arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 11

என் வீட்டு தோட்டத்தில் 11

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

11

“டேய்! அசையாம நில்லு!” 

“விடும்மா… எப்ப பார்த்தாலும் புள்ளைய அதட்டிக்கினு!”

“அப்படி இருந்துமே இப்படி காருக்கு குறுக்க போய் விழுந்துருக்கான் க்கா.”

“அந்த மனுஷ கண்ணுத் தெரியாம ஓட்டி வந்ததுக்கு புள்ள என்ன பண்ணும். புள்ள இந்த நாலு நாளும் எப்படித்தான் ஆஸ்பத்திரில ஒரே எடத்துல அடங்கி இருந்துச்சோ தெரியல. நீ வா கண்ணு!”

சுற்றிய பூசணிக்காயை கண்ணையன் கையில் கொடுத்து வீதியில் உடைக்கச் சொல்லிவிட்டு உள்ளே அழைத்துச் சென்றார் பூங்காவனம். வந்த டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு அரவிந்தும் வந்தான். 

“ஒடைச்சிட்டு ஓரமா எடுத்துப் போட்டுறுங்கண்ணா” என்றாள் அப்பொழுதும்‌. சரிம்மா என்றவர் உடைத்துவிட்டு நர்சரி சென்று விட்டார். 

இவர்கள் ஃப்ளாட் இருப்பது அபார்ட்மெண்ட் முதல் தளத்திலேயே. கையில் சுமை இருந்தால் ஒழிய லிஃப்ட் உபயோகிப்பது அரிது. எப்போதும் படி வழிதான். சக்தி கைப்பிடியில் சறுக்கிக் கொண்டு தான் இறங்குவதே. அதுவும் செகரெட்டரி இவன் பார்வையில் தட்டுப்பட்டால் வீம்புக்கெனவே வாயில் உய்ய்ய்யென சப்தம் கொடுத்துக் கொண்டே தான் இவன் சறுக்குவது. அவர் பார்க்கவில்லை என்றால் மீண்டும் ஒரு முறை ஏறி சறுக்கி வருவான். அவரை சீண்டிப் பார்ப்பதில் அப்படி என்னதான் ஆனந்தமோ அவனுக்கு. இன்று தான் லிஃப்ட்டில் ஏறி வருகிறான்.

வீட்டுக்குள் வந்ததும், மருத்துவமனையிலிருந்து கொண்டு வந்த பைகளை வாஷிங் மெஷினருகே வைத்து விட்டு அபியும் குளிக்கச் சென்றுவிட்டாள். இன்னும் அசைக்கும் பொழுது மட்டும் இலேசாக வலி இருப்பதால் கைக்குப் போட்டிருந்த ஆர்ம் ஸ்லிங் மட்டும் கழற்றவில்லை. ஆர்த்தோ மருத்துவர், ஒரு வாரம் இருக்கட்டும். அடுத்த செக்கப்பில் கழற்றிவிடலாம் என்றார். மற்றபடி எந்தப் பிரச்சினையும் இல்லை என வீட்டிற்கு அனுப்பி விட்டனர். அதுவும் எதற்கு இத்தனை நாட்கள் என அரவிந்தன் கேள்வி கேட்ட பிறகே. 

அன்று, மருத்துவமனை வெளி வளாகத்தில் படுத்திருந்த குரு, அரவிந்தனின் அழைப்பை கைபேசியில் பார்த்த பிறகும் எடுக்கவில்லை. பெட் கிளினிக் பெயர் ட்ரூ காலரில் வந்ததும் தெரிந்தது அரவிந்தன்தான் என்பது. சைலன்டில் போட்டு விட்டான். இரண்டு முறை அழைத்தப் பார்த்து விட்டு அரவிந்தனும் விட்டுவிட்டான்‌‌. அவசரம் எனத் தேடி வந்தவன், எப்படியாயினும் தங்களையும் தேடி வந்து தானே ஆகவேண்டும். பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில். 

இதை அபிராமியிடம் கூட சொல்லவில்லை. அவனிடம் இவளது ஃபோட்டோ இருப்பது தெரியும். ஊர் வரை தேடிச் சென்றது தெரியாது. ஏன், எதற்கு எனத் தெரியாமல் அவளையும் குழப்ப வேண்டாமே. ஏதோ இப்பொழுது தான் அனைத்தையும் மறந்து, கடந்து வந்திருக்கிறாள். எதுவானாலும் நேரில் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என எண்ணிக் கொண்டான். 

எப்படியும் அவன் ஊர்க்காரனோ இல்லை உறவுக்காரனோ தெரியவில்லை, அரவிந்தனுக்கு தகவல் கொடுத்திருப்பான். அபிராமி பற்றி விசாரித்ததும் தன்னை உற்றுப் பார்த்துவிட்டு தேவையான தகவல்களை கொடுத்தான் தான். அவனை சந்திக்கும் முன் சென்றது ஒரு பெரிய வீட்டிற்கு தான். வீட்டைப் பார்த்தாலே தெரிந்தது அந்த ஊருக்குள் பெரிய குடும்பம் என்று. வீடு தான் பெரிதே ஒழிய அங்கிருந்தவர்கள் மனது அத்தனை விசாலமாக இல்லை என்பது சென்ற ஓரிரு நிமிடங்களிலேயே குருவுக்கு புரிந்து போயிற்று. அங்கு அவனுக்கான தகவலும் சரிவர கிடைக்கவில்லை. மரியாதையும் கூட.

அதை அவனும் பொருட்படுத்தவில்லை. அவனென்ன மரியாதை எதிர்பார்த்தா அங்கு போனான். ஏதோ விரோதியைப் போல் குருப்பிரசாத்தைப் பார்த்தனர். முன்னபின்ன அறிமுகமில்லாத ஒருவனை இப்படி ஜென்ம விரோதி போல் பார்க்க முடியும் என்பதை அன்று தான் தெரிந்து கொண்டான். அபிராமி பெயர் எடுத்ததற்கே வேண்டாத பேச்செல்லாம் கேட்க வேண்டியதாய் போயிற்று.

வெறுத்துப் போய் வெளியேறி வந்தவனை அவசரமாக ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். காரில் ஏறும் ‌முன், அவன் பெயர் சுகுமாரன் என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். 

அவன் தான் அபிராமியின் சென்னை விலாசம் கொடுத்தது. அவங்க ஃபோட்டோ ஏதாவது கிடைக்குமா என தயங்கித் தான் கேட்டான். அடையாளம் கண்டு கொள்ள. விலாசம் கேட்டவரை சரி. ஃபோட்டோ கேட்டால் எப்படி எடுத்துக் கொள்வானோ எனத் தயங்க, வீட்டிலிருக்கும் ஆல்பத்தில் எடுத்து அனுப்புவதாக வாட்சப் நம்பர் வாங்கிக் கொண்டான். அதே போல் இவன் காரில் வரும்பொழுதே அனுப்பியும் வைத்தான்.

ஏதோ விசேஷத்தில் எடுத்த படம் போல. மயில் பச்சையில் ரோஜாவண்ணத்தில் கோபுர பார்டர் போட்ட பட்டுச்சேலை உடுத்தியிருந்தாள். ஒடிசலாக நல்ல உயரம். சேலையில் பெரிய பெண் போல் இருந்தாலும் முகத்தில் இன்னும் சிறுபிள்ளைத்தனம். முதுகு தாண்டாத சுருட்டை முடியில் மல்லிச்சரம். அது மட்டும் தான் இப்பொழுதும் அவளை அடையாளம் கண்டு கொள்ள ஏதுவாக இருந்தது‌. இல்லையென்றால் அந்த படத்தில் இருக்கும் அபிராமி தான் இப்பொழுது இருக்கும் அபிராமி என்று யாராவது சூடம் அணைத்து சொன்னால்கூட நம்ப முடியாதளவிற்கு அவளிடம் தோற்ற மாற்றம். 

சுகுமாரன், எப்படியும் தான் தேடிச் சென்ற தகவலை அரவிந்தனுக்கு சொல்லியிருப்பான். அவனிடம் இவனது கைபேசி எண்ணை அரவிந்தனும் வாங்கியிருக்கக் கூடும் என்ற யூகம் தான். இவனும் அபிராமியுடன் சேர்த்து அரவிந்தனது கைபேசி எண்ணையும் தானே வாங்கி வந்தான். 

சுகுமாரன் எதற்கு தன்னை அந்தளவிற்கு உற்று கவனித்தான் என்பது சக்தியைப் பார்க்கும் வரை குருவுக்குப் புரியவில்லை. பார்த்த பிறகு ஏன் என்ற கேள்விக்கே அவசியமே இல்லை. அப்படியானால் அங்கிருப்பவர்களுக்கும் உண்மை தெரிந்திருக்கிறது. அதனால் தான் அந்த வீட்டு ஆட்கள் தன்னிடம் அப்படி நடந்து கொண்டார்களா என்ற சந்தேகம் அவனுக்குள். அது ஊரறிந்த மேடை ரகசியம். குருவுக்கு மட்டும் தான் சில நாட்களுக்கு முன்பு தெரிந்திருக்கிறது. அதுவும் அக்காவை பார்த்த அந்த பெண் மருத்துவர் புண்ணியத்தில். 

திருவேங்கடம் அழைத்ததும் அவசரமாக மருத்துவமனை வந்தவன் பார்த்தது அபிராமியைத்தான். பக்கத்தில் பிரணவ். அப்பொழுதே தனது கைபேசிக்கு வந்த அவளது புகைப்படத்தை எடுத்துப்பார்த்து உறுதிப் படுத்திக் கொண்டான். திருவேங்கடம் ஃபோனில் அழைப்பதற்கு சற்று முன் தான் அவனது அலைபேசிக்கு வந்தது.

திருவேங்கடத்தையும், பிரணவையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தவிட்டு இவனும் காத்திருப்போர் இருக்கையில் காத்திருந்தான். அக்காவும் தம்பியும் தன்னை உற்று நோக்குவதை கண்டும் காணாமலும் அமர்ந்திருந்தான். அபிராமி முகத்தில் மட்டும் இவனைப் பார்க்கும் பொழுது ஒரு தடுமாற்றம். முயன்றளவு இவன் பக்கம் பார்வையை தவிர்ப்பது புரிந்தது. மருத்துவர் வெளி வந்து தகவல் சொன்ன பிறகு அபிராமியும் அரவிந்தனும் மட்டுமே உள்ளே சென்று சக்தியைப் பார்த்து வந்தனர்‌. 

குருவிற்கும் சக்தியை பார்க்க வேண்டும் என்ற ஆவல் வெகுவாக உந்தியது. ஆனாலும் எப்படி கேட்பது. எந்த உரிமையில் கேட்பது. அதனால் அமைதியாகவே காத்திருந்தான். அரவிந்தன் அக்காவை சாப்பிட வைத்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான். அபிராமியும் சிறிது நேரம் கழித்து, சக்தி உறங்கியதை உறுதிப் படுத்திக் கொண்டு அடுத்து இருந்த அட்டென்டர்ஸ் அறைக்கு சென்றுவிட்டாள். அதுவரை வெளியே காத்திருந்தவன் உள்ளே வந்தான். 

சக்தியை பார்க்க வேண்டும் என்றான். இப்போது பார்வை நேரம் இல்லை என்றார் இரவுப் பணி‌யிலிருந்த செக்யூரிட்டி. 

அதற்குள் அதே அறையிலிருந்த மற்றொருவருக்கு, அவரது உறவினர் மருந்து வாங்கி வர, அதை உள்ளே கொடுக்கும் சாக்கில் தான் போய் வருவதாகக் கேட்க, இவனைப் பார்க்க என்ன தோன்றியதோ அவரும் அனுமதித்தார். 

அந்த நபரின் படுக்கை எண்ணை கேட்டுக் கொண்டு குரு, உள்ளே சென்றான். உள்ளே இருந்த செவிலியிடம் மருந்தை பெட் நம்பர் சொல்லி கொடுத்துவிட்டு சக்தி இருந்த படுக்கையை கண்களால் துழாவினான். 

அங்கு இரண்டு பக்க வரிசையாக வரிசைக்கு ஐந்து என பத்து படுக்கைகள் இருந்தன. எல்லாம் பச்சை வண்ணத் திரையிட்டு பிரிக்கப்பட்டிருந்தது. பிரணவுக்கு ஏதாவது ஒன்று என்றால் ஐசியூ என்றாலும் தனி அறையே எடுப்பது. இது விபத்து பகுதி மட்டும் போல என்று கணித்தான். 

இரண்டு படுக்கை அடுத்து ஆழ்ந்த உரக்கத்தில் இருந்தான் சக்தி. நிச்சலனமான முகம். முதன் முறையாகப் பார்க்கிறான். அவன் முகத்தை ஆழ்ந்து பார்த்தவனுக்கு அந்த நிலையிலும் முகத்தில் புன்னகை பூத்தது. அவனது சிலக்க ஆசைப்பட்ட மாதிரியே அவனின் பிரதிபிம்பமாக ஒரே அச்சில் வார்த்தது போல் ஒருவன் பத்து வயதில். பத்து வயதுதான் என்றாலும் படுக்கை நீளத்துக்கும் படுத்திருப்பது போல் இருந்தது அவன் உயரம். குடும்ப வாகு. வஞ்சனையின்றி வளர்ந்திருந்தான். ஏதோ அசௌகர்யத்தில் முண்டுவது போல் தெரிந்தது. 

அரைத் தூக்கத்தில் யாரையோ அழைத்தான். 

குரு, வேகமாக அவனிடம் செல்ல, “சார் நீங்க எங்க பேறீங்க?” என்றார் அங்கிருந்த செவிலி. 

“ஐ திங்க்… அவன் ரெஸ்ட் ரூம் போகணும் போல!” என்றான். 

“பெட் பேன் வைக்கணும்” என்று எடுத்துவரச் செல்ல, அதற்குள் விழித்துவிட்டான். சற்று நேரம் ஒன்றும் புரியாமல் திருதிருத்தான். ஓரளவிற்கு இருக்குமிடம் தெளிவுக்கு வந்தது போல. புது இடமோ மருததுவமனை என்ற பயமோ அவனிடம் இல்லை.  

செவிலி, பெட் பேனுடன் இவனிடம் வர, இவனோ பாத்ரூமில் தான் போவேன் என அடம் பிடித்தான். பத்து வயதுதான். ஆனாலும் கூச்சத்தில் அவன் மறுக்க பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் சிரிப்பு வந்தது. 

“அம்மா எங்கே.. கூப்புடுங்க?” என்றான். அடுத்து அழுகைக்கு தயாராவது போல் இருந்தது‌‌ அவனது முகம். அம்மாவைத் தேடினான். 

“நான் ஹெல்ப் பண்ணவா?” என்றபடி அருகே வந்தவன் அப்பொழுதுதான் சக்தியை முதன் முதலாக மிக அருகில் பார்த்தான்‌. இதுவரை தூங்குபவனைத்தானே தள்ளி நின்று பார்த்திருந்தான். இப்பொழுது தானே அவன் கண்களை அருகில் பார்க்கிறான்.‌ சிமிட்ட மறந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்குள் ஒரு கணம் சிலிர்த்தது. விதியின் சித்து விளையாட்டை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. மூக்கும் முழியும் அப்படியே இவனது நகல் தான். இல்லை இல்லை அசல்தான். 

“மீ லாகே மனக்கி ஒக்க கொடுக்கு பாவா! இதே லாண்டி கள்ளு… இதே லாண்டி முக்கு… இதே லாண்டி பெதவு… இதே லாண்டி மீச… சின்ன பிட்டைக்கி மீச உண்டதி காதா!” (உங்கள மாதிரியே நமக்கு ஒரு பையன் பாவா. இதே மாதிரி கண்ணு, இதே மாதிரி மூக்கு, இதே மாதிரி உதடு, இதே மாதிரி மீசை… சின்னப்பிள்ளைக்கி மீசை இருக்காதுல) மீசையை இழுத்து, களுக்கி சிரித்த அவனது சிலக்க, அவனைத் தொட்டுத் தொட்டு வர்ணித்த அத்தனையும் சக்தியிடம் அப்படியே அச்சு பிசகாமல். குருவின் கண்கள் அவனையும் மீறி பனிப்பது போல் இருந்தது. தொண்டைக்குழியில் ஒரு அழுத்தம். நெஞ்சுக்கூடு விம்மித் தணிந்தது. 

‘சூடுவே…’ (பாருடீ!) என்று அவனது சிலக்கவை அழைத்து கண்ணாறக் காண்பிக்க வேண்டும் போல் மனம் பதைபதைத்தது.

“அம்மா” என மீண்டும் ஆரம்பிக்க, தன்னை மீட்டுக் கொண்டான். 

“நான் அவன அழச்சுட்டு போறேன்.” குரு‌ உதவிக்கு வர,

“ம்கூம்…‌அம்மாவக் கூப்பிடுங்க!” என்று‌ சிணுங்கலாக இவனோடு போகவும் தயங்கினான். 

குரு, “நீங்க பெட் பேனே வைங்க” என்று செவிலியிடம் சொல்ல,

“நோ.. நோ.. உங்க கூட வர்றேன்” என்றான்.

சக்தி, சொன்ன வேகத்தில் இவனுக்கு சிரிப்பு வந்தது. செவிலி மெதுவாக கை பிடித்து இறக்க முற்பட,‌ ஒரு கையை ஊன்றி இறங்க அவனும் சிரமப்பட, குரு அவரை விலக்கி விட்டு சட்டென கைகளில் தூக்கிக் கொண்டான். 

பாத்ரூமில் விட திரும்பி இவன் முகம் பார்த்தான். என்ன என்பது போல் பார்க்க, “நீங்க வெளியே போங்க!” என்றான். 

வெளியே வர கதவைச் சாற்றினான். ‘உரே… நைனா!’ சிரித்தபடியே வெளியே காத்திருந்தான். 

சில நிமிடங்களில் வெளியே வந்தவன், இவனை ஏறிட்டுப் பார்க்க இப்போது என்ன என்பது போல் இவனும் பார்க்க, “ஒரு கையால ஜிப் போட முடியல” என்றான். விட்டால் அழுது விடுவான் போல. மருத்துவமனையில் போடும் பச்சை கலர் உடையைத்தான் சட்டையைக் கழற்றிவிட்டு அங்கி போல் போட்டிருந்தான். ஆனால் கால் சட்டையை அப்பொழுதே கழற்ற விடவில்லை. 

இவனே ஜிப் போட்டுவிட “தாங்க்ஸ் அங்கிள்” என்றவன், “நீங்க பிரணவ் டாட்‌ தானே?” என்றான். 

சட்டென ஆச்சர்யம் படற, “தெரியுமா?” என்றான் அதே தொணியில். 

“ஸ்கூல்ல பாத்திருக்கேன். எப்பவும் மாஸ்க்கோட இருக்கறதால பிரணவ் நல்லா தெரியும்!” என்றான். 

பள்ளியில் தன்னை பார்த்திருப்பதால் தான் தயங்காமல் தன்னோடு வந்திருக்கிறான் எனப் புரிந்தது. 

“இங்க நீங்க டாக்டரா?” என்றான்.‌ சற்று முன் செவிலியிடம் பெட் பேன் வைக்கச் சொல்லி ஆர்டர் போட்டான்‌தானே. அதனால் டாக்டர் என எண்ணிக் கொண்டான். இல்லையென்றால் இந்நேரத்தில் இவனுக்கு இங்கு என்ன வேலை. அவனுக்கு பதில் சொல்லாமல் குரு சிரிக்க மட்டுமே செய்தான். அதற்குள் படுக்கைக்கு வர, இவனே படுக்க உதவி விட்டு வெளியே வந்தான். அதன்‌ பிறகும் இரண்டு முறை வந்து பார்த்து சென்றான். இடையில் அபியும் ஒரு முறை வந்து பார்க்க நல்ல உறக்கத்தில் இருந்தான். 

இதைத்தான் மறுநாள் செவிலி, இவனை அப்பாவாக எண்ணிக் கொண்டு அபியிடம் குரு, மூன்று முறை வந்து பார்த்ததாகச் சொன்னார். 

மறுநாள் நார்மல் வார்டுக்கு மாற்றும் போதும் இவன் உதவிக்கு வர இயல்பாக, “ஐ வில் மேனேஜ் அங்கிள்!” என்றான்‌ பெரிய மனுஷத் தோரணையில். 

அதன் பிறகும் இரண்டு நாட்கள் ஆகியது வீடு திரும்ப. இரண்டு நாட்களும் குரு, மருத்துவமனை வரவில்லை. அதுவே போதும் என்றிருந்தது அபிராமிக்கு. 

குரு, இவர்கள் இருந்த பகுதிக்குதான் வரவில்லை. அதனால் இவர்கள் பார்வையில் படவில்லை. பிரணவிற்கு சளி தொந்தரவு என அழைத்துக் கொண்டு இரண்டு நாளுமே மருத்துவமனை வந்திருந்தான். அவன் வந்தது புறநோயாளி பிரிவு. அதனால் இவர்களுக்குத் தெரியவில்லை. சிறு சளி, காய்ச்சல் என்றாலும் உடனே வந்தாக வேண்டும். ஒரு நாள் தாமதித்தாலும் போதும். நுரையீரல் தொற்று ஏற்பட்டு நிமோனியாவில் வைத்துவிடும். அதன் பிறகு பிரணவ் உடலளவில் அவதிப்பட, இவன் மனதளவில் அவஸ்த்தைப்பட என கொடுமையான நாட்களாக நீட்டிக்கும். அவன் கவனம் பிரணவ் பக்கம் திரும்பியதால்தான் இறுதி நாட்களில் இவர்கள் பக்கம் வரவில்லை. 

மேலும் அபிராமியின் பார்வையில் பட்டு அவளை குழப்பவோ, பதட்டப்படுத்தவோ விரும்பவில்லை. இவனை முதன் முதலாகப் பார்த்த அன்று அவள் முகத்தில் அதிர்ச்சியை கண்டு கொண்டான் தானே. எதுவும் தெளிவாகும் முன் அவள் முன் போய் நிற்கவும் விரும்பவில்லை. 

குரு, வரவில்லை என அபிராமி ஒரு பக்கம் நிம்மதி அடைந்தாலும் ஏன் வரவில்லை என்ற கேள்வி அவளுக்குள் முணுமுணுத்துக் கொண்டு தான் இருந்தது‌. வராதளவிற்கு சந்தோஷம் எனவும் ஒதுக்க முடியவில்லை. 

“ம்மா… ஷர்ட் கழட்டிவிடுங்க!” தன் முன் வந்து நின்ற சக்தியின் குரலில் சிந்தை கலைந்தாள்‌. சட்டையைக் கழட்டிவிட்டு, மிதமான வெந்நீரில் கை நனையாமல் குளிக்க வைத்தாள். உடை மாற்றி விட்டாள். சிராய்ப்பு காயங்களுக்கு ஈரத்தை ஒற்றி எடுத்துவிட்டு மருந்து தடவி விடடாள். வழக்கம் போல் அவன் கண்களில் வைக்கும் முத்த ஒத்தடத்தை இன்று ஏனோ தயங்கி தயங்கி வைத்தாள். 

இவர்கள் குளித்து வருவதற்குள் அரவிந்தனே குக்கரில் சாதம் வைத்து ரசம் மட்டும் வைத்திருந்தான். இவள் தேங்காய், பொட்டுக்கடலை போட்டு துவையல் மட்டும் போதுமென அப்போதைக்கி அரைத்தாள். குழையப் பிசைந்து சக்திக்கு ரசம் சாதம் கொடுத்துவிட்டு மாத்திரையும் கொடுத்து தூங்க வைத்தாள்‌.

பூங்காவனம், நான்கு நாட்களாக பூட்டிக் கிடந்த வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். அரவிந்தனும் செமினார் என்று இரண்டு நாட்களாக வெளியே சென்றுவிட்டு முதல் நாள் தானே வந்தான். வீடு தூசி படிந்து கிடந்தது. பெருக்கி, துடைத்துவிட்டே கிளம்பினார். அவரையும் சாப்பிட வைத்தே அனுப்பினாள். 

“மாத்திரை மருந்து சாப்பிடற வயிறு சக்திம்மா. காரமில்லாம ஆட்டுக்கால் சூப்பு, நெஞ்செலும்பு சூப்பு எல்லாம் வச்சுக் கொடும்மா!” என்றுவிட்டே சென்றார். 

மறுநாள் வழக்கம் போல் சக்தி பள்ளி கிளம்ப, அவனை பள்ளியில் விட்டுவிட்டு நர்சரி வந்தாள். மாலை அழைக்கச் சென்ற பொழுது அதே கார் கண்ணில் பட்டது. மகனை பைக்கில் ஏற்றிக் கொண்டு வெளியேற குருவின் கார் பிரணவை அழைக்க உள்ளே சென்றது. அவனும் பார்த்துக் கொண்டே தான் சென்றான். இன்னும் கையில் ஆர்ம் ஸ்லிங்க் இருப்பது தெரிந்தது. இதுவரை எத்தனையோ முறை பள்ளிக்குள் வந்து சென்ற கார்தான். பைக்தான். இன்றுதான் இருவருக்கும் கண்ணிலும், கருத்திலும் பட்டது. 

“ம்மா… இந்த அங்கிள் டாக்டரா?” அந்த காரை அடையாளம் கண்டு சக்தியும் கேட்க, 

“இல்லையே..‌. ஏன்டா?”

“அன்னைக்கு நைட் இவர்தான் எனக்கு பாத்ரூம் போக ஹெல்ப் பண்ணாரு.” 

*****

ஒரு வாரம் ஆயிற்று. மருத்துவமனையில் புறநோயாளி பிரிவில் அமர்ந்திருந்தனர் அபிராமியும், சக்தியும். இவர்கள் முறை வந்ததும் உள்ளே சென்றனர். 

ஆர்த்தோ மருத்துவர் இவன் கையை சோதித்து விட்டு ஆர்ம் ஸ்லிங்க் போதும், எடுத்துவிடலாம் என்றார். சக்தி முகத்தில் அப்பாடா என்ற பாவனையில் ஒரு விடுதலை உணர்வு. மருந்துகளை மட்டும் ஒரு வாரம் தொடரச் சொல்லி எழுதிக் கொடுத்தார். இவர்கள் வெளியே செல்லும் வரை கண்ணில் படாமல் காத்திருந்தவன் அடுத்து உள்ளே சென்று விபரங்களை கேட்டு வந்தான் குரு. 

மறுநாளே அரவிந்தனுக்கு குருவே அழைப்பு விடுத்தான். எதிர்பார்த்தது தான் என்பது போல் அரவிந்தனும் அழைப்பை ஏற்றான். நர்சரிக்கு வருவதாகச் சொன்னான். 

அபிராமி, இன்று எழுந்ததிலிருந்து பதட்டமாகவே இருப்பதாகப்பட்டது. அரவிந்தனே சக்தியை பள்ளியில் விட்டு வந்தான். 

“அக்கா நீ நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது. பயப்படாதே. சட்டத்துல அதுக்கெல்லாம் இடமில்லை!” என்றான். 

“அப்பறம் எதுக்குடா தேடி வரணும். அதுவும் ஊர் வரை தேடிப்போயிருக்காரு.” 

“பாத்துக்கலாம். நீயே எதுவும் கற்பனை பண்ணாதே!” என்றாலும் அவளது முகத்தில் குழப்ப ரேகைகள். 

இவர்கள் இருவரும் நர்சரிக்கு வருவதற்கு முன்பே அங்கு குரு காத்திருந்தான். கண்ணையனும் அங்கு இருந்தார். வழக்கம் போல் டீ எடுத்து வந்தவள் கண்ணையனுக்கும், குருவுக்கும் கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டான். குருவும் நர்சரியை பார்வையிடுவது போல் டீயோடு நகர்ந்து விட்டான்.

இவனைப் பார்த்ததும் அவளது பதட்டம் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. சற்று நேரம் ஆசுவாசப்படட்டும் என்று தான் அகன்றுவிட்டான். சென்னைக்கு மத்தியில் இத்தனை குளிர்ச்சியாக பசுமை நிறைந்து பார்க்கவே கண்ணுக்கும், மனதிற்கும் இதமாக இருந்தது அந்த இடம். குறிஞ்சி க்ரீன்ஸ். அப்பொழுதுதான் விபத்து நடந்த அன்று இதே பெயரில் தனக்கு அழைப்பு வந்தது நினைவுக்கு வந்தது. 

“அண்ணா நீங்க போய் சாப்பிட்டு வாங்க!” கண்ணையனை அனுப்பி விட்டாள். அது வழமை தான். இவள் வந்ததும் சாப்பிட வீட்டுக்கு சென்று வருவார். கல்லூரி விடுமுறை என்றால் மட்டுமே பிரியா சாப்பாடு எடுத்து வருவாள்.

அவர் சென்றதும் நர்சரிக்கு வெளியே க்ளோஸ்டு போர்டை மாட்டி வந்தாள். 

குருவுக்கு ஒரு பிளாஸ்டிக் சேரை அரவிந்த் எடுத்துப் போட்டான். 

“நீங்களும் உட்காருங்க!” என்று சொல்ல அபி மறுத்துவிட்டாள். இவன் எதற்கு வந்திருக்கிறான் என முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதுவரை அவளால் நிலையாக ஓரிடத்தில் அமர முடியாது. 

அரவிந்தன் சுற்றி வளைக்கவில்லை. நேரிடையாகவே “எதுக்கு சார் எங்களத் தேடிப் போனீங்க?” என்றான்.

எப்படி ஆரம்பிப்பது என்றுதான் குருவும் யோசித்துக் கொண்டிருந்தான். அரவிந்தன் நேரிடையாகவே பேச்சை ஆரம்பிக்க, உள்ளூர மெச்சிக் கொண்டு நன்றி சொன்னான். தனது தயக்கத்தை உடைத்ததற்காக.

“நீங்க டாக்டர் தானே?” குருவும் சுற்றி வளைக்காமல் பேச்சை தொடர்ந்தான். 

“ம்ம்ம்… வெட்னரி டாக்டர்!”

“அப்படினாக் கூட சில விஷயங்கள் புரியும் தானே? மருத்துவரீதியா மனுஷனுக்கும் விலங்குகளுக்கும் பெருசா வித்யாசமில்லைதானே. அனிமல்ஸ்க்கே எல்லாவிதமான ஸ்கேன், சர்ஜரி எல்லாமே வந்திருச்சே?”

“நீங்க சொல்ல வந்ததை சொல்லுங்க… புரியலைனா ஜெமினி, சேட்டு எல்லாம் எதுக்கு இருக்காங்க? அவங்ககிட்ட கேட்டுக்கலாம்!” அந்த நிலையிலும் அவனது கேலி குருவுக்கு சிரிப்பை வரவழைத்தது.  

“நைஸ் ஹூயூமர்” என்றான். அரவிந்தனுக்கு ஏனோ சிரிப்பு வரவில்லை. அபிராமியும் அவ்விதமே. கைகளைக் கட்டியவாறு இறுகிப் போய் நின்றிருந்தாள்.  

குருவும் அடுத்து நேரத்தைக் கடத்தவில்லை. தான் எடுத்துவந்த ஃபைலை அரவிந்தனிடம் கொடுத்தான். 

அக்காவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, சில நிமிடங்கள் கவனமாக அதில் பார்வையை ஓட்டினான். சில விஷயங்களை அவன் கூறியது போலவே ஜெமினியிடம் கேட்டு தெளிவு படுத்திக் கொண்டான். 

அபிராமி தான் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“சோ…” என ஆரம்பித்தான். “சக்தி, எக்ஸ்ட்ரா ரெண்டு நாள் ஹாஸ்பிடல்ல இருந்தது இந்த டெஸ்ட்டுக்கு எல்லாம் தானா?” என்றான். 

ஆமோதிப்பது போல் அமைதி காத்தான் குரு. 

“என்ன டெஸ்ட் அரவிந்தா?” பதட்டமானாள். 

“நம்ம சக்திக்கு லாஸ்ட் ரெண்டு நாளும் நிறைய டெஸ்ட் எடுத்திருக்காங்கக்கா… அவனோட இம்யூனிட்டி லெவல், ஹீமோகுளோபின் லெவல், வொய்ட் ப்ளட் செல் லெவல்லருந்து மஞ்சக்காமாலை, ஹேச்.ஐ.வி இருக்காங்கற வரைக்கும் டெஸ்ட் எடுத்துருக்காங்க” என்றதும் அபிராமிக்கு பதட்டம் தணிந்து கோபம் உச்சிக்கு ஏறியது. 

என் அனுமதி இல்லாமல் என் பிள்ளையிடம் இத்தனை டெஸ்ட்டுகள் எடுக்க இவன் யார் என்ற வேகம். அதுவும் ஹெச்.ஐ.வி. என்றதும் இன்னும் கோபம் அதிகரித்தது. 

“யார் சார் நீங்க? எதுக்கு சக்திக்கு இந்த டெஸ்ட்டெல்லாம் எடுக்க சொல்லியிருக்கீங்க?” தன் முன் கோபமாக வந்து நின்று கேள்வி கேட்பவளை ஆழ்ந்து பார்த்தான். எதுவும் பதில் பேசவில்லை.‌ எழுந்து கொண்டான். அமைதியாக வேறு பக்கம் பார்வையைத் திருப்பினான்.

அவனது அமைதியும், அலட்சியமும் அபிராமிக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது. கோபத்தில் முகம் ஜிவுஜிவுத்தது. கோபத்தை அடக்குவது அவள் நெஞ்சுக்கூடு விம்மித் தணிவதிலேயே தெரிந்தது. 

“பேசுங்க சார்.”

“ஒரு டோனர்கிட்ட இந்த டெஸ்ட்டெல்லாம் நார்மலா எடுப்பாங்க மேடம்!” என்றவனை புரியாமல் பார்த்தாள். 

“ஆக்சிடென்ட பண்ணதுக்கு உங்க அப்பா மேல கேஸ் போடல. ஆனா, இப்ப எங்க அனுமதி இல்லாம என் பையன்கிட்ட இந்த டெஸ்ட்டெல்லாம் எடுத்ததுக்கு கேஸ் போடுவோம்!‌ என்‌ பையன டோனரா நீங்களே‌ எப்படி முடிவு பண்ணீங்க? எதுக்கு டோனர், யாருக்கு டோனர்?” படபடத்தாள். உடல் கூட மெலிதாக நடுங்குவது போலிருந்தது. 

அவளைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. அவனுக்கு மட்டும் ஆசையா என்ன? இவளை கலவரப்படுத்தி பார்க்க வேண்டுமென. மகன் உயிர் அல்லவா கண் முன் ஊசலாடுகிறது‌. அதிர்ஷ்டமும், துரதிர்ஷ்டமும் ஒன்று சேர வந்தால் அவனும் தான் என்ன செய்வான். பிரணவுக்கு இத்தகைய நோய் இருப்பது துரதிர்ஷ்டம் என்றால் அதைக் குணப்படுத்து அவனின் சக உதிரனாக இன்னொருவன் இருப்பது அதிர்ஷ்ட்டம் தானே‌?

அவளையே கைகளைக் கட்டிக் கொண்டு அமைதியாகப் பார்த்தவன், “அப்ப நானும் உங்க மேல ஒரு கேஸ் ஃபைல் பண்ணலாமா?” இயல்பாகக் கேட்டவனை புருவம் சுருக்கிப் பார்த்தாள்.

எதுவோ வெடிக்க காத்திருப்பதாய் அவள் உள்ளுணர்வு சொல்லியது. இல்லையென்றால் தான் கோபத்தில் இந்தளவிற்கு கொதித்துக் கொண்டிருக்க, இவன் இவ்வளவு இயல்பாக பேசுவது முரணாகத் தோன்றியது.

“என்ன சார் புதுசா மிரட்டுறீங்க? நீங்க எதுக்கு எங்க மேல கேஸ் போடுவீங்க?”

“புதுசு இல்ல மேம். பத்து வருஷப் பழசு” என்றதும் இவளுக்கு உள்ளுக்குள் படபடத்தது. அதிர்ச்சியாக தம்பியைப் பார்த்தாள். 

“யூ‌ யூஸ்டு மை ஸ்பெர்ம் வித்அவுட் மை கன்சென்ட். ஐ’ஆம் நாட் சம் ஸ்பெர்ம் டோனர்.” ( you used my sperm without my consent. I’m not some sperm donor.) தோள்களைக் குலுக்கி அலுங்காமல் கூற அவளது காலுக்கடியில் பூமி‌ மெல்ல நழுவியது. 

உள்ளுக்குள் இவளுக்கும் சந்தேகம் தான், இவனை பார்த்த தினத்திலிருந்து. ஆனால் அதை இவன் வாயாலே அப்பட்டமாக கேட்டபோது உடல் கூசிற்று. 

“சக்தியோட எல்லா டெஸ்ட்டும் பக்காவா பிரணவுக்கு மேட்ச் ஆகுது” என்றவன் இறுதியாக, 

“முதல்ல உங்களத்தான் டோனரா செலக்ட் பண்ணினோம். உங்களுடைய டிஷ்ஷு பிரணவுக்கு மேட்ச் ஆகல” என்றவனை அதிர்ந்து பார்த்தாள். 

“நான் ஃப்ர்ஸ்ட்டே உங்ககிட்ட வராததுக்கு காரணம் சக்தியோட டெஸ்ட் ரிசல்ட் வரட்டும்னு தான். உங்கள தேடி ஊருக்குப் போனேன் தான். ஆனா, உங்க விபரம் சரியா கிடைக்கல. ஏதேச்சையாதான் ஹாஸ்பிடல்ல மீட் பண்ணினேன். கெட்டதுலயும் ஒரு நல்லதுன்னு சொல்லுவாங்கல்ல. சக்தியோட ஆக்சிடன்ட் எனக்கு அப்படித்தான் தோணிச்சு. இது ஒரு சான்ஸ்னு எடுத்துக்கிட்டு தான் சக்திக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்துப் பார்த்தது. மேட்ச் ஆகலைனா எதுவும் உங்ககிட்ட சொல்லாம வெளியே தெரியாம ஒதுங்கிக்கலாம்னு தான் நெனச்சேன். தேவையில்லாம உங்க லைஃப்ல குறுக்கிட விரும்பல. அதனால்தான் உங்ககிட்ட முன் கூட்டியே சொல்லல. பட், பை காட்ஸ் கிரேஸ்னு சொல்றதா பிரணவோட அதிர்ஷ்ட்டம்னு சொல்றதா தெரியல. ரெண்டு பேருக்கும் மேட்ச் ஆகுது.” குரு பேச்சு பாதி புரிந்தும் புரியாத நிலை அபிராமிக்கு. தலை வலிப்பது போல் இருந்தது. தம்பியைத்தான் ஏறிட்டாள். 

அடுத்து அரை மணி நேரத்திற்கும் மேலாக அனைத்தையும் படித்துப் பார்த்து அக்காவிற்கு விளக்கம் சொன்னான் அரவிந்த். 

அவளுக்குள் மேலும் மேலும் பல குழப்ப முடிச்சுகள். இவன் தான் சக்திக்கு பயாலஜிக்கல் ஃபாதர் என்றே வைத்துக் கொள்வோம். வைத்துக் கொள்வது என்ன? அதான்‌ ஆதாரத்தோடு வந்து நிற்கிறானே? அப்படியே சக்திக்கு இவன் அப்பா என்றாலும், இவனது பிள்ளைக்கி சக்தி எப்படி டோனர் ஆக முடியும்? பல கேள்விகளுக்கு இன்னும் இவளுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. அதில் இவளும் கூட ஒரு ஆப்ஷன் என்றால், தலையே சுற்றியது அபிராமிக்கு.

“புரியலைன்னா உங்க தம்பிகிட்ட இன்னொரு ஃபைல் இருக்கு. அதைப் பாருங்க புரியும்” என்று சொல்ல வேகமாகப் பிடிங்கி பிரித்துப் பார்த்தாள். 

பரபரவென பார்வை பேப்பரில் மேய்ந்தது. படிக்கப் படிக்க கண்களை நீர் திரையிட்டது. “என்னடா அரவிந்தா இதெல்லாம்?” என்று தொண்டையடைக்க கேட்டவள் கண்களில் கண்ணீர் கோடுகள். 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 12

12“சித்தி… அவன் லெட்டர் குடுத்ததுக்கு நான் என்ன சித்தி பண்ணுவேன்?”“கண்டவன்கிட்டயும் சிரிச்சு சிரிச்சுப் பேசினா லெட்டர் கொடுக்கத்தான் செய்வான். ஆம்பள மாதிரி வண்டிய எடுத்திட்டு ஊர் சுத்த வேண்டியது. வீட்ல அடங்கி ஒடுங்கி இருந்தாத் தானே?”“அப்ப நீங்களும் கடைக்குப் போற வேலைன்னா…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 16 கருத்துகள் உள்ளன

  1. செம விறு விறுப்பா கதை நகருது அடி பொலி ஜி❤️
    அடுத்த எபி எப்போ வரும் என்று ஆவலா இருக்கோம் ஜி🙏

    1. 🤣🤣🤣🤣🤣 நானும் அதுக்கு தான் வெய்ட்டிங் மா 😉

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. பொறுத்திருந்துதான் பாக்கணும்மா 😉😁
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்