41
“விஜய்!… என் பர்ஸ் பின்னால் விழுந்து இருக்கு. கொஞ்சம் சீட்டுக்கு அடியிலிருந்து எடுத்துக் கொடுங்க.” என்றாள் மதுரா.
கீழ் குனிந்து அவள் இருந்த இடத்தில், பர்ஸ்ஸை அவன் தேடிக் கொண்டு இருக்க, ஓட்டுனர் கதவுப் பக்கம் நின்றவள், கார் கீயை எடுத்துக் கதவை அறைந்து சாத்தி, விஜய்யை உள்ளே வைத்துப் பூட்டினாள் .
அதிர்ந்து திரும்பினான் விஜய்.
உள்ளே இருந்து, ‘என்ன செய்கிறாய்?… என்ன இது?…’ என்று அவன் கத்தினான்.
தன் வாய் மீது, ஒரு விரல் வைத்து, ‘அமைதியாய் இருக்கும் படி’ வெளியிலிருந்து சைகை காட்டியவள், தான் உள்ளே சென்று திரும்ப வருவதாகச் சைகைக் காட்டி விட்டு, உள்ளே சென்றாள்.
தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் விஜய்.
“ராட்சஸி!….” என்று வாய் முணுமுணுக்க, அவன் சொல்வது புரிந்து விட, மதுராவின் இதழில், ரகசிய முறுவல் ஒன்று மலர்ந்தது.
அதற்குள் வீட்டினுள் வந்தவர்களை வரவேற்று, சந்தோசத்துடன் பேசிக் கொண்டு இருந்தார் பவானி.
நல விசாரிப்புகள், விருந்து உபசாரங்கள் எல்லாம் முடிந்து, அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
பூரணியைத் தன் அருகே வைத்து, அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு இருந்தவர் சட்டென்று அதிர்ந்தார் .
“அம்மாடீ பூரணி!… என்னமா இது, உன்னை யாரும்மா அடித்தது? கன்னத்தில் விரல் தடம் பதிந்து, கன்னமே, இப்படிக் கன்னிப் போய்க் கிடக்கு.
சுபா!… ஐஸ் பேக் கொண்டு வாம்மா…” என்று பதறினார்.
பூரணியின் பால் ரோஸ் நிறத்திற்கு, அவளின் மென்மையான சருமத்திற்கு, ஆப்பிள் சிவப்பு நிறத்தில், பதிந்து இருந்தது மதுராவின் கைதடம்.
“ரொம்பப் பதற வேண்டாம் அம்மா! நான் தான், நாலு காட்டுக் காட்டினேன்…” என்றாள் கதவின் அருகே நின்று மதுரா.
எழுந்து வந்த பவானி, ஓங்கி மதுராவின் கன்னத்தில், ஒரு அறை விட்டார்.
“என்னடி நினைச்சுட்டு இருக்கே!… அதுவே, குழந்தைப் பொண்ணு. உன் வெறியாட்டத்தை எல்லாம், அவ மேல காட்டி இருக்கே!… பைத்தியமாடீ புடிச்சு இருக்கு உனக்கு?…” என்றார் கோபத்துடன்.
“யாரு, யாரு இவ குழந்தை!… எந்த ஊரில்மா குழந்தை, ‘என் மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை…’ என்று எழுதி வைச்சுட்டுத், தற்கொலை செய்ய ஊர் விட்டு ஊர் வந்து இருக்கும்!.
இவ குழந்தையா!…
‘கண்ணு!… தற்கொலைச் செய்யப் போறீயா!… ஆல் தி பெஸ்ட்ன்னு..’ விஷத்தையோ, தூக்குத் கயித்தையோ, நீங்கத் தூக்கிக் கொடுங்க. கரெக்ட்டா இருக்கும்.” என்றாள் மதுரா.
“என்னது!… தற்கொலையா!…” என்று பதறித், திகைத்துத் திரும்பினார் பவானி.
“ஐயோ!… என்ன பூரணி கண்ணு!… எதுக்குமா இந்த முடிவுக்கு வந்தே?” என்றார் அவளை அணைத்து கொண்டு .
“ஹ்ம்ம்ம்!… வேறு என்ன, உலக நன்மைக்காகவா தற்கொலைச் செய்யப் போறா!…. எல்லாம் காதல் தோல்வி தான். என்ன ஒரு லவ் ஸ்டோரி தெரியுமா அம்மா!… எங்கேயுமே நான் கேட்டதும் இல்லை, படிச்சதும் இல்லை.
இந்த மஹாராணியை, எவனோ ஒரு கிறுக்கன், காப்பாத்தி நைட் புல்லா துணை இருந்து இருக்கான். அந்த ஒரே ராத்திரியில், ‘தாயுமானவனாக, ஒரு நண்பனாக, ஒரு பாதுகாவலனாக’ இருந்தவனுக்கு, நன்றிச் சொல்வதற்கு பதில், இந்த அம்மாயி, தன் மனதையே கொடுத்து இருக்கா.
இந்த விஷயம், நாலு வருசமா வேறு யாருக்கும் தெரியாது. நாலு வருசமா, அவனைத் தன் கணவனாக நினைத்து, அவன் கூட மனதளவில், குடும்பம் நடத்தி, பேரன் பேத்தி வரை எடுத்துட்டா.
இவ காதலிப்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. போய் அவன் கிட்டேயாவது சொல்லி இருக்கனும், இல்லை அப்பா, அம்மா, பாட்டி, இவங்கக் கிட்டேயாவது சொல்லி இருக்கணும்… இவங்க கிட்டே சொல்லத் தயக்கமாய் இருக்கிறது என்றால், விஜய் கிட்டேயாவது சொல்லி இருக்கணும்.
இது எதையுமே செய்யலை இந்த மேடம். அவனுக்கு வேறு பெண்ணோடு, மேரேஜ் பிக்ஸ் செய்தாங்கன்னு கேள்விப்பட்டு இருகாங்க மேடம். சோ, ‘கிழக்கே போகும் ரயில், கடலோர கவிதைகள்’ ன்னு முடிவுக்கு வந்துட்டா.
அதான்மா ரயிலின் முன் பாய்வதா இல்லை,
‘வங்காளக் கடலே!…
என்னை உன் ஆசை விடலை…’ என்று தற்கொலைக்குப் பிளான் போட்டுட்டாங்க மஹாராணி.
இப்போ சொல்லுங்க அம்மா. இவளை நான் அடித்ததில், தப்பு இருக்கா?” என்றாள் மதுரா.
முகத்தில் டன் கணக்காய் அசடு வழிய, செய்ய இருந்தப் பைத்தியக்காரத் தனத்தை நினைத்து, நெளிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் பூரணி.
“ஏன் பூரணி!… இப்படி முடிவு எடுக்கும் முன், அப்பா, அம்மா, பாட்டிப் பத்தி நெனைச்சு பார்க்கவே தோணலியா உனக்கு?…
வாய் திறந்து இவங்கக் கிட்டே, ஒரு வார்த்தைச் சொல்லி இருந்தா, அந்தப் பையனுக்கே, உன்னைப் பேசி முடிச்சு இருப்பங்களே!…” என்றார் பவானி, கண்ணில் நீர் வழிய .
“அது எப்படி அம்மா சொல்லுவா! அதான் அவனுக்கும், வேறு பொண்ணுக்கும் திருமணம் என்று பெரியவங்க பேசி வைத்து இருக்காங்கலே!… இவங்கக் கிட்டேச் சொல்லி இருந்தா, மட்டும் என்ன செய்து விடப் போறாங்க?” என்றாள் மதுரா.
“லூசாடீ நீ?… எத்தனையோ திருமணம், மணமேடை வரை வந்து, கடைசி நிமிடத்தில் கூட, ஜோடி மாறிப் போய் இருக்கு. என்னவோ பேசி வைத்திருப்பதற்கெல்லாமா இப்படித் தயங்குவாங்க?…” என்றார் பவானி கடுப்போடு.
“ஓஹ்!… அப்படி ஒன்னு இருக்கோ!…. சரி மாப்பிளை வீட்டில், இவங்க போய் பேசத் தயங்கறாங்கம்மா… பொண்ணு, அவன் குடும்ப நண்பரின் மகளாம். ரொம்ப அழகா வேறு இருப்பாளாம் அதான்!…” என்றாள் மதுரா.
‘இதுவரை ஒகே!… இப்போ, இந்த ஸெல்ப் டப்பா தேவையா மதுரா?’ என்று மதுராவின் மனம், அவளைப் பார்த்துக் கடுப்பாகிக் கேட்டது.
“யாராய் இருந்தா என்ன, அவ எவ்வளவு பெரிய அழகியா இருந்தா என்ன!… இவங்கக் குடும்பம் போலே வருமா!… இல்லை பூரணியின் அழகு, குணம் முன், அந்தப் பெண் தான், நிற்க முடியுமா?….
நீங்க வாங்க அக்கா… நாம போய்ப் பேசலாம்…” என்றார் பவானி.
“அம்மா!… இது ரொம்ப மோசம். என்னத் தான் உங்களுக்கு, உங்க கோ -சிஸ்டர் மேல, இந்த அளவுப் பக்தி இருந்தாலும், ‘அதற்குன்னு என்னை அழகி இல்லை’ என்று சொன்னதை, மிக வன்மையாகக் கண்டிக்கிறேன் யுவர் ஹானர்.” என்றாள் மதுரா.
“என்னடி உளறிட்டு இருக்கே!… எவளையோ சொன்னா, உனக்கு என்ன?” என்றார் பவானி.
“அந்த எவளோ, இந்த இவளே!.” என்று கையால் சைகைக் காட்டிய மதுரா, என்ன சொல்கிறாள் என்று பவானிக்கு விளங்கி விட, அதிர்ந்து போனார்.
தன் தாயின் அருகே அமர்ந்து, அவர் கையைத் தன் கையில் வைத்துக் கொண்ட மதுரா, “நம்ம பூரணி காதலித்து, புருஷனாய் நினைத்து நாலு வருசமாய் வாழ்ந்து வந்தது, அவன் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்றது எல்லாம் கார்த்திக்காகத் தான் அம்மா.
இப்போ சொல்லுங்க பூரணிக்காகக், கோசலை அத்தைக் கிட்டே பேசப் போறீங்களா!… இல்லை, ‘என் மக வாழ்க்கைத் தான் முக்கியம்’ என்று பக்கம், பக்கமாய் டயலாக் விடப் போறீங்களா!
இருங்க, இன்னும் கொஞ்சம் இருக்கு. கோசலை அத்தை, முதல் முறைப் பெண் கேட்டு வந்த போது, கார்த்திக் கை உடைந்ததே, அது தானாக உடையலை. கார்த்திக் சார், அவராக அந்தப் பேச்சை நிறுத்த, உடைத்து கொண்டது.” என்று மதுரா சொன்னதைக் கேட்டு, திகைத்துப் போனவராய் கார்த்திக்கை நிமிர்ந்து பார்த்தார்.
அவர் முகத்தை, நேராக சந்திக்க முடியாமல், எங்கெங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
“ஏன், என்று கேட்கறீங்களா!.
தங்கச்சியாக மனதில் நினைக்கும் என்னோடு, அவனால் திருமணம் என்பதை ஏற்க முடியலை. ரகுவும் அவனும் தானேமா என்னைத் தூக்கி வளர்த்தாங்க. எங்க ரெண்டு பேருக்கும் அண்ணன், தங்கை என்ற உணர்வுத் தான் இருந்தது.
‘கணவன், மனைவி’ நினைப்பே குமட்டுதும்மா. பூரணிக்காக இதைச் சொல்லை. பூரணி என்ற ஒரு பெண் வரவில்லை என்றால், கூட இதே நிலை தான் எனக்கும், கார்த்திக்கும்.
அவன் போட்டோ, வீடியோ விஷயத்தை, இதனால் தான் ஊதிப் பெருசாக்கித் திருமண பேச்சை நிறுத்தி விட்டு, அதை சாக்காக வைத்து வேலைக்கு ஓடினேன்.
பெரியவங்க உங்களுக்கு ஆசை இருக்கலாம். ஆனா, எங்க மனதில் இருப்பது பாசம் மட்டும் தான். புரிஞ்சுக்கோங்கம்மா. கார்த்திக் எனக்கு அண்ணன் போன்றவன்.” என்றாள் மதுரா.
மதுரா அங்கே, ஆடிய மினி நாடகத்தை, ‘ஆஹாஹா…’ வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர் அங்கிருந்தவர்கள்.
சற்று நேரம் எதையும் பேசாதப் பவானி, “சொல்லி இருக்கலாமே மதுக்குட்டி! ரொம்ப கஷ்டமா இருக்குடா. இதைச் சொல்ல நீயும், அவனும் பயந்து, தயங்கி…. சாரிடா கண்ணம்மா!
நீ கவலைப்படாதே!…. பூரணி தான் கார்த்திக் மனைவி. கோசலை கிட்டே நான் பேசிக்கறேன். இனி உன் விருப்பம் இல்லாமல், உன் திருமணம் பற்றிப் பேசமாட்டேன். நீ யாரை கைக்காட்டுகிறாயோ அவர் தான் உனக்குக் கணவன்.” என்றார் பவானி, மகளை அணைத்து.
“ஹிட்லர்!… பிரேக் போடுங்க. என்ன நீங்கப் பாட்டுக்கு, ‘அரசியல்வாதியின் தேர்தல் நேர வாக்குறுதி’ மாதிரி, வாக்குக் கொடுத்துட்டே போறீங்க! சங்கு ஒருத்தர் போதும், உங்களுக்குச் சங்கு ஊத… ஆத்துகாரரை மறந்துட்டு பேசிட்டே போறேளே மாமி!….” என்றாள் மதுரா.
“அவர் கிடக்கார். விட்டுத்தள்ளு. அவரெல்லாம் ஒரு மனுஷன் அந்த ஆளுக்கு முக்கியத்துவம் கொடுத்துட்டு. அந்தக் காலம் எல்லாம், மலை ஏறி போயாச்சு.
கார்த்திக், பூரணியைக் கூட்டிட்டு ஓடிப் போய்ட்டான்னு ரீல் விட்டா போச்சு. ஆனா, ஒண்ணு, உன் சம்மதம் இல்லாம, உன் திருமணம் நடக்காது. கோசலை, அண்ணாவை நாளைக்கே வரச் சொல்லிடுறேன்…” என்றார் பவானி.
“சோ ஸ்வீட் ஆப் யு மீ டியர் அம்மா! திருமணம் முடிந்து, குன்னூர் போகும் வரை, பூரணி நம் கூடவே இங்கேயே இருக்கட்டும். எவ்வளவு சீக்கரம் முடியுமோ, அவ்வளவு சீக்கரம் இவங்க மேரேஜ் முடிச்சிடலாம்.
பெரியப்பா!… பெரியம்மா!… பாட்டி!… இப்போ ஒகேவா?… சோ ரிலாக்ஸ்ஸா இன்னைக்கு இங்கேயே தங்கிடுங்க.
கார்த்திக்!… என்னால் முடிஞ்ச தரகர் வேலை செய்துட்டேன். சோ, எல்லோருக்கும் ஈவினிங் ஸ்னாக்ஸ், நைட் விருந்து, உன் ட்ரீட்…” என்றவள்,
“அம்மா!… கருணா சார், ஏதோ அக்ரீமெண்ட் விஷயமா வரச் சொன்னார். போய் முடிச்சு கொடுத்துட்டு வந்துடுறேன்.” என்றவள் அனைவரிடமும் விடை பெற்று, முகத்தில் நிறைவான புன்னகையுடன் வெளியே வந்தாள்.
கார் கதவைத் திறந்தவள், “சாரி விஜய்!… அம்மாவைச் சரி செய்துட்டு வர, லேட் ஆகிடுச்சு.
கார்த்திக், பூரணி ரூட் கிளியர். கொஞ்சம் நகர்ந்து பேசேன்ஜ்ர் சீட்டில் உட்காருங்க விஜய்.” என்றாள் மதுரா.
அவளை முறைத்த விஜய், “ எதுக்கு நான் நகரணும்?…முடியாது. கீழே இறங்கு. டைம் ஆச்சு. நான் கிளம்பணும். சாவியைக் கொடு.” என்றான்.
“நீங்க நகரவில்லை என்றால், உங்க மடி மீது தான், நான் அமர்ந்து வண்டி ஓட்டணும். உங்களுக்கு ஒகேனா எனக்கு ப்ரோப்லம் இல்லை விஜய்…” என்றவள் உள்ளே ஏறி விட, பதட்டத்துடன் பக்கத்துக்குச் சீட்டுக்கு நகர்ந்தான் விஜய்.
“தட்ஸ் எ குட் பாய்!” என்றவள் காரைக் கிளப்பினாள்.
‘ஐயோ!… ஐயோ! ஒன்றும் தெரியாத அப்பாவி, ஆண் பிள்ளையைப் பட்ட பகலில், கடத்திட்டு போறாளே!..
காலம் கெட்டு போச்சு.
விஜய்யைக் காப்பாற்ற யாருமே இல்லையா!…
தெய்வமே!…
இந்த அநியாயத்தைத் தடுக்க, யாருமே இல்லையா?’ என்று மனதிற்குள் சேதுவும், கார்த்திக்கும், பாலாஜியும் அலறியது வேறு யாருக்கும் தெரியாது.
விஜய்யை காரில் கடத்திக் கொண்டு மதுரா செல்ல, அவர்கள் செல்ல வேண்டிய தூரம் சற்று அதிகம் என்பதால், அவர்கள் பயணம் நடந்து கொண்டிருக்கும் போது, சூர்யாவை பார்த்து விட்டு வருவோம்.
விஜய்யும், மதுராவும் காரில் சென்று கொண்டிருக்க, சூர்யப் பிரதாப், தனது உடற்பயிற்சிக் கூடத்தில் இருந்தான்.
அவனை நெருங்கினான் அவன் தோழன், பாதுகாவலன் உத்தம் சிங்.
“பாஸ்!…” என்றான் உத்தம்.
“சொல்லு உத்தம். டுடே என்ன ஸ்பெஷல்?” என்றான் தன் உடற்பயிற்சியைத் தொடர்ந்தவாறே.
“பாஸ்!… நேத்து நைட் நீங்கத் தூங்கிட்டிங்க. சோ, சோனா சைன் செய்த டாக்குமெண்ட்ஸ், உங்கக் கிட்டே கொடுக்கலை… இந்தாங்க…” என்றவன் மூன்று அக்ரீமெண்ட்களை சூர்யாவிடம் கொடுத்தான்.
முதல் அக்ரீமெண்ட், ‘மதுரா வேலை ரிசைன் செய்தால், நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய, ஒரு கோடி ரூபாய் தேவை இல்லை.
மதுராவின் ஆபீஸ் வேலையில், எந்தத் தப்பும் இல்லை.
கஜா இண்டஸ்ட்ரீஸ் விட்டு, மதுரா செல்வது, அந்த நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்று அச்சடிக்கப்பட்டு இருக்க சோனா, சைன் போட்டு, அது ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருந்தது.
இரண்டாவது அக்ரீமெண்ட், ‘சங்கரன் வாங்கியக் கடன் வட்டியுடன், ரொக்கமும் பெற்று கொண்டதாகவும், எந்தக் கடனும் அவர் மேல் இல்லை’ என்று இருந்ததிலும், சோனா கையெழுத்து போட்டு இருந்தாள்.
அதுவும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருந்தது.
“உத்தம்!… ஈவினிங்… மதுராக் கிட்டே, இந்த அக்ரீமெண்ட்ஸ் ரெண்டையும் கொடுத்திடு. அங்கே ஒரு லெட்டர் இருக்கு. மதுராவுக்கு, என் ஆஃபிஸில் பி.ஏ வேலைக்கு அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர்.
அவ ஒகே என்றால், ‘என் ஒட்டுமொத்த கம்பெனிக்கே அவ தான் மேனேஜிங் டைரக்டர்!..’ என்று சொல்லிடுவேன். ஆனா, அவ ஒகே சொல்ல மாட்டா. உனக்கே தான் அவ குணத்தை பற்றித் தெரியுமே!… அதான் அட்லீஸ்ட் செக்ரட்டரி போஸ்ட். “என்றான் சூர்யா, அந்த இரண்டு டாக்குமெண்ட்ஸ் உத்தமிடம் கொடுத்தபடி.
“பாஸ்!… நீங்கப் போய்க் கொடுத்தா சினிமாவில், கதைகளில் வருவது போல, மேடம் இம்ப்ரெஸ் ஆகிடுவாங்க தானே!… எதற்குச் சான்ஸ் மிஸ் பண்றீங்க?…
நீங்களே போய்க் கொடுங்க. நடுவில் நான் எதற்கு நந்தி மாதிரி?” என்றான் உத்தம்.
“ஆஸ் எ பிரண்ட் ,இதை நான் செய்யறேன். அது என் கடமை. இதை வைத்து மதுராவின் மனதில் இடம் பிடிக்க நினைப்பது கேவலம் உத்தம். எங்க பிரண்ட்ஷிப்க்கு இது ஒத்து வராது. அவ, என்னை, எனக்காக ஏற்கணும். இதுக்காக எல்லாம் இல்லை.
மதுராவை, சோனாவிடமிருந்து காப்பாற்றுவது தோழனாய் என்னுடைய பொறுப்பு.
ஒரு உண்மையான நண்பன் என்பவன் ஆபத்தில் இருக்கும் தோழமையை, அவர்கள் கேட்காமலே காப்பாற்றுவான். அதைத் தான் நான் செய்தேன்.
இதனால் மதுராவை இம்ப்ரெஸ் செய்யவோ, இதைக் காட்டி மதுராவை கார்னெர் செய்வதோ, எங்கள் நட்புக்கு நான் செய்யும் மரியாதை இல்லை. அதைவிட மதுராவின் பெண்மைக்கு, விலை வைப்பதை போன்றதாகி விடும்.” என்றான் சூர்யா, புன்னகைத்தபடி.
“அப்போ, அந்த முன்றாவது டாக்குமெண்ட் விஜய் கிட்டே கொடுத்துடுவா?” என்றான் உத்தம், சூர்யா கையில் இருந்த கடைசி டாக்குமெண்ட் சுட்டிக் காட்டி.
முன்றாவது அக்ரீமெண்ட் மேல் சூர்யாவின் கண்கள் மறுபடியும் விழுந்தது.
கொட்டை எழுத்தில் இருந்தது, ‘டைவோர்ஸ் நோட்டீஸ்’ என்று.
மதுராவின் நாலு கோடிக்குச் சைன் வாங்கும் போது, விஜய்க்கும், சோனாவிற்கும், ‘விவாகரத்து பத்திரத்திலும்’ கையெழுத்து சோனாவிற்கே, தெரியாமல் வாங்கி இருந்தனர் .
சங்கரன் விஷயத்தில், சோனா செய்தது, திரும்ப அவளுக்கே சூர்யா ரூபத்தில் திரும்ப வந்து விட்டது.
அந்தப் பத்திரத்தில், விஜய்யின் போலி சைன் போடப்பட்டு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் கையெப்பமும், சீலும் இருந்தது. விவகாரத்தை உறுதிச் செய்து இருந்தார்.
விஜய்க்கும், சோனாவிற்கும் சட்டப்படி, விவாகரத்து ஆகி இருந்தது.
எப்பொழுதுமே, விஜய், ‘சோனாவின் கணவன் இல்லைத் தான்’ என்றாலும், இனி மேல் சட்டபடியும், ‘அவன் கணவன் இல்லை’ என்பதை, அந்த விவாகரத்து பத்திரம் உறுதிச் செய்தது.
“இது, என் கிட்டேயே இருக்கட்டும் உத்தம்.” என்ற சூர்யா, அந்த டாக்குமெண்டைத் தூக்கி, டேபிள் மேல் போட்டான்.
“என்ன பாஸ் இது!… இது கொடுத்தா விஜய், எவ்வளவுச் சந்தோசபடுவார்! நாலு வருட நரகத்திலிருந்து, விடுதலை கிடைத்து விடுமே!…” என்றான் உத்தம்.
“உத்தம்!… இது மட்டும் விஜய் கையில் கிடைச்சுதுன்னு வை… அவ்வளவுத் தான்.
மதுராவைத் தூக்கிப் போய், அவன் தாலிக் கட்டுவதை, யாராலும் தடுக்க முடியாது.
நான் மதுராவிற்கு தான் ஹீரோ! விஜய்க்கு நான் வில்லன்.
கொஞ்சம் நானும் சுயநலவாதி தான். இந்தத் தடவை மதுரா, என் கையிலிருந்து தப்ப முடியாது.
தமிழில் ஒரு பழமொழிகௌ கேள்விப்பட்டு இருக்கியா உத்தம்? ‘தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும்’ என்று சொல்வாங்க. அதே மாதிரி தான் இது.
நான் நல்லவன் தான். ஆனா, விஜய் அளவுக்கு நல்லவன் இல்லை. அவனை மாதிரி, ‘தியாகச் செம்மல்’ வேலை எல்லாம் என்னால் செய்ய முடியாது. அவனுக்கு வேண்டும் என்றால், கார்த்திக்குக்கு, மதுராவை தாரை வார்க்க, மனம் இருக்கலாம்.
ஏதோ சோனா கழுத்தில் தாலியே கட்டாமல், அவளைத் திருமணம் செய்ததாகவும், அதனால், அவனுக்கு மதுராவை மணக்கும் தகுதி இல்லை இன்று அவன் சொல்லிட்டு திரியலாம்.
அவன் லூசு மாதிரி செய்யும் வேலை எல்லாம், எனக்குச் சாதகமாகத் தான் இருக்கிறது. இந்தப் பத்திரம், அவன் கையில் கிடைத்தா எப்படி மாறுவான்னு சொல்ல முடியாது.
சோ, இந்த விஷயம் அவனுக்குத் தெரியாத வரை சந்தோசம். சோனாவுக்கு, இப்படி நாம் சைன் வாங்கியது தெரியாது. உயிர் போகும் நிலை வந்தாலும் கூட, இவளாகவே விஷம் சாப்பிட்டுட்டு, ‘விஜய் தான் கொடுத்தான்னு’ சொல்லி, அவனைக் கம்பி எண்ணும் வரை விடமாட்டா.
இல்லை திவாகரை விட்டு, ரூபிணிக்கு டார்ச்சர் தர ட்ரை செய்வா. விஜய், திவாகரை கொல்லுவான். சோ, எந்தப் பக்கம் பார்த்தாலும், விஜய் நிலைமை பரிதாபம் தான்.
மதுரா, எனக்குத் தான் மனைவி ஆவா…” என்றான் சூர்யா, ஜூஸ் அருந்தியபடியே.
“எப்பா!…. என்னமா பிளான் போடுறே சூர்யாஜி நீ!…
கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த கலவை நீ தானா!” என்றான் உத்தம் புன்னகையுடன்.
“வேற என்ன மேட்டர்?” என்றான் சூர்யா.
“ஆல்வின் சார், ரிப்போர்ட் செய்து இருக்கார்…” என்றான் உத்தம்.
“என்ன?…” என்றான் சூர்யா, அது வரை இருந்த இலகுத் தன்மை மறைந்து.
“சந்திரா மேடத்தைக் கடத்த நினைத்தாங்களே!… அது அவங்க பெயரில் இருக்கும், அந்த 50 கோடி ஈ.சி.ஆர் பரம்பரைச் சொத்துக்காகத் தான் என்கிறார்.
அந்தப் பக்கம் மத்திய அரசாங்கம், புது ஹார்பர் கொண்டு வரப் போறாங்களாம். லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் வேறு உண்டாம். கிட்டத்தட்ட நாலாயிரம் கோடி ப்ராஜெக்ட் இருக்கலாமாம். இன்னும் அரசு அறிவிப்பு வரவில்லை.
சோ, சந்திராவைக் கடத்தி, அவங்களை திருமணம் செய்து, அந்த இடத்தைப் பைசா செலவு இல்லாமல், அடையத் திட்டம் அது என்கிறார். இந்த விஷயம், சென்னையில் உள்ள மூன்று, மிகப் பெரிய புள்ளிகளுக்கு மட்டுமே தெரியுமாம்.
முதல் ஆள் கேசவ் ராவ்!…
அவர் இது மாதிரி செய்யமாட்டார். ரெண்டாவது, கஜேந்திரன்!
மூன்றாவது, மதுரை சுந்தரபாண்டியன்!…
கடைசி நொடியில், வெற்றி குரூப்ஸ் ருத்ரா!
இவங்களில் யாரவது ஒருத்தர் தான் என்கிறார் ஆல்வின்.” என்றான் உத்தம்.
“கேசவ் ராவ், மதுரை சுந்தரபாண்டியன், ருத்ரா, இந்த மாதிரி கேவலமான வேலை எல்லாம் செய்யமாட்டார்கள்
100% உறுதி. கஜேந்திரன் தான் குள்ள நரி. அந்தாளுக்கு நேர் வழியெல்லாம் தெரியவே தெரியாது.
பெண்களை இப்படி எல்லாம் சீப்பா பயன்படுத்தும் அடி மட்டப் புத்தியெல்லாம், அந்தாளுக்கு தான் வரும்.
எத்தனை ஆஃபீசருக்கு, இந்த ஆள் பெண்களைச் சப்லை செய்திருக்கான் என்று தான் தெரியுமே!…
கஜேந்திரனை, கார்னெர் செய்யச் சொல்லிடு. நம்ம ஆட்களுக்கும் நியூஸ் அனுப்பிடு.” என்றான் சூர்யா, யோசனையாக.
“இன்னொரு விஷயம்… கஜாவிற்கும் அந்தச் சுமனிற்கும் உள்ள லிங்க் சோனா மட்டும் தான். வேறு எப்படி லிங்க் என்று தெரியவில்லை. கஜாவும், சுமனும் சேர்ந்து, ஏன் இதைச் செய்து இருக்கக் கூடாது?… அவனுக்குப் பெண், இந்த ஆளுக்கு இடம்!…” என்றான் உத்தம்.
“இருக்கலாம்… சான்ஸ் இருக்கு. எப்படி திவாகரை வைத்து, விஜய்யை கார்னெர் செய்தேனோ, அதே போல், ‘சுமன் கையில் சிக்கியப் பெண்ணிற்கு வாழ்வு’ என்று எவனையது வாழ்க்கை தரேன்… கத்திரிக்காய் தரேன்’ என்று அனுப்பி வைத்திருப்பார்.
சுமன், ‘பெண்ணைத் தொட்டாலும், தொடாவிட்டாலும், ஒரு நாள் இரவு அவனுடன் இருந்திருக்கிறாள்’ என்பதைப் பயன்படுத்தியே, ‘சந்திராவிற்கு வரும் வரனை’ எல்லாம் தடுத்து இருப்பார்.
அந்த ஆள் தும்மினால் கூட, எனக்கு நியூஸ் வரணும். அவங்க வீட்டு, எல்லா இன்கமிங், அவுட் கோயிங் கால்ஸ், சோசியல் மீடியா மெசேஜ் எல்லாம் ட்ராக் செய்யச் சொல்லிடு.
பெஸ்ட் 24 ஹவுர் சர்வைலென்ஸ் இருக்கட்டும். அந்த, ‘இந்தர் இண்டஸ்ட்ரீஸ்’ ஷேர் நம்ம கிட்டே எவ்வளவு இருக்கும் உத்தம்?” என்றான் சூர்யா, தாடையைத் தேய்த்த படி..
“8-10% இருக்கலாம் சார்…” என்றான் உத்தம்.
தவம் தொடரும்…





