60
தன்னறையில் அவ்வைச் சொன்ன, ‘வாழ்க்கைத் தத்துவங்களை’ நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் பவானி.
‘ஒரு மகனின் அல்லது மகளின் முன்னேற்றத்தில், அவர்களின் தந்தையை விட அதிக அக்கறை கொண்டவர்கள் யார் இருப்பார்கள்?
தந்தை, தான் கற்றவற்றை, தான் செய்தத் தவறுகளை, அவற்றைத் திருத்திய விதத்தை எல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவான். எனவே தான், ‘தந்தையோடுக் கல்வி போம்.’
‘சேயோடு தான் பெற்ற செல்வம்போம்’.
பிள்ளைகள் தவறி விட்டால், எவ்வளவு செல்வம் சம்பாதித்து என்ன பயன்? அவர்கள் இல்லை என்றால், இருக்கும் செல்வத்திற்கு ஒரு மதிப்பு இல்லை.
‘மனைவி’ என்பவள், ‘ஒருவனுக்கு அனைத்துமாகி’ நிற்கிறாள்.
தாயாக, தந்தையாக, உடன் பிறப்பாக, உறவினர்களாக, பிள்ளையாக…’ எல்லாமாகி நிற்கிறாள்.
மனைவியோடு அறுசுவை உணவு, கல்வி, வாழ்க்கை, செல்வம், உடல் வலிமை என்று எல்லாம் போய் விடும் என்கிறாள் அவ்வைப் பிராட்டி.
மனைவியின் முக்கியத்துவத்தை சொல்லும் அதே நேரத்தில், ஒரு மனைவி எப்படி இருக்க வேண்டும் என்றும் அவ்வை கூறுகிறாள்.
மனைவி என்பவள் ஒருவனுக்கு, ‘தாயைப் போல அன்புக் காட்டி, தகப்பனைப் போல அறிவுரைக் கூறி, உடன் பிறப்பைப் போல வலிமை கூட்டி, உறவுகளைப் போல வாழ்க்கைக்கு வளம் சேர்த்து இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட மனைவி போனால், எல்லாம் போய் விடும்.
இத்தனையும் தரும் மனைவியை, ஒருவன் எப்படிக் கொண்டாட வேண்டும்! இது புரிந்து, ‘இல்லறத்தைச் சொர்க்கமாய் மாற்றும் வித்தைப்’ பல கணவன்மார்களுக்கு புரிவதில்லை.
மனைவி மட்டும் அல்ல கணவனும், ‘ஒரு இல்லறம் என்ற வண்டிமாட்டுக்கு இன்னொரு அச்சாணி’ தான்.
‘இரண்டில் ஒன்று இல்லை’ என்றாலும் வாழ்க்கைப் பயணம் சுமையாகி விடும்.
இந்த, ‘இல்லற தத்துவம்’ இத்தனை வருடத் தாம்பத்தியத்தில், தன் கணவன் புரிந்து கொள்ளவே இல்லையே!…
புரிந்து கொண்டிருந்தார் என்றால், முன்னர் சோனா உள்ளே வந்தே இருக்க முடியாது. இப்பொழுது சூர்யா!
இல்லறத்தின் அடிப்படை தாத்பரியத்தை, உணராத கணவனால், பிரச்சனைகள் ஒன்றிற்கு பின் ஒன்றாக வருவது மட்டும் நிற்கவேயில்லை.’ என்று யோசித்து, மனம் அமைதி இல்லாமல், அல்லாடிக் கொண்டிருந்தார் பவானி.
‘கணவனை எப்படி சமாளிப்பது, மகளின் வாழ்வை எப்படி காப்பாற்றுவது, சோனா அண்ட் கோ’வை எப்படி விலக்குவது’ என்று புரியாமல் மண்டை காய்ந்து போனார் பவானி.
சட்டென்று, ஒரு எண்ணம் வலுப்பெறத் தன் போனை எடுத்தவர் ஒரு நம்பருக்கு அழைப்பு விடுத்தார்.
நல விசாரிப்புகளுக்குப் பிறகு, முக்கிய விசயத்திற்கு வந்தார் பவானி.
“உங்களைப் பார்த்துப் பேசணும். விஷயம் உயிர், மானம் போகும் அளவு சீரியஸ். நாம் சந்திப்பது, வேறு யாருக்கும் இப்போதைக்குத் தெரிய வேண்டாம்.” என்றார் பவானி.
எதிர்புறம் ஒரு அட்ரஸ் கூறப்பட்டது .
“நாளைக்கு, இந்தப் பார்ம் ஹவுஸ்க்கு வா பவானி. உனக்குக் கொடுத்து இருக்கும் வாக்குப்படி, உனக்காக, என் உயிரையும் நான் கொடுப்பேன்.
நான் இருக்கும் வரை, உனக்கோ, உன் குடும்பத்திற்கோ, எந்தப் பிரச்னையும் வர விடமாட்டேன். என் பிரச்சனையில், மதுராவுக்கு வந்த ஆபத்தை, நான் கவனிக்கவில்லை தான்.
இனி இந்தத் தவறு நடக்காது. மதுராவின் வாழ்வு இனி என் பொறுப்பு.” என்றார் எதிர் முனையில் இருந்தவர்.
“தேங்க்ஸ்… ரொம்ப நிம்மதியா இருக்கு இப்போ தான். ரொம்ப கலங்கிப் போய் இருந்தேன். தேங்க்ஸ். இனி நான் நிம்மதியா இருப்பேன். நாளைப் பார்ப்போம்.” என்றவர், தன் அழைப்பைத் துண்டித்தார்.
மதுரா, விஜய், சூர்யா என்று, ‘முக்கோணக் காதல் கதைக்கே முடிவு தெரியாமல், குழப்பம் ஆரம்பித்து இருக்க, இதில் இன்னொரு ஆங்கில்’ கொண்டு வர, ஆவணச் செய்து கொண்டிருந்தார் பவானி.
மதுராவிற்காக விஜய், சூர்யா, ‘மோதுவது போதாது என்று இன்னும் ஒருவனைக்’ களத்தில் இழுத்துவிட முயன்று கொண்டிருந்தார் என்று சொல்ல வேண்டுமோ!😯😱
பவானி அழைப்பைத் துண்டித்த மறுகணம், சங்கரனிடமிருந்து அழைப்பு வந்தது.
இருந்த ஆத்திரத்தில், அந்த அழைப்பை ஏற்க மனமேயில்லை தான்.
ஆனால், சங்கரனின் மன நிலையை அறியாமல், எதையும் மேலும் பேசப் பவானி விரும்பவில்லை.
ஏனென்றால், சங்கரனுக்கு, ‘அடிக்க வேண்டியது வேப்பிலை மரத்தையே’ அல்லவா!
“பவா!…” மனைவியிடம் ஆறு மாதம் கழித்து பேசும், நெகிழ்வு சங்கரனனின் குரலில் பொங்கி வழிந்தது.
“சொல்லுங்க….” பவானியும் பாதிப்பில் தான் இருந்தார்.
ஏறக்குறைய முப்பது வருட தாம்பத்தியம் ஆயிற்றே!
“எப்படி இருக்கே பவா!….” என்றார் சங்கரன்.
“நல்லா இருக்கேன்.” என்று வாய் மொழியாகச் சொன்னவர், மனதிற்குள் ‘செய்யறதை எல்லாம் செய்துட்டு, கேட்கும் கேள்வியைப் பாரு’ என்று மனதிற்குள் கவுண்டர் கொடுத்துக் கொண்டு இருந்தார்.
“நான், எவ்வளவுச் சந்தோசமா இருக்கேன் தெரியுமா பவா?” என்றார் சங்கரன்.
‘நாங்க யாரும் சந்தோசமா இல்லையே!’
“அப்படியே, வானத்தில் பறப்பது போல் இருக்கு.” என்றார் சங்கரன்.
‘எங்களுக்கு அப்படியே, புதைக்குழியில் சிக்கி, மூச்சு முட்டிச் சாவதை போல் இருக்கு.’
“திரும்பவும் நம்ம சொந்த ஊருக்கேத் திரும்பிட்டோம். திரும்பவும் அண்ணாக் கூடவே இருக்க போறோம். தலை குனிந்து, கூனி, குறுகிப் போன நாம, திரும்பவும் தலை நிமிர்ந்து, மீண்டும் வெற்றியோடு நம்மைத் தூற்றியவர்களின் முன், வாழ்ந்து காட்டப் போகிறோம்.
நான் படித்த லா படிப்புக்கும், கணிதப் படிப்புக்கும், இப்போத் தான், தகுந்த வேலை கிடைத்து இருக்கு. ஜெயிச்சுட்டோம் பவானி. ஜெயிச்சிட்டோம்.
உனக்கேத் தெரியும் தானே, இந்த நிறுவனம் என் கனவு நிறுவனம். அதில் தலைமை பொறுப்பு என்னுடையது.
மொத்தச் சென்னையின் முக்கிய புள்ளிகள், இன்கம் டாக்ஸ், வரவு, செலவுக் கணக்கு எல்லாம் என் பொறுப்பு. இப்போ தான் நிம்மதியா மூச்சு விட முடியுது .” என்றார் சங்கரன்.
‘மூச்சு முட்டுது எங்களுக்கு.’
“உனக்குத் தெரியுமா பவானி. அந்தச் சேகர், ராமு, தீனா எல்லாம் அண்ணாவோடு சண்டை வந்த போது, எப்படி எல்லாம் கேலிப் பேசினாங்க தெரியுமா?
நான் சொர்ணாவை மணந்து, வீட்டோடு மாப்பிளை ஆகும் கனவில் இருந்தேனாம். அது களைந்து விட்டது என்று சொல்லிக் கேலி பேசினாங்க. இன்னைக்கு அவர்கள் மூவரும், என் கீழே தான் வேலை பார்க்கப் போறாங்க. பைத்தியக்காரனுங்க.” என்றார் சங்கரன் சிரிப்புடன்.
‘அவனுங்க பைத்தியம் இல்லை நீ தான்யா. சொர்ணாவை, நீ மணக்காமல், உன் அண்ணன் புண்ணியம் கட்டிக்கிட்டார்.
நீ தப்பிச்சுட்டே!
உன்கிட்ட நான் மாட்டிட்டேன்.’
“அவனுங்க முதுகில் குத்திட்டானுகடீ. இப்போ என் டர்ன். ஜெயிச்சு காட்டிட்டேன்.” என்றார் சங்கரன் பெருமையோடு.
‘யோவ்!. உனக்கு என்ன மனசுல, ‘அண்ணாமலை பட ரஜினின்னு’ நினைப்போ!…
‘அசோக்!…
இந்த நாள் உன் டைரியில் குறிச்சுக்கோ!’ என்று தொடைத் தட்டி, சவால் விட்டு,
அடேய் நண்பா!…
உண்மை சொல்வேன்…
சவால் வேண்டாம் உன்னை வெல்வேன்.’ என்று ஒரே பாட்டில், நீ கோடீஸ்வரன் ஆகி, அதில் ஜெயிக்க.’
“பாஸ் நாளைக்கு ஏதோ மீட்டிங் வைச்சு இருக்கார். ‘எத்தனை நாள் ஆடிட்டிங் நடக்கும் என்று தெரியல. பைல் எல்லாம் செக் செய்து, இங்கு நடைமுறைகளைப் புரிந்து கொள்ள…
சாமான் எல்லாம் புது வீட்டில், பேக்கர்ஸ் அண்ட் மூவேர்ஸ் இறக்கி வைச்சுடுவாங்க. நீ நல்ல நாள் பார்த்துப், பால் காய்ச்சி, கணபதி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்மா.”
‘ஆமாம், இது ஒன்று தான் குறைச்சல்.’
“உனக்குத் தெரியுமாடீ!… இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை! மூணே நாளில், என் வாழ்க்கை தலைகீழாக மாற்றி விட்டார்.
மூணு நாளைக்கு முன், என் பழைய பாஸ், நரசிம்மன் சார் இந்த நிறுவனத்தைச், சூர்யா சார் கிட்டே விற்று விட்டதாகக் கூறிய போது என் வேலை காலினு ரொம்பவே டென்ஷன் ஆகிட்டேன்.
ஆனா, skype பேசிய சூர்யா சார், ‘என் திறமை, அறிவு, experience அவருடைய கம்பனிக்கு வேண்டும் என்றும், எனக்குப் பதவி உயர்வோடு கூடிய சம்பளம், மொத்தச் சென்னைக்கும் நான் தான் பொறுப்பு’ என்றதும், எனக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை.
உன்னை நினைத்து, உன் வேலையை நினைத்துத் தயங்கினேன். பட் உனக்கும், அவர் பள்ளியிலேயே வேலை, அதுவும் பிரின்சிபால் வேலை அதுவும் சென்னையின் முதல் தரமான பள்ளிக்குக் கொடுப்பர் என்று நினைக்கவேயில்லை.
ரொம்ப சந்தோசம்.
நம்ம ரகு கேட்டான் என்று அவனுக்கும், சென்னைக்கே மாற்றல் கொடுத்து இருக்கார். இனி நீ, நான், நம்ம பிள்ளைகள் எல்லாம் ஒன்றாவே இருப்போம்.” என்றார் சங்கரன்.
‘யப்பா!… உம்மோடு இத்தனை வருஷம் குப்பைக் கொட்டியதற்கு, ஒரு கணமாவது, என்னைப் பற்றி நினைத்து ஒரு கணம் தயங்கினீர்களே, அதற்கே உமக்குக் கோயில் கட்டிடறேன்.
அத்தி பூப்பூத்தாற் போல் என்னைப் பற்றி எல்லாம் கூட, நினைத்து இருக்கீங்க பாருங்க… உலகம் தாங்கவே தாங்காது.
ஆனா, அப்போக் கூட, என்னை ஒரு வார்த்தைக் கேட்கணும் என்று தோன்றவில்லை. வழக்கம் போல் யாரையும் கலந்து ஆலோசிக்காமல், முடிவு எடுத்து விட்டுத், தகவலை மட்டும் சொல்லியாகிவிட்டது.
ஆமாம், அந்தச் சூர்யா, ‘கர்ண பரம்பரை’
ஊரில் பேசிட்டு இருந்தாங்க!
அவனே, உன்னை வைத்து, ‘என் மகளை ரூட் போட’ எல்லாம் செய்யறான்.
‘இன்று போய் நாளை வா’ படத்தில், பாக்யராஜ் வீட்டு வேலை எல்லாம் செய்து, காந்திமதி மூலமாக அவர் மகள், ராதிகாவை மணக்கப் பிளான் போடுவார்.
இவன் கோடீஸ்வரன் இல்லையா!.
அதான், பணத்தைக் கொண்டு, தன் அதிகாரத்தைக் கொண்டு, ‘குதிரை முன் கேரட் காட்டி’ ஓட வைக்கிறான்.
இது புரியாமல்,
‘சூர்யா போற்றி!…
போற்றி!… பாடுறீங்க’. உங்களை…’
“நான் இன்னைக்கு ஹோட்டலில் தங்கப் போகிறேன். சாரை, நாளைக்கு மீட் செய்துட்டு, அங்கேயே வந்துடறேன். சரி பவா வச்சுடறேன். ஹோட்டல் வந்துடுச்சு.” என்ற சங்கரன் அழைப்பைத் துண்டித்தார்.
கணவன் பேச்சில் பவானிக்கு புரிந்தது ஒன்று தான். இதுவரை பிடித்து இருந்த, ‘சோனா மூத்த மகள்’ என்ற பைத்தியதோடு, இனி, ‘சூர்யா என் கடவுள்’ என்ற பைத்தியமும் சேர்ந்து பிடித்துக் கொண்டது.
தன் கணவன், சூர்யாவின் பக்கம் சாய்ந்து விட்டார்.
முதல் பாலிலேயே, ‘சூர்யா சிக்ஸர்’ அடிக்க ஆரம்பித்து விட்டான். சங்கரன் என்ற விக்கெட், இனி சூர்யா பாக்கெட்டில்.
பவானி அங்குத் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட, தன் அறையில் மதுரா, தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தாள்.
டேபிள் மேல் இருந்த தன் ஹாண்ட்பாக் எடுத்தவள், அதிலிருந்து மூன்று பொருட்களை எடுத்துக் கட்டிலின் மேல் வைத்தாள்.
அது ஒரு சிறிய நோட்பேட், ஒரு செயின், ஒரு பென்டிரைவ் .
ஆல்வின் வீட்டில் இருந்த, விஜய்யின் சீக்ரட் அறையிலிருந்து கொண்டு வரப்பட்டப் பொருட்கள்.
செயின் ஒன்று லாக்கெட் உடன் இருந்தது.
அந்த லாக்கெட் தங்கத்தில் ஜொலித்து கொண்டு இருந்தது.
‘மவளே!… மனசுக்குள் பெரிய, ‘கணேஷ் வசந்துன்னு’ நினைப்பு!… நீ செஞ்ச வேலைக்குப் பெயர்த் திருட்டு. சிறையில், ‘களி எப்படி இருக்கும்’ என்று எனக்கு நோ ஐடியா.’ என்று நேரம் காலம் தெரியாமல், வந்து ஆஜர் ஆன மனசாட்சியை, “சீ போ…’ என்று விரட்டி அடித்தாள்.
மனசாட்சியும் இது, ‘ திருந்தாத கேஸ்’ என்று அமைதியாகி விட்டது.
லாக்கெட் மேல், ‘I LOVE YOU’ என்று பொறிக்கபட்டு, அதில் மிகச் சிறிய பொடி வைரங்கள் பதிக்கப்பட்டு இருந்தது.
லாக்கெட்டை திறக்க, அதில் உள்ளிருந்து, இவளை பார்த்துச் சிரித்து கொண்டு இருந்தாள், மற்றொரு மதுராக்ஷி.
இவள் புகைப்படம் ஒரு புறம்.
விஜய் புகைப்படம் மற்றொரு புறம்.
“நெனச்சேன்!… அலிபாபாக் குகையோடு மோசமா இருக்கும் போதே, நெனச்சேன்!.
ஆனா, சும்மா சொல்லக் கூடாது, ‘பிளான் எல்லாம் நல்லாத் தான் போடுறே விஜய். யாருமே சஸ்பெக்ட் செய்யாத, ‘ஆல்வின் வீட்டில்’ உன் திருட்டு வேலை எல்லாம் ஸ்டோர் ஆகி இருக்கு.
ஹ்ம்ம்!… அடுத்து என்ன?
பென் டிரைவ்….” என்று தனக்குத் தானே, உரக்கப் பேசிக் கொண்டவள், தன் லேப்டாப் எடுத்து அதில், பென் டிரைவ் இன்ஸெர்ட் செய்து, ஹெட்போன் மாட்டி அதை இயக்கினாள்.
ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி நடந்து கொண்டு இருந்தது.
ஏதோ கல்லூரி நிகழ்ச்சி.
நிச்சயம் ஆறு, ஏழு வருடம், அதற்கும் முன்னால் கூட அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
மேடைக்கு, விஜய் கிட்டாரோடு ஏற, கரகோசத்தில் அரங்கமே அதிர்ந்தது.
மேடையேறிப் புன்னகையுடன், மைக் முன்னால் நின்ற, ‘அந்த விஜய்யை’ கண்டுத், தன் கண்களையே ஒரு முறை அழுந்தத் தேய்த்து, மீண்டும் ஒரு முறை பார்த்தாள் மதுரா.
பார்த்ததைக் கண்கள் நம்ப முடியாமல், சாசர் போல் விரிய, மதுராவின் வாய், அதிர்ச்சியில், ‘O’ வடிவில் திறந்தது.
‘வாவ்!… இப்ப ஆணழகன் தான் நீ… ஆனால், அப்போ விஜய் சான்ஸே இல்லை!…
மாடல் ஆகியிருந்தே, நிச்சயம் உன்னை அடிச்சிக்க ஆளே இருந்திருக்க மாட்டார்கள்…
செம்ம ஹாண்ட்சம்யா நீ அப்போ.’ என்று ஜொள்ளியது மதுரா, மனம் கடந்தக் கால விஜய்யை வீடியோவில் பார்த்து.
‘இப்போ இருக்கும் அழுத்தம், இறுக்கம், உறைந்து போவது என்று இல்லாமல், வீடியோவில் இருந்த அந்த விஜய்யிடம், ஏதோ ஒரு உயிர்ப்பு இருந்தது.
கவலை என்பதே இல்லாதவனாய், சிரித்த முகத்துடன், கண்களில் மின்னல், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப், சிறிது வெட்கம் என்று அந்த விஜய்க்கும், இப்போ இருக்கும், இந்த விஜய்க்கும் ஆயிரம், லட்சம், வித்தியாசம் சொல்லிடலாம் போலிருந்தது.
அந்த விஜய்யிடம், இருந்த ஏதோ ஒன்று, இப்பொழுது இருக்கும் விஜய்யிடம் மிஸ்ஸிங்.
அது மட்டும் மதுராவால், மிக நன்றாக உணர முடிந்தது.
காட்டில், ‘தனிக் காட்டு ராஜாவாக’ உலவும் சிங்கத்திற்கும், கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் சிங்கத்திற்கும் உள்ள வேற்றுமை, ரெண்டு விஜய்யிடமும் தெரிந்தது.
“அனைவர்க்கும் வணக்கம். இன்றைக்கு என் பிறந்த நாள்!…” என்று விஜய் சொன்னவுடன், குழுமி இருந்த மாணவ, மாணவியர் வாழ்த்து ஒலியில் அரங்கம் மற்றொரு முறை அதிர்ந்தது .
“ஹ்ம்ம்ம்!… செம பாலோ அப் இருந்திருக்கும் போல் இருக்கே விஜய் உனக்கு?” என்றாள் மதுரா, அந்த ரகலையைக் கண்டு.
“இன்று மீண்டும், புதிதாய் நான் பிறந்த நாள்.
ஒரு தாயால் ஜனனம் எடுத்த நான், இன்று, மற்றொரு பெண்ணால், என்னை நானே உணர்ந்து கொண்ட நாள்.
எனக்குள், ‘அவள் காதலை விதைத்து, என்னை மனிதனாய்’ மாற்றிய நாள். அந்த விதத்தில், இன்று நான் புதிதாய் பிறந்த நாள்.” என்றவனை இடை இட்டது பல குரல் .
“நோ… நோ… அப்போ எங்க கதி?”
“இப்படி ஏமாத்திட்டேயே மாமு!”
“யார், அந்த லக்கி கேர்ள்?”
“லவ் சொல்லிட்டியா?… என்ன க்ரீன் சிக்னல்லா?”
“எங்கு இருந்தாலும் வாழ்க!….” என்று பல குரல், அரங்கை நிறைத்தது.
“யார் அவங்க?
பேர் என்ன?
என்ன கிளாஸ்?
நம்ம காலேஜ்ஜா?
அத்தை பெண்ணா?”
பல, பல கேள்விகள்!
அவை அனைத்திற்கும், விஜய்யிடம் மௌனமே பதிலாக, மென்முறுவலுடன் வந்தது.
“மாமு!… வழக்கம் போல், சிரித்து எஸ்கேப் ஆகப் பார்க்காதே!
யார்…. யார்…
யார் அவள் யாரோ?
யாரோ அவள்!…
யாரோ அவள்!…
உன் பூக்களின் வேரோ அவள் ?”
டேய் மச்சான் மேரேஜ் எப்போ?” என்று பாடல் பாடி, முதல் வரிசையிலிருந்து கேட்டது, சாட்சாத் ஆல்வின் தான்.
“பாலு!.. அவனைக் கொஞ்சம் கண்ட்ரோல் செய்யுடா…” என்ற உடன் பத்து, இருபது பேர் பாய்ந்து, ஆல்வின்னை நொங்கி எடுத்தனர் .
“அடேய்!… நீ எல்லாம் நண்பனா? ஆளை விட்டா அடிக்கறே!… எப்போ மேரேஜ்ன்னு தானேடா கேட்டேன்?… அது ஒரு குத்தமாயா?…” என்று புலம்பினான் ஆல்வின்.
“அடேய்!… அவனே இன்னும் ப்ரோபஸ் செய்யலை. இன்னைக்கு தான் சிஸ்டர் பர்த்டே!…
ப்ரொபோஸ் செய்யப் போறான். அதைத் தான், சார் சுத்தி வளைச்சு, காதல் பைத்தியத்தில் உளறிட்டு இருக்கான்.
அதற்குள், ‘முந்திரி கொட்டை மாதிரி’ மேரேஜ் வரைக்கும் போனா அவன் டென்ஷன் ஆவானா மாட்டானா?… போடாப் போடா மங்கூஸ் மண்டையா.” என்று கொட்டினான் பாலாஜி.
“ஹி!… ஹி!… எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான். நீ, கன்டினியூ பண்ணு மச்சி.” என்றான் ஆல்வின், அசடு வழிந்தவாறு .
“என்னது!… என் பர்த்டே அப்போ, ப்ரொபோஸ் செய்ய இருந்தானா!…” வாய் விட்டே அலறி விட்ட மதுராவிற்கு, ஒரு கணம், இதயம் நின்று, பின் துடித்தது.
“என் பர்த்டே அன்னைக்கு தான், இவர் புதிதாய் மறுபடியும் பிறந்தாரமா!.. கடவுளே!… மேடை ஏறி இப்படியா இப்படியா பிதற்றி வைப்பே!
லூசு… லூசு” என்று புலம்பினாள் மதுரா, என்றோ நடந்ததிற்கு இன்று .
தவம் தொடரும்…





