம், உங்க ரெண்டு மைதா மாவுக்கு செட் ஆகாது… இந்த சாங் தான் சரி…
‘கானாங்குருவி தானா மயங்கி
தள்ளாடி விழுந்துருச்சு
சாயம் போல சேலையை போல
குட்டெல்லாம் வெளுத்துடுச்சு
ஹே!…பொண்ண பார்த்து
ஊத்துது வேர்த்து
செவந்துடுச்சு
முகம் செவந்துடுச்சு
பிதுங்கிடிச்சு
முழி பிதுங்கிடுச்சு!...’ என்று தன் மொபைலில், யு டூப் ஆன் செய்து, விசுவின், ‘வேடிக்கை என் வாடிக்கை’ படத்தில் வரும் இந்த பாடலை, மதுரா ஓட விட, மதுராவின் தலையில், நறுக்கென்று கொட்டினான் கார்த்திக்.
https://youtu.be/3eEosgIfHQ4?si=4sXILtj7CD8lIyjL
“டேய் எருமை!… ஏன்டா குட்டினே!… குரங்கே, குட்டிசாத்தானே!…” என்றாள் மதுரா .
“இப்போ, இந்த சிசுவேஷனுக்கு சாங், ரொம்ப முக்கியம் பாரு. அதுவும் ஒரு நல்ல பாட்டைப் போட்டா கூடப் பரவாயில்லை… கிண்டல், நக்கல் அடித்து, ஒரு பாட்டுப் போட்டுக் கலாய்க்கறீங்களா!…” என்றான் கடுப்புடன் .
“ச்சே!… ச்சே!.. உனக்கு எல்லாம் போய்ச் சாங் டெடிகேட் செய்ய நினைத்தேன் பாரு, ஏய் பூரணி, ‘உனக்கு இந்தப் பெட்ரோமாஸ் லைட்டே தான்’ வேணுமா?
நல்லா யோசிச்சுக்கோ… உனக்குச் சூப்பர் மாப்பிளை, நான் கொண்டு வரேன்… இந்தப் பல்லி வாயன், மங்கூஸ் தலையன் வேண்டாம்.” என்றாள் மதுரா .
“ம… மதுரா!… மதுரா!.. நீங்க இப்படி பேசுவது நல்லா இல்லைங்க… நானும் ஒரு பெண் தான்… இவரைக் காதலிக்கறவ… என்னை வைத்து, என் பீலிங்ஸ் வைத்து விளையாடாதீங்க. ப்ளீஸ்!… அவரைக் கூட்டிட்டு கிளம்புங்கோ…” என்றாள் பூரணி அழுகையுடன்





