அத்தியாயம் 12
நான் பொழிய நனையும் பூமேனி நீ
நீ நனைய உருகும் பனி பொழிவு நான்
அதிகாலை தூக்கம் கலைப்பவள் நீ
விழித்திருந்து தூக்கம் வேண்டி நான்
என்னை சுழற்றும் நீர் சுழற்சி நீ
உன்னில் கவிழும் நீர் வீழ்ச்சி நான்
இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்த பின் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசிக்கொண்டே இருந்தார்கள்… பேசிய போதெல்லாம் அடுத்த வாய்ப்பை தேடினார்கள்… பேசுவதை விட விவாதித்தனர்… கருத்துக்களை பரிமாறி கொண்டனர்… கனவுகளை பகிர்ந்து உண்டனர் என்று கூறி கொண்டே போகலாம்.
காதல்!
எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காதது!
புற அழகால் கவரப்பட்டு… அதன் பின் அக அழகில் மயங்கி… அறிவில் ஒன்றி… ஒருவரை பிரிந்தால் இன்னொருவர் இல்லை என்ற நிலைக்கும் போவது உண்டு!
அந்த நிலையில் இருந்தனர் அர்ஜுனும் ஸ்ரீநிதியும்!
மனநிலைகளுக்கு தக்கது போல படிக்கும் எழுத்துக்களும் மாறும்… அப்போது அவனுக்கு குறுந்தொகை படிக்க வேண்டும் போல தோன்ற… இணையத்தில் ஒரு ப்ளாக்கில் அந்த பாடலை வாசித்தான்… மெல்லிய புன்னகை மலர்ந்தது அவனது இதழில்!
‘உள்ளிக் காண்பென் போல்வென் முள்எயிற்று
அமிழ்தம் ஊறுமஞ் செவ்வாய்க் கமழ்அகில்
ஆரம் நாறும் அறல்போல் கூந்தல்
பேர்அமர் மழைக்கண் கொடிச்சி
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே’
அதன் அர்த்தத்தையும் சுவாரசியமாக அதன் ஆசிரியர் கூறியிருக்க… ரசித்து படித்தான்.
மலை நிறையும் குளிர்.
கணப்பாய் மாறிய உடல்.
கவலைகள் அற்று அதுவரை உறங்கிய அவளது உறக்கம் முதல் முறையாகத் தொலைவது அப்பொழுதுதான்.
இன்னொருபுறம்,
அவளது முகத்தை நினைவிற்குக் கொண்டுவர முயல்கிறான்அவன்.
மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறான்.
அவனுக்கு முதலில் தோன்றுவது அவளது அந்தப் பார்வைதான்!
முதற்பார்வையில் அந்தக் கண்கள் அவனோடு புரிந்தபோர்.
அவனை வீழத்திய அந்தக் கணம்.
அவன் வீழ்ந்த அக்கணத்தில் அவள் உதட்டில் எழுந்த செருக்குடைய சிறு புன்னகை.
அதன்முன் எல்லாம் இழந்து தோற்ற தன்னை அவள் ஏற்க வேண்டி இரந்துநிற்கும் அவனது நிலை.
மெல்லக் கவனிக்கிறான்.
இப்போது அவளது கண்களில் ஒரு சினேக பாவம் தெரிகிறது.
அந்தக் கண்கள் போர் செய்வன அல்ல.
அவை அருள் மழை பொழிந்து தன்னை ஆதரிப்பவை… தன் மிச்ச வாழ்வின் புதுநீர்ப் பெருக்கு.
அவளது நினைவு இன்னும் கூர்மையடைகிறது.
அவன் அறையெங்கும் பரவுகிறது அவளது வாசனை…..!
அது எங்கிருந்து வருகிறது?
ஆற்றின் நீர் பாய்ந்து போன தடத்தில் வெண்மணல் கருப்பாய் மாறித் தெரிவது போன்ற அவளது கூந்தல்.
அவன் அறையில் பரவுகின்ற அந்த மணம் சந்தனத்தாலும் அகிலாலும் புகையூட்டப்பட்ட கருமணற் பரப்புப் போன்ற அவளது கூந்தலில்இருந்துதான் வருகிறது.
அவள்தான் தனக்கானவள்.அவளை மீண்டும் காணும் வரைக்கழியும் காலங்களில் ஒவ்வொருநொடியும் அவளை அவன் தனக்குள் நிரப்பிக்கொள்கிறான்.
தனது இன்னொரு பகுதி அவள்.
அவனுக்கெனக் குறியிடப்பட்ட இன்னொரு ஆன்மா!
அவள் யார்?
இத்தனைநாள் எங்கிருந்தாள்?
எங்கு எதைப்பார்த்தாலும் அது அவளின் நினைவுகளையே தூண்டுவதாக அந்நினைவு அமைகிறது.
தான் செய்ய வேண்டிய வேலைகள் அத்தனையையும் மறந்து அவள் நினைவொன்றையே கொண்டலயச் செய்யும் மனப்பித்து.
எல்லாம் மறந்த மயக்க நிலையை மனம் அடைகிறது.
அவளுக்காக இந்த உயிரை இழக்கலாம்… அவளுக்காக தன்னுயிரையும் தர இருக்கிறேன் என்பதை அவள் அறிந்து கொண்டால் போதும் என்ற எண்ணம் மேலிடுகிறது.
இன்னொருபுறம் அவனைக் கண்ட அவளுக்கும் இதேநிலைதான்… அவளும் கண்டு, விரும்பி,நினைத்து,நினைத்ததை அடைய முடியாமல் இளைத்து,பின் அனைவரிடமும் கூறி என காதலின் ஒவ்வொரு நிலையையும் கடக்கிறாள் என்று போனது அந்த குறுந்தொகை பாடல்!
படித்து விட்டு ப்ளாகை மூடியவனின் மனதில் மெல்லிய பூங்காற்றாய் அவள்!
காதல் அன்று முதல் இன்று வரை மாறவில்லை என்று தோன்றியது அர்ஜுனுக்கு!
காதலை உரைத்த இந்த ஒன்றரை வருடத்தில் இருவருக்கும் உண்டான பந்தம் பூர்வஜென்ம தொடர்போ என்று தோன்றுமளவு இருவருக்குமே ஒருவரை விட்டு ஒருவரல்ல என்பதை உணர்ந்து இருந்தார்கள்.
அர்ஜுன் செல்பேசியில் பேசுவானே தவிர பெரும்பாலும் வெளியே அழைத்து போக மாட்டான்… அவளுடைய படிப்பும் முக்கிய காரணமாகி இருந்தது.
அப்படியே பார்க்க வேண்டும் என்றால் உமாவோடு கோவிலுக்கு வர கூறி காரில் அமர்ந்து சற்று நேரம் மட்டும் பேசிவிட்டு கிளம்பிவிடுவாள்.
ஸ்ரீநிதிக்கும் படிப்பு முடியும் முன் தனது காதல் தெரிந்து அதனால் பிரச்சனை வருவதை விரும்பவில்லை.
அர்ஜுன் அவனது வேலையில் படுபிசியாக இருந்தாலும் ஓய்வாக இருக்கும் போதெல்லாம் அவனது துணை அவளது நினைவுகளே!
அதே போல அவளது நினைவில் சோபாவில் படுத்து கொண்டு இலக்கில்லாமல் விட்டத்தை வெறித்து கொண்டிருந்த பேரனை மாடியிலிருந்து கவனித்துவிட்டு அவனை நோக்கி வந்தார் ஈஸ்வரன்.
“என்ன ராஜா… ஒரே சிந்தனை? எந்த கோட்டைய பிடிக்க போற?” சிரித்து கொண்டே கேட்டவரின் தோளில் சாய்ந்து கொண்டவனுக்கு சற்று நடுக்கமாக இருந்தது.
தாத்தா தன்னை தவறாக நினைத்து விடுவாரோ என்ற பயம் அவனுக்குள்!
அவர் அப்படிப்பட்டவர் இல்லை என்றாலும் இத்தனை நாட்கள் ஆசையாக வளர்த்த தன்னுடைய பேரனின் திருமணம் குறித்தான ஆசைகள் நிறைய இருக்கும் என்று அவனுக்கு தெரியும்… அவனும் ஸ்ரீநிதியை பார்க்கவில்லை என்றால் ஈஸ்வரனின் பேச்சுக்கு மறுபேச்சு பேச மாட்டானே… இந்த விஷயத்தில்.
ஆனால் இப்போது வேறு வழியில்லை அவனுக்கு!
அவள் படிப்பை முடிக்கும் முன் தாத்தாவிடம் கூறி அவரை தயார் செய்ய வேண்டும் என்று எண்ணி கொண்டான்… அவரது அனுமதி இல்லாமல் அவளை கைப்பிடிக்கவும் முடியாது.
கூடாது!
ஆனால் கூறினால் அவளை அழைத்துவா என்று கேட்பாரே!
சென்னையிலிருந்து குளித்தலை வருவதற்கு அவள் ஒப்புகொள்வாளா? கண்டிப்பாக முடியாது… அதனால் அவளது வீட்டில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுவிட்டது என்றால்? அவளது படிப்பு தானே வீணாகும்!
தான் எப்படியும் படிக்க வைத்து விடலாம் என்றாலும் இந்த நேரத்தில் தேவையில்லாத பிரச்சனைகளும் கெட்ட பெயரும் அவளுக்கு, தான் கொடுத்தேயாக வேண்டுமா என்று தன்னை தானே கேட்டு கொண்டிருந்தான் அந்த காதலன்!
ஆனால் சிறுவயது முதல் தனக்காகவே வாழ்ந்து… தனக்காகவே சிந்தித்து… பெற்றோரை இழந்த தனக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கும் அந்த வயதான ஜீவனை ஏமாற்ற வேண்டுமா? அது சரியா?
ஆனால் தாத்தா வேண்டாமென்று கூறிவிட்டால்? ச்சே ச்சே… அப்படி எல்லாம் தனது தாத்தா செய்து விட மாட்டார்… அவனுக்கு நூறு சதவித நம்பிக்கை இருந்தது!
“தாத்தா…” அவரது தோள் மேல் சாய்ந்து கொண்டு அழைத்தவனை வித்தியாசமாக பார்த்தார் ஈஸ்வரன்!
“டேய்… என்னடா… தாத்தா கிட்ட எதை ஆட்டைய போடலாம்ன்னு இப்படி குழையற?” சிரிப்போடே கேட்டவரிடம் செல்லம் கொஞ்சியவன்.
“ஏன் தாத்தா? உன் கிட்ட ஆட்டைய போடத்தான் நான் பேசுவேனா? நீ என்னோட செல்ல தாத்தா தானே!” அவரது நரைத்த முகவாய் கட்டையை பிடித்து கொஞ்சிய பேரனை புன்னகை மாறாமல் பார்த்தார்… அவருக்கு தான் தெரியுமே,… தன்னிடம் காரியமாக வேண்டுமென்றால் பேரன் என்ன செய்வானென்று!
“சரி சரி… என்ன வேணும் சொல்லு…”
“அது வந்து… தாத்தா… ஒரு பொண்ணை…” என்று ஆரம்பிக்க.
“அட… கல்யாணம் பண்ணிக்கனுமா? இரு நம்ம புரோக்கருக்கு பேசிட்டு வந்துடறேன்…” என்று எழ போனவரை இழுத்து அமர வைத்தான்.
“தாத்தா…”
“சொல்லுடா கண்ணா…”
“நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன்… அவளை தான் கல்யாணம் செய்துக்கனும்ன்னு நினைக்கறேன்… போதுமா?” சட்டென்று கூறி முடித்து விட்டு அவரது முகத்தை பார்க்காமல் வேறு புறம் பார்த்தவனை யோசனையாக பார்த்தார்.
தோளுக்கு மேல் வளர்ந்து விட்ட பேரன்… தொழிலை தனியாக நடத்துபவன்… நாலும் அறிந்தவன்… நல்லது கெட்டதை பிரித்து உணர தெரியாமல் கண்டிப்பாக ஒரு பெண்ணை தேர்வு செய்திருக்க மாட்டானே… நல்ல பெண்ணாக இருந்தால் மட்டுமே இவன் தேர்வு செய்திருப்பான் என்பதை உணர்ந்தவரின் முகத்தில் நிம்மதி பரவியது!
“நான் வேண்டாம்ன்னு சொன்னா…” பேரனுக்கு சற்றும் சளைத்தவரில்லை என்று அவர் உறுதிபடுத்தினார்… ஒரு கணம் அதிர்ந்து மீண்ட அவனது முகம் சிரிப்பை தத்தெடுத்து கொள்ள.
“என் செல்ல தாத்தா அப்படியெல்லாம் செய்துட மாட்டாங்க…” அவரது தாடையை பிடித்து கொஞ்சியவனை பார்த்து சிரித்தவர்.
“இப்படி கொஞ்சியே கவுத்துடு அர்ஜுன்…”
“ஏன் நான் என் தாத்தாவை தானே கவுக்கறேன்…” என்று அவருடைய தோள் மேல் கை போட்டு கொண்டவனை தோளோடு அணைத்து கொண்டார்.
“ஆனா இது போதாது அர்ஜுன்… கண்டிப்பா உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு… நல்ல பொண்ணாத்தான் செலெக்ட் செய்திருப்ப… ஆனா நானும் பார்த்து தான் முடிவு சொல்வேன்… என்ன சரியா?” சற்று கறாரான குரலில் அவர் கூற….
“ஹய்யோ… தாத்தா… இந்தளவு நீங்க சொன்னதே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… கண்டிப்பா நீங்க பார்த்தா அப்படியே மெல்ட் ஆகிடுவீங்க…” என்று சந்தோஷத்தில் கூற.
“என்ன அது?…” சிரித்து கொண்டே அவர் கேட்க.
“மெல்ட்டு… மெல்ட்டு…” சத்யராஜ் பாணியில் கலாய்க்க.
“அடடா இந்த பேரன் பையன் நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறானே…” பதிலுக்கு சத்யராஜ் வசனத்தையே திரும்பி படித்தார் ஈஸ்வரன்… அர்ஜுனுக்கு தான் தாத்தா என்று நிரூபிக்க!
“ஆஹா தாத்தா… சரண்டர் சரண்டர்… இனிமே உங்களை கலாய்ச்சா என்னடான்னு கேளுங்க…” அவரை இரு கை கூப்பி வணங்க… பெருங்குரலெடுத்து சிரித்த ஈஸ்வரன்,
“எது வரைக்கும் டா பையா? அந்த பொண்ணை கல்யாணம் பண்ற வரைதானே?” கிண்டலாக கேட்க.
“ஆனாலும் தாத்தா நீ இம்புட்டு ஷார்ப்பா இருக்க கூடாது… ரெம்ப கஷ்டம் எனக்கு…”
“டேய்… இல்லைன்னா உன்னோட மல்லுகட்ட முடியுமா? திருட்டு பயலே…” என்று காதை பிடித்து திருக.
“ஆஆஆ… இந்த கிழவன் என்னை கொடுமைப்படுத்தறாரே..இதை கேட்க யாருமே இல்லையா?” வேண்டுமென்றே அர்ஜுன் கத்த… அதை பார்த்து மேலும் சிரித்தார் ஈஸ்வரன்.
“இருடா பயலே… என் பேத்தி பொண்ணு வரட்டும்… அவ கூட நான் கூட்டணி போட்டுட்டு உன் கொட்டத்தை அடக்கறேனா இல்லையான்னு பாரு…”
“அது குட்டி சாத்தான்… நீங்க பெரிய சாத்தான்… கூட்டணி சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்… உங்களுக்கு ஏத்த பீஸ் தான் அது…” சலித்து கொள்வது போல கூறியவனின் குரலில் அவ்வளவு பெருமிதம்.
ஒரு பக்கம் ஈஸ்வரனை நினைத்து… மற்றொருபுறம் ஸ்ரீநிதியை நினைத்து!
தாய் தந்தையை பறித்து கொண்டாலும் தனக்கு நிறைவான சொந்தங்களை கொடுத்த இறைவனுக்கு அப்போது நன்றி கூறி கொண்டான்.
“ம்ம்ம்..குட்டி சாத்தான்… பீசு… டேய் மடபய மவனே… நீ மாட்டின… பேத்தி பொண்ணு கிட்ட அத்தனையும் போட்டு கொடுக்க போறேன்…” இடி இடியென சிரித்தார் ஈஸ்வரன்.
“கொடுங்க கொடுங்க… நல்லா போட்டு கொடுங்க… அவளை எப்படி ஏமாத்தறதுன்னு எனக்கு நல்லா தெரியுமே… ஹஹஹா” என்று பதிலுக்கு சிரித்தவனை பார்த்த போது ஈஸ்வரனுக்கு மனம் நிறைவாக இருந்தது.
தான் பெண்ணை பார்த்திருந்தால் கூட இந்தளவு மகிழ்ச்சி அர்ஜுனின் முகத்தில் தெரியுமா? என்று தனக்கு தானே கேள்வி கேட்டு கொண்டார்.
“சரிடா கண்ணா… பேத்தி பேர் என்ன?” சிரித்து முடித்தவர்,மனம் நிறைந்து கேட்க,
அர்ஜுன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போனான்.
“ஹய்யோ தேங்க்ஸ் தாத்தா… தேங்க்ஸ் எ லாட்…”
“ஏன் கண்ணா… பேத்தி பெயரை கேட்டதுக்கு இத்தனை தேங்க்ஸ்ஸா?” அவனை பார்த்து சிரித்தார்… சந்தோஷத்தில் இருந்த அர்ஜுனோ… அவர் முன்பு மண்டியிட்டு அவரது சுருக்கம் பரவிய கைகளை தன்னுள் வைத்து கொண்டு.
“இல்ல தாத்தா… அது இல்ல மேட்டர்… என் மேல வெச்சு இருக்கீங்க பாருங்க… நம்பிக்கை… அதுக்கு தான் நான் தேங்க்ஸ் சொன்னேன்… எப்பவும் அந்த நம்பிக்கைய காப்பாத்துவேன் தாத்தா…” கண்களில் கண்ணீர் சூழ்ந்தது அவனுக்கு! அதை பார்த்த ஈஸ்வரனுக்கும் கண்ணீர் சூழ.
“போடா குறும்புக்காரா… உன் மேல வைக்காம யார் மேல நம்பிக்கை வைப்பேன்?” என்று தோளில் அடிக்க.
“என் செல்ல தாத்தா…” என்று கொஞ்சிவிட்டு தப்பிக்க பார்க்க.
ஓடியவனை இழுத்து பிடித்தார் ஈஸ்வரன்.
“எங்கடா தப்பிச்சு ஓடற? என் பேத்தி பேர் என்ன? ஊர் என்ன? என்ன பண்ணுது? இப்படி எதையுமே சொல்லலை…” அவனது காதை பிடித்து திருக.
“தாத்தா… சொல்றேன் சொல்றேன்…” என்று அவனது செல்பேசியை எடுத்து… காலரியை திறந்து ஸ்ரீநிதியின் படத்தை காட்ட… ஈஸ்வரன் அசந்து போய் பார்த்தார்.
“டேய் தம்பி… பேத்தி ரொம்ப அழகு டா… சரி என்ன பண்ணுது?” பேசியிலிருந்து கண்களை எடுக்காமல் அவனிடம் கேட்க.
“இப்போதான் படிக்கறா தாத்தா… பிஇ நாலாவது வருஷம்… சென்னைல…” என்று ஆரம்பித்து சுருக்கமாக ஸ்ரீநிதியை பற்றி கூறி முடிக்க.
“அப்பா கொஞ்சம் கறாரான ஆள்ன்னு சொல்றியே தம்பி… ஒன்னும் பிரச்சனை வந்துடாதே…” அவருடைய கவலை அவருக்கு.
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் தாத்தா… அவ படிப்பை முதல்ல முடிக்கட்டும் அப்புறம் பேசிக்கலாம்…” என்று தெளிவாக கூறி முடிக்க.
“இன்னும் எவ்வளவு நாள் இருக்கு தம்பி… படிப்பை முடிக்க?”
“இந்த வருஷம் தான் தாத்தா…” நம்பிக்கையாக கூறினான் அர்ஜுன்… அன்று தேதி டிசம்பர் பதினான்கு!






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!