அத்தியாயம் 11
வேண்டும் என்றே வேண்டாம் என்கிறாய் நீ
வேண்டாம் என்பதே வேண்டாம் என்கிறேன் நான்!
உன்னில் நனைந்திட துடிக்கும் மழை நான்
என்னை மூழ்கடிக்க துடிக்கும் ஆழ்கடல் நீ!
நான் புகுந்திடாத போர்க்களம் நீ
நீ அணிந்திடாத ஆடை நான்!
என்னில் தழும்பில்லா காயங்கள் நீ
உன் மேல் வரம்பில்லா காதல் நான்!
அழுத்தமான குரலில் அவன் கூறியதை கேட்டவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை… ஆனால் அவன் தன்னை பார்த்து விட்டு தான் இப்படி கேட்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள் சிறு கோபம் எழுந்தது.
கண்காணிக்கின்றானா என்ற கோபம்!
“அர்ஜுன்…” கோபமாக அவனை அழைப்பதை பார்த்த மூவருக்குமே குழப்பம்… ஏதோ இருவருக்குமிடையே மனஸ்தாபம் என்பதை புரிந்து கொண்டு நகர பார்க்க… அவர்களை கை காட்டி அமர சொன்னாள்.
“உன் கூட அந்த பசங்க இருக்காங்களா இல்லையா? அதை சொல்லு முதல்ல…” இன்னும் அழுத்தமாக அவன் கேட்க… அவளுக்கு இப்போது வெகு குழப்பமாக இருந்தது… இது அர்ஜுனின் இயல்பு கிடையாதே… மருந்துக்காக கூட அவன் சீரியசாக இருந்தது பார்த்ததில்லையே.
“நான் ப்ரெண்ட்ஸ் கூட…” என்று கூற வந்து நிறுத்திவிட்டு
“எப்ப பார்த்த நீ… இங்கதான் இருக்கியா?” சுற்றியும் பார்க்க… சற்று தூரத்தில் ஒரு கார் மட்டும் நின்று கொண்டிருந்தது… அவன் எங்கே இருக்கிறான் என்று அவனது பைக்கை தேடி அவளது கண்கள் அலைய.
“பின்ன கூட உட்கார்ந்து இருக்கவனுங்க பாய் ப்ரெண்ட்ஸ் இல்லையா? ஏன் டெடி… ஒரு நேரத்துல ஒருத்தனை வெச்சு மெயின்டெய்ன் பண்றதே பெரிய விஷயம்… இதில் ரெண்டு பேரா… எப்படி டெடி எப்படி?” சற்றும் சிரிக்காமல் அவன் கேட்க.
ஸ்ரீநிதி பிடித்து வைத்த மூச்சை ஷப்பா என்று வெளியே விட்டாள்… பாவி இத்தனை சீரியசாக கேட்பது போல… தன்னை அரட்டி உருட்டி… எல்லாம் நடிப்பு என்று மனதுக்குள் வைதவள் அருகில் இருந்த இருவரையும் முறைத்து.
“ஏன்… இன்னொருத்தி இருக்காளே… என் பக்கத்தில்… அவளை என்ன சொல்ல போற?” கடுப்பாக கேட்க.
“ச்சே… அதை தான் நான் அடுத்ததாக கேட்கலாம் என்று நினைத்தேன்… நீயே எடுத்து கொடுத்து விட்டாய்…” குறும்பு கூத்தாட கூற.
“அடப்பாவி…” என்று வாயை கையால் மூடி கொண்டாள்… ஆனால் அவனோ.
“ஐ வாஸ் திங்கிங் தட் யூ ஆர் ஸ்ட்ரைட்…” என்று கிண்டலடிக்க.
“யூ… யூ… ஸ்டுபிட்… இடியட்…” என்று கன்னாபின்னாவென திட்டி விட்டு.
“உமாவை வேண்டுமானால் அப்படி சொல்லிக்கோ… ஏன்னா அவள் என்னோட டார்லிங்…” என்று உமாவை பார்த்து கண்ணடித்தவள்… மற்ற இருவரையும் கைகாட்டி…”ஆனா இந்த ரெண்டு மடப்பசங்களையும் என்னோட பாய்ப்ரென்ட்ன்னு சொன்ன… உன் மண்டைய உடைச்சுடுவேன்…” ஒரு விரலால் பத்திரம் காட்டி அவள் கூற… அர்ஜுன் வாய்விட்டு சிரித்தான்.
“அடிப்பாவி… அவள் உனக்கு டார்லிங்கா… அப்போ கன்பார்ம்ட்…” என்று சிரித்தவனுக்கு அவளை இப்போதே பார்க்க வேண்டும் போல இருந்தது.
“சரி… ஒரு ஒன் அவர் கட் அடி டெடி… ப்ளீஸ்…”
மீண்டும் அவனது விஷயத்திற்கே வந்தவனை நினைத்து நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்தாள்… எப்போதும் இப்படி சொல்பவன் கிடையாதே… ஏன் இன்று மட்டும் இப்படி பிடிவாதம் பிடிக்கிறான்.
அவளது படிப்பு அவனால் எந்த வகையிலும் கெட்டு விட கூடாது என்பதில் மிக தீவிரமாக இருந்தான்… சென்னைக்கு வரும் போது கூட அவளை கல்லூரி நேரத்தில் சந்தித்ததே இல்லை… அப்படி இருக்கும் போது இப்போது மட்டும் அவன் இப்படி அழைப்பதில் குழம்பினாள் ஸ்ரீநிதி!
அதிலும் அவன் எந்தளவு பிசியானவன் என்பதையும் அறிந்தவளுக்கு மனதில் சில்லென்ற உணர்வு!
தொழிலை அவன் தொடங்கி அதாவது அவனது தாத்தாவிடமிருந்து பொறுப்புக்களை வாங்கி நடத்த ஆரம்பித்து இரண்டு வருடமே கடந்துள்ள நிலையில் அதற்கான உழைப்பு மிக அதிகமாக இருந்தது.
சில நேரங்களில் உண்பதற்கும் நேரமில்லாமல் உழைக்க வேண்டி இருக்கிறது என்பதை அவன் அவ்வபோது கூறி கொண்டு தானே இருந்தான்.
சென்னை வரும் போதெல்லாம் கழுத்து வரை வேலைகளை வைத்து கொண்டு தான் அவன் வருவதே… ஆனால் அவனது அத்தனை பளுவையும் காட்டி கொள்ளாமல் அவர்கள் சந்திக்கும் நேரங்களில் எல்லாம் அவளை சிரிக்க வைப்பதை இன்னொரு தொழிலாகவே கொண்டிருந்தான்.
அதிலும் சந்திப்பது என்றால் வெளியிடங்களில் எல்லாம் இல்லை… அவர்கள் முதலில் பார்த்த கோவிலும் அது சார்ந்த இடங்களும் மட்டுமே!
கல்லூரிக்கு இதுவரை வந்ததே இல்லை எனும் போது இப்போது மிக மிக ஆச்சரியமாக இருந்தது.
இருவரும் இதுவரை வெறும் நண்பர்கள் மட்டுமே!
அவளுக்குள் ஆர்வம் இருக்கிறது என்பதை அவனும் அவனுக்குள் ஆர்வம் இருக்கிறது என்பதை அவனும் உணர்ந்து இருந்தாலும் வெளிப்படையாக இதுவரை சொல்லி கொண்டதே இல்லை.
அவளுமே அந்த உணர்வை நிறைய நாட்களாக உணர்ந்து தானிருக்கிறாள்… அர்ஜுனாக சொல்வானென்று காத்து கொண்டுதானிருக்கிறாள்… இன்று அவன் இப்படி அழைக்கவும் படபடவென இருந்தது.
உடல் சிலிர்த்து நடுங்கியது.
“ஏன்… என்னாச்சு அர்ஜுன்?” கன்னம் சிவக்க வெளியே வராத குரலில் அவள் கேட்க… அருகில் அமர்ந்திருந்த மூவரும்.
“ஓஹோ…” என்று கத்தினார்கள்!
“புது கார் வாங்கியிருக்கேன் டெடி… இப்பதான் டெலிவரி எடுத்துட்டு வரேன்… உன்னை தான் முதல்ல கூட்டிகிட்டு கோயிலுக்கு போகணும்… வர்றியா?” அவன் கூறிய விஷயத்தில், முறையில் ஸ்ரீநிதியால் ஒரு வார்த்தை கூட பதில் பேச முடியவில்லை.
“ம்ம்ம்ம்…” எதை பற்றியும் நினைக்காமல் சரி என்று சொல்லிவிட்டவளுக்கு அர்ஜுனின் காதல் அவன் சொல்லாமலே புரிந்தது… அவள் அமர்ந்திருந்த நிலையை பார்த்து.
“ஏய் ஸ்ரீநிதி… என்ன ஹீரோ சர் ப்ரோபோசே பண்ணிட்டாரா? இப்படி ஷாக்காகி உட்கார்ந்து இருக்க…” ரசூல் வேடிக்கையாகவே கேட்க… ஸ்ரீநிதி இல்லையென்று தலையாட்டினாள்.
“அப்புறம் ஏன் இப்படி உட்கார்ந்து இருக்க…” உமா அவளை பிடித்து உலுக்க… அப்போதுதான் அவளது ஹேங் ஓவரிலிருந்து வெளியே வந்தாள்.
“இல்லடி… அர்ஜுன் புது கார் எடுத்திருக்காராம்… கோயில் போகணுமாம்… கிளாசை கட் பண்ணிட்டு வர சொன்னார்…” என்று கூற… மூவரும் சேர்ந்து.
“ஓஹோ…” என்று கத்த… அவளோ வெட்கத்தில் முகமெல்லாம் சிவந்து.
“ஏய் பிசாசுங்களா… ப்ளீஸ் கத்தாதீங்க… அர்ஜுன் வந்துடுவார்… ப்ளீஸ்… என் மானத்தை வாங்கிடாதீங்க…” மானத்தை வாங்காவிட்டால் அவர்கள் நண்பர்கள் இல்லையே… மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து நமுட்டு சிரிப்பை சிரித்து வைக்க.
“ஏய் வேணாம்… உங்க மூணு பேரோட சிரிப்பே வில்லத்தனமா இருக்கு…” என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் நின்று கொண்டிருந்த வெள்ளை நிற டொயோட்டா கரோலா அருகில் வந்தது.
திரும்பி பார்த்தவளை குறும்பு பார்வையோடு அழைத்தான் அர்ஜுன்.
“போம்மா மின்னல்… ஹீரோ வந்துட்டார்… ஹீரோயின் இனிமே இங்கயா இருப்பீங்க? லொகேஷன் எங்கன்னு மட்டும் சொல்லிட்டு போ… சுவிஸ்ஸா? இல்ல லண்டனா? எந்த லொகேஷனுக்கு போய் டான்ஸ் ஆடினாலும் சீக்கிரம் முடிச்சுட்டு வந்துடு… ஏன்னா அடுத்த அவர் ஹெச்ஓடியோடது…” மூவரும் சேர்ந்து கலாய்த்து ஒரு வழியாக்கி அவனோடு அனுப்பி வைக்க… முகம் முழுக்க சிரிப்போடு அவனுக்கு அருகே அமர்ந்தாள்.
“ஏன் ரொம்ப கலாய்க்கறாங்களா?” குறும்பாக சிரித்து கொண்டே கேட்டவனை குறுகுறுவென பார்த்தவள்.
“ம்ம்ம்ம்… தெரியாம கூட்டிகிட்டு வந்தாலே… நாலு நாளைக்கு ஓட்டி எடுத்துடுவாங்க… தெரிஞ்சே கூட்டிட்டு போனா… ஐயோ அந்த குரங்குங்க கிண்டலடிச்சே என்னை ஒரு வழியாக்க போகுதுங்க…” குறைபட்டாலும் அவளது முகம் வெட்க சிவப்பை பூசி கொண்டிருக்க… அர்ஜுனுக்கு அவளை பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருந்தது!
“ஏன் கிண்டலடிக்கணும் டெடி?” ஒன்றுமறியாதவன் போல் கேட்டவனை வெட்கத்தோடு முறைத்து பார்த்தாள்.
“ம்ம்ம்ம்… அதுங்களுக்கு வேண்டுதலாமாம்…” நீட்டி முழக்கியவளின் தொனியில் தன்னை தொலைத்தான்… அவளது தலையில் செல்லமாக தட்டிவிட்டு அந்த கோயிலின் முன் நிறுத்தினான்.
புதிய வண்டி என்பதால் பூஜை போடுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்துவிட்டு அவளையும் அழைத்து கொண்டு சன்னிதானத்தில் ஜோடியாக நிற்கும் போது மனம் கசிந்தது.
“ஆண்டவா… இவளோடு வாழ்நாள் முழுக்க இப்படியே ஒன்றாக இருக்கவேண்டும்…” என்று மட்டுமே அவனால் வேண்ட முடிந்தது… காரை எடுத்தவுடன் முதலில் தாத்தாவுக்கு அழைத்து கூறிவிட்டபடியால் அவளை பார்ப்பதை தவிர வேறெந்த வேலையும் இல்லை அவனுக்கு!
அவனுடைய தாய் தந்தையை அவன் பார்க்கவில்லை… அவனுடைய தாத்தாதான் அனைத்துமாக இருந்தவர்… இப்போதும் இருப்பவர்… அவருக்கு அடுத்து யாரை முக்கியமாக நினைத்தான் என்றால் அது ஸ்ரீநிதி மட்டுமே!
மனதில் பூட்டி வைத்ததை எல்லாம் சொல்ல அவனுக்கும் ஆசை தான் ஆனால் அவளது படிப்பு அவனுக்கு தடை போட்டது… படித்து முடிக்கட்டும் என்று ஒரு ஓரத்தில் எண்ணினாலும் அவனது உள்மனம் சண்டித்தனம் செய்து வருவதென்னவோ உண்மை!
சீக்கிரத்தில் அவளிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டான்… அவள் கண்களிலும் தென்படும் ஆர்வம் அவனை கிறுகிறுக்க வைத்தது.
சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அமைத்திருந்த ஆள் நடமாட்டமில்லாத அமைதியான கோயில் அது!
வேண்டுமென்றே தான் இங்கு அழைத்து வந்திருப்பானோ என்று தோன்றியது அவளுக்கு!
உள்ளுக்குள் ஏனோ படபடப்பு!
கைகளை பிடித்து கொண்டு சன்னிதானத்தை வலம் வந்த போதும் கற்பூர ஆரத்தியை வணங்கிய போதும் மனம் சிறகு விரித்து பறந்து கொண்டிருந்தது… இருவருக்கும்!
நிறைவான தரிசனம்!
சுவாமியின் கழுத்து மாலைகளில் இரண்டு மாலைகளை கொண்டு வந்த அய்யர்… ஒன்றை அர்ஜுன் கையிலும் இன்னொன்றை ஸ்ரீநிதியின் கையிலும் கொடுக்க… அவளுக்கு குழப்பம்! குழம்பி கொண்டிருக்கும் போதே.
“உங்க ஆம்பிடையானுக்கு போடுங்கோ…” என்று அர்ஜுன் கழுத்தில் போட சொல்ல… அதிர்ந்து அவனை பார்த்தாள்… அவளது முகத்தில் இருந்த அதிர்வு அவனிடம் புன்னகையோடு கூடியதாக இருக்க… அவனை லேசாக முறைத்து விட்டு அந்த அய்யரிடம் மறுதலித்து கூற வாய் திறந்தவளை பிடித்திருந்த கையை அழுத்தி வேண்டாமென்று கூறினான்!.
“உங்க ஆத்துக்காரி கழுத்துல போடுங்கோ…” என்று அவனிடம் திரும்பி கூறியவர்… கையில் அட்சதையோடு நிற்க.
இருவருமே ஒருவரை ஒரு அதிர்ந்து பார்த்தது ஒரு சில கணங்கள் தான்.
அவளது கண்களோடு கலந்தவனின் பார்வையில் இருந்த கரை காண முடியாத காதல் அவளை கட்டி வைக்க, எதுவம் கூறாமல் கீழே குனிந்து கொண்டாள்… அந்த பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.
அர்ஜுனின் கை தானாக மேல் எழுந்து அவளது கழுத்தில் மாலையிட… ஸ்ரீநிதியும் அவனது கழுத்தில் மாலையிட்டாள்… தலையை குனிந்து கொண்டே.
மனதுக்குள் கெட்டி மேள சப்தம்!.
இருவருக்குமே சிலிர்த்தது!
கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர்… ஆனந்த கண்ணீர் அவனது கையில் பட்டு தெறித்தது!
அந்த பூசாரி தன் கையிலிருந்த அட்சதையை இருவர் மேலும் தூவி.
“தீர்காயுஷ்மான் பவ…” என்று அர்ஜுனையும்.
“தீர்க்கசுமங்கலி பவ…” என்று ஸ்ரீநிதியையும் வாழ்த்தி விட்டு போக… இருவருக்கும் இடையே கனத்த மௌனம்.
காருக்கு பூஜைகள் முடிந்து… எலுமிச்சை வைத்து… காரை ஸ்டார்ட் செய்ய… எதுவும் பேசாமல் அமர்ந்து கொண்டாள் ஸ்ரீநிதி!
சற்று தூரமாக போய் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவனுக்கு ஜனசந்தடிகள் இல்லாத தனிமை தேவை!
ஸ்ரீநிதியும் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை.
அவன் தன் காதலை கூறவில்லை… தானும் ஒப்புக்கொள்ள வில்லை… ஆனால் திருமணமே முடிந்தது போல இருந்தது.
அவர் இருவரையும் வாழ்த்தியது இருவரின் உணர்வுகளையும் புயலாக சாய்த்து சென்றது!
என்ன சொல்வது என்று புரியவில்லை… என்ன நடக்கும் என்றும் விளங்கவில்லை… ஆனால் அர்ஜுனை பொறுத்தவரை நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணம் மட்டும் மாறாமல் இருந்தது!
ஜன சந்தடிகள் குறைவாக இருந்த கிழக்கு கடற்கரை சாலையில் அவர்களது கார் பயணித்து கொண்டிருந்தது.
பாடலை அவன் ஆன் செய்ய… பாடிய பாடலை கேட்டு இருவருக்குமே குறும்பான புன்னகை!
காதலை யாரடி முதலில் சொல்வது
நீயா இல்லை நானா
நான் சொன்னால் நீ வெட்கதில் சிவப்பாயா
இல்லை அடிப்பாயா
நீ சொன்னால் நான் வானதில் பறப்பேனா
இல்லை மிதப்பேனா
அடர்ந்த மரங்கள் சூழ்ந்த அந்த பசுமையான அமைதியான இடத்தில் காரை ஓரமாக நிறுத்த.
கார் கண்ணாடிகளை இறக்கி விட சில்லென்ற இயற்கை கடல் காற்று வேகமாக முகத்தில் மோதியது… நெற்றியில் அசைந்தாடிய முடியை அவள் ஒதுக்கி விட்டு தலை குனிந்தவாறே அமர்ந்திருக்க… அவளை பார்த்தவாறு திரும்பி அமர்ந்தான்.
ஸ்ரீநிதியோ அவனை பார்க்க வெட்கப்பட்டு அவளது மோதிரத்தை சுழற்றி கழற்றி மீண்டும் போட்டு கொண்டிருக்க… அவளது பதட்டம் அவனை ரசிக்க வைத்தது.
“டெடி… என்னோட மோதிரமும் வேண்டுமா?” அவன் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி அவளிடம் கொடுக்க… புரியாத பார்வை அவனை பார்க்க.
“இல்ல… ஒரு மோதிரத்தையே எவ்வளவு நேரம் நீ கழட்டி மாட்டுவ? அதான் ஒரு குட்டி சஜஷன்…” என்று கண்ணை சிமிட்டி அந்த மோதிரத்தை அவளது கையை பிடித்து அணிவிக்க.
“ம்ம்ம்ம்…” முறைத்தாள் அவனை!
அவளது பிஞ்சு விரல்களை தொட்டு பார்த்தவன்,
“வாவ் எவ்வளவு சாப்ட்… இவ்வளவு சாப்டா இருக்க என்ன நீ யூஸ் பண்ற ரசகுல்லா?” குறும்பாக கேட்டவனை மேலும் முறைத்தவள்,
“என்ன ரசகுல்லாவா?” அதிர்ந்து கேட்டாலும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.
“ம்ம்ம்… பின்ன… ரசகுல்லா… எனக்கு… ரொம்ம்ம்ம்ம்ப பிடிச்ச ஸ்வீட்… அதை கொஞ்சம் கொஞ்சமா ஜீராவோட… கொஞ்சம் கொஞ்சமா…” என்று கண்களில் ஒரு விதமான போதையோடு விளக்க ஆரம்பிக்க.
“ஸ்டாப்… ஸ்டாப்… போதும் உன்னோட விளக்கமெல்லாம்…” என்று கூறி அவனிடமிருந்து கைகளை உருவ பார்க்க… அவனோ விரல்களோடு கோர்த்து கொண்டான்.
அவளது கைகள் சில்லிட்டு இருந்தது… உடல் நடுங்கியது.
“ஏன் இவ்வளவு கோல்ட்டா இருக்கு உன் கை?” என்றவன் அவனது கைக்குள் அவளது கையை வைத்து கொள்ள… வெளிப்படையாகவே வியர்த்தது ஸ்ரீநிதிக்கு!
“இ… இல்ல… நத்திங்…” என்று தடதடத்த குரலில் கூறி விரல்களை அவள் மீண்டும் பிரித்தெடுக்க முயல… மேலும் இறுக்கமாக்கி கொண்டான் அவன்… சிறு சிரிப்போடு!
“ஏன் இவ்வளவு டென்ஷன் டெடி?”
“இல்லையே… நான் நார்மலா தான் இருக்கேன்…”முயன்று இயல்பான குரலில் கூறினாலும் அவளது குரல் நடுக்கம் அவனுக்கு தென்படாமல் போய்விடுமா என்ன?
“ம்ஹூம்… யூ ஆர் நாட் நார்மல்…” என்றவன் அவளை குறுகுறுப்பாக பார்க்க… நிமிர்ந்து பார்த்தவள் அவனை முறைத்தாள்!
வரும் வழியில் அந்த அய்யர் ஏன் தங்களை தம்பதி என நினைத்தார் என்று வெகு நேரமாக தனக்குள்ளே கேள்வி ஓடி கொண்டே இருக்க.
அப்போதுதான் கவனித்தான்… அவள் கழுத்தை மூடிய சுடிதார் அணிந்திருப்பதை… கழுத்தில் என்ன அணிந்திருக்கிறாள் என்பதை அறியாமல் ஒன்றாக வந்ததனால் மனைவி என்று முடிவு செய்து விட்டார் போலும்.
அந்த அளவா இருவருக்குமிடையில் பொருத்தம் இருக்கிறது?
“ஆஹா…” நமுட்டு சிரிப்பு சிரித்தவனை நிமிர்ந்து கோபமாக பார்த்தாள் ஸ்ரீநிதி.
“இப்போ எதுக்கு இப்படி சிரிக்கற?”
“ஏன் சிரிச்சா கூட தப்பா? ஒரு சின்ன பையன் சிரிக்க கூட உரிமையில்லையா?”
“யாரு சின்ன பையன்? நீயா?” கடுப்பாக அவள் கேட்க.
“பின்ன நான் தான்… வேற யார் இங்க இருக்கா?” கண்ணை சிமிட்டி அவன் கூறியதில் அவளுக்கு குப்பென்று வியர்த்தாலும் அவனை முறைப்பதை மட்டும் விட்டுவிடவில்லை.
“ஆமாம் சின்னபையன் தான் மாலைய போடுன்னு சொன்னவுடனே போடுவானாம்?” உதட்டை சுளித்து கொண்டு அவள் கூற.
“நான் போட்டேன்னு மட்டும் சொல்றியே… நீயும் தான் போட்ட… அதை மட்டும் கண்டுக்க மாட்டியே… ஒரு சின்ன பையனோட மனசை சின்னாபின்னபடுத்திட்ட நீ…” சிறுகுழந்தை போலவே அவளை குற்றம் சாட்டி சினுங்கியவனை கண்டு வாயை மூடிக்கொண்டாள்!
“அடப்பாவி… சின்னாபின்னபடுத்திட்டேனா? இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல…”
“ஆமா… இல்லையா பின்ன… நல்ல பையனா இருந்தேன்… இப்படி இப்படி எல்லாம் பண்ணி… என்னை எப்படி எப்படியோ நினைக்க வைச்சுட்ட…” குறும்பு புன்னகையோடு அவன் கூறுவதை கேட்ட ஸ்ரீநிதிக்கு ஐயோ என்றிருந்தது!
“டேய்… நீ உலக மகா பிராடுடா… சரியான 420…” கூறி அவனை மாறி மாறி அடிக்க ஆரம்பிக்க… அவனோ வாய்விட்டு சிரித்து கொண்டே அடித்த அவளது இரு கைகளையும் சிறை செய்தான்.
ஸ்ரீநிதியின் முகத்தில் வெட்கபூக்கள்!
“ஹய்யோ… கைய விடு அர்ஜுன்…” வெட்கத்தில் அவனிடமிருந்து கைகளை பறித்து கொள்ள நினைக்க… அவனோ மேலும் இறுக்கமாக கைகளை தன்னுடன் பிணைத்து கொள்ள.
“ப்ளீஸ் அர்ஜுன்…” அவள் சிணுங்க… அதற்கும் மேல் அவனால் தாக்குபிடிக்க முடியவில்லை… சிணுங்கிய அவளது இதழ்களை சிறை செய்தான்!
அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்
உள்ளங்கள் பந்தாடுதே
ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
காதலன் கைச்சிறை காணும் நேரம்
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்..






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!