71
சோனா, மதுராவிற்கு விரித்த, ‘நான்கு கோடிக்கானச் சூழ்ச்சி வலையிலிருந்து, நான்கு அறை சோனாவிற்கு கொடுத்துத் தன்னைக் காப்பாற்றிய, ‘ஜெய்ப்பூர் ராஜ வம்சத்தை சேர்ந்த சூர்யபிரதாப் ரத்தன் சிங்கை’ காண விஜய்யின், எதிர்ப்பையும் மீறிச் சென்று கொண்டிருந்தாள் மதுராக்ஷி.
பவானியின் ஏற்பாடுபடி மதுராவிற்கு, ‘பாதுகாவலானாய், கார்த்திக் என்ற பயில்வான்’ உடன் வர, ஏற்பாடு பிடிக்காமல், முகத்தை முழம் நீளத்திற்கு தூக்கி வைத்திருந்தான், மதுராவை அழைத்துப் போக வந்திருந்த தன்வீர் உத்தம் சிங்.
‘எல்லோருக்கும், எல்லா நேரத்திலும், எப்பொழுதும் பிடித்தா மாதிரி நடந்து கொள்ள முடியாதே!’ என்று நினைத்தவளாய், தோளைக் குலுக்கி விட்டுத் தன் யோசனையில் ஆழ்ந்து விட்டாள் மதுரா.
சூர்யாவின் அலுவலகம் வரும் வரை உத்தம் வேறு எதையும் பேசவில்லை. அவன், ‘வருத்தத்தில் இருக்கிறான்’ என்பது புரிந்து இருந்தாலும், மதுரா அதைப் போக்க எதையும் செய்யவில்லை .
கார்த்திக், பவானிக்கு அழைத்துத் தாங்கள் கிளம்பிவிட்டதாகச் சொல்ல, பத்து நிமிடத்திற்கு, மீண்டும் அவர் ஒரு கிளாஸ் எடுத்த பிறகே, அழைப்பை வைத்தார்.
கார்த்திக் முகம் போனப் போக்கைக் கண்ட மதுரா, தன் தலையில் அடித்துக் கொண்டாள்.
“தேவையாடா இது உனக்கு?” என்றாள்.
“இல்லைன்னா, வீடு வந்தப் பிறகுப் பத்து நாளைக்கு, பேய் ஓடிடுவாங்க. அதற்கு இதுவே மேல்…” என்றான் கார்த்திக்.
“பரவாயில்லை…. மகனே தேறிட்டே!…” என்றாள் மதுரா.
அடுத்த இருபது நிமிடத்தில், சென்னையின் பிரதானமான இடத்தில் இருந்த, அந்த அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது அவர்கள் கார்.
அந்த அலுவலக வளாகத்தின் ஓடுபாதையே, சில பல கிலோமீட்டருக்கு நீண்டது.
அலுவலக காம்பௌண்டுகுள் செயற்கைக் குளம், நீர் ஊற்று, பார்க் என்று பல வசதிகள் இருந்தன.
சுற்றிலும் வானளாவ எழுந்து நின்றது பல கட்டிடங்கள்.
மெயின் ஆபீஸ் செல்ல, அப்படி பல கட்டிடங்களைத் தாண்டியே செல்ல வேண்டி இருந்தது.
மெயின் ஆபீஸ் முன் இவர்கள் வந்த கார் நிற்க, கதவைப் பல செக்யூரிட்டி ஆட்கள் வந்து திறந்து விட்டனர்.
ஒரு பெண், மதுராவிற்குச் சிகப்பு நிற ரோஜா பூங்கொத்து கொடுத்து வரவேற்றாள்.
பத்து படி ஏறி, லாபிக்கு வந்தவர்களை அந்தக் கட்டிடத்தின் பிரமாண்டம் வாய் பிளக்க வைத்தது.
லாபியிலிருந்து லிப்ட் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப் பேட்டரி operated கார் இருந்தது. அதில் ஒரு காரை, உத்தம் இயக்க, மதுராவும், கார்த்திக்கும் ஏறி அமர்ந்து கொண்டனர்.
எதற்கு, ‘இந்தப் பில்ட் அப்’ என்று நினைத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, ஆனால் அது, ‘பணக்காரத்தனம், டாம்பீகம்’ அல்ல, நடைமுறைத் தேவை என்று விளங்கி விட்டது.
லாபிக்கும், இவர்கள் செல்ல வேண்டிய லிப்ட்க்கும், இடைவெளி மறு கட்டிடமாக இருந்தது .
“ஆமா அண்ணா!… இதை எல்லாம் சுத்திப் பார்க்கவே, ரெண்டு மூன்று நாள் ஆகும் போல இருக்கே!…
இது ஆபீஸ் தானா, இல்லைன்னா தீம் பார்க்கா!
இவ்வளவு பெரிசா இருக்கு!… இந்தர் இண்டஸ்ட்ரீஸ் கூட, இவ்வளவு பெருசு, பிரம்மாண்டம் இல்லையே!…” என்றாள் மதுரா வியப்புடன்.
“இது பாஸ் ஹெட் ஆபீஸ் பெஹன். எல்லாமே எக்ஸ்போர்ட் பிசினஸ். பரம்பரைத் தொழில். க்ரானைட், ஸ்டீல், ஆயில், டைமென்ட் கட்டிங் அண்ட் பாலிஷிங், ரியல் எஸ்டேட், கான்ஸ்டரக்சன் என்று பாஸ் இறங்காதத் துறையே இல்லை.
இந்தியா முழுவதும் பல கிளைகள் இருக்கு. அது எல்லாவற்றையும் இங்கிருந்து தான் கண்ட்ரோல் செய்யறார்.” என்றான் உத்தம் பெருமையுடன்.
“ஆமாம் உங்க பாஸ், தூங்குவாரா இல்லை, இருப்பதினான்கு மணி நேரம் இங்கேயே சுத்திட்டு இருப்பாரா!…
ஒரு வேலைக்கே தலைச் சுத்திப் போகுது. இதில் இத்தனை என்றால்!…” என்றான் கார்த்திக் பிரமிப்பு நீங்காதவனாக.
உத்தம் பதில் சொல்வதற்குள், சூர்யாவின் அலுவலகக் கட்டிடம் வந்து விட, அவர்களுக்கு வழிக் காட்டியவாறு முன்னே சென்றான்.
திறந்த வாய் மூடாமல், அந்த அலுவலகத்தினை பார்த்தவாறே பின் தொடர்ந்தனர் இருவரும்.
இவர்கள் வந்த கார், காம்பௌண்டிற்குள் வந்தது முதல், cctv கேமரா மூலம், மதுராவையே தான் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் சூர்யா.
அவன் கைகள் தானாக உயர்ந்து, டிவியில் தெரிந்த மதுராவின் தலையைத் தடவி கொடுத்தது.
குழந்தையைப் பல நாள் கழித்து காணும் ஒரு தாயின் பாசம், சூர்யாவின் முகத்தில் தெரிந்தது. அதில் காமம் என்பது சுத்தமாய் இல்லை.
கண்கள் தானாகக் கலங்கி விட, நெஞ்சில் சொல்ல முடியாத ஒருவித அழுத்தம் கூடத், தன் இருக்கையில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சூர்யா.
மதுரா, உத்தம் கார்த்திக்கோடு லிப்ட்டில் ஏறி, நான்காவது தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த சூர்யாவின் அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.
லிப்ட் விட்டு வெளியே வந்தவர்களை முதலில் வரவேற்றது பிரம்மாண்ட கண்ணாடி கதவும், இரு செக்யூரிட்டி ஆட்களும்.
உத்தமை கண்டதும் இருவரும் சலூட் வைத்துக், கதவைத் திறந்து விட்டனர். அறைக்குள், அறைக்குள் அறை என்று வித்தியாசமான வடிவமைப்புடன் இருந்தது அந்தத் தளம்.
ஏறக்குறைய, ‘அந்தக்கால ராஜவம்ச தர்பார்’ எப்படி பலகட்டங்களை தாண்டிச் செல்லுமோ, அதே போல் இருந்தது .
செக்யூரிட்டி தாண்டியதும், வரவேற்பு அறை வந்தது.
உத்தமை கண்டதும், எழுந்து நின்று விஷ் செய்தாள் அந்தப் பார்பி டால்.
‘வெள்ளாவி வெச்சுத் தான் வெளுத்தாங்களா!
உன்னை வெயிலுக்கு காட்டாம,
தான் வளத்தாங்களா!…’
கார்த்திக்கின் மனதில் இந்தப் பாடல் தான் ஓடியது.
அந்தப் பெண் அவ்வளவு அழகாக, ‘ரோஸ் நிறப் பார்பி டால்’ மாதிரி தான் இருந்தாள்.
‘இது மாதிரி பொண்ணுங்க எல்லாம், எந்தக் கிரகத்தில் இருக்காங்க!… நாம வெளியே போகும் போதெல்லாம், இது மாதிரி கண்ணில் பார்க்கவே முடியவில்லை.
யப்பா!… இது நிஜத்தில் பெண் தானா, இல்லை வெண்ணையில் செய்தச் சிலையா?’ என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.
அந்த அறைக் கதவைத் தாண்டி, உள் சென்றதும், ‘விருந்தினர் lounge’ மாதிரி இருந்த அறையில் , கார்த்திக்கை தடுத்து நிறுத்தினான் உத்தம் .
“சாரி கார்த்திக்!… நீங்க, இங்கேயே வெயிட் செய்யுங்க. பெஹன் மட்டும் பாஸ் மீட் செய்யப் போகட்டும்.” என்றான்.
“இல்லை நானும்…” என்று ஆரம்பித்தவனை, மதுராவின் ஒரு பார்வைத் தடுத்து நிறுத்தியது.
“சரி… சரி… முறைக்காதே!… இங்கேயே வெயிட் செய்யறேன்…” என்றான் கார்த்திக், அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தபடி.
கார்த்திக்குக்குத் தேவையான ஸ்னாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ், படிக்கச் சில magazines எடுத்து வந்து வைத்தாள் அந்தப் பார்பி.
மறு அறைக்குள் நுழைந்த மதுரா, திகைத்து நின்றாள் அங்கு வரவேற்கும் விதமாக, இருக் கரங்களை அகல விரித்து நின்றவனைக் கண்டு.
அவளுக்கு மிகவும் பழக்கமான முகம் தான் அது.
அந்த முகத்தைப் பார்த்தவள் நின்ற இடத்தில், சிலையாக அப்படியே உறைந்து நின்றாள்.
தான், ‘காண்பது கனவா, நினைவா’ என்று புரியாமல், தன் கண்களை, இரு முறை கசக்கி விட்டுக், கையை வேறு கிள்ளிப் பார்த்தாள்.
உறுதிப் படுத்திக் கொள்ள உத்தமை வேறு பின்புறம் திரும்பிப் பார்த்தாள்.
அவன் புன்னகைக்க, மதுராவின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
அடுத்த நொடி, “டேய்!… சின்னத் தம்பி!…. எப்படிடா இருக்கே!…” என்ற கூவலுடன், அங்கு நின்றவனின் அருகே ஓடினாள் மதுரா.
மதுராவை, தூக்கித் தட்டாமாலை சுற்றினான், ‘சின்னத்தம்பி!.’
அவன் தோளை அணைத்தவாறு, அவன் தட்டாமாலை சுற்றுவதில் கிண்கிணியாய் மலர்ந்து சிரித்தாள் மதுரா.
மதுராவின் முகத்தில், தோன்றிய அதே மலர்ச்சி, ‘சின்னத் தம்பி’ என்று அவளால் அழைக்கப்பட்டவன் முகத்திலும் மலர்ந்தது.
பார்பி டாலை கண்களால் சைட் அடித்தவாறு, நயாகரா அருவியை வழிய செய்தவாறு, பார்பிக் கொண்டு வந்த சமோசாவை ஒரு கைப்பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் காதுகளில் மதுராவின், ‘சின்னத் தம்பி!’ என்ற கூவல் விழ, வாயில் இருந்த சமோசாவை பிடித்தவண்ணம் உள்ளறைக்கு அடித்துப் பிடித்து, என்னவோ ஏதோ என்று பதறி அடித்து உள்ளே வந்தான்.
‘சின்னத் தம்பியா!… இது யாரு புது என்ட்ரி?’ என்று குழம்பியவாறு உள்ளே ஓடி வந்தவனுக்கு, அங்கு என்ன நடக்கிறது என்பது புரியவே, பல கணங்கள் ஆனது என்று தான் சொல்ல வேண்டும்.
தூக்கித் தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்த மதுராவை, மெல்லிய பூங்கொத்தை கையாளும் லாவகத்துடன் கீழே மெல்ல விட்டான் சின்னத் தம்பி.
“இன்னும், உன் சின்னத் தம்பியை மறக்கலையாடீ நீ!…” என்றான் அவன் கண்களில் கண்ணீருடன்.
“லூசு மாதிரி பேசாதேடா!… சொல்லாமல், கொள்ளாமல், ஆள் அட்ரஸ் இல்லமால், அந்த உத்தம் உடன் ஓடியது நீ தான்.
லூசு!… லூசு!… எத்தனை முறை போன் செய்தேன். போனை ஆப் செய்துட்டு, என்ன டாஷ் செய்துட்டு இருந்தே!… போடா!… உன், கூடப் பேசவே கூடாது என்று இருந்தேன்.” என்றவள் அவனை மொத்தி எடுத்தாள்.
“அடியேய்!… வலிக்குதுடீ விடு… விடு… ஐயோ!… அம்மா!… என்னைக் கொல்றா!…
உத்தம் காப்பாத்துடா!…” என்றவாறு அந்த அறையைச் சுற்றி ஓடினான் சின்னத்தம்பி.
மதுரா விடாமல் துரத்தக், கார்த்திக்கின் பின் ஒளிந்தவன், பின் அறையை விட்டு வெளியே ஓடினான்.
விடாமல் துரத்தி ஓடினாள் மதுரா.
‘துரத்தித் துரத்தி அடிப்பது, தர்ம அடி’ என்று சொல்வார்களே, அது இது தானா?’ என்று பேய் விழி விழித்தான் கார்த்திக்.
பார்பி டால், செக்யூரிட்டி, அலுவக ஆட்கள் என்று எல்லோரும் அவரவர் இடத்தில், தாங்கள் காண்பதை, நம்ப முடியாதவர்களாய் அதிர்ந்து போய் நின்றனர்.
அதற்குள், இங்கு நடப்பதைப் பார்த்து விட்டுச் செக்யூரிட்டி, உத்தமிற்கு அழைக்க, “ஸ்டாண்ட் டவுன்!… இட்ஸ் நத்திங்.” என்றான்.
ஓடிக் களைத்து மீண்டும் உத்தம், கார்த்திக் இருந்த அறைக்கே திரும்பி வந்த இருவரும், மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க அங்கு இருந்த சோபாவில் அமர்ந்தனர்.
அவர்கள் குடிக்க, கூல் ட்ரிங்க்ஸ் எடுத்துக் கொடுத்தான் உத்தம் புன்னகையுடன் .
“ராட்சஸி!… என்னமா அடிக்கறே!… வலிக்குது பிசாசு… ஆள் பார்க்க இந்தப் பூனையும், ‘மில்க் குடிக்குமான்னு’ இருக்க வேண்டியது. செய்யிறது எல்லாம், ‘ஜாக்கிச் சான்’ வேலை…” என்றான் சின்னத் தம்பி .
“ஏதோ நல்ல மூடில், இருக்க போய் உன்னை இத்தோடு விடறேன். பொழைச்சி போ. நீயும் அந்த உத்தமும், செய்த வேலைக்கு உன்னைக் கொல்லனும்….” என்றாள் மதுரா.
அருகே நின்று கொண்டிருந்த உத்தமை முறைக்க, அவன் இரு கைகளையும் தூக்கி, ‘சரண்டர்’ என்ற பாவனையில் பின் நகர்ந்து நின்றான்.
தலையும் புரியாமல், காலும் புரியாமல், நின்ற கார்த்திக், “மதுரா!… இவரை உனக்கு முன்னமே தெரியுமா என்ன?” என்றான் திகைப்பு நீங்காதவனாக.
“உனக்கு அடையாளம் தெரியலையாடா இவனை!… ச்சே!… மறந்தே போயிட்டேன் பாரு… இவனைத் தான் நேரில் நீ பார்த்ததே இல்லையே!… போனில் தானே பேசி இருக்கீங்க.
‘பிரபு’ டா!..
‘சின்னத் தம்பி’ பிரபுடா!…
நான் காலேஜ் படிக்கும் போது, சீனியர் ஒருவரை, ஜீனியர் என்று நினைத்து ராக்கிங் செய்தேனேடா!
அந்தச் சீனியர், எனக்குக் கிளோஸ் பிரெண்ட் ஆகிட்டார் என்பேனே!
குன்னூர் வீட்டுக்குச், சண்டே ஆனா, ‘ஹிட்லரின் பிரியாணிக்கு’ ஆஜர் ஆகிடுவானே!…
நீ கூட என்னைப் பத்திரமா பார்த்துக்க சொல்லிப் போனில் லெக்ச்சர் அடிப்பாயேடா!…
அந்தப் பிரபு டா!….
சின்னத் தம்பி பிரபு!
காலேஜ்ஜில் என் சீனியர்!…
என் பெஸ்ட் நண்பன்!….
என் திருட்டுத்தனத்தில் எல்லாம் கூட்டாளி!
என் நண்பேண்டா இவன்!…” என்றாள் மதுரா, பிரபு என்று அழைக்கப்பட்டவன், தோளில் கை வைத்து ஆனந்தத்துடன்.
“ஓஹ்!… அந்த அப்பாவி ஜீவன், நீங்கத் தானா ப்ரோ!…
உங்களை நேரில் பார்த்தது இல்லை. சோ, யாருன்னு தெரியலை ப்ரோ!…” என்றான் கார்த்திக் கைகளை நீட்டி.
கார்த்திக் கையைக் குலுக்கிய பிரபு, “உங்களை நேராகப் பார்த்ததில் மகிழ்ச்சி ப்ரோ.” என்றான்.
“ஆமாம், நீங்க எப்படி, இந்த டிராகுலா கிட்டே மாட்டினீங்க?… வெச்சு செஞ்சு இருப்பாளே!…” என்ற கார்த்திக்கின் வாய் மட்டும் பேசிக் கொண்டே இருக்க, அவன் மூளையோ குழம்பிக் கொண்டிருந்தது.
எதிரில் மதுராவால், ‘சின்னத் தம்பி பிரபு’ என்று நாமகரணம் சூட்டப்பட்டு இருப்பவனை, முன்னரே எங்கோ பார்த்த நியாபகம்.
ஆனால், எங்கே என்று சரியாய் அவனால் தன் நியாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
“பாரு பிரபு!… என்னைக் கிண்டல் செய்யறான்…” என்றாள் மதுரா .
“அழக் கூடாது டிராகன்!…. உண்மையைத் தானேடீ சொல்றான் என் நண்பன்!…
உன்னால், ‘பாதிக்கப்பட்டவர்களின் சங்க உறுப்பினர்கள்’ ஆயிற்றே!….” என்றவனுக்கு, ‘ஹை பைவ்’ கொடுத்தான் கார்த்திக் .
‘ட்ராகனா!… இப்படியுமா செல்லப் பெயர் வைத்துக் கொஞ்சுவாங்க!’ என்று விழித்தான் கார்த்திக்.
“போங்கடா… போண்டாஸ்!…” என்று முகம் திருப்பி அமர்ந்தவளின் முன், சுடச்சுடப் பச்சை நிற தோசை நீட்டப்பட்டது.
“எனக்கு ஒண்ணும் வேண்டாம். நீங்களே கொட்டிக்கோங்கோ…” என்று ஒழுங்குக் காட்டி விட்டுத் திரும்பிக் கொண்டாள் மதுரா .
“ஹே டால்…. ப்ளீஸ்…. ப்ளீஸ்… என் செல்ல டிராகன் இல்லை நீ… சாரி… இது எல்லாம், உனக்குப் பிடித்த சாப்பாடு ஐட்டம் தானே!… இங்கே பாரு…” என்று உத்தம் எடுத்து வந்து கடைபரப்பி இருந்த தட்டை எல்லாம் காட்டினான்.
“பாரு ட்ராகன்!…. ஆவாரம்பூ சூப்!… முடக்கத்தான் தோசை, சைடு டிஷ் மதுரை காரச் சட்னி, சுக்குக் காபி, நீ விரும்பிச் சாப்பிடும் ரசமலாய், பாஸந்தி!…
எல்லாமே, உனக்காக இப்போ தான் செய்யச் சொன்னேன்.
இந்தா, உனக்கு இது ரொம்ப பிடிக்கும் தானே!… அதுவும் ஸ்பெஷல்லா உனக்காகவே செய்யச் சொன்னேன்… எடுத்துக்கோடீ…” என்று அவன் கெஞ்சலில் இறங்க, இவர்களின் நட்பை, விழி விரித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் கார்த்திக்.
மதுராவிற்காகக் கடை விரிக்கப்பட்டு இருந்த அத்தனை உணவு வகைகளைப் பார்த்தும் தான்.
சிறு பொறாமை கூட எழுந்தது, அவர்கள் மூவரின், அந்த நட்பைப் பார்த்து.
“அப்போ, அந்த மாங்கா மண்டையனின் தலையில் கொட்டுடா. அப்போ தான் சாப்பிடுவேன்.” என்றாள் மதுரா.
அடுத்த நொடி பிரபு, கார்த்திக் தலையில் ஓங்கிக் கொட்டி விட, “ப்ரோ!… என்னதிது?” என்று அலறினான் கார்த்திக்.
“மதுரா, சொல்லிட்டா நோ மறுப்பு நண்பா!… எனக்கு, என் டிராகன் முக்கியம்… நீ சாப்பிடுமா.” என்றான் பிரபு .
“நீங்களும் சாப்பிடுங்க…” என்று மதுரா பரிமாற, அவர்கள் மூவரும் அந்த உணவு வகைகளை ருசித்து, ரசித்துச் சாப்பிட்டார்கள்.
“டேய்!… நீயும் வாடா…” என்று மதுரா அழைக்க, ‘வேண்டாம்’ என்று சைகை காட்டி, அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டான்.
அவன் தான், பார்பி டால் கொடுத்த எல்லாவற்றையும் அவளைப் பார்த்துக் கொண்டே உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தானே!
‘இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
அத நெனச்சு தான் மனம்
உலகம் முழுவதும் பறக்குது
அட சுடச்சுட
அட சுடச்சுட
அந்த மதுர மல்லிப்பூ இட்லியே
மீன் கொழம்புல
கொஞ்சம் பொரட்டி சாப்பிட
எச்சிலு ஊருது உள்ளுக்குள்ள
தாமிரபரணி, திருநெல்வேலி, சோதியில ஒரு தனிருசி
வைகையில் புடிச்ச ஆயிர மீனு கொழம்புக்கு ஒரு தனிருசி!
திண்டுக்கல் பிரியாணிக்கு
கத்திரி தொக்கிருக்கு!
தென்காசி பரோட்டாக்கு
சிக்கன் கறி இருக்கு!
அம்மாவின் வாசம் முன்பு வேப்பம்பூ கொழம்புக்கு
அவ தானே ஊட்டித்தந்தா ஆகாய நெலவுக்கு!
உணவிலே ஒரு உறவு இருக்குது
உள்ளுக்குள்ளே ஒரு கவிதை பிறக்குது…‘ என்று ருசித்து, ரசித்துச் சாப்பிட்டு முடித்தனர் அவர்கள் மூவரும்.
“ஆமாம்… நீங்க ரெண்டு பேரும், கராஜ்’ வைக்கப் போவதாகவும், ‘உலகம் சுற்றும் வாலிபர்களாக உலகம் முழுவதும்’ சுற்றிக் கொண்டு இருப்பீங்கன்னு பார்த்தா… என்ன, ரெண்டு பேரும், இங்கே அடியாட்களாகச் சேர்ந்துட்டிங்களா என்ன?
ஆமாம், நீங்க ரெண்டு பேரும் தான், ‘அடிதடி’ என்றால் காத தூரம் ஓடுவீங்களே!…
நீங்க எப்படி இங்கே?…
அதுவும், ‘terror’ என்று பெயர் எடுத்த ஆளிடம்!
தூங்கும் போது கூட, அந்தச் சூர்யா கையில், துப்பாக்கி வைத்துக் கொண்டு தான் தூங்குவானாமே!…
அந்த அளவுக்கு, அந்த ஆளைப் போட்டுத் தள்ள ஆட்கள், இருக்கிறாங்க என்று கேள்விபட்டேன். எப்படி வேலைக்குச் சேர்ந்தீங்க?” என்றாள் மதுரா .
“அதைப் பாஸ் கிட்டேயே, கேட்டுக்கோ டிராகன்!… சார், வெயிட் செய்துட்டு இருப்பார்… வா போகலாம்.” என்றான் பிரபு .
“கேட்கத் தான் போறேன்… எவ்வளவு தைரியம் இருந்தா, என் நண்பனையும், என் அண்ணனையும் அடியாட்களாக வைத்து இருக்கிறாய் என்று கேட்கத் தான் போகிறேன்.
நீ கவலைப் படாதே சின்னத் தம்பி!… நீங்களும் தான் அண்ணா. இந்த ரிஸ்க்கான வேலை எல்லாம் வேண்டாம்.
வேற வேலை விஜய், ரகுக் கிட்டே சொல்லி வாங்கித் தரேன்.” என்று படபடவெனப் பொரிந்து தள்ளினாள்.
“ஐயோ!… பாஸ் கிட்டே, அப்படி எல்லாம் கேட்டுடாதே டிராகன். வேலைக்கு உலை வைச்சுடாதே!… அடுத்த வேலை புவாவுக்கு, என்ன செய்வது!…” என்றான் பிரபு .
“நான் இருக்கேன் சின்னத் தம்பி!…” என்றாள் மதுரா .
“நீ இருப்பே!… நான் இருப்பேனா தாயி!… வேண்டாம் பாஸ் திட்டுவார்.” என்றான் பிரபு.
“உண்டு இல்லைன்னு பார்க்காம விட மாட்டேன் பிரபு.” என்றாள் மதுரா.
நால்வரும் கடைசியாக, இருந்த அந்த அறைக்குள் நுழைந்தனர்.
அவர்களை வரவேற்றது காலியான இருக்கை .
“எங்கேடா உங்க பாஸ்?” என்ற மதுராவின் கேள்விக்கு, விடை அளிக்காத பிரபு, நேராகச் சென்று அந்த இருக்கையில் அமர்ந்தான் புன்னகையுடன்.
இருக்கையில் அமர்ந்தவன், தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து, “வெல் மிஸ்.மதுராக்ஷி சங்கரன்!…
என்னவோ கம்பளைண்ட் செய்ய போவதாகச் சொன்னீங்க!…
என்ன கம்பளைண்ட்?” என்றான் பிரபு என்கிற ‘சின்னத் தம்பி’ என்கிற சூர்யப் பிரதாப் ரத்தன் சிங் புன்னகையுடன்.
தவம் தொடரும்…





