arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 6

என் வீட்டு தோட்டத்தில் 6

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

6

காலை வெயில் கண்ணாமூச்சி ஆடும் சிறுபிள்ளை போல் மெதுவாக சன்னல் திரை விலக்கி எட்டிப் பார்த்தது‌. ஏசியின் குளுமையையும் மீறி வெப்பம் முகத்தில் அறையவும் தான் மெதுவாக தூக்கம் கலைந்தது குருப்பிரசாத்திற்கு‌. புருவம் சுழித்தது. ஒரு கண்ணைச் சுருக்கி, மறுகண்ணை மெதுவாகத் திறந்து பார்த்தான். சட்டென கண் கூச கை வைத்து மறைத்தான். கிழக்குப் பக்கமிருந்து பால்கனி வழியாக காலை வெயில் தாராள மயமாக்கலை தொடங்கியிருந்தது. ஆடிபிறந்து, அரை மாதத்தைக் கடந்தும் ஆதவனுக்கு அப்படி என்னதான் பூமிப்பெண் மீது விரோதமோ… ஆயிரம் கரங்கள் விரித்து ஆக்ரோசமாய் தழுவிக் கொள்கிறான் பூமிப்பெண்ணை. இந்த வருடம் எல் நினோ எல்லோரையும் வச்சு செய்து. 

இரவில் ஏதேதோ எண்ணங்கள். எண்ணம் தந்த அலைக்கழிப்புகள். அலைக்கழிப்பு தந்த ஆயாசம் என எல்லாம் சேர்ந்து தூக்கத்தை வெகுவாக காவு வாங்கியது. எப்பொழுது தூங்கினான் என்றே தெரியாது. விடிந்தது கூடத் தெரியவில்லை. மணி எட்டு. இப்படித் தூங்கி பலவருடங்களாகிவிட்டது. துக்கம் எப்பொழுதும் தூக்கத்தை துணைக்கழைத்து வரும். இவன இப்படியே விட்டா நம்மலப் போட்டுத் தள்ளிறுவான்ற பயத்தில், ஓவர் டைம் பார்க்கும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ள மூளை செய்யும் சாகசம் தான் தூக்கம். 

படுத்தபடியே திரும்பி மகனைப் பார்த்தான். வாரவிடுமுறை என்பதால் அவனை எழுப்பவில்லை. தூங்கட்டும் என விட்டுவிட்டான். 

காலையிலேயே தலை பாரமாய் அழுத்துவது போலிருந்தது. அதற்கு இன்னொரு காரணம் வார இறுதி என அவன் முன்னிரவு எடுத்துக் கொண்ட மதுதான். எப்பொழுதும் இல்லையென ஹீரோவுக்கு முட்டுக் கொடுக்கவில்லை. கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் ஜாலிக்கு என ஆரம்பித்தது, இப்பொழுது மன நிம்மதிக்கு என வாராந்திறமாகிவிட்டது. முன்தின இரவும் தூக்கம் வராமல் மாதுவின் நினைவு அவனை அலைக்கழிக்க மதுவின் உதவியை நாடவேண்டியதாய்ப்போயிற்று. மகன் அசந்து உறங்கிய பிறகுதான் அதுவும். 

இரவில் தூங்கும் முன் நம்மை அலைக்கழிக்கும் எண்ணங்களே விடிந்ததும் நம்மை ஆட்கொள்ளும். ‌‌அதேதான் குருபிரசாத்திற்கும். மருத்துவர் கூறியதே மீண்டும் அவனுக்குள். “உங்களுடையது மேட்ச்‌ ஆகல பிரசாத். அம்மாவுடையது மேட்சாகலாம். பிரணவோட கேஸ் ஹிஸ்டரி தெரியும் பிரசாத். முடிஞ்சா அவங்களை காண்டாக்ட் பண்ணிப் பாருங்களேன்! ட்ரை பண்ணிப் பாக்குறதுல தப்பில்லையே? பிரணவ் லைஃப் தான் முக்கியம்!”

மீண்டும் மீண்டும் மூளைக்குள் ரீவைண்ட் ஆக, எத்தனை வருடங்களாயிற்று. எங்கே எனத் தேடுவது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அதொன்றும் அத்தனை கடினமில்லைதான். தேடினாலும் இதற்கு அவள் ஒத்துக் கொள்ள வேண்டுமே. அவள் ஒத்துக் கொண்டாலும் அவள் குடும்பம் ஏற்றுக் கொள்ள வேண்டுமே. அவளுக்கென்று ஒரு குடும்பம், குழந்தையென இருப்பவளை எப்படி தொந்தரவு செய்ய முடியும்?

ஆனால், வேறு வழியில்லை. மகனுக்காக மெனக்கெடத்தான் வேண்டும். அவளுக்கும் மகன்தானே. அந்தப் பாசம் துளிகூடவா இருக்காது என நினைக்க அந்த நினைப்பே அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. உனக்கே இது முட்டாள்தனமாக இல்லையா என மனசாட்சி கேள்வி கேட்க, அவனையும் மீறி விரக்தியில் இதழ்கள் விரிந்தது. விழிகளைத் தீண்டாத, உயிர்ப்பில்லா வெற்றுச் சிரிப்பு.

ஆழ்ந்து மூச்செடுத்தவன், வெறுமை தனக்குள் இட்டு நிரம்புவதை விரும்பாதவனாக எழுந்து குளியலறை சென்றான். குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக் கழுவினான். சில்லென நீர் முகத்தில் பட்டதும் சிந்தனை வலையில் சிக்கி இறுகிய மூளை சற்றே தன்னை தளர்த்திக் கொண்டது. கண்ணாடியில் தன்னைப் பார்த்தான். தூக்கமின்மை கண்ணுக்கடியில் கருவளையம் போட்டிருந்தது. கண் மஞ்சள் பூத்திருந்தது. மூன்று நாள் தாடியோடு இருந்தான். சொரசொரப்பான கன்னத்தைத் தேய்த்துக் கொண்டான். 

“அச்சோ… பாவா… பொடுஸ்த்துந்தி. இப்படியா தேவதாஸ்லாக கட்டம் பெஞ்சுத்தாறு. ஷேவ் செய் பாவா!” (அச்சோ… பாவா குத்துது. இபப்டியா தேவதாஸ் மாதிரி தாடி வளப்பீங்க. ஷேவ் செய் மாமா)

அவனது கைச் சிறையில் சிறைப்பட்ட சிலக்க, மூக்கைச் சுருக்கி சிணுங்க, மீண்டும் தாவாயை அவள் கன்னத்தில் தேய்த்து அவளைச் சீண்டி சிவக்கவிட்டது நினைவிலாட அவன் முகம் மந்தகாசித்தது‌. இதழில் மெல்லிய புன்னகை இழையோடியது. தாராளமாக அவன் வாய்விட்டு சிரித்து எத்தனை நாட்களாயிற்று.  இறுதியில் இவனை தேவதாஸாகத்தான் ஆக்கிவிட்டு அவனது சிலக்க பறந்துவிட்டாள். 

“சிலக்க… சிலக்கனி பிலுஸ்த்துன்னாரு காதா. (சிலக்கன்னு கூப்புடறீங்கல்ல) ஒக்க ரோஜு(ஒரு நாள்) அவள் பறந்து போனாளே… எனை ‌மறந்து போனாளேன்னு பாடப் போத்துன்னாரு.” சொல்லிவிட்டு கிளுக்கி சிரித்தவளை வாயிலேயே பட்டென ஒன்று வைத்தான்.

யார் சொன்னது நெருப்பு என்றால் வாய் சுடாது என. சுட்டது ஒரு நாள். அவனது சிலக்க அவனை விட்டு ஒருநாள் பறந்துவிட்டது. 

ட்ரிம்மரை கையில் எடுத்தான். தாடியை ட்ரிம் செய்து ஒழுங்குபடுத்தினான். மீசையை அளவாக கத்தரித்தான். இப்பொழுது தான் அவன் முகம் அவனே பார்க்கும்படி இருந்தது. எழுந்ததே தாமதம் என்பதால் ஒரேடியாக குளித்து வெளியே வந்தான். 

படபடவென கதவு தட்டும் சப்தமும், கூடவே… “மாமா… மாமா” என்ற அழைப்பும் கேட்க, சட்டென முகம் மலர்ந்தது. 

அந்த சப்தத்தில் பிரணவும்கூட விழித்துவிட, 

“ஒச்சாட்லே… நீ ஜிகிரி தோஸ்த்துலு” என்றான் மகனிடம். டீ சர்ட்டை தலைவழி மாட்டிக் கொண்டே கதவைத் திறக்க, கதவோடு சேர்த்து அவனையும் தள்ளிக் கொண்டே உள்ளே ஓடி வந்தனர் ரோஹித் மற்றும் சாய்கிரண். 

“இன்னும் தூங்குறான்டா!” படுக்கையிலிருந்தவன் போர்வையை சின்னவன் இழுக்க, பெரியவன் பிரணவை கை பிடித்து எழுப்பி உட்காரவைத்தான். 

“டேய்… ஹேன்ட்‌ சானிடைஸ்” என குருப்ரசாத் ஆரம்பிக்கும் முன்,

“மாமா… அதெல்லாம் வந்தவுடனே சானிட்டைஸ் பண்ணிட்டோம். எங்களுக்குத் தெரியாதா?” என்றான். அது வழக்கமாகி விட்டது இவர்களுக்கு. ஒருவன் பனிரெண்டாவது. ஒருவன் பத்தாவது. அதனால் சொல்லாமலே மாமன் மகனுக்காக பொறுப்போடு நடந்து கொள்வர். இல்லையென்றால் விஷாலி இங்கு அழைத்து வரவே மாட்டாளே. 

அவளும் அம்மா வீட்டிற்கு வந்து வெகுநாட்களாகிறது. பிள்ளைகளும் வளர்ந்து பெரிய வகுப்புகளுக்கு சென்றுவிட டியூஷன், எக்சாம், கணவனுக்கு பிசினஸில் உதவியென வெளியேற நேரமில்லாமல் போய்விட்டது. இன்று அதிசயமாக சத்யநாராயணனே அம்மா வீட்டிற்கு விஷாலியை கிளம்பச் சொன்னான்.

விஷாலியை திருமணம் செய்து கொடுத்தது திருத்தணியில். சென்னையில் சத்யநாராயணனுக்கு ஒரு வேலையிருக்க, விஷாலி, பிள்ளைகளையும் கிளம்பச் சொன்னான். அவனுக்கும் மாமியார் வீடு சென்று வெகு நாட்களாகிவிட்டது என தோன்றியிருக்கும் போல.

சிறுவயதில் இரண்டு நாட்கள் வார விடுமுறை என்றால் கூட இவர்களுக்கு பொழுது விடிவது அம்மம்மா வீட்டிலதான். குருப்பிரசாத்திற்கு இவர்கள் தான் பொழுதுபோக்கு. அக்கா மகன்களை அடித்து, கடித்து, வம்பிழுத்து, அழவைத்து, வண்டியில் ஏற்றிக்கொண்டு ஊர் சுற்றி, கொஞ்சி, சாக்லேட் மற்றும் ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சமாதானம் செய்து என அக்மார்க்‌ மாமானாக நடந்து கொள்வான். பிரணவிற்கு பிரச்சினை ஆரம்பித்த பிறகே இவர்கள் வரத்து குறைந்து போயிற்று. ஐந்து வருடங்களுக்கு முன் அவர்களும் சிறுபிள்ளைகள் தானே. எத்தனை தடவை சொல்ல முடியும். இப்பொழுது வளர்ந்த பிறகு அவர்களாகவே பிரணவைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கேற்றார்போல் நடந்து கொள்வர்.

பிரணவை படுக்கையிலிருந்து இழுக்க, இருவரையும் ஆளுக்கொரு பக்கமாக வளைத்துப் பிடித்தவன் அலேக்காகத் தூக்கி கட்டிலில் பொத்தென போட்டான். 

“மாமா… யூ வெரி ஸ்ட்ராங்” கோரசாக அலறல் இருவரிடமும். பிரணவ் அதைப்பார்த்து சிரிக்க, 

“டேய்… இவன் நம்மலப்பாத்து சிரிக்கிறான்டா” பிரணவைப் போட்டு அமுக்க, 

“நான் கீழ போறேன். அவன ஃபிரஷ் பண்ணி கூட்டி வாங்கடா!” என்றவன் கீழே செல்ல, மாடிப்படி கடைசிப்படி இறங்கும் வரைக்குமே… “ஹேஏஏ…” என அறைக்குள் ஒரே கூச்சலும், ஆர்ப்பாட்டமும்.

சிரித்தபடியே படியில் இறங்கும் தம்பியை வாஞ்சையாகப் பார்த்தாள் விஷாலி. ட்ராக் பேன்ட்டும், டீ சர்ட் என இலகு உடையில் இருந்தான். இன்று வெளியே செல்லும் வேலை இல்லை போல என அவளே கணித்தாள். 

“வாக்கா… பாகுன்னாவா… பாவா எக்கட?”

“ஏதோ வேலையிருக்குனு எங்களை மட்டும் இறக்கி விட்டு போயிட்டார்டா! லன்ச்க்கு ஒஸ்த்தாட்லே!” பதில் சொன்ன அக்கா பக்கத்தில் அமர்ந்தான். 

மகனுக்கும் சேர்த்து காஃபியோடு வந்தார் ஜமுனா.

“என்னக்கா… ஊறுகா பிசினஸ இங்கயும் ஆரம்புச்சுட்டியா?” சோஃபா முன்னிறுந்த சிறு டேபிள் மீது அவள் அடுக்கி வைத்திருந்த ரகம் ரகமான பாட்டில்களைப் பார்த்து கேட்க, 

“ஆமாடா… எல்லாரும் பிறந்த வீட்லருந்து ஊறுகா, மொளகாப்பொடி, பருப்பு பொடின்னு எடுத்துட்டுப் போவாங்க. இங்க என்னடான்னா எல்லாம் தலைகீழா இருக்கு. நான் தான் வர்றப்ப எல்லாம் எடுத்துட்டு வர்றேன்!”

“அக்கா… மொளகா நம்ம தோட்டத்துலருந்து எடுத்துட்டு போனது. மாங்கா நம்ம தோப்புலருந்து கொண்டு போனது. அதுல கொஞ்சம் உப்பு போட்டு, எண்ணைய ஊத்தி ஊறுகான்ற‌ பேர்ல திரும்ப இங்க கொண்டு வர்ற. நியாயமாப் பாத்தா பிசினஸ் லாபத்துல பங்கு கொடுக்கணும்! பாதி முதலீடு பொருளா எங்களது. இதுல பிசினஸ் கன்சல்டிங் ஃபீஸே இன்னும் தறல. மச்சான்தானேன்னு ஏமாத்துறார் பாவா.” பதிலுக்கு அக்காவை இவன் தாக்க, 

“எதுக்கு… இன்னொரு பேர்ல அதே ஊறுகாயப் போடச் சொன்னதுக்கா? இல்ல ஒரு பாட்டில் அளவை பிரிச்சு ரெண்டா போடச்சொல்லி ஒன் ப்ளஸ் ஒன் ஆஃபர்‌ போடச் சொன்னதுக்கா?” என்று நக்கலாகக் கேட்க,

“இப்ப பிசினஸ் எப்படிப் போகுது? அதை மட்டும் சொல்லு” என்றவனிடம், 

“முன்னவிட நல்லாதான் போகுது!” என்றாள். 

விஷாலி கணவன் சத்யநாராயணனுக்கு ஊறுகாய் பிசினஸ். உள்ளூரில் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யுமளவிற்கு பெத்த ஏவாரமே. ஊறுகாய், பருப்பு பொடி, இட்லி பொடி மற்றும் பப்படம் என எல்லாமே. அம்மா வீட்டிற்கு விஷாலி வரும்பொழுது எல்லாமே எடுத்து வருவாள். சமீபமாக வியாபாரம் சற்றே மந்தமாக, சுடர் விளக்கா இருந்தாலும் அப்பப்ப தூண்டிவிட்டாதானே பிரகாசிக்கும். புதுப்புது உத்திகளைக் கையாள வேண்டும். 

“கஸ்ட்டமர்ஸ்க்கு எது ஒன்னும் சீக்கிரம் போரடிச்சுரும்க்கா. டிஃபரென்ட் டைப் ஆஃப் கஸ்ட்டமர்க்கு, நாமலும் டிஃபரென்டாதான் கொடுக்கணும். விலை பாத்து மலைக்கறவங்க கூட, ஒன் ப்ளஸ் ஒன் கொடுக்கும் போது யோசிக்காம வாங்குவாங்க. குவான்டிட்டிய கொறச்சு சின்ன பேக்ல கொடுக்கும் போது வாங்குறவங்களுக்கும் பட்ஜெட் ஃப்ரென்ட்லியா இருக்கும். கால் கிலோ வாங்க யோசிக்கறவங்க நூறு கிராம்னா யோசிக்காம வாங்குவாங்க. மார்க்கெட்ல புதுசு புதுசா எதிர்பார்ப்பாங்க. அந்த புதுச நாமதான் கொடுக்கணும். அதே ஊறுகாய். அதே கம்பெனி. ஆனா பேரு மட்டும் வேற! பிசினஸ் முன்னவிட பிக்அப் ஆச்சாங்கறதுதான் கேள்வி!” 

அவன் சொல்வதில் இருக்கும் சூட்சமம் புரிந்தது. இன்று வெவ்வேறு பெயர்களில் வரும் வெவ்வேறு தயாரிப்புகள் ஒரே நிறுவனத்துடையதே. மார்க்கெட்டில் மக்கள் புதிதாகத் தேடும் பொழுது அதே பொருள்‌ வேறு பெயரில் விற்பனைக்கு வரும். நம்ம ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்கல்ல… புது மொந்தையில பழைய கள்ளுன்னு. இதே எளிய மெத்தடைத்தான் இன்று பல நிறுவனங்கள் கையாள்கின்றன. அதே பொருள். பிராண்ட் வேற. ஒரு பிராண்ட் விற்பனை‌ பாதிக்கப்பட்டாலும் இன்னொன்று கைகொடுக்கும். லோயர், மிடில், அப்பர் என அனைத்து வகையான வாடிக்கையாளர்களையும் கவர இது ஒரு மார்க்கெட்டிங் தந்திரம். (Multi-brand strategy அல்லது Brand Portfolio Strategy)

“நைனா… சூசாறா… என்ன சொல்றான்னு. எனக்கு கொடுக்கறதை சொல்லிக் காட்டுறான். இவனுக்கு கன்சல்டிங் ஃபீஸ் வேற‌ கொடுக்கணுமாம். நானென்ன ஒவ்வொரு வீட்டு ஆடப் பொடுசுலாக (பொம்பளப்பிள்ள மாதிரி) அது வேணும், இது வேணும்னு கேக்குறேனா?” விஷாலி திருவேங்கடத்திடம் பஞ்சாயத்து வைக்க, இது அவனுக்கும் உனக்குமானது… என்கிட்ட கொண்டு வராதே என்பது போல் பேப்பரும் கையுமாக ஒதுங்கிக் கொண்டார்.

பின்னே இவள் பேச்சைக் கேட்டு மகனை சடைக்கப்போக, அதுக்கும் தம்பிக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வருவாள். பிறந்து வீட்டு உரிமையும் எடுத்துக் கொள்வாள். அதே சமயம் அக்காவாக தம்பியை விட்டுக் கொடுக்கவும் மாட்டாள். அதனாலே இவர்களுக்கிடையில் சத்யநாராயணனே தலை கொடுக்க மாட்டான். இந்தக்காதில் வாங்கி அந்தக்காதில் விட்டுவிடுவான்.  பிறந்து வீட்டை குறை சொல்லும் ஏகபோக உரிமை அவளுக்கு மட்டுமே. 

“அக்கா… நீ கேக்குறளவுக்கு வச்சுக்கறதில்ல. உகாதி, சங்கராந்தி, தசரான்னு தெலுங்கு பண்டிகையிலருந்து, ஆடி, தீபாவளின்னு தமிழ் பண்டிகை வரைக்கும் எந்த பண்டிகையையும் விட்டு வைக்கல. இன்னும் ஒவ்வொரு வருஷமும் சீர் கொடுக்குறோம்.” 

அக்காவுக்கு பதில் கொடுத்துக் கொண்டே, “ஆவக்கா பச்சடி, கோங்கூற பச்சடி இருக்கா?” என்றான் ஒவ்வொரு பாட்டிலாக எடுத்துப் பார்த்து. 

ஆவக்கா ஊறுகாயும், (மாவடு ஊறுகாய்) கோங்கூறா (புளிச்சகீரை) பச்சடியும் குருப்ரசாத்காரு ஸ்பெஷல். 

“அது இல்லாமையா! உங்க பாவா மச்சானுக்குனே ஸ்பெஷலா போட்டு வச்சுருக்காரு!”

“பாவாக்கு தெரியுது. மச்சானுக்கு என்ன புடிக்கும்னு.” 

“டேய்… நானும் தான் உனக்கு பிடிக்குமேன்னு குத்தொங்காய் கூர (எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு)வச்சு எடுத்துட்டு வந்திருக்கேன்.” தன் அக்கா பாசத்தை கத்திரிக்காய் குழம்பில் காட்டினாள்.‌

விஷாலியை திருமணம் செய்து கொடுத்ததும் திருவேங்கடம் வழியிலேயே என்பதால் அவளிடமும் அதிகமாக தெலுங்கு வாடையே. பேச்சிலிருந்து சமையல் வரை. ஜமுனாவிற்கு அது வராது என்பதால் தம்பிக்கு பிடித்ததெல்லாம் விஷாலி செய்து எடுத்துவருவாள். சிறுபிள்ளையிலேயே திருவேங்கடத்தின் தாய் இவர்களுக்கு ஆந்திரா காரத்தை பழக்கிவிட்டார். ஜமுனாவிற்கு மட்டும்தான் காரம் ஆகாது. இப்பொழுது அவருக்குத் துணையாக பிரணவும். அதீத காரம் அவனுக்கும் ஆகாது என்பதால் குருப்ரசாத்தும் வெகுவாக காரத்தைக் குறைத்துக் கொண்டான். தம்பிக்காகவே ஊறுகாய் எடுத்து வருவாள். வரமுடியாத பட்சத்தில் அனுப்பி வைத்துவிடுவாள். 

மகள், பேரன்களுடன் வந்தவுடனே அடுப்படியை ஆட்கொண்டுவிட்டார் ஜமுனா. மதியம் சாப்பாட்டிற்கு வேறு மருமகன் வருவதாகச் சொல்லிச் செல்ல, அவருக்குப் பிடித்த சேப்பலு புளுசு… (அட நம்மூறு மீன் புளிக்குழம்புதாங்க) பேரன்களுக்குப் பிடித்த சிக்கன் ஃப்ரை, ஹைதரபாத் பிரியாணி என லிஸ்ட் தயாராகியது.

தோசை, பூரி உருளைக்கிழங்கோடு காலை உணவு வேளை முடிந்தது. 

“மாமா… எங்கேயாவது வெளில போலாமா?” சாய்கிரண் கேட்க, குருப்பிரசாத்திற்கும் இவர்களை வெளியே அழைத்துச் சென்று வெகுநாட்களாகிவிட்டது எனத் தோன்றியது. பிரணவிற்கும் எந்த உடல் தொந்தரவும் இல்லை. 

“மதியம் சாப்பாடு முடிச்சுட்டு போலாம்” என்றவுடன்,

“எங்கே?” என அடுத்த கேள்வி. இன்று சனிக்கிழமை வேறு‌. மால் போன்ற ஜன நெரிசலான இடங்களுக்கு அழைத்துப் போக மாட்டான் எனத் தெரியும். வேறு எங்கு என யோசிக்க, “பீச்?” என்றான் பிரணவ். 

“ஓகே… ஆனா மெரினா இல்ல… மகாபலிபுரம்.‌ ஒரு லாங் ட்ரைவ்” என்றான். மாமனோடு எங்கு என்றாலும் அவர்களுக்கு சம்மதமே. அவனோடு வெளியே செல்வதே படு ஜாலியாக இருக்கும். 

விஷாலி அம்மாவோடு அடுப்படிக்கு செல்ல, இவர்கள் நால்வரும் வெளி வாசலுக்கு வந்தனர். அகன்ற பெரிய கார்டனிங் ஏரியா. அதில் ஒரு பக்கம் கார் பார்க்கிங் போக மீதியிடம் காலியாகத்தான் கிடந்தது. 

“மாமா…ஷட்டில் விளையாடலாமா? ரொம்ப நாளாச்சு” என்றான் சின்னவன் சாய்கிரண். இவனுக்கும் சரியெனத் தோன்றியது. இன்று ஜாகிங்கும் ஸ்கிப் டே லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டது. என்றோ ஒருநாள் தான் வருகிறார்கள். பிரணவைப் பார்த்தான். மாமன் பார்வை பெரியவன் ரோஹித்துக்குப் புரிந்தது. பிரணவால் இவர்களோடு ஈடு கொடுத்து விளையாட முடியாது. இவர்கள் விளையாட அவன் உட்கார்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்க நேரிடும். 

“மாமா நீங்க விளையாடுங்க. எனக்கு கால்வலி. நானும் சின்னாவும் கேரம் விளையாடுறோம். உனக்கு ஓகே வா சின்னா” ரோஹித் கேட்க, பிரணவ் கட்டைவிரலை உயர்த்தி காண்பித்தான். மாமன்காரன் ரோஹித்தை தோளோடு அணைத்துவிடுத்தான் அவனை மெச்சிக் கொள்வது போல. பிரணவுக்காகப் பார்த்து இவர்கள் விளையாடாமால் இருந்தாலோ, அல்லது அவன் முன் மூவரும் ஓடியாடி விளையாடுவதோ இரண்டுமே ஏதோ ஒரு வகையில் அவனிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஏற்கனவே ஊன்றி வைத்த கம்பியிருக்க, அதில் வலை கட்டி, குருப்பிரசாத்தும் சாய்கிரணும் ஷட்டில் ஆட, அங்கேயே டேபிளை எடுத்து வந்து போட்டு, பிரணவும், சாய்கிரணும் கேரம் விளையாடினர். இவர்கள் பக்கம் வந்து விழும் பூப்பந்தை பிரணவிடமே எடுத்து கொடுக்க சொன்னான். சற்று நேரத்தில் காற்று சற்று பலமாக வீச, ஷட்டில் விளையாட முடியாமல் இடையூறு செய்ய, நால்வருமே கேரம் விளையாட அமர்ந்துவிட்டனர். 

சற்று நேரத்தில் கேட்டை யாரோ தட்டும் சப்தம் கேட்டது. ரோஹித் எழுந்து சென்று, யாரென கேட்க, “வீட்ல அம்மா இல்லையா தம்பி?” என்று வெளியே நின்றது தள்ளுவண்டியில் செடிகளை வியாபாரத்திற்கு எடுத்து வந்த கண்ணையன்‌. 

அதற்குள் குருவும் யாரெனக் கேட்க, “மாமா… செடி வேணுமான்னு கேக்குறாங்க!” என,‌

“வேண்டாம்னு செப்புறா!” என்றான். வெளியாட்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் காம்பவுன்டுக்குள் விடமாட்டான். அதுவும் இன்று மகன் வீட்டிலிருக்க உள்ளே விட வாய்ப்பேயில்லை. ஜமுனா, வார நாட்களில்தான் எடுத்துவரச் சொன்னார்.

ரோஹித்தும், கண்ணையனுக்கு மாமன் சொன்ன பதிலை சொல்ல, 

“பெரியவங்க இல்லையா தம்பி. அவங்கதான் வரச் சொன்னாங்க!” என்றார். அவருக்கு போனியாக வேண்டும். 

“அதான் வேண்டாம்னு சொல்றாங்கல்ல!” என்றபடி குரு வர,

“வீட்டு பெரியம்மாதான் இந்த செடியெல்லாம் கேட்டாங்க சார்‌. வேணும்னா கேட்டுப் பாருங்க!” மீண்டும் விடாப்பிடியாக நிற்க, பேரன்களுக்கு ஜுஸ் போட்டு எடுத்துக் வந்த ஜமுனாவும், கண்ணையனைப் பார்த்தார். 

“ம்மா…‌செடி கேட்டீங்களே?” என வெளியே இருந்தபடியே குரல் கொடுக்க,

“ஆமாப்பா… ஆனா இன்னைக்கி கெஸ்ட் வந்திருக்காங்க‌. அடுத்த வாரம் கொண்டு வா” என அனுப்ப முயல, 

“அதனால என்னம்மா‌? எடத்தை மட்டும் காட்டுங்க. நானே நட்டுவிட்டுப் போறேன்.” அவர் வியாபாரம் பண்ணுவதில் குறியாக இருக்க, விடமாட்டான் போலயே, வந்ததுக்கு ரெண்டு செடியாவது நட்டுவிட்டுப் போகட்டும் என, கேட்டுக்கு வெளியே காம்பவுண்ட் சுவரோரம் செடிகளை நட்டுவிடச் சொல்ல, நந்தியாவட்டை, செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிறு செடிகளை நட ஏற்பாடு செய்தார் கண்ணையன். 

****

“அம்மா…‌அம்மா…‌ சாலும்மா…(போதும்மா) ஏதோ ஒரு நாள் தான் இப்படி வரமுடியுது. அன்னைக்கும் மொதல பெட்டொக்கம்மா!” (ஆரம்பிக்காதீங்கம்மா)

மதியம் சாப்பாடு முடித்து சிறுவர்களோடு குருப்ரசாத் காரில் வெளியே கிளம்ப, அப்பொழுதுதான் வந்த சத்யநாராயணண் சாப்பிட்டு மனைவியோடு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டான். 

மாலை எழுந்து வந்த மகளுக்கு சூடாக டீயைக் கொடுத்தவாறே ஜமுனா தன் புலம்பலை ஆரம்பிக்க, அலுத்துக் கொண்டாள் விஷாலி. 

அவளோ என்றைக்கோ ஒரு‌நாள் தான் பிறந்த வீட்டிற்கு வருகிறாள். இன்று ஏதோ அவளது கணவன் பெரிய மனது பண்ணி மனைவியை அம்மா வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். அதற்கு காரணமும் இருந்தது. அவளிடமும் சொல்லவில்லை. அதைச் சொன்னால் கிளம்ப மாட்டாள் எனத் தெரியும். இவளை அம்மா வீட்டில் விட்டுவரவே அழைத்துச் செல்கிறான் எனத் தெரியாது. வரும் வழியில் தான் காரில் வைத்து சொன்னான்‌. 

“நீயும் என்னைக்கோதான் இப்படி எட்டிப்பாக்குற. என் மனக்குறைய யார்கிட்ட சொல்ல? பக்கத்துலயே கொடுத்தது எதுக்கு. நெனச்சவுடனே பாத்துக்கலாம்னுதானே? ஆனா நீயும் ஆடிக்கொருதடவை, அம்மாசைக்கொருதடவைன்னு தலையக் காட்டுற. உன் வீட்டுக்காரர் அதுவுமில்ல!”

“அதுக்கா கொடுத்தீங்க. சொந்தத்துலயே மாப்பிள்ளை இருக்கவும், தேட வேண்டிய அவசியமில்லாம கொடுத்தீங்க? திருத்தணி உங்களுக்குப் பக்கமா? என்னை இங்க கொடுத்துட்டு நீங்க கிராமத்துல போய் உக்காந்துக்கிட்டீங்க. இப்பதான் இங்க வந்துருக்கீங்க. இதுல நான் வரலைன்னு பொல்லாப்பு.” நொடித்தாள் விஷாலி. 

“ஆமா… சொந்தம் சொந்தம்னு பாத்துதான் உன் தம்பி வாழ்க்கை இப்படிப் போச்சு. அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான். முப்பதுக்கு மேல கல்யாணம் பண்ணாதான் நல்லாருக்கும்னு‌. நாமதான் அவசரப்பட்டோம்.”

“இப்பவும் என்னம்மா. உங்க மகனுக்கு முப்பத்தஞ்சு ஆச்சுல்ல. இங்க ஒக்க பெல்லி சேசி பெட்டண்டி!” (இன்னொரு கல்யாணம் பண்ணி வைங்க)

“எங்கிட்ட சொல்றியே. எங்கே… நீதான் உன் தம்பிக்கிட்டப் பேசி நடத்தி வைக்கிறது?”

“எந்துக்கு… இப்பவாவது என்னைக்கோ ஒரு நாள் வர்றேன். நீங்க சுத்தமா வரவிடாமப் பண்ணப்போறீங்க!”

“தெரியுதுல்ல… பெரியவங்க பேச்சை எங்க கேட்டான் உன் தம்பி. அவ இஷ்ட்டத்துக்கு தானே ஆடினான். அதான் இப்படி பாதியிலயே விட்டுட்டுப் போய்ட்டா!” 

“ம்மா… அவன் முன்னாடி இப்படி அவளப்பத்தி பேசிறாதீங்க!” பதறினாள். 

“ஆமா… பொண்டாட்டியப் பேசினாத்தான் உன் தம்பிக்கு மூக்கு மேல கோபம் வருமே?” அம்மாவும் மகளும் இத்தனை தூரம் அலுத்துக் கொண்டாலும், குருப்பிரசாத்தின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்பதற்காகத்தான். 

சத்யநாராயணன் எழுந்து வரும் அரவம் கேட்க, “தம்பி வந்துட்டாப்ல. அவருக்கும் டீ எடுத்து வர்றேன்” எழுந்து செல்ல,

“என்னவாம் உங்க அம்மாவுக்கு” என்றான். 

தம்பியின்‌ மறுமணம் பற்றி பேச, இவர்கள் பேச்சு ஆகாத பேச்சு என்று தெரிந்தது.

“இப்ப எதுக்கு வந்துருகோம்னு உங்க அம்மாகிட்ட சொல்லிட்டியா?”

“இல்ல… இன்னும் அதப்பத்தி பேசல!” என்றாள். 

எங்கே வந்ததிலிருந்து சமைக்க, சாப்பிடத்தானே நேரம் சரியாக இருந்தது. இப்பொழுதுதான் பேச நேரம் கிடைத்தது. அதில் ஜமுனா மகனைப் பற்றி பேச ஆரம்பிக்க, தன்னைப்பற்றி பேச முடியவில்லை. 

டீயோடு ஜமுனா வர, “அத்தை விஷாவுக்கு ஹாஸ்பிடல் போகணும். அதுக்கு தான் அழச்சுட்டு வந்தேன். அங்க இருந்தா வேலையப் பாத்துக்கிட்டே வரமாட்டேங்கிறா. ஒரு வாரம் இவளை விட்டுட்டு அவனுகளை மட்டும் அழச்சுட்டுப் போறேன்” என்றவுடன்,

“என்னடீ பிரச்சினை?” ஜமுனா பதறினார். ஏற்கனவே வீட்டில் ஒருத்தன் சீசனுக்கு போற மாதிரி ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துட்டிருக்கானே. இவளுக்கும் என்ன பிரச்சினையோ என்ற கவலை. 

“ம்மா… பெருசா ஒன்னுமில்லம்மா. இர்ரெகுலர் பீரியட்ஸ் தான்! அங்க பாத்ததுக்கு ஏதோ கட்டி அது இதுன்னு சொல்லவும் பயந்துட்டாரு. அதான் இங்க சென்னையில பாக்கலாம்னு கூட்டி வந்தாரும்மா.” 

“ஆமாத்தை… அங்க இருந்தா பிள்ளைகளப் பாக்கணும், வேலையிருக்குனே இவ வரமாட்டா. இன்னும் என்ன சின்ன பசங்களா? அடைகாத்துட்டே இருக்கா. அதான் நான் அவங்களப் பாத்துக்கிறேன். பெரிய கிளாஸ்னால ஸ்கூலும் லீவ் போட முடியாது. ரோஹித் வேற நீட் கோச்சிங் போயிட்டிருக்கான். இவள மட்டும் இங்க விட்டுப் போறேன். ஃபுல் செக்கப் பண்ணணும்!” என்று சொல்ல அவனது சூழ்நிலையும் புரிந்தது. 

மகளுக்கும் வயது நாற்பதை நெருங்குகிறதே. இது சாதாரணம்தான் என நினைத்து ஆசுவாசப்பட்டார். அதற்குள் வெளியே சென்றவர்கள் வந்துவிட, இரவு சாப்பாட்டு வேலையை கவனிக்க சென்றனர். 

பிரணவிற்காகவே வெளியே அவர்களும் சாப்பிடவில்லை. உடைமாற்றி கீழே வந்தனர். 

ஜமுனா, மகனிடம் அக்கா வந்த விவரத்தைக் கூற, “அதனாலென்னம்மா… பிரணவுக்கு பாக்குற ஹாஸ்பிடலே போலாம். அங்கதான் லேட்டஸ்ட் ஸ்பெஷாலிட்டிஸ் எல்லாமே இருக்கு. ஹைனகாலஜிஸ்ட் அப்பாய்ன்மென்ட் வாங்குறேன். நாளைக்கே போய்ட்டு வந்துருங்க!” என்றவன் டீபாய் மீது கிடந்த கார்டை எடுத்துப் பார்த்தான். 

குறிஞ்சி க்ரீன்ஸ் என இருந்தது. “என்னம்மா இது?” 

அவன் கையிலிருந்ததைப் பார்த்த ஜமுனா, “அதுவா… கார்டனிங் செட் பண்ணலாம்னு வரச்சொன்னேன்டா. கீரை, காய்கறியெல்லாம் ஆர்கானிக்கா நாமலே விளைய வச்சுக்கலாம்ல. பிரணவுக்கும் பயந்து பயந்து கொடுக்க வேண்டாம் பாரு. மாடித்தோட்டம் கூட அவங்களே செட் பண்ணி தருவாங்களாம். அப்பப்ப மெய்ன்டெய்னும் பண்ணுவாங்களாம்டா. எதெல்லாம் பிசினஸுன்னு வந்துருச்சு பாறேன்!” என்று பேசிக் கொண்டிருக்கு, கார்டை திருப்பிப் பார்த்தான். 

மாடித்தோட்டம், டெர்ரஸ் கார்டனிங், கார்டன் மெய்ன்டெனென்ஸ் சர்வீஸ், இன்டோர் ப்ளான்ட் செட் அப், கிட்சன் ப்ளான்ட் செட்அப், கிராஸ் லான் (புல் தரை) இன்ஸ்டாலேஷன் மற்றும் மெய்ன்டெனென்ஸ், லான்ட்ஸ்கேப் கார்டனிங்… என பட்டியல் கொடிபோல் நீண்டது. வரிசையாக படித்தவன் இறுதியாக ப்ரொப்பரைட்டர் அபிராமி என வாசித்தான்.

அதில் குறிஞ்சி க்ரீன்ஸ் வாட்சப் க்ரூப் மற்றும் இன்ஸ்டா ஐடியும் இருந்தது. இன்று மீடியா எந்தளவிற்கு எளிமையாகவும், விரைவாகவும் ஒரு விஷயத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கிறது. அது நல்லதாக இருந்தாலும் சரி. கெட்டதாக இருந்தாலும் சரி. சரியா தவறா என மக்களை ஆலோசிக்கக் கூட நேரம் கொடுப்பதில்லை. வாயுவேகத்தில் (அலைக்கற்றை) கடத்துகிறதே அதுவும் **mb/min என நொடிக்கணக்கில். 

அவன் தேட நினைப்பது இப்பொழுது அவன் உள்ளங்கையில். கண்ணுக்கு மேலிருக்கும் இமை கண்ணுக்குத் தெரிவதில்லை தானே? 

“இந்த நம்பரக் குறிச்சுக்கோங்கம்மா. வீட்டுத் தோட்டம் போட வரச்சொன்னாங்க!” என்று பேப்பரில் எழுதிவந்த கை பேசி எண்ணை அபிராமியிடம் கொடுத்தார் கண்ணையன். 

“எந்த ஏரியாண்ணா! ரொம்ப தூரமா?” 

“இல்லம்மா…‌பக்கந்தான் சாலிகிராமம். இப்பத்தான் சென்னைக்கு வந்து ஒரு வருஷம் ஆகுதாம்! அந்தக்காலத்து பங்களா. வீட்டு முன்னாடி பெரிய இடம் தோட்டம் போட.” என்றார்.

ஆம்… மகனுக்கு கொரானா காலகட்டத்தில் சுத்தமான, ஆரோக்கியமான, இயற்கை சூழல் வேண்டுமென பரபரப்பான சென்னையை விட்டு கிராமத்திற்கே சென்றவன்‌, பிரணவின் மருத்துவ வசதிக்காகத்தான் மீண்டும் சென்னை வந்தனர். 

*****

“இடியட்!” கேட் முன் நின்ற வண்டியைப் பார்த்து கோபம் கண்ணைக் கட்டியது குருப்ரசாத்திற்கு. காரை வீடடுக்குள் ஏற்ற இடைஞ்சலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

“இது என் ஸ்கூல் மேட் சக்தியோட அம்மா வண்டிப்பா!” என்றான் காருக்குள் இருந்த பிரணவ். 

“டேய்… இது ஜென்ட்ஸ் வண்டிடா!”

“யெஸ் டாட். அவங்க இந்த வண்டிதான் ஓட்டுவாங்க. சக்தி, அன்னைக்கி பெர்த்டே சாக்லேட் கொடுத்தான்னு சொன்னேன்ல. அவனோட அம்மா வண்டிதான்.” 

அந்த வண்டிதான் அத்தனை பேர் பள்ளிக்கு வந்து போகுமிடத்தில் அபிராமியும், சக்தியும் பிரணவ் நினைவில் அழுத்தமாகப் பதியக் காரணம். ஆண்கள் ஓட்டும் வண்டியில் கம்பீரமாக வந்து மகனை இறக்கிவிட்டுச் செல்வாள். அவன் அப்பா ஒரு மூலையில் நிறுத்தி வைத்திருக்கும் அதே வண்டியின் லேட்டஸ்ட் வெர்ஷன் Royal Enfield Continental GT 650. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 7

7“இடியட்!” கேட் முன் நின்ற வண்டியைப் பார்த்து கோபம் கண்ணைக் கட்டியது குருப்ரசாத்திற்கு. அங்கு யார் வீட்டு முன்னாடியும் இஷ்ட்டத்திற்கு வண்டியை நிப்பாட்டிச் செல்ல முடியாது. வீடு என்று சொல்வதைவிட எல்லாமே பங்களா தோற்றத்தில்தான் இருந்தது.சாலிகிராமம். பெயரில்தான் கிராமம் இருக்கிறதே ஒழிய…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 8 கருத்துகள் உள்ளன

    1. மீட் பண்ணிட்டா கதை முடிஞ்சது 🫣
      அதனால இப்போதைக்கி இவங்கள விலக்கியே வைப்போம் 😉

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்