என் வீட்டு தோட்டத்தில் 3
3
“ஏன்ட்டம்மா மீரு… ஒஸ்த்தாடுலேம்மா.”
“எங்க வர்றான். நானும் ரொம்ப நேரமா வாசலையே பாத்திட்டிருக்கேன். உங்க நைனாக்கும் போனா போன பக்கம். வந்தா வந்தபக்கம். ஃபோன் கூட எடுக்கல! இப்படி அப்பாவும் மகனும் ஓடி ஓடி யாருக்குதான் சம்பாதிச்சு சேக்குறாங்கனே தெரியல. இருக்கறதை உக்காந்து திண்ணாலே இவன் பிள்ளைக்கும் பிள்ளை காலத்துக்கும் வரும். இன்னொரு கல்யாணம் பண்ணியிருந்தாலாவது இன்னொரு குழந்தை குட்டினு உண்டாகியிருக்கும். இவங்க ஓடி ஓடி உழைக்கறதுல ஒரு நியாயமிரு…” என்று பேச்சுவாக்கில் ஆற்றாமையில் வார்த்தைகள் மடை திறக்க,
“அம்மா… ஏன்டம்மாதி” என்று எதிர் முனையில் பதறினாள் விஷாலி.
அவளது பதட்டத்தில் தான் என்ன பேசினோம் என மீண்டும் ஓட்டிப்பார்த்தார் ஜமுனா. அச்சோ என மனம் அடித்துக் கொண்டது. சிவசிவா என வாயில் போட்டுக் கொண்டார். மனதறிந்து சொல்லவில்லைதான். மகன் மற்றும் பேரனின் நிலை பாரத்து ஒரு ஆதங்கம். ஆற்றமாட்டாமல் வார்த்தையாக வந்துவிட்டது. அது விஷாலிக்குத் தெரியும். ஆனால் சிறுபையன் காதில் விழுந்திருந்தால். இல்லை மகனே இதைக் கேட்டிருந்தால். என்னைப் பற்றி என்ன நினைப்பான்.
இது எவ்வளவு பெரிய வார்த்தை. அதன் உள்ளர்த்தம் உணர்ந்து சொல்லவில்லை என்றாலும் தம்பி மகனின் உடல்நிலை பற்றி தெரிந்தவர்களுக்கு, யாருக்கு சம்பாதிக்கிறான் உன் தம்பி என்று கேட்பது எவ்வளவு பெரிய அனர்த்தமான அர்த்தத்தைக் கொடுக்கும். வார்த்தையை செவிவழி கேட்டவளுக்கே நெஞ்சு பதறியது. அவளும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றவள்தானே. பெற்றவள் இருந்து இந்த வார்த்தைதளைக் கேட்டிருந்தாள்.
“அச்சாணியமா எதுவும் சொல்லடீ விஷா. இப்படி இவனைப் பாக்கமுடியாமத்தான்” என்றவருக்கும் தன் பேச்சு உறுத்தியிருக்கும் போல. அழுகையோடு குற்றவுணர்ச்சியும் வெளிப்பட்டது. என்ன செய்ய. பேசியதை அழிக்க முடியாதே. அவரும் பிள்ளையைப் பெற்றவர் தானே. தன் பிள்ளை படும்பாடு பொறுக்கமாட்டாமல் கொட்டிவிட்டார்.
“உங்க நைனாக்கு… இந்த வாடகை எல்லாம் இன்னைக்கே வாங்கினாத்தான் ஆச்சா. நாளை மறுநாள் போகக்கூடாதா?”
“அவருக்கு என்ன இப்படி ஆகும்ணு தெரியுமா? நீங்கதானே அவனை வெளிய கூட்டிப் போனீங்க?” அந்த குற்றவுணர்வும் சேர்ந்து கொண்டதால் தான் இப்படியெல்லாம் நிதானமிழந்து பேசுகிறார்.
“பார்க்குக்கு தான்டி கூட்டிப் போனேன். ஸ்கூல்ல ஏதோ செலப்ரேஷன்னு ரெண்டு நாளா ஸ்கூலுக்கும் போகல. வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கெடக்குறானேன்னு கூட்டிப் போனேன். உன் தம்பியெல்லாம் இந்த வயசுல ஒரு எடத்துல உக்கார மாட்டான். பம்பரமா சுத்துவான். ஊர் வம்ப ஒருமிக்க இழுத்துட்டு வருவான். ஆனா அவன் மகன் ஓடியாடி விளையாடக்கூட முடியல!” அவருக்கும் தொண்டையடைக்க,
“அம்மா… யம்மாஆ.. யம்மாஆ” பதறினாள் விஷாலி. அம்மாவிற்கு இடம் பொருள் தெரிய வேண்டாமா என்ற பதட்டம். சிறுபிள்ளை கேட்டுக் கொண்டிருப்பானோ?
“நீங்க பாட்டுக்கு புலம்பறீங்க. பிரணவ் எங்க இருக்கான்?”
“அவன் இல்லடீ. பாத்ரூம் போயிருக்கான். எனக்குத் தெரியாதா. உங்கிட்டதான் புலம்ப முடியும். உங்க நைனா கிட்ட பேச முடியுமா? இல்ல உன் தம்பிகிட்டதான் பேச முடியுமா?”
“உங்களுக்கு நான் தான் கெடச்சேனா?” என்றாலும் அவரும் யாரிடம் தன் மனக்குறையைக் கொட்டுவார் என காது கொடுத்து கேட்டுக் கொள்வாள். சிலசமயம் அவளுக்கே சலிப்புத்தட்டும். அப்பொழுது சுள்ளென கடிந்தும் விடுவாள்.
“ம்மா.. நீங்களும் பயந்து அவனையும் பயமுறுத்தாதீங்க. வாடு தைரியங்கா உண்டாட்லே. மேனேஜ் சேஸ்த்தாடும்மா!”
தம்பியைப் பற்றியும் தெரியும். தம்பி மகனைப் பற்றியும் விஷாலிக்குத் தெரியும். இதற்கு மேல் அம்மாவைப் பற்றியும் ரொம்ப ரொம்ப நன்றாகவே தெரியும். சின்ன விஷயம் என்றாலும் ஊதி பெருசாக்கி புலம்பித் தீர்த்துவிடுவார்.
என்னாலதான் உன் தம்பிக்கு… சொந்தம் விட்டுப் போக்கூடாதுன்னு நெனச்சு… நானே எம்பிள்ளை வாழ்க்கையில மண்ணள்ளிப் போட்டுட்டேன் என்று ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டார். நடப்பதை ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். இவருக்கு சொன்னால் புரியாது.
“அவன் தைரியமாத்தான் இருக்கான். எனக்குதான் கண்கொண்டு பாக்க முடியல. பத்து வயசுப் பையனாட்டமா இருக்கான். யாருக்கு என்ன பாவம் செஞ்சோம்னு தெரியல. இதெல்லாம் கண்ணால பாக்க வேண்டியிருக்கு.”
இதற்கு மேலும் அவளால் பொறுக்க முடியவில்லை. பொங்கிவிட்டாள். “ம்மா.. மொதல்ல புலம்பறத நிறுத்துங்கம்மா. அவனுக்காகத்தான் நான் என் பிள்ளைகளக் கூட அங்க கூட்டி வர்றதில்ல. ஏதாவது இன்ஃபெக்ஷன் ஆகும்னு. கொரானா காலகட்டத்துலயே உங்க மகன் அவன் மகனைக் காப்பாத்திட்டான். உங்க பேரன் எமனுக்கே ஹைஃபை கொடுப்பான். வாடுக்கு ஆயுசு கெட்டிம்மா. தம்பி ஒஸ்த்தாடுலே. பயப்படக்கன்டி.” இவள் குரலை உயர்த்தினாள் தான் இவரை நிறுத்தமுடியும்.
அதற்குள் பாத்ரூம் சென்றவன் வந்துவிட, காரின் சப்தமும் கேட்க, “உன் தம்பி வந்துட்டான். நான் அப்பறமா பேசறேன்!” அவசரமாக மகளிடம் சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார் ஜமுனா.
உள்ளே வந்தவன் மகனிடம் வராமல் நேரே தனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிவிட்டு, கைகளுக்கு கிருமி நாசினி தடவிக் கொண்டு தான் மகனிடமே வந்தான்.
அவன் சென்றிருந்த இடம் அப்படி. ஒட்டு மொத்தமாக குப்பைகளைக் கொட்டி வைக்கும் சென்னையின் ஒதுக்குப்புற ஏரியா. தன்னிடம் கன்சல்டிங் வந்த கம்பெனியைப் பார்வையிடச் சென்றிருந்தான். அங்கே அவனால் நிற்கக் கூட முடியவில்லை. குடலைப் பிரட்டியது. அங்கேயும் மாடுகள் பிளாஸ்டிக் குப்பைகளை மேய்ந்து கொண்டிருந்தது. அவனால் அதை சகிக்க முடியவில்லை. அதற்குள் அவனுக்கு அம்மாவிடமிருந்து அழைப்பு வர, அவர்களிடம் நாளை தனது அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு சொல்லி வந்தான்.
அவன் சென்றிருந்ததோ தாம்பரம் பைபாஸ் சாலை. மீண்டும் அவன் சென்னை போக்குவரத்து நெரிசலில் ஊர்ந்து போரூர் தாண்டுவதற்கே மணிக்கணக்காகியது.
அதற்குள் மீண்டும் அழைத்துவிட்டார் ஜமுனா.
கார் ப்ளூ டூத்தில் அழைப்பை இணைத்தான். வீட்டு அழைப்பு என்றால் மட்டுமே கார் ஓட்டும்போது அழைப்பை ஏற்பது. அதுவும் அவசரம் என்றால் தான் அம்மா அழைப்பார் என்றும் தெரியும்.
“குரு… இன்னும் எவ்வளவு நேரமாகும். ஹாஸ்பிடல் போகணும்னு தெரியுமா தெரியாதா? உங்க அப்பா வேற வெளியே போயிருக்காரு. நான் மட்டும் தான் இருக்கேன்.” என்று கோபப்பட, அவனுக்கும் அம்மாவின் பயம் புரிந்தது.
“வந்துட்டேன் மா. ட்ராஃபிக். நீங்க அவன் கிட்டக் கொடுங்க!” பதட்டமில்லாமல் பதில் சொன்னவனுக்குத் தெரியும் தன்னுடைய தைரியம் தான் தன் மகனுக்கு ஊக்க மருந்து என.
“பிரணவ்… என்ன பண்ணனும்னு தெரியும்ல.”
“ஐ க்னோ டாட். நானம்மா தான் பயப்படுறாங்க.”
“அவங்களுக்கு வயசாகிடுச்சுல்ல. நீதான் தைரியம் சொல்லணும். தாத்தா எங்க?”
“ஓகே டாட். வில் மேனேஜ். தாத்தா வெளில போயிருக்காங்க” என்றவன் மூச்சுவிட சிரமப்பட்டவாறே,
“வொரி பண்ணிக்காதீங்க நானம்மா… அப்பா இப்ப வந்துருவாங்க.” மூச்சிறைத்தவாறே தைரியம் சொன்ன பேரனைப் பார்த்த ஜமுனாவுக்கு அடிவயிறு பிசைந்தது. முன்தினம் பேரனை வெளியே அழைத்துச் சென்ற மடத்தனத்தை எண்ணி நொந்து கொண்டார். இத்தனைக்கும் அத்தனை பாதுகாப்பு கவசங்களோடுதான் அழைத்துச் சென்றார். பார்க்கில் கூட்டம் சேர ஆரம்பித்ததுமே அழைத்தும் வந்துவிட்டார். ஓடியாடி விளையாடும் வயதில் ஒரே இடத்தில் எப்படி அமர்ந்திருப்பது என்று நினைத்துதான் அழைத்துச் சென்றார்.
கண்கள் கலங்க பத்து வயது பேரனின் சுருண்ட தலைமூடியை ஆதரவாகக் கோதிக் கொடுத்தவர் கண்கள் வேதனை சுமந்திருந்தது. நித்ய கண்டம் பூரண ஆயூசு என வாழும் பேரனின் நிலமையை நினைத்து.
‘பாவி மகளுக்கு இப்படிப்பட்ட பிள்ளைய விட்டுப் போக எப்படித்தான் மனசு வந்துச்சோ’ மனம் வேதனையில் குமைந்தது.
பிரணவ் பாத்ரூம் செல்ல, மகளுக்கு அழைத்து தன் மனக்குறையை கொட்டி முடிக்க குருப்ரசாத் வரவும் சரியாக இருந்தது.
“ப்ரணவ்… ஓகே!” பக்கத்தில் அமர்ந்து மகனின் தோளணைத்து கேட்க, அந்த ஒற்றை அணைப்பு போதும் மகனுக்கும் அப்பனுக்கும். யானை பலம் மகனுக்கு.
“ஆல்ரைட் டாட்” என்றான் பளிச்சென.
“என்னத்த ஆல்ரைட்டோ…” என்று ஜமுனா அலுத்துக் கொண்டே எழ, அவரும் உடன் வர எத்தனிக்கிறார் எனத் தெரிந்தது. ஏற்கனவே பிபி பேஷன்ட். அங்கு வந்து மருத்துவர் எதையாவது சொல்ல, இவர் அதை நினைத்தே புலம்ப ஆரம்பித்து விடுவார்.
“ம்மா… நான் மட்டும் கூட்டிப் போறேன். நீங்க எதுக்கு?”
“ஏன் குரு… நானும் வர்றேனே?” இறைஞ்சுதலாகக் கேட்டார்.
தன்னால் தான் தன் பிடிவாதத்தால் தான் மகனுக்கு இந்த நிலையோ. அவனும் எல்லார் மாதிரியும் மனைவி, மக்கள் என வாழ்ந்திருப்பான். இப்படி மகனை வைத்துக் கொண்டு தனித்து அவஸ்தைப்பட மாட்டானே என உள்ளூர உறுத்தல்.
“நார்மல் செக்கப் தான்மா. நீங்க எதுக்கு அலையறீங்க?” என்று பேசிக் கொண்டிருக்க ,
அதற்குள், “பாபு… ஏஞ்செஸ்த்துந்தி?” கேட்டுக் கொண்டே திருவேங்கடமும் உள்ளே வர,
“ஃபைன் தாத்தா. நானம்மா தான் பயப்படுறாங்க. எனக்கு ஒன்னுமில்ல!”
“பிச்சி… அவளுக்கு சின்னோடு முன்னாடி என்ன செய்யணும், ஏம்மாட்லாடாலோ தெளிது.” மனைவியைத் திட்டிக் கொண்டே செந்தமிழையும், சுந்தரத் தெலுங்கையும் குழப்பியடிக்க, வேறொரு சமயமாக இருந்திருந்தால் ஜமுனா அவரை ஒருவழி பண்ணியிருப்பார். சற்று முன் இதேபோல் தன்னிடம் ஃபோனில் பேசிய மகளையும் தான். சமய சந்தர்ப்பம் சரியில்லாமல் போனதில் திருவேங்கடம் தப்பித்தார்.
ஜமுனா பிறந்தது திருத்தணி. திருவேங்கடம் பூர்வீகம் சித்தூர். அதனால் அவர் சுந்தரத்தெலுங்கர். இவர் பச்சைத்தமிழச்சி. ஆரம்ப காலங்களில் கொடுக்கல் வாங்கல் தொழில் தொடர்பு, அது கொண்டு சம்பந்த தொடர்பு எல்லாம் இருந்ததால் ஜமுனா ஆந்திரதேசத்து மருமகளாகிப்போனார். ஆனால் திருவேங்கடம் மூதாதையார் வேரூன்றியது சென்னை சாலிகிராமம். அங்குதான் வேங்கடம் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்.
எழுபது எண்பதுகளில் மேலும், கீழுமாக மளிகைக்கடை, டீக்கடை, சலூன், ஃபேன்சி ஸ்டோர், ஜெராக்ஸ கடை மற்றும் பேக்கரி என வரிசையாக கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இப்பொழுது எல்லாம் இடித்துக் கட்டி பொட்டிக், யுனி செக்ஸ் சலோன், கைபேசி கடை, காஸ்மெட்டிக் ஷோரூம், ஃபேஷன் ஜ்வல்லரி, கே.எஃப்.சி, பிட்ஷா ஹட் மற்றும் கஃபே என எல்லாமே 2K அவதாரம் எடுத்து வேங்கடம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என அரிதாரம் பூசிக் கொண்டது. மினி மால் என சொல்லுமளவிற்கு அங்கு எல்லாமே இருந்தது.
ஒரு காலத்தில் திரைப் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்து கொண்டிருந்தனர் திருவேங்கடம் மூதாதையர். முன்பு போல் சினிமா தொழில் இப்பொழுது இல்லையென திருவேங்கடம் தான் குறைத்துக் கொண்டார். குருப்ரசாத்திற்கும் அதில் ஆர்வமில்லை. அடுத்து அதை பொறுப்பெடுத்துக் கொண்டுபோக மகன் ஈடுபாடு காட்டாத நிலையில் முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டார்.
வேங்கடம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்… மாதமானால் வாடகை பேங்க் அக்கவுன்டுக்கு மாறிவிடும். அப்படியே ஒன்றிரண்டு தாமதமானால் வேங்கடம் சென்று ஒரு பார்வை பார்த்து வருவார். அது வாடகை கேட்க வந்தது போலிருக்காது. வளாகத்தை பார்வையிட வந்தது போலிருக்கும். கேளாமல் கெட்டது கடன். பாராமல் கெட்டது பயிர் என்ற வழமை உண்டு. வாடகை தாமதமானாலும் வந்துவிடும் எனத் தெரியும். இருந்தாலும் இருப்பை உணர்த்த வேண்டும் என நினைப்பார். அப்படித்தான் இன்றும் சென்றிருந்தார். கைபேசி மூர்ச்சையாகியிருக்க அவரால் ஜமுனா அழைப்பை ஏற்க முடியவில்லை.
“உங்களுக்கு என்ன தெரியும்? தனியா இருந்த எனக்குதான் தெரியும். உங்கள யாரு இந்நேரத்துக்கு வெளிய போகச்சொன்னது?”
“ம்மா… அவரெதுக்கு இப்ப திட்டுறீங்க. எவ்வளவு நேரம் அவரும் வீட்டுக்குள்ளேயே இருக்க முடியும்?”
“ஆமாடா… ஃபோன் எதுக்கு? அவசரத்துக்கு பண்ணுனா எடுக்க வேண்டாமா?” ஆற்றாமை அவரை எல்லார் மீதும் சிடுசிடுக்க வைத்தது.
“சார்ஜ் லேது ஜமுனா!” என்றவரிடம்,
“வச்சு பூஜை பண்ணுங்க” என நொடித்தார்.
“ப்ரணவ்… நீ வா! அவங்க கன்டினியூ பண்ணட்டும்!” குரு மகனை எழுப்ப,
“தாத்தா… ஏதாவது எமர்ஜென்சினா கால் பண்ணுங்க. ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கிறோம்!” சிரிக்காமல் பேரன் தாத்தாவை கிண்டல் செய்ய,
“உரே நைநா… நாநம்மா தக்கிர ஒன்டரிகா வதிலி வெல்லொக்குரா! பயங்கா உந்தி!” திருவேங்கடம் ஆஜானுபாகுவான ஆறடி மனிதர். கிட்டத்தட்ட பழைய நடிகர் ரெங்காராவ் தோரணை. பேரனிடம் சிறுபிள்ளையாய் மாறி போலியாக பயந்த முகபாவம் காட்ட ப்ரணவ் வாய்விட்டு சிரிக்க, அந்த சிரிப்பு ஜமுனாவையும் தொற்றிக் கொள்ள,
“உங்க தாத்தா ரொம்ப பயந்தவர்தான். சீக்கிரம் போய்ட்டு வாங்க!” என்றார். அவர் மனநிலை மாறுவதற்குள் மகனை அழைத்துக் கொண்டு காருக்கு வந்து விட்டான் குருப்ரசாத்.
கார் கதவைத் திறந்து மகனை முன்சீட்டில் அமர வைக்க, அவனே இழுத்து சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டு, முகக்கவசத்தை சரி செய்து கொண்டான்.
சாலிகிராமம் விட்டு வெளியேறி வடபழனி சாலையில் திரும்பியது. வடபழனி சாலையிலிருக்கும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குள் சென்றது கார். காரை பார்க்கிங்கில் நிறுத்தி இறங்கினர். வரும் பொழுதே முன்பதிவு செய்துவிட்டான். அது வெறும் சம்பிரதாயமே. இல்லையென்றாலும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. நோயாளிகள் மத்தியில் அவனை இருக்கவிடமாட்டான். வந்தவுடனே மருத்துவரும் உள்ளே அழைத்து விடுவார். இப்பொழுதும் உள்ளே ஒருவர் இருக்க, வெளியே ஐந்து நிமிடங்களே காத்திருந்தனர்.
“ஹே… மை ஹீரோ! எலா உன்னாவு?” அறைக்கு வெளியே இருந்த செவிலி அவனை ஆரவாரமாய் வரவேற்றார். அங்கும் தெலுங்கு சுந்தரமாய் கேட்டது. பெரும்பாலும் செவிலி என்றாலே மாலையாளம் சம்சாரிக்கும். இங்கு தெலுங்கு மாட்லாடியது. எந்த ஒரு வளர்ந்த நிறுவனமும் தன் இனம், ஊர், மொழி சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கத்தான் செய்கிறது.
“ஃபைன் ஆன்ட்டி!” என்றவனிடம், “நெக்ஸ்ட் நுவ்வே. ஃபைவ் மினிட்ஸ்” என்று சொல்லிச் சென்றார்.
அவர் அகன்றதும், குனிந்து தன் தந்தையிடம்.
“டாட்… அந்த லேடி உங்கள செமையா நோட் பண்ணாங்க!” என்று கமுக்கி சிரித்தான். பின்னே… ஹீரோ என மகனை வரவேற்றவர் பார்வை ஆர்வமாக அப்பாவைத்தானே பார்த்தது. அவரது பார்வை மட்டுமல்ல அவன் மருத்துவமனை வளாகத்தில் மகனை கைபிடித்து நடந்து வந்த போதும் எதிர்பட்டவர்கள் பார்வை மட்டுமல்லாமல் வரிசையில் அமர்ந்திருந்தவர்களையும் அவனை மறுமுறை பார்க்க வைத்தது அவனுடைய தோற்றம்.
வீட்டிற்கு வந்து குளித்து வந்தவன் க்ரீம் கலர் டீசர்ட்டும், சாக்லேட் கலர் ட்ராக் பேன்ட் என இளகு உடைக்குதான் மாறி வந்தான். அழகாக ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அளவாக நறுக்கிய மீசை, அலையடிக்கும் கேசம் இதையெல்லாம் கடந்து அவனிடம் ஈர்த்தது அடர்ந்த புருவங்களுக்கு கீழே வசீகரிக்கும் பழுப்பு கலந்த தேன் நிற விழிகள். கேட் ஐ எனப்படும் ப்ரௌனிஷ் ஐ. அவனது தோற்றத்திற்கு தனி கம்பீரத்தையும், வசீகரத்தையும் ஒரு சேரக் கொடுத்தது. ஆறடி என்று சொல்ல முடியாது எனினும் ஆண்களில் சராசரிக்கும் சற்று அதிகப்படியே. ஒரு கையில் மகனை பிடித்து நடந்து வந்த தோரணையே அனைவரையும் வசீகரித்தது. வரிசை இருக்கையில் அப்பாவும் மகனும் அமர்ந்துகொள்ள,
“டாட்… யூ லுக் லைக் எ ஹீரோ” மகனே அப்பனை சிலாகிக்க,
“பிரணவ்வ்வ்” என்று அழுத்தியவன் குரலிலும் மெல்லிய சிரிப்போடு துள்ளல் இழையோடியது. அதை அவன் கண்களும் பிரதிபலித்தது.
இது எல்லாமே மகனுக்காத்தான். பிரணவை தொடர் பரிசோதனைக்கு அழைத்து வந்த ஆரம்ப காலகட்டங்களில் மருத்துவர் கவனித்தது என்னவோ குருப்ரசாத்தை தான். நாளுக்கு நாள் அவனிடம் தோன்றிய மாற்றங்களைத்தான். உலகவாழ்க்கையை வெறுத்த தோற்றம். எதிலும் ஆர்வமில்லாமல் தன்னைப் பற்றிய கவலையில்லாதவனாக இருப்பதாகப் பட்டது. மகனே முக்கியம் என வேலையைக் கூட விட்டுவிட்டு எந்நேரமும் மகனுடனே இருந்தான். அவனது ஓய்ந்த தோற்றம் பார்த்த மருத்துவர் இவனிடம் முதன்மையாகக் கூறியதே, “உங்க மகன் தினமும் பார்க்கிற கண்ணாடி நீங்கதான். அந்த முகத்துல பயத்தையும் கவலையையும் அவன் பார்க்கக் கூடாது… நம்பிக்கையையும் தைரியத்தையும் பார்க்கணும்.” என்றதுதான்.
“பிரணவ் இப்போ இருக்கிற வயசுல அவனுக்கு மருந்தும் சிகிச்சையும் எவ்வளவு முக்கியமோ… அதே அளவுக்கு அவனைச் சுற்றி இருப்பவர்களின் மனநிலையும் முக்கியம். குறிப்பா, அவனுக்கு நீங்கதான் முதல் ஹீரோ. குழந்தைகளுக்கு நம்ம சொல்லை விட செயல்தான் அவங்களை வழிப்படுததும். நீங்க கான்ஃபிடன்டா, உற்சாகமா இருந்தீங்கன்னா அதுதான் அவன்கிட்டயும் பிரதிபலிக்கும். அவனுக்கும் ஒரு பாதுகாப்பு உணர்வைக் கொடுக்கும்.”
“அவனுக்கு ‘நான் வித்தியாசமான குழந்தை’ன்னு ஒருநாளும் தோணக்கூடாது. ‘என்னால முடியும்… என்னோட அப்பா எனக்குப் பின்னாடி இருக்காரு’ன்னு அவன் உணரணும்.”
“உங்க சிரிப்புதான் அவனுக்கு மருந்து. உங்க உற்சாகமும், நம்பிக்கையும்தான் அவனுக்கு எனர்ஜி பூஸ்டர். அதனால உங்களை நீங்க கவனிச்சுக்கிறது கூட அவனோட சிகிச்சையில ஒரு பகுதிதான். நம்ம சுத்தி இருக்கறவங்க வைப் தான் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும். உங்க மகன் எப்பவும் ஆக்டீவா இருக்கறது உங்க கையிலதான்.”
மருத்துவர் பேச்சைக் கேட்டு மகனுக்காக தன்னை மாற்றிக் கொண்டான் என்பதை விட பழைய குருவாக தன்னை மீட்டுக் கொண்டான் எனச் சொல்வதே இந்த இடத்தில் சாலச்சிறந்ததாக இருக்கும். அப்படித்தானே இருந்தான் ஒரு காலத்தில். கவலை, துக்கம், வருத்தம் போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாதவனாக.
வீட்டிலேயே மகனோடு அடைந்து கிடந்தவன் தனக்கென ஒரு தொழில் தொடங்கினான். குருபிரசாத் ஃபைனான்ஸ் அட்வைசர் அன்ட் பிசினஸ் கன்சல்டிங் தொடங்கினான். தன்னை முழு நேரமும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டான். அப்பாவுக்கு வேலை இருக்கு. நீதான் உன்னை பாத்துக்கணும் என்று மகனுக்கு மறை பொருள் உணர்த்தினான். தோற்றத்திலும் செயலிலும் பழைய குருவை மீட்டெடுத்தான்.
எல்லாமே தேவைக்கு மிஞ்சி இருக்கும் பொழுது தானாக தலையில் ஏறி உட்காரும் கர்வம் அவனுக்குள்ளும் ஒரு காலத்தில் உண்டு. எல்லாமே அவனைத் தேடி வந்தது. எதற்கும் மெனக்கெட்டதில்லை. அந்த மமதை இப்பொழுதும் உண்டு. இல்லையென்று சொல்லமுடியாது. அது பிறப்பும் பரம்பரையும் கொடுத்தது. எல்லாமே எளிதாக கிடைத்து விடும் பொழுது தன்னால் தலைகேறிவிடுதிறது. அது யாரும் எனக்கு கீழ் என நினைக்கும் மட்டமான எண்ணமில்லை. எண்ணிடம் எல்லாமே இருக்கு எனும் மமதை. ஆனால் சிலவிஷயங்கள் அந்த மமதையை தலையில் தட்டி இறக்கிவிடும் காலமும் வரும் என உணர்ந்தது இனி தனக்கு மகனும் இல்லையோ என பயந்து பரிதவித்த காலங்கள்தான்.
மருத்துவர் அழைக்க இருவரும் உள்ளே சென்றனர்.இவர்களைப் பார்த்ததும் உற்சாகமாக வரவேற்றார். வழக்கமான பரிசோதனைகளே.
பிரணவின் எடையை பரிசோதித்து செவிலி கூற, சென்ற முறை வந்தபொழுது இருந்த எடையோடு ஒப்பிட்டவர், “பிரணவோட பாடி வெய்ட் இன்க்ரீஸ் ஆகியிருக்கே. சூப்பர் கண்ணா” என பாராட்டியவர்,
“நியூட்ரிசியனிஸ்ட்டையும் (Nutritionist) பாத்துருங்க. அவங்க சொல்ற டயட்டையே ஃபாலோவ் பண்ணுங்க!” வழக்கம் போல மற்ற சோதனைகளுக்கும் எழுதி கொடுத்தார். மறுநாள் குருவை மட்டும் பரிசோதனை முடிவுகளோடு தன்னை வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பினார்.
வழக்கம்போல் முழுமையான இரத்தப் பரிசோதனை, நோய் எதிர்ப்பு புரதங்களான IgG, IgA, IgM அளவீடு, லிம்போசைட் செல்கள் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆம்… பிரணவ் ஒரு ப்ரைமரி இமினோடெஃபிசென்ஸி (Primary Immunodeficiency) குறைபாடுள்ள, எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள சிறுவன் கடந்த ஐந்து வருடங்களாக. ஆரம்ப காலத்தில் சின்ன சின்னதாக நோய்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தானிருந்தது. அதன் தாக்கம் அதிகமில்லை.
குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், வயிற்றுப் பிரச்சினை எல்லாம் சாதாரணம் என்றுதான் அனைவரும் நினைத்தனர். மற்ற குழந்தைகள் போல எடை அதிகரிக்கவில்லை. சுறுசறுப்புமில்லை. குருவும் அப்பொழுதிருந்த மனநிலையில் மகனை ஊன்றிக் கவனிக்கவில்லை. ஜமுனாதான் பேரனை முழுமையாக கவனித்து வந்தது.
நோயின் தாக்கம் தீவிரமானது கொரோனா காலகட்டத்தில் தான். திடகாத்திரமானவர்களையே அசைத்துப் பார்த்த கொரானோ பிரணவையும் விட்டு வைக்கவில்லை. யாருக்கும் நம்பிக்கையே இல்லை. எல்லாரும் கைவிட்ட நிலை. பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் இவனது குறைபாடு தெரிய வந்தது. தீவிர போராட்டங்களுக்குப் பிறகு இவனை மீட்டெடுத்தனர். சில மருத்துவ ஆச்சர்யங்களில் (மெடிக்கல் மிராக்கிள்) இவன் உயிர் பிழைத்ததும் ஒன்று. மருத்துவர்களுக்கே வியப்பை ஏற்படுத்தியவன்.
அதன் பிறகான தீவிர கண்காணிப்பும், குருவின் மகனுக்கான அர்பணிப்பும் பிரணவை இந்த அளவிற்கு மீட்டு எடுத்து வந்துள்ளது.
இருவரும் வெளியே வந்தனர். கையில் இரத்தம் எடுத்த இடத்தில் வட்ட வடிவ பேன்டேஜ் ஒட்டப்பட்டிருந்தது. கண்கள் கவலையைத் தாங்கினாலும் மகனுக்கு காட்டவில்லை. மருத்துவமனை விட்டு வெளியே வந்த கார் சிக்னலில் நின்றது. குருவின் பார்வை சாலையில் இருக்க, பிரணவ் பார்வை பக்கத்தில் நின்ற இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் மீதே.
அம்மாவும், மகனும். அவள் தலைக்கவசம் அணிந்திருந்தாள். பின்னாலிருந்தவன் கையில் ஐஸ்க்ரீம் கோன். ஏதோ எக்கி அம்மாவிடம் சிரித்தபடி சொல்ல, அவள் திரும்பாமலே கண்ணாடியில் பார்த்தவாக்கில் அவன் தலையில் குட்ட எத்தணிக்க, மகன் தலையை பின்னிக்கிழுத்து போக்கு காட்டி சிரித்தான்.
பிரணவுக்கும் இதே மாதிரி வண்டியில் அப்பாவின் பின் அமரந்து செல்ல ஆசைதான். தூசி ஒவ்வாமை என ஒரு நாளும் அழைத்துச் சென்றதில்லை. இத்தனைக்கும் லட்சங்களை விழுங்கிய இரு சக்கர வாகனம் அவர்கள் வீட்டின் ஓரத்தில் சட்டையணிந்து ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறதுதான். ஒரு காலத்தில் குருப்பிரசாத்தின் அதிவிருப்ப வண்டி. ஆனால் இப்போது ஒரு நாளும் வெளியே எடுத்ததில்லை.
அவன் சிரிப்பை பார்த்து காருக்குள் இருந்தவனும் மெலிதாக சிரிக்க… சிரிப்பு சத்தத்தில் மகனை திரும்பிப் பார்த்தான். அவனது மலர்ச்சி அவனையும் தொற்றிக் கொண்டது. கண்கள் மலர சிரித்தவன் பார்வை சென்ற திக்கைப் பார்த்தான். அதற்குள் சிக்னல் வழிவிட, சடசடவென திடீர் தூரல் போட அவளது வண்டி அவசரமாக முன்னே சென்றுவிட்டது. சிறுவனின் முதுகைத்தான் பார்த்தான்.
சட்டென முகம் இறுகி கோபத்தைக் காட்டியது. “இடியட்” என்றான் காரைக் கிளப்பிக் கொண்டே. மகன் கேள்வியாகப் பார்த்தான். யாரென்று தெரியாதவர்கள் மீது எதற்கிந்த கோபம் என்ற பாவணையில்.
“அந்தப் பையனுக்கு ஹெல்மெட் போடல சின்னா. அதான்” என்றான். இவன் எங்கு சென்றாலும் ஏதோ விண்வெளிக்கு மகனை அழைத்துச் செல்வது போலத்தான் அழைத்துச் செல்வான். அந்த பழக்கத்தில் முன்னே சென்றவர்கள் மீது கோபம் கொண்டான். அவன் கோபம் நியாயமே. அவளும் ஹெல்மெட் அணிந்துதான் மகனை அழைத்து வந்தாள். வழியில் ஐஸ்க்ரீம் வாங்கவும் கரைவதற்குள் சாப்பிட வேண்டுமென ஹெல்மெட்டை வண்டிக்குள் வைத்துவிட்டான்.
“அவன் எங்க ஸ்கூல்தான் ப்பா… சீனியர். பிஃப்த் ஸ்டேன்டர்ட். ஸ்போர்ட்ஸ் பெர்ஸன். அவனுக்கும் உங்கள மாதிரியே ஆம்பர் ஐஸ். சிலசமயம் உங்கள மாதிரியே இருப்பான். உங்க சின்னவயசு ஃபோட்டேல பாத்த மாதிரி” என்றான்.
இவனுக்கும் பத்து வயதுதான் என்றாலும் இடையில் ஒரு வருடம் தடைபட்டது. அதனால் இவன் நான்காம் வகுப்பில் படிக்கிறான்.
படுக்கையில் ஆழ்ந்து தூங்கும் மகனையே பார்த்திருந்தான் குருபிரசாத். இன்று சோதனை ரிப்போர்ட்களை வாங்கிவரச் சென்றிருந்தான். மருத்துவர் கூறிய ஆலோசனைகள் தான் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
“ப்ளட் ரிலேஷனா அதுவும் சிப்ளிங்ஸா இருந்தா இன்னும் பெட்டர் குரு. உங்களையும் டெஸ்ட் பண்ணி பாக்கலாம்” என்று நம்பிக்கை கொடுத்திருந்தார்.
‘சிப்லிங்சா… அதற்கு எங்கே போவது. ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லாமல் அல்லவா செய்துவிட்டுப் போய்விட்டாள் அவனது ச்சிலக்கா. பாவா… பாவா என ஊனும் உயிருமாக தனக்குள் உருகிக் கரைந்தவள். இவனுக்கு தான் எளிதில் கிடைத்துவிட்டதால் அவள் அருமை தெரியவில்லை. அவள் காதலித்த அளவிற்கு தான் அவளை விரும்பவில்லையோ என்ற கேள்வி இப்பொழுதும் அவனுக்குள் எழுவதுண்டு. பெரியவர்கள் முடித்து வைத்தது. எல்லாரையும் போல இயல்பாத்தான் தொடங்கியது. ஆனால் இப்பொழுது நினைக்கையில் அவளது தன் மீதான பிரியம் அலாதியானது என்று தோன்றியது.
இன்னொரு குழந்தை என்றாலும் அதற்கு அவள் வேண்டுமே. அந்த அவள் எங்கே என்பதுதான் கேள்வியே!
எங்கே என்பது கேள்வியா? யார் என்பது கேள்வியா? யார் விதியை யார் நிர்ணயிக்க முடியும்? காலதேவன் கணக்கை கணிப்பவர் யார்?
ஆழ்ந்து மூச்செடுத்தவன் கைகள் மகனை வாஞ்சையாக தலை வருடிக் கொடுத்தது.
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலம் இடு
இல்லை என்றால் ஒரு சாபம் இடு
பொன்னாரமே… ஏ…
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே





Very nice
♥️♥️♥️♥️♥️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Chilaka epa varuva..chilaka kita inor baby irukardhu theriyadha…
அவள் பறந்து போனாளே இவனை மறந்து போனாளே… 😂😂😂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Paruda..anbe va…anbe va…nu paditu pinadiye odanum..enga..unga heroku adulam varuma ne Theriyala😂
நம்ம ஹீரே எல்லாம் என்னைக்கி அதைப் பண்ணிருக்கானுங்க. அவனுகள ஹீரோவாக்க நான் படுறபாடு இருக்கே… 😴😴😴😴🤣🤣🤣
Hi 🤩🤩
Amma amma,nambitom..arambathula ipdi apuram thalai kupura vizhundu kedapanga.
🤣🤣🤣🤣🤣 என் ஹீரோவுக்கு வந்த சோதனை 😞😞😞
ஹீரோ சாரே..! உன் மனைவியை தேடி போ,உனக்கான பதில்கள் ஏராளம் அவளிடம் உண்டு.
தேடினால் கிடைக்கும் என்று தான் நினைக்கிறேன்.
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫