arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 9

என் வீட்டு தோட்டத்தில் 9

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.4/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

 

“டேய் சக்தி! பிராக்டிஸ் இல்லைனா ஓரமாப் போய் உக்காரு. அவங்கள வேலை செய்யவிடு! ஒய்ட் யூனிஃபாரம் வேற. ஏன்டா இப்படி படுத்துற?” என்று சொல்லிக் கொண்டே பள்ளி அலுவலகம் நோக்கிச் சென்றவளை சட்டையே செய்யவில்லை சக்திபாலன். 

வெள்ளைச் சீருடையெல்லாம் எப்பொழுதோ செம்மண் ஹோலி கொண்டாடிவிட்டது. அபிராமியும் இன்று மதியத்திலிருந்து பள்ளியில் தான் இருக்கிறாள்.

சுதந்திரதின விழாவும் அதையொட்டி வரும் பள்ளி ஆண்டு விழா அதையடுத்து நடைபெற இருக்கும் விஜயதசமி பள்ளி அட்மிஷன் என பள்ளி வளாகத்தைப் புணறமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. மழலையர் வகுப்பு மாணவர்கள் (kindergarten) விளையாடும் பூங்காவில் புல்தரை மறுசீரமைக்கும் பணியும், இன்னும் இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் சுதந்திரதினவிழாவிற்காக, காய்ந்து போன செடிகளை அகற்றிவிட்டு புதுச் செடிகளை நடும் பணியும் நடந்து கொண்டிருந்தது.

 

அபிராமியின் குறிஞ்சி கிரீன்ஸ் நர்சரியில்தான் செடிகளை வாங்கியிருந்தனர். அது வழமைதான். கண்ணையன் தான் செடிகளை நடும் வேலைகளை உதவிக்கு ஒரு ஆள் வைத்துக்கொண்டு ஒரு வாரமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். எப்பொழுதும் வழக்கமாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வந்து வேலிச் செடிகளுக்கு (fencing plant) கிராப் வெட்டி சீரமைத்துக் கொடுப்பார். மஞ்சள் கலந்த பச்சையில் Duranta செடிகள் பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியும், மற்றும் சிறார் பூங்காவைச் சுற்றிலும் வட்டவடிவில் நான்கு பக்கம் வழிவிட்டு இடுப்பு உயரத்தில் சீராக வெட்டி வளர்க்கப்பட்டிருந்தது. 

இன்றும்… கார் உள்ளே வந்து வெளியே திரும்பும் U வளைவிற்கு இடைப்பட்ட பகுதியில் செடிகளை வெட்டி சீரமைத்துக் கொண்டிருந்தார். பட்டுப்போன செடிகளை அகற்றிவிட்டு புதிய செடிகளை நட்டுக் கொண்டிருந்தனர். பைக், கார் வந்து திரும்பும் இடமென்பதால் செடிகள் கண்ணில் படாதவாறு நித்யகல்யாணி, அந்திமந்தாரை போன்ற வளர்த்தி குறைவான குறுஞ் செடிகளையே நட்டனர். (ஹைவேஸ்ல இரண்டு பக்க சாலைக்கும் நடுவுல இடுப்பளவு சுவரெழுப்பி மண் கொட்டி செடி வளத்திருப்பாங்களே அதுமாதிரி) 

தொட்டிச் செடி, க்ராஸ் மேட், உரம் எல்லாம் கண்ணையன் வரும்பொழுதே குட்டியானை வைத்து எடுத்து வந்துவிட்டார். 

மதிய வேளையோடு பள்ளி முடிய, சக்திக்கும் மார்ச்பாஸ்ட் மற்றும் சிலம்பம் பயிற்சி இருக்க, பள்ளியில் பில் வாங்கிக் கொண்டு மகனையும் அழைத்து வரலாம் என வந்திருந்தாள். வரவேற்பறையில் வைக்க வாஸ்து மூங்கில், கற்றாழை மாதிரி சிறிய வகை இன்டோர் ப்ளான்டும் கேட்டிருந்ததால் எடுத்து வந்திருந்தாள்‌‌. 

ஆசிரியர்களோடு மீட்டிங்கில் இருந்ததால் பள்ளி மேலாளர் இவளை காத்திருக்கச் சொல்ல, எப்படியும் சக்திக்கும் பயிற்சி முடிய தாமதமாகுமென வெய்ட்டிங் ஹாலில் அமர்ந்திருந்தாள். வழக்கம் போல் பெற்றோர்கள் வரத்தாமதமான மாணவர்கள் காத்திருக்க, அவர்களோடு சோஷியல் டிஸ்டன்சில் பிரணவும்.

குருதான் அப்பாவிடம் பனிரெண்டு மணியோடு பள்ளிநேரம் முடிகிறது என்பதைச் சொல்ல மறந்துவிட்டானே. எனவே வழக்கமான நேரத்திற்குப் போகலாமென திருவேங்கடமும் சாப்பிட்டு படுத்துவிட்டார். ஜமுனா மதிய உணவுப் பையை கையில் கொடுக்கும் பொழுதுகூட அவனுக்கு நினைவில் வரவில்லை. அவன் தான் வேறொரு சிந்தனையில் உழன்று கொண்டிருந்தானே? 

விஷாலியை, மீண்டும் ஒருமுறை மருத்துவரிடம் காண்பித்துவிட்டு, கறையும் தையல் (absorbable suture) என்பதால் பிரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போக, மருமகளைப் பார்க்க வந்த விஷாலி மாமியார், தான் கவனித்துக் கொள்வதாக கூடவே அழைத்துச் சென்றுவிட்டார். இல்லையெனினும் சத்யநாராயணன் மனைவியை பார்த்துக் கொள்வான். மகன்களையும் தங்கள் வேலையைத் தாங்களே பார்த்துக் கொள்ளும்படிதான் பழக்கியிருக்கிறான். அதனால் விஷாலிக்கு பிரச்சினை இல்லை. அம்மா வீடு மாதிரியே அங்கும் ஓய்வெடுக்கலாம். மேல் வேலைக்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அடுத்த மாதம் ஒரு செக் அப்பிற்கு வந்தால் போதும் என்று‌ கிளம்பிவிட்டாள்‌. 

இங்குதான் பிரணவிற்காக சுத்தம், சுகாதாரமென வெளி ஆட்களை சகஜமாக வீட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டான். அவர்கள் எந்தளவிற்கு சுத்தத்தை கடைபிடிப்பார்கள், அவர்களுக்கு ஏதாவது சாதாரண சளி, காய்ச்சல் என்றால் கூட பிரணவிற்கும் எளிதில் பரவுமே. அதனாலே ஜமுனா வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்ளவில்லை. அம்மா சிரமமறிந்து பிரசாத்தே உதவி செய்வான்.

மார்க்கெட்டில் வீட்டுத் தேவைகளுக்கு என்னென்ன அட்வான்ஸ் டெக்னாலஜி வந்திருக்கிறதோ அத்தனையும் செய்து கொடுத்துவிட்டான். டிஷ் வாஷரிலிருந்து ஆட்டோ மேட்டிக் வாக்யூம் க்ளீனர் வித் மாப் வரை எல்லாம் பக்கா. அலெக்ஸா என்றால் போதும்‌. வந்தேன் அய்யா என்று பெரிய சைஸ் நண்டு மாதிரி ஊர்ந்து வந்து‌ நிற்கும். சேஃபாவில் அமர்ந்து கொண்டே கட்டளையிட்டால், எல்லாவற்றையும் நருவிசாக மேய்ந்து செல்லும்.  

எந்தளவிற்கு உட்கார்ந்த இடத்திலிருந்து அம்மா, அக்கா, மற்றும் மனைவியை வேலை வாங்கினானோ இப்பொழுது அந்தளவிற்கு எல்லாம் அவனே தனக்கும், மகனுக்கும் அம்மாவுக்கும் பார்த்து பார்த்து செய்கிறான். ஜமுனா கூட ஆதங்கமாக நினைப்பதுண்டு. கல்யாணம் பண்ணி பொண்டாட்டி புள்ளைன்னு வந்தா தெரியும்டா உன் சங்கதி என எத்தனையோ பல முறை கேலியாகவும் சில சமயங்களில் கடுப்பாகவும் சொல்லியிருப்பார். தனது வாக்குதான் மகனுக்கு பலித்து விட்டதோ என பலமுறை உள்ளுக்குள் அழுதிருக்கிறார். 

இரண்டு மணி வாக்கில் காத்திருந்த மொத்த மாணவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். பயிற்சி மாணவர்கள் மட்டுமே ஸ்கூல் கிரவுன்டில். 

அபிராமியும், பிரணவும் மட்டுமே அந்த அறையில். ஏசி மெலிதாக இருந்தது. மீட்டிங் முடிந்து பெரும்பாலான ஆசிரியர்களும் கிளம்பிவிட்டனர். சுத்தம் செய்யும் பணிப்பெண்கள் மட்டுமே. 

பக்கத்து இருக்கையில் ஸ்கூல் பேக்கையும், லன்ச் பேக்கையும் வைத்துவிட்டு தனித்திருந்தவனைப் பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது. பெற்றவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் போல என இவளே அனுமானித்துக் கொண்டாள். இப்பொழுதும் முகக்கவசம் அணிந்திருந்தான். சாப்பிட்டு ஒரே இடத்தில் அமர்ந்திருக்க பிரணவுக்கு தூக்கம் கண்ணைக் கட்டுவது போல் இருந்தது. இலேசாக அவன் தலை கூட விசுக்கென ஆடியது. சுதாரித்து உட்கார்ந்தான். மீண்டும் கண்களைச் சுழட்டி தலை சாமியாடியது. 

இதே போல் பள்ளியில் மதிய வகுப்பில் கண்ணயர்ந்து, ஆசிரியரிடம் குட்டு வாங்கியது இவளுக்கு நினைவிற்கு வர தன்னை மறந்து சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பில் சின்னவன் முகம் மாறியது இவளுக்குத் தெரியவில்லை. எந்நேரமும் மாஸ்க் போட்டிருப்பதால் வகுப்பிலும் இவனை தோழமைகள் ஸ்பைடர்‌மேன் என கிண்டல் செய்வதுண்டு. ‌அது போல் இவளும் சிரிப்பதாக எண்ணிக் கொண்டான். 

பயிற்சி மாணவர்களுக்கு உடற்பயிற்சி ஆசிரியர் சிறிது நேரம் ஓய்வு கொடுக்க அம்மாவிடம் ஓடி வந்தான்‌ சக்தி. முற்றிலும் வியர்த்து வழிந்து சட்டை உடம்போடு ஒட்டியிருந்தது. ஓடிவந்த வேகத்தில் மூச்சு வாங்கினான். 

“ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வந்திருக்கலாம்லடா!” என்றபடி கையில் வைத்திருக்கும் காட்டன் துப்பட்டா கொண்டு முகத்தைத் துடைத்தாள். இன்னும் துப்பட்டா எல்லாம் புழக்கத்தில் இருக்கா என கேட்கக் கூடாது. இது அவள்‌ வெயிலிலிருந்து முகத்தை மறைத்துக் கட்ட வைத்திருப்பது. 

“இன்னும் ப்ராக்டீஸ் முடியலம்மா. பிரேக் விட்ருக்காங்க. மறுபடியும் போகணும். ம்மா… நான் தான் எங்க க்ரூப்க்கு லீடர். நான் தான் ஃப்ளாக் புடிச்சு முன்னாடி போவேன்.‌ நெக்ஸ்ட் சிலம்பம் சுத்திக் காண்பிக்கிறேன்” என்று ஆர்வமாகச் சொன்னவனை, கன்னம் வழித்து முத்தம் வைத்தாள். சிலம்பம், கராத்தே போன்ற தற்காப்புக் கலை சாகசங்களும், யோகா மாணவர்களால் பிரமிடும் விழாவில் செய்து காண்பிக்கப்படுகிறது. 

“ம்மா… கண்ணையா தாத்தா பாத்தேன்!” கிரவுன்டில் இருந்ததால் இன்று அவர் வேலை செய்வதைப் பார்த்திருக்கிறான். 

“ஆமாடா… எப்பவும் வருவார் தானே?” என்றவள் மகனுக்கு பழரசமும், தாளித்த சுண்டலும் எடுத்து வந்திருந்தாள். பாட்டிலோடு அப்படியே கொடுத்தாள். 

வாங்கியவன் குடிக்க முற்பட, ஏதோ தோன்ற,‌ “சக்தி… இங்க கொடு!” என்று மீண்டும் ஜூஸ் பாட்டிலை வாங்கிக் கொண்டாள். பிரணவைப் பார்த்தாள். அவன்‌ மட்டும் தானே அங்கு‌. அவனும் சிறுவன் தானே. வெகுநேரமாக அங்கு அமர்ந்திருக்கிறான்.‌ எதுவும் சாப்பிட்ட மாதிரி தெரியவில்லை.‌ மணி மூன்று‌ இருக்குமா என நிமிர்ந்து பார்க்க சுவர்க் கடிகாரம் மூன்று அடிக்க பத்து நிமிடமிருப்பதாகக் காட்டியது. பனிரெண்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டிருப்பான். அவனுக்கும் பசிக்கும் தானே. 

“ஜுஸ் குடிக்கிறியா… இங்க வா!” அபிராமி அழைக்க, வேகமாக மறுத்து தலையாட்டினான். 

“உம் பேரென்ன… எந்த க்ளாஸ்? உன் பேரன்ட்ஸ் வர லேட்டாகுமா” என்றாள் மீண்டும். அவனுக்கோ ஏன் தாத்தா இன்னும் வரவில்லை என்ற கோபம். எவ்வளவு நேரமாக ஒத்தையில் அமர்ந்திருப்பது‌. 

“பிரணவ்… ஃபோர்த் ஸ்டேன்டர்ட்.” என்றான் சோர்ந்த குரலில். சிறுவன் என்பதால், எல்லா மாணவர்களின் பெற்றோரும் வந்து அழைத்துச் சென்றிருக்க, தான் மட்டும் தனித்திருக்க ஒரு மாதிரி இருந்திருக்கும் போல. 

அதுவும் சற்று முன் அபிராமியும் சக்தியும் நடந்து கொண்டவிதம் அவனிடம் சிறு அலையை உண்டு பண்ணியது. மூச்சுவாங்கி, வியர்வை வடிய ஓடி வந்தவன் வந்தவுடன் அபிராமியின் தோளில் தான் முகத்தை ஒரு உருட்டு உருட்டி வியர்வையைத் துடைத்தான். “பன்னிப்பயலே” என்று செல்லமாக தோளில் அடித்துவிட்டுதான் தனது துப்பட்டாவை எடுத்து சக்தியின் முகமெங்கும் துடைத்துவிட்டாள். 

குரு, வீட்டிற்குள் வந்ததும் ஆசையாக பிரணவ் ஓடிச்சென்றால், ஒரு அடிக்கு முன்னே இவனை தள்ளி நிறுத்திவிட்டு, குளியலறை சென்று குளித்து சுத்தமாகி, கைகளில் சானிடைசிங் தடவிக் கொண்டு தான் மகனிடமே வருவான். 

தனக்காகத்தான் என விபரம் தெரியத் தெரிய புரிய ஆரம்பித்தாலும், என்ன இருந்தாலும் சிறுவயதுதானே. அவனுக்குள் ஒரு ஏக்கம் குடிகொண்டது. 

சிறு தும்மல், சளி என்றால் கூட மகனிடம் காட்டிக் கொள்ளாமல் பிரசாத் தவிப்பது புரியும். அடிக்கடி டெம்ப்ரேச்சர் சோதித்துக் கொண்டே இருப்பான். தன்னை கவனித்துக் கொண்டே இருப்பதும் பிடிக்கும்‌. அதையும் அனுபவித்திருக்கிறான்.

ஆனால் இத்தனை வியர்வையோடு அம்மாவைக் கட்டிக் கொண்டு நிற்பவனைப் பார்க்க கண்களில் சிறு ஏக்கம் பிறக்காமலிருந்தால்தான் தவறு. சிறு பிள்ளை மனதுதானே. சக்தியோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்தது. 

சக்தி வேகமாக அவனிடம் சென்று, “உன்னோட வாட்டர் பாட்டில் தா. ஜுஸ் ஷேர் பண்ணிக்கலாம்!” சொன்னதோடு நில்லாமல், அவன் லன்ச் பேக்கை எடுக்கப்போக, 

“டோன்ட் டச்… யூ லுக் டர்ட்டி!” என்று வேகமாகச் சொன்னவன் அதே வேகத்தில் லன்ச் பேக்கைப் பின்னுக்கிழுத்துக் கொண்டான். 

‘அட!’ என்பது போல் அபிராமியும் பார்த்தாள்‌. சிறு புன்னகை கூட அவள் முகத்தில். பின்னே அவன் சொல்லிய விதத்தையும், லன்ச் பேக் இழுத்த வேகத்தையும் பார்த்தவளுக்கு சிரப்புதான் வந்தது. 

“கத்துக்கோடா!” என்றாள் மகனிடம். 

அதற்குள் அவ்வழியே வந்த அவனது வகுப்பாசிரியை இவர்களைப் பார்த்தார். பிரணவ் மட்டும் அங்கிருக்க வேகமாக வந்தவர், 

“பிரணவ்… வொய் ஆர் யூ ஸ்டில் ஹியர்?” என விசாரித்தார். இன்னும் யாரும் அழைத்துப் போக வரவில்லையா? ஏன் கவனிக்கவில்லை என்ற கேள்வி அவருக்கு வருமே. அதுவும் இவனுக்கான இன்ஸ்ட்ரக்ஷன் ஏகப்பட்டதாச்சே. மீட்டிங் இருந்ததால் அங்கு சென்றுவிட்டார். வகுப்பாசிரியை என்பதால் அவனது மெடிக்கல் கண்டிஷன் தெரியும். 

சக்தியிடமும், “கீப் அவே ஃப்ரம் ஹிம் சக்தி. யூ ஆர் ஸ்வெட்டிங் அ லாட்” என்றவுடன், இப்பொழுது அபிராமிக்கும் கோபம் வந்தது. யாராக இருந்தாலும் மகனை அழுக்கன் எனச் சென்னால் கோபம் வரத்தானே செய்யும். பிரணவ் சொன்னான் என்றால் சிறுபிள்ளை.‌ யாரிடமும் எதுவும் வாங்கி சாப்பிடக்கூடாது என வீட்டில் சொல்லி வைத்திருப்பார்கள். அதனால் அவன் பேக்கை இழுத்து இவனை அழுக்கன் என சொன்னதை மன்னித்தவள், ஆசிரியர் சொன்னதும் கோபம் வந்தது.

“சக்தி இங்க வா!” சற்று அதட்டியே மகனை அழைத்தாள். 

இவளது கோபம் புரிந்திருக்க வேண்டும். 

பிரணவ் வகுப்பாசிரியை, இவளிடம்… “சாரி மேம், உங்க ஃபோன் ஒரு நிமிஷம் தர முடியுமா? பிரணவ் அப்பாக்கு இன்ஃபார்ம்‌ பண்ணணும்.‌ என்னோட ஃபோன் பேக்ல இருக்கு” என்று கேட்க,‌ அபிராமி அவளது ஃபோனை கொடுத்தாள். 

பிரணவின் ஐடி கார்டைப் பார்த்து குருவிற்கு அழைத்தார் ஆசிரியை. 

கார் ஓட்டிக் கொண்டிருந்தவன் அழைப்பை எடுத்துப் பார்க்க, ட்ரூ காலரில் குறிஞ்சி க்ரீன்ஸ் என்று காண்பிக்க, ஏதோ விளம்பர கால் என எடுக்கவில்லை. அந்த எண்ணும் அப்படித்தான் இருந்தது ஃபேன்ஸி நம்பர் போல. 

மீண்டும் ஒரு முறை ஆசிரியர் முயற்சித்தார். முழுவதுமாக அழைப்பு சென்று அடங்கியது. 

“தாத்தா நம்பருக்கு கால் பண்றீங்களா?” என்றான். 

அவனிடமே நம்பரைக் கேட்டு திருவேங்கடத்திற்கு அழைக்க, தூக்கத்திலிருந்தால் கைபேசியை பக்கதத்தில் வைத்துக் கொள்ள மாட்டார். ஜமுனாவிடம், எழுப்பிவிடச் சொல்லிவிட்டு படுத்துவிட்டார். அதுவும் முழு அழைப்பும் சென்று அடங்கியது.

அதற்குள் ஆசிரியரை ஒரு அட்டென்டர் வந்து பிரின்சிபல் அழைப்பதாகச் சொல்ல, இவளிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். 

“மேம்… என் ஃபோன்லருந்து இவங்க அப்பாக்கு கால் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிறேன். ஸ்கூல் நம்பர்னா உடனே எடுப்பாரு. ரேன்டம் நம்பர்ங்கறதாலதான் உங்க ஃபோன அட்டென்ட் பண்ணலபோல” என்று சென்றுவிட்டார். 

இப்படியா கேர்லெஸ்ஸா இருப்பாங்க. அப்பாவும் எடுக்கல. வீட்லயும் எடுக்கல. என்ன பேரன்ட்ஸ் இவங்கெல்லாம் என்று பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு கோபம் வந்தது.

மீண்டும் இவளே ஒரு முறை அழைக்க, ஹாலில் இருந்த ஃபோனை ஜமுனா தான் எடுத்தார். 

அவனிடமே பேசச் சொல்லி கொடுத்தாள். கையில் வாங்கவில்லை. “ஸ்பீக்கர்ல போடுங்க ஆன்ட்டி!” என்றான். அதே போல் ஸ்பீக்கரில் போட, அவன் கையில் வாங்காமலே பேசினான். 

“நானம்மா… ஸ்கூல் 12’o கிளாக் விட்டாங்க. இன்னும் தாத்தா வரல” என்றான். குரல் கூட உடைவது போல் இருந்தது. தனித்திருந்தால் கூட தெரிந்திருக்காது. அபிராமியையும் சக்தியையும் பார்க்கப் பார்க்க அவனுக்கு என்ன தோன்றியதோ. மூன்று‌மணி நேரமாக ஒரே இடத்தில் காத்திருந்தது, அரைத்தூக்கத்தின் சிடுசிடுப்பு எல்லாம் சேர்ந்து அவனுக்கு அழுகை வரும்போல் ஆயிற்று. 

“என்னடா சின்னா… உங்கப்பா சொல்லலையே… இந்தா உங்க தாத்தாவ அனுப்புறேன்!” அவர் பதட்டமானார். இந்நேரம் எல்லாரும் போயிருப்பாங்களே. 

“பக்கத்துல மிஸ் யாரும் இல்லையா?”

“இல்ல… ஒரு ஆன்ட்டிதான் இருக்காங்க!”

“அவங்கிட்ட கொடு!” என்று சொல்ல, 

“சொல்லுங்கம்மா!” என்றாள். ஃபோன் இவள் கையில் தானே இருக்கிறது. 

“ஏம்மா… ஸ்கூல் விட்டது தெரியாதும்மா. அவங்க தாத்தா வர்ற வரைக்கும் பாத்துக்கோம்மா.. இதோ அவரை அனுப்பறேன்” என்று பேசிக் கொண்டே பக்கத்தில் இருந்த அறைக்குள் சென்று அவரை எழுப்ப ஆரம்பித்தது, இவளுக்கு இங்கே கேட்டது.

“ஏங்க… எந்திருக்க… மதியமே ஸ்கூல் விட்டாங்களாம். புள்ள இம்பூட்டு நேரமா தனியா உக்காந்திருக்கான். சீக்கிரம் போங்க” அடிக்காத குறையாக திருவேங்கடத்தை உலுக்கினார். 

“குரு சொல்லவே இல்ல ஜமுனா!” தூக்க கலக்கத்தில் பேசுவது இவளுக்கே கேட்டது. 

“சரி… சரி… சீக்கிரம் கெளம்புங்க. ஸ்கூல்லருந்து ஃபோன் பண்ணாங்க” அவசரப்படுத்தினார். 

வெளியே வந்து,“அவனோட தாத்தா வர்றார்மா. ஸ்கூல் விட்டது தெரியாது. க்ளாஸ் டீச்சர் என்ன பண்றாங்க.” என்றவர் பேச்சில் அளவுகடந்த கோபம். எல்லா மாணவர்களும் சென்றுவிட்டார்களா எனப் பார்த்து முன்பே ஃபோன் பண்ணிருக்கலாமே. இவ்வளவு நேரமாக அவன் மகன் தனியாக இருந்தது தெரிந்தால் இவன் வேற ஆடுவானே என்று தான் பெற்ற மகனை நினைத்தும் பயம். 

‘இவங்க கேர்லெஸ்ஸா இருந்துட்டு டீச்சர்ஸ குறை சொல்றாங்களே’ என்று தான் இவளுக்குத் தோன்றியது. 

திருவேங்கடமும் அவதி அவதியாக முகம் கழுவி, உடை மாற்றி கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். 

ஃபோன் பேசி வைக்க, கிரவுன்டில் விசில் சப்தம் கேட்க, சுண்டலை அவசரமாகத் தின்றுவிட்டு, ஜுஸையும் புறையேற அவதியாகக் குடித்துவிட்டு ஓடினான். 

“பாத்துடா!” இவள் கத்துவது அவனுக்கெங்கே கேட்டது. 

அடுத்த பத்து நிமிடத்தில் பள்ளி கேஷியர் இவளை அழைக்க அங்கே சென்றாள்‌. 

பள்ளி வளாகத்தை கடந்து போகும் வழியில் மகனைப் பார்க்க, கண்ணையனோடு சேர்ந்து செடிகள் நடும் இடத்தில் U வளைவுத் திட்டு மேலே நின்றிருந்தான். மற்ற பயிற்சிகள் சென்று கொண்டிருக்க இவன் கண்ணையனிடம் ஓடி வந்து விட்டான். 

அவங்கள தொல்லை பண்ணாதே என்று கண்டித்துவிட்டுதான் சென்றாள். கண்ணையன் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார். 

அபிராமி, செடி கணக்கு மற்றும் வேலை கூலி எல்லாம் கணக்கு சொல்லிக் கொண்டிருக்க, வெளியே ஏதோ பரபரப்பான சத்தம். வரவேற்பரையில் இருந்த பெண்ணும் அவசரமாக எழுந்து ஓட, இன்னும் அலுவலகத்திலிருந்த ஒன்றிரண்டு பேரும் எழுந்து ஓடுவதைப் பார்த்து இவளும் அவசரமாக வெளியே வந்தாள். 

ஒரு காரும் அதன் முன்பு கூட்டமாகவும் இருக்க, யாரோ காரில் அடிபட்டார்கள் போல என்று எண்ணத்தோடு அவசரமாக வந்தவள், கூட்டத்தை விலக்கிப் பார்க்க, சக்தியைத்தான் கண்ணையன் தூக்கிக் கொண்டிருந்தார். சட்டென ஒன்றும் புரியவில்லை. சற்று முன் தானே கண்டித்துச் சென்றாள். 

பேரன் தனியாக இருக்கிறான் என அவசரமாக கார் ஓட்டி வந்த திருவேங்கடம், காரை உள்ளே கொண்டு வந்து வளைத்துத் திரும்புவதற்கும், உடற்பயிற்சி ஆசிரியர் விசில் ஊதி அனைவரையும் அழைக்க, U வளைவுத் திட்டில் நின்ற சக்தி குதிப்பதற்கும் சரியாக இருந்தது. ஈர செம்மண்ணில் நின்றதால் குதித்தவுடன் நிற்க முடியாமல் ஷு வழுக்கி காரின் முன்பே விழுந்தான். சட்டென சுதாரித்து பிரேக் போட்டும் அவனை இடித்து கீழே தள்ளியிருந்தது கார். 

திருவேங்கடத்திற்கும் பதட்டத்தில் கை நடுங்கியது. அவசரமாக கதவைத் திறந்து இறங்க, 

“ஸ்கூல் உள்ளாற மெதுவா வரத் தெரியாதா?” கார் முன் கிடந்த சக்தியைப் பார்த்ததும் கண்ணையன், கை ஓங்கிக் கொண்டு வர, அதற்குள் செக்யூரிட்டி அவரை இழுத்துப் பிடித்தார்.

பயிற்சி முடியும் நேரம் என்பதால் அந்த மாணவர்களுடைய பெற்றோரும் அழைத்துப் போக வந்திருக்க, ஆளாளுக்கு ஒரு பேச்சு என ஒரே சலசலப்பு. இந்தக் காட்சியைப் பார்த்தவர்தனகள் சிறுவன் மீது தான் தவறு என்று ஒரு சாரரும், கார் ஓட்டி வந்தவர் மீதுதான் தவறென ஒரு‌ சாரரும் அவர்களே வாதம்‌, பிரதிவாதம் நடத்திக் கொண்டிருந்தனர். 

“சக்தீ!” என்றவளது அரற்றல் அவனைச் சேரும் முன் மயங்கியிருந்தான். பார்த்தவளுக்கு கால் வெளவெளத்தது. தலையிலிருந்து இரத்தம் வடிவதைப் பார்தத்வளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. 

தலையிலிருந்து இரத்தம் வடிய, திருவேங்கடமும் பயந்து விட்டார். எனினும் சூழ்நிலை உணர்ந்து தன்னை திடப்படுத்திக் கொண்டு உடனே அவனை காரில் ஏற்றச் சொன்னார். அங்கு கூடியிருந்தவர்களில் பிரணவ் வகுப்பாசிரியை இருக்க, பேரனை அழைத்துவரச் சொன்னார். கண்ணையன் சக்தியைத் தூக்கி காரில்  பின் சீட்டில் படுக்க வைக்க, சுதாரித்த அபிராமியும் காரில் ஏறி மடியில் தாங்கிக் கொண்டவளுக்க கண்ணீர் நிற்கவில்லை. சற்று முன் பேசிச் சென்ற மகன் இப்போது துவண்டு மயங்கிய நிலையில் மடியில் என்றால், எதையும் யோசிக்க முடியாமல் மூளை வேலை நிறுத்தம் செய்தது. தம்பிக்கு அழைத்து சொல்ல வேண்டும் என்ற சிந்தை கூட இல்லை. கண்ணையன் தான் அரவிந்தனுக்கு அழைத்து தகவல் சொன்னார். அதற்குள் பிரணவையும் அழைத்து வந்துவிட முன்பக்கம் ஏறிக் கொண்டான். 

*****

குரு, விழுப்புரம் சென்று திரும்புகையில் ஒரு பள்ளியிலிருந்து மாணவர்கள் வெளியேறுவதைப் பார்த்ததும் தான், பள்ளி நேரத்தை அப்பாவிடம் சொல்லாதது நினைவில் வந்தது. ஃபோனை எடுத்து அப்பாவிற்கு அழைப்பு விடுக்க, 

அப்பொழுதுதான் திருவேங்கடம் மகனிடம்,‌ “குரு, நீ வர இன்னும் எவ்வளவு நேரமாகும்டா?” என்றார். அவர் குரலே சரியில்லை‌.

“ஏம்ப்பா… வஸ்த்துன்னான்லே!” (வந்துட்டிருக்கேன்)

“***** ஹாஸ்பிடலுக்கு ஒச்சேய்ரா!” (ஹாஸ்பிடல் வாடா!) என்று திருவேங்கடம் அழைக்க, கார் ஒரு கணம் தடுமாறி வேகமெடுத்தது. அவர் கூறியது பிரணவை வழக்கமாக அழைத்துச் செல்லும் மருத்துவமனை‌. 

அவசரமாக வந்தவன், அப்பாவை ஃபோனில் அழைக்க, அவர் ஐசியூ வருமாறு கூற அப்பொழுதே இவனுக்கு கால்கள் துவண்டது. இதயத்துடிப்பு எகிறியது. 

லிஃப்ட்டில் ஏறி வேகமாக அங்கு வந்தான். காரிடரில் பிரணவ், முகக்கவசத்தோடு அமர்ந்திருப்பதைப் பார்க்க புருவம் சுழித்தது. பிரணவிற்குதான் ஏதோ உடம்புக்கு போல என்று பரிதவிப்பாக ஓடி வந்தவன், அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கேள்வியாகப் பார்த்தான்‌. கண்கள் கலங்கி முகம் சிவந்து உட்கார்ந்திருந்தாள். கேள்விக்குறி அடுத்த நொடி சட்டென நிமிர்ந்து வியப்புக் குறியாக மாறியது. கை பேசி எடுத்து சற்று முன் தன் வாட்சப்பில் வந்த படத்தை திறந்து பார்த்தவன் கண்கள் மீண்டும் அவளைப் பார்த்தது.

ஏதேச்சையாக திரும்பிப் பார்த்தவள் பார்வை மெதுவாக கூர்மை பெற்றது. புருவம் சுருங்க, கலங்கிய விழிகளை துடைத்துவிட்டுப் பார்த்தாள். கருவிழி மெல்ல விரிந்தது. வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்திருந்தாள். இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. 

“ச்சிலக்க” பிரசவ வார்டின் முன்பு மயங்கியபடி ஸ்ட்ரெட்சரில் படுத்திருந்தவள் கை பிடித்தபடி, கண்கள் கலங்க அவன் அழைத்தது இப்பொழுதும் அவள் நினைவில் நின்றது.

அபிராமியும், பிரணவும் அருகருகே அமர்ந்திருக்க, வந்தவனது பார்வை அவளது முகத்தைதான் துளையிட்டது. குறிப்பிட்ட வயது வரைக்குமே குழந்தைகளுக்கு ஆண், பெண் முகவேற்றுமை தெரியாது. பெண் பிள்ளைகள் ஆண் வேடமிட்டும், ஆண் பிள்ளைகள் பெண் வேடமிட்டும் நடித்து பார்த்திருக்கிறோம். பிரணவிடமும் இன்னும் முகமாற்றம் நிகழவில்லை. பதின் வயதில் குரல் கட்டு உடையும் பொழுதுதானே ஆம்பளைத் தோற்றம் அரும்பு மீசையோடு எட்டிப் பார்க்கும். 

 இளம் ஊதாக்கலரில் ஸ்ட்ரெய்ட் ஃபிட் பேன்ட்டும், மெரூன் கலரில் ஃப்ளோரல் பிரின்ட் போட்ட ஷார்ட் குர்தியும் அணிந்திருந்தாள். முடியை மொத்தமாக சுருட்டி உச்சியில் கிளட்சரில் முடிந்தமட்டும் அடக்கியிருந்தாள். முகம் சோகம் அப்பிகிடந்தது. சற்று முன் வெளிவந்த நர்ஸ் ஆபத்தில்லை என்று மட்டும் சொல்லிச் சென்றார். 

அப்பொழுது தான், “அக்கா!” என அழைத்துக்கொண்டு அரவிந்தன் அவசரமாக வர, தம்பியைப் பார்த்ததும் கண்ணீர் மீண்டும் கரையுடைத்தது. அக்காவை தோளோடு அணைத்துக் கொள்ள, சாய்ந்து கொண்டு மேலும் விம்மினாள்‌. இருவரையும் குரு பார்வை ஆராய்ந்தது. 

குருவைப் பார்த்ததும் பிரணவ் எழுந்து ஓடினான். 

“டாட்…‌ என் ஸ்கூல் மேட் சக்திக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு! தாத்தா கார்லதான்!” என்றவன் கண்களில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. முக்கவசத்தைக் கழற்றியவன், மகனின் தலை முடியை கோதிக் கொடுக்க, அது எங்கே அடங்கியது. மீண்டும் நெற்றியில் வந்து சுருண்டு விழுந்தது. 

“ஒன்னும் ஆகாதுக்கா… தைரியாம இரு!” என்று தோளைத் தட்டிக் கொடுக்க, முகத்தை துடைத்து நிமிர்ந்தவள், இப்பொழுதுதான் பிரணவ் முகத்தையே பார்க்கிறாள். எங்கோ பார்த்த ஞாபகம். சட்டென்று நினைவிற்கு வரவில்லை. ஒரு வேளை நர்சரிக்கு வந்திருக்கலாம் என்று நினைத்தாள். அதற்கு மேல் யோசிக்கும் சூழ்நிலையில் அவள் மனநிலை இல்லை. 

மகனின் முகக்கவசத்தை எடுத்த பின்பும் குருவின் பார்வை இவளைத்தான் ஆராய்ந்தது. எந்த பிரதிபலிப்பும் இல்லை அவளிடம். பார்த்ததும் புருவம் சுருங்கினாலும் மற்றபடி, சாதாரணமாகத்தான் இருந்தது. 

திருவேங்கடம், மகனிடம் வந்து நடந்ததைச் சொன்னார்.

அவனுக்குள் இருக்கும் பதட்டத்தை வெளிக்காட்டவில்லை. உள்ளுக்குள் மனம் துடித்தது. 

“சின்னாவ எந்துக்கு நானா இக்கட தீசுக்கொச்சாரு?” (சின்னாவ எதுக்கு இங்க கூட்டிவந்தீங்க) என்றுதான் கேட்டான். 

“அது காதுடா… டென்ஷன்ல…” என்று ஆரம்பிக்க,

“முந்து சின்னாவனி இக்கடனிச்சி தீசுக்கெல்லண்டி. நேனு சூஸ்க்குண்டான்லே” (மொத சின்னாவ இங்கருந்து கூட்டி போங்க நான் பாத்துக்கறேன்) என்று சொல்ல அவன் கோபம் புரிந்தது. அதற்குள் ஜமுனா பலமுறை அழைத்துவிட்டார். 

சரி… இனி மகன் பார்த்துக் கொள்வான். பிரணவை இங்கு வைத்திருக்க வேண்டாமேன திருவேங்கடம் கிளம்பினார். 

கண்ணையனும் அங்கிருக்க, “என்ன… பிள்ளைய இடிச்சுத் தள்ளிட்டு அவர் பாட்டுக்கு கெளம்புறாரு” என்று கோபப்பட்டார். பள்ளியில் நடந்தது என்பதால் கேஸ் எதுவும் இன்னும் கொடுக்கவில்லை.  

“நான் இங்கதான் இருப்பேன். பையனுக்கு இங்க சரிப்படாது. அதனாலதான். எதுனாலும் நான் பாத்துக்கறேன்” என்று தன்மையாகவே பதில் சொல்ல, 

“உங்க பிள்ளைனா உசத்தியோ. எல்லாம் அவங்கவங்க பிள்ளைக்குனு வந்தா தான் தெரியும்!” என்று மேலும் கோபப்பட, 

‘உள்ளே இருப்பதும் என் இரத்தம் தான்டா!’ ஓங்கிக் கத்த வேண்டும் போல் இருந்தது பிரசாத்திற்கு. நெஞ்சை அழுத்திய உண்மையை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் ஊமையாய் அரற்றியது உள்ளம். 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 10

10“இப்பக்கூட நீங்க பேரனைப் பாக்க வரல. கேஸ் வாபஸ் வாங்கச் சொல்லித்தான் வந்திருக்கீங்க!”“ஏன் அபி, இப்படி நெஞ்சுல ஈரமில்லாம பேசுற. எனக்கு அவன் தலச்சன் பேரன்டீ. ஆக்சிடன்ட் ஆனதக் கூட நீ சொல்லல. நானா தெரிஞ்சுக்கிட்டு உயிரக் கையில புடிச்சுட்டு ஓடியாறேன்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 12 கருத்துகள் உள்ளன

  1. ஏன் அவளுக்கு பரணவ்வை தெரியவில்லை..?
    பிரணவனுக்கான மருந்து குருவிடம் தான் இருக்கோ..?

    1. கதையின் போக்கில் புரியும்மா…

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. படிக்கும் போது கூட இந்தளவுக்கு டவுட் வந்திருக்காதுல்ல… 😁😁😏
      Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫

        1. டவுட் கிளியர் பண்றது பள்ளி ஆசிரியர் வேலை.
          டவுட்ட மேலும் குழப்பி விடுறது கதையாசிரியர் வேலை 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ 🤣 🤣

உங்கள் கருத்தைப் பகிருங்கள்