arrow_back
என்ன தவம் செய்தேன்! 84
என்ன தவம் செய்தேன்! chevron_right பகுதி 84 / 85

84

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அடுத்து  என்ன’  என்று  புரியாமல்,   விஜய் ,சூர்யா ராஜேஸ்வரி குழப்பத்தில் ஆழ்ந்து விட்டனர்.

ஏதாவது க்ளூ கிடைத்தாலாவது, எந்தத் திசையில்  போவது,   யாரைப்   பிடித்து   விசாரிப்பது  என்று  தெரியும்.

கண்ணைக்  கட்டி,  காட்டில்  விட்டது  போல்  இருந்தது  அவர்களுக்கு .
ஆனால்,  எதிர்பாராத  இடத்திலிருந்து  அவர்களுக்குத்  தேவையான  தகவல் வந்தது.

‘தொலைத்ததை,  தொலைத்த  இடத்தில்  தேடினால்  தானே  கிடைக்கும்!’
மதுரா தொலைந்த, கோயில் பகுதியில் தங்கள் விசாரணையை இன்னும் தொடர்ந்து  கொண்டு  இருந்தனர்  கார்த்திக்,  ரகு,  ஆல்வின்,  உத்தம்.

அங்கு இருந்த ஒருவரையும் விடவில்லை. கோயிலுக்குச் சாமி கும்பிட வந்தவர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஹோட்டல், டீக்கடை வைத்து இருப்பவர்கள் என்று ஒருத்தர் பாக்கி இல்லாமல், விசாரித்துக் கொண்டு இருந்தனர்.

பட்டப்  பகலில்,  நூறு பேராவது,  இருக்கும் இடத்திலிருந்து, யாருமே அறியாமல்,  ஒரு  பெண்ணைக்  கடத்துவது என்பது இயலாத காரியம் மட்டும்  அல்ல,  முடியாத  காரியம்.

அதுவும்,  ‘தற்காப்புக்  கலை’  கற்ற  ஒரு  பெண்ணை.
குழந்தைத்தனமாய் தோன்றினாலும், மதுரா தனக்கோ, மற்றவர்களுக்கோ ஏதாவது  ஒன்று,  என்று  வரும்போது  கடைசி  மூச்சு உள்ள வரை, போராடும்  மன தைரியம், தன்னம்பிக்கை, கட்ஸ்  கொண்டவள்.
போராளி!

அப்படிப்பட்ட  ஒரு  பெண்ணைக்  கடத்துவது,  என்பது  கொஞ்சம் சிரமமான  விஷயம். 

தவிர,  கடத்த  வந்த  பீகார்க்  குழுவும் சிக்கி  இருக்க, ‘மதுரா எப்படி காணாமல்  போனாள்?
இது,  வேறு  ஏதோ  ஒன்று என்று அவர்கள் நம்பியதற்கு,   கைமேல்   பலன்   இருந்தது .

கோயிலின்  பின்புறம், சிறு  கடைகளை  வைத்து இருந்தவர்களிடம், இவர்கள் மொபைலில் இருந்த போட்டோவைக் காட்டி, விசாரித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு விளையாடிக் கொண்டு இருந்த அந்த வியாபாரிகளின் குழந்தைகள், இவர்கள் விசாரிப்பைக் கண்டு அருகே வந்தனர் .

“ஏய் ராசு!… இங்கே வாடா!… உன் ஹீரோயினிய பத்தித் தாண்டா கேட்குறாங்க…” என்று எவனையோ கூப்பிட்டது ஒரு பொடிசு .

அவர்கள் குரல் கேட்டு, டீ  விற்று  கொண்டு  இருந்த, பதினைந்து வயது  ராசு,  என்பவன்  அவர்களை  நோக்கி  வந்தான்.

அதற்குள்  கார்த்திக்,  அங்கே விசாரித்துக் கொண்டிருந்த மற்றவர்களை  அழைத்து  இருந்தான்.

“என்னா  அண்ணாத்தை?… என்ன மேட்டரு?”  என்றான்  அந்தச்  சிறுவன் .

மொபைலில், அன்று எடுக்கப்பட்ட மதுராவின் படத்தைக் காட்டி,
“தம்பி!… இந்த  அக்காவை,  இங்கே  எங்கேயாவது  பார்த்தியா?” என்றான் கார்த்திக்.

“என்ன அண்ணாத்தை!… இப்படி கேட்டுபுட்டே!… அது   புதுப் பட ஹீரோயினித் தானே!… இங்கே  தானே,  புதுப் பட ஷூட்டிங் நடந்தது.”  என்றான்  ராசு .

“என்னது!… பட ஷூட்டிங்கா?”  என்றான்  கார்த்திக், அதிர்ந்தவனாய் .
Image of Telugu Movie Shooting near beach-YL615529-Picxy

“பின்னே,  உன்  கையிலே  என்ன  புருடவா  உட்டுக்கிறேன்?…
செம்ம அழகு சார்.
அப்படியே, ‘துலக்கி  வச்ச  காமாச்சி  அம்மன்  விளக்கா’  என்னமா  ஜொலிச்சாங்க!
கண்ணுலே  நிக்குது.

அப்படியே  சோகமா  வந்து   நின்னு, இந்தக் கடலையே ஊத்து பார்த்துட்டு நின்னாங்க… கண்ணு கலங்கிடுச்சு அவங்களுக்கு.

அப்போ  தான்  சார்,  ‘ஹீரோ  என்ட்ரி’  அசால்ட்டா கொடுத்தார் பாருங்க.  என்ன ஹெயிட், வெயிட், என்னா கலர்!… சுண்டுனா ரத்தம் வரும்.

ஹீரோயினை  பார்த்து,   ஒரு  ரியாக்ஷன்  விட்டார் பார், மெர்சல் ஆயிட்டேன்!

ஹீரோ  வருவார்னு,  ஹீரோயினி   எதிர்பார்க்கவில்லை.  
என்னமா  ஒரு லுக்  விட்டுச்சு  தெரியுமா?…
கண்ணு  கலங்கிப்  போச்சு. 

என்னா பீலிங்கு! …
கூடவே,  இன்னொரு  கில்பான்ஸ்!…  அது,  ‘பம்பாய் அல்வா கணக்கா’ டக்கரா இருந்துச்சு… டயலாக்  வுட்டாங்க  பாருங்க…” என்றவன்  அவர்கள்  பேசிய  வாய்ஸில்,

“நீ!… நீ!… நீ!… மதுரா தானே!… நீ இன்னும் சாகலையா?… இன்னும் உயிரோடவா  இருக்கே!…” என்று   ஹீரோ   பேசிக்குனாரு.

கூட  இருந்த  ஹல்வா, “நீ  செத்துட்டேன்னு  நினைச்சுட்டு  இருக்கோம். இன்னும்,   நீ  சாகலையா?…
எப்படி  நீ   இன்னும்,  உயிரோடு இருக்கேன்னு?…’   டயலாக்  சொல்லிச்சு.

என் ஹீரோயினி என்னமா பீல் பண்ணுச்சு தெரியுமா!..
அப்பலகா… மயங்கிடுச்சு…

ஹீரோ பாஞ்சு, ஓடி வந்து, ‘சும்மா, மதுர வீரன் பொம்மியத் தூக்கறா  போல்’  தூக்கிட்டு,  காரில்  ஏத்திட்டு  போனார்.
என்ன சீன் தெரியுமா அண்ணாத்தை!… லவ்வோ  லவ்ஸ்!… 
நூறு நாள் மாஸ்.”  என்றான்  அவன் .

இவன்,  நடந்ததை  பார்த்து  இருக்கிறான்.
மதுராவின்  அலங்காரத்தைப் பார்த்து, ‘அவளை ஏதோ பட ஹீரோயின்’ என்று  நினைத்து  இருக்கிறான். அங்கு ஷூட்டிங் நடப்பதாகக் குழம்பி போய் இருக்கிறான்.

ஏனென்றால், அவர்கள் வரும்போது,  ஒரு டிவி சேனல், அந்தக் கோயில் பற்றிய  டாக்குமெண்டரி  எடுத்துக்  கொண்டு  இருந்தார்கள்.  அதை, ‘சினிமா’ என்று நினைத்து இப்படி சொல்கிறான் என்று புரிந்து போனது அவர்களுக்கு .

இவன்,  சொன்னதை  வைத்துப் பார்த்தால், மதுரா அவளாகக் கோயில் விட்டு வெளியே வந்து இருக்கிறாள். வெகுநேரம் கடலைப் பார்த்தவாறு கண்கள்  கலங்க  நின்று  இருக்கிறாள்.

அப்பொழுது  அவளைத்  தெரிந்த   இருவர்,  ஒரு ஆணும்,  பெண்ணும் அவளை  அடையாளம்  கண்டு  வந்து  பேசி  இருக்கிறார்கள்.

‘இன்னும் சாகாமல் இருக்கிறாய்?’ என்று கேட்டு இருக்கிறார்கள்.
வேறு என்ன  பேசினார்களோ,  ஏற்கனவே  மன  அழுத்தத்தில் இருப்பவள் மீண்டும்  மயங்கி  இருக்கிறாள். 

மயங்கிய  மதுராவை, அவர்கள் இருவரும் தூக்கிச்  சென்று   இருக்கிறார்கள்  காரில் .

“தம்பி!… அந்தக்  காரா சின்னக் காரா, பெரிய காரா?… என்ன கலர்?” என்றான்  ஆல்வின்.

“அதான்! அண்ணத்தை!… அக்டரு சிவகார்த்திகேயன், சூரி அண்ணா கூடப் போய் ஹீரோயினி, கீர்த்தி சுரேஷ் கடையில், ஒரு காரை ஆட்டைய போடுவாங்கலே!… அது சார்!…. வெள்ளை கலர்.
சும்மா  பிச்சிக்குன்னு  போச்சு.  எப்போ  சார்  படம் ரிலீஸ் ஆகும்?

என்னைக்  கூடப்  படம்  புடுச்சங்கா. ‘நானும் படத்துல வரேன்னு சொன்னதும்   நம்ம  பசங்க  பேஜார்’  ஆகிட்டாங்க.”  என்ற  ராசுவிற்கு,  ஏதோ ஒரு பதில் சொல்லிக் கையில்,  ரூபாயை திணித்து விட்டுத் தகவலை விஜய்க்கு  தெரிவித்தார்கள் .

தகவல்  வந்ததும்  ராஜேஸ்வரி,  டிராபிக்  போலீஸ்  உதவியுடன்  கார் சென்ற  திசையை,  cctv  கேமரா  மூலம்  பார்க்க,  அந்தக்  கார்,  மீனம்பாக்கம் பக்கம்  போவதாகக்  காட்டியது.

அங்கு  இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு, தகவல் தரப்படச் சுற்றி இருந்த இடங்களில்,  patrol  அனுப்பபட்டது.

கார் சிக்னல் கட் ஆன இடமும்,  கார் கடைசியாகச் சென்ற திசையும் ஒன்றே!… அந்தத்  திசையில்  வீடுகளோ,  கோடௌன்களோ  இல்லை.
மீதம்  இருந்தது,  மீனம்பாக்கம்  விமான  நிலையம்  மட்டும்  தான்.     

மூன்று மணி நேரம், எந்தத் தகவலும் வராமல், பைத்தியம் பிடிக்காதக் குறையாய்,  தவித்துப்  போய்  விட்டனர்   விஜய்யும், சூர்யாவும்.

பவானிக்கு மயக்கம் தெளிந்து, ‘மகளைச் சுமன் கடத்தவில்லை’ என்பதால் நிம்மதி அடைந்தாலும், ‘மதுராவிற்குத்  தெரிந்த வேறு யார் அவளைக் கொண்டுச்  சென்றது’  என்று  புரியாமல்,  தவித்துக்  கொண்டு  இருந்தனர்.

எல்லா பக்கமும், அடைபட்டு விட, என்ன செய்வது, யாரை விசாரிப்பது என்று புரியாமல், மீண்டும் தொடங்கிய இடத்திலேயே நின்றது அவர்கள் விசாரணை .

விஜய்  மட்டும்,  மதுராவின் மொபைல் நம்பருக்கு, ட்ரை செய்வதை நிறுத்தவே இல்லை. 
குறைந்தது  இருநூறு  முறையாவது விடாமல் அழைத்து  இருப்பான்.

ஒவ்வொரு  முறையும்,  ‘மொபைல்  சுவிட்ச்  ஆப்’  என்றே வந்தது. ஆனாலும், அவன் மனம் தளரவில்லை. மதுராவின் மொபைல் நம்பருக்கு ட்ரை  செய்வதை   நிறுத்தவில்லை.

ராஜேஸ்வரி  அலுவலகத்தில், அதற்கு மேல் வேலை இல்லை என்று விஜய்யும்,  சூர்யாவும்,   ‘பிரிந்தாவனத்திற்கு’   தரும்பி  இருந்தனர் .

பவானியும் அழைத்து வரப்பட்டு இருந்தார். அனைவருமே அந்த வீட்டில் குழுமி இருந்தனர் .

போலீஸ்  கொண்டு  ராஜேஸ்வரி  ஒரு  புறம்  தேட,   விஜய்,  சூர்யா தங்கள் ஆட்களை  வைத்து  தேடிக்  கொண்டு இருந்தனர்.

ஒரு நொடி கூட அமைதியாய் இராமல், பம்பரமாய் சுழன்ற அவர்கள் இருவரையும்,  திறந்த  வாய்  மூடாமல்  பார்த்துக்  கொண்டு  இருந்தார் பவானி.

சூர்யாவை  விட,  விஜய்யின்  கோபம், கண்களின் சிகப்பு, முகத்தின் இறுக்கம், அவன்   தன்னைத்   தானே முயன்று கட்டுப்படுத்தி இருந்த முறை என்று    பார்ப்பவர்களுக்கு    மரண   பயத்தை   ஏற்படுத்தியது.

ஆல்வினையும்,   உத்தமையும்  குதறி  எடுக்காதக்  குறை.
சூர்யா கூட, இவன் வெறியைக் கண்டு ஒரு நொடி திகைத்துப் பின் வாங்கினான்.

கஜாவும்,  சுமனும்,  சோனாவும்  இதில் ஈடுபட முனைந்திருந்தாலும், அவர்கள்  தோல்வியை  தழுவியிருந்ததால்,  அவர்கள்  மேல் அதிகளவு விஜய்,  சூர்யாவின்  கவனம்  செல்லவில்லை. 

‘இவர்கள்  கடத்தவில்லை.’என்று  தெளிவாக,  ஆதாரத்துடன்  தெரிந்த  பிறகு,  ‘வேறு  யார்,  இதில்  ஈடுபட்டு  இருப்பார்கள்?’ என்ற  கோணத்தில் தான்,  இவர்கள்  விசாரிப்பு  இருந்தது.     

‘யார்  எல்லாம்  மதுராவைக் கடத்தி இருப்பார்கள்’ என்ற லிஸ்ட் தயாரிக்க பட்டு,   அவர்களை  எல்லாம்  துவம்சம்  செய்து  கொண்டு  இருந்தான்.

அவனைக் கட்டுப்படுத்தும், ஒரே ஆள் மதுரா தான் என்பது அங்கு இருந்தவர்களுக்கு புரிந்து விட, அவள் தான் எங்கு இருக்கிறாள் என்பது தெரியவில்லையே! 

‘மதுராவிற்கு தெரிந்தவர்கள்’ என்னும் போது, நிச்சயம் இது வேற ஏதோ ஒன்று என்று புரிந்தது அவனுக்கு.

மீனம்பாக்கம்  வரை  வந்த  பிறகு  தான்,  ‘மொபைல்  சுவிட்ச்  ஆப்’  என்று வருவதால்,  அவன்  மனதிற்குள்  ஏதோ  ஒன்று  எதையோ  சொல்ல  முயன்று கொண்டிருந்ததோ, இல்லை அவன் உள்ளுணர்விற்கு,  ‘மதுரா நலமாக  இருக்கிறாள்’  என்று உணர்ந்ததோ, ஏதோ ஒன்று அவன் மதுராவின்   மொபைலை  அழைப்பதை  நிறுத்தவேயில்லை.    

கணக்கில் அடங்கா முறையாய்,  அவன் மதுராவின் மொபைலை அழைத்து கொண்டே  இருந்தான்.  ஒவ்வொரு முறை,  ‘மொபைல்  சுவிட்ச்  ஆப்’ என்றே வந்தது .

அவன் விடா முயற்சியின் பலனாய், மாலை மூன்று மணிக்கு, அவள் மொபைல்  ஆன்  ஆகி,  ரிங்  போக,  விஜய், சூர்யாவிற்கு ஜாடை காட்டினான்.

ரிங்  போக, ஸ்பீக்கரில்  போடப்பட்டது  .

“சொல்லு  விஜய்!… எதற்கு  இத்தனை  கால்  செய்துட்டே இருக்கே?”  என்றது  எதிர்முனை.

மதுரா  தான்  பேசினாள்.
குரலில் கடத்தப்பட்டதற்கான எந்த பயமோ, பதட்டமோ  இல்லை. 

அவள் குரலைக் கேட்ட, விஜய்யின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அவனையும் அறியாமல் கண்களை மூடித் திறந்தவன், ‘மதுராவுக்கு  எதுவும்  இல்லை’  என்பதால்,  மனபாரம்  நீங்கியவனாக, கால் மடங்கி,   தரையில்   சரிந்து  அமர்ந்தான் .

அதற்குள்  ஓடி வந்த பவானி, “மதுரா!… எங்கேடா இருக்கே?… எந்தப் பாவிமா  உன்னைக்  கடத்தினது!… உன்னை ரொம்ப துன்பப்படுத்தறாங்களா!… 

அய்யா சாமி!…
என்  மகளை  விட்டுடுங்க.
உங்க  காலில்  வேண்டும்  என்றாலும்  விழுகிறேன்.  என் பெண்ணை எதுவும்  செய்துடாதீங்க.

உங்களை  கெஞ்சி கேக்கிறேன்.

அய்யா!… உங்க வீட்டு பெண்ணாய், உங்க தங்கச்சியா நினைச்சு அவளை எதுவும் செய்துடாதீங்க  தம்பி!…
ஒரு  அம்மாவாய்,  உங்க  கிட்டே  பிச்சை கேக்கிறேன்… அவ வாழ வேண்டிய  பொண்ணு  அய்யா!… எதுவும்  செய்துடாதீங்க   தம்பி!..”      என்று  அழுது  கதறினார் .

கேட்பவரின்,  கல்  நெஞ்சையும்  கரைய  செய்யும்  கொடூரம்  அது.

ஒரு  தாய்,    ‘மகளின்  மானத்தோடு  விளையாடாதீர்கள்!…  உங்கள் வீட்டுப் பெண்ணாய்,  உங்கள்  சகோதரியாய்  என்  மகளை  நினையுங்கள்’    என்று முகம்  அறியா  ஒருவனிடம்  கதறும்  நிலை.

உலகில்  உள்ள  அனைவரும்,  மாற்றான்  வீட்டு  பெண்களை,  தங்கள் வீட்டு  பெண்ணாய்  ஒரு  தாயாய்,  சகோதரியாய்,  நினைத்து  விட்டால், பல பூக்கள்   ஏன்  கருகப்  போகிறது?

தாய்,   சகோதரி  என்ற  உன்னத  எல்லை  கோடுகள்  கூட,  சில  இடங்களில்  அழிக்கப்பட்டு   தான்   விடுகிறது. 

மனிதன்  என்று  சொல்லிக் கொள்ளவே  தகுதி இல்லாத மிருகங்கள், ‘மனிதன் என்ற போர்வையில் உலவிக் கொண்டு, அடுத்த பலி யார் என்று வேட்டையாடி  கொண்டு   இருப்பது’  ஒவ்வொரு கணமும் நடந்து கொண்டே  இருக்கும்,  ‘மன விகாரம்.’       

அந்த  வீட்டில்,  இருந்தவர்களின் ஒவ்வொருத்தரின் கண்களிலும் பவானியின்   இந்த   கதறல்,  கண்ணீரை  வரவழைத்து  இருந்தது.

ஆனால், இந்த முறை, பவானி இப்படி கதற வேண்டிய நிலை இல்லை என்பதை  அவர்கள்  உணரவில்லை. 

எதிர் முனை  என்ன  சொல்ல  வருகிறது என்று புரியாமல், மதுரா பேச இடமே கொடுக்காமல், இவர் பாட்டுக்குப் புலம்பலில் இறங்க,
“அம்மா!… நிறுத்துங்க.”  என்று  கத்தினாள்  மதுரா.

மதுராவின்  உயர்ந்தக்  குரல்,  பவானியின்  கதறலை  நிறுத்தியது.

“என்னை  யாரும்  கடத்தலை அம்மா… ஐ ஆம் ஆல்ரைட்… நான்  என்  பிரெண்ட்ஸ் கூடத் தான் இருக்கேன்… நீங்கப் பயப்படும் அளவு எதுவும் இல்லை.” என்றாள்  மதுரா  சாவகாசமாக .

அதைக் கேட்ட அவர்களின் ரியாக்ஷன் எத்தகையது என்று கூறுவது கடினமே!

மதுராவிற்கு ஒன்றுமே இல்லை  என்று மகிழ்வதா,   இல்லை இவளை உண்டு  இல்லை  என்று  ஆக்குவதா!

“எங்கே,  இருகேடீ  பிரெண்ட்ஸ் கூட இருக்கியா!….  உன்னைக்  காணோம் என்று  பைத்தியம்  மாதிரித்,  தெருத் தெருவாய், உன்னைத் தேடி அலைஞ்சுட்டு  இருக்கேன்.
நீ,  கூலா  பிரெண்ட்ஸ்  கூட   இருக்கேன்னு சொல்றே!…

மவளே!… உன்னை  என்  கையால்  கொன்றால், தாண்டீ எனக்கு நிம்மதி. தினம்,  தினம் என்னைக் கொல்வதே  உனக்கு வேலையா போச்சு இல்லை… போறவ  சொல்லிட்டு  போறதுக்கு  என்ன?… 
இங்கே  செத்துட்டேன்டீ!….  நீ  காணோம்  என்று கேள்விபட்ட மறுகணம்…”  என்று உச்சஸ்தாயில் கத்தினான்  விஜய் .

இவன்   கோபத்திற்கு,   எந்த   ரியாக்ஷன்   மதுராவிடமிருந்து   வரவில்லை.

அதற்கு    மாறாக,  யாரோ  ஒருவன்  அலறும்  சப்தம்  கேட்டது.

“ஏய்  எருமை!…  அடிக்காதேடி!… ஹேய்!… உண்மையில் வலிக்குது… சாரி மா ரியலி சாரி!… நான் வேண்டும்னா, அவங்க எல்லோர் காலில் விழுறேன். அடிக்காதேடீ!…
என் செல்லம் இல்லை…
என் டார்லிங் இல்ல…
ப்ளீஸ்! ப்ளீஸ்!…” என்ற  ஒருவனின் கொஞ்சல், கெஞ்சல் இங்கு இருந்தவர்களின் பிபி  எகிற  காரணமாக  இருந்தது .

“’ஹே!… சாரி… சாரி… எல்லோரும்  என்னை மன்னிச்சுடுங்க. இந்தப் பிசாசை,  ரொம்ப நாள் கழிச்சி பார்த்தோம்.

பேசிட்டே  இருந்த பிசாசு, மயங்கி விழுந்துட்டா.  என்ன  பண்றதுனே  தெரியலை.  அதான்  முதலுதவி செய்துட்டு,  டாக்டர்  கிட்டே  காட்டக்  கூட்டி வந்தோம்.

இவ  செய்தக்  கூத்தில் உங்களுக்கு   எல்லாம்   இன்போர்ம்   செய்யணும்   என்பதே   மறந்து போச்சு. சாரி!…இப்போ தான் மேடம் கண் விழிச்சாங்க… சாரி!…. மன்னிச்சுடுங்க… ப்ளீஸ்!” என்றான் அவன் .

“இப்போ கேட்டுச்சா!… இந்தப்  பக்கிங்க  ரெண்டும்,  நான் மயங்கிக் கிடக்கும்  போது,  கடத்திட்டு  வந்து  இருக்குங்க.  வீட்டுக்குச்  சொல்லணும் என்ற   அறிவுக்   கூட    இல்லாத    மட சாம்பிராணிங்க.”  என்றாள் மதுரா .

“இப்போ  எங்கே இருக்கே சொல்லு. வந்து கூட்டிட்டு போறோம்.” என்றான்   விஜய்,  அடக்கி   வைக்கப்பட்ட  பொறுமையுடன் .

“டெல்லியில் !…” என்றாள்  மதுரா,  கூலாக .

“வாட்!…  டெல்லினா சொன்னே!… கம்  அகைன்.” அவள் சொன்னதைக் கேட்டு  அதிர்ந்தது  விஜய்  மட்டும்  அல்ல,  அங்கு இருந்த அனைவரும் மட்டும்  அல்ல,  மதுராவுடன்  காரில்  சென்று  கொண்டிருந்த  அவர்களும் தான்.

“டெல்லியில் தான் இருக்கேன் விஜய்!… ரெண்டு நாளில் திரும்பி வந்துடுவேன். டோன்ட்  ஒர்ரி.”  என்றாள் மதுரா .

“மதுராக்ஷி!….” என்ற  விஜய்யின்  குரல், சிம்ம  கர்ஜனையாக  ஒலித்தது.

“இங்கே,  நீ  காணோம்  என்றதும்,  போலீஸ்  முதல்  கொண்டு,  எத்தனை பேர், கடந்த  எட்டு  மணி  நேரமாக,  உன்னைத்  தேடிக் கொண்டு இருக்கிறோம்   என்று   உனக்குத்  தெரியுமா? .

நீ  என்ன  என்றால்,   கூலாக ரெண்டு நாள் கழிச்சி வரேன் என்று சொல்றே!… உனக்கு,  உன்  நண்பனோடு,   ஊர் சுத்த இது தான் நேரமா?

நீ ஊர்   மேயப்   போக,   நாங்க   தான்   பலியாடா?
ஒழுங்கா  திரும்ப,  வந்து சேரு இல்லை, உன்னை வகுந்துடுவேன். மவளே!….  விட்டா,   ஓவர்ரா  ஆடிட்டு  போறே!… என்னைக்  கொலைகாரன்  ஆக்காதேடீ!….  
மரியாதை   கெடும்   முன்   திரும்பிடு.” 
எதிர்  முனையிலிருந்து  சற்று  நேரத்திற்கு  சத்தமே  வரவில்லை.

“ஏய்  அறிவூகெட்டவளே!… லைனில் இருக்கியா!…பேசித் தொலை. பேசுன்னு சொல்றேன் இல்ல…
கண்டவன் கூடச் சிரித்து பேச முடியும். கொஞ்சி குலாவ முடியும்…
உன்னைக் காணோம் என்று பதறிப் போய் இருக்கேன்… வாயைத் திறந்து பேசித் தொலைடீ!…” என்று மீண்டும் உறுமினான்  விஜய் .

“பேசி முடிச்சுட்டியா விஜய்?… இல்லை வேறு ஏதாவது பாக்கி இருக்கா?

என்ன சொன்ன, நான் ஊர் மேயப் போனேன், இன்னோருத்தனோடு கொஞ்சிக் குலாவிட்டு இருக்கேன்.
ரைட்!…
என்னை, என்ன என்று நினைச்சு இருக்கே விஜய்!… வார்த்தை அர்த்தம் ரொம்பவே  தவறாக இருக்கு. நான் எந்த மாதிரி நிலையில், இவர்களுடன்   இருக்கேன்   என்று   உனக்குத்   தெரியுமா!

என்னவோ சொன்னே ஊர் மேயறேன் என்று… ஆமா, நான் ஊர் ஊரா இப்போ அலைஞ்சுட்டு தான் இருக்கேன். என் வாழ்க்கையைத் தேடி,
என் கேள்விகளுக்கு   விடைத்   தேடி,
என் குழப்பத்திற்கு முடிவுத் தேடி…

பைத்தியம் பிடிப்பது உனக்கு மட்டும் இல்லை எனக்கும் தான். இதுக்கு எல்லாம் சொலுஷன் இவங்கக் கிட்டே இருக்கு.

எத்தனையோ ராத்திரி   ‘தூக்க  மாத்திரை’  சாப்பிட்டுக்  கூடத்  தூங்க முடியாம விழிச்சுட்டே இருந்து இருக்கேன். மனபாரம் தாங்க முடியாமல் பிரஷர் ஏறி, எத்தனை தடவை மயங்கி விழுந்து இருக்கேன் தெரியுமாடா உனக்கு?
என் கூடவே இருக்கும் சுபா, எங்க அம்மாவுக்குக் கூட, இந்த விஷயம் நான் இதுவரை சொன்னதில்லை.

அது  இன்றோடு  முடிவுக்கு  வரப்  போகுது.  இனி,  என்  விஷயத்தில்  யார் மூக்கை நுழைத்தாலும், இது தான் என்னைக் கடைசியாகப் பார்ப்பதாக இருக்கும்.
நான் விளையாடமாட்டேன் என்பது உங்களுக்கே தெரியும்…

சோ,ஜஸ்ட் லீவ்  மீ அலோன்.

டோன்ட் கால் மீ எனிமோர்.

குட் பை.” என்றவள்  கால் கட் செய்து, மொபைலை சுவிட்ச் ஆப் செய்து ஹாண்ட்பாக்கில் தூக்கிப் போட்டாள்.  

இவள்  பேச  ஆரம்பித்ததும் திகைப்புடன்  ஓட்டிக் கொண்டு இருந்த காரினை  ஓரமாக  நிறுத்தி  விட்டு,  முழுவதுமாக,  மதுராவைப் பார்த்தாற் போல்  திரும்பி  அமர்ந்தான்  அவன்.

சட்டென்று  பார்ப்பதற்கு,  தெலுங்குப் பட ஹீரோ, ‘பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ்’  மாதிரி இருந்தான் அவன்.

அவன்  பெயர் ஹர்ஷவர்தன்.
அந்தப்  பெண்,  அவன்  தங்கை.
பெயர்  மேக்னா.

மேக்னா, சட்டென்று  பார்ப்பதற்கு,  ‘காஜல் அகர்வால்’ போல் இருந்தாள்.

இருவரின் தோற்றமே செல்வ செழிப்பில் வளர்ந்தவர்கள் என்பதை பறைசாற்றியது .

“பாவம்டீ   கருண்!… ஏன் இப்படி விழுந்து பிராண்டி வைத்தே?” என்றாள் மேக்னா.

“யார் உன் ஹீரோ  விஜய் தானே!… பாவமோ பாவம் தான்… போடி வேலையத்தவளே!
பார்க்காத் தான், ‘லவர் பாய் முகத்தோடு இருப்பான்.
செம கல்நெஞ்சம்.

‘லவ் பண்ணலை… லவ்   பண்ணலை’   என்று   சொல்லியே,   லவர் செய்யும் எல்லா   வேலையும்   செய்து   வைப்பான்.

கேட்டா தத்துபித்துன்னு உளறி வைக்கும் லூசுடீ அவன். சரியான குழப்பவாதி. அவனைப் போய்ப் பாவம்ன்னு சொல்லாதே!
அந்த ரெண்டு, ஓரங்கொட்டான் கிட்டே, மாட்டித் தவிக்கும் நாந்தேன் பாவமோ  பாவம்.

ஆமா,  அவன்  கூடக்  காலேஜில்  இருந்த போது   தான்,  நீ விட்ட ஜொள்ளில், காலேஜ் பல வருஷம் தத்தளித்தது என்று கேள்விபட்டு இருக்கேனே!… 

இன்னுமா,  அந்த   ஹீரோஒர்ஷிப்  நீ விடலை?
பார்த்துடீ!….  அவனுக்கு மேரேஜ் ஆகி, ‘ஒட்டுமொத்த  ராட்சசிகளின் தலைவி’  அவனுக்கு    மனைவியா  வந்து இருக்கா.
அவ  லிஸ்டில்,  என்னைப் போல்  மாட்டிக்காதே  செல்லம்.  உன்னோட ஜொல் பேக்டரி, மூடி வைமா.”  என்றாள்  மதுரா  கடுப்புடன்.

“என்னது!…. இவ கருணாவை பார்த்து ஜொள் விட்டாளா?” என்றான் ஹர்ஷா,  ஏதோ கணக்கைப் போட்டு, விடை அதற்கு வராமல், குழம்புவன் போல்.

“அதை ஏன் கேக்கிறே!… ஹச் டாக் தோத்துடும்… விஜய்  எங்கே  போனாலும், மேடம் அங்கே ஆஜர் ஆகிடுவாங்க.

மேடை ஏறிப் பாட்டு எல்லாம்  பாடி  இருக்காங்க… செம்ம தீயல்.”  என்றாள்  மதுரா.      

அதைக்  கேட்டு,  மேக்னாவின் முகம் சிறுத்து விட, தங்கையின் முகமாறுதலைக்  கண்ட  ஹர்ஷாவின், முகம்  யோசனையைத்  தத்து  எடுத்தது.

தங்கை  வருந்துவது  பிடிக்காதவனாய்,  பேச்சைத்  திசைத்  திருப்பினான். 

“இப்போ எதுக்கு தேவை இல்லாம பொய் சொன்னே டெல்லியில் இருக்கோம் என்று?… உண்மையைச் சொல்லிட்டு செய்யலாம் தானே!…” என்றான்  ஹர்ஷவர்தன் .

“நான்  இருக்கும்  இடம்  தெரிந்தது,  ஹெலிகாப்டர்  வாங்கியாவது என்னைத் தேடி வந்துடுங்க ரெண்டு லூசுங்களும்… நல்லது செய்யறேன் என்ற பில்ட் அப்புடன்.

வள்ளுவர் கிரண்டப்பாவே, “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்”
‘குற்றம்  அற்ற  நன்மையைத்  தரும்  என்றால்,  உண்மை  சொல்ல  வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்’ என்று சொல்லிட்டு போய்ட்டார்.

ரெண்டு  நாள், என் குழப்பம் எல்லாம் தீரட்டும். நீ  காரை  எடு ஹர்ஷ்.”  என்றாள்  மதுரா .

கார்  மீண்டும்  ஓட  ஆரம்பிக்க, ஜன்னலின் வழியே வெளியே பார்த்தவளுக்கு,  தூரத்தில் தென்பட்ட, ‘திருவேங்கட மலை சிகரம்’ அவளையும்  அறியாமல்,  கைக்குவிக்க  வைத்தது.

கண்கள்  தானாக  மூட,  மனதினுள் எழுந்து நின்ற வெங்கடேச பெருமாளிடம்  தன்  கோரிக்கையை  வைத்தாள் .

“பாலாஜி!… ‘திருப்பதி  வந்தால், வாழ்வில் திருப்பம் வரும்: என்று பெரியவர்கள்  சொல்வார்கள்.  உன்  சன்னிதானத்திற்கு  வர  முடியவில்லை. இங்கே  இருந்தே உன்னை  வணங்குகிறேன்.

என்  வாழ்வை,  உன்னிடம்  ஒப்படைத்து  விடுகிறேன்.  எந்தத்  திருப்பம்  வர வேண்டும் என்று நீ நினைக்கிறாயோ, அதை ஏற்படுத்து.” என்று இவள் வேண்ட, எங்கிருந்தோ கோயில் மணி ஒலித்து, இவள் கேட்ட வரத்தைக் கொடுக்க,  இறைவன்  சித்தமாகி  விட்டான் என்று சொல்லாமல் சொல்லியது.

தவம் தொடரும்…

அடுத்த அத்தியாயம்

85

மீனம்பாக்கத்தில், விமானம்  ஏறியவர்கள், திருப்பதி ஏர்போர்ட்டில் இறங்கி, அங்கிருந்து காரில் பயணம் செய்து, மாலை ஆறு மணி அளவில், ‘கதிரி’ ஊரினை  வந்து  அடைந்தனர்.'கதிரி' என்பது  ஆந்திராவின், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு  நகரமாகும்.‘கதிரி’  என்ற  பெயர்  சமஸ்கிருத  வார்த்தையான,  ‘காத்ரிக்கு’ …...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்