39
மான் போல், துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டு இருந்தாள் மதுரா.
பின்னால் துரத்திக் கொண்டு இருந்தான் விஜய்.
“பிடிக்க முடியாதே!… பிடிக்கவே முடியாதே!… “என்று சொல்லிக் கொண்டே ஓடியவள், படிகளில் தாவி ஏறி, மொட்டை மாடிக்கு ஓடினாள்.
அந்த வீட்டு மாடி, ஓடி விளையாடுவதற்கு ஏற்பதாகப் பரந்து விரிந்த மைதானம் போலிருந்தது.
நடுநடுவே நாற்காலி, டேபிள், பூந்தொட்டிகள் இருக்க விஜய், மதுராவை பிடிக்க முடியாமல் போனது .
“என்ன பாஸ்!… பிடிக்க முடியவில்லை என்றால் இப்போ கூடத் தோத்துட்டேன்னு ஓத்துக்கோங்கோ. பொழைச்சிப் போகறீங்கன்னு விட்டுடறேன்… வசதி எப்படி!…” என்றாள் மதுரா வாயைக் குவித்து நாக்கினை வெளியே துருத்தி அழகுக் காட்டி.
ஓடியவள் அறியவில்லை ஒரு ஆணின், அதுவும் ஒரு காதலனின் மனதில், அது எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உணராதவளாய் விஜய்யை டீஸ் செய்து கொண்டிருந்தாள்.
“ கையில் சிக்கினே நீ காலி…” என்றான் விஜய்.
“சிக்கும் போது பார்த்துக்கலாம் ஜி!… அதற்கு முதலில் பிடிக்கணும். பிடிக்காம உதார் விடக் கூடாது. முதலில் பிடிங்க.” என்று அங்கும், இங்கும் துள்ளிக் குதித்து, தாவி ஓடியவளைப் பிடிக்க முடியாமல் திணறித் தான் போனான் விஜய்.
கார்த்திக்காக ஆரம்பித்த விளையாட்டு, ‘விளையாட்டு என்ற எல்லையைத் தாண்டிப்’ போய் கொண்டு இருப்பதை, இருவருமே உணரவில்லை.
விஜய் மனம், ‘காட்டுத் தீயாய் பற்றி எரிய தேவை, ஒரு சின்னத் தீண்டல், செல்லச் சிணுங்கல், அவளின் கடைக்கண் பார்வை’ என்பதை இருவரும் அறியாமல், ‘மீள முடியாத உணர்ச்சி என்னும் சூறாவளியில் சிக்கித் தவிக்க’ ஆவன இருவரும் செய்து கொண்டு இருந்தனர்.
வெளிசலங்கையாகச் சிரித்து கொண்டே ஓடிக் கொண்டு இருந்தாள் மதுரா.
“ராட்சசி!… நில்லுடி… ஹே ஏன்ஜெல்!… நில்லுடீ… மது!… மது!.. நில்லு… உன்னை…” என்று பின்னால் ஓடிக் கொண்டு இருந்தான் விஜய்.
பத்து வருடமாய் மதுரா மேல், உள்ள காதல், அது வெளியே தெரியாமல் இருக்க, அவன் போட்டுக் கொள்ளும் முகமூடி அனைத்தையும், ‘விஷ்வாமித்ரன் தவத்தைக் கலைக்க வந்த மேனகையாய்’ அவளின் நெருக்கம், தூள்தூளாய் உடைத்து கொண்டு இருந்தது.
ஓடிக் கொண்டு இருந்தவளின் கால், கல்லில் மோத, நின்றவளை தாவிப் பின்புறமிருந்து அணைத்தான் விஜய்.
“இப்போ என்னடீ சொல்றே!… தோத்தது நீ தான். தோத்ததிற்கு என்னத் தண்டனை கொடுக்கலாம்?… ஹ்ம்ம்ம்!…” என்று தலையை, ஒரு புறமாய் சாய்த்து, மதுராவைத் தன் கைவளைவில் வைத்தவாறே, தன்னை நோக்கித் திருப்பினான் விஜய்.
ஒரு கையை அவள் தோளிலும், மறு கையை அவள் இடுப்பிலும் வைத்து இருந்தவன், தாங்கள் நின்று இருக்கும் நெருக்கத்தை உணரவில்லை.
“கார்த்திக், முன்னாடி ஒரு ஆயிரம் தோப்புக்கரணம் போட வைக்கலாமா?… இல்லை…” என்று உதட்டைக் கடித்து யோசித்தவன், மதுராவிடமிருந்து பதில் இல்லாததைக் கூடக் கவனிக்கவில்லை.
“இப்பொழுதைக்கு கார்த்திக் கிட்டே, மரியாதையா நடக்கணும். என்னை எப்போ பார்த்தாலும், ராயல் சலூட் வைக்கணும். தோப்புக்கரணம் போடச் சொல்லும் போது, எல்லாம் போடணும். இது தான், ‘உனக்கு இந்த நாட்டாமை’ சொல்லும் தீர்ப்பு. என்னடீ!…. வாய் எங்கே போச்சு!….” என்று கேட்டவன், மதுராவின் ஸ்தம்பித்த நிலையையும், தாங்கள் இருக்கும் நெருங்கிய நிலையையும் அப்போது தான் உணர்ந்தான்.
விஜய் கைகளில், சிலையாய் உறைந்து நின்ற மதுரா, கண்கள் அகல விரிந்து, என்ன நடக்கிறது என்பது புரியாதவளாய், முகம் குழப்பத்தைக் காண்பிக்க, உதடுகள் எதையோ சொல்ல வந்து சொல்லாமல், துடித்துக் கொண்டிருக்கத், ‘தான் எப்படி உணர்கிறோம்’ என்பது மதுராவிற்கே விளங்கவில்லை.
‘சேர வேண்டிய இடத்தில் சேர்ந்திருப்பது’ போன்ற உணர்வு எழுவதையும், விஜய்யின் அந்த அணைப்புத் தனக்குப் புதிதாய் தோன்றாதத்தையும், ‘காலம் முழுக்க அவன் கைவளைவில் இருப்பதே போதும்’ என்ற எண்ணம் எழுவதையும் மதுராவால் விளக்க முடியவில்லை.
இப்பொது திகைத்து ஸ்தம்பிப்பது விஜய் முறையானது.
‘அவ்வளவு நெருக்கத்தில், தன் மனம் கவர்ந்தவள். தன் கை அணைப்பில் அவள்!…’
அந்த எண்ணம் மனதில் எழுந்தது மறுகணம், ஒருவிதச் சிலிர்ப்பு, அவன் உடலில் ஓட, அதை உணர்ந்த மதுராவின் கண்கள், மேலும் விரிந்தன.
ஒரு கை விரல் அளவு தான், அவர்களுக்கிடையே இடைவெளி இருந்தது.
அங்கு, ‘என்ன நடக்கிறது என்று புரியாத மௌன நிலையில்’ இருவரின் கண்களும் கூர் ஈட்டிகளாக, ஒன்றை ஒன்று உரசி நின்றன.
ஒருவித ஸ்தம்பிப்பு, உறைந்த நிலை.
சுற்றி உள்ள உலகம் அனைத்தும் மறைந்து, இந்தப் பிரபஞ்சத்தில் அவர்கள் இருவரும் மட்டுமே இருப்பது போன்ற மாயை.
இதயங்கள் ரெண்டும், பந்தயக் குதிரையின் வேகம் எடுத்து இருக்க, மூச்சு விடவும் மறந்து போய், அணைத்தும் அணைக்காத நிலையில் எவ்வளவு நேரம் நின்றார்களோ, அவர்களுக்கே தெரியாது.
“ஏஞ்சல்!…” என்று முணுமுணுத்த விஜய்யின், குரலில் இருந்த ஏதோ ஒன்று, மதுராவை ஏதோ ஒரு மாய உலகத்திற்குக் கொண்டுச் செல்ல, தெளிவில்லாமல் பல எண்ணங்கள் அலைமோத, விஜய் கைகளில் சிலையாக நின்றவளின் கால்கள், தங்கள் பலத்தை இழக்க, கீழே சரிந்தவளை தாங்கிப் பிடித்தான் விஜய்.
‘இந்த நிமிஷம்….
என் நிமிஷம்
எந்தன் வாழ்வில்,
பொன் நிமிஷம்
பாலை வனத்தில்,
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி
அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இப்படியே, இப்படியே
இருந்து விடக் கூடாதா!
என் கண்ணில் உன் இமைகள்
பொருந்தி விடக் கூடாதா!…
இப்படியே, இப்படியே
இறந்து விடக் கூடாதா!…
இப்படியே காலங்களும்
உருண்டு விடக் கூடாதா!….
அன்பே, உன் பக்கத்தில்
அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம்வரை
ஊடாடக் கூடதா!…
நிம்மதியே! நிம்மதியே!
நெஞ்சை விட்டுப் போகாதே!
என் உயிரைத் தீக்குழியில் எரிந்து
விட்டுப் போகாதே!
மார்போடு உன் சூடு
ஆறி விட கூடாதே! …’ என்ற பாடல், கீழிருந்து கேட்க, அந்த வரிகள், அவர்களுக்காகவே எழுதப்பட்டதாய் தான் அவர்களுக்குத் தோன்றியது.
கை வளைவில், மைவிழியாளைக் கண்டு உறைந்து நின்றான் விஜய். இத்தனை வருடமாய் மறைத்து, புதைத்து வைக்கப்பட்டு இருந்த அவனின் காதல், விஷ்வரூபம் எடுத்து அவனைப் புரட்டிப் போட்டது .
கைகள், அவளை மெல்ல மேலே தூக்க, அடுத்து அவன் ஏடாகூடமாக எதையும் செய்து வைக்கும் முன், அவன் கரங்களிலிருந்து மதுரா விலகி இருந்தாள்.
“தேங்க்ஸ்பா… விழுந்து இருந்தேன்… மண்டைச் சிதறு தேங்காய் ஆகி இருக்கும். கீழே விழும் முன் என்னைக் காப்பாத்தினீங்க.
ஆமாம், ஒரு டவுட் விஜய்… பத்தடி தூரம், இது நாள் வரை நிற்கும் போதே, அந்தப் பிசாசு, அபெர் அது இதுன்னு பேசுச்சு.
இப்போ, ‘என்னைத் தொறத்தி விளையாடி இருக்கீங்க!… hug வேற. சினிமாவில் காட்டுவது போல், தாங்கிப் பிடித்து வேற அப்படியே நின்று இருக்கீங்க!…
இதுக்கு, என்ன சொல்லப் போறாளோ!…” என்றவள் அவன் அதிர்ந்து நிற்கும் போதே, ஒன்றும் நடக்காதது போல் கீழ் இறங்கி போகச் சென்றாள்.
தலையை அழுந்தக் கோதி, கண்களை மூடித் தன் உணர்ச்சி கொந்தளிப்பைக் கட்டுக்குள் கொண்டு வரப் போராடி, திணறிக் கொண்டு இருந்தான் விஜய்.
மதுரவால் மட்டுமே, உண்டாக்கக் கூடிய உணர்ச்சிகள், இன்று அவளாலேயே பேயாட்டம் அவனுள் போட்டுக் கொண்டு இருந்தது.
அவற்றை வெல்ல துணை மதுரா மட்டுமே! …
ஆனால், அவளோ, இவன் நெருங்க முடியாத முள் வேலிக்கு உள்ளே அல்லவா இருக்கிறாள்!…
ஆசை, மோகம், காமம் என்னும் தீயில் பற்றி எரிந்து கொண்டு இருந்தான் அந்தக் காதலன்.
அவன் நிலையைத் தாங்க முடியாத இயற்கையே, கண்ணீர் விடுவது போல் வானம் பிளந்து கொண்டு ஊற்ற ஆரம்பித்தது அவனைக் குளிர்விக்க.
பெய்து கொண்டு இருந்த மழையில், கால் மடங்கி தலை கவிழ்ந்து தரையில் மண்டியிட்டு அமர்ந்தான் விஜய்.
“விஜய்!…” என்றாள் மதுரா, கதவின் ஓரம் இருந்து.
தலை நிமிர்ந்த விஜய், எதையும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டு இருக்க,
“இதற்குப் பிறகும் உண்மை சொல்லமாடீங்களா!… எதுவுமே இல்லை என்று தான் சாதிக்கப் போறீங்களா!…
இதோ, இப்படித் துடிச்சுட்டு இருக்கீங்களே, அது என் கற்பனை என்று சொல்வீர்களா?
இது மாதிரி, நீங்க இருப்பது முதல் தடவை இல்லை. ஆறு மாதம் முன்பு கூட, இதே நிலையில் தான் இருந்தீங்க விஜய். கீழே விழாம இருக்க உங்களைப் பிடித்துக் கொண்டேனே அப்போது!….
நீங்க போடுவது வேஷம் விஜய். அதுவும் என்னைச் சுற்றி இருக்கும் போது மட்டும். வாயை மூடி இருப்பது, எதற்குமே தீர்வு இல்லை விஜய்.
இதற்கு மேலும், நீங்க வாயைத் திறக்கமாட்டேன் என்று சொன்னால் கூட நான் விடமாட்டேன்.
எனக்குப் பதில் வேண்டும். நீங்கச் சொல்லலை என்றால் கூட, எப்படியும் கண்டுப் பிடிப்பேன் விஜய். எழுந்து வாங்க. உடம்புக்கு ஏதாவது ஆகப் போகுது.” என்றவள் யோசனையோடு கீழ் இறங்கி சென்றாள்.
படி முடியும் இடத்தில், கையில் புது ட்ரெஸ் உடன் நிற்கும் சேதுவை, கண்டுத் தயங்கி நின்றாள்.
“பெரியப்பா!… அது வந்து…” என்று திணறியவளைக் கண்டுப் புன்னகைத்தார் சேது.
‘கிளம்பலாமா?’ என்று கேட்கத் தான் அவர்களைத் தேடி சேது வந்தது.
வந்தவர், அவர்கள் இருந்த நிலையைக் கண்டு, வந்தச் சுவடே இல்லாமல் திரும்பி விட்டார்.
கடவுளுக்கு மானசீகமாக நன்றி சொல்லவும் மறக்கவில்லை.
விஜய் கை கைவளைவில் இருக்கும் போது, சேது வந்ததைக் கண்டப் பிறகு தான் மதுரா, தன்னைச் சமாளித்து கொண்டது.
“நீ சந்தேகப்படுவது சரி தான். அவன் அணிந்து இருப்பது முகமூடி தான். உன்னைக் காக்க, ‘அவன் உணர்ச்சி வெளியேத் தெரியாத வரை தான் உனக்குப் பாதுகாப்பு’ என்று தனக்குத் தானே அவன் போட்டுக் கொண்ட இரும்பு கவசம் அது.
ஆனால், உண்மை வேறு விதமானது. எனக்கே கூடப் பல சமயம், ‘இவன் வேறு எதையோ பெரிசாய் மறைக்கிறான்’ என்று தோன்றாமல் இருந்தது இல்லை.
இதற்கு மேல் என்னால் வேறு எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது மதுரா. எங்கக் கையை, அவன் சத்தியத்தில் கட்டிப் போட்டு இருக்கான். மறைமுகமா உனக்கு என்னால் உதவ முடியும்.
‘ஹான்செல் அண்ட் க்ராடில்’ கதை தெரியுமா?… அது போல இவன் மறைக்கும் உண்மை பல பேரிடம் சிதறி இருக்கு. எல்லாதையும் சேர்த்து பாருமா. அவன் எதை மறைகிறான் என்று தெரிந்து விடும்.
புள்ள ரொம்ப நேரம் மழையில் நனைகிறான். நான் போய் டிரஸ் கொடுத்துத் தெளிய வைத்துக் கூட்டி வரேன்.” என்று முதல் படி ஏறியவர் நின்று,
“மதுரா!…” என்று அழைத்தார்.
“நீ, இதில் கடைசி வரை போக வேண்டியது இருக்கும். விடை எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கும். உன் கடைசி மூச்சு வரை, ‘இது உனக்குத் தான்’ என்று முடிவாகத் தோன்றினால் மட்டும் இறங்கு.
இல்லை என்றால், ‘மறைக்கப்பட்டது மறைக்கப்பட்டதாகவே இருக்கட்டும்.’
வாழ்கையில், ‘என் மகன்’ நிறைய கஷ்டம் பட்டு விட்டான். ‘பாதி வழி ரயில் சிநேகம்’ அவனுக்கு எந்த விதத்திலும் உதவாது.
அவன் உயிருக்கேக் கூட ஆபத்தாகி விடும். கடைசி வரை, உடன் வரும் இதயத் துடிப்புத் தான் அவனுக்கு விடிவு காலம் கொடுக்கும்.
எந்தப் பாதையில் செல்வது என்று யோசித்து முடிவு எடுமா. அவனைக் கஷ்டப்படுத்துவது நீ என்றாலும், என்னால் அதை அனுமதிக்க முடியாது. யோசிமா… யோசித்து முடிவு எடு.” என்றவர் நில்லாமல் சென்று விட, மதுராவின் முகம், தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்து விட்டது.
அடுத்த சில வினாடிகளில் உடை மாற்றி விஜய் வரவும், அவன் முகம் உணர்ச்சிகள் அற்றக் கற்பறையாக இறுகி இருப்பதையும், ‘அவன் தன்னை மீட்டு விட்டான்’ என்பதையும் கண்டாள் மதுரா.
மழையும் நின்று விட, ஊர்வசி குடும்பத்திடம் சொல்லிக் கொண்டு, பூரணியை அழைத்துக் கொண்டு, மதுரா தங்கியிருக்கும் வீட்டை நோக்கி கிளம்பினார்கள் அவர்கள்.
தன் தோழி, வாழ்க்கையை ஜெயித்து விட்ட சந்தோஷத்தில் ஆனந்தக் கண்ணீருடன் அவர்களுக்கு விடை கொடுத்தாள் ஊர்வசி.
“பூரணி!… நீ போய்க் கார்த்திக் வண்டியில் வா…” என்ற மதுரா, எதையும் பேசாமல், விஜய்யின் கறுப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் suvயில் முன் பக்கம், ஏறி அமர்ந்து கொண்டாள் .
புன்னகையுடன் கனகா, சேது, மரகதம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மதுரா தங்கி இருக்கும் வீட்டை நோக்கி, அவர்கள் கார் பயணமானது.
எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ, அவ்வளவு மெதுவாக ஊரைச் சுற்றிக் கொண்டு, ‘டேக் டைவெர்சன்’ இல்லாமலே, ஊரைச் சுற்றிக் காண்பித்து கொண்டு இருந்தான்.
‘ஆமாம், இதற்கு எல்லாம் குறைச்சல் இல்லை!… லவ் செய்யும் அனைவரும் செய்யும், கோல்மால் எல்லாம் செய்ய வேண்டியது, கேட்டால், ‘நோ லவ்ன்னு’ சீன் போட வேண்டியது.
இவனை!…. ஒன்றும் செய்ய முடியாது. மதுரா!… நீ களத்துல இறங்கு.
மயிலே, மயிலேனா இறகு போடாது.’ என்று மதுராவின் உள்ளம், விஜய்யை தாளித்து கொட்டிக் கொண்டிருந்தது.
‘அவன் சுயச் சம்பாத்தியத்தில், வாங்கிய அவன் கனவுக் கார். அதில் தன்னவள்…’
அந்த எண்ணமே, விஜய் முகத்தில் தவுசண்ட் வாட்ஸ் பல்ப்பை எரிய விட்டுக் கொண்டு இருந்தது.
‘சிறகு இல்லாமல், வானத்தில் பறப்பதைப் போல் உணர முடியுமா?
உலகத்திற்கே முடிச் சூடாச் சக்ரவர்த்தியாக உணர முடியுமா!…’
காதல் வந்து விட்டால், எல்லாம் சாத்தியம் தான்.
எவ்வளவுத் தான் மறைக்க முயன்றாலும், ‘காதல் கொண்ட மனம்’ என்பது மலர்ந்து வாசனைப் பரப்பும் பூவிற்கு இணை. அதன் வாசத்தை மறைக்க முடியாது என்பது போல், ‘எதுவுமே இல்லை’ என்று வாய் வார்த்தையாக, விஜய் சொன்னாலும், சத்தியப் ப்ரமாணமே செய்தாலும், அவனே அறியாமல், சின்னச் சின்ன செய்கைகள் மூலம், தன்னை அவன் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தான்.
கடந்த ஒரு வருடமாய், இதை அவன் செய்கிறான் தான் என்றாலும், உண்மை அப்பொழுது மதுராவிற்கு தெரியாது என்பதால், இது எல்லாம் அவள் கருத்தில் பதியவேயில்லை.
இப்பொழுது பாதி உண்மை தெரிந்த பிறகு, விஜய் விடும் மூச்சுக் காற்றில் உள்ள வித்தியாசம் கூடத், தெள்ளத் தெளிவாக மதுராவிற்குப் புரிய ஆரம்பித்தது.
அவன் செய்யும் வேலையை, மற்ற நால்வரும் கண்டும் காணாமல் இருந்தனர். மதுரா, அவன் ஆமை ஊர்வலத்தைக் கவனித்தாலும், எதையும் சொல்லாமல் தீவிர யோசனையில் இருந்தாள்.
“எந்தக் கோட்டையைப் பிடிக்க, மதுராதேவியார் இந்தளவு யோசிக்கிறார் என்பதை அடியேன் அறியலாமா!…” என்றான் விஜய், காரின் உள் மௌனம் தாங்க முடியாது.
மெல்லிய புன்னகை மட்டுமே சிந்திய மதுரா, தன் தலையை இடம் வலம் ஆட்டிவிட்டு, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
“பேசினா முத்து உதிர்த்துடும் பாரு.” என்று சத்தமாகவே முணுமுணுத்தான் விஜய்.
கடுப்பானவன், ஒரு பென்ட்ரைவ் ஒன்றை, கார் மியூசிக் சிஸ்டத்தில் நுழைத்தான்.
“தேரே மேரே பீச்சு மெயின்
கைஸா ஹை யேப்
பந்தன் அஞ்சானா
(உனக்கும், எனக்கும் இடையில் உள்ள பந்தம் – முடிச்சு என்ன? )
மெயின் நஹி ஜானா
தூ நஹி ஜானா
(அது எனக்கும் தெரியாது…
உனக்கும் தெரியாது )
ஒருவர் இழுக்கும் போது
மற்றவர் ஓடி வருகிறோம்
மெல்லிய நூல்
இழையால் இழுக்கப்பட்டு.
என் பல்லக்கு வரும்
உன் வாசல் மட்டுமே
எது நடந்தாலும்…’ என்ற பாடலைக் கூடச் சேர்ந்து பாடிக் கொண்டு இருந்தான் விஜய்.
அவன் குரல் வளத்தில், அந்தக் காரில் இருந்தவர்கள் மயங்கித் தான் போனார்கள்.
அத்தனை உயிரோட்டம்!….
மனதை மயக்கும் குரல்.
ஆனால், அந்தப் பென்ட்ரைவில் காரில் ஒலித்துக் கொண்டிருந்தது, லதா மங்கேஸ்கர் குரல் இல்லை, மதுராவின் குரல்.
இவள் ஒரு சாஹரிட்டி நிகழ்ச்சியில் ரசித்துப் பாடிய பாடல்களில் இதுவும் ஒன்று.
விஜய், அவனே அறியாமல் இன்னொரு க்ளு, கொடுத்துக் கொண்டு இருந்தான்.
இந்தப் பென் ட்ரைவ், விஜய்யின் சட்டை பாக்கெட்டில் எப்பொழுதும் இருக்கும்.
ஒரு நாள், இதைக் காணவில்லை என்று அலுவலகத்தையே, உண்டு இல்லை என்று அவன் செய்தது மதுராவிற்கு நினைவிற்கு வந்தது.
“பத்து கோடி காணாமல் போனாக் கூட, உன் அண்ணன், இப்படிப் பதறி இருக்க மாட்டான். அந்தப் பென் ட்ரைவ் தான் அவனுக்கு உயிர் ஆச்சே!…
கர்ணன் கூடத் தன்னோடு ஒட்டிப் பிறந்த கவச குண்டலத்தை விட்டு இருப்பார் போலிருக்கு. இவன் இதைக் குளிக்கும்போது கூடக் கீழே வைக்கவே மாட்டான்.” என்று பாலாஜி, கடுப்புடன் சுபாவிடம் சொன்னது நினைவிற்கு வந்தது.
‘அப்போ, அந்தப் பென் ட்ரைவில் இருந்தது இவன் ஆடை டிசைன் இல்லை… தன் குரல். அதைக் காணவில்லை என்றதும் தான், இவன் இந்த அளவிற்கு பதறி இருக்கான்…’ என்றது மதுராவின் மனம்.
மதுராவின் முகம் மேலும் யோசனையைத் தத்து எடுத்தது.
அவள் வீட்டினருகே, கார் வந்து விட, வெகுவேகமாகக் கார் கதவைத் திறந்து கீழ் இறங்கினாள். மற்றவர்கள் இறங்க, இறங்கும் வரை காத்து இருந்தவன், கடைசியாக இறங்க முயன்றான்.
அவனை இறங்க விடாமல் செய்தது மதுராவின் குரல்.
தவம் தொடரும் …





