arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 7

என் வீட்டு தோட்டத்தில் 7

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

7

“இடியட்!” கேட் முன் நின்ற வண்டியைப் பார்த்து கோபம் கண்ணைக் கட்டியது குருப்ரசாத்திற்கு. அங்கு யார் வீட்டு முன்னாடியும் இஷ்ட்டத்திற்கு வண்டியை நிப்பாட்டிச் செல்ல முடியாது. வீடு என்று சொல்வதைவிட எல்லாமே பங்களா தோற்றத்தில்தான் இருந்தது.

சாலிகிராமம். பெயரில்தான் கிராமம் இருக்கிறதே ஒழிய பல சினிமா, தொலைக்காட்சி பிரபலங்கள் வசிக்கும் பகுதி. அந்தக்காலத்தில் சென்னையில் வேரூன்றிய வணிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் குடியிருக்கும் தனித்தனி பங்களாக்கள், இன்றைய காலகட்டத்திற்கேற்ற கோடிகளில் மதிப்பு கொண்ட வானளாவிய அபார்ட்மெண்ட் குடியிருப்புகள் என பழமையும் புதுமையும் கலந்த வளமான ஏரியா.

“ம்மா…‌யாரும்மா கேட் முன்னாடி வண்டிய நிப்பாட்டுனுது?” என்றான் காருக்குள்ளிருந்தபடியே ஜமுனாவிற்கு ஃபோனில் அழைத்து. ஒரு வேளை நம் வீட்டிற்குதான் அக்காவை நலம் விசாரிக்க சொந்தத்தில் யாரும் வந்திருக்கிறார்களோ என்ற எண்ணத்தில்.

“நம்ம கேட் முன்னாடியா பிரசாத்?”

“பக்கத்து வீட்டு‌ முன்னாடி‌ நிப்பாட்டிருந்தா நான் ஏம்மா கேக்கப்போறேன்?”

“யார்னு‌ தெரியலையேடா. இரு வர்றேன்!” என்றவர் அழைப்பை துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியே வரவே மூன்று நிமிடத்திற்கு மேலானது. வீட்டுக்கும், கேட்டுக்கும் அவ்வளது தூரம்‌. வீடு உள்ளடங்கிதான் இருந்தது. வீட்டிற்குள்ளிருந்து மெயின் கேட் வருவதற்குள் சேஃப்டி கேட் இரண்டு கேட்டுகளைத் திறந்து வரவேண்டும்.

ஜெயில்ல கூட இத்தனை கேட் இருக்காதுடா என்று புலம்பிக் கொண்டே தான் ஒவ்வொரு முறையும் கதவைத் திறப்பார். வீட்டிலிருப்பது வயதானவர்கள் மட்டுமே என்பதால் இத்தனை பாதுகாப்பு. இது இல்லாமல் கேமரா வேறு மூலை மூலைக்கு. பிக்பாஸ் ஹவுஸ் மாதிரி இருக்குடா என்பார். அதென்னமோ உண்மை தான். அவன் கைபேசியில் அவ்வப்போது கண்காணித்துக் கொண்டே இருப்பான். ஜமுனா, அசந்தவாக்கில் உள்பக்க கேட்டைப் பூட்ட மறந்தால் கூட உடனே கால் பண்ணி பூட்டச் சொல்வான். இவன்கிட்ட ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என அலுத்துக் கொள்வார். ஜமுனா, இரண்டு‌ கேட்டுகளையும் திறந்து மெய்ன் கேட்டிற்கு வர, நடுநாயகமாக நின்றது வண்டி. 

அவர் வருவதற்குள், “இது என் ஸ்கூல் மேட் சக்தியோட அம்மா வண்டிப்பா!” என்றான் காருக்குள் இருந்த பிரணவ். 

“டேய்… இது ஜென்ட்ஸ் வண்டி சின்னா!”

“யெஸ் டாட். அவங்க இந்த வண்டிதான் ஓட்டுவாங்க. சக்தி, அன்னைக்கி பெர்த்டே சாக்லேட் கொடுத்தான்னு சொன்னேன்ல. அவனோட அம்மா வண்டிதான்.” 

அந்த வண்டிதான் அத்தனை பேர் பள்ளிக்கு வந்து போகுமிடத்தில் அபிராமியும், சக்தியும் பிரணவ் நினைவில் அழுத்தமாகப் பதியக் காரணம். பைக்கில் கம்பீரமாக வந்து மகனை இறக்கிவிட்டுச் செல்வாள். அவன் அப்பா ஒரு மூலையில் நிறுத்தி வைத்திருக்கும் அதே வண்டியின் லேட்டஸ்ட் வெர்ஷன் Royal Enfield Continental GT 650. 

“எவன் பாத்த வேலைடா இது?” ஜமுனாவும் வண்டியைப் பார்த்து ஏதோ ஆம்பளைதான் நிறுத்திச் சென்றிருப்பானோ என்று நினைத்தார். அவர் வந்ததும் பிரணவ் வண்டியிலிருந்து இறங்கிக் கொண்டான்.

யாராவது டெலிவரிக்கு வந்திருப்பானோ என்ற யோசனை. அவர்கள் தான் சிறிது நேரம்தானே என சட்டென எங்கு வேண்டுமானாலும் வண்டியை நிறுத்திச் செல்வார்கள். இவர்கள் வீட்டு முன்தான் மரநிழல் இருந்தது. அதனால் நிறுத்திச் சென்றிருக்கலாம் என்ற எண்ணத்தில் அவரும் அக்கம் பக்கம் பார்வையை ஓட்டினார். 

அவனிடமே தனது சந்தேகத்தையும் கேட்க, “ம்மா… டெலிவரி பண்றவன்தான் இந்த பைக்ல வர்றானா?” என்றான். 

“ஏன்டா… இன்னைக்கி தான் இஷ்டத்துக்கு லோன் தர்றானே. யார் வேண்டுமானாலும் எந்த பைக் வேணும்னாலும் வாங்கலாம்!” 

“அதுவும் சரிதான்” என அலுத்துக் கொண்டான். நோ பார்க்கிங் போர்ட் இவ்வளவு பெருசா தொங்குது. அந்த போர்டையே முத்தமிட்டு நின்றது வண்டி. கார் ஹார்னை தொடர்ந்து அழுத்தினான். அக்கம் பக்கம் வீட்டினர் கூட சன்னல் திறந்து பார்த்தனர். தூங்கிக் கொண்டிருந்த விஷாலி கூட எழுந்துவிட்டாள். 

“டேய் பிரசாத், அக்கா இப்பதான்டா படுத்தா” என்றார். உடனே ஹாரனை நிறுத்தினான். 

விஷாலிக்கு லேப்ரஸ்கோபி செய்திருந்தனர். அவன் கூறியது போலவே திங்கள் கிழமையே மகப்பேரு மருத்துவரிடம் முன்பதிவு செய்துவிட்டான். விஷாலிக்கு பரிசோதனை செய்ததில் கட்டியிருப்பது உறுதியாகியது. ஓவரியன்‌ சிஸ்ட் என்று தான் வந்தது. ஆனால் அளவில் பெரிதாக இருக்க, லேப்ரஸ்கோபி பரிந்துரைக்கப்பட்டது. சர்க்கரை, இரத்தக் கொதிப்பு போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமலிருக்க முன் தினம்தான் லேப்ரஸ்கோபி ஓவரியன் சிஸ்டமி (laparoscopic ovarian cystectomy) செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். சந்தேகத்திற்கு பயாப்சிக்கு அனுப்பியுள்ளனர்.

அவள் கணவன் சத்யநாராயணனும் மகன்களை அவன் அம்மா பொறுப்பில் விட்டு வந்தான். லேப்ரஸ்கோபி என்பதால் அன்று மாலையே வீடு திரும்பிவிட்டனர். சற்று வயிற்று உப்புசமும்,‌ இலேசான வலியும் மட்டுமே. மயக்க மருந்தின் வீரியத்தில் இலேசான தள்ளாட்டம். வார விடுமுறையில் மகன்களை அழைத்து வருவதாக சத்யநாராயணன், இன்று காலை கிளம்பிவிட்டான். அவனுக்கும் மனைவியை விட்டுப்போக மனதில்லைதான். இவள் தான் பிள்ளைகள் பயந்து விடுவார்கள் என அடம்பிடித்து அனுப்பி வைத்தாள்.‌ அப்பா வந்துவிட்டதால் அம்மாவுக்கு பெரிய பிரச்சினை இல்லையென மகன்கள் ஆறுதலடைவார்களே. விபரம் தெரிந்த பிள்ளைகள் என்பதால் பிரச்சினையில்லை. 

இவன் ஹாரனை‌ நிறுத்தியதும், “எவன்டா அது?” என்பது போல் தான் பக்கத்து பங்களா மாடியிலிருந்து அபிராமியும் கீழே எட்டிப் பார்த்தாள். மூன்றாவது மாடியிலிருந்து பார்க்க பக்கத்துவீட்டில் காரும், காருக்கு முன் நின்றிருந்த அவள் வண்டியும் தான் தெரிந்தது. காருக்குள் இருந்தவன் தெரியவில்லை. வீட்டு முன் பெரிய நாட்டு பாதாம் மரம் குடை மாதிரி விரிந்திருந்தது. 

அவசரமாக அங்கு வந்த அனுப்ரியா, “அக்கா சாவி கொடுங்க!” எனப் பதற, 

“நீ பாத்த வேலைதானா?” என்றாள். 

“மொத கீ கொடுங்க. வந்து பேசிக்கலாம்.” 

“இரு‌ நான் வர்றேன். உன்னால தள்ள முடியாது!”

“நான் தானே தள்ளி வச்சேன். நீங்க பேசிட்டிருங்க!” இவள் வேலை கெடக்கூடாது என்பதற்காக சாவியை வாங்கிக் கொண்டு வேகமாக கீழே ஓடினாள். 

கேட்டைத் திறந்து வெளியே வந்தவளைப் பார்த்து,

“உன் ஸ்கூல் மேட்டோட அம்மாவாடா!” என்றான் நம்பாத பாவணையில். இவளைப் பார்த்தாள் சிறு பெண் போல் இருக்கிறதே? ஸ்கூல் போகும் பையனுக்கு அம்மா போல் இல்லையே? இவளே கல்லூரி படிக்கிற பொண்ணு மாதிரியிருக்கிறாளே என்ற எண்ணம். ஒரு வேளை கேஜி படிக்கிற பிள்ளையா இருக்குமோ என்று‌ எண்ணங்கள் ஓட,

“நோ டாட். ஆனா, இந்த வண்டிலதான் அவங்க வருவாங்க. ஐ ஷ்யூர். ஆனா, இந்த அக்கா இல்ல.” வண்டி அதுதான். ஆனா வண்டி ஓனர் இவங்க இல்லை எனும்படி பிரணவ் சொன்னதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. அவன் சொன்னது போல் ஒரு பெண் தான் அவசரமாக பக்கத்து வீட்டிலிருந்து கையில் வண்டி சாவியோடு வெளியே வந்தாள். 

“நீ வாடா!” ஜமுனா பேரனை உள்ளே அழைத்து செல்ல,

“அத்தைகிட்ட போகாதே” காருக்குள்ளிருந்தே கத்தி சொல்ல,

“ஐ க்னோ டாட்.” இருவரும் உள்ளே செல்ல, 

பிரியா, “சாரி சார்.. சாரி சார்…” வரும்பொழுதே மன்னிப்பு கேட்கும் தோரணையில் கையை உயர்த்தியபடியே வந்தாள். 

அவசரமாக வண்டியில் சாவியை போட்டு சைட் லாக்கை திறந்தவள் ஹேன்ட் பாரைப் பிடித்து வண்டியைத் தள்ள முயற்சிக்க, தரையோடு பசை போட்டு ஒட்டியது போல் அழிச்சாட்டியமாய் நின்றது வண்டி. காரை எதிர்த்து வண்டி நிற்க, பின்னுக்கிழுத்து பிறகு முன்னே தள்ள வேண்டும். கார் மற்றும் வண்டி ஏற்றுவதற்கு தோதாக தளம் (vehicle ramp slope) சரிவாக போட்டிருக்க பின்னால் எளிதாக இழுத்தவளால் வண்டியைத் திருப்பி மேடான பகுதிக்கு தள்ள முடியவில்லை. 

“ச்சை… வண்டியா இது? எருமை மாடு மாதிரி இருக்கு. அசைவேனாங்குதே?” மனதிற்குள் சலித்தவாறே மீண்டும் முயற்சி செய்ய, நகர்ந்தபாடில்லை. 

அதற்குள் காருக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு பொறுமை பறந்தது. வேகமாக கதவைத் திறந்து வெளியே வந்தான். அவளிடம்‌ வந்தவன், அவளை ஒரு பார்வை பார்க்க, தள்ளு என்றது அந்தப் பார்வை. 

அனுப்ரியா நகர்ந்து கொள்ள, இவனே பின்னுக்கிழுத்து திருப்பி பக்கத்து வீட்டின்‌முன் நிறுத்தி ஸ்டான்ட் போட்டான். 

“சார் குட்டியானை (Tata ace) யான உள்ள நிக்கிது. இங்க நிப்பாட்டுனா அந்த வண்டி வெளியே வரமுடியாது. கொஞ்சம் தள்ளி நிப்பாட்றீங்களா? சாரி சார்… சின்ன ஹெல்ப்.” இறைஞ்சும் குரலில் கேட்டாள். மீண்டும் தன்னால் நகர்த்த முடியாதே என்ற எண்ணத்தில். 

“என்னைப்பாத்தா வாலட் சர்வீஸ் பண்றவன் மாதிரி தெரியுதா?” கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்க,

“சாரி சார்!” என்று மீண்டும் வண்டியைத் தள்ள அவள் முயற்சிக்க, ஸ்டான்டை எடுக்காமலே தள்ள, சட்டென வண்டி சாய, வண்டியைத் தாங்கிப் பிடிக்க முடியாமல் விழப் போக, அவசரமாக இவன் தான் தாங்கிப் பிடிக்க வேண்டியதாய்ப் போயிற்று.

(இந்த சீனெல்லாம் ஹீரோ ஹீரோயினுக்கு தானே வைக்கணும். சைட் கேரக்டருக்கு இங்கே என்ன வேலைன்னு ரீடர்ஸ் மைன்ட் வாய்ஸ் கழுவி ஊத்தறது நல்லாவே கேக்குது மக்களே! என்ன பண்றது? கதை என்னை இப்படித்தான் இழுத்துட்டு போகுது. போவோம் என்ன பண்ணிருவாங்கனு நானும் கதை போற போக்குல போறேன்🫣😉)

மேலே இருந்து பார்த்தவளுக்கு மரம் குடைபோல் விரிந்து மறைத்திருந்தது. 

அபிராமியும் வண்டியை பக்கத்து வீட்டின்‌ முன்புதான் நிறுத்தியிருந்தாள். அந்த வீட்டிற்கு தான் லான் கிராஸ் (புல் தரை) அமைக்க வந்திருந்தாள். அளவெடுத்து எத்தனை சதுரடி கிராஸ் மேட் தேவைப்படும் என்பதை அளந்து கொண்டு, அதற்குத் தேவையான மண், மற்றும் உரங்களோடு வண்டியில் வரவழைக்க, குட்டி யானையில் எடுத்துவந்தார் கண்ணையன். 

அபிராமி, வீட்டு உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருக்க, குட்டி‌யானையை உள்ளே எடுத்துவர ஏதுவாக, வண்டியை இவன் வீட்டு முன் நகர்த்தி வைத்தாள் அனுப்ரியா. அப்பொழுது எளிதாக நகர்த்தியவள், இவன் கொடுத்த ஹார்ன் சப்தத்தில் டென்ஷனாகி இப்பொழுது நகர்த்தக் கூட முடியவில்லை. ஸ்டார்ட பண்ணி தள்ளி வைக்கலாம் என்றாலும் இந்த வண்டி அவளுக்கு ஓட்டவராது. 

அவள் கூறிய இடத்தில் வண்டியை தள்ளி வைத்தவன் சாவியை எடுத்து வந்து அவள் கையில் கொடுத்தான். அவன் கொடுத்த விதமே இன்னொரு முறை இந்த வண்டி இங்க நிற்கக் கூடாது என சொல்லாமல் சொல்லியது.

ஆனால், இதே வண்டி இதே வீட்டிற்குள் ஒரு நாள் அவன் வண்டியோடு ஜோடி போட்டு நிற்கப் போவது அப்பொழுது அவனுக்குத் தெரியவில்லை. 

கொடுத்தவன் முகத்தையே பார்த்தாள். அந்த கண்கள். அந்த முகவெட்டு எங்கோ பார்த்த ஞாபகம். அதே சிந்தனையில் தனை மறந்து அவனையே பார்க்க,

“வாட்?” என்றான் அதட்டும் தொணியில். அவள் அப்படி பார்த்தது பிடிக்காமல்‌. 

“நோ சார்… சாரி சார்… தாங்க்யூ சார்” என்றாள் பதட்டத்தோடு.

“வண்டிய தள்ளவே முடியல. எப்படி ஓட்டுவ?” என்றான். பிரியா அப்படியொன்னும் தாட்டியம் கிடையாது. இருபது வயதில் ஒடிசலாகத்தான் இருந்தாள்.‌ இவளால் எப்படி இந்த வண்டியை ஓட்ட முடியும் என்ற சந்தேகம் அவனுக்கு. 

“அபிக்கா ஓட்டுவாங்க சார். மேல ஹவுஸ் ஓனர்கிட்ட பேசிட்டிருக்காங்க. கார்டனிங் செட் பண்ண வந்தோம். நமக்கெல்லாம் சைக்கிள் தான்!” என்றவளிடம் அதற்கு மேல் பேசவில்லை. திரும்பி வந்து காரில் ஏறியவன், காரை வீட்டிற்குள் ஏற்றினான். 

“அக்கா… என்ன ஒரு கோபம் அந்தாளுக்கு. காலியா கெடந்த எடத்துலதானே வண்டிய நிப்பாட்டினோம்?” மேலே ஏறிவந்து அபியிடம் சாவியைக் கொடுத்தவள் பொறிந்து தள்ளினாள். 

“ஆனா, காலியா இருந்தது அவங்க வீட்டு வாசலாச்சே?” அபிராமி சிரிக்க, 

“அக்கா…‌ அது கவர்மென்ட் ரோடு. கேட் வரைக்கும் தான் அவர் வீடு. இவர் என்னடான்னா ரோடெல்லாம் அவருக்குன்னு சொல்வார் போல?”

“இருந்தாலும் நீ கேட் முன்னாடி நிப்பாட்டினது தப்பு தான். அதுவும் இந்த வீட்டுக்கு வேலைக்கு வந்துட்டு அவங்க வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தியிருக்கோம்.” 

“எனக்கென்ன தெரியும்.‌ அந்நேரத்துக்கு வீட்டுக்கு ஆள் வருவாங்கன்னு. என்னமோ கொலைக் குத்தம் பண்ண மாதிரி முறைக்கிறார்க்கா. அவர் கண்ணப் பாக்கணுமே… அப்படியே நம்ம சக்தி கண்ணு மாதிரி. ரெண்டு‌ பேரையும் அப்பா, மகன்னு சொல்லலாம். அப்படியிருந்துச்சு‌” என்றதும் பட்டென அவளை முறைத்தாள். 

“ஓ… அப்படி சொல்லக் கூடாதுல்ல… தப்பா அர்த்தமாகும்ல?” என்றவள் நாக்கை கடித்தாள். 

அதற்குள் வீட்டு உரிமையாளர் வர, டெர்ரஸ் கார்டன் பற்றி அவர் கேட்க, தன் கைபேசியில் இருந்த சில ஃபோட்டோக்களை மாடலாகக் காட்டினாள். தனது வாட்சப் குரூப் லிங்கை அனுப்பி அதில் இருக்கும் மற்ற மாடல்களையும் பார்க்கச் சொன்னாள். 

மற்ற விபரங்களைப் பேசிக் கொண்டிருக்க, அவள் அலைபேசிக்கு அழைப்பு வர ஏற்றுப் பேசியவள், எதுவாக இருந்தாலும் கால் பண்ணச் சொல்லிவிட்டு, 

பிரியாவிடம், “சக்திக்கு பிராக்டீஸ் முடிஞ்சதாம். வா உன்னை நர்சரில விட்டுப் போறேன்.” என்றாள். 

“ஓகே க்கா!” என்றவளிடம்,

ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டே, “பிரியா இன்னொரு லொக்கேஷன் இந்த ஏரியா தானே? எங்கேனு பாரு!” என்று சொல்ல, 

பிரியாவும் வாட்சப்பில் அவர்களது நர்சரி குரூப்பிற்கு வந்த லொக்கேஷனை ஆன் செய்து பார்க்க, 

“அக்கா இங்கதான்க்கா காட்டுது. எந்த வீடுன்னு தெரியலையே?” அவள் பின்னாடி இறங்கி வந்தபடியே கூற,

“கால் பண்ணி கேட்டுக்கலாம்! இந்த வீட்ல முடிச்சுட்டு அங்க கண்டினியூ பண்ணுவோம்!” பேசிக்கொண்டே கீழே வந்தனர். 

சக்திபாலனுக்கு பள்ளியில் சுதந்திரதின விழாவிற்கான மார்ச்பாஸ்ட் ப்ராக்டீஸ் நடைபெறுகிறது. அதனால் தான் இன்னும் இவள் மகனை அழைக்கச் செல்லவில்லை. இல்லையென்றால் அவளும் தானே மகனை அழைக்க இந்நேரத்திற்கு பள்ளி சென்றிருக்க வேண்டும். 

கண்ணையன் அங்கு கிராஸ் மேட்களை, அளந்து சமன்படுத்திய இடத்தில் நெட்டுக்கு அடுக்கிக் கொண்டிருந்தார். 

“அண்ணா முடிச்சுட்டு வந்துருங்க. நான் பிரியாவ நர்சரில விட்டுட்டு ஸ்கூல் போறேன். வாட்டரிங் பைப் நாளைக்கு வந்து செட் பண்ணிக்கலாம்! பிளம்பர்கிட்ட சொல்லிறுங்க.” அவரிடமும் தகவல் சொல்லிவிட்டு இருவரும் வெளியே வந்தனர்‌. எல்லா வேலைகளுக்கும் கைவசம் ஆள் வைத்திருக்கிறாள். 

அபிராமி வண்டியில் அமர்ந்து இவளை பின்னால் அமரச் சொல்ல, “ம்கூம்… நீங்க வண்டியத் திருப்புங்க. அப்பறம் ஏறிக்கிறேன். எனக்கு என் உசுரு‌ முக்கியம்” என்றதும் அபிராமி வாய்விட்டு சிரித்தாள். அவள் வண்டியைத் திருப்பும் லாவகம் அப்படி. 

வீட்டிற்குள் வந்ததும் உடை மாற்றி பால்கனி பக்கம் வந்தவன், மேலிருந்து இவர்களைப் பார்த்தான். 

ஃப்ளோரல் பிரிண்ட் கலம்காரி ஷார்ட் குர்தாவும், ப்ளூ கலரில் வொய்ட் லெக் (wide leg) ஜீன்ஸும் போட்டிருந்தாள். காலை லாவகமாகத் தூக்கிப் போட்டு வண்டியில் ஏறியவள் ஒரு காலை தரையில் ஊன்றி மறுகாலால் ஹியரை செல்லமாய்த் தட்டினாள். என்ஃபீல்டின் கர்ஜிக்கும் சத்தத்தோடு வண்டியை ஸ்டார்ட் செய்தவள் ஹேண்டிலை லாவகமாகப் பிடித்தபடி அவள் நிமிர்ந்து அமர்ந்த விதமே அத்தனை ஸ்டைலாக இருந்தது பக்கத்தில் நின்று பார்த்தவளுக்கும், பக்கத்து வீட்டு பால்கனியிலிருந்து பார்த்தவனுக்கும்.  இவள் உயரத்திற்கும், ஈடுக்கும் ஏற்ற வண்டிதான் என நினைத்தான். 

“இவங்க தான் சக்தியேட அம்மா!” என்றான்‌உடைமாற்றி வந்து கீழே வேடிக்கை பார்த்த பிரணவும். ஹெல்மெட் போட்டிருந்தாலும் அடையாளம் தெரிந்தது. 

ஹெல்மெட்டிற்குள் அடங்கியது போக மீதி முடியை காற்று கலைக்க, பைக்கை ஒரு அரைவட்டமடித்து பிரியா முன் நிறுத்த, அவள் பின்னால் ஏறிக் கொண்டாள். வளைவுகளில் வண்டியை அவள் உடலோடு சேர்த்து லாவகமாகத் திருப்பியபோது பிரியாவிற்கு தான் அடிவயிற்றில் பூச்சி பறந்தது. 

உடை மாற்றி கீழே வந்தவன் மகனுக்கு வெஜிடபுள் சாலடும், பழச்சாறும் எடுத்துக் கொண்டு மாடியேறினான். 

விஷாலி கீழே இருப்பதால் பிரணவை கீழே விடுவதில்லை. மருத்துவமனையிலிருந்து வந்தவளாயிற்றே. 

மகனின் தேவைகளை கவனித்து, அவனோடு சிறிது நேரம் செலவிட்டு கீழே வந்தான். 

“எலா உந்திக்கா?” (எப்படியிருக்குக்கா)அக்காவை நலம் விசாரித்தான். 

“பரவாலேதுரா” என்றாலும் முகம் சோர்ந்துதான் இருந்தது. அப்பொழுது தானே தூங்கி எழுந்தாள். 

ஜமுனா, மகனுக்கு சூடாக டீயும், விஷாலிக்கு நறுக்கிய பழத்துண்டுகள் அடங்கிய தட்டோடும் வந்தார். பிரணவை முன்னிட்டே இவர்களது சிற்றுண்டியும் வெஜிடபுள் சாலட், ஃப்ரூட் சாலட், முளைகட்டிய சுண்டல் என்றாகிவிட்டது. எண்ணெயில் பொறித்த, வறுத்த உணவுகளுக்கு எப்பொழுதும் 144 தான். 

அம்மாவிடம் தட்டை வாங்கிக் கொண்டே, “என்ன முடிவு பண்ணிருக்க குரு?” விஷாலி தம்பியிடம் கேட்க, 

“நேர்லயே பாத்து பேசலாம்னு முடிவு பண்ணிருக்கேன் க்கா” என்றான் அக்கா கேட்க வருவது புரிந்து. எனினும் குரலில் சுரத்தை இல்லை. 

“எங்கேனு கண்டுபிடிச்சுட்டியா?”

“ம்ம்ம்… அட்ரஸ் வாங்கிட்டேன்!” என்றவனிடம்

“நானும் வரவா?” என கேட்க, 

“இந்த உடம்போடயா?” என்று சிரித்தான். 

“இதென்ன… ரெண்டு நாள் ரெஸ்ட்டெடுத்தா சரியாப்போகும். நானும் பாத்து பேசுவேன்ல. இல்லைனா பாவாவ கூட்டிட்டுப் போறியா. அவர்னா பொறுமையா பேசுவாரு. நீ ஏதாவது பேசி ரசாபாசமாயிட்டா. ஏன்னா அவளுக்குன்னும் ஒரு குடும்பமிருக்கு. எக்காரணத்தைக் கொண்டும் நம்மால எந்த பாதிப்பும் வரக்கூடாதுல்ல?”

விஷாலி சொல்வது அவனுக்குப் புரியாமலில்லை. தான் தனியாகப் போய் பேசுவதைவிட அக்கா உடனிருந்தால் அது வேறு மாதிரி தான். ஆனால் அதற்கு அவள் உடம்பு இப்போதைக்கு ஒத்துழைக்காதே. 

“யாரு‌… பாவாவா? தமிழ் பாதி தெலுங்கு பாதி கலந்து செய்த கலவை நான்னு பேசுவாரு‌. அவர வச்சு பேசச் சொல்றியா?” அக்காவை கேலி செய்தவன், 

ஆழ்ந்த குரலில், “எனக்கு என் சின்னா முக்கியம்க்கா. நேனு சூஸுக்குண்டான்லே. பாதப்படொக்கு!” (நான் பாத்துக்கறேன். கவலைப்படாதே)என்று சொல்ல,

“இப்ப நீ மட்டும் எப்படி பேசுற?” எனக்கேட்டு சிரிக்க,

“என்ன பண்றது அப்பாகிட்ட தெலுங்கு, அம்மாகிட்ட தமிழ்னு பேசிப்பேசி இப்ப எந்த லாங்வேஜ்ல பேசாறோம்னு நமக்கே தெரியல.” இவன் கூறியதைக் கேட்டு விஷாலி மேலும் வாய்விட்டு சிரித்தவள், முகத்தைச் சுழித்து அடிவயிற்றைப் பிடிக்க,

“அக்கா வலிக்குதா?” என்றான். 

“இல்லடா… சிரிச்சதுல ஸ்டிச் போட்ட எடத்துல சுள்ளுனு‌ இழுக்குது. அவ்வளவுதான்!” என்றாள். 

இதெல்லாம் அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. எத்தனை பார்த்திருக்கிறான். அக்காவுடன் சகஜமாக பேசியதில் அவனுக்கும் சற்றே முகம் மலர்ந்தது. தம்பியின் மனநிலை புரிந்துது. அதனால் தான் பேச்சை இயல்பாக கொண்டு சென்றாள். 

“என்னமோ போடா. இப்படியெல்லாம் நடக்கணும்னு நம்ம தலைவிதி!” ஜமுனா அலுத்துக் கொண்டே காலி கப்பையும், தட்டையும் எடுத்துச் சென்றார். 

“அந்த டாக்டர் சொல்லலைனா இதுவும் நமக்குத் தெரியாதுல்லடா?” என்று சொல்ல, ஆழ்ந்த பெருமூச்சு மட்டுமே அவனிடம். என்ன சொல்வதென்று தெரியவில்லை. யாரை நோவது. 

“கெட்டதுலயும் ஒரு நல்லதுடா. இப்ப நம்ம சின்னாவுக்கு ரெண்டு ஆப்ஷன் இருக்குல்ல.” விஷாலியின் பேச்சில் நம்பிக்கை துளிர்விட்டது. 

குருப்பிரசாத்திற்கும் அதே நம்பிக்கைதான். அது அவன் கண்களிலும் ஒளிர்ந்தது. 

“எப்ப பிரசாத் போற? எதுனாலும் சீக்கிரம் பண்ணனும்!” அவனுக்கு அக்காவின் அவசரம் புரிந்தது. ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என அவசரப்பட முடியாதே. பொறுமையாகதத்தான் கையாள வேண்டும். 

“இந்த வாரமே போகலாம்னு இருக்கேன்க்கா. இங்கதான் விழுப்புரம் பக்கத்துல ஏதோ ஒரு கிராமம். கூகுள்ல போட்டாக்கூட வருமா தெரியல.” 

இரண்டு நாட்களாக அவள் விலாசம் தேடுவதே முக்கிய வேலையாக இருந்தது. அது ஒன்றும் அத்தனை எளிதாக இல்லை. ஒரு வழியாக அவள் இருப்பது விழுப்புரம் பக்கத்தில் ஒரு கிராமம் என்று மட்டும் தெரிந்தது.

 அது அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி நைனா என்று கண்சிமிட்டிச்  சிரித்தது காலச்சக்கரம்‌ 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 8

8“நீங்க குருப்ரசாத்‌தானே?” என்று சிரித்தபடி கேட்க புரியாத பாவணை அவனிடம். “என்ன சார் தமிழ்ல தானே கேட்டேன். ஓ… தெலுங்குல கேக்கணுமா?” என்றவளை ஆச்சர்யமாகப் பார்க்க, “ஹவ் இஸ் யுவர் சன் டூயிங்?” எனக் கேட்டு மேலும் அவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினாள். “விட்டா சாதகமே சொல்வீங்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 7 கருத்துகள் உள்ளன

    1. ஹீரோவத்தானே‌ கேக்குறீங்க… எனக்கென்னமோ ரைட்டர கேக்குறமாதிரியே‌‌ ஒரு ஃபீலிங்கு… 🤔🤔😬

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்