அத்தியாயம் 9
இன்று உனது
உள்ளங்கை கதகதப்பில் கூட
குளிர் காய
பக்கத்தில் நீயின்றி
நாட்குறிப்பெழுதும்
டைரியின் பக்கங்களாகி
போனாய் நீ!
ஆறாவது முறையாக ஈஸ்வரன் அவனை அழைத்திருந்தார்.
அவன் அர்ஜுன்… அவரது செல்ல பேரன்.
ஈஸ்வரனின் மகள் வயிற்று பேரன் அர்ஜுன்… திருச்சியை அடுத்த குளித்தலை அவர்களது சொந்த ஊர்… அர்ஜுனின் சிறுவயதில் குடும்பமாக சென்ற போது முக்கொம்பின் ஆற்று சுழியில் அவனது தாய் சிக்கி கொள்ள… அவரை மீட்கவென இறங்கிய தந்தையும் சிக்கி… ஒரே நாளில் இருவரும் அவனை அனாதையாக்கிவிட்டு சென்றனர்.
தந்தையின் சொந்தங்கள் அவனை குழந்தையாக நினைக்காமல் சொத்துக்கு போட்டியாளனாக நினைத்து விட… அலமலந்து நின்ற குழந்தையை ஈஸ்வரன் அணைத்து கொண்டார்… அன்று முதல் அர்ஜுனின் ஒரே சொந்தம் ஈஸ்வரன் மட்டுமே என்றானது.
ஒற்றையாக நின்ற பேரனை கைக்குள் வைத்து கண்ணுக்குள் தாங்கி வளர்த்தார்… குளித்தலையில் படிக்க வசதி போதாதென திருச்சியில் சேர்த்து விட்டார்… அவனும் அவனது வயதுக்குரிய குறும்புகளோடு வளர்ந்தான்.
அவனுடைய உலகம் அவனது தாத்தாவினால் மட்டுமே ஆனது!
அவனுக்கு தாய் தந்தை என்று அனைத்தும் அவனது தாத்தா மட்டுமே!
அவர்களுடையது மொத்த மளிகை வியாபாரம்… அதிலும் உற்பத்தியாகும் இடத்திலிருந்து மொத்தமாக வாங்கி ஸ்டாக்கிஸ்ட் போல வைத்து கொண்டு அதை திருச்சி மற்றும் சுற்றியுள்ள இடங்களுக்கு நேரடியாக சப்ளை செய்து கொண்டிருந்தார் ஈஸ்வரன்.
நல்ல வியாபாரமே தவிர அதை பெரிய அளவில் எல்லாம் செய்ய நினைக்கவில்லை… அவர்களுக்கு தகுந்த அளவில் கடன் வாங்கி கொள்ளாமல் கடனுக்கும் கொடுக்காமல் கையை கடிக்காத அளவில் செய்து கொண்டிருந்தார்.
அர்ஜுனுடைய கனவுகள் மிகப்பெரியவை! சிறுவயது முதலே அவனுடைய தாத்தாவின் தோள் மேல் சாய்ந்து கொண்டு.
“தாத்தா… நான் பெரியவனானதும் உன்னை ப்ப்ப்ப்பெரிய கார்ல கூட்டிட்டு போவேன்… ரொம்ம்ம்ம்ப பெரிய பில்டிங் கட்டுவேன்… அதுல நிறைய பேரை வேலைக்கு சேர்ப்பேன்…” சிறுகுழந்தை கைகளை ஆட்டி கூறும் போது மயங்காதவர் யார்? ஈஸ்வரனும் அதில் மயங்கி பேரனை அணைத்து கொண்டு.
“எனக்கு அதுல சின்ன வேலை போட்டு குடுப்பீங்களா முதலாளி?” பணிவாக கேட்பது போல நடித்தவரின் நடிப்பில் வெட்கப்பட்டு சிரிப்பான் அர்ஜுன்.
“தாத்தா…” சினுங்குபவனை அணைத்து கொள்வார்!
கல்லூரி படிக்கும் போதே வியாபாரத்தின் ஒவ்வொரு நிலையிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டவன்… எம்பிஏ முடிந்த பின்னர் வியாபாரத்தை விரிவுப்படுத்துகிறேன் என்று வந்து நின்றான்.
“தாத்தா… எத்தனை நாளுக்கு தான் திருச்சியை மட்டும் பார்த்துட்டு இருக்கறது? சென்னை,கோயம்பத்தூர்,மதுரைன்னு எல்லா ஊர்லயும் நம்ம சப்ளை இருக்கணும்… அதுக்கு இன்னும் முதல் போடணும்…” பிடிவாதமாக கூறியவனை ஆதரவாக பார்த்தாலும் அவரிடம் அவன் கூறுமளவு முதல் இல்லையே.
“தம்பி… நம்மகிட்ட அவ்வளவு வசதி இல்லையே… எப்படிப்பா?” என்று மலைத்தவரை சமாதானப்படுத்தி.
“பேங்க் லோன் இருக்கு தாத்தா… அப்ளை செய்துக்கலாம்…”
“ஐயோ தம்பி… கடன் வாங்குறதா? அதுவும் நாமளா? அது சரி வராதுப்பா…” என்று அவர் பதற.
“தாத்தா… நீங்க நினைக்கற மாதிரி கடன் வாங்குறது ஒன்னும் தப்பு இல்ல… கடன் வாங்கினா தான் தொழில் செய்ய முடியும் தாத்தா… அதோட டேக்ஸ்சும் குறையும்… சப்சிடி வேற கிடைக்கும்…” லோன் வாங்குவதில் உள்ள சாதகங்களை அவருக்கு ஏற்ற முறையில் விளக்க… அனைத்தையும் சிறு தயக்கத்தோடு கேட்டு விட்டு.
“தம்பி… இருக்கறது எல்லாம் உனக்கு மட்டும் தான்… நீ நினைச்சா இதை பெருக்கவும் செய்யலாம் குறைக்கவும் செய்யலாம்… அது உன் கைல தான் இருக்கு… பெருக்கனும்ன்னு நினைச்சா பெருக்கிக்கோ… அதை நான் வேண்டாம்ன்னு சொல்ல மாட்டேன்… என்னோட காலம் இன்னும் கொஞ்சம் காலம் தாண்டா தம்பி… அதுக்கப்புறம் நீ தான் எல்லாத்தையும் பார்த்தாகனும்… அதனால உன் சொத்தை நீ என்ன வேணும்னாலும் செய்துக்க ராஜா…”
மிகத்தெளிவாக கூறி அவருக்கு தைரியத்தை கொடுத்தவரை அணைத்து கொண்டான் அர்ஜுன்.
“தாத்தா… கண்டிப்பா நீங்க வளர்த்த வளர்ப்பு சோடை போகாதுன்னு ப்ரூவ் பண்றேன்… என்னைக்குமே நாம தப்பான முடிவு எடுத்துட்டமோன்னு நீங்க நினைக்கவே மாட்டீங்க தாத்தா… அது சியூர்…” கண்களில் லேசான ஈரத்தோடு கூறியவனை உச்சிமோர்ந்து அனுப்பி வைக்க.
அடுத்த நாளே அதற்கான வேலைகளில் இறங்கினான் அர்ஜுன்!
அப்போதுதான் நன்கு பிரபலமாக துவங்கியிருந்த மிகப்பெரிய மால்களும்… அவற்றுக்கு பொருட்களை விநியோகிக்கும் சப்ளை செய்ன் கம்பெனிகளை பற்றி கேள்விப்பட்டவன் தானும் அதை முயன்று பார்த்தால் என்னவென்று தோன்றியது.
ஆனால் அதற்கான ரிஸ்க் என்பது மிகப்பெரியது… ஒரு மாலுக்கு சப்ளை செய்ய வேண்டும் என்றால் கூட அதற்கான இருப்பு அளவும் இன்வெண்டரி எனப்படும் குடோன்களின் அளவும் அதிகம்.
அதற்கான வேலைகளுக்காக அப்போது சென்னை வந்திருந்தான்… மிகப்பெரிய மால் ஒன்றிற்கு பொருட்களை சப்ளை செய்வதற்கான பேச்சுவார்த்தைக்காக வந்திருந்தான்… அவர்களுடைய வியாபாரம் மிகப்பெரியது… அவர்களுக்கு சப்ளை செய்பவர்களும் மிக மிக பெரிய ஸ்டாக்கிஸ்ட்கள் மட்டுமே… அதில் நம்மால் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்று நிமிடம் யோசித்தான்.
யோசித்த இடம் வேளச்சேரியில் இருக்கும் சிவா விஷ்ணு ஆலயம்.
கையில் அவர்களிடம் கொடுக்க வேண்டிய வரைவு முன்மாதிரி!
சுற்றிலும் பட்டாம்பூச்சியாக பறந்து கொண்டிருந்த குழந்தைகளோ… அழகு பதுமைகளாக கோவிலை சுற்றி கொண்டிருந்த இளம்பெண்களோ யாருமே அவனது கருத்தில் படவில்லை… அவனுக்கு தெரிந்ததெல்லாம் தன் முன்னே இருந்த பெருமாளும் கையில் இருந்த வரைவு முன்மாதிரியும் மட்டுமே!
எப்படியாவது இந்த ஒப்பந்தம் சரியாக அமைந்துவிட்டால் அதை நூலாக பிடித்து கொண்டு முன்னேறி விடலாம் என்று தான் எண்ணியிருந்தான்… அதற்கான திட்டங்கள் பலவும் அவனது யோசனையில் தினமும் வலம் வந்துகொண்டுதான் இருந்தது.
மனமுருகி வேண்டி பைலை பட்டரிடம் கொடுத்து ஸ்வாமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து தர கூறியவன் அப்போதுதான் தன் முன்னே நின்று கொண்டு கண்களை இறுக்கமாக மூடி கொண்டு ஸ்வாமியிடம் சப்தமில்லாமல் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்தான்.
முகத்தில் இன்னமும் குழந்தைத்தனம் மீதமிருக்க ஆனால் தோற்றமோ வளர்ந்த பெண் என்பதை கூற… பார்த்தவன் சற்று நேரம் பார்த்தபடியே நின்றிருந்தான்.
அவள் சுலோகம் சொல்கிறாளா அல்லது சண்டை போடுகிறாளா என்பதை புரிந்து கொள்ளவே முடியாத பாவனை… தந்தையிடம் பலூன் வாங்கி கொடுக்க குழந்தை கெஞ்சுவது போல கடவுளிடம் பேசிக்கொண்டிருந்த அந்த பெண் அவனுக்குள் சுவாரசியத்தை விதைத்தாள்.
பட்டர் சுற்றியிருந்த மற்றவர்களிடம் அர்ச்சனைக்கு வாங்கிக்கொண்டு விரிவாக அர்ச்சனை செய்து கொண்டிருக்க… அர்ஜுனோ அவள் மேலிருந்து கண்களை எடுக்க முடியாதவனாக அவ்வப்போது அவளை பார்த்து கொண்டே நின்றிருந்தான்.
எளிமையான ஆனால் பாந்தமான காட்டன் சுடிதாரில்… வட்ட முகத்தில் பெரிய விழிகள் அவ்வப்போது சுவாமியை பார்த்து மீண்டும் இறுக்கி மூடி கொள்வதுமாக இருக்க.
ஒரு வரியாய் உன் இரு விழிகள்
என்னில் கணக்கில்லா விளக்கவுரைகள்!
கவிதை சொல்ல தோன்றியது… வந்த வேலையை மறந்து விட்டு!
அந்த அழகான உதடுகளை சுளித்து நெளித்து ஒருவழியாக்கி கொண்டிருந்தாள்… மஞ்சளும் சந்தனமும் கலந்து அதில் ரோஜாவை கலந்த ஒரு நிறம்… பிறை நெற்றியில் ஒரு சிறிய பொட்டு… குண்டு கன்னங்கள்… சங்கு கழுத்து… அதற்கும் கீழே என்று பார்வை போக… தலையை ஆட்டி தன்னிலையை இழுத்து பிடித்து வைத்தான்.
“அர்ஜுன்… கன்ட்ரோல்… கன்ட்ரோல்…” தனக்கு தானே கூறிக்கொண்டு கண்களை அழுத்தமாக மூடி கொண்டு கடவுளை வணங்க.
“இந்தாங்கோ… பைல்…” என்று பட்டர் சுவாமியின் பாதத்தில் வைத்த பைலை அவனிடம் தந்தார்.
“தாங்க்ஸ் சுவாமி…” என்று அவரிடமிருந்து வாங்கி கொண்டு தப்பி பிழைப்பவன் போல அவசரமாக வெளியே ஓடி வந்தான்.
வெளியே வந்தவன் இழுத்து மூச்சை வெளியே விட… மனம் சமன்பட்டது.
“அர்ஜுன்… இது நல்லாருக்கா? உனக்கே இது நல்லாருக்கான்னு கேட்கறேன்… எதுக்கு இங்க வந்த? சைட் அடிக்கவா? அதுவும் அந்த அளவு அந்த பொண்ணை பார்த்துட்டு இருக்க… தாத்தாவுக்கு தெரிஞ்சா என்னாகறது?” ஒரு மனம் அவனை கன்னாபின்னாவென திட்டி தீர்க்க… மறுமனமோ.
“இப்ப பார்க்காம வயசானதுக்கு அப்புறமா பார்க்க முடியும்? சைட் அடிக்கறது என்ன அவ்வளவு பெரிய குற்றமா? பார்க்கத்தானே கண்ணு இருக்கு… தாத்தா கிட்ட போய் இதை கூடவா சொல்லுவாங்க..நீ நல்லா சைட் அடி அர்ஜுன்… அந்த பொண்ணு என்ன உன்னை கூப்பிட்டா திட்ட போறா?” என்று அவனுக்கு வக்காலத்து வாங்க.
சிறு சிரிப்பு மலர்ந்தது… இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும் போதே… பின்னாலிருந்து ஒரு குரல்.
“எக்ஸ்கியுஸ் மீ…” தேனாக அவன் காதில் வந்து பாய்ந்தது அந்த குரல்.
திரும்பியவன் அதிர்ந்து போனான்.
அழைத்தது இவ்வளவு நேரம் வளைத்து வளைத்து தான் சைட்டடித்த அந்த அழகு பெண்!
அர்ஜுனுக்கு தலை கிறுகிறுத்தது… போதையில்!






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!