70
வெகுநேரம் கழித்து தூங்கிய மதுராவை, காலையில் தன் அழைப்பு மூலம் கடுப்பாக்கி இருந்த, விஜய்க்கு அர்ச்சனை செய்து கொண்டே ரெடியாகி வெளியே வந்தாள்.
அதற்குள் பவானி காலை டிபன் ரெடி செய்து இருக்க, பாலாஜி, சுபா, ரகு, கார்த்திக், பூரணி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்.
“ஏம்மா, நீ தான் செய்தியா? ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே!… நான் வந்து செய்து இருக்க மாட்டேனா?” என்றாள் மதுரா.
“ஆமாடீ… நீ ஆடி அசைஞ்சு, பத்து மணிக்கு எழுந்து வருவே!… நீ வந்து ஆக்கிப் போடும் வரை, புள்ளைத்தாய்ச்சி பெண் சாப்பிடாமல் இருக்கணுமா?
‘நட்பு, முழுகாத ஷிப் பிரெண்ட்ஷிப்’ என்று சும்மா வாயில் உதார் விட்டுட்டு சுத்திட்டு இருந்தா யூஸ் இல்லை. அது செய்கையிலும் இருக்கனும்.
பாலுத் தம்பி, வேற ஆபீஸ் கிளம்பனும் இல்லை. வாயை விடாமல், பேசாம சாப்பிட்டு, எழுந்து போகும் வழியைப் பாரு.” என்று கடித்த பவானியிடமிருந்து தப்பிக்க, வெகு வேகமாகச் சாப்பிட்டு முடித்தாள் மதுரா.
சாப்பிட்டு முடித்து, நல்லப் பிள்ளையாக, அனைத்தையும் ஒதுக்கி வைக்கப் பவானிக்கு உதவியும் செய்தாள்.
இல்லையென்றால், காலையிலேயே சட்டியில் கொதிக்கும் குழம்பைத் தாளிப்பது போல், மதுராவைத் தாளித்து இருப்பார் பவானி.
அவர் சற்று நகர்ந்ததும், மதுராவை கைப்பிடித்துப் பின்புறம் இழுத்து சென்றாள் சுபா.
“என்னடீ!… எதுக்கு எப்படி இழுத்துட்டு போறே!…. என்ன விஷயம்?” என்றாள் மதுரா, இருவரும் பின்னால் வந்ததும் .
அங்கு ஏற்கனவே பாலாஜி, இவர்களுக்காகக் காத்து இருந்தான்.
அவனைக் கண்டதும், ‘எதற்காகத் தன்னை இப்படி இழுத்து வந்தாள் என்பது புரிய, எதையும் பேசாமல் நின்றாள் மதுரா.
“மதுரா!… நீ, இப்போ சூர்யாவைப் பார்க்கப் போகிறாயா என்ன!. அது நல்லதிற்கு அல்ல என்று தோன்றுகிறது.” என்றாள் சுபா, விசயத்திற்கு நேரிடையாக வந்து .
“யாருக்கு நல்லது இல்லை என்கிறாய் சுபா?” என்றாள் மதுரா வெகு நிதானமாக.
“மதுரா!…” அதிர்ந்து போனவளாய், சுபா திக்கித் திணறினாள்.
“சொல்லு சுபா… நான் சூர்யாவைச் சந்திப்பது, ‘யாருக்கு நல்லது இல்லை’ என்கிறாய்!
என்னைச் சோனாவிடமிருந்து, காப்பாற்றி இருப்பவருக்கு நன்றி சொல்வது, எனக்கு எப்படிக் கெட்டதாகும்!
இன்னும் சொல்லப் போனால் சோனாவிடம், இனி நான் வேலை பார்க்க வேண்டி வராது. நாலு கோடி ரூபாய் கணக்கு இருக்கிறது சுபா.
இல்லை, ‘நான் சூர்யாவை சந்திப்பது விஜய்க்கு நல்லது இல்லை’ என்றால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்? இல்லை, நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறாய்?
தெளிவாகச் சொல்லி விடு.
விஜய்க்கும், எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாத போது, தானாக வலிய வரும் நட்பை, நான் ஏன் இழக்க வேண்டும்?
விஜய்க்கும், எனக்கும் ஒத்து வராது என்று உனக்கே தெரியும். ஒத்து வந்தாலும், ஊர் உலகம் முக்கியமாகச், ‘சோனா அண்ட் கோ’ அதைச் சிதைக்க பார்ப்பார்கள்.
சாதாரண நன்றிக் கூறப் போவதற்கு, எதற்கு இத்தனைத் தடை, கேள்வி என்று தான் புரியவில்லை.” என்ற மதுராவின் பதிலில், கணவனும், மனைவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“சரி… சூர்யாவைப் பார்க்க முடிவு பண்ணிட்டே!… இரு நாங்களும் கூட வரோம்.” என்றாள் சுபா.
“நீ எதற்கு இப்போ, ‘பாடிகார்ட் வேலை செய்யறேன்’ என்று அப்ளிகேஷன் தூக்கிட்டு வரே?… அதான், உத்தம் அண்ணா வராங்க என்னைக் கூட்டிப் போக.
அவரே, பத்திரமாத் திரும்பக் கொண்டு வந்து விடுவார். அந்த விஷயத்தில் எல்லாம், அவர் பாலாஜி அண்ணாவையே மிஞ்சிடுவார்.” என்றாள் மதுரா.
“இல்லைம்மா… எதற்கும் நாங்களும் கூடவே வருகிறோம்.” என்றான் பாலாஜி.
“என்ன அண்ணா, உங்க உயிர் நண்பரின் கட்டளையா!… ஹெல்ப் தேவைப்பட்டா, நானே கேட்கிறேன் என்று சொல்லுங்க. அவர் நம்பர் என் எமெர்ஜ்ஜென்சி லிஸ்ட்ல இருக்கு.
ரொம்ப ஓவர்ரா, ‘பில்ட் அப் வேண்டாம்’ என்று சொல்லுங்க.
காலையில் அவர் பேசினதற்கே, கடுப்புல இருக்கேன். இது மாதிரி, ‘அவர் சொல்லறார், இவர் சொல்லறார்’ என்று செய்து வைக்காதீங்க. ப்ளீஸ்!
‘காப்பாத்தறேன் என்ற பெயரில்’ உங்க டார்ச்சர், எல்லாத்தையும் விட மிக பெரிய டார்ச்சரா இருக்கு… முடியலை சாமி.” என்றவள் அவர்கள் மேலும் பேசும் முன் அங்கிருந்து அகன்றாள்.
பெருமூச்சு விட்ட பாலாஜி, தன் சட்டைப் பையில் ஆனில், இருந்தப் போனை காதில் வைத்து, “கேட்டுச்சா!… என்னத்தைச் சொல்லி வைத்தே!
ஏன்டா கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசைன்னா நான் என்ன செய்ய முடியும்?
இப்போ சொல்லு, ‘சோனாவை விவாகரத்து செஞ்சுட்டு, மதுராவை தூக்கிப் போய்த் தாலிக் கட்டறேன்னு’ சொல்லு.
கடைசி வரை உனக்குத் துணையாக நாங்க நிற்கிறோம். அதை விட்டு, அவ சூர்யாவை பார்க்கப் போவது, உனக்கு எறியதற்கு எல்லாம் நாங்க எதுவும் செய்ய முடியாது.
ஒண்ணு அவ தான் வேண்டும் என்று ஸ்டெடியா நில்லு. இல்லை சூர்யாவிற்கு வழி விட்டு நில்லு. அவனாவது தன் காதலில் ஜெயிச்சிட்டு போகட்டும்.” என்ற பாலாஜி, கடுப்போடு அழைப்பைத் துண்டித்தான்.
“இவன் செய்யும் வேளைக்கு, நானும் ஆல்வினும் தான் கீழ்ப்பாக்கம் போகப் போறோம்… முடியலை சுபா இவனோடு.” என்றான் பாலாஜி சுபாவிடம்.
“என்ன பாலு இது!…. இது மாதிரி அண்ணா நடப்பது என்ன நமக்குப் புதுசா?
மதுராவை, நாலு வருஷம் முன்பு, மீண்டும் குன்னூரில் பார்த்ததில் இருந்தே, இதே பல்லவித் தானே!… அவரால் மதுராவை விட்டுக் கொடுக்கவும் முடியலை.
அவளை வெளிப்படையாய் ஏற்கவும் முடியலை.
சோனா இருக்கும் வரை, இவர் எந்த முடிவு எடுத்தாலும், நிச்சயம் மதுராவிற்குத் தான் பாதிப்பு என்று தெரிந்து தானே அமைதியா இருக்கார்.
பழைய கருணா அண்ணாவா இருந்தா, இந்நேரம் தடால் அடியாய் மதுரா கழுத்தில், தாலியே கட்டி இருப்பார். இந்த அண்ணா!..
ஹ்ம்ம்!… விடுங்க பாலு. நம்மை மீறித் தான், அந்தச் சூர்யா, மதுராவை மணக்க முடியும். பார்த்துக்கலாம்.” என்றாள் சுபா.
‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு… இரவில் அதையும் பேசாதே’ என்று சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்!
இவர்கள் பேசுவதை எல்லாம், செடியின் மறுபுறம் இருந்து கேட்டுக் கொண்டு இருந்தாள் மதுரா.
இந்தப் பக்கம் போவது போல் போக்குக் காட்டி, அவர்களின் பின் புறம் வந்து நின்று கொண்டு இருந்தாள். அவர்கள் பேசியதைக் கேட்டவளின் கண்கள், ஆழ்ந்தச் சிந்தனையில் சுருங்கி விட, நெற்றியைத் தேய்த்து கொண்டாள்.
தலை, ‘வின்வின்’ என்று வலிக்க ஆரம்பித்திருந்தது மீண்டும்.
சுபா, அவளோடு குன்னூர் கல்லுரியில், ஒன்றாய் படித்த உயிர்த் தோழித் தான் என்றாலும், ‘அவளின் விசுவாசம், விஜய் பக்கம்’ என்று புரிந்து கொண்டாள்.
விஜய் உயிரைக் காப்பாற்றியது தான் என்பதையும், காப்பாற்ற முன் வந்த அந்த நொடி முதல், அவன் தன்னை, ஏறக்குறையப் பத்து வருடங்களுக்கு மேலாகக் காதலிப்பது, அவன் கைப்பட எழுதிய டைரியிலிருந்து அறிந்து கொண்டாள்.
ஆனால், இந்தக் காதல் இவன் ஏன் தன்னிடம் சொல்லவில்லை!
நடந்தது முழுவதும் இவர்களுக்குத் தெரியும்.
இவர்களிடம் கேட்டால், உண்மை சொல்லி விடுவார்களா!
பாலாஜியின் புலம்பலில், ‘விஜய்யின் இரட்டை நிலைப்பட்டால்’ தலைச் சுற்றி போய் இருக்கும் இந்தச் சமயத்தில் கேட்டால், உண்மை கிடைக்கும் என்று தோன்ற, அவர்களை நோக்கி அவள் போக முயன்ற சமயம், வீட்டின் உள் இருந்து பவானி இவளை அழைக்கும் குரல், பலமுறை கேட்கவே, தன்னுடைய அந்த எண்ணத்தை, உள்ளுக்குள் போட்டு வைத்துக் கொண்டவள், பவானியைத் தேடிச் சென்றாள்.
ஒருவேளை, ‘தான் அறியப் போகும் உண்மை மிகுந்த மனவலியை கொடுக்கும்’ என்று உள்ளுணர்வு எச்சரித்ததால் கேட்க வந்ததை கேட்காமலே விட்டுவிட்டாளா, இல்லை நண்பர்களே ஆனாலும், ‘அந்தரங்கம் என்பது மிகவும் அந்தரங்கமானது’
இதை விஜய் சொல்லித் தெரிந்து கொண்டால், அதில் அர்த்தம் இருக்கிறது.
ஆனால், மூன்றாம் நபரின் வாய் மொழி மூலம், அதை அறியத் தயக்கமாக இருந்ததால் விலகிச் சென்றாளோ!…. கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
“என்ன மம்மி கூப்பிட்டிங்க?” என்றாள் மதுரா.
“நானும், ரகுவும் வெளியே போறோம். நீ, உத்தமோடு, சூர்யாவைப் பார்க்கப் போகத் தான் போகிறாயா!… தேவையற்ற வேளை என்று புரியவில்லையா?…” என்றார் பவானி.
“ரவுண்டு த்ரீ…” என்று கடுப்போடுச் சொன்ன மகளைக் குழப்பத்துடன் பார்த்தார் பவானி.
“என்னம்மா புரியலையா?… நீங்க காலையில இருந்து இதேக் கேள்வியைக் கேட்கும் மூன்றாவது ஆள்.
என்னமா நினைச்சிட்டு இருக்கீங்க எல்லோரும்!… உங்க இம்சை பெரும் இம்சையா போச்சு.
மார்னிங் எழுந்ததிலிருந்து, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கேட்கும் ஒரே கேள்வி, ‘சூர்யாவைப் பார்க்கப் போகிறாயா!’ என்று கேட்டு, ஏன் கடுப்பு அடிக்கறீங்க!
நான் போவது, வெறும் வாய் வார்த்தையால், நன்றிச் சொல்ல. என்னவோ இன்ஸ்டன்ட்டா, அந்த ஆளோடு, அப்படியே ஓடிப்போய் ரிஜிஸ்டர் ஆபீஸில் கல்யாணமே முடிச்சிட்டு வர மாதிரி, எதுக்கு என்னை இப்படி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கீங்க?
ஆமா, அவன் ‘பாகிஸ்தான் அதிபர், நான் இந்திய அதிபர்’ பாரு. அப்படியே நாங்க மீட் செய்வது, உலகத்திற்கே விடிவுக் காலம் பொறக்க வைக்க! நன்றிச் சொல்ல நினைப்பது ஒரு தப்பா!…
வேண்டாம்… விட்டுடுங்க…. முடியலை… அழுதுடுவேன்…” என்று வாய் விட்டே புலம்பினாள் மதுரா.
“சரிமா போகலை… நாலு கோடிக் கேட்டு நோட்டீஸ் வந்தா, நீங்களும் அப்பாவும் அதைக் கட்டிடுங்க… நான் போய்க் கவுந்துப் படுத்து, விட்டத் தூக்கத்தைக் கன்டினியூ செய்யறேன்.” என்றவளை முறைத்தார் பவானி.
“அம்மா!… சும்மா முறைக்க வேண்டாம். அவர் சோனாக் கிட்டே இருந்து காப்பாற்றி இருக்கார். அதற்காக நன்றி சொல்லப் போவது என்ன கொலை குற்றமா!.
அதற்குக் காலையிலிருந்து மாற்றி, மாற்றி இப்படி ஒருத்தர் விடாம lecture அடிச்சா கடுப்பாகுது.” என்றாள் மதுரா கோபத்துடன்.
“வேறு யாரு, உன்னைப் போக வேண்டாம் என்று சொன்னது?” என்றார் பவானிக் குழப்பத்துடன்.
“ஹ்ம்ம்!… வேறு யாரு… உங்கக் ‘குலத் தெய்வம்’ தான். என்னம்மா இப்படி முழிக்கறீங்க!
நீங்கத் தானே, ‘உங்க மாப்பிளை, விஜய கருணாகரனை குலத் தெய்வம்’ என்று சொல்லி, ‘ஒரு அண்டார்டிகா கண்டத்தையை’ அவர் தலையில் வைத்தது.
அந்தத் தெய்வம் தான், சூர்யாவைச் சந்திக்கக் கூடாது என்று சொல்லிக் கடிச்சு வைத்தது.
அதன் பிறகு, என் அருமை தோழியும் அவரின் கணவரும்…
முன்றாவதாக நீங்க.” என்றாள் மதுரா.
பெருமூச்சு விட்ட பவானி, “சரி… சரி.. போய்ட்டு வா… ஆனா, கூடக் கார்த்திக்கை கூட்டிப் போ.” என்றார்.
“எதற்குமா இந்தப் புல் தடுக்கி பயில்வான்!… ஒஹ்!… சூர்யாவிடமிருந்து என்னைக் காப்பாற்ற?…
‘சூர்யா உனக்கு வந்த சோதனையைப் பாரு!… ஹீரோ மாதிரி காப்பாத்தினா, உன்னை வில்லன் ரேஞ்சுக்கு, பிக்ஸ் செய்யறாங்க.” என்று வாய் விட்டே புலம்பினாள்.
“கார்த்திக்கோடு போவதாக இருந்தா, போ. இல்லைன்னா விட்டுடு. நானும் ரகுவும் கிளம்பறோம். அங்கே இருந்து கிளம்பும் முன் எனக்குக் கால் பண்ணிடு. ரொம்ப நேரம் இருக்க வேண்டாம்.” என்றார் பவானி.
கார்த்திக்குக்கு கண் காட்டி விட்டு, அவர் ரகுவோடு வெளியே சென்று விட்டார்.
ஒருவேளை மகள் அன்று, ‘அவரை அழைக்கும் நிலையில் இருக்கப் போவதில்லை’ என்று தெரிந்து இருந்தால், ஒருவேளை தான் சந்திக்கப் போவதைத் தள்ளிப்போட்டு, மகளுக்குக் காவலாகப் போய் இருப்பாரோ!
விதி யாரை விட்டது?
பவானி, ரகுவுடன் கிளம்பி விட, ‘தாயார் எங்கே செல்கிறார்’ என்று கூட மதுரா கேட்கவில்லை.
கேட்கும் மனநிலையிலும் அவள் இல்லை.
ஒருவேளை, ‘கேட்டு இருக்க வேண்டுமோ!…
கேட்டு இருந்தால், பலரின் மனம் சங்கடப்படாமல் இருந்து இருக்குமோ!’
பவானிக் கிளம்பி விட்டப் பிறகு ஹாலில், அமர்ந்து இருந்த கார்த்திக் அருகே சென்று அமர்ந்தாள் மதுரா.
“இது தேவைத் தானா மதுரா?” என்றான் கார்த்திக்.
“டேய்!… நீயும் ஆரம்பிக்காதேடா!… அழுதுடுவேன்.” என்றாள் மதுரா.
“உனக்கே இப்படி இருந்தா, காலை ஐந்து மணியிலிருந்து, அத்தையின் அட்வைஸ் மழையில், நனைந்த எனக்கு எப்படி இருக்கும்!… நீயே சொல்லு…” என்றான் கார்த்திக் அவளை விடப் பாவமாக .
“என்னடா சொல்றே!.. அம்மா, உன்னை அப்படி என்னடா கடிச்சி வைச்சாங்க?” என்றாள் மதுரா.
“ஒரு மணி நேரத்திற்கு சூர்யாவையும், விஜய்யையும் கரித்து கொட்டினாங்க. ஊருல, உலகத்துல அவனுகளுக்கு வேற பெண்ணே கிடைக்கலையா என்று ஒரே புலம்பல்.
உன்னையும் தாளிச்சு எடுத்தாங்க. போனில் ஒரு, ‘thank you’ சொல்லிட்டு போகாம, ‘அவன் என்னவோ பெரிய ஜனாதிபதி’ அவனை நேருக்கு நேரா சந்திச்சு நன்றி கூறினால் தான் ஆச்சான்னு?…
பெரிய, ‘etiquette’ கடை பிடிக்கறாளாம் என்று…” என்றான் கார்த்திக்.
“என்ன சேதாரம் ரொம்ப பலமோ!… ஆனா, ஹிட்லர் இதை எல்லாம் என்னிடம் சொல்லி இருக்கலாமே!… பச்சப் புள்ளையை, ‘இப்படி டேமேஜ்’ செய்து இருக்காங்க.” என்றாள் மதுரா அவன் தோளில் சாய்ந்து .
“யாரு உன் கிட்டே!… பேசி யாரவது மீள முடியுமா? போகும் போது கேட்டதற்கே, உன் பதிலில் டென்சன் ஆகிட்டாங்க. இதுல உன் கிட்டே சொல்லிட்டாலும்?
ஆமாம், ‘சூர்யா ப்ரொபோஸ் செய்தா’ என்ன செய்வதாக உத்ததேசம்?
விஜய்யும், உன்னைப் பார்க்கும் பார்வை புரியாம இல்லை தான். ரெண்டு பேரில் யார், உன் சாய்ஸ் ராணிமா?” என்றான் கார்த்திக் .
“நோ ஐடியா கார்த்திக். எனக்கு இருக்கும் குழப்பத்தில், சோனா மாட்டி வைத்து இருக்கும் சிக்கலில், மேரேஜ் பத்தி எல்லாம் நினைக்கக் கூட முடியலை
சூர்யா ப்ரொபோஸ் செய்தாலும், என் பதில் இதுவா தான் இருக்கும்.
விஜய், ‘அவர் அல்டிமேட்ட குழப்பவாதி’.
அவரும் குழம்பி, நம்மளையும் குழப்பி விடுவார். அவரையும் குறைச் சொல்ல முடியாது தான்.
எந்த விஷயமும், அவரவர் நிலையிலிருந்து பார்த்தா தான் புரியும். பார்க்கலாம்… அடுத்த முகூர்த்தத்திலேயேவா எனக்குத் திருமணம் நடக்கப் போகிறது. நிறைய யோசிக்கணும்.” என்றாள் மதுரா.
“எப்படி மதுரா, நீங்க இவ்வளவு ரிலாக்ஸ்சா யோசிக்கிறீங்க!… நீங்க அதிகம் பேசுறது இல்லை தான். ஆனா, பேசினா, உங்களை எதிர்த்து இன்னொருவர் ஜெயிக்க முடியாதபடி தான் இருக்கு உங்க பேச்சும் நடவடிக்கையும்…
ஒரு பக்கம் விளையாட்டுப் பிள்ளை போல் இருக்கீங்க. இன்னொரு பக்கம் தெளிவா பிளான் செய்யறீங்க… எப்படி மதுரா!” என்றாள் பூரணி வியப்புடன் .
“ஐஸ்சு!… ரொம்பக் குளிருது…” என்றாள் மதுரா.
“இல்லங்க…. உங்களை மீட் செய்து, ரெண்டு நாள் தான் ஆகுது என்றாலும், ‘சதுரங்கக் காய் போல், இவங்களை எல்லாம் உங்க விருப்பத்திற்கு’ எப்படி ஆட்டி வச்சிட்டு இருக்கீங்க… சதுரங்க ஆட்டத்தில் காய்களை, ஸ்ட்ராட்டஜிக் பொசிசனில் நிற்க வைப்பது’ போல், உங்க பேச்சும், நடவடிக்கையும் சின்னப்பிள்ளைத் தனமாய் இருப்பது போல் வெளிப் பார்வைக்குத் தோன்றினாலும், நீங்க அலசி ஆராயாமல், காரணம் இல்லாமல் எதையுமே சொல்வதோ, செய்வதோ இல்லை என்பதைக் கவனித்து கொண்டே தான் இருக்கிறேன்.
இந்த மாதிரி பிளானிங் எல்லாம், ‘விஜய் மாமா தான்’ செய்வாங்க. என்னை சோனா கண் பார்வையிலிருந்து மறைக்க, உங்களை ஒரு வருசமாய் காப்பாற்ற என்று பிளான் போடும் போது எல்லாம், இப்படி தான் மத்தவங்களை வைத்தே, தான் நினைத்ததை நடத்திடுவாங்க.
அதே, ‘மெத்தெட் ஆப் பிளானிங்’ உங்க கிட்டே இருக்கு மதுரா.” என்றாள் பூரணி .
“அம்மா ட்ரைனிங் தான்… எப்பவுமே அதிகமா கவனிக்கணும். குறைவா பேசணும். அடுத்தவங்க நிலையிலிருந்து யோசித்து, எதையும் அவங்க மறுக்க முடியாதபடி செய்யணும்
சொல்லிக் கொடுத்தது அம்மா தான் என்றாலும், அவங்க, அதை என்றுமே கடைப்பிடித்தது இல்லை. அவங்க சொன்னதை நான் கெட்டியா பிடிச்சுட்டேன்ன்னு நினைக்கிறன்.” என்றாள் மதுரா தோளைக் குலுக்கி .
அதே சமயம், “பெஹன்!…” என்று அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான் உத்தம்.
“ஹாய் பைய்யா!…. வாங்க, வாங்க… .என்ன சாப்பிடறீங்க?” என்றாள் மதுரா.
“நோ… தேங்க்ஸ் பெஹன்… சாப்பிட்டு தான் வந்தேன். கிளம்பலாமா! பாஸ் வெயிட் செய்துட்டு இருப்பாங்க.” என்றான் உத்தம்.
“நாங்க ரெடி தான்… இது கார்த்திக். ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்லை… இவரும் கூட வரார்.” என்றாள் மதுரா.
“பெஹன்!… என்ன, என் மேல் நம்பிக்கை இல்லையா?…” என்றான் உத்தம் முகம் தொங்கிப் போனவனாக .
“சாரி ப்ரோ!… இது என் அத்தையின் ஏற்பாடு. மீற முடியாது. உங்களை நம்பாமல் என்று இல்லை. ஆனா, உங்க பாஸ்க்கு நீங்கக் கட்டுப்பட்டவங்க.
அதை மீற உங்களாலும் முடியாது.
மதுரா உங்களையும், உங்க பாஸ்சையும் நம்பலாம். அத்தை தயாராய் இல்லை. நான்கு கோடி எல்லாம், பெரிய மேட்டர் பாஸ்… அதை ஒருத்தர், ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று, அதுவும் இளவரசர் ஒருத்தர் செய்கிறார் என்றால், பெண்ணைப் பெத்தவங்க கொஞ்சம் என்ன, நிறையவே பயப்பட தான் செய்வாங்க.
ஏற்கனவே சோனா, சுமன் என்று இவளைக் குறி வைப்பவர்கள் லிஸ்ட் மிக அதிகம். இதில் உங்க பாஸ், ‘ஒருவரா, இல்லையா’ என்று எங்களுக்கு எப்படித் தெரியும் சொல்லுங்க.
‘விலை இல்லாமல் கிடைப்பது’ என்று உலகத்தில் எதுவுமே இல்லை ப்ரோ. எங்க வீட்டுப் பெண்ணைக் காபந்து செய்வது, எங்க பொறுப்புத் தானே!… அதான்.” என்றான் கார்த்திக் .
தோளைக் குலுக்கி விட்டு, உத்தம் வெளியே சென்று விட்டான்.
பூரணி, சுபா, பாலாஜியிடம் சொல்லி விட்டு, அவர்கள் கிளம்ப, அவர்களைப் பின் தொடர்ந்தது ஒரு கார்.
ஆல்வின் மூலம், விஜய் ஏற்பாடு செய்திருந்த கார்.
சூர்யாவைச் சந்திக்க, மதுரா உத்தமுடன் கிளம்பியதைக் கேள்விப்பட்டு, முகம் இறுக அமர்ந்திருந்தான் விஜய்.
இத்தனை பேரின் தயக்கத்தையும், பயத்தையும் தாண்டி நடக்கும் மதுரா, சூர்யாவின் சந்திப்பு மதுராவிற்கு நன்மை பயக்குமா?
ஜெய்ப்பூர் இளவரசன், ‘சூர்யப் பிரதாப் ரத்தன் சிங்கின்’ திட்டம் என்னவோ!
இவர்கள் சந்திப்பு, ஏற்படுத்தும் விளைவு?
விடைகள், கேள்விகள், திருப்பங்கள், துரத்தல்கள், காதல், மோதல், நட்பு, சூழ்ச்சிகள் – தவம், மூன்றாம் பாகத்தில் தொடரும்.
ரெண்டாம் பாகம் முற்றும்.
அன்பு வாசக பெருமக்களே,
படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை, எண்ணங்களை, Review என் முகநூல் பக்கத்திலோ, இங்கே ரேட்டிங் அண்ட் ரெவியூவாகக் கொடுத்தால், அது எனக்குச் சிறந்த ஊக்கமாய் இருக்கும்.
உங்களின் அன்பும், ஆதரவும் என்றும் எதிர்நோக்கும்.
உங்கள்
ஹனி.🙏😍






Very very interesting and thrill
Story.
thanks a lot. feel free to review