arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 5

என் வீட்டு தோட்டத்தில் 5

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

5

“ஹேஏஏஏ…மாமா! க்யூட்டா‌ இருக்கு மாமா! சூப்பர் மாமா! தாங்க் யூ மாமா! லவ் யூ மாமா!” மூச்சுக்கு முன்னூறு மாமா போட்டான் சக்திபாலன். அவன் முகத்தில் பூத்த என்று கூட உவமை சொல்லமுடியாது. வெடித்த சந்தோஷத்தைக் கண்ட மாமன்காரனுக்கும் தாராளமாய் புன்னகை விரிந்தது. 

“டேய்… நசுக்கிறாதடா!” பதட்டமானான் அவன் ஆர்வத்தில் இறுக்கிப் பிடித்ததைப் பார்த்து‌. 

“இல்ல மாமா…. இல்ல மாமா… சாஃப்ட்டா ஹேன்டில் பண்றேன்!” பதிலும் பரபரப்பாகவே வந்தது.

“ம்ம்ம்… பத்திரம். உன் அடாவடிக்கெல்லாம் இது ஆகாது பாத்துக்கோ. உங்க அம்மாகிட்ட என்ன திட்டு வாங்கப் போறேனோ?” மருமகனின் சந்தோஷத்தைப் பார்த்து பூரித்தவன் கூடவே அலுத்தும் கொண்டான். 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன்!”

“எதை… உங்க அம்மாட்ட நான் உதை வாங்குறதையா?” 

“ஆமா… மாமா” என்றவன் உடனே‌, “இல்ல மாமா!” என்றான்‌. 

அவனுக்கு சந்தோஷத்தில் கால் தரையில் பாவவில்லை. பரபரவென இருந்தான். அவனும் எத்தனை‌ நாட்களாக மாமாவிடம் நச்சரித்துக் கொண்டிருக்கிறான். சொல்லி வைத்திருக்கிறேன் என்பானே ஒழிய அபிராமிக்குப் பயந்தே வாங்கி வரமாட்டான். 

புது இடத்திற்கு வந்ததும் தன் இறுப்பை, சப்தமிட்டுக் காட்டிக் கொடுத்தது. அவன் கையிலிருந்து எப்பொழுது குதிக்கலாம் என சந்தர்ப்பம் பார்த்திருந்தது. மிரட்சி அதன் கண்களில். 

“ஷஷ்ஷ்… அம்மாவுக்கு கேக்கப் போகுது! கத்தாதே” அதனிடம் மாமனும், மருமகனும் ரகசியம் பேச இன்னும் சத்தமாகக் கத்தியது. சக்திபாலனுக்கோ பயம். எங்கே இதன் சத்தம் கேட்டு அபிராமி, வெளியே கொண்டுபோய் விடச் சொல்லிவிடுவாளோ என்று. எப்படியும் தெரியத்தான் போகிறது என்பது தெரியவில்லை. ஒழித்து வைக்கும் பொருளா என்ன? 

‘மாமா என்ன செய்ய?’ என்பதுபோல் கண்களில் கலவரத்தோடு நிமிர்ந்து பார்த்தான். எங்கே தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற பயம். மடியில வச்சுக்கோ என்றதும் அமர்ந்து மடியில் வைக்க, சுருண்டு படுத்துக் கொண்டது. தலையில் மென்மையாக விரல் கொண்டு தடவிக் கொடுக்க, முதலில் தனக்குள் சுருங்கியது‌. சிறிது நேரத்தில் அந்த சுகத்தில் கண்களை மூடி தலையை வாகாக தூக்கி கொடுத்தது. மெல்லிய உறுமல் (purr)அதனிடத்தில். பாதுகாப்பாக உணர்ந்தால் வெளிப்படுத்துவது. அதுவே அது இவனிடம் அடைகலமாகிவிட்டதை உணர்த்தியது. சிறிது நேரம் சக்தி அசையவேயில்லை. நகர்ந்தாலே ஓடி விடுமோ என்ற பயம்‌. பூப்போல வைத்துக் கொண்டான். அதுவும் கதகதப்பாக படுத்துக் கொள்ள, 

அரவிந்தனோ, “பரவாயில்லடா, உன்னையும் ஒரு எடத்துல உக்கார வச்சிருச்சு” என்றான் கேலி போல். பின்னே அவன் ஐந்து நிமிடம் ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கிறான் என்றால் சக்தியைப் பொறுத்தவரையில் அது எவ்வளவு பெரிய சாதனை. 

கதைவத் திறக்கும் சப்தம் கேட்க, போச்சுடா என்பது போல் மிரண்டு போய் அவன் பார்க்க, அந்த சிறு சத்தத்திற்கும் அவனைவிட மிரட்சியோடு சட்டென எழுந்து பந்து போல் துள்ளி ஓடியது ஆரஞ்சு வண்ணத்தில் இருந்த ஜின்ஞ்சர் கேட் வகை பூனைக்குட்டி. இரண்டு கைகளுக்குள் அடங்கிவிடும் அளவுதான். 

“மாமா புடிங்க!” என்று சக்தி கத்திக் கொண்டே துரத்த, ஓடிப்போய் சோஃபா அடியில் சுவரோரமாகப் பதுங்கிக் கொண்டது. அது டாணா வடிவ சோஃபா. தரைக்கும் சோஃபாவிற்குமான இடைவெளி வெளக்குமாறு போய்வரும் அளவுதான். அதுக்கு வாட்டமாக இருக்க, நன்றாக பம்மிக் கொண்டது. இவனும் படுத்து கைவிட்டு எடுக்கப் போக, 

“டேய் கடிக்கப் போகுதுடா!” என்று பதறினாள் அபிராமி. இவன் கையை உள்ளே விட எலியென நினைத்து கடித்துவிட்டால். 

அரவிந்தன், “டேய்… கொஞ்ச நேரம் விடு. அதுவே வெளியே வரும். நீ கைவிட்டா பயந்து கடிக்க வரும்‌. இல்லைனா உள்ளே இன்னும் பம்மிக்கும்” என்று சொல்ல அவன் அம்மாவைத்தான் திரும்பி பார்த்தான். காச் மூச்சென்று கத்துவாள் என எதிர்பார்க்க, அவள் எதுவும் பேசாமல் போக அவனுக்கே ஆச்சர்யம் தாங்கவில்லை. 

“என்ன மாமா!” என்றான் அதே தொணியில். 

“இன்னைக்கு உன்னைத் திட்ட மாட்டாங்கனுதான்டா இன்னைக்கி கொண்டு வந்தேன்” என்றவனைத் தாவிக் கட்டிக் கொண்டான். 

“பிரில்லியன்ட் மாமா! எக்சலன்ட் மாமா!” இன்னும் சந்தோஷத்தின் அளவு கூட,

“டேய் போதும்டா. எத்தனை மாமா இன்னைக்கி!” என்றவன் முகத்திலும் சிரிப்பு. 

இன்று சக்தியின் பிறந்தநாள். என்ன பரிசு கொடுக்கலாம் என அபிராமி யோசிக்க, இவன் வெகு நாட்களாக ஏதாவது பெட் அனிமல் வேண்டும் என கேட்பது நினைவிற்கு வந்தது. அபார்ட்மென்டில் நாய் வளர்க்க முடியாது. பூனையும் தான். ஆனாலும் தேவையுமிருக்க அதையே அவனுக்குப் பரிசாகவும் கொடுக்க வாங்கி வரச் செய்தாள்‌. 

தான் சொன்னதாக மகனுக்குத் தெரிய வேண்டாம், மாமனாக வாங்கித் தருவது போல்தான் எடுத்து வரச்சொன்னாள்‌. தானும் அவனுக்கு சலுகை வழங்குவது போல் தெரியக் கூடாது என்பதற்காக. அவளிடம் மட்டும்தான் ஏதோ கொஞ்சம் பயந்து அடங்குவான்.

அரவிந்த் கிளினிக்கிற்கு நாய், பூனைகளை வைத்தியத்திற்கு அழைத்து வரும் பெட் ஷாப் வைத்திருப்பவரிடம் தனக்கு ஒரு பூனைக்குட்டி வேண்டும் என்று சொல்லி வைத்திருந்தான். இன்று‌ பிறந்தநாள் பரிசாக எடுத்து வந்தான்.

இன்று காலையிலேயே கோவிலுக்கு மகனை அழைத்துச் சென்று அவன் பெயரில் அர்ச்சனை செய்த பிறகுதான் பள்ளியில் விட்டு வந்தாள்‌. நண்பர்களுக்கு கொடுக்க சாக்லேட் பாக்ஸோடுதான். 

மாலையில் மகனை அழைக்கச் சென்றாள். சற்று தாமதமாகிவிட்டது. செடிகள் வந்திறங்க, அவற்றை சரிபார்த்து இறக்கி வைத்துவிட்டு வர தாமதமாகிவிட்டது. அதனால் வெய்ட்டிங் ஹாலில் காத்திருந்தான். அங்கே செல்ல, அம்மாவைப் பார்த்ததும் எழுந்து வந்தான். கையில் சாக்லேட் பாக்சோடு. 

“என்னடா சாக்லெட் எல்லாம் காலியா?” என்றாள். 

“இல்லம்மா… இன்னும் கொஞ்சம் இருக்கு!” என்று பேசிக் கொண்டே அவளுடன் நடந்தவன்,  

“மீதி இருக்கறதை இவங்களுக்கும் கொடுக்கவா!” என்றான். 

அங்கே இன்னும் ஒரு சில பிள்ளைகள் பெற்றோர் வர தாமதமாக காத்திருந்தனர். 

“அதனால என்ன? உன் ஸ்கூல் மேட்ஸ்தானே. கொடு” என்று சொல்ல, அவனும் பேக்கை அவளிடம் கொடுத்துவிட்டு, அங்கிருந்தவர்களுக்கு இனிப்பை வழங்க, பிள்ளைகள் அவனுக்கு கை குலுக்கி, வாழ்த்துச் சொல்லி எடுத்துக் கொண்டனர். 

பிரணவும் அங்குதானிருந்தான். அவர்களைப் பார்த்துக் கொண்டுதானிருந்தான். அவள் வந்ததும் சக்தி வேகமாக எழுந்து சென்றதையும், அவள் அவனை அணைத்துக் கொண்டு தாமதமானதற்கு வருத்தம் தெரிவித்ததையும் கண்ணுற்றான். 

பள்ளிவிட்டதும் பிரணவ் பிள்ளைகளுடன் சேர்ந்து வெளியே செல்லமாட்டான். பள்ளிவிடும் நேரம் எப்படியும் வளாகத்தில் புழுதி கிளம்பும். அதனால் முகத்தில் முகமூடியோடு தனித்து வெய்ட்டிங் ஹாலில் தான் அப்பாவிற்காக எப்பொழுதும் காத்திருப்பது. 

அவனிடமும் பாக்சை நீட்டினான். எடுக்க யோசித்தான். 

அபிராமிக்கு அது ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை. அடுத்தவர்களிடமிருந்து எதுவும் வாங்கக்கூடாதென்று பிள்ளைகளிடம் சொல்லி வைப்பதுதானே. ஆனால், பிறந்தநாள் இனிப்பு கூடவா‌? அதுவும் சக மாணவனிடம்‌. 

“வாங்கிக்கோப்பா… சக்திக்கு பெர்த் டே!” என்றாள். 

“ஐ க்னோ ஆன்ட்டி!” என்றவன் முகம் தெரியவில்லை. கண்கள் மட்டுமே தெரிந்தது. 

அவனிடமும் சக்தி கை நீட்டினான். இன்று எல்லாரும் அவனுக்கு கை கொடுத்துதானே வாழ்த்து சொன்னார்கள். பிரணவ் கை கொடுக்கவில்லை. தயங்கி சாக்லேட் மட்டும் எடுத்துக் கொண்டான். ஆனால் பிரிக்கவில்லை. மற்ற பிள்ளைகள் உடனே பிரித்து சாப்பிட ஆரம்பித்தனர். இவன் கையிலேயே வைத்திருந்தான். 

மகனை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். வெளியே வந்ததும், “ஏன்டா அந்தப் பையன் கை கொடுக்கல. நீ ஏதாவது அவன்கிட்ட சேட்டை பண்ணுனியா?” மகனைத்தான் சந்தேகப்பட்டாள். அவனிடம் ஏதாவது வம்பிழுத்திருப்பானோ. அதனால் தான் அவன் கை கொடுக்கவில்லை போல. வாங்கிய சாக்லேட்டையும் சாப்பிடவில்லையே என்று நினைத்தாள்.

“இல்லம்மா… அவன் என்னோட க்ளாஸே இல்ல. ஃபோர்த் ஸ்டான்டர்ட். ஆனா… அவன் ப்ரேயர்ல எங்க க்ளாஸுக்கு அடுத்து தான் நிப்பான். ஒரு நாள் மயங்கி விழுந்துட்டான். அதுலருந்து பிரேயருக்கு கூட வரமாட்டான்மா! எப்பவும் மாஸ்க் போட்டிருப்பான்” என்று சொல்ல ஏனோ மீண்டும் ஒரு முறை பிரணவை திரும்பிப் பார்த்தாள்.

அங்கும் அவன் தனித்து தான் அமர்ந்திருப்பதாகப்பட்டது. கொரானா காலத்து சோஷியல் டிஷ்டன்ஸ் இப்பவும் மெய்டெய்ன் பண்றானோ என்று கூட விளையாட்டு போல் நினைத்தாள். அவனையே சில கணங்கள் பார்த்திருக்க, இவள் திரும்பிப் பார்த்ததும் அவன் சிரித்திருப்பான் போல. மாஸ்க் போட்டிருந்ததால் தெரியவில்லை. ஆனால் அவன் கண்கள் பளிச்சிட்டதில் அவன் சிரிக்கிறான் என்பதை கணித்தாள். இவளும் பதிலுக்கு புன்னகைக்க, அவன் கை ஆட்டினான். இவளும் கை ஆட்டினாள். மகனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். 

பள்ளி ‌வளாகம் கடந்து கேட்டை விட்டு வெளியே வர, “ம்மா ஐஸ்கிரீம்!” எனறான் பள்ளி முன் நின்ற ஐஸ்கிரீம் வண்டியைப் பார்த்து. பிறந்த நாள் சலுகையாக வாங்கிக் கொடுத்து வண்டியில் இருவரும் கிளம்பினர். 

அடுத்து அரை மணி நேரமாகியது குருப்ரசாத் மகனை அழைக்க வர. மகனைப் பார்த்ததும் சாரி என்றான் அவனும்‌. 

“இதுக்கு தாம்ப்பா பைக்ல வரணும். இந்த ட்ராஃபிக்ல கார்ல வந்தா இப்படித்தான்.”

“ஓகே… ஓகே… மை டியர்” மகனிடம் சரண்டர் என்பது போல் இரு கைகளைத் தூக்கிக் கண்பித்தவன், பேக்கை எடுத்துக் கொண்டான். 

“டாட்… இதை சாப்பிடவா. இப்பத்தான் பெர்த் டேன்னு ஒருத்தன் கொடுத்தான்.” அவன் கையிலிருந்த சாக்லேட்டைப் காண்பிக்க,

“சின்னா… இந்த மாதிரி யார் கொடுத்தாலும் வாங்க கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல” சற்று அதட்டலாகக் கூறியதும் சிறுவன் முகம் சுருங்கிப் போயிற்று. அதற்காகவெல்லாம் பாவம் பார்த்து சாப்பிட சொல்லிவிடமாட்டான்.

அவனுக்கு சாக்லேட் பிரச்சினை இல்லை. கொடுத்தவனுக்கு சளியோ, காய்ச்சலோ அல்லது எளிதில் பரவக்கூடிய தொற்று ஏதாவது இருந்தால் கை‌ மூலமாக இவனுக்கு எளிதில் பரவும் தானே‌? அந்த பயம் தான் குருப்ரசாத்திற்கு. சிறு பிள்ளைகள். வாயில் கை வைத்து தும்முவது, மூக்கில் விரல் வைப்பது, கண்ணைத் துடைப்பது எல்லாம் சகஜம் தானே. தும்மினால் கையை சோப் போட்டு கழுவ வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் சொல்ல முடியாது. அதுவும் பள்ளியில் இதெல்லாம் சாத்தியமுமில்லை.

தன்னால் ஒரு சாதாரண தந்தையாக நடந்து கொள்ள முடியாததை நினைத்து உள்ளுக்குள் ஒரு நெருடல் இழையோடத்தான் செய்தது. என்ன செய்வது. தனது மகனும்‌ மற்ற பிள்ளைகள் போல் சாதாரணமானவன் கிடையாதே. தனக்கு பயந்துதான் சாக்லேட்டை அப்படியே வைத்திருக்கிறான் எனப் புரிந்தது. 

இதற்காகவே குருப்ரசாத் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கூட தவிர்த்து விடுவான். அத்தை பிள்ளைகள் கூட இவனுக்கு ஃபோனில் வாழ்த்து தெரிவிப்பதோடு சரி. 

“உன் வீட்டுக்கு வர்றதா இருந்தா என் பிள்ளைகளுக்கு மெடிக்கல் சர்டிஃபிகேட் வாங்கிட்டுதான்டா வரணும். கொரானா ஊரடங்கு உத்தரவு மாதிரி இருக்கு உன் வீட்டுக்கு என் பிள்ளைக வர்றது!” என்று‌ விஷாலி கூட தம்பியை நக்கல் செய்வதுண்டு. இருந்தாலும் தம்பி மகனின் உடல்நிலை பற்றி தெரியும்‌. தம்பியின் மெனக்கெடலும் தெரியும். அவனின் ஆதாரமே அவன் பிள்ளைதான். அதனால் தம்பி போடும் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு போவாள். அங்குதான் இவர்கள் செல்வதில்லையே ஒழிய, நேரம் கிடைக்கும் போதெல்லாம் அக்கா மகன்களை அவர்கள் வீட்டிற்குச் சென்று பார்க்க தவறமாட்டான். சிறுபிள்ளையில் அவர்கள் தானே இவனுக்கு டைம் பாஸ். விஷாலிக்கு இரண்டும் ஆண் மக்களே.

“இது நான் எடுத்துக்கறேன் சின்னா. உனக்கு வேற வாங்கித் தர்றேன். ஆனா கொஞ்சமாத்தான் எடுத்துக்கணும்” என்று அவன் கையிலிருந்து சாக்லேட்டை வாங்கி பேன்ட் பாக்கெட்டுள் போட்டுக் கொண்டான். பிரணவுக்குத் தெரியும். இதுதான் நடக்குமென்று‌. அதனால் தான் அவன் பிரித்துச் சாப்பிடவில்லை.

ஆனால், சாக்லேட்டை அவன் எடுத்துக் கொண்டதால் இன்று மகனுக்காக அவனே கேக் செய்து தருவான் என்பது உறுதி. அந்த சந்தோஷம் பிரணவுக்கு. 

ஒரு டம்ப்ளர் தண்ணீர் கூட அவன் இருக்கும் இடத்திற்குதான் கொண்டு வந்து தரவேண்டும். அப்படித்தான் ஜமுனா மகனுக்குப் பழக்கியிருந்தார். திட்டிக் கொண்டே என்றாலும் விஷாலியும் அதைத்தான் தம்பிக்கு செய்தாள். அடுத்து வந்த அவனது சிலக்காவும் மாமியார் பழக்கத்தை வழி மொழிந்தாலே ஒழிய அவனை மாற்றவில்லை. சொகுசு பார்ட்டி நம்ம குரபிரசாத்காரு. ஆனால் இப்பொழுது மகனுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அவனே கற்றுக் கொண்டு செய்து கொடுக்கிறான். கடையில் எதுவும் வாங்கிக் கொடுக்கமாட்டான். 

“அன்னைக்கி அவங்க அம்மாகூட சிக்னல்ல பாத்தோம்ல டாட். அவனுக்குதான் இன்னைக்கி பெர்த் டே” என்று சொல்ல குருவிற்கு சரியாக நினைவில்லை. ட்ராஃபிக்கில் எத்தனையோ பேர் கடந்து செல்வார்கள். மகன் சிலரை என் ஸ்கூல், என்னொட க்ளாஸ்மேட் என யாரையாவது கை காண்பிப்பான். எல்லாரையுமா நினைவில் வைத்துக் கொண்டிருப்பான். 

அதுவுமில்லாமல் குருப்ரசாத்திற்கு வேறொரு சிந்தனை. மகனை அழைக்க வரும் வழியில் மருத்துவர் அவனை அழைத்திருக்க அவரை சந்தித்துவிட்டு வந்திருந்தான். அதனால் தான் மகனை அழைக்க வர தாமதமாயிற்று. அந்த சிந்தனையில் உழன்றதால் மகன் யாரை நினைவூட்டினான் என சரியாக நினைவில்லை. ஆனால் பிரணவிற்கு ஞாபக சக்தி அதிகம். 

*****

“சக்தி…” என்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்த அனு, அடுத்த நிமிடம், அப்பொழுதுதான் சோஃபா அடியிலிருந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்த ஜீவனைப் பார்த்து, “ஹேய்ய் பூனைக்குட்டி!” என சந்தோஷக் கூச்சலிட, 

“உப்புமா.. அதைப் பிடி!” என்றான் அரவிந்த். 

அவள் குனிய மீண்டும் அடியில் தலையை இழுத்துக் கொண்டது. 

“என்ன உப்புமா? நீயும் விட்டுட்ட?” சலித்துக் கொண்டான். 

“அப்போ உங்களுக்கும் டிமிக்கி கொடுத்துருச்சா?” என்று சொல்லிக் கொண்டிருக்க, விருட்டென வெளியே ஓடியது. 

“பிடி… பிடி… பிடி…” என கத்த, இவர்கள் அதை துரத்த, அந்த நேரம் அந்தப் பக்கமாக வந்த செக்ரட்டரி பார்வையில் விழுந்தது‌‌.  

“என்னதிது ஒரே கூச்சல்?” புறங்கை கட்டியவாக்கில், வாசலில் நின்று கேட்கவும், ஓடிய பூனை சக்தி கையில் சிக்கவும் சரியாக இருந்தது. 

“மாமா… புடிச்சுட்டேன்” என அவர் கண்முன்னே தூக்கி காட்டினான்.

“செத்தோம்டா!” என்றான் அரவிந்த் வாய்க்குள். இனி இந்தம்மா லெக்சரை வேறு கேட்க வேண்டுமே. 

“வாட் இஸ் திஸ். எங்க அபிராமி? பெட்ஸ் அலோவ்ட் இல்லைனு தெரியாதா? ரூல்ஸ் படிக்கலையா?” அப்படியா இப்படியா என அவர் பாட்டிற்கு கூச்சல் போட, விளக்கேற்றி வைத்துவிட்டு அபிராமி அப்பொழுதுதான் வெளியே வந்தாள்.

“என்ன அபி இது?” என்றார் அவளிடமும். 

“இந்தம்மாவுக்கு கண்ணு நொள்ளையா? பூனைகூடவா தெரியல?” வாயை‌மூடிக் கொண்டு கமுக்கமாக சக்தியிடம் கிசுகிசுத்தாள் அனுபமா. 

“இது நர்சரிக்காக வாங்கிருக்கு மேடம். நாளைக்கு நர்சரி கொண்டு போயிறுவேன்” என்றதும் சக்தி முகம் வாடிவிட்டது. 

“ஓகே.. ஓகே… இன்னொரு தடவை இதை இங்க பாக்க கூடாது!” ஏதோ பெரிய மனது பண்ணி எச்சரித்து சென்றார்.

அவர் அகன்றதும், “டேய் சக்தி! இந்தம்மாவப் பாத்தா ஸ்கூல்ல பிரின்சிபல்ஸ் எல்லாம் ரவுன்ட்ஸ் வருவாங்கல்ல. அது மாதிரியே இருக்குடா. இபப் கூட பாரு. அபார்மென்ட் ஃபுல்லா ரவுன்ட்ஸ் வந்நுட்டு போகுத. ரூல்ஸ் ராமானுஜம்” என்று கேலி பேச சக்திக்கு அது கவனத்தில் இல்லை.

“மா… இது நர்சரிக்கா?” என்றவன் குரல் உள்ளிறங்கியது. 

“ஆமாடா… இங்க வச்சுக்க முடியாதுல்ல. இப்பவே பாரு. அந்தம்மா எப்படி பேசிட்டு போறாங்க. அங்க எலித்தொல்லை இருக்குல்ல. செடியெல்லாம் தோண்டி வச்சறுது. அதுக்கு தான்டா பூனை. ஆனா உனக்கு பெர்த் டே கிஃப்ட் தான்” என்றதும்,

“போங்க… எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கோபம் வந்துவிட்டது சக்திக்கு. கையில் இருந்த பூனையை அப்படியே தூக்கிப் போட, அது பந்து போல் தரையில் குதித்து மறுபடியும் சோஃபா அடியில் தஞ்சம் புகுந்தது. அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“என்னக்கா… அவன் எவ்வளவு ஆசையா இருந்தான். இதை நாளைக்கு சொன்னாத்தான் என்ன? அவன் மூட ஸ்பாயில் பண்ணிட்ட!” அரவிந்தும் அக்காவைக் கடிய, 

அவளும் இன்றைக்கே சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. செகரட்டரி வந்து கேட்கவும் நர்சரிக்கு என்று சொல்லிவிட்டாள். இல்லையென்றால் அந்தம்மா ஒருபாட்டு பாடியிருக்கும். 

“டேய் சக்தி… கதவைத் திறடா! இதென்ன பிடிவாதம்? அங்க இருந்தா தான்டா இதுக்கும் ஃப்ரீயா இருக்கும்” அரவிந்த் மீண்டும் மீண்டும் கதைவத் தட்ட அவனிடம் பதிலே இல்லாமல் போக,

“சரி விடுக்கா… அது இங்கேயே இருக்கட்டும். நீயும் நர்சரி போயிறுவ. அவனும் ஸ்கூலுக்கு போயிறுவான். நானும் கிளினிக் போயிறுவேன். அது வீட்டுக்குள்ள டாய்லெட் போய் வச்சிருந்தா ஸ்கூல் விட்டு வந்து க்ளீன் பண்றது அவனோட பொறுப்பு. நீ எதையும் கண்டுக்காதே” என்று அரவிந்தன் சொல்ல இதை யோசிக்கவில்லையே அவன். 

மாமன்காரன் கூறியதெல்லாம் சரிதானே‌? பகலெல்லாம் யாரும் வீட்டில் இருக்கப் போவதில்லை. யார் அதை பார்த்துக் கொள்வது. நர்சரியில் தான் அம்மா, பிரியாக்கா, கண்ணையன் தாத்தா எல்லாரும் இருக்கிறார்கள். இதுவும் அங்கேயே இருக்கட்டும்.’ மனதை தேற்றிக் கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தான். 

அவன் கோபமாக கதவடைத்தது பிடிக்காமல் இப்பொழுது இவள் முகம் திருப்ப, அம்மாவை சமாதானப் படுத்துவது இப்போது இவன் முறையாயிற்று. 

அனுபமாவும், அரவிந்தும் வேடிக்கை மட்டுமே பார்த்தனர். இது எப்போதும் நடக்கும் கூத்துதானே என்ற பாவனையில். சக்தி தாவாய் பிடித்து கெஞ்சுவதும், அபிராமி முகம் திருப்புவதும் பார்க்கவே ஒரே கூத்துதான் இவர்களுக்கு. 

“அச்சோ…பூனை” என்று வீச்சென்று கத்தியதில் தான் நால்வரின் கவனமும் கலைந்தது. 

அப்பொழுதுதான் உள்ளே வந்த அனுப்ரியா, சோஃபா அடியிலிருந்து தலையை நீட்டிய பூனையைப் பார்த்து கத்தினாள்‌. 

“போச்சுடா… இவளுக்கு பூனைனா ஆகாதே!” என்றாள் அனுபமா. 

“ஏன்?” அரவிந்தன் ஆர்வமாகக் கேட்க, 

“அது ஒரு பெரிய கதை. அதை அப்பறம் சொல்றேன். இப்ப கேக் கட் பண்ணலாமா? எனக்குப் பசிக்குது. இந்த கேக்கை எதிர்பாத்து வீட்ல சாப்பிடக்கூட இல்ல” என்று அனு கேட்டதும் தான் அனுப்பிரியா கேக்கோடு வந்ததே தெரிந்தது‌. 

அவளது தோழி ஒருத்தி, வீட்டிலேயே சிறிய அளவில் தரமான கேக் தயாரித்து விற்பனை செய்ய அவளிடமே கேக் ஆர்டர் கொடுத்திருந்தாள். எவ்வித செயற்கை சுவையூட்டியோ, நிறமூட்டியோ இல்லாக கேக். 

சக்தி அம்மாவின் முகம் பார்த்தான். “போ… புது ட்ரெஸ் போட்டுவா!” என்றாள். அப்பவும் முகத்தில் சிறிது கோபத்தை ஒட்டவைத்திருந்தாள்‌. அவள் கூறியதும் சந்தோஷமாக உடை மாற்றச் சென்றான். 

“குளிச்சுட்டு மாத்திட்டு வாடா!” என்றாள் வெளியே இருந்தபடியே. 

“இது கொஞ்சம் ஓவர்க்கா. ரொம்ப அவனை இறுக்கிப் பிடிக்கிற. கொஞ்சம் லூஸ்ல விடு. சின்னப்பையன் தானே?” என்றான் அரவிந்தும்‌. 

“நீ ஒருத்தன் செல்லம் கொடுக்கறது போதும்டா” என்றவள்.

“பிரியா கேக் எடுத்து வைம்மா. அவனை ரெடி பண்ணி கூட்டிவர்றேன்” என்று மகனை கவனிக்க செல்வது போல் உள்ளே எழுந்து சென்றாள்‌. 

அவளுக்கும் தெரிகிறது. என்ன செய்வது பொம்பளை வளர்த்த பிள்ளை என்று பெயர் வாங்கிவிடக் கூடாதே. தாயின் அனுசரணையோடு சேர்த்து தந்தையின் கண்டிப்பையும் ஒரு சேரக் காட்டவேண்டிய நிர்பந்தம். சில சமயங்களில் அவளையும் அறியாமல் கண்டிப்பின் வீசம் கூடிவிடுகிறது‌. 

சாப்பாட்டு மேஜையையே ஹாலுக்கு இழுத்து வந்தான் அரவிந்த். நால்வர் சாப்பிடும் அளவேயான சிறியளவு மேஜை. அதில் கேக்கைப் பிரித்து வைத்து, நடுவில் மெழுகுவர்த்தியை குத்தி வைத்தாள் அனுப்ரியா. 

“ஏன் உனக்கு பூனைனா பிடிக்காது?”

“அதுவா… அது ஒரு நாள்” என்று சகஜமாக கதைபோல் சொல்ல ஆரம்பித்தவள் சட்டென நிறுத்தினாள்‌. அப்பொழுதுதான் தான் அரவிந்தன் அருகில் நிற்பதையே கவனித்தாள்‌‌. அரவிந்தன் அவள் அருகில் நிற்கிறான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மொத்தத்தில் இருவரும் அருகருகே. தோளுரசும் தூரத்தில். சட்டென அவளுக்குள் ஏதோ ஒரு ரசாயன மாற்றம். அவள் நிறுத்தியதும், இவன் என்ன என்பது போல் பார்க்க, அவள் தலை இடவலமாக ஆடியதே ஒழிய பதில் இல்லை. அவனையே பார்த்திருந்தாள். அவனும் இதழ்கடையில் சிரிப்பு இழையோட அவளைத்தான் பார்த்திருக்க, கண்கள் கதை பேச ஆரம்பிக்கும் முன், 

“புடிச்சுட்டேன்” அனுவின் திடீர் கூச்சலில் இருவரது மோனநிலையும் சட்டென அறுபட்டது. அனுபமா கைகளில் மீண்டும் சிக்கியது பூனைக்குட்டி. 

“அண்ணா… இது கண்ணைப் பார்க்க அப்படியே நம்ம சக்தி கண்ணு மாதிரியே இருக்குல்ல!” என்று கேட்க,

“அடியேய்… அவனுக்கு தான் பூனைக்கண்ணு. இதுக்கில்ல” பிரியா சொல்லிக் கொண்டிருக்க கதவைத் திறந்து அபிராமி மகனோடு வரவும் சரியாக இருந்தது‌. பிரியா, ‘இவனுக்குதான் பூனைக்கண்ணு’ என்றது அவள் காதில் விழ, தம்பியும் அக்காவைத்தான் பார்த்தான்‌. எத்தகைய பிரதிபலிப்பும் இல்லை. அவள் முகம் நிச்சலனமாய் இருக்க, ஆழ்ந்த பெருமூச்சு மட்டுமே அரவிந்தனிடம்.

“வாவ்… சூப்பர்டா… என்னோட ஃபர்ஸ்ட் க்ரஷ் நீ தான். உன்னோட கண்ணுக்காவே. இன்னும் ஒரு அஞ்சாறு வருஷத்துல கேர்ள்ஸ்கிட்டருந்து நீங்க இவனை பாதுகாக்க ரொம்ப மெனக்கெடணும்க்கா” என்று அனு அவனை சிலாகிக்க, அபிராமி முகத்திலும் தாராளமாய் புன்னகை விரிந்தது. முக்கால் அளவிற்கு கருநீல நிறத்தில் சைடில் இரண்டு வெள்ளை கோடுபோட்ட ட்ரவுசரும், அதே நீல நிறத்தில் மேல் பாதியளவும், கீழ் பாதியளவு வெள்ளையுமாக வட்டக்கழுத்து டீ சர்ட்டும் காலில் அதே வெள்ளை, நீலம் கலந்த ஸ்நீக்கர்ஸும் அணிந்து படு ஸ்டைலாக வந்தவனைப் பார்த்து… அனு, கன்னம் வழித்து நெட்டி முறிக்க, சக்திக்கோ முகமெல்லாம் வெட்கம் பூத்தது. அந்த வெட்கத்தைப் பார்த்து மீண்டும் “ச்சோஓஓஓ… ச்வீட்” என கன்னத்தை இழுத்து கிள்ளி முத்தம் வைக்க, 

“அக்கா” என சிணுங்கியபடி வலித்த கன்னத்தை துடைத்துக் கொண்டான். சிவந்துவிட்டது. 

“அடேய்… என்னடாயிது உனக்கு இப்படி சிவக்குது?” என்று அதற்கும் கிள்ள வர, சட்டென அம்மா பின்னால் ஒழிந்து கொண்டான். சிரிப்பு எல்லார்‌ முகத்திலும். 

“அனு… என்னடீ! சின்ன பையன்கிட்ட போய்… கிரஷ்… அது இதுன்னுட்டு” அனுப்பிரியா தங்கையைக் கண்டிக்க, 

“அதானே… உன்னை மாதிரி, என்னை மாதிரி வளந்த பையன்கிட்ட சொல்லாம சின்ன பையன்கிட்ட சொல்றா பாரு!” என்றான் ரகசிய குரலில். அவளும் இதே வயதில் தானே இவனிடம் காதலிப்பதாக சொன்னாள். அந்த வயதில் பிரியாவின் கிரஷ் அரவிந்தனாகத்தானே இருந்தான். அய்யோ என மானசீகமாகத் தலையில் அடித்துக் கொள்வதைத் தவிற வேறொன்றும் இப்போதைக்கு செய்ய முடியாது. 

“இப்போ கிரஷ்ஷ மாத்திட்டியா என்ன?” ரகசியமாக கேட்க, கோபமாக திரும்பி பார்த்தாள். 

“இல்ல… கிரஷ் வேற யாராவது இருக்காங்களான்னு கேட்டேன்?” இழுவையாய் கேட்க, 

“ம்ம்ம்… ஆமா…‌ ஒன்னு இல்ல… நிறைய கிரஷ் இருக்காங்க” என்றாள் அதீத கோபத்தோடு. அந்த கோபமே அவனுக்கு புன்னகையை வரவழைத்தது. 

இவள் கோபம் பார்த்து அவன் சிரிக்க, ‘லூசாப்பா நீ?’ என்பது போல் பார்த்து வைத்தாள். 

“நீ நினைக்கிற மாதிரி லூசாத்தான் ஆயிட்டேன் போல?” என்று சொல்ல, ‘நம்ம மைன்ட் வாய்ஸ் இவனுக்கு எப்படி தெரிஞ்சது’ எனும்படி அதிர்ந்து பார்த்தாள்‌. 

அதற்குள் சக்தி கேக் வெட்ட தயாராக, மாமன்காரன் மெழுகுவர்த்தியை ஏற்றிவைக்க, சக்தி ஊதி அணைக்க, நால்வரும் கைதட்டி வாழ்த்து பாடினர். அக்கம் பக்கம் கூட யாரையும் அழைக்கவில்லை. அழைத்தால் அதற்கென்று மீட்டிங் ஹாலில் வைக்க அனுமதி வாங்க வேண்டும். ரொம்ப சத்தமிருக்கக்கூடாது. அதிகம் குப்பை போடக்கூடாது, இத்தனை மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும் என ஆயிரத்தெட்டு அபார்ட்மெண்ட் ரூல்ஸ். இது மட்டுமில்லாமல் யாராவது ஒன்றிரண்டு பேர் சக்தியின் அப்பா பற்றி துருவக்கூடும். எதற்கு தொல்லையை எடுத்து தோளில் போட்டுக் கொள்வானே என்றுதான் வீட்டளவில் அதுவும் பிரியா, கேக் நானே வாங்கி வருகிறேன் என்று சொல்லவும் இந்த எளிய ஏற்பாடு. 

கேக்கை வெட்டி அம்மாவுக்கு ஊட்டிவிட்டு அடுத்து மாமனுக்கு ஊட்டியதை அப்படியே பிரியாவிற்கும் ஊட்ட வர, அவள் ஒரு கணம் தயங்கினாள். அவள் பார்வை அரவிந்தனை‌ ஏறிட்டது. அவளது தயக்கம் பார்த்தவன், சக்தி கையிலிருந்ததை வாங்கி அபிராமியிடம் கொடுத்தான். இன்னொரு துண்டு கேக் வெட்டி சக்தியிடம் கொடுத்தான். அதை பிரியாவிற்கு ஊட்டிவிட்டு அடுத்து அனுபமாவிற்கு ஊட்ட முற்பட, அதை வேகமாக அரவிந்தன் வாங்கிக் கொண்டு, இன்னொரு துண்டை எடுத்து நீட்டினான். “இதை ஊட்டிவிட்டு அப்படியே அனு கைல கொடுத்துறு” என்று, பேப்பர் ப்ளேட் ஒன்றையும் அவன் கையில் கொடுத்தான்.

பிரியாவிற்கு ஊட்டியதை எடுத்துக் கொண்டவன், ‘‘நான் கடிச்சதை சாப்பிட அவ்ளோ யோசிச்சல்லே. இப்ப என்ன செய்வ’ என்பதுபோல் அவளைப் பார்த்தான். 

‘இதுக்கு அவன் கொடுக்கும் போதே வாங்கியிருக்கலாம்.’ நாசூக்காய் தலையில கை வைத்துக் கொண்டாள். 

“என்ன… அவன் முதல் தடவை கொடுக்கும் போதே வாங்கியிருக்கலாம்னு தோனுதா?” என்று‌ கேட்க, ‘அய்யோ! சாமி! இவர் முன்னாடி மைன்ட்ல நினைக்க கூட முடியலையே’ நொந்து நூடுல்சானாள் பிரியா. 

மீதி இருந்த கேக்கை வெட்டி ஒரு பாக்சில் போட்டு பூங்காவனத்திற்கும், கண்ணையனுக்கும் கொடுத்து அனுப்பினாள்.

*****

தூங்கும் மகனையே பார்த்திருந்தான் குருபிரசாத். உடையை மாற்றக்கூட மனமில்லை. மனம் கனத்துக் கிடந்தது. இன்று மருத்துவர் கூறியதே மனதிற்குள் உழன்று கொண்டிருந்தது. 

“நல்லா யோசிங்க பிரசாத். உங்களுடையதும் மேட்ச் ஆகல. ஒரு வேளை அம்மாவுடையது மேட்ச ஆகலாம். நீங்க ஏன் அவங்களை ஒரு தடவை கான்டாக்ட் பண்ண முயற்சிக்கக் கூடாது. ஒரு சான்ஸ்தானே. முயற்சி பண்ணி பாக்கலாமே. நான் அவன் முன்னாடி சொல்லக் கூடாதுன்னுதான் அவன் வெய்ட் இன்க்ரீஸ் ஆகிருக்குனு பொய் சொன்னேன்.” என்றதும் அது அன்றைக்கே அவனுக்கும் புரிந்தது. அவனும் தானே ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்தான். அதிகம் இல்லை என்றாலும் எடை குறைந்துதான் இருந்தான். எடை கூட வேண்டாம். ஆனால் குறையாமலாவது இருக்கலாமே. மனதை இறுக்கிப் பிடிக்க, ஆழ்ந்த பெருமூச்சுதான் அவனிடம். ஐந்து வருடங்களாக மகன் போராடுகிறான். நோய் அதன் தீவிரத்தை நோக்கி சென்று கொண்டிருக்க, இவனுக்கோ எல்லா வழிகளும் அடைத்த நிலை. மனம் வெகுவாக துவண்டு விட்டது. 

அவன் அமைதியாகவே இருக்க, “புரியுது பிரசாத். அவங்க ஃபேமிலி லைஃப் டிஸ்டர்ப் பண்ணமாதிரி ஆகும்னு யோசிக்கறீங்கதானே” என்றதும் அவனது இறுகிய தோற்றமே அதை ஆமோதித்தது. 

அவளை கண்டுபிடிப்பது ஒன்றும் குருப்பிரசாரத்திற்கு அத்தனை சிரமமில்லை. இவன் மனது வைத்தால் போதும். அடுத்த நொடி அவள் இருக்கும் இடம் தெரிந்துவிடும். ஆனால் ஏதோ ஒன்று தடுத்தது. 

படுக்கைவிட்டு எழுந்தவன், உடையை மாற்ற, தனது பேன்ட்டில் கைவிட்டவன் கையில் சாக்லேட் தட்டுப்பட்டது. எடுத்து அவனது அறைக்குள் ஓரமாக இருந்த சிறிய குப்பைக் கூடையில் போட எத்தனித்தவன் கை அப்படியே நின்றது. 

“பெர்த் டேக்கு குடுத்ததுப்பா” என்ற வார்த்தைகள் செவியில் ஒலிக்க, இது ஒரு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்ட இனிப்பு. அதை குப்பையில் சேர்க்க மனம் வரவில்லை. பிரித்து வாயில் போட்டுக் கொண்டவன் மனம், Wishing you a long life filled with happiness and good health child என வாழ்த்தியது. கசந்த மனதோடு வாயில் போட்டுக் கொண்ட சாக்லேட் கரைந்து தொண்டையில் இறங்கியது தித்திப்பாய். 

ஆழ்ந்து உறங்கும் மகனை அணைத்துப் படுத்திருந்தவளும் அவனது மூடிய விழிகளின் மீது இதமாக இதழொற்றி எடுத்தாள். விழிகளில் உவர்நீர் உபரியாய் உதிர்ந்தது. 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 6

6காலை வெயில் கண்ணாமூச்சி ஆடும் சிறுபிள்ளை போல் மெதுவாக சன்னல் திரை விலக்கி எட்டிப் பார்த்தது‌. ஏசியின் குளுமையையும் மீறி வெப்பம் முகத்தில் அறையவும் தான் மெதுவாக தூக்கம் கலைந்தது குருப்பிரசாத்திற்கு‌. புருவம் சுழித்தது. ஒரு கண்ணைச் சுருக்கி, மறுகண்ணை மெதுவாகத்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 8 கருத்துகள் உள்ளன

  1. Super.. apdi enna sonanga dr..aduvum amma vandu panra madri..enaku oru vishayam Puriyala..ivanga twins thane…apa rendu perkum ore nal birthday Ilaya.

    1. போகப் போகத் தெரியும்… இந்த கதையின் போக்கு புரியும்… 😂🤣 (ராகத்தோட படிச்சுக்கோங்கம்மா )
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  2. அப்பாவின் வாழ்த்து தென்றல் கொண்டு போய் சேர்க்கட்டும் மகனிடம்.
    சூப்பர் டூப்பர் கதை ஜி❤️
    அடுத்த எபி எப்போ..?

உங்கள் கருத்தைப் பகிருங்கள்