59
“விஜய்!… வாப்பா… ‘உத்தம் ஏன் வந்தான்?’ என்று மதுராக் கிட்டே கேட்கணும் இல்லையா!… வா உள்ளே…” என்றார் சேது, மகனின் கவனத்தைத் திசைத் திருப்ப.
பெருமூச்சு விட்டுத் தன்னை வழக்கம் போல் சமாளித்து நிமிர்ந்தவன், தந்தையின் மனம் புரிந்தவனாக, உள்ளே சென்றான்.
அங்கு, எந்தக் கவலையும் இல்லாமல், தனக்காக இருவர் மோதலுக்கு நிற்பதை பற்றிச் சற்றும் அறிந்து கொள்ள அக்கறைக் காட்டாதவளாக, உத்தம் வாங்கி வந்து இருந்த, ரசமலாய் இனிப்பை விழுங்கிக் கொண்டு இருந்தாள் மதுரா.
‘நல்லா வருவே மா நீ!… ரோம் பற்றி எரியும் போது, நீரோ என்னும் மன்னன் பிடில் வாசித்துக் கொண்டு இருந்தானாம். நீ அந்த category போல் இருக்கு.
ஒருவேளை,
‘ராமன் ஆண்டாலும்…
இராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலை இல்லை..’ என்று விட்டா பாடுவியோ!’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார் சேது.
“மதுரா!.. சொல்லுமா…” என்றார் சேது, அவள் எதிரே அமர்ந்து.
“ரசமலாய் நல்லா இருக்கு பெரியப்பா. ஆனா, என்ன, பாதம் பால் தான் கொஞ்சமா இருக்கு.” என்றாள் மதுரா, அது தான் உலக மகா, மெகா இம்பார்ட்டண்ட் விஷயம் என்பது போல.
சேது முகம் போனப் போக்கைக் கண்டு, விஜய் வாயைக் கையால் மறைத்துத் தன் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு, மதுரா மீண்டும் ஸ்வீட்டில் கவனம் செலுத்தினாள்.
“நான், அதைக் கேட்கலை மதுரா.” என்றார் சேது.
“ரொம்ப தேங்க்ஸ் பெரியப்பா. எனக்கே இது பத்தாது. நீங்க வேறப் பங்குக்கு, வந்துடீங்களோ, என்று பயந்து தான் போய் இருந்தேன்.
அம்மா!… மீதம், இருப்பதை பிரிட்ஜில் வைய்யுங்க. எண்ணிப் பார்த்துட்டேன். இன்னும் மீதம் எட்டு இருக்கு. யாருக்கும் கொடுக்காதீங்க.” என்றாள் மதுரா.
பவானி தலையில் அடித்துக் கொள்ள, விஜய் பொங்கி வந்தச் சிரிப்பை இருமலாக மாற்றிச் சமாளித்தான்.
அவள் குணம் அறிந்தவன் ஆயிற்றே!..
அவள் பண்ணும் அலம்பலை, அவனால் ரசிக்க மட்டுமே முடிந்தது.
“மதுரா!… உத்தம் ஏன் இங்கு வந்தான் என்று பெரியப்பா கேட்கிறாங்க. யாரும், உன் ஸ்வீட்க்கு பங்குக்கு வரவில்லை. தீனிப் பண்டாரம்.” என்றாள் சுபா கடுப்போடு.
எதையும் பேசாத மதுரா, அவள் அருகே வைத்து இருந்த, அக்ரீமெண்ட்ஸ் இரண்டையும் எடுத்துச் சேதுவிடம் கொடுத்து விட்டுத் தன் வேலையை –அதான் ஸ்வீட் சாப்பிடும் வேலையைச் செவ்வனே செய்தாள்.
ஒவ்வொருவராய் படித்தவர்கள் தான் திகைத்துப் போய் அடுத்து என்ன பேசுவது, செய்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
அக்ரீமெண்ட் விஷயம் அதுவரை தெரியாத பவானி, கார்த்திக், ரகு தான் அதிகமாக அதிர்ந்தது.
மற்றவர்களுக்குச் சூர்யாவின் அதிரடி அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டு இருந்தது.
கோபமாக எழுந்து வந்த பவானி, மதுராவின் தலையில் கொட்டி, “எருமை!… எருமை…. மூக்கு முட்டச் சாப்பிடத் தெரியுது இல்ல!… ஒரு ஒப்பந்தம் சைன் செய்யும் போது, ஒன்றுக்கு நாலு முறை படித்துப் பார்த்துச் சைன் பண்ண மாட்டியா?
இன்னும் என்ன எல்லாம், அந்தச் சோனா பிசாசு செய்து இருக்கு? என் கிட்டே இருந்து, இன்னும் எதை எல்லாம் மறைத்து இருக்கே!…
படிச்சவ தானேடீ!… லட்ச, லட்சமாய் இதற்குத் தான் கொட்டிப், படிக்க வைத்தோமா?….
தத்தி!…. தத்தி!….” என்றார் பொரிந்து தள்ளினார் பவானி.
டீச்சர் மகள், மக்காய் இருந்தால், அவருக்குக் கோபம் வருமா, வராதா?
“ஹிட்லர் மேடம்!… ரிலாக்ஸ். நீங்கப் படம் எல்லாம் பார்ப்பதேக் கிடையாதா?
காசு!….பணம், துட்டு, மணி!… மணி இருந்தா… இதுபோல் ஆயிரம் போலி கையெழுத்து பத்திரம் தயாரிக்க முடியுமாம்.
நான் சொல்லலை மாதாஜி!… என் எருமை சாரி சகோதரி தான் செப்பினாங்க. நான் கையெழுத்து போட்ட அக்ரீமெண்ட்டில், இது மாதிரி எல்லாம் இல்லவே இல்லை என்னும் போது, என்னைக் குறைச் சொல்லி, என்ன யூஸ் சொல்லுங்க?
சரி, அதை விடுங்க என்னுடைய பத்திரமாவது போலிப் பத்திரம், போலி கையெழுத்து!…
பட், அடுத்த அக்ரீமெண்ட் மிசஸ். பவானி, அதான்மா உங்க புருஷர் உயர்திரு. சங்கரன், தி கிரேட் ஆடிட்டர், நீதி, நேர்மை, நியாயம், தர்மம் என்று வாழ்ந்தவர், ‘மூன்று கோடி கடன் வாங்கியதாக’ உண்மை கையெழுத்து போட்டு இருக்காரே, அதை என்ன சொல்லப் போறீங்க?
‘சித்தப்பான்னு கண் கலங்கி, அப்பாவுக்குப் போன் போட்டுக் கொடுத்தேன். அந்தப் பக்கம் பேசிக் கொண்டே, இந்தப் பக்கம் எதையும் படித்துப் பார்க்காம கையெழுத்து போட்டுக் கொடுத்து விட்டார் உன் தந்தை.
என் தாத்தா சொன்னது போல், உன் டாடி யூஸ்லெஸ் தான்…’ என்று சோனா மேடம், சொன்னாங்க மிஸ்சஸ் சங்கரன்.
இப்போ சொல்லுங்கமா யார் தத்தி?
யார் சாப்பிட மட்டும் தான் லாயக்கு?
என்ன நாட்டாமை!…
சத்தத்தையே காணொம்!…
தீர்ப்பை மாத்தி சொல்லுங்க.
புருஷன் என்று வரும் போது மட்டும், வாயேத் திறக்க மாடீங்களே!
‘வெண்ணை ஒரு கண்ணில், சுண்ணாம்பு ஒரு கண்ணில்’ என்பது இது தானோ!…” என்றாள் மதுரா, சற்றும் அலட்டிக் கொள்ளாமல்.
மகளின் கூற்றில் உள்ள உண்மை சுட, பவானிக் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்.
உண்மை சுட தானே செய்யும்!
“முடிந்து போன விஷயத்தைப் பற்றிப் பேசுவதால், பயன் இல்லை மதுரா. இப்போ நடந்தது பற்றித் தான் தெரிய வேண்டும் சூர்யா, எதற்குச் சோனாவிற்கு நாலு கோடி கொடுத்து இந்த அக்ரீமெண்ட் கான்செல் செய்யணும்?” என்றார் மரகதம்.
“பாட்டி!… உங்கப் பேத்திக்குச், சூர்யா நாலு கோடி கொடுத்ததாக, நான் சொல்லவே இல்லையே!… நீங்களா கற்பனை செய்து கொண்டால், நான் என்ன செய்ய முடியும்?” என்றாள் மதுரா.
“என்னது!… நாலு கோடி சூர்யா கொடுக்கலையா? அப்புறம் எப்படி, இந்தப் பத்திரத்தில் சோனா சைன் போட்டா?” என்றான் விஜய்.
“நாலு கோடி கொடுக்கலையாம்… நாலு அறைத் தான் கொடுத்தாராம் சூர்யா. அப்படித் தான் தன்வீர் அண்ணா சொன்னாங்க.” என்றாள் மதுரா.
“என்னது!…” பல குரல்கள், ஒரே காலத்தில் திகைப்பில் ஒலித்தது .
“சோனா அடி வாங்கினா, இத்தனை பேர் சந்தோசபடுவாங்கன்னு தெரியாம போச்சே!..
என்ன மிஸ்டர்.விஜய், எதற்கு இந்த அளவு ஷாக்? நீங்க அதைச் செய்ய முடியலை என்றா?” என்றாள் மதுரா தலை நிமிராமலே.
அவன் பதில் சொல்வதற்குள், “அடிங்க!… சிரியவங்க, பெரியவங்கனு மரியாதை இல்லாம…. தோலை உருச்சுடுவேன். என்ன இருந்தாலும், அவர் உன் அக்கா கணவர்… மரியாதையா பேசு.” என்றார் பவானிக் கோபமாக.
“ஓஹ்!… மாதாஜி!… நீங்க இன்னும், ‘கதை கருவுக்கே’ வரலையா!… so sad. ஸ்கிரிப்ட் உங்களுக்கு இன்னும் தெரியலை.
மதர்!…
‘இவர் கணவராக இல்லை’ என்பது தானே, சோனாவின் பிரச்சனையே!…
சோனா போதை மருந்து யூஸ் செய்து விட்டு, ரகளை செய்த போது, வாய் விட்டது தான். அதைச் சொன்ன நான், இந்த மேட்டரை சொல்லாமல் விட்டு விட்டேன்.
இவர், அவ கழுத்தில், திருமாங்கல்யமே கட்டவில்லையாம்.
ஒரு முடிச்சு கூடப் போடவில்லையாம். திருமாங்கல்யக் கயிறைச் சோனாவின் கழுத்தின் அருகே கூடக் கொண்டு போகவில்லையாம்.
அதை இவர் கையிலிருந்து பிடுங்காத குறையாய் வாங்கி, சோனா கழுத்தில் கட்டி, மூன்று முடிச்சி போட்டது சொர்ணா மேடம் தானாம்.
இது என் கற்பனை இல்லை. இங்கே இருக்கும் சோனா கூடச் சம்மந்தப்பட்ட யாரை வேண்டும் என்றாலும் கேட்டுப் பாருங்க.
தாலியே கட்டாத, இவர் எப்படிம்மா என் அக்கா கணவர் ஆக முடியும்?
அதுமட்டுமில்லம்மா அந்த மகாராணி, அந்தக் கால ஜெயமாலினி முதல் இந்த கால முமைத்கான் ரேஞ்சுக்கு,
‘ராரா!…
சரசுக்கு ரா ரான்னு!…’ என்று கூட ஆடிப் பார்த்து இருக்கா. ஆனா, பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்.
இவர் இன்னும் கல்யாணம் செய்தும், பிரம்மச்சாரியாக இருப்பதால் தான், என்னைக் கூட்டிப் போய்க் கேட்டா பாருங்க கேள்வி…
கேள்வியா அது?” என்றாள் மதுரா.
‘இவ எதற்கு இதை எல்லாம் கிளறுகிறாள்’ என்று புரியாமல், விஷயம் தெரிந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“இப்போ எதற்கு, மதுரா பழசை எல்லாம் பேசிட்டு இருக்கே!… விட்டுத்தள்ளு.” என்றார் சேது, பதட்டத்துடன்.
“என்ன பெரியப்பா!… அம்மா, ரகு, கார்த்திக் எல்லாரும் இன்னும் எவ்வளவுக் காலம் தான், பாதி உண்மை தெரிந்தவர்களாக இருப்பார்கள்!
அவங்களும் என் சொந்தக் கதை, ஜோகக் கதை எப்படியெல்லாம் யு டர்ன் வீ டர்ன் எடுக்குது என்று தெரிந்து, முழு பார்ம்க்கு வரட்டுமே!..” என்ற மதுரா, சோனா, ECR பங்களாவில் தன்னிடம் ஆடிய நாடகத்தை, சுமன் பின் தொடர்ந்ததை, விஜய்யும் மற்றவர்களும் ஒரு வருடமாய், தன்னைக் காப்பாற்றி கொண்டு இருப்பதை என்று அவள் அறிந்த விஷயங்கள் முழுவதையும், விஜய் தன்னை விரும்புவதை மட்டும் தவிர்த்து விட்டு, மற்ற விஷயங்களை அப்டேட் செய்தாள்.
ஆடிப் போன பவானி, சற்றுத் தள்ளாட அவரைத் தாங்கிப் பிடித்தான் விஜய். மதுராவை முறைக்கவும் தவறவில்லை.
சுபா அதற்குள் தண்ணீர்க் கொண்டு வந்து கொடுக்க, அதைப் பருகியவர் சற்றுத் தன்னைச் சமாளித்து கொண்டார்.
“ஒண்ணும் இல்லை ஆன்ட்டி. ப்ளீஸ் டென்ஷன் ஆகாதீங்க. நாங்க எல்லாம் இருக்கோம் இல்ல. மதுராவிற்க்கு எதுவும் ஆக விடமாட்டோம். ரிலாக்ஸ் ஆன்ட்டி! பயப்படாதீங்க.” என்றான் அவரை அணைத்து .
“தம்பி!… உனக்குக் கோயில் கட்டினா கூடப் பத்தாது. என் பெண்ணின் மானத்தை, என் குடும்பக் கௌரவத்தை காப்பாற்ற வந்த, ‘என் குலசாமி அய்யா’ நீயி.
உனக்குப் பட்டக் கடனை, எந்த ஜென்மத்தில் தம்பி அடைக்கப் போகிறேன்!
சொந்த அம்மா செத்தாக் கூட, விசா கிடைக்கலை, லீவு இல்லைன்னு வராத மகன், மகள் இருக்கும் காலம் இது.
ஆனா, நீ ஒரு வருசமா என் மக மானத்தை காப்பாற்றுவதையே வேலையா செய்துட்டு இருக்கியே!… உனக்கும், எங்களுக்கும் அப்படி என்ன அய்யா பந்தம்?
ரொம்ப நன்றி…”என்று கைக்கூப்பி கண் கலங்கி இருந்தவரைக் கண்டு, விஜய்க்கு தர்ம சங்கடமாய் போனது .
“ஆன்ட்டி!… ப்ளீஸ். இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் மட்டும் இல்லை ஆல்வின், சுபா, பாலாஜி, சேது அப்பா, அம்மா, பாட்டின்னு நிறைய பேர் ஒன்றாகச் சேர்ந்து தான் செய்தோம்.
கண் முன்னால், ஒரு அநியாயம் நடக்கும் போது, அதைத் தடுக்காமல், இருக்க முடியாது தானே! அதைத் தான் செய்தோம். இது பெரிய விஷயமே இல்லை.
நீங்க ரிலாக்ஸ் ஆகுங்க. மதுராவிற்கு ஒன்றும் இல்லை. அதை மட்டும் மனதில் வையுங்க. மத்த எல்லாவற்றையும் நாங்க பார்த்துக் கொள்கிறோம்.
இதுவரை மதுராவை இங்குப் பிணைத்து வைத்து இருந்தது இந்த அக்ரீமெண்ட் தான். அதான் இல்லை என்று ஆகி விட்டதே!… இனிமேல் நீங்க இங்கு இருக்க வேண்டாம்.
கிளம்பி குன்னூர் போய்டுங்க.
ஆல்வின் மதுராவிற்கு ஏற்ற நல்ல மாப்பிளையை பார்த்து ஏற்பாடு செய்வான்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம், மதுராவிற்கு திருமணம் முடித்து விடுங்க.” என்றவனைக் கண்டுப் பவானி கண் கலங்க, மதுராவோ, ஒற்றைப் புருவத்தை மட்டும் தூக்கி, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தாள்.
அவள் கண்களின் மின்னல் மட்டும், மதுரா அவன் பேச்சைக் கேட்டு உள்ளுக்குள் சிரித்து கொண்டு இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது.
“சரிங்க தம்பி. நீங்கச் சொல்வது போலவே செய்கிறோம்!
உங்களைத் தான் தம்பி, மலை போல் நம்பி இருக்கோம்!.. என் பெண்ணைக் கை விட்டு விடாதேப்பா. இனி என் மக உன் பொறுப்பு.” என்றார் பவானி.
‘நினைப்பது எல்லாம்
நடந்து விட்டால்
தெய்வம் ஏதும் இல்லை..’
கண்ணதாசனின் எவ்வளவு உயர்ந்த வரிகள்!
அங்கு அது தான் நடந்தது.
விஜய் பிளான்க்கு, பவானி சம்மதம் சொல்லிய மறுகணம், ரகுவின் போன் ஒலித்தது.
எடுத்துப் பேசியவன் மீண்டும் திகைத்தான்.
போன் பேசும் வரை, நன்றாக இருந்தவன், அதைப் பேசிய பின், ‘பேய் அடித்தது போல் ஆகிவிட்டதை’ முதலில் கவனித்தவள் மதுரா தான்.
‘என்ன ஆச்சு இவனுக்கு!… ‘பொறியில் மாட்டிய எலி போல்’ ரியாக்ஷன் கொடுத்துட்டு இருக்கான்!’ என்று எண்ணிய மதுரா,
“ரகு ப்ரோ!… முதலில் கொஞ்சம் உட்கார். நீ இருக்கும் நிலை பார்த்தால், மயங்கி விழுவாய் போல் இருக்கே!…
என்ன மேட்டர் சிக்கிம், பூட்டான் லாட்டரியில் ஜெயிச்சுட்டியா என்ன?” என்றாள்.
அவள் பேசிய பிறகுத் தான், மற்றவர்களின் கவனம், ரகு மேல் திரும்பியது.
‘நெருப்பு மேல், நிற்பவன் போல்’ நின்று கொண்டு இருந்தான் ரகு.
“என்ன ரகு!… என்னப்பா!… என்ன ஆச்சு?” என்றார் பவானி, மகனின் முகம் சரி இல்லாததை, பார்த்துக் குழம்பி போனவராய்.
“அம்மா!…அப்பா, அம்மா!…” என்றான் திக்கித் திணறி.
“அடேய்!… பல்லி வாயா!… தந்தி அடிக்காம மேட்டருக்கு வாடா. என்னமோ ஏதோன்னு பக்குபக்குனு இருக்கு. என்ன மிஸ்டர். சங்கரன் மீண்டும் எதையாவது இழுத்து வைத்து விட்டாரா என்ன?
வாய் திறந்து சொல்லித் தொலை.” என்றாள் மதுரா கடுப்பாக.
“அம்மா!… அப்பாவுக்கு ட்ரான்ஸ்பெர் சென்னைக்கு போட்டு இருக்காங்களாம். இவர் தான் தலைமை அதிகாரியாம். இவர் கீழே பத்து பேர் வேலை செய்யப் போறாங்களாம்!
குன்னூர் வீட்டைக் காலிச் செய்துட்டு, வந்துட்டு இருக்காராம். இங்கேயே வீடு அலாட் செய்து இருக்காங்களாம். உங்களுக்கும் இங்கேயே பிரின்சிபால் ஜாப் (ஒரு மிகப் பிரபலமான தனியார் பள்ளியின் பெயரைச் சொன்னவன்) அங்குக் கொடுத்து இருக்காங்களாம்.
இன்றைக்கு ஈவினிங் வந்துடுவாராம். வீடு அட்ரஸ் whatsapp செய்து இருக்காராம்… நல்ல நேரம் பார்த்து, உங்களைப் போய் பால் காய்ச்ச சொல்றார்.” என்றான் ரகு, அழுது விடும் குரலில் .
அங்கு இருந்தவர்களுக்கு சிரிப்பதா, அழுவதா என்று கூடப் புரியவில்லை.
விஜய் தான் அதிகம் நொந்து போனது.
அவன் மதுராவை, ஒவ்வொரு தடவையும், பாக் செய்ய நினைக்கும் போது எல்லாம், கடவுள், விதி சங்கரன் ரூபத்தில் விளையாடிப் பார்க்கிறது.
கொதித்து எழுந்தார் பவானி .
“டேய் கால் போடுடா அந்த மனுசனுக்கு. இவர் பாட்டுக்கு எப்போ பார்த்தாலும், ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்று முடிவு எடுக்க வேண்டியது.
மாட்டிட்டு முழிப்பது மத்தவங்க தான்.
இப்போத் தான், ‘என் மக சேதாரம் இல்லாம தப்பித்து இருக்கான்னு’ ஒரு நொடி சந்தோசபட்டேன். அது பொறுக்கலை உங்க அப்பாவுக்கு. இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு தெரியணும் எனக்கு.” என்றார் மிகக் கோபமாக.
“அம்மா!…” என்று இழுத்த ரகு, என்ன சொல்வது என்று புரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, அதுவரை நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்த மதுரா, மனதிற்குள் சிலக் கணக்கு போட்டவள் மெல்லிய புன்முறுவல் புரிந்தாள்.
“நான் சொல்லிட்டே இருக்கேன்!… என்னடா நீ, பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி அப்படியே நிற்கிறே!… அந்த மனுசனுக்கு கால் போடுடா…” என்றார் பவானி மீண்டும்.
“நீங்கப் போன் செய்து பேசினாலும், யூஸ் இல்லை மம்மி. அதான் அப்படி நிற்கிறான். மீண்டும் கோடிக்கணக்கில் பணம் கட்ட வேண்டி வருமே!” என்றாள் மதுரா.
“என்னடீ சொல்றே!.. சொல்வதை புரியும் படியாகச் சொல்லித் தொலை.” என்றார் பவானி .
“அம்மா!… இன்னுமா உங்களுக்குப் புரியலை!.
உங்களுக்குப் பிரின்சிபால் வேலை கொடுக்கப்பட்டு இருக்கும் பள்ளி யாருடையது என்று தெரியுமா? இளவரசர் சூர்ய பிரதாப்புக்கு சொந்தமானது.
ரகு, இதுவரை வேலை செய்து கொண்டு இருந்தது கூட, அவர் கம்பெனி தான். இங்கு மாற்றல் ஆகி வந்து இருப்பதும், அவர் கம்பெனிக்குத் தான்.
என் கெஸ் சரியாக இருக்கும் என்றால், அப்பா இதுவரை வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஆடிட்டிங் firm கூட, விலைக்கு வாங்கி, அப்பாவிற்குப் பதவி உயர்வு கொடுத்து, வீடு கொடுத்துச் சென்னைக்கு வரவழைத்து இருப்பதும் இளவரசர் சூர்யாவாகத் தான் இருக்கும்.
சிறு கல்லான சோனாவே, நாலு கோடிக்குச் செக் வைக்கும் போது, ‘சூர்யா போன்றவர், எத்தனை கோடிக்குச் செக் வைத்து இருப்பாரோ!’ என்று அண்ணாத்தை டர் ஆகிட்டு இருக்கார். சரி தானே ரகு பேட்டா?” என்றாள் மதுரா.
“உனக்கு எப்படி?…” என்று இழுத்தான் ரகு, மதுரா சொன்னது உண்மை என்று சொல்லாமல் சொல்லி.
“சிம்பிள் ப்ரோ… நீ ஸ்கூல் பேர் சொன்னதும் கெஸ் செய்தேன். சென்னையில், இப்போ ட்ரெண்ட்டில் இருக்கும், டாப் மோஸ்ட் ஸ்கூல் அது தானே!
அதன் உரிமையாளர் சூர்யா தானே!…. தவிர, சூர்யாவின் ஆடிட்டிங் கம்பெனி உலக அளவில் பேமஸ் ஆச்சே!
அப்பா சட்டென்று, இப்படி எல்லாம் ட்ரான்ஸபெருக்கு ஒத்துக் கொள்கிறார் என்றால், அது அவர் பெடெஸ்டலில் வைத்துப் பார்க்கும் அளவுப் பெயர் பெற்ற ஒரு நிறுவனமாக, இருந்தாலொழிய நடக்க சான்ஸ் இல்லை.
இத்தனை வருஷமா இருந்த குன்னூரை விட்டுட்டு, சென்னைக்கு ட்ரான்ஸ்ஃபர் ஆகிறார் என்றால், பின்னால் இருந்து அதை செய்து கொண்டு இருப்பது, மிகப்பெரியக் கையாகத் தான் இருக்க வேண்டும்.
சோ, உனக்குப் பெங்களூருவில் இருந்து ட்ரான்ஸபெர். எனக்குப் பி.ஏ வாக வேலை. சோ, மீதம் இருப்பது அம்மா, அப்பா மட்டும் தான். அவங்களுக்கும் சென்னையிலேயே வேலை ரெடி, தங்க வீடும் ரெடி.” என்றாள் மதுரா, தோளைக் குலுக்கி .
“அப்படி என்ன அந்தச் சூர்யாவிற்கு உன்மேல் அக்கறை!.
அவன் யாரு உனக்காக, இதை எல்லாம் செய்ய?
என்ன நினைச்சுட்டு இருக்கான் அவன்?
அவன் கோல் காட்டினால், ‘ஆடும் குரங்கு’ என்று நினைத்துக் கொண்டானா என்ன?” என்று பொரிந்தார் பவானி .
“ஏன்மா!… ‘எங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா’ன்னு சொல்ற மாதிரி, என்னைய ஏமா கரிச்சி கொட்டிட்டு இருக்கீங்க?
சூர்யாவிற்கு, என் மேல் என்ன அக்கறை, சக்கரை என்று எல்லாம் எனக்குத் தெரியாது. அவன் யாரு, என்ன எல்லாம் எனக்குத் தெரியுமா, தெரியாதா என்று கூட , எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
பட், இதேக் கேள்வியை, நீங்க ஏன் விஜய் செய்யும் போது கேட்கவில்லை அம்மா!…. விஜய்க்கும், ‘எனக்கும் என்ன உறவு, என்ன சம்மந்தம், எதற்காக வேலைமெனக்கெட்டு என்னைப் புதையல் காக்கும் பூதம் போல் காப்பாற்றிட்டு’ வருகிறார் அதுவும் ஒரு வருசமாய்.
இதை எல்லாம், ‘சேது பெரியப்பாவின் மருமகன்’ என்ற முறையில் செய்கிறார் என்றால், அவர் மருமகனே முதலில் இல்லை.
இல்லை முன்னே, பின்னே தெரியாத ஒரு பெண்ணிற்கு செய்கிறார் என்றால், சோனாவால் மேலும் இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுத் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏன் இவர் உதவவில்லை?
அவர்களைக் காப்பாற்ற ஏன் எதையும் செய்யவில்லை?
இவர், ‘செய்வது சரி என்றால், சூர்யா செய்வதும் சரி தானே அம்மா!
இவரைக் கடவுள் ரேஞ்சுக்கு, பேசிய நீங்கள், முன்னே பின்னே சந்திக்காதச் சூர்யாவைக் காய்வது ஏன்?
தவிர ஆஸ்திரேலியாவில், வேலையில் இருந்த கார்த்திக் சென்னைக்கு ட்ரான்ஸபெர் வாங்க, ‘வெற்றிக் குரூப்ஸ்’ தானே காரணம்.
இப்படி, இவங்க எல்லோருக்கும், ‘அல்டிமேட் எய்ம் என் பாதுகாப்பு’ ஒன்று தான் அம்மா.
‘Beggars can’t be choosers’ மா.
சூர்யா என்ன நினைக்கிறார் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. பட், மிஞ்சிப் போனால், ‘என்னை லவ்’ செய்பவராய் இருக்க வேண்டும். இல்லை மரேஜ்க்கு விருப்பப்பட்டு இருக்க வேண்டும்.
ஏன் சொல்கிறேன் என்றால், இந்த, ‘ரிஸ்க் எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரின்னு’ டயலாக் விடுவது, நாலு கோடிக்கு வழி செய்வது எல்லாம், காதலிக்கும் லூசுங்க தான் செய்யும்.
காதல் இல்லாமல், ஒருவன் ஒரு பெண்ணிற்காக, இந்த அளவு, எதையும் செய்யத் துணிய மாட்டான்.
அவர் செய்த உதவிக்கு, நன்றி சொல்லிட்டு, வேறு என்ன சொல்கிறார் என்று நாளைக் கேட்டு வருகிறேன்.
அப்படியே, உங்கக் கேள்விகளையும் கேட்டு விடுகிறேன்… ஒகே… டயர்ட்டா இருக்கு. நான் போய்த் தூங்குகிறேன். பை…” என்றவள் மத்தவர்கள் அதிர்ந்து இருக்க, அதை பற்றிக் கவலைப்படாதவளாய், தன் அறைக்குச் சென்று தாளிட்டுத் தூங்க சென்றாள்.
அவளுக்கு எப்படியோ!…
ஆனால், அவள் வெடித்து விட்டுப் போன அணுகுண்டு, நன்றாகவே வேலை செய்தது மற்றவர்களிடம்.
பவானி, தன் யோசனையில் முழுகி, தன் அறைக்குச் சென்று விட, மற்றவர்களும் கிளம்பி விட்டனர்.
யாரும், யாரிடமும் பேசும் நிலையில் இல்லை.
எதற்காகத் தூங்க போகிறாள்!
காரணம் இல்லாமல் எதையும் செய்யாத, மதுராவின் இந்தச் செயல் எதற்காக!
ஒருவேளை, அங்கு இருப்பவர்கள் நிலைமையை யோசிக்க அவகாசம் தருகிறாளோ?
அவர்களின் முன் உள்ள சூழ்நிலையை, விளக்கிச் சொல்லி விட்டு, யோசித்து முடிவு எடுக்க, இவர்களுக்கும் அவகாசம் தேவை தானே!
தவமாய் தவமிருப்போம்…






Very nice story