38
“பக்கி!… பக்கி!… மானத்தை வாங்காதே பக்கி!…” என்றான்.
“டேய்!… யாரைப் பார்த்து, என்ன வார்த்தை சொல்லிட்டே நீயி!… இதோ, இந்த நாள், உன் டைரியில் குறித்து வைத்துக்கோ கார்த்திக். இனி, இந்த மதுராக்ஷி, டாட்டர் ஆப் சங்கரன், கிராண்ட் டாட்டர் ஆப் முத்துவேல், இங்கே சாப்பிட மாட்டேன்.” என்றாள் முகத்தைக் கோபமாக வைத்துக் கொண்டு.
“கார்த்திக்!… என்னப்பா இது!… பசிக்குதுன்னு சொல்ற பொண்ணை போய்… நாங்க வந்தவுடன் அவ, சாப்பிடுவதை நிறுத்தி எழுந்துட்டாப்பா… புள்ள, கோவிச்சுட்டா பாரு!…” என்றார் மரகதம்.
“யாரு!… அவ கோவிச்சுகிட்டா!… பாட்டி, கொஞ்சம் அக்கடச் சூடு!…” என்றான் கார்த்திக்.
திரும்பிப் பார்த்த அனைவரும் சிரித்து விட்டனர்.
ஒரு டேபிள் மேல் ஏறி, அமர்ந்து ஊர்வசி எடுத்து வந்தச் சாப்பாட்டை, ரவுண்டுக் கட்டி, சப்புக் கொட்டி,
‘கல்யாண சமையல் சாதம் !
காய்கறிகளும் பிரமாதம்.
அந்தக் கௌரவ பிரசாதம்!
இதுவே எனக்கு போதும்…’ என்று எஸ்.வி, ரங்காராவ் ரேன்ஜ்க்கு சாப்பிட்டுக் கொண்டு இருந்தது சாட்சாத் மதுராவே தான்.
“என்னவோ, ‘டைரியில் குறித்து வைத்துக்கோ என்று அண்ணாமலை ரஜினி ரேஞ்சுக்கு’ டயலாக் விட்டே!… இப்போ, என்ன செய்துட்டு இருக்கே!…” என்றான் விஜய், வந்தச் சிரிப்பை அடக்கிய படி.
“ஆமாம் சொன்னேன்… ஆனா, என்ன சொன்னேன்!… அங்கே, சாப்பிட மாட்டேன் என்று தானே சொன்னேன். நான் இங்கேத் தானே சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறேன்!.” என்றவளை கண்டு விஜய்யும், கார்த்திக்கும், நற நறவென்று பல்லைக் கடித்தனர்.
அவர்களால் முடிந்தது, அது மட்டும் தான்.
“ஆமாம்…. தம்பி கார்த்திகேயா!…. என்ன சொன்னீங்க!… நான் பக்கியா!… திருப்பியும், உனக்கு ஒரு போட்டோ செஷன், சங்குக் கிட்டே வைக்கணும் போல இருக்கே!…
சரி… சரி… கோசு, முரு, சங்கு முன்னாடி, கண்ணைக் கசக்கிட வேண்டியது தான்.
‘பாருங்கத்தை!… இந்தக் கார்த்திக், என்னை நம்ப வைத்து மோசம் செய்துட்டு, இப்போ யாரோ ஒரு பூரணி பின்னால் அலையறான்.’
டயலாக் சரியா இருக்கா கார்த்திக்?… இல்லை வேறு ஏதாவது, ஆட் செய்யணும் என்றாலும் சொல்லு. பண்ணிடலாம்…” என்றாள் மதுரா.
“தாயே!…. உன்னைப் பற்றி மறந்து போய், வாய் விட்டுட்டேன். மன்னிச்சுடு பத்ரகாளி!…
ஊர்வசி!… அந்த புளியாவரை அண்டா, ‘எங்கே இருக்குன்னு’ சொல்லுமா. போய்த் தூக்கிட்டு வந்துடுறேன். இல்லை, இந்தப் பரதேவதை, ‘எனக்கு ஆப்பு என்ற பெயரில் பெரிய கடப்பாரையை’ சொருகிடுவா.
என்னை நம்பி, ஒரு பொண்ணு இருக்கு. மதுரா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம், பத்து பேமிலி பாக், பெரிய அண்டா சைசுக்கு வாங்கி தரேன். என் மீது கருணைக் காட்டு!…” என்றான் கார்த்திக், கை எடுத்துக் கும்பிட்டு.
அங்கு இருந்தவர்கள் வாய் விட்டுச் சிரித்தனர் .
“வாயைத் திறக்கும் முன், இந்தப் பயம் இருந்து இருக்கணும். சரி, போனாப் போகுது, பூரணிக்காக விடறேன்… பட், நீ சொன்ன ஐஸ்கிரீம் பேக், பத்து மறக்கவே கூடாது. டீல் ஓகேவா?… இப்போ பொழைச்சிப் போ…” என்றவள் சாப்பிடுவதில், தன் கவனத்தைத் திருப்பக் கார்த்திக் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“என்ன கார்த்திக்!… அவக் கிட்டே, இப்படி பம்முறீங்க!… அரிகாப்புடி சைஸில் இருக்கா. அவளுக்குப் பயந்துட்டு இருக்கீங்க!… நம்ம ஆண் சங்கத்திற்கே களங்கம்!…” என்றான் விஜய், கார்த்திக் தோளில் கைப்போட்டு.
“கருணா சார்!…. சத்தமா சொல்லிடாதீங்க!… நீங்கக் காலி..” என்றவன் மதுரா, இங்கே கவனிக்கவில்லை என்பதைக் கண்டு, நிம்மதி ஆனவன்,
“சார்!… ‘வேலியில் போகும் அனகோண்டாவை, காட்ஜில்லாவை , டவுசருக்குள் விட்டுட்டு, குத்துதே, குடையுதேன்னு, கடிக்குதேன்னு’ அலறிப் பிரயோஜனம் இல்லை சார்.
அவ கிட்டே மாட்டி, நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் நல்ல எண்ணத்தில் சொல்கிறேன். இப்படி எல்லாம் பேசி வைக்காதீங்க.
இந்தத் திருமணத்தை நிறுத்தத் தெரியாத்தனமா, ஆபீசில் வேலை பார்க்கும் பொண்ணுங்க கூடக் கொஞ்சம்… கொஞ்சமே கொஞ்சம் க்ளோஸ்சா இருப்பதை போல் போட்டோ, வீடியோ எடுத்து இவக் கிட்டே காண்பித்தேன்.
வச்சா பாருங்க ஆப்பு சங்கு மூலமா… ஆறு மாசம் அவர் அடிச்ச வேப்பிலையில், ஆஸ்திரேலியா ஓடினவன் தான் ரெண்டு நாள் முன்னாடி தான் திரும்பினேன்.
இப்போ கேளுங்க, சொல்றேன், ‘ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதரஸ் அண்ட் சிஸ்டர்ஸ்!…” என்றான் நொந்தக் குரலில்.
“என்ன கார்த்திக்!… சேதாரம் பலமோ!…” என்றான் விஜய், நக்கலாக.
“கணக்கு வழக்கே இல்லை…” என்றான் கார்த்திக்.
சேது, கார்த்திக்கை கூப்பிட, அவரிடம் அவன் சென்று விட, விஜய், மதுராவிடம் சென்றான்.
“இன்னும் வெளியே போனா, மத்தவங்க பர்ஸ், சாப்பிட்டே காலி செய்யும் பழக்கம் நிறுத்தலையா நீ!… பத்து பேக் ஐஸ்கிரீம்!…. உனக்கே ஓவர்ரா இல்லை. கொஞ்சம் அடங்கு!…” என்றான் யாருக்கும் கேட்காதக் குரலில்.
அடிக்கண்ணில் விஜய்யை பார்த்தவள், எதையும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.
“என்ன சொன்னது கேட்டதா!… ஓவர்ரா வாலு வெளியே வருது. கார்த்திக்குக்கு நான் இருக்கேன்.” என்றான் விஜய், நக்கலாக.
அவளைக் கடுப்படித்து விட்டதாக நினைத்து அவன் திரும்ப, “மிஸ்டர். விஜய கருணாகரன்!… ஒன் செகண்ட்!… கொஞ்சம் இங்கே வாங்க. வெளியே போனா, ‘நான் சாப்பிட்டே, மத்தவங்க பர்ஸ் காலி செய்வேன்’ என்று உங்களுக்கு எப்படி தெரியும் சார்?…
என்னவோ, நீங்க வாங்கி, வாங்கி எனக்குக் கொடுத்தே, உங்க பர்ஸ் தேய்ந்து போனது போல், ஸ்டேட்மென்ட் எல்லாம் வருது… அப்படியா என்ன!…
எனக்கு வாங்கி கொடுத்து இருக்கீங்களா என்ன மாம்ஸ்?….” என்றாள் ஒரு மாதிரிக் குரலில்.
அதிர்ந்து திகைத்து நின்றான் விஜய்.
‘ஸெல்ப் ஆப்புத் தானே வைத்துக் கொண்டோம்.’ என்று புரிய, ‘ஆடுத் திருடின கள்ளன்!…’ மாட்டியது போல விழித்து நின்றான்.
“அதான் ஒரு வருசமாய் உனக்குப் பாடிகார்ட் வேலை செய்யறேன் இல்லை!… தெரியாதா!… உன் வேலை எல்லாம்…” என்றான் விஜய், சமாளிப்பாக .
“இந்த நொண்டிச் சாக்கு எல்லாம், எவளாவது காதில் பூச்சுத்தி இருப்பா மிஸ்டர். விஜய். அவ கிட்டே சொல்லுங்க. உங்க கிட்டே, ஏதோ ஒன்று ஆரம்பம் முதலே சரி இல்லை.
எதையோ மறைக்கறீங்க. எல்லோரிடமும் இயல்பா இருக்கும் நீங்க, என்னிடம் மட்டும், ஆர்டிபிசியாலா, உங்கக் குணத்திற்கு எதிராகத் தான் இருக்க ட்ரை செய்யறீங்க.
ஒரு 75% நம்பும் படியாக இருக்கு. சீக்கிரம் கண்டுப் பிடிக்கறேன்.
‘கேட் அண்ட் மௌஸ் கேம்ஸ் ஸ்டார்ட்ஸ்!…’ விஜய். நீங்களா, நானா பார்த்துடலாம்.” என்றவளைக் கண்டு, மிடறு விழுங்கினான் விஜய்.
“என்ன என்னன்னவோ பேசிட்டு போறே!… முன்னே எல்லாம் என் கிட்டே, பேசக் கூடத் தயங்கிட்டு இருப்பே!… வால் ஓவர்ரா இருக்கு. சும்மா நீயே, எதையாவது, தேவையில்லாததை எல்லாம், கற்பனைச் செய்துட்டு உளறாதே!… கிளம்பும் வழியைப் பாரு…” என்றான் கடுகடு முகத்தோடு.
“விஜய்!… எங்க அம்மா ஒரு பழமொழி சொல்வாங்க. ‘சூரியன், நிலா, உண்மை எவ்வளவுத் தான் மறைத்து வைத்தாலும் மறையாது. எப்படியாவது வெளியே வந்தே தீரும்.’
இது நான் சொல்லலை.
புத்தர் சொன்னது.
தலைவர், ‘எம்.ஜி.ஆர்’ கூட, ஒரு பாடலில்,
“என்ன தான்
நடக்கும் நடக்கட்டுமே!…
இருட்டினில் நீதி மறையட்டுமே!…
தன்னாலே வெளி வரும் தயங்காதே!…
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!...” என்று பாடி இருக்கிறார்.
இப்போ, இதுவரை நார்மல் ஆகப் பேசிக் கொண்டு இருந்த நீங்கத் தான் உங்க உண்மை முகம்.
கேள்வி கேட்டதும் சிடுச்சிடுத்தீர்களே அது முகமூடி!
நீங்கச் சாதரணமாகப் பேசி இருந்தா கூட, இந்த அளவு உறுத்தி இருக்காது. நிச்சயம் கண்டுபிடித்தேத் தீருவேன். தட்ஸ் எ சாலென்ஜ்!
ஒன் மோர் திங், ஒரு வருஷமா உங்க கிட்டே, பேசலை என்பது உண்மை தான். ஏனென்றால், உங்க இந்தக் கோபம், சிடுசிடுப்பு, இயந்திர மனிதன் முகம் தான் உண்மை என்று நம்பி இருந்தேன்.
இப்போ தான் சில விஷயம், தெரிய வந்திருக்கு மாம்ஸ்!… அப்பவே,’ உங்களை வச்சி செய்யணும்’ என்று ரொம்பவே தோணும். இப்போ முடிவே செய்தாச்சு.
இந்த, ‘ஆஸ்கார் அவார்ட் வாங்கும் அளவுக்கு’ எல்லாம், இனி ஓவர்ரா ட்ரை செய்ய வேண்டாம்… நடிப்பதைத் தான் சொல்றேன்.” என்றவள் கைக்கழுவ சென்று விட விஜய், திக்ப்ரமை பிடித்து அந்த இடத்திலேயே நின்று விட்டான்.
அவனுக்குத் தெரியவில்லை, இனி மேல், ‘அணு ஆயுதப் போர்!’ அவனுக்கும், அவளுக்கும் இடையே மூல போகிறது என்பதை.
இத்தனை வருடம், அவன் கட்டிக் காப்பாற்றிய ரகசியம் வெட்ட வெளிச்சமாகப் போகிறது.
சூர்யாவையும், மதுராவையும் தானே சேர்த்து வைத்து, மணமேடை ஏற்றப் போவதை அவன் அறியவில்லை.
கைக்கழுவியவாறு முன் பக்க கண்ணாடியில், பின்னால் சிலை மாதிரி நின்று கொண்டு இருந்த விஜய்யின் முகபாவங்களை, கவனித்து கொண்டே இருந்தாள் மதுரா என்பதை உணராத விஜய், அவள் சொல்லிச் சென்றவற்றால் குழம்பிப் போய் நின்றான்.
“ரொம்ப பாவம் விஜய் பையா நீயி!… இப்படி, ‘எங்க அப்பா குதிருக்குள்ள இல்லைன்னு’ காமெடி பண்றியே!… போட்டு வாங்குவது கூடத் தெரியாத பச்சைப் புள்ளையா நீயி!…
உன் ரியாக்ஷன் பார்த்தா, அப்போ என் மேல் நீ வைத்திருக்கும் இந்தக் காதலை விட, இன்னும் பெருசா வேறு எதுவோ இருக்கு!…
சோனா காரணம் இல்லாம, என்னை டார்கெட் செய்யலை.
‘ஏதோ இருக்குன்னு’ சந்தேகப்பட்டுத் தான், பிளான் போட்டு இருக்கா. ஆனா, அவ நினைப்பதை விட, இன்னும் பெருசாவே ஏதோ இருக்கு.
போட்டு வாங்குவதை கூடப் புரிஞ்சுக்க முடியாத மாக்கனாய், இருக்கும் உன்னைப் பார்த்து தான், அந்தக் கஜா அண்ட் கோ வே அப்படி பயப்படுதா!…
சுத்தம், விளங்கிடும்.
இருந்தாலும் ஒரு வருஷம், என்ன ஆக்ட்டிங்!… என்ன ஆக்ட்டிங்!…
சிவாஜி, கமல் எல்லாம், உன் முன்னாடி தோத்தாங்க போ.
இரு மவனே!… மாட்டினே!… ஒரு வருஷமா ஆபீஸ்லே படுத்தி எடுத்தே இல்லை!… கவனிச்சுக்கிறேன்…’ என்று மனதிற்குள் முடிவு எடுத்தாள் மதுரா.
கைக்கழுவி வந்தவள், “பெரியப்பா!… அம்மா ஊரிலிருந்து வந்து இருகாங்க. அவங்களும், கார்த்திக் அம்மாவும் இணைப் பிரியா தோழிகள். சோ, பவானியை கன்வின்ஸ் செய்துட்டா அவங்களே, உங்க வருங்கால சமந்தியம்மாவை சரிக் கட்டிடுவாங்க. கார்த்திக் வீட்டில் மதுரை ஆட்சி தான்.
சோ, இங்கே தாஜா செய்தால், அங்கே ஒர்க் அவுட் ஆகும்.
எங்கக் கூட வாங்க. போய்க் கவுத்துடலாம்.
ஐயோ!… நான் பாட்டுக்குப் பேசிட்டு போறேனே!… உங்களுக்கு, ‘என் அண்ணன் கார்த்திக்கை மாப்பிளையாக ஏற்கச் சம்மதம்’ என்று நீங்க வாய் திறந்து இன்னும் சொல்லவே இல்லை!…” என்றாள் மதுரா சேதுவிடம் .
“அடியேய்!… செய்றது எல்லாம் செஞ்சுட்டு, இப்போ ஒன்றும் தெரியாதவ மாதிரி, பெர்மிஷனா கேட்குறே!…” என்றார் மரகதம், அவள் காதைத் திருகி.
“அட!… இது நல்லா இருக்கே!… உங்க பேத்தி விழுந்து, விழுந்து இந்த, ‘பெட்ரோமாஸ் லைட் தான் வேணும்ன்னு’ நாலு வருஷம் லவ் செஞ்சா அதைக் கேட்க மாடீங்க.
சரி… போனா போகுதே… பார்க்கக் கொஞ்சம் பார்பி டால் மாதிரி இருக்காளே!… ‘ஆ ஊ நா’ டாம் திறக்கறாளே!…’ என்று கோர்த்து விட்டா… மீ… பச்சை புள்ள!
அதைப் போய் இப்படி, டார்ச்சர் செய்யறீங்களே!… இது தான் நல்லதிற்கு காலம் இல்லை என்று சொல்லறாங்களோ!…” என்றாள் மதுரா .
“வாய்!… வாய்!…” என்று முதுகில், ஒன்று போட்டார் கனகா பாசத்துடன்.
“சொல்லுங்க பெரியப்பா!… நான் தப்பா ஏதாவது செய்துட்டேனா?… உங்களுக்கு ஒகேத் தானே!…
உங்களுக்குப் பூரணி திருமணம் பற்றி, ஆயிரம் எண்ணம் இருக்கும். நான் தப்பு செய்து இருந்தா சாரிப்பா!… ஆனா, கார்த்திக் உண்மையிலேயே ரொம்ப நல்லவன். அக்மார்க் நல்லவன். உங்க பொண்ணை, கண் கலங்காம காப்பாத்துவான். ” என்றாள் மதுரா.
அவள் தலையை ஆதூரமாகத் தடவி கொடுத்தச் சேது, “என் மூத்தப் பொண்ணு, என் ரெண்டாம் பெண்ணின் வாழ்க்கை சிறப்பாக்கி தான் இருக்கா. நாங்க, எங்க மகளுக்குச் செய்ய முடியாததை, நீ செய்து இருக்கே!…
எங்களால் அவ, இத்தனை வருடம் இழந்தச் சந்தோசம், கனவு, எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கார்த்திக் மூலமாக, நீ திருப்பிக் கொடுத்து இருக்கேடா…
எங்களுக்கு, இந்தத் திருமணத்தில் பரிபூரணச் சம்மதம். நாங்களே பார்த்து இருந்தாக் கூட, இவ்வளவு நல்ல மாப்பிளை, கணவன் கிடைத்து இருக்காதுடா.” என்றார் சேது, மதுராவை அணைத்து .
“அது சரி பெரியப்பா… நான் செய்தது ஒகேன்னு சொன்னீங்க… அது சரி. அது என்ன, இந்தக் காட்ஜில்லாவைப் பார்த்து, ‘இவ்வளவு நல்ல மாப்பிள்ளைன்னு சர்டீபிகேட் தறீங்க!… அவனே ஒரு லூசு.” என்றவள் ஓட ஆரம்பிக்க,
“ஏய்!… எருமை நில்லுடீ…. உன்னை…” என்று தூரத்தினான் கார்த்திக்.
சேது, கனகா, மரகதம், பூரணி என்று ஒவ்வொருவரின் பின்னே ஒளிந்து, கார்த்திக் கையில் சிக்காமல் போக்கு காட்டியவள், கடைசியாக விஜய் பின் ஒளிந்தாள் .
“விஜய்!… விஜய்!… காப்பாத்து விஜய். அந்த அனகோண்டா அடிக்க வரான்…” என்று இருவரும் அவனைச் சுற்றி, சுற்றி ஓடினார்கள்.
இந்த முறை விஜய் காதில் புகை வரவில்லை.
இருவரையும் கண்டவனின் கண்களில் பாசமே இருந்தது.
சிறுக் குழந்தைகளின் விளையாட்டை ரசிக்கும், ஒரு பெற்றவனின் முக பாவத்தோடு, கைகளை முன்புறம் கட்டிப் புன்னகைத்து கொண்டு இருந்தான்.
“கருணா சார்!.. அந்தச் சிம்பான்சியை பிடிங்க. உங்க வீட்டு மாப்பிளை சொல்றேன். பிடிச்சுக் கொடுங்க.” என்றான் கார்த்திக்.
“டேய்!… இது போங்கு ஆட்டம். உனக்கும், எனக்கும் தான் வழக்கு. அவரை ஏன் உள்ளே இழுக்கறே!… முடிஞ்சா நீ பிடி. இல்லை தோத்துட்டேன்னு ஓத்துக்கோ.” என்றாள் மதுரா, விஜய் முதுகு புறம் இருந்து எட்டி பார்த்து.
“எனக்குப் பதில், எங்க தலை களத்தில் இறங்கும் மதுரா. இவர் தான் சொன்னார், ‘ஏதோ ஒரு சங்கத்திற்கு கேவலம், உன்னிடம் இப்படி நான் மாட்டுவது’ என்று. இப்போ சங்கத்தலைவரே மோதிப் பார்க்கட்டும். அப்போ தெரியும்.” என்றான் கார்த்திக்.
“ஒஹ்!… நீ அப்படி வரியா கார்த்திக்! அப்போ பிடிச்சுடலாம்…” என்றான் விஜய், மதுராவை அடிக்கண்ணால் பார்த்தவாறு .
“முடியவே முடியாது கருணா சார்!… அவ மின்னல் மாதிரி ஓடுவா. பிடிப்பது கஷ்டம். அவளா மாட்டினாத் தான் உண்டு.” என்றான் கார்த்திக் எச்சரிக்கும் விதமாக .
“அவளைப் பற்றி எனக்குத் தெரியாதா!… பேய் மாதிரி ஓடுவா. உசைன் போல்ட்டுக்கு தங்கச்சின்னு நினைப்பு அவளுக்கு. பார்த்து இருக்கேன். இந்தத் தடவை பிடிக்கறேன்.” என்றவன் திரும்ப அங்கு மதுரா இல்லை.
“ஹ்ம்ம்!… நீங்க இப்படியே டைலாகு பேசிட்டு இருங்க. அவ ஓட ஆரம்பித்துப் பத்து மணி நேரம் ஆச்சு.” என்றான் கார்த்திக் தலையில் கை வைத்த படி.
கார்த்திக் தோளில் கை வைத்த பூரணி, “ஆமாம், தனியா நின்று யார் கூடப் பேசிட்டு இருக்கீங்க!…” என்றாள் .
“என்னது!… தனியாவா!…” என்று திரும்பிப் பார்த்தவன் திகைத்தான்.
அங்கு விஜய்யும் இல்லை, மதுராவும் இல்லை.
‘அடங்கொக்கமக்க!… இதுங்க ரெண்டும் சேர்ந்து, என்னையவ காமெடி பீஸ் ஆகிடுச்சுங்களே!… இவ முன்னாடி வேறு மானம் போச்சே!…’ என்று நொந்து கொண்டான்.
தவம் தொடரும்…





