66
அந்தத் தகவலைக் கொண்டு, அடுத்த பதினைந்து நிமிடத்தில், அந்த அபார்ட்மெண்ட் சுற்றி வளைக்கப்பட்டது.
ராஜேஸ்வரி உள்ளே நுழையவும், ஒருவன் வெகுவேகமாக வந்து, “ஐந்தாவது மாடி.
ஒட்டுமொத்த பிளோர், அவங்கத் தான் வாடகைகக்கு எடுத்து இருக்காங்க.” என்றான்.
அடுத்த சில வினாடிகளில், சில பல அடிதடி, தூப்பாக்கிச் சூட்டின் பிறகு, அந்தத் தளத்தில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அது, ‘பெண்கள் ஏலம் விடப்படும் இடம்’
பொருள் வாங்குவது போல், ‘பணம் இருந்தால் பெண்களை விலைக்கு வாங்கிச்’ செல்லலாம்.
இருபது பெண்கள், பத்து சிறு குழந்தைகள் மீட்கப்பட்டு, ஆன்லைனில் ஏலம் பேசி, எங்கிருந்தோ இவர்களை வாங்கிக் கொண்டு இருந்தவர்களின், தகவல் எல்லாம் கணினியிலிருந்து எடுக்கப்பட்டது.
ஆட்டையும், மாட்டினையும் போல் கை, கால்களில் இரும்பு சங்கிலியும், ஆடை என்ற பெயரில் சிறு டவல் மட்டுமே இருக்க, சக மனுஷி என்ற இரக்கம், கருணை என்பது கொஞ்சம் கூட இல்லாமல், ‘தங்கள் உடல் தேவைக்கு’ இத்தனை பெண்கள், குழந்தைகளை ஷோ கேஸ் பொம்மையாக நிற்க வைத்து, விற்று கொண்டு இருப்பதை கண்ட ராஜேஸ்வரியின் கண்கள் கலங்கின.
பாதி பேர் காதலனை நம்பி, வீட்டை விட்டு ஓடி வந்த கல்லூரி பெண்கள்.
சில பேர் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி, இனிமையான பேச்சில் மயங்கி வீட்டை விட்டு வெளியேறி இருந்த இல்லத்தரசிகள்,
டியூசன் போகும்போது, தெருவில் விளையாடியபோது, ‘சாக்லேட் கொடுக்கப்பட்டு’ என்று கடத்தி வரப்பட்ட குழந்தைகள் என்று அங்கிருந்தவர்கள் நிலையைக் கண்டு நெஞ்சில் ரத்தம் வடிய நின்றார் ராஜி.
குற்றவாளிகளை அர்ரெஸ்ட் செய்தும், மீட்கப்பட்டப் பெண்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்தும், அவர்களின் வீட்டினருடன் தொடர்புக் கொள்ளும் வரையிலும் அவர்களைப் பாதுகாப்பாய் வைக்கவும் ஆவண செய்தார் ராஜி.
மீடியாவும் குழுமி இருந்தது .
“மேடம்!… என்ன நடந்தது மேடம்?…”
“யார் இவங்க எல்லாம்?..”
“ஏதோ பெண்களை மீட்க, ஆபரேஷன் ஏற்பாடு செய்து இருக்கீர்களாமே!” என்ற கேள்விகள் பல்வேறு பகுதிகளிலிருந்து பறந்து வந்தது .
“எல்லோருக்கும் வணக்கம். இப்பொழுது பிடித்தது, ‘ஹியூமன் ட்ராபிக் ரிங்/human trafficking ring’ ஒரு பகுதி.
அதாவது பெண்களையும், குழந்தைகளையும் கடத்தி, அவர்களை விற்கும் கும்பல் இவர்கள். இப்படி கடத்தப்படும் பெண்கள், குழந்தைகள் வெளிநாடுகளில், அடுத்த சில மணி நேரங்களில் விற்கபட்டு விடுவார்கள்.
போர்ட்போலியோ/Portfolio தயார் செய்து, ஆல்பம் போட்டு, பெண்களை விற்பனை செய்து உள்ளனர்.” என்றாள் ராஜேஸ்வரி .
“போலீஸ் தூங்குகிறதா மேடம்?”
“இது நாள் வரை இப்படியொரு தகவல் வெளியே வரவில்லையே ஏன்?”
“நம்ம தமிழகத்திலா இப்படி? நம்ப முடியவில்லையே மேடம்.”
“உலகத்தின் எல்லா பகுதிகளிலும், இது மாதிரி, ‘மனிதக் கடத்தல் குழுக்கள்’ செயல்பட்டுத் தான் வருகிறது. இதுவரை இவர்கள் நமது கண்களுக்குத் தெரியவில்லை என்பது உண்மை.
போலீஸ் தூங்கவில்லை. மக்கள் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த அபார்ட்மெண்டை பாருங்க. ரொம்ப போஷ் ஏரியா!
ஆனால், ஒருத்தருக்கு ஒருத்தர் தொடர்பில் இல்லை. ‘அடுத்த வீட்டில் என்ன நடந்தாலும், அது எனக்கு நடக்காத வரை சந்தோசம்’ என்று இருப்பதால் வரும் வினை.
நான்கு சுவற்றுக்குள், ‘என் வக்கிரத்தை தீர்த்துக் கொள்கிறேன்’ என்று இணையத்தளத்தில் ஆபாசத்தை, விளைவிக்கும் ஒவ்வொருவரும் காரணம்.
நான்கு சுவற்றுக்குள் நான், ‘நீல படம் பார்க்கிறேன்’ என்று சொல்லும் ஒவ்வொருவரும் காரணம்.
அந்தப் படங்களில் கட்டாயப்படுத்தியோ, இது போல் கடத்தி வரப்பட்டோ, தாங்கள் இவ்வாறு நெருக்கமாய் இருப்பதை படம் பிடித்து வைக்கிறார்கள் என்பதே தெரியாமல், தான் அதிக சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
இந்தக் குற்றவாளிகளுக்கு, நீங்களே அறியாமல், ‘உங்கள் உரிமை, நான்கு சுவற்றுக்குள் நான் செய்வது’ என்று சொல்லி, அவர்களின் குற்றங்களில் நீங்களும் உடந்தை ஆகிறீர்கள்.
சைபர் கிரைம் துறைக்கு, நிறைய புகார்கள் இது போல் வருகிறது.
ஒருவர் நீல படங்களைக் காசிற்காக, விற்கும் வளையப் பக்கத்தில், சென்று விடீயோக்களை பார்த்து உள்ளார்.
அதில் ஒரு வீடியோ, இவரும் இவரின் மனைவியும், அந்தரங்கமாய் இருக்கும் வீடியோ அப்லோட் ஆகியிருப்பதை கண்டு, எங்களிடம் வந்து கம்பளைண்ட் கொடுத்தார்.
இப்படித் தொழிலுக்கு வரும் பெண்கள், குழந்தைகள் யாரோ ஒருவரின் மகள், தங்கை என்ற மனிதாபிமானம் இல்லாததது காரணம்.
ஒரு பெண்ணை, நிர்வாணமாய் ரசிக்க விரும்பும் மனம், அதே இடத்தில் தன் தாயோ, தன் சகோதரியோ, இல்லை தன் மகளோ, மனைவியோ பலர் கண்களுக்கு விருந்தாவது போல் சற்று யோசித்து பாருங்கள்.
இதைப் பகிரங்கமாகப் பார்க்கும் துணிவே வராது. தான் பார்த்து ரசிக்கும் வீடியோ, இது போல் கடைகளில் கிடைக்கும் cd, வலைத்தளங்கள், எதன் மீதும் ஆசை வராது.
இது பல மில்லியன் டாலர் புழங்கும், வெளியுலகத்திற்குத் தெரியாத இருட்டு உலகம். இப்படிக் கடத்தபடும் பெண்கள் முன்பு எல்லாம், low risk victims’ என்பார்கள்.
அதாவது அனாதைகள், காணவில்லை என்று இன்னொருவரால் தேடப் படாதவர். இவர்கள் இருந்தாலும், செத்தாலும், ‘ஏன் என்று கேள்விக் கேட்க யாரும் முன்’ வரமாட்டார்கள்.
‘Invisible people’ என்று அழைக்கப்படும் ரகம் இவர்கள்.
போலீஸ்க்கும் கம்பளைண்ட் எதுவும் வராது. ஆனால் இப்பொழுதோ, ‘காதல் என்ற பெயரில்’ தெருவுக்குத் தெருவு நான்கு பேர் பைக்கில், பள்ளி, கல்லூரி அருகே நிற்கிறார்கள்.
எதையும் அறியாத விட்டில் பூச்சிகளாகப் பெண்களும், ‘ஷாப்பிங் மால், பீச், பார்க் என்று, ‘உரிமை’ என்ற பெயரில், ‘நாகரீகம்’ என்ற பெயரில், ‘காதல் என்ற வலையில் சிக்கி ‘ அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்பொழுது இவர்களைக் கடத்துவது தான் அதிகமாக நடக்கிறது. கடத்தவில்லை என்றாலும், இவர்களுடன் சேர்ந்து இருக்கும், மிக அந்தரங்கமான படங்களைக் காட்டிப் பணம் பறிப்பது வெகுஜோராக நடக்கிறது.” என்றாள் ராஜேஸ்வரி.
“இது நடக்காமல் தடுக்க, மக்கள் என்ன செய்ய வேண்டும்?”
“முதலில் மக்கள் எங்குத் தவறு நடந்தாலும், துணிந்து குரல் கொடுக்க வேண்டும்…. நான்கு சுவற்றுக்குள் இருந்து, முகநூலில் இல்லை வெளிப்படையாக.
உங்களுக்குச் சிறுக் குழந்தைகள் இருந்தால் முதலில், ‘குட் டச், பேட் டச்’ மட்டும் இல்லை, அம்மா, அப்பாவைத் தவிர வேறு எவனையும், இவளையும் டச் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று சொல்லிக் கொடுங்க.
‘டியூஷன், கிளாஸ் அனுப்பும் இடங்கள் பாதுகாப்பானதா’ என்பதை முதலில் உறுதிச் செய்து கொள்ளுங்கள். உங்கள் பள்ளி ஆசிரியர், உங்கள் குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு செல்வோரின் மேல் கவனம் இருக்கட்டும்.
பள்ளி முடிந்து வந்தவுடனே, குழந்தையிடம் அன்று நடந்ததை விசாரியுங்கள்.
நாகரீகம், பேஷன் என்ற பெயரில் குழந்தைகளுக்கு உடல் தெரியும் உடைகளைத் தவிருங்கள்.
முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றத் தளங்களில் உங்கள் பிள்ளைகளின் போட்டோக்களைப், விடீயோக்களை பதிவு செய்ய வேண்டாம்… பிறந்த நாள், அதற்குக் கருத்து, வாழ்த்து சொல்லும் பதிவு எல்லாம் தேவையே இல்லாத ஒன்று.
உங்கள் குழந்தையின் படத்தினை எடுத்து அதைக் கொண்டு, ‘ப்ளூ பிலிம்’ தயாரிப்பவர்கள் அதிகம் உண்டு. ஏதோ ஒரு அசிங்கமான படத்திற்கு, உங்கள் வீட்டினரின் படம் ஒட்டப்படலாம். போட்டோ ஷாப்பிங், வீடியோ மார்ஃபிங்.
இவர்கள், ‘pedopile’ ஆவார்கள்.
தங்களின் வெறித்தனத்தை இவர்கள் தீர்த்துக் கொள்ள நினைப்பது, சிறார்களிடம் மட்டுமே.
சிறார்கள் தான், இவர்களின் வேட்டை பொருள்.
வெளியே பார்க், பீச், ஷாப்பிங் செல்லும் போது, உங்களின் கவனம் உங்கள் குழந்தையின் மேலும், சுற்றுப்புறத்தின் மேலும் இருக்கட்டும்.
குழந்தைகள் வெளியே வாங்கிச் சாப்பிட அனுமதிக்க வேண்டாம்.
பள்ளிகளின் அருகே, போதை மருந்துகள் கலந்தத் தின்பண்டங்கள் விற்பனையும் நடக்க சான்ஸ் இருக்கிறது.” என்றாள் ராஜேஸ்வரி.
“வயது பெண்களின் பெற்றோர்களுக்கு உங்களின் அறிவுரை?”
“ஒரு வயதுக்கு மேல், ‘சுதந்திரம்’ அவசியம் தான் என்றாலும், அது ‘விடுதலையாக’ உங்கள் பிள்ளைகள் எடுத்துக் கொள்ளும் அளவு விட்டு விடாதீர்கள்.
அவர்களின் நடவடிக்கைகளைக் கவனியுங்கள். அவர்களின் நண்பர்கள் யார், அந்த நண்பர்களின் குடும்பம் எப்படிபட்டது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
அடிக்கடி, ‘ஸ்பெஷல் கிளாஸ்’ வைக்கிறார்களா என்று கல்லூரியில் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு காலேஜ் எடுத்துக் கொண்டால், அந்தக் காலேஜின், ‘பெற்றோர்க் குழு’ விவாதித்து, காலை, மாலை காலேஜ் அருகே ரவுண்ட்ஸ் வரலாம்.
காவல்துறைக்கு, கல்லூரிக்கு எழுதிப் போட்டு, இந்தச் சமயங்களில் ரோந்து வர மனு போடலாம்.
உங்கள் பிள்ளைகளின், ‘காண்டாக்ட் லிஸ்ட்’ உங்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.
‘செல்லப் பெயர்’ வைத்து காண்டாக்ட் லிஸ்ட் இருந்தால், அது யார், என்ன, என்று தெரிந்து கொள்ளுங்கள்.
படிப்பின் மேல் கவனம் சிதறி, ‘இருப்பதினாலு மணி நேரமும் டவுட் கேக்கிறேன்’ என்று பெவிகால் போடாதக் குறையாய், உங்கள் பிள்ளைகளை விட்டுட்டு, பிறகு எல்லாம் போன பிறகு, ‘குத்துதே, குடையுதே’ என்று காவல் துறையிடம், ‘இன்ஸ்டன்ட் சொலுஷன்’ கேட்டு நிற்பதில் யாதொரு பயனும் இல்லை.
இட்ஸ், ‘ Better safe than sorry’.
ஹாஸ்டலில் தங்கிப் படித்து, வேலை செய்யும் பெண்களின் பெற்றோர்களும், ஹாஸ்டல் வார்டன் எப்படிபட்டவர், அந்த ஹாஸ்டலில் போதிய CCTV வசதி இருக்கிறதா, மகள் எத்தனை மணிக்குத் திரும்ப வருகிறாள், யார் அவளைப் பார்க்க வருகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
மால்களில், ஹோட்டல்களில், வீடுகளில், பிறந்த நாள் விழா, அலுவலகப் பார்ட்டி என்றால், உடன் நீங்கள் செல்ல முடிந்தால் மட்டும் அனுப்புங்கள்.
‘நாங்கக் கூட்டிட்டு போய்ப் பத்திரமாய் திரும்பக் கொண்டு வந்து விடுகிறோம்.’ என்று சொல்லும் யாரையும் நம்பவே வேண்டாம்.
இது போன்ற பார்ட்டிகளில், GHB (gamma-hydroxybutyric acid), Rohypnol (flunitrazepam), Ketamine, Alcohol போன்ற நிறம், சுவை இல்லாதப் போதை வஸ்துக்கள், உங்கள் பிள்ளைகளே அறியாமல் கலக்கப்பட்டு பல்வேறு பாலியல் வன்முறைகள் நடக்கிறது.
காவல்துறை ஒவ்வொரு பெண்ணின் பின்னாலும், காவலுக்கு வர முடியாது. பெற்றோர் தான், இதனை உங்கள் கடமையாக எடுத்துச் செய்ய வேண்டும்.
இது என் நம்பர்… ‘யாருக்கு என்ன உதவி தேவை’ என்றாலும் எப்பொழுது வேண்டும் என்றாலும் தொடர்புக் கொள்ளலாம்…. நன்றி.” என்ற ராஜேஸ்வரி கிளம்பினாள்.
பிடிபட்ட, அந்த ஹியூமன் டிராபிக் ரிங் தலைவனை விசாரிக்கும் விதத்தில் ராஜேஸ்வரி விசாரித்ததில், அவன் அப்ரூவர் ஆகி மொத்த உண்மையையும் சொன்னான்.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், அது போல் பலமுறை பெண்களை ஏலம் விட்டதாகவும், சில பேர் அங்கு உள்ள, தனியார் ரிசார்ட்களில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டதாகவும், சில பேர் கன்டைனரில் அடைக்கப்பட்டு, போலிச் சான்றிதழ் பெறப்பட்டு கப்பல் மூலம் சிங்கப்பூர், மெக்ஸிகோ, சீனாவிற்குக் கடத்தப்படுவதாக உண்மை முழுதையும் கூறினான்.
ஆனால், இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது அவனுக்கே தெரியவில்லை.
“எனக்குத் தெரியாதுங்க மேடம். நடுராத்திரி டெம்போ வரும். பெண்களை எங்களிடம் விட்டுப் போவாங்க. நம்பர் வைத்து ஒரு வாரத்தில் அவர்களை ஏலம் விட வேண்டும்.
ஏலம் போன பெண்களை, அவர்கள் சொல்லும் குடோனில் விட்டு வருவோம். அங்கு உள்ள கன்டைனரில் ஏற்றித் துறைமுகம் மூலமாக வெளிநாடுகளுக்கு விற்று விடுவாங்க.
ஹார்பர் வேலை பார்ப்பது நான் இல்லை. அது வேறொரு ஆள்.
நான் வேலைக்குச் சேர்ந்தே ஆறு மாசம் தான் ஆகுது. எனக்கு முன் இருந்தவன், ஏதோ ஏமாத்திட்டான் என்று போட்டுத் தள்ளிட்டாங்க. எனக்கு வேறு எதுவும் தெரியாது.” என்றான் அவன்.
“பெண்களை எப்படி டார்கெட் செய்யறீங்க?” என்றாள் ராஜேஸ்வரி.
“முதலில் அவங்க சோசியல் மீடியா பக்கத்தில், அவங்களைப் பற்றி, அவங்க விருப்புப், வெறுப்புப் பற்றி அறிந்து, அவங்க பிரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து, அவங்க அப்லோட் செய்யும் புகைப்படங்களைத் திருடி, அதை வைத்துக் கஷ்டமருக்கு ஆல்பம் கொடுப்போம்.
கஸ்டமர் எங்க வலைதளத்தில், இந்தப் பெண்களின் புகைப்படங்களை எத்தனை லைக் கொடுக்கறாங்களோ, அதன் படி இவங்களுக்கு விலை நிர்ணயிப்போம்.
பிறகு நேரில் சந்திப்பது போல் விருப்பம் தெரிவிப்போம். இல்லையென்றால் அவங்கப் போகும் இடம் எல்லாம், ‘லொகேஷன் ஷேர்’ மூலம் அறிந்து, அவங்க பின்னால் சென்று, தற்செயலாய் சந்திப்பது போல் நாடகம் நடத்துவோம்.
இப்படியொரு பெண் சிக்கினால், அவங்க போன் வைத்து அவங்க காண்டாக்ட் லிஸ்டில் உள்ள அனைத்து பெண்களையும், அடுத்த ஆள் கொண்டு டார்கெட் செய்வோம்.
நிறைய பெண்கள் அவங்க மொபைலில், எல்லாம் ஆன்டிவைரஸ் எல்லாம் போட்டு வைப்பதேயில்லை. அது எங்களுக்கு வசதியாகி விடும்.
ஒரு பெண்ணின் மொபைல் மூலம் இருபது, முப்பது பெண்களை எங்களால் டார்கெட் செய்ய முடியும்.
அப்பப்போ கிப்ட், வாழ்த்துக்கள், போற்றி, புகழ்ந்து பேசின்னு அவங்களைக் கவுக்க, எங்களிடம் வேலை செய்யும் அழகான ஆண்களுக்கும், பெண்களுக்கும் பயிற்சி கொடுப்போம்.
நாங்க பேசுவது, போற்றிப் புகழ்வது, நாங்க செலவு செய்வது கண்டு, எங்களை நம்ப ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பெண்ணைக் கவுக்க , மூன்று மாதம் வரைக், கூட எடுத்துப்போம்.
ஒன்று, ‘காதல் என்ற பெயர் செய்து’ வீட்டை விட்டு, நகை, பணத்துடன் எங்களிடம் வரவழைப்போம். ஒரு பக்கம், அவங்க கொண்டு வரும் பணம், இன்னொரு பக்கம் அப்படி வரும், ‘பெண்களை விற்று’ அதன் மூலம் வரும் பணம்.
இப்படி ஏலம் விடுவதற்கு முன், சில நாட்கள், நாங்களே இவங்களை என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம்…
இல்லையென்றால், இவங்களை மயங்க வைத்தோ, இல்லை காதல் என்ற பெயரில் நெருக்கமாய் இருக்கும் போது, இவங்களே அறியாமல் நாங்க எடுக்கும் புகைப்படத்தை வைத்துப் பிளாக்மெயில் செய்து பணம் பறிப்போம்.
குடும்ப மானம், கெளரவம் என்று இருக்கும் பெற்றோர், கேட்கும் பணத்தைக் கொடுத்து விடுவார்கள். அது தனி டிபார்ட்மென்ட்.” என்று மேலும் விவரிக்க, அதைக் கேட்ட அங்கிருந்த காவல் துறையினருக்கே நெஞ்சம் பதறியது.
கைப்பற்றியக் கணினியில், அதுவரை பொருளைப் போல் பல்வேறு நாடுகளுக்கு அடிமைகளாகவும், பாலியல் தொழில் செய்யவும், நீல படத்தில் நடிக்கவும், விற்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள், சிறார்கள் புகைப்படங்கள், வீடியோ பார்த்தவர்களின் அடிவயிறு கலங்கியது.
இப்போ, ‘இந்தப் பெண்கள், குழந்தைகள் எங்கே, எந்த மிருகத்தின் கையில் சிக்கிச், சொல்லவொண்ணா வேதனைகளை அடைந்து இருக்கிறதோ, என்ற எண்ணம் அங்கிருந்தவர்களை நிம்மதியாக இருக்கவிடவில்லை.

ஒவ்வொரு பெண்ணின், குழந்தையின் புகைப்படத்தின் அடியில், அவர்களின், price tag/ விலைப் பட்டியல் மின்னிக் கொண்டிருந்தது, மனித வக்கிரத்தின் அளவுக் கோளைக் காட்டிய வண்ணம்.
சோனா, சுமனால் மட்டுமே மதுராவிற்கு ஆபத்து என்று விஜய், சூர்யா நினைத்திருக்க, இப்படி, ‘எந்தப் பஞ்சமா பாதகத்திற்கும் தயங்காத, சிறு குழந்தைகளைக் கூட, விட்டு வைக்காத இவர்களிடம்’ மதுரா சிக்கப் போவது தெரிந்தால், இவர்கள் இன்னும் சற்று விழிப்புடன் இருந்திருப்பார்களோ?
தவம் தொடரும்…





