36
மதுராவைத் தவிர, மற்ற அனைவரும் திகைப்பின் உச்சத்தில் இருந்தனர்.
உடனே சமாளித்து கொண்ட விஜய், வெகுவேகமாகக் கோபத்துடன் பால்கனிக்கு செல்ல முயல, அவனைக் கைப்பிடித்து, இழுத்து நிறுத்தினாள் மதுரா.
கோபத்தோடு, மதுராவை ஏறிட்டவனின் கோபம், அவள் பார்வையின் தீட்சண்யத்தில் குறைந்தது .
“அங்கு இருப்பது கார்த்திக், பூரணி!… நீ உன், ‘அண்ணன் ரகு’ என்று சொன்னே!..” என்றான் கோபத்துடன்.
“அங்கு இருப்பது கார்த்திக், பூரணி என்று கண் நல்ல இருக்கும் எல்லோருக்கும் தெரியும் விஜய். எனக்குக் கண் நல்லா இருக்கு. சோ, அது கார்த்திக், பூரணி என்று தெரியும்.
நான், ‘என் அண்ணன்’ என்று தான் சொன்னேன்… அது, ‘ரகு அண்ணன்’ என்று நான் சொல்லவேயில்லையே!..
கார்த்தியும் எனக்கு அண்ணன் தான்…” என்றாள் மதுரா.
“லூசு மாதிரி உளறாதே மது!… உனக்கும், கார்த்திக்கும் மேரேஜ் செய்யலாம்ன்னு முடிவு செய்து இருக்கோம்.” என்றான் விஜய், கோபத்தின் உச்சியிலிருந்து.
“கரெக்ட்!… நீங்க எல்லோரும் தான், முடிவு செய்து இருக்கீங்க. நீங்க ஜோடி சேர்த்து, கட்டிக்க வைக்க இருந்த எங்க விருப்பம், அதில் இருக்கான்னு பேருக்காவது யாரவது கேட்டிங்களா?
சின்ன வயது முதல், எனக்குக் கார்த்திக்கும், ரகுவும் வேறு இல்லை. அவனும் அது மாதிரி தான். என்னைத் தங்கையாகத் தான் பார்க்கிறான்.
அதான், அவன் பெற்றோர் முதல் முறை திருமணம் பற்றிப் பேச வந்த போது, அதைத் தடுக்க தன் கையை உடைத்து கொண்டான்.
நீங்க முடிவு செய்யலாம். ஆனா, அவனைப் பார்த்தா, ‘எனக்கு அண்ணன் என்ற எண்ணத்தைத் தவிர’ வேறு எதுவும் வரவில்லை விஜய்.
நட்பு வேண்டும் என்றால் திருமணத்தில் முடியலாம். அண்ணன், தங்கை உறவு, அப்படி மாறினால் கேவலம்.
தவிர பூரணியின் உயிரும் இதில் இருக்கு. அதை மறந்து விடாதீர்கள்.” என்றாள் மதுரா .
“எங்க வீட்டுப் பொண்ணுக்கு, என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும். இதில் நீ தலை இடாதே!… நகர்ந்து போ…” என்றான் விஜய்.
உள்ளே சென்ற முயன்றவனின் கையை, மீண்டும் பிடித்து இழுத்து, தடுத்து நிறுத்தினாள் மதுரா.
“என்ன இழவுத் தெரியும் உனக்கு விஜய்?…” என்ற மதுராவின் கோபத்தில், ஒரு கணம் திகைத்து நின்றான் விஜய்.
“ரொம்ப தெரிந்தது போல, நீ பேசாதே!.. இன்னைக்கு, நாங்க வரவில்லை என்றால், இன்று மாலைக்குள், அவ தற்கொலை செய்து இருப்பா. அது தெரியுமா உனக்கு?
என்ன, திகைத்துப் போய்ப் பார்க்கறீங்க!… இதோ, அவள் எழுதிய லெட்டர்… படிச்சு பார்த்துச் சந்தோசப்படு.” என்று பூரணியின் லெட்டரை, விஜய் கையில் கொடுத்தாள்.
அதைப் படித்துப் பார்த்த அனைவரும் கதிக் கலங்கி நின்றனர்.
“என்ன, ‘என்னவோ உங்களுக்கு எல்லாம் தெரியும்’ என்று குதிச்சே!… இப்போ என்ன!… உங்க வீட்டுப் பெண்ணிற்கு, எதைச் செய்யணும்ன்னு தெரியும் என்று சொன்னீங்க!… எதைச் செய்யப் போறீங்க!.. .ஈமக் காரியத்தையா?
இதோ நிற்கிறாங்களே, அவ அப்பா, அம்மா, பாட்டி இவங்களுக்குக் கூட, ‘அவளுக்கு எது தேவை, தேவை இல்லை’ என்று தெரியாது. ஏதோ, ஒரு பிசாசிற்கு பயந்து, இந்தப் பாசக்காரப் பெண்ணை, ஹாஸ்டலில் போட்டீங்களே!… இது தான், உங்க வீட்டுப் பெண்ணுக்கு நீங்கச் செய்யும் நல்லதா?
சரி, அப்படி தான் போடீங்க. பெரியம்மா, பாட்டி மாறி, மாறித் தனி வீடு, எடுத்துக் கூட இருந்து இருக்கலாம் தானே!… இன்னொரு வீடு விலைக்கு வாங்கக் கூட முடியாத அளவுக்கா நீங்க ஏழையா இருக்கீங்க!
அது என்ன அந்த, ‘கஜா போர்ட்’ பெரிய, ‘சொர்க்கப்புரின்னு’ அதை விட்டு வராம, இந்தப் பச்சை மண்ணை, கண் காணாதத் தூரத்தில் விட்டிங்க!..
எல்லோரும் இருந்தும், ‘தனக்குன்னு யாரும் இல்லை. நான் கிட்டத்தட்ட அனாதை. ’ என்று பல முறை ஊர்வசியிடம் புலம்பி இருக்கா.
அது தெரியுமா உங்களுக்கு?…
ஒரு அனாதைக் கூட, யாரும் இல்லாமல் தான் அனாதையாகி இருப்பாங்க. ஆனா, நீங்க பொத்திப் பாதுகாக்க வேண்டியவளை, பாசத்தில் குளிப்பாட்ட வேண்டியளை, ‘வேண்டாதப் பொருள் போல, தூக்கி அடிச்சு’ இருக்கீங்க. அதுவும், ஒரு பிசாசுக்காக!…” என்று பொரிந்து தள்ளினாள்.
கண் கலங்கி நின்றார்கள் அங்கிருந்த மற்றவர்கள்.
“மதுரமா!… வீடுன்னு எடுத்துத் தங்கினா, அங்கேயும் சோனா வந்து தங்கி, இந்தப் பெண்ணைப்படுத்தி எடுப்பான்னு தான், ஹாஸ்டலில் போட்டோம்.
எனக்குப் பிறந்தது ரெண்டு. அதில் ஒன்று தான், ‘எனக்குன்னு இல்லாம’ போச்சு.
மீதம் இருக்கும் இவ, ஒருத்தியாவது கடைசி வரை, எங்கக் கூட இருக்கனும் என்று தான் மதுரா, பூரணியை ஹாஸ்டலில் விட்டோம்.
சந்தோசமா இல்ல. வேறு வழி இல்லாம தான்.
சோனாவால் ஏற்கனவே இரு பெண்களில் ஒருத்தி இறந்துட்டா. இன்னொருத்தி பைத்தியக்கார ஹாஸ்பிடலில் இருக்கா. எங்கப் பூரணி, கண்ணுக்கு அழகா, லட்சணமா, துலக்கி வச்ச குத்து விளக்கு கணக்கா இருக்கா.
பொறாமை பிடிச்ச அந்த நாயி, ராட்சசி, இந்தப் பொண்ணு அழகைப் பார்த்து ஏதாவது செஞ்சி வெக்கக் கூடத் தயங்க மாட்டா என்ற பயம். அந்த நிலைமை, எங்க பூரணிக்கு வர வேண்டாம் என்று தான்.
அதுங்க அரக்க ஜென்மம். தானும் அன்பாய் இருக்காது. மத்தவங்களையும், நம்மிடையே அன்பா இருக்க விடாதுங்க.
நாங்க இருப்பது புதைக் குழி!. அவங்களா விடுதலை, கொடுத்தாத் தான் உண்டு.
நாங்க தான் மாட்டிட்டு முழிக்கறோம். இந்தப் புள்ளையாவது அந்தக் கொடுமை இல்லாமல், இருக்கட்டும் என்று தான் அப்படி விட்டோம். பாசம் இல்லாம இல்லை… பாசம் இருக்கறதுனால தான்….” என்ற கனகா, வாய் விட்டுக் கதறி அழுதார்.
அங்கு இருந்த அனைவரின், கண்களும் கலங்கித் தான் இருந்தன.
“உனக்குத் தெரியுமா மதுரா, வீடு முழுக்க அவங்க மூன்று பேர் போட்டோவா இருக்கும். ஆனா, எங்க பூரணி, போட்டோ ஒன்றுக் கூட, எங்க கிட்டே இல்லை. எடுப்பதும் இல்லை.
இவ போட்டோவைப் பார்த்துட்டு, இவ அழகைப் பார்த்துட்டு, இவளை ஏதாவது செய்து விடப் போறா என்ற பயம். எங்களுக்கு மட்டும் வேண்டுதலா, இல்லை ஆசையாமா!…
இந்தக் குழந்தைப் பெண்ணின் அருகே இருப்பதை விட்டு, அவங்கக் கூட இருக்கணும்னு?… எங்களுக்கு வேறு வழி இல்லை…
‘பூரணி என்ற பெண் அந்தக் குடும்பத்தில் இல்லை’ என்ற மாயை உருவாக்கி வைத்து இருக்கிறோம்.” என்றார் மரகதம், குரல் தழுத் தழுக்க.
“போன வருடம் நாங்க எல்லோரும், ஐ மீன் அப்பா, அம்மா, பாட்டி, பூரணி, எல்லோரும் டூர் போய் இருந்தோம் மது. நாங்க, இப்படி டூர் போயிருந்த சமயம் தான், சோனா பாசப் பறவையைப் பறக்க விட்டு, உங்க வீட்டுக்குள் நுழைந்தது. அது என்ன ஆச்சுன்னு உனக்கே தெரியும்.
நல்ல வேளை, பூரணியை ஹாஸ்டலில் விட்டு விட்டுத் தான் அங்கு, அந்த நரகத்திற்கு திரும்பினோம்.
உள்ளே கூட, நாங்க நுழையலை. அதற்குள் சோனா, ‘என்ன ஹனிமூன் எல்லாம் என் தங்கையோடு முடிந்ததா?’ என்று நடு ஹாலில் நிற்க வைத்துக் கேட்டா.
அங்கேயே நான் செத்துட்டேன்.
எங்களைச் சோனா, வார்த்தைகளால் சாகடிப்பது புதிது இல்லை. பழகிப் போச்சு என்பதை விட, மறத்து போச்சு.
அது விஷ நாகம்!
விஷம் கக்கிட்டே தான் இருக்கும்.
என் வாய் மூலமாய் கேட்ட உனக்கே, இப்படி பதறுது என்றால், இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் பூரணி தாங்குவாளா? சொல்லு!…
அவ என் தங்கை. எனக்கு ரூபிணியும், பூரணியும் வேறு இல்லை மது. ரெண்டு பேருமே எனக்கு மக மாதிரி. ஆனா, அது எல்லாம், சோனாவிற்கு புரியுமா சொல்லு!….
எனக்கு இவளை ரொம்ப பிடிக்கும். வளர்ந்தக் குழந்தை இவ. ஆனா, இவர்கள் போய் பார்க்கும் போது, அந்த டூர்க்கு பிறகு, அப்படி ஒரு வார்த்தை, அந்த சோனா சொன்னதுக்குப் பிறகு, நான் இவளை பார்க்க போவதே இல்லை.
இந்தக் கொடுமை எல்லாம் அவ பட வேண்டாம் என்று தான், அவளாவது நிம்மதியா இருக்கட்டும்னு தான் இவங்க ஹாஸ்டலில் விட்டார்கள்.” என்றான் விஜய், கண்கள் கலங்கி .
“ஆமாம் மதுரா!… இவங்க எல்லோரும் சொல்வது ரொம்ப கொஞ்சம் தான். என் மக பாசம் இல்லாம வேண்டும் என்றால் வளர்ந்து இருக்கலாம்.
ஆனா, அவ பாதுகாப்பா, இந்தக் கேவலங்களின் நிழல் படாம, தினம் செத்துச் செத்து பிழைக்காமல் இருக்கா. அதுவே போதும்.
பாசத்தைக் கூட, வெளியேக் காட்ட முடியாத துரதிஷ்டசாலிங்க நாங்க.
இதோ, இவன் மகனாய் இருக்கான். அதனால், பைத்தியம் பிடிக்காமல், உயிரோடு இருக்கோம்.
‘வாழ்க்கையை வாழ்கிறோமா’ என்றால் நடைப்பிணமாக இருப்பது தான் வாழ்க்கை என்றால், இந்த வாழ்க்கை எங்க பூரணிக்கு வேண்டாம். அவ்வளவுத் தான்.” என்றார் சேது .
“அம்மா!….” என்று அழுதப் படி, கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து, அவர்களை அணைத்து கொண்டு கதறி அழுதாள் பூரணி.
‘தான் அநாதை இல்லை’ அந்த எண்ணமே, அவளுக்கு மறைய வேண்டும் என்று தான் மதுரா, கார்த்திக்கோடு மேல் ஏறி வரும் போதே பிளான் செய்து விட்டாள்.
‘இரு கோடுகள் தத்துவம்’ தான்.
தன்னுடைய பிரச்சனைப் பெரிது என்று வருந்திக் கொண்டு இருப்பவளுக்கு, அவள் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் பூதாகரத்தை விளக்கி விட, பூரணி தனக்காகத் தான், அவர்கள் விலகி இருக்கிறார்கள் என்ற உண்மை உணர்த்தப்பட்டது.
கார்த்திக்குக்கு சிக்னல் தரத் தான், இவர்களை அழைத்துத் திரைச் சீலையை மதுரா விலக்கியது.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ ஆக, இவர்களுக்குக் கார்த்திக் பூரணியை காட்டியது போல் ஆனது.
கார்த்திக்குக்கும் சிக்னல் கொடுத்தது போல் ஆனது.
இவளின் எண்ணப்படி திரைச் சீலை மூடப்பட்ட உடன், கார்த்திக் பூரணியை அழைத்துக் கொண்டு, அறைக்கு உள்ளே வந்தான்.
கனமானத் திரைசீலை, இவர்களை மறைத்து விட, அங்கு நடந்த சம்பாஷணைகளை பூரணித் தன் காதால் கேட்டு, அது வரை, ‘தனக்கு என்று யாருமே இல்லை.’ என்ற எண்ணத்தை உடைத்து வெளி வந்தாள்.
“அம்மா!… தாயே!… நீ கிடைக்கும் பாலில், எல்லாம் சிக்ஸர் அடிக்கறே!.. உன்னிடம் மாட்டப் போவது, எந்த அப்பாவி ஜீவன் என்று தெரியலையே!…. யாராய் இருந்தாலும், பாவம் அவங்க.” என்றான் கார்த்திக் மதுராவின் காதருகே.
முகம் நிறைய புன்னகையுடன், அங்கே நடக்கும் பாசப் போராட்டத்தை, அன்பின் பிரவாகத்தை பார்த்துக் கொண்டு நின்றாள்.
‘தனக்கு யாருமே இல்லை’ என்று இருக்கும் வரை, சொர்க்கமே கிடைத்தாலும், மனம் என்பது தன் சத்தத்தை நிறுத்தப் போவதில்லை.
வெகு நேரம் ஆனது பாட்டி, மகள், பேத்தியின் அழுகை நிற்க விஜய்யும், சேதுவும் கூடக் கண்ணீர் வழியத் தான் நின்றனர் .
“சோ, பூரணி மேடம்!… இப்போ புரிந்ததா உங்க அப்பா, அம்மா, பாட்டி, உங்கக் கருணா மாமா, எல்லோரும், உங்க மேல பாசமா தான் இருக்காங்க. உங்களை, ‘உங்க எருமை சகோதரி!’, சோனா தேவியாரிடமிருந்து காக்கவே, உங்களை ஹோஸ்டலில் விட்டது.
பாசம் இல்லாம இல்லை.
என்னையும் இவங்க எல்லோரும், ‘வேலையை விட்டுப் போப் போ’ என்று சொல்லாம, இருந்ததே இல்லை. சோனாக் கிட்டே போனேன். தன் வேலையைக் காட்டிட்டா.
ஒரு வருசமாய், உங்கக் கருணா மாமா, எனக்குப் பாடிகார்ட் வேலை பார்த்துட்டு தான் இருக்கார்.
அதையும் மீறி, ரெண்டு நாளுக்கு முன், ‘ஒரு பொம்பளைப் பொறுக்கிச் சுமன்’ என்பவனிடம் வேறு அந்தப் பிசாசு என்னை வசமா மாட்டி விட்டு இருக்கா. சந்தோசப்பட்டுகோ!… இந்தக் கொடுமை எல்லாம் உனக்கு நேரவில்லை என்று.
இன்னொரு விஷயம், உனக்கும் கார்த்திக்கும் மேரேஜ் செய்ய இவங்க எல்லோரும் ஒற்று கொண்டாங்க. சோ, உன் ஆளோடு, ஹாப்பி ட்ரீம்ஸ். இந்த லெட்டரை, கிழித்து போடட்டுமா? இல்லை, ‘பிரேம் செய்து’ கொடுக்கட்டுமா!….
நடு ஹாலில் மாட்டி வைத்துக்கறீயா!…
இல்லை வேறு ஏதாவது பிரச்சனை வந்தால், யூஸ் செய்யப் பயன்படும். என்ன சொல்றே!…” என்ற மதுராவை, ஓடி வந்து அணைத்து கொண்டவள், மதுராவின் கன்னத்தில் மாறி மாறி முத்தம் இட்டாள் .
அதற்குள் ஊர்வசி உள்ளே வர , “ஹே பூரணி!… அங்கப் பாரு… அந்தப் புள்ள ஊர்வசி, நீ எனக்குக் கிஸ் கொடுத்துட்டு இருக்கறதை பார்த்து ஸ்டன் ஆகி நிக்குறா.
இங்கன பாரு, நான் கார்த்திக் இல்லை. உணர்ச்சி வசப்பட்டுக் கார்த்திக்குன்னு நெனைச்சு, என்னைய கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துட்டு இருக்கே!…
அங்கப் பாரு, ‘அந்த மங்கூஸ் மண்டையன் என்னை முறைச்சுட்டு இருக்கான். இது எல்லாம் எனக்குத் தேவையா!…
ஊர்வசி டியர்!…. இவங்க கிட்டே, ‘நாட்டாமை’ வேலை பார்த்து, பேசிப் பேசிப் பசி எடுக்குது. சோ, என்ன செய்யுறே… எனக்குப் போய் இன்னொரு பிளேட் புளியாவரை, கேசரி வைத்து எடுத்துட்டு வந்துடு. அப்படியே, வீட்டுக்குப் பார்ஸலும் கட்டிட்டு பேபி. ஒகே!…” என்றாள் மதுரா.
கார்த்திக் கடுப்பாகி, அவள் தலையில் கொட்டினான்.
தவம் தொடரும்…





