arrow_back
என்ன தவம் செய்தேன்! 85
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 85 / 85

85

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

மீனம்பாக்கத்தில், விமானம்  ஏறியவர்கள், திருப்பதி ஏர்போர்ட்டில் இறங்கி, அங்கிருந்து காரில் பயணம் செய்து, மாலை ஆறு மணி அளவில், ‘கதிரி’ ஊரினை  வந்து  அடைந்தனர்.

‘கதிரி’ என்பது  ஆந்திராவின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு  நகரமாகும்.

‘கதிரி’  என்ற  பெயர்  சமஸ்கிருத  வார்த்தையான,  ‘காத்ரிக்கு’  மாற்று பெயர், அதாவது கேனரி மரம் அல்லது இந்திய மல்பெரி (மொரிண்டா சிட்ரிஃபோலியா) மரங்கள் அதிகமாக இருந்ததாகவும், அதனால் இந்த பெயர் வந்ததாகவும், ஒரு சிலர் கூறுகின்றனர்.

ஸ்ரீ  நரசிம்ம  சுவாமியின்  புகழ்பெற்ற  புராணக்கதைகளிலிருந்து இந்த நகரம்,  அதன்  பெயரைப்  பெற்றுள்ளது

அங்கு  இறைவன்   தனது  பக்தரான,  ‘பிரஹ்லாதாவை’  மீட்பதற்காக  வந்த நரசிம்மர்,  காத்ரி மரத்திலிருந்து மரத்தின் கீழ் தங்கி இருந்தார்.   

ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் நரசிம்மருக்குக்  கோயில்  கட்டும்   முயற்சியை  மேற்கொண்டார்.

கா – என்றால் விஷ்ணு பாதம்.
அதிரி – என்றால் மலை சிகரம்.

‘விஷ்ணுவின்  பாதம்’  பதிந்த  மலை  சிகரம்  என்று  அர்த்தம்.

இறைவன்  வெளிப்படுவது  திருக்கோயிலில் மட்டும் இல்லை, உண்மையான  அன்பிருந்தால்,  பிரகலாதனை   போல்,  உண்மையான பக்தி இருந்தால்,  இறைவன்  தூணிலும்,  துரும்பிலும் இருந்து கூட வெளிப்படுவார்  என்று  உலகிற்கு  சொல்லப்பட்ட  இடம்.
இறை  வழிபாட்டில்  பக்தி,  அது  ஒன்றே  பிரதானம்.

அந்தக்  கதிரி  நகரத்தை  அடைந்து,  பரபரப்பான  மக்கள் நெருக்கம் அதிகம் கொண்ட இடங்களை எல்லாம் தாண்டி, தோப்புகள் நிறைந்திருந்த கிராமங்களின்   பக்கம்  சென்றது மதுராவை சுமந்தக்கார்.

ஒரு மிகப்பெரியத் தோப்புக்கு, நடுவே இருந்த அந்தப் பண்ணை வீட்டின் வாயிலின்  முன்  நின்றது  அவர்கள்  கார் .

அந்த வீட்டின்  முன்புறம்  பெரிய துளசி மாடம் அமைக்கப்பட்டு,  அதற்கு இரு சுமங்கலிப் பெண்கள், ‘லட்சுமி அஷ்டகம்’ சொல்லிப்  பூஜை செய்து கொண்டு இருந்தனர்.

ஒருவர்  வயதான  சுமங்கலி.

சட்டென்று  பார்க்க, ‘அந்தக் கால நடிகை பண்டரிபாய்’ போல்  இருந்தார். 

ஆந்திர பெண்களுக்கு உண்டான வனப்பு, தனிச் சோபை, தெய்வீகம் என்று கை  எடுத்துக்  கும்பிட தோன்றும் தெய்வீகப் பெண் வடிவம்.  மஞ்சள்  பூசிய  மங்களகரமான  முகம்.

இன்னொருவர்  நாற்பது  வயதில், ‘நடிகை  இந்திரஜா’ போல் இருந்தார் .

ஹர்ஷாவும்,  மேக்னாவும்  காரின்   அருகேயே  நின்று  விட,  உள்ளே சென்ற  மதுராவின்  கண்களுக்கு,  இவர்கள்  தான்  முதலில்  தென்பட்டர்கள்.

வாயில் கதவின் மேல் சாய்ந்து நின்று, தன்னைச் சமாளித்து கொண்ட மதுராவின்  கண்கள்,  அவளையும்  அறியாமல்  கலங்கி  போனது.

தாரைத்  தாரையாய்  கண்ணீர் வழிய, அதற்கு மேல் சமாளிக்க முடியாதவளாய், “பாட்டி!…” என்று கத்திக் கொண்டே ஓடியவள், அந்தப் பெரியவரின்  காலில்  போய்  விழுந்தாள் .

கண்   மூடிப்  பூஜையில்  இருந்தவர்,  காலில்  கண்ணீர்  படக்  கண்  விழித்துக்  குனிந்து   பார்த்தார்.
பார்த்தவரின்  கண்கள்   கலங்க  ஆரம்பித்தது.

“ஏழுகுண்டலவாடா!… வெங்கட்ரமணா!… மாப்பங்காரு தள்ளி!… நீ வச்சிண்டா!…” 
(என் தங்க மகளே!… நீ வந்துட்டியா? )” என்றவர்  மதுராவை இழுத்து  அணைத்தார்.

உடன்  இருந்த  அந்தப் பெண்மணியும், மதுராவை அணைத்து கொள்ள அங்கு, ஒரு பாச மழை அருவியாகப் பாய்ந்து ஓடியது.

தன்  வயதையும்  பொருட்படுத்தாமல்,  மதுராவை  இழுத்து கொண்டு உள்ளே  ஓடினார்  அந்த  முதியவர் .

(தெலுங்கு  பாஷை  உரையாடல்கள்,  தமிழில்  கொடுக்கப்பட்டு உள்ளது)

“என்னங்க!… யார் வந்து இருக்காங்க பாருங்க. நம்ம வேண்டுதல் வீண் போகலைங்க. நம்ம பேத்தி, நமக்குத் திருப்பிக் கிடைச்சிட்டாங்க…
டேய் ஸ்ரீநிவாஸா!… வந்து பாருடா… உன் மக திரும்ப வந்துட்டடா…” என்று தன் வயதிற்கு மீறியக் குரலில், சத்தம் போட்டுக் கத்திக் கொண்டே, மதுராவை இழுத்து  கொண்டு  உள்ளே  ஓடினார்  ஸ்ரீலட்சுமி.

“யாரு?…” என்று கேட்டவாறே  எழுந்து வந்தார் அந்த முதியவர்.

கை எடுத்துக் கும்பிட தோன்றும் தெய்வீகம் அவரிடமும். பார்க்கக் ‘கே.விஸ்வநாத்’  போல்  இருந்தார் .

தன்  கண்ணாடியைத் துடைத்து, மீண்டும் அணிந்து  பார்த்தவர், கண்களிலிருந்து  கண்ணீர்  வழிய  ஆரம்பித்தது .

“வந்துட்டியா மதுரா?… இந்தப் பாவியின் உயிர் போகும் முன்பே, வந்துட்டியா என் குலம் காத்தத் தெய்வமே!…” என்று மதுராவை அணைத்து கதறினார்  அந்தப்  பெரியவர்  நரசிம்ம ரெட்டி.

“மழை  பெஞ்சு,  ஊரே வெள்ளத்தில் மிதந்தது… நீங்க வேற ஆரம்பிக்காதீங்க… சுப்பா முடியலை இவங்க பாச மழை….” என்றவாறு வந்தான்  ஹர்ஷா .

அவன் கிண்டல் அடித்தாலும், அவன் கண்களும் கலங்கித் தான் இருந்தது. அதற்குள் குரல் கேட்டு,  மேல்  இருந்து  வந்தார்  நரசிம்ம  ரெட்டியின்  மகன் முகேஷ்  ரெட்டி.
ஹர்ஷா,   மேக்னாவின் தந்தை.
நரசிம்ம ரெட்டி,  ஸ்ரீலக்ஷ்மியின்  மகன்.

பிரபல  தொழிலதிபர்,  கோடீஸ்வரர் .

“மா தள்ளி!…” என்று ஓடி  வந்தவரை அணைத்து கொண்டாள் மதுரா
“அப்பா!…” என்ற கூவலுடன் .

“எப்படிடா  ஹர்ஷா,  இவளைக்  கண்டுப்   பிடித்தே ?” என்றார் அவர் அன்னை  கஜலக்ஷ்மி .

“என்ன  பண்றது!… எல்லாம்  தலைவிதி.  ஒரு சொலவடை சொல்வார்களே!
‘கொடுமை,  கொடுமைன்னு  கோயிலுக்குப்  போனால்,  அங்கு ஒரு கொடுமை,  ஜங்கு  ஜங்குன்னு  ஆடிட்டு  வந்ததா  மாதிரி’, இந்த ராட்ஷசியை   பார்த்தோம்.

‘ஆவி  தான் வந்துடுச்சோன்னு பயந்தா, இந்தப் பாவித் தான் உயிரோடு இருக்கு.”  என்றவனை  ஓட,  ஓட  விரட்டினாள்  மதுரா .

இவன் முன்னால்  ஓட,  மதுரா  துரத்த என்று, அந்த வீடு பல வருடங்களுக்குப்  பின்னர்  கலகலத்து  இருந்தது .

“மாம்மய்யா கோல்போயினா!….(மாமா தோத்துப்போயிட்டாரு)” என்ற ரெண்டு,  இளம்  குரல்  கேட்டு,  மதுரா  சடன்  பிரேக்  போட்டு  நின்றாள் .

அவர்கள்  ஓடிக்  கொண்டு  இருந்த  ஹாலின்  அருகே,  இருந்த மாடிப்படியில்  நின்று   இருந்தனர்   ரெட்டையர்  இருவர்.

குழந்தைகள்   இருவருக்கும்   நான்கு   அல்லது,   ஐந்து   வயதிருக்கலாம்.
ஒரு ஆண்,  ஒரு பெண் குழந்தை.

‘யார்,  இந்த  ரெண்டு அழகான மான் கு‘ட்டிங்க?…

அடப்பாவி!
ஹர்ஷா உன்னை, நான்கு அல்லது, ஐந்து வருஷம்  பார்க்கலை ஒத்துக்கறேன். அதற்குள் டூயல் ரிலீசா?…
சார்,  செம்ம  பாஸ்ட்  தான்  போல்  இருக்கே!’ என்று  ஹர்ஷாவின் பக்கம், ஒரு கோப லுக் விட்டவள், அந்தக் குழந்தைகளின் அருகே சென்று அவர்கள் உயரத்திற்கு மண்டியிட்டு அமர்ந்தாள் .

“ஹாய்  டார்லிங்ஸ்!… ஐ  ஆம்  மதுராக்ஷி!…. மது…  நீங்க யாரு?” என்றாள் .

பெண்  குழந்தை,  அருகில்  நின்ற அவள் அண்ணனின் காதில் ஏதோ சொல்ல,  அவனும்  தலை  அசைத்து  ஆமோதித்தான் .

“நீங்க  ஏஞ்லா?” என்றான்  அவன் .

எந்தக்  குழந்தை அவளைப் பார்த்தாலும், முதலில் கேட்கும் கேள்வி அதுவாகத் தான் இருக்கும்.

மதுராவின்  முக அமைப்பா, ‘புன்னகையின் முழு முகவரி’ என்று பறையறிவிக்கும் முகமா, குறும்பில் மிளிரும் கண்களா, இல்லை அவள் அருகே செல்லும் போதேத் தோன்றி விடும் அமைதியா, ஏதோ ஒன்று குழந்தைகளை  அவ்வாறு  கேட்க  வைத்து  விடும் .

“ஹே!… எப்படிக் கண்டுப் பிடிச்சீங்க குட்டிஸ்?… இங்க ரெண்டு குட் பேபீஸ் இருக்காங்க…. வந்து விளையாடிட்டு போங்க என்று ஹர்ஷாத் தான் சொன்னாங்க…  அதான்,  உங்கக்  கூட  விளையாட,   ஓடி வந்துட்டேன். உங்க  பேர்  என்ன ?” என்றாள் மதுரா .

“நான்  கிருஷ்ணா,   இவ  சுபத்ரா.”  என்றான் சிறுவன் .

ரெண்டுக் குழந்தைகளையும், அப்படியே வாரி எடுத்து அணைத்து கொள்ள வேண்டும்  என்ற  பேராவல்  மதுராவிற்கு  வந்தது.
அந்த  அளவு லவ்லி  கிட்ஸ்.

பார்த்த நொடியே,  அவள்  மனதை கொள்ளை கொண்டு விட்டனர் இருவரும். அவர்களின்  ஏதோ  ஒன்று  இவளைக்  கவர்ந்தது .

“சொல்லுங்க கிட்ஸ்!… இந்தத்  தேவதை  கிட்டே  இருந்து,  உங்களுக்கு என்ன  வேண்டும்?…
மாஜிக் போட்டு வரவழைச்சுடறேன். சாக்லேட், பிஸ்கட்,  ஐஸ்கிரீம்  எது  வேண்டும்  என் டார்லிங்ஸ்க்கு?…”  என்றாள் மதுரா .

ரெண்டுக்  குழந்தையும்  தங்களுக்குள்,  தீவிரமாக டிஸ்கஸ் செய்ய, மதுராவிற்கு சிரிப்பாக வந்தது.

தலையை அசைப்பதும், கண்ணைச் சுருக்குவதும், வாயில் விரல் வைத்து யோசிப்பதும்   என்று   அவளை   மேலும்   கவர்ந்தனர் இருவரும்

“சோ  ஸ்வீட்…”  என்றாள்  மதுரா,  தன்னையும்  அறியாமல் .

இருவரும்   முடிவுக்கு   வந்து  விட்டார்கள்  போல,   சுபத்ரா,  மீதம்  இருந்த படி  இறங்கி  வந்து,  மதுராவின்  மேல்  சாய்ந்து  நின்று,  அவள் கன்னத்தைப் பிடித்து,
“ஏஞ்செல்!….. எங்க டாடியை கூட்டி வரியா?… அங்கே விஷ்வா, நந்தா, ஹரிணி எல்லோருக்கும் அப்பா இருக்காங்க. எவ்வளவு ஜாலியா விளையாடுறாங்க   தெரியுமா?…  எனக்கும்,  க்ரிஷுக்கும் தான் டாடி இல்லை.

நீ  தான்,  ஏஞ்செல்   ஆச்சே,  ஒன் டே டாடி ஆபீஸ் வேலைக்கு லீவு கொடுத்து  அனுப்பேன்.  நாங்க,  எங்க டாடியை ஒன் டைம் பார்த்துக்கறோம். அம்மா கிட்டே கேட்டா, டாடியை கூட்டிட்டே வரமாட்டேங்கிறா…. 
ப்ளீஸ்!… ப்ளீஸ்!…”  என்றாள்  கண்ணில்  நீர்  வழிய .

அதிர்ந்து  போய்த்  திரும்பினாள்  மதுரா.
கண்களை  மூடிப்  பாரம்  தாங்க  முடியாதவளாய்,  தூணின்  மேல்  சாய்ந்து நின்று  கொண்டு   இருந்தாள்    மேக்னா.

அங்கு,   இருந்தவர்களின் முகமும், அந்தக் குழந்தைகள் யாரின் பிள்ளை என்று  சொல்லாமல்  சொல்லியது .

அதுவரை  இருந்த கலகலப்பு மாறி, ஏதோ பேய்  பிடித்தது போல் அனைவரின்   முகமும்  வெளிறி  போனது .

ஹர்ஷாவை  துரத்திக்  கொண்டிருந்தவள்,  மழலை குரல் கேட்டு நின்றாள்.
இருவரும்,  ‘ஹர்ஷாவை  மாமய்யா’ என்று அழைத்ததைக் கவனிக்காமல் விட்டு இருக்க, ‘அவர்கள் மேக்னாவின் பிள்ளைகள்’ என்று தெரிய வந்த திகைப்பு,   அதிர்ச்சி   எல்லாம்   பலமாய்  மதுராவைத்  தாக்கியது.    

‘இவங்க  மேக்னா பிள்ளைகளா?. அவள் கணவன் எங்கே?… டைவோர்ஸ் ஆகிவிட்டதா,   இல்லை  இறந்துட்டானா?’ என்று யோசித்தவள்,
‘இப்படி என்றால், இவர்களின் ரியாக்ஷன் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன!…
ஏதோ முள்ளின் மேல் நிற்பது போல், சொல்லக் கூடாத ரகசியம் பகிரப்பட்டது போல், எதற்கு இந்தத் தவிப்பு, துடிப்பு, கலக்கம் எல்லாம்?’  என்று  யோசித்தவளை,  தடைச் செய்தது கிருஷ்ணாவின் அழைப்பு .

மதுராவின்  அருகே  வந்து  நின்ற  அவன்,  அவள்  முகத்தைத்  தன்  புறம் திருப்பி,  “ப்ளீஸ் ஏஞ்செல்!… நாங்க குட் கிட்ஸ் தானே!… எனக்கு எங்க டாடியை  கூட்டிட்டு  வரியா?… ப்ளீஸ்!…” என்று கண்ணைச் சுருக்கி, முகத்தைப்  பாவமாய்  வைத்துக்  கேட்க,  ஷாக்  அடித்தது  போல் ஸ்தம்பித்து  போனாள்  மதுரா .

கிருஷ்ணாவின் அந்தக் கண் சுருக்கம், கொஞ்சல், மனேரிசம் எல்லாம் உண்மையைச்  சிதறுத்  தேங்காய்  போல்  உடைத்து  காட்டி  விட்டது,  ‘அவர்களின்  தந்தை  யார்’  என்ற  உண்மையை.

ஆனால்,  பார்ப்பதைத்  தான்  அவளால்  நம்ப முடியவில்லை. ‘அவர்கள் யாரின் குழந்தை, அவர்கள் தேடும் தந்தை யார்’ என்று விளங்கி விட்டது அவளுக்கு.

தெரிந்து  கொண்டதை,  உறுதிச்  செய்ய  மதுரா,  மேக்னாவை  பார்க்க  அவள்  தலைத்  தானாகக்  கவிழ்ந்தது .

‘இது  எப்படி  சாத்தியம்!…  எங்கே   அவன் பாதையும், மேக்னாவின் பாதையும் இணைந்தது?… 
அவர்களின்  இணைப்புக்கு,  ஆதாரமாய்  ரெண்டு உயிர்கள். எப்படி?… எப்படி?….’  மதுராத் திணறிப் போனாள் என்றால்  மிகை  அல்ல .

“க்ரிஷ்!… தாரா!…  நீங்கக்  கேட்ட,  போமெரியன்  வாங்கி  வந்து  இருக்கேன்…  கம்  லெட்ஸ்  கோ…” என்று ஹர்ஷா, குழந்தைகளை அழைத்துக்  கொண்டுத்  தோட்டத்திற்குச்  சென்று  விட, அழுகையுடன் மேக்னா  உள்ளே  சென்று  விட்டாள் .

“அம்மா!… என்னமா இது?…”  என்றாள்  மதுரா,  கஜலட்சுமியை  பார்த்து.

‘இத்தனை  வருடம்  இவர்கள்,  ‘அவனை  எப்படி  விட்டார்கள்?…  அவனும் பொறுப்பைத்  தட்டிக்  கழிப்பவன்  அல்லவே!… ஏதோ தப்பு நடந்து இருக்கிறது.’ என்றே   மதுராவின்,  மனம்  அடித்துக்  கூறியது.

முந்தானையில்  வாய்  மூடி அழுதார் லட்சுமி. கண்ணை மூடித் தன் அறைக்குச் சென்று விட்டார்  நரசிம்மனும், முகேஷும்.
பூஜை  அறைக்குள்  சென்று  விட்டார்  ஸ்ரீலக்ஷ்மி.

கஜலட்சுமிக்கும்,  யாரிடமாவது  தன்  துயரத்தைச்  சொல்லி  அழ  வேண்டும் போல்  இருந்ததோ,  என்னவோ மதுராவின் தோளில் சாய்ந்து அழுது விட்டார்.

அவரைச்  சற்று  நேரம்  அழ  விட்டு,  அவர் சமாளித்து கொண்டார் என்றதும்,  அவர்  பருகத்  தண்ணீர்  கொடுத்தாள் .

“போய்ப்  பேசிப்  பார்க்கவே  இல்லையா?…  எப்படி,  இவ்வளவுக் காலம் ஏதும்  செய்யாம  விட்டீங்க ?”  என்றாள்  மதுரா.

‘மேக்னாவுடன்  அவனுக்குக்  குழந்தை  இருக்கிறது  என்றால்,  அவன் எப்படி  இன்னொருத்தியைத்  திருமணம்  செய்தான்!…
தன்னையும்,  காதலித்து  இருக்கிறான். என்ன நடக்குது  இங்கே?’   மதுரா பரிதவித்துப் போனாள்.

“குடிப்  போதையிலிருந்து  இருக்கிறான்  மதுரா…”  என்றார் அவர் .

“வாட்!… குடியா?…” அவளுக்குத் தெரிந்து அவன் குடிக்கவே மாட்டானே!
இவர்  குடி  என்கிறார் .

“அப்பா,  போய்ப்  பேசினாங்களா?”  என்றாள்  மதுரா .

“யாரிடம் என்று போய்ப் பேசுவது?… அவன் யார் என்றே, இவளுக்கும் தெரியவில்லை. அவன்,  செய்தப் பாவத்திற்கு,  என் மகள் சிலுவைச் சுமக்கிறா!… எல்லாம்  விதி.”  என்றார்  அவர் .

‘என்ன சொல்றாங்க இவங்க!… யாருன்னு தெரியலையா?… க்ரிஷின் முக ஜாடை,  பார்த்துக் கூடவா இன்னும் யார் என்று புரியவில்லை?…
அது எப்படி,  மேக்னாவிற்கு  தெரியாமல்  போகும்?
சான்சே  இல்லை!… இவ,  தான்  ஏதோ  கோல்மால்  செய்து  இருக்கா!….

அப்பா,  தொழிற்  துறையில்  இருப்பவர்.  அவர் கண்களுக்கு, உருவ ஒற்றுமை  எப்படி  தெரியாமல்  போனது?….  ஹர்ஷாவுக்குக் கூடவா அடையாளம்   தெரியவில்லை?…’   என்று தலையைப் பிய்த்துக்  கொண்டாள் .

“அப்பாவும், நானும், மாமா, அத்தை, ஹர்ஷா கூட எவ்வளவோச் சொல்லி விட்டோம்.
‘நடந்தத்  தவறுக்கு,  நீ  பொறுப்பு  அல்ல.  நடந்தது ஒரு விபத்து’ என்று எண்ணி மறந்து விடு.  
‘கருவைக்   களைத்து   விடு’  என்றதற்கு,  மூன்று மாதம்   எங்களிடம்  பேசவும்  இல்லை.

நம்ம சமூகத்தில்,  திருமணம்  என்ற  ஒன்று  நடக்காமல்,  பிள்ளைப்  பெறுவது எல்லாம் ஏற்று கொள்ளப்படுவதில்லை மதுரா.

இவளுக்கு எவ்வளவுச் சொன்னாலும் புரியவேயில்லை… எத்தனை ஏச்சுகள், பேச்சுக்கள், கிண்டல்கள் என்று மேக்னா இந்தச் சமூகத்தின் முன் பட்ட அவமானம், கொஞ்சம்  நஞ்சம்  இல்லை.

‘குழந்தைகளை  நாங்க  பார்த்துக்கறோம்.  நீ,  வேறு  திருமணம்  செய்து கொள்’  என்றதற்கும்   உடன்  படவில்லை.

‘இவளுக்கு ஒன்று நல்லது நடக்காமல், தானும் திருமணம் செய்து கொள்வதில்லை’  என்று  இருக்கிறான்  ஹர்ஷா.

ஏதோ,  பேருக்குச்  சிரிச்சி  வாழ்ந்துட்டு  இருக்கோம்.
ஏதோ  போய்ட்டு  இருக்கு  மதுரா.
ச்சே!…  பாரு…  வந்த புள்ளைங்கப் பசியா  இருக்கும்.

சாப்பாடுக் கூட, எடுத்து  வைக்காம, நான் பாட்டுக்குப் புலம்பிட்டே இருக்கேன்….
சின்னு!…  சாப்பாடு  எடுத்து  வை…” என்றவாறு சமையலறையை நோக்கி சென்றார் அவர்.

‘என்ன நடக்கிறது’ என்று புரியாமல், ஸ்தம்பித்து போய் அமர்ந்திருந்தாள் மதுரா.
அங்கு வெடித்திருந்தது சாதாரண அணுகுண்டு அல்ல.

பலரின் வாழ்க்கை பாதையை மாற்றியமைக்கப் போகும் ரகசியம்.

கிருஷ்ணா, சுபத்ராவின் தந்தை யார்?
மதுராவை காதலித்தவன் என்றால், அது விஜய்,சூர்யா  இருவர் மட்டும்தான்.

இந்த இருவரில், யார் மேக்னாவை தாயாக்கியவன்?

இன்னொரு தவம் இங்கே தொடரும்…

உங்கள் கருத்தைப் பகிருங்கள்