arrow_back
கலாப காதலா அத்தியாயம் 10
கலாப காதலா chevron_right பகுதி 10 / 24

அத்தியாயம் 10

visibility 566
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

தலைக் குளித்து கேசம் கோதி

மணாளனின் மங்கையவள் கடந்து போகையில்

கழுத்தின் வழியே வழியும்

நீர் முத்துக்களை மிஞ்சிய

அழகும் இல்லை ஆபரணமும் இல்லை!

“என்னம்மா?” சிறு பெண்ணாக தோன்றினாலும் மரியாதையாகவே அழைத்து வைப்போமே என்று கூறிவைக்க.

“சர்… என்னோட சர்ட்டிபிகேட்…” என்று தயங்கினாள்… முதலில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை… ஒருவாறாக அவளது கையிலிருப்பது தனது பைல் என்பதும் தன் கையிலிருப்பது அவளது பைல் என்றும் ஒருவாறாக புரிய… பைலை பிரித்து பார்த்தான்.

பெயர் ஸ்ரீநிதி.

அழகான பெயர்… அழகான பெண்ணுக்கு என்று நினைத்து கொண்டான்.

ப்ளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்! மதிப்பெண்களும் மிக பலமாக இருக்க… ஆள் மூளை பார்ட்டி போலத்தான் என்று எண்ணிக்கொண்டான்… அவனை பொறுத்தவரை தேர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தவனல்ல…முழுமையாக காலேஜுக்கும் பள்ளிக்கும் கூட செல்பவனும் அல்ல.

தாத்தாவுக்கு உதவி விட்டு மற்ற நேரத்தில் படிப்பு என்ற அளவு மட்டுமே அவன் அறிந்தது… ஆனாலும் நல்ல மதிப்பெண்களில் தேர்ந்து விடுவான்… ஆனால் இவளுடைய மதிப்பெண்களை பார்த்தால் பார்ட்டி படிப்பில் படு ஸ்ட்ராங் என்று நினைத்து கொண்டான்!

“இன்னைக்கு காலேஜ் அட்மிஷன்… கோவில்ல வெச்சு கும்பிட்டு எடுத்துட்டு போலாம்ன்னு வந்தேன்… பட்டர் மாத்தி கொடுத்துட்டாங்க…” சிரித்தவாறே கூறியவளை ரசித்து பார்க்க தூண்டியது மனம்.

“ஆல் தி பெஸ்ட்…” என்று அவளது பைலை கொடுக்க… அவளும் அவனுடைய பைலை நீட்ட… மெல்லிய விரல் தீண்டலில் விதிர்த்து போனாள் அவள்! அவனது பைலை நழுவ விட… கீழே விழுந்து விடாமல் கைகளில் பிடித்து கொண்டான் அர்ஜுன்!

“சாரி… சாரி…” அவசரமாக மன்னிப்பை கேட்டவளை சிரித்து கொண்டே பார்த்தவன்.

“ஹேய் இட்ஸ் ஓகே…”

மற்ற யாருமாக இருந்தால் இந்நேரம் அர்ச்சனை நடத்தி முடித்திருப்பாயே அர்ஜுனா என்று நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி வேறு கேள்வியை கேட்டு வைக்க… அவசரமாக அதை அடக்கினான்!

“தவறினா நல்லது சர்… போற காரியம் சக்சஸ் ஆகும்ன்னு அம்மா சொல்வாங்க…” அப்பாவியாக கூறியவளின் தொனி அவனை விடாமல் ரசிக்க வைத்தது.

“அட அப்படியா… அப்போ சக்சஸ் ஆச்சுன்னா முதல்ல உங்களுக்குத்தான் ஸ்வீட் கொடுப்பேன்…”

எதற்காக இதை அவளிடம் கூறுகிறான் என்பதை புரியாமலே அவளிடம் கூறிக்கொண்டிருந்தான்… ஆனால் நல்ல தமிழில் இதைத்தான் ரூட்டு விடுவது என்று கூறுவார்கள் என்று அடக்கி வைக்கப்பட்ட அவனது மனசாட்சி அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்தது.

“அப்போ உங்க வேலை சக்சஸ் ஆகட்டும்… எனக்கும் ஸ்வீட் கிடைக்கட்டும்… ஓசில கிடைச்சா வேண்டாம்ன்னா சொல்லிடுவேன்…” கண்ணை சிமிட்டி கொண்டே கூறிவிட்டு.

“ஆல் தி பெஸ்ட்…” என்று கை கொடுத்தாள் புன்னகையோடு!

அவளையும் அவளது கையையும் ஒரு நொடி ஊன்றி பார்த்தவன்… அவளது கையை பற்றி.

“தேங்க்ஸ்…” என்று புன்னகைக்க… மனசாட்சியோ மகனே சான்ஸ் கிடைச்சா விட்டுடுவியா என்று கடுப்பாக கேட்டது… பின்ன தானா கொடுக்கறா… அதை போய் மிஸ் பண்ண முடியுமா? என்று அந்த மனசாட்சியின் வாய்க்கு ஒரு பூட்டை தேடினான்!

“நான் ஸ்ரீநிதி…”அவளுடனே கோவிலை சுற்றியவனிடம் மரியாதை நிமித்தம் தன் பெயரை கூற

“நல்ல பெயர்…” புன்னகைத்தான்.

“நான் அர்ஜுன்…”

அதற்கும் மேல் ஒன்றும் பேசாமல் அவள் நடந்து செல்ல… அவளிடம் எதையாவது பேசி விவரங்களை தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல தோன்றியது அர்ஜுனுக்கு.

“அதை தெரிஞ்சு நீ என்னடா பண்ண போற?நீ இருக்கறது குளித்தலை… இவ சென்னை… கொஞ்சமாவது லாஜிக்கா யோசிடா…” வேறு யார்? மிஸ்டர் மனசாட்சிதான் அவனை போட்டு வாங்கிக்கொண்டிருந்தது!

“ஸ்ரீநிதி… என்ன கோர்ஸ் அப்ளை செய்து இருக்கீங்க?”

சிறு சிறு கேள்விகள்… அதற்கான பதில்கள்… அளவான கருத்து பரிமாற்றங்கள்… முதல் சந்திப்பு அழகான மென்மையான தென்றலாக அவனது மனதை எப்போதும் தீண்டி வந்திருக்கிறது… அதை காதலென்றும் சொல்ல முடியாது… ஒரு ஆர்வம்… அழகான பெண் என்ற ஆர்வம்!

பெண்கள் மேல் ஈடுபாடு இல்லாதவன் என்றெல்லாம் கூறிவிட முடியாது… அந்த வயதிற்குண்டான அத்தனை சேட்டைகளையும் செய்பவன் தான்… பூங்காற்றாய் தன் முன் வந்து நின்ற ஸ்ரீநிதியை ஆர்வமாக பார்த்தான் தான்… அது அவளது தோற்றத்தை மட்டுமே பார்த்து வந்த ஆர்வம்!

அந்த ஆர்வம் அவனை திரும்ப திரும்ப பார்க்க வைத்தது… பேச வைத்தது.

திரும்பி போகும் போதும் திரும்ப திரும்ப பார்க்க வைத்தது.

அதே புன்னகை முகத்தோடு அவர்களை சந்தித்தவன்… மிகவும் வெற்றிகரமாக பேச்சுவார்த்தையை முடித்து ஒப்பந்தத்தையும் கையெழுத்திட வைத்திருந்தான்.

ஒப்பந்தத்தை கையெழுத்திடும் போதும் அவளது நினைவு வந்து போனது… முதல் ஸ்வீட் எனக்குத்தான் என்று அவள் கூறியது காதில் ஒலிக்க… எதோ ஒரு நம்பிக்கையில் ஸ்வீட் பாக்ஸோடு அதே கோயிலுக்கு சென்றான்.

கடவுளை வணங்கிவிட்டு அங்கிருந்த கல்மேடையில் சாய்ந்து நின்றான்… அவனுடைய உள்ளுணர்வு உணர்த்தியது… அவள் கண்டிப்பாக வருவாள் என்று! ஆனால் எந்த நம்பிக்கையில் காத்திருந்தான் என்பதுதான் அவனுக்குமே புரியவில்லை.

ஸ்ரீநிதி வந்தாள்!

அவளது தோழியோடு!

தாவணிகள் இன்னும் மரித்து போகாமல் தானிருக்கின்றன!

அதிலும் தாவணியில் பெண்கள் எப்படி பேரழகாக இருக்கின்றனர் என்பதை பற்றி ஒரு பெரிய கட்டுரையே வரையுமளவு உள்ளுக்குள் சிலாகித்தான் அர்ஜுன்!

அழகான அந்த பிங்க் நிற தாவணி இடையை தழுவ… படபடக்கும் அந்த மீன் விழிகளுக்கு மையிட்டு சங்கு கழுத்தில் மெல்லிய செயின் அணிந்து நீண்ட பின்னலசைந்தாட அதில் மல்லிகை பூக்கள் வழிந்தோட மெல்லிய சிரிப்போடு அவனை நோக்கி அவள் வந்த தோரணையில் அவனது இதயம் வெளியே எம்பி குதிக்க காத்திருந்தது!

இனி எப்போதும் மீளவே மாட்டேன் என்று சபதம் செய்து அவளது கண்களில் தொபுக்கடீர் என்று குதித்தும் விட்டது அவனது இதயம்!

அருகில் வந்து அவனை பார்த்து சிந்திய புன்னகையில் அர்ஜுன் சிலையாக நின்றான்… தோழியை சற்று தள்ளி நிற்க சொல்லிவிட்டு.

“ஹாய் அர்ஜுன்…”

தன் பெயர் அவளது இதழ்களில்… எத்தனை ஆனந்தமாக இருக்கிறது! மனதில் மத்தளம் கொட்ட… மதி சதி செய்து மயங்கி நிற்க செய்திருந்தது!

“ஹாய் ஸ்ரீநிதி…”

“என்ன போன காரியம் எப்படி?” புருவத்தை உயர்த்தி அவள் கேட்க.

எதையும் பேசாமல் இனிப்பை எடுத்து அவளுக்கு நீட்டினான்… அவளது முகம் மலர்ந்தது!

“கங்க்ராட்ஸ்…” என்று அவனது கையை பற்றி வாழ்த்து கூற… அவன் ராக்கெட் இல்லாமலே நிலவுக்கு பயணத்தை தொடங்கியிருந்தான்.

“தேங்க்ஸ்… ரொம்ப பெரிய ஒப்பந்தம்… நமக்கு தான் கிடைச்சுருக்கு…”

“உங்களுக்குன்னு சொல்லுங்க…” ஜிலேபியை வாயில் வைத்து கொண்டே கேட்க… ஜீரா உதடுகளில் பட்டு அவனை என்னன்னெவோ செய்ய தூண்டியது! கன்னாபின்னாவென அலையும் மனதை வலுக்கட்டாயமாக அடக்கி ஒரு நிலைக்கு கொண்டு வந்தவன்.

“நான் நீ என சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது… நாமென்று சொன்னால் தான் உதடுகள் கூட ஒட்டும்…” கலைஞரின் கவிதையை எடுத்து விட… அவனை ஒரு மார்கமாக பார்த்த ஸ்ரீநிதி.

“அடடா… இன்ஸ்டன்ட் கவிஞர்…”

அவள் பேசினாள் அவனும் பேசினான்… திரும்ப திரும்ப பார்த்து கொண்டார்கள் திரும்ப திரும்ப பேசிக்கொண்டார்கள்!

காதலை சொல்லாமலே ஒரு வருடம் கடந்து இருந்தது.

காதல்

கண்களால் புனையப்பட்டு

மனதால் பின்னப்பட்டது!

******

அப்போது இரண்டாம் வருட பிஇ படித்து கொண்டிருந்தாள் ஸ்ரீநிதி… அன்றைய வகுப்பு வெகுவாக போரடித்து கொண்டிருந்தது.

உடன் படிக்கும் ரசூல் கேரளாவை சேர்ந்தவன்… அவர்களது நண்பர் வட்டத்தில் ஒருவன்… எந்த வித பேதமும் இல்லாமல் பழகும் நல்ல நண்பன்… வகுப்பை கட் அடித்துவிட்டு பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்து அவளோடு அவளது தோழி உமா, ரசூல், மஜித் என்று நால்வரும் அரட்டையில் இறங்கியிருந்தனர்.

அப்போது வந்த திரைப்படங்களை கண்ட மேனிக்கு கலாய்த்து கிழித்து நாராக தொங்க விட்டு கொண்டிருந்தனர்.

ரசூலும் மஜீத்தும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதால் மலையாள படங்கள் இயல்புக்கு தக்கவாறு இருக்கின்றன என்றும் தமிழ் தெலுங்கு படங்கள் மசாலா தூக்கலாக இருக்கின்றன என்று கிண்டலடித்து கொண்டு இருக்க… ஸ்ரீநிதியும் உமாவும் தமிழ் படங்களை விட்டு கொடுக்க முடியாமலும் அதே சமயத்தில் கலாய்த்து கொண்டும் இருந்தனர்.

“அதெப்படி… அந்தரத்துல ஜிப்ஸி பறந்து வந்து ஹெலிகாப்டரை மோதுமாம்… ஹெலிகாப்டர் அப்படியே வெடிச்சு சிதறுமாம்… கொஞ்சமாவது லாஜிக் இருக்காய்யா இதில்?” ரசூல் அப்போது வந்த படத்தை கிண்டலடிக்க.

“ஆமா ஹீரோ எவரெஸ்ட்ல இருந்து குதிச்சா கூட அடிபடாது… ஆனா நமக்கெல்லாம் டெஸ்க்ல இருந்து கீழ விழுந்தாலே அடிபடுதே…” குறைபட்டு கொண்டான் மஜீத்.

“டேய் ஓவரா கலாயக்காதீங்கடா… தமிழ்லையும் நிறைய நல்ல மூவீஸ் வந்து இருக்கு… ஏன் உங்க மலையாளத்துல மொக்கை படமே வர்றதில்லையா? படு மொக்கையான படங்களை எல்லாம் நானே பார்த்து இருக்கேன்…” ஸ்ரீநிதி வம்பாக பதில் கொடுக்க.

“வரும் கண்டிப்பா வரும்… ஆனா நூறு படத்துல ஆறு படம் வேணும்னா மொக்கையா இருக்கும் ஆனா இங்க நூத்துல ஆறு தானே தேறுது…” மஜீத் நக்கலாக கூற.

“அப்படின்னு யார் சொன்னா மஜீத்… உன் கண்ணுக்கு நல்ல படமே தென்படலைன்னா அது உன் கண்ணோட குத்தமா இல்ல எடுக்கறவங்க குத்தமா?” உமா சிலிர்த்து கொண்டு கேட்க… சிரித்த ஸ்ரீநிதி.

“ஏய் உமா… ஒரு கதை இருக்கு தெரியுமா… துரியோதனனும் தருமரும் நகர்வலம் போனாங்களாம்… போயிட்டு வந்துட்டு துரியோதனன் சொன்னானாம் ஊர் முழுக்க கெட்டவங்களா இருக்காங்கன்னு… தருமர் சொன்னாராம் ஊர் முழுக்க நல்லவங்களா இருக்காங்கன்னு…” என்று கூறிவிட்டு சிரித்த ஸ்ரீநிதி.

“நல்லதும் கெட்டதும் நாம பார்க்கற பார்வைல தான் இருக்கு… நல்லதை பார்த்தா நல்லதாவே தான் தெரியும்… அதை சமயத்துல கெட்டதை மட்டும் பார்க்கனும்ன்னு நினைச்சா கெட்டதை மட்டும் தான் பார்ப்ப… சோ பி பாசிடிவ்…” என்று முடித்த ஸ்ரீநிதியை பாராட்டாக பார்த்தனர் மூவரும்… ஆனாலும் நன்பேண்டா இனம் அப்படியே விட்டுவிடுமா என்ன?

“ஆஹா… தத்துவம் மூவாயிரத்து இருநூறு…” மஜீத் கிண்டலாக சப்தமாக கூற… அதை கேட்டு ரசூலும் கிண்டலில் இறங்க.

“மஜீத்… உங்க ஆளுங்களுக்கே இந்த அறிவார்ந்த சமூகம்ங்கற ஒரு போலியான பிம்பத்தை, கலர் கண்ணாடியை கண்ணுக்கு முன்னாடி வெச்சுட்டு உலகத்தை பார்க்கறீங்க… அது ஒரு அளவு வரைக்கும் தான்… இது சூடோ லிட்ரசியோட பை ப்ராடக்ட் டா… நாம அறிவுன்னு நினைக்கலாம்… ஆனா நாம மட்டும் தான் அறிவுன்னு ஒரு ப்ரோப்பகான்டா பண்றீங்க பாரு…” என்று கூறியவள்… உமாவை பார்த்து.

“மச்சி இதுல இவங்களை யாருமே அடிச்சுக்க முடியாது…”

தோளில் கை போட்டு அவளையும் துணைக்கு அழைத்து கொண்டு மஜீத்தை வார.

“ஆஹா சூடோ லிட்ரசியா? ஹண்ட்ரட் பர்சன்ட் லிட்ரசி உனக்கு போலித்தனமான படிப்பறிவா தெரியுதா? இங்க தமிழ்நாட்டுல எத்தனை பர்சன்ட்டாம்?”

சிலிர்த்து கொண்டு விவாதத்துக்கு வந்தான் ரசூல்.

“படிப்பறிவை கொடுக்கறது பத்து க்ளாசை எடுத்துட்டு அவங்க கிட்ட கையெழுத்தை மட்டும் வாங்கிட்டு அவங்களை படிப்பாளியா காட்டறது கிடையாது மிஸ்டர் ரசூல்… உலகத்துக்கே மொழியை கொடுத்தது எங்க தமிழ்… அதை நியாபகத்துல வெச்சுக்கோங்க…” என்று கூறி சிரித்தாள் உமா.

“தமிழர்களுக்கு இந்த ஒரு பெருமை மட்டும் தான் உமா… சரி நான் கேட்கறேன்… எங்க மொழி தான் ஆதி மொழின்னு சொல்ல தெரியுதுல்ல… ஆனா அந்த மொழியை தான் நீங்க பேசிட்டு இருக்கீங்களா? நாங்க ரெண்டு மலையாளிங்க பார்த்துகிட்டா மலையாளத்துல தான் பேசுவோம்… ஆனா ரெண்டு தமிழர்கள் வெளிநாட்டுலயோ வெளி ஸ்டேட்லையோ பார்த்துகிட்டா என்ன பண்றீங்க? இங்கிலீஷ்… ஒன்லி இங்க்லீஷ்…” என்ற ரசூலை தொடர்ந்தான் மஜீத்.

“ஆமா… ஹிந்திய படிக்க அவ்வளவு எதிர்ப்பு காட்டுவீங்க, ஆனா இங்க்லீஷ் என்னமோ உங்க தாய் மொழி அளவுக்கு பீல் பண்ணி படிப்பீங்க… யு பீப்பிள் ஆர் ஓவர்லி ஒப்சஸ்ட் வித் இங்கிலீஷ்…” விடுவேனா என்று விவாதிக்க.

“நாங்க ஹிந்தி மயமாக்கறதை எதிர்க்க காரணம் உண்டுடா… எதுவுமே போர்ஸ் பண்ணாத வரைக்கும் பிரச்சனை இல்லை… ஹிந்தி தேவைன்னு நினைக்கறவங்க கண்டிப்பா படிப்பாங்க… ஆனா ஹிந்திய திணிக்கும் போது தான் பிரச்சனையே… கேந்திரிய வித்யாலயால எல்லாம் தமிழே பார்க்க முடியாதுங்கற நிலைமை வந்துடுச்சு,இங்க சிபிஎஸ்சி ஸ்கூல்ஸ் அவங்களோட அடுத்த டார்கட்… அங்கயும் தமிழை கண்ட்ரோல் பண்ணிட்டா அடுத்த தலைமுறைக்கு தமிழை எப்படித்தான் கொடுக்கறது?”

“ஏன்… நாங்க ஹிந்தி படிச்சுட்டே மலையாளம் படிக்கலையா?”

“சரி… சவுத் இந்தியன்னா மதராசின்னு சொல்ற மாதிரி நார்த் இந்தியன்னா ஹிந்திகாரன்னு தானே சொல்றோம்… வெறும் ரெண்டு ஸ்டேட்ல பேசற ஹிந்திய முழு பிரதேசத்துக்குமான அடையாளமா மாற்றியது எது? இந்த ஹிந்தி திணிப்பு தானே? அது மாதிரியே சவுத்லையும் ஆகணுமா? நாம சுயசார்பு கொண்டவங்க… ஒவ்வொருத்தருக்கும் பழமையான பண்பாடு, நாகரிகம் இருக்கு… அதை ஏன் விட்டு கொடுக்கணும்ன்னு நினைக்கற மஜீத்?” சற்று இடைவெளி விட்டவள்,

“திராவிடம்ங்கறது ஒரு இனத்தோட அடையாளம் கிடையாது… தமிழ்ங்கற மொழியோட அடையாளம்… இதை நான் சொல்லலை அம்பேத்கார் சொல்லி இருக்கார்… ஆரியர்களோட படையெடுப்புக்கு முன்ன காஷ்மீர்ல இருந்தது கன்னியாகுமரி வரை ஒரே மொழி பேசப்பட்டது… அது தான் தமிழ்… தமிழ்ங்கற வார்த்தை ஆரியர்களோட சமஸ்கிருதத்துல இன்புட் ஆகி வேற வடிவத்துக்கு போய் தான் திராவிடம் ஆச்சு… தமிழ்ங்கறது வெறும் மொழி மட்டும் கிடையாது… அது வாழ்க்கை முறை… அந்த வாழ்க்கை முறைல வர்ணாஸ்ரமம் கிடையாது… ஜாதி பேதம் கிடையாது… அதெல்லாம் ஆரிய கலப்பினால வந்த வினை…”

“அவங்களுக்கு பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருதமும் இப்ப உருவான ஹிந்தியும் முக்கியமா பட்டு அதை திணிக்க பார்த்தா… ஆதி மனிதன் பேசின தமிழும் அந்த வாழ்க்கை முறையும் எங்களுக்கு பெரியதா தெரியாதா ரசூல்? நாங்க அதில் பெருமை கொள்வதில் என்ன தவறு இருக்கு?”

விளையாட்டுத்தனமாக சினிமாவில் ஆரம்பித்த விவாதம் சற்று சூடான திசையில் பயணிப்பதை உணர்ந்த உமா… மூவருக்கும் நடுவில் வந்து நின்று கொண்டு.

“கைஸ்… ஸ்டாப் ஸ்டாப்… போதும்… விட்டா இங்க ஒரு நீயா நானா ஷோ நடத்திடுவீங்க போல இருக்கு… சில் அவுட் பேப்ஸ்…” சிரித்து கொண்டே கூற… மூவருமாக சேர்ந்து அவளை மொத்துவதற்கு பாய்ந்தனர்.

“ஹே நாம சண்டை போட்டுக்கற இந்த கேப்ல ஒருத்தி முழு பூசணிக்காயை மறைச்சு வெச்சுட்டு இருக்கா… அதை என்னனு கேக்க மாட்டீங்களா பக்கிங்களா?” உமா குறும்பாக ஸ்ரீநிதியை பார்த்தவாறு கூற.

“ஓஹோ…” என்று மற்ற இருவரும் குரல் கொடுக்க… உமா கூற வருவதை புரிந்து கொண்டவள்.

“ஏய் லூசு… அதெல்லாம் ஒண்ணுமே இல்லை… அதுக்குள்ளே ஏன்?” பரிதாபமாக அவள் கேட்க.

“ஹஹா… பாத்தீங்களா… நான் விஷயம் என்னன்னு சொல்லவே இல்ல… ஆனா உடனே சரண்டர் ஆகறா?”

“ஒருதடவையாவது அவர் கிட்ட எங்களை இன்ட்ரோ பண்ணி விடு ஸ்ரீ… அவர் கிட்ட நாங்க பேசி பார்க்க வேண்டாமா?”

மஜீத் அக்கறையாக கேட்க.

“டேய்… வி ஆர் ஜஸ்ட் ப்ரெண்ட்ஸ் தான்டா…” தப்பிக்க இயலாத பார்வையோடு அவள் கூற.

“நாங்களும் உனக்கு ப்ரெண்ட்ஸ் தானே… அப்போ நாங்க பேசினா என்ன தப்பு?” ரசூல் சிலிர்த்து கொண்டு கேட்க… உமாவும் மஜீத்தும் அவனுக்கு ஹைபை கொடுத்தனர்.

“ஓகே… ஓகே… கண்டிப்பா இன்ட்ரோ பண்ணி விடறேன்…” என்று கூறி கொண்டிருக்கும் போதே ஸ்ரீநிதியின் செல்பேசி அழைத்தது.

அர்ஜுன் தான் அழைத்திருந்தான்.

“ஹாய் அர்ஜுன்…” என்று முழு மகிழ்ச்சியோடு அவள் அழைத்த முறையிலேயே மற்ற மூவருமாக அவளை மேலும் கிண்டலடிக்க ஆரம்பித்து இருந்தனர்.

“ஹேய் டெடி… இப்போ உன்னை பார்க்க முடியுமா? ப்ரீயா?” என்று அவன் கேட்க… கைகளை திருப்பி வாட்சை பார்த்தாள் அவள்… அவர்கள் கட் அடித்துவிட்டு வந்த அந்த போரான வகுப்பு முடிய இன்னும் பத்து நிமிடங்கள் தான் இருந்தது… அடுத்து வருவது அவள் மிகவும் விரும்பும் செய்முறை பயிற்சி… அதனால் அதை எப்போதுமே அவள் கட் அடித்ததில்லை.

அங்கிருந்த மூவருமே… இப்போ மீட் பண்ணலாம்ன்னு சொல்லு என்று சைகையால் கூறி கொண்டே இருக்க… இந்த மூவரிடமும் இப்போது அர்ஜுன் சிக்கினால் அவ்வளவுதான் என்று எண்ணி கொண்டு.

“இப்போவா முடியாதே அர்ஜுன்…” என்று ஏமாற்றமாக கூற… அந்த பக்கமும் சற்று நேரம் மௌனமானது!

“ஏன்? இப்போ கிளாஸ் இருக்கா?” ஒரு மாதிரியான குரலில் அவன் கேட்க.

“ஆமாப்பா…” அடுத்து வரும் வகுப்பை நினைத்து அவள் கூற… சில நொடிகள் மெளனமாக இருந்தவன்.

“பாய்ப்ரெண்ட்ஸ் கூட உட்கார்ந்து அரட்டை அடிக்க முடியும்… ஆனா நான் பார்க்கனும்ன்னு சொன்னா மட்டும் முடியாதுன்னு சொல்வ இல்லையா ஸ்ரீநிதி?”

ஒருமாதிரியான குரலில் கூறிய அவனது வார்த்தைகள் அவளது இதயத்தில் தைத்தது… மனம் பிசைய மூவரையும் பார்த்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 11

வேண்டும் என்றே வேண்டாம் என்கிறாய் நீவேண்டாம் என்பதே வேண்டாம் என்கிறேன் நான்!உன்னில் நனைந்திட துடிக்கும் மழை நான்என்னை மூழ்கடிக்க துடிக்கும் ஆழ்கடல் நீ!நான் புகுந்திடாத போர்க்களம் நீநீ அணிந்திடாத ஆடை நான்!என்னில் தழும்பில்லா காயங்கள் நீஉன் மேல் வரம்பில்லா காதல் நான்!அழுத்தமான…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்