அத்தியாயம் 13
அவளுடனான நீண்டதொரு
நடைபயணத்தில் அச்சாலையினை
கடக்கும் போது மட்டும்
என் கை பிடித்து கொள்வாள்
உங்களுக்கு எப்படியோ தெரியாது
நான் வைத்த பெயர்
கைகோர்க்கும் சாலை!
கடலை பார்த்தவாறு நின்றிருந்த அர்ஜுனின் தோற்றத்திலிருந்து எதையும் கண்டுகொள்ள முடியவில்லை… வந்த அரை மணி நேரமாக எதையும் பேசாமல் கடலை மட்டுமே வெறித்து கொண்டு நிற்குமளவு இவனுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லையே?
ஒரு வேளை வியாபாரத்தில் எதாவது சிக்கலா?
மீள முடியாத துன்பமா?
எதுவாக இருந்தாலும் பகிர்ந்து கொண்டால் குறையுமே என்று வருத்தப்பட்டவள்… அவனது தோளில் கைவைத்து மென்மையாக அழைத்தாள்..
“அர்ஜுன்…”
அவளது அழைப்பை அறிந்தாலும் திரும்பி பார்க்கவில்லை அவன்… அவளது மனதுக்குள் ஏதோ பயப்பந்து உருண்டது.
“அர்ஜுன்… என்ன பிரச்சனை? என்னாச்சு?” சற்றே அழுத்தம் கொடுத்து அழைக்க.
திரும்பி அவளை பார்த்தவனின் கண்களில் அவள் என்றும் காணாத வெறுமை.
“அர்ஜுன்… என்னடா? ஏன்… நீ இவ்வளவு கஷ்டப்பட்டு நான் பார்த்ததே இல்லையே…” அவளுக்கும் பயம் வெகுவாக பீடித்து கொண்டது.
“என்னால தாங்கவே முடியல டெடி…” உணர்ச்சிமயமாக ஒலித்த அவனது குரல் அவளுள் பதட்டத்தை விதைக்க.
“ஏன்… என்னாச்சு? தாத்தா நல்லா தானே இருக்காங்க…” இவன் அவனது தாத்தாவின் மேல் உயிரையே வைத்திருப்பவன் ஆயிற்றே… அவருக்கு எதாவதா என்ற பயம் வேறு! அவளது கண்களில் கண்ணீர் கொட்ட தயாராக இருந்தது.
“அவர் நல்லாத்தான் இருக்கார்… ஆனா எனக்குத்தான்…” என்று இழுத்தவனின் தொனியில் கலவரமானது அவள் நெஞ்சில்!
“ஏன்… என்ன… என்னாச்சு உனக்கு?”
“சொல்லி ஒன்னும் பிரயோஜனம் இல்லை… என்னை விடு… எனக்கு இப்போ தனியா இருக்கனும்…” என்று அவனது காரை நோக்கி நடந்தவனை கோபமாக பார்த்தாள் ஸ்ரீநிதி.
“இப்படி சொன்னா எப்படி அர்ஜுன்… எந்த விஷயமா இருந்தாலும் வெளிப்படையா பேசினா தானே தெரியும்… நீ மட்டும் வெச்சுட்டு கஷ்டபட்டா அப்புறம் நான் எதுக்கு?” கண்களில் கண்ணீர் குளம் கட்டியது!
“உனக்கு சொன்னா புரியாதுடா…”
“நீ சொல்லு… புரிஞ்சுக்கறேன்… எனக்கும் இருபத்தி ஒன்னு முடிய போகுது…”
இரவு அழைத்து… நாளை சென்னை வருவதாகவும்… முக்கியமான விஷயமென்றும் காலேஜ் வாசலில் காத்திரு என்றும் கூறியதே அவன் தான்… காலேஜில் இருந்து அழைத்து வந்ததும் அவன் தான்… ஆனால் என்ன பிரச்சனை என்று தெரிந்தால் தானே தன்னால் எதையாவது செய்ய முடியுமா என்று யோசிக்க முடியும்?
ஒன்றும் கூறாமல் காரின் பின் சீட்டில் அமர்ந்தவனை சற்று கோபமாக பார்த்துவிட்டு அவளும் அதில் அமர்ந்தாள்… இருள் சூழ்ந்து கொண்டிருந்த நேரம் வேறு… இன்னும் கொஞ்ச நேரம் போனால் தாயாரின் தேடல் தொடங்கி விடும்… அதற்குள் சமாளிக்க வேண்டுமே என்ற பயத்தோடு இவனுக்கு என்னவாயிற்று என்ற பயமும் சேர்த்து அவளை அலைகழிக்க… மென்மையாக அவனை கட்டி கொண்டாள்!
“எதுவா இருந்தாலும் சொல்லு அர்ஜுன்… சமாளிக்கலாம்…” அவனுக்கு தைரியம் கூறியவள்… அப்போதுதான் உணர்ந்தாள்… அவனது அணைப்பு இறுகி இருப்பதை!
மிகவும் ஓய்ந்து போயிருக்கிறான்… பாவம்! என்று நினைத்தவள்… அவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஒத்துழைக்க… சற்றே எல்லை மீற துவங்கியிருந்தான் அவன்!
என்னதான் சோகமாக இருந்தாலும் இது தவறாயிற்றே என்ற உணர்வு அப்போதும் அவளுக்குள் எழ.
“அஜ்ஜும்மா… என்னம்மா ஆச்சு? ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா தெரியற…” அவனது முதுகை நீவி கொடுத்தவாறே… நெளிய ஆரம்பித்து இருந்தாள்… அவனது கைகள் எல்லைமீறி பயணித்து கொண்டிருந்ததை உதறவும் முடியவில்லை… அதை அனுமதிக்கவும் முடியவில்லை… மென்மையாக அவனது கைகளை விடுவித்தவள் அவனது முகத்தை நிமிர்த்த.
“ரொம்ப கஷ்டமா இருக்கு டெடி… இப்படி போய் நான் மாட்டிக்குவேன்னு நினைக்கவே இல்லை… எப்படியாவது தப்பிச்சுடலாம்ன்னு நினைச்சேன்…” மிகவும் வருத்தமாக கூறிவிட்டு மீண்டும் அவளை அணைத்து கொள்ள.
“எங்க போய் டா மாட்டினே? எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்… விடு… நான் இருக்கேன்ல…” என்று உணர்ந்து கூற.
“அதான்… அதே தான்… உன்கிட்ட தான் மாட்டிகிட்டேன்டி ரசகுல்லா…” கழுத்தில் முத்தமிட்டு கொண்டே அவன் கூறுவதை கேட்டவளுக்கு முதலில் ஒன்றுமே விளங்கவில்லை.
“என்னடா சொல்ற?” இயல்பாக கேட்க.
“ஆமா டெடி… எப்படியாவது உன்னை கழட்டி விட்டுடலாம்ன்னு நினைச்சேன்… ஆனா இந்த தாத்தா நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டார்… அதான் அவ்வளவு கஷ்டமா இருக்கு…” சிரிக்காமல் கூற… ஒரு நொடி கழித்தே அவன் கூறியதன் பொருள் புரிந்து கொலைவெறியுடன் அவனை முறைத்தாள்!
மூச்சடைத்தது!
கைகளில் எதுவாவது சிக்காதா என்று சுற்றுபுறத்தை ஆராய்ந்தவள்… எதுவும் கிடைக்காமல் போக… கைகளால் மொத்து மொத்தென்று மொத்த துவங்கி இருந்தாள்.
இந்நேரம் வரை எவ்வளவு பர்பெக்டாக நடித்து… தன்னையும் ஏமாற்றி… கண்ணீர் விட வைத்து… அணைத்து கொள்ள வைத்து… முத்தமிட வைத்து.
“டேய்… பிராடு… 420… டூமாங்கோலி… என்னையா ஏமாத்துற…” அவனது முடியை பிடித்து ஆட்டு ஆட்டென்று ஆட்டியவள்… அவனை சரமாரியாக அடிக்க.
காரை திறந்து கொண்டு தப்பித்து ஓடினான்… அவளை பார்த்து கிண்டல் சிரிப்பு சிரித்து கொண்டே… !
அவனது சிரிப்பு அவளை மேலும் வெறியேற்ற… அவனை இன்னும் வேகமாக துரத்தினாள்.
“டேய்… பேயே… பிசாசே… காட்டேரி… உன்னையெல்லாம்…” திட்டுவதற்கு வேறு வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாற.
“பின்ன என்ன ரசகுல்லா… நாலாவது வருஷமா இந்த முகத்தையே பார்க்கவே செம போர் அடிக்குது… இதுல கல்யாணம் வேறயா?” என்று கிண்டலடித்து கண்ணடித்தவன் அவளிடம் சிக்காமல் ஓடி போக.
“போர் அடிக்குதா? பிராடு! கழட்டி விடணுமா? அதை முதல்ல செய்… எருமை… நானாவது தப்பிப்பேன்… உன்னோட தொந்தரவுல இருந்தது…” அவனை பிடித்திழுத்து மேலும் இரண்டு அடி வைத்தவள் ரோஷமாக கூற.
“அடிப்பாவி… நான் உனக்கு தொந்தரவா? நான் திருச்சி போனதுக்கு அப்புறம் எனக்கு போன் பண்ணி எப்படா வர்றன்னு என்னை கேட்க கூடாது…” குறும்பு சற்றும் குறையாமல் அவன் கிண்டல் செய்ய, அதற்கும் ரோஷமாக,
“கண்டிப்பா கூப்பிடவே மாட்டேன்…” சிலிர்த்து கொண்டு கூறினாள் ஸ்ரீநிதி!
“உன்னை பார்க்காம சாப்பிட முடியலை… உன்னை பாக்காம தூங்க முடியலை… உன்னை பார்க்காம எக்ஸட்ரா எக்ஸ்ட்ரா எல்லாம்…” என்று கூறி கொண்டே போக… அவள் வாய் மேல் கைவைத்து.
“டேய் படுபாவி… இப்படியெல்லாம் எப்படா உன்கிட்ட நான் சொல்லியிருக்கேன்… இதெல்லாம் நீ சொல்ற வசனம்…” வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு கடுப்பாக கூற.
“இதெல்லாம் நீ சொல்ல வாய்ப்பு இருக்குமான்னு பார்த்தேன் ரசகுல்லா… நீ எங்கடி சொல்ல போற?” என்று கண்ணடித்தவனை மீண்டும் துரத்தினாள் ஸ்ரீநிதி!
அவளிடம் சற்று நேரம் போக்கு காட்டியவன், அவனாக விருப்பத்துடன் அவளது கைகளில் சிக்க,
“ஏன்டா… எவ்வளவு பயமுறுத்தி… என்னவெல்லாம் சொல்லி… பிசாசு… என்னை அழ வைச்சுட்டியே…” அவளிடம் தானாக வந்து சிக்கியவனை அடித்தாலும் அவளது கண்களை இருந்து கண்ணீர் வர… அதை அவனால் பொறுத்து கொள்ள முடியவில்லை.
“ஹே டெடி… ஜஸ்ட் விளையாட்டுத்தானே… இதுக்கு போயா இப்படி அழுவ…” என்று அவளது கண்களை துடைக்க,
“போடா லூசு… என்கிட்டே பேசாதே…” இப்போது அவள் முறுக்கி கொள்ள.. அவளை இறுக்கி அணைத்து பிடித்தவன்… கண்ணோடு கண் கலக்க விட்டான்.
அந்த கண்களில் குறும்புத்தனத்தோடு டன் கணக்கில் காதல் வழிந்தது.
அதை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது!
“ரசகுல்லா… இந்த சண்டை கூட இல்லாம என்னடி நாம லவ் பண்றது? அப்புறம் நம்ம பிள்ளைங்க பேர பசங்களுக்கு என்ன லவ் ஸ்டோரிய சொல்றது? நமக்கு அறுபதாம் கல்யாணம் ஆகும் போதும் நாம இதே காதலோட ஆசையோட இருப்போம் டெடி…”
அவளது கண்களை பார்த்து அவன் கூறிய வார்த்தைகள் அவளது நெஞ்சில் இனித்தது.
அவளை அழ வைத்தாலும் சிரிக்க வைத்தாலும் எவ்வளவு குறும்புத்தனத்தை செய்தாலும் அவளால் அவனை உண்மையில் விட்டு கொடுத்து விட முடியாது… இந்த நான்கு வருடங்களில் இது போல ஆயிரம் சண்டைகள் வந்திருக்கலாம் ஆனால் ஒவ்வொரு முறையும் அன்பு கூடிக்கொண்டே சென்றதே அன்றி குறைந்ததே இல்லை.
அதை நினைக்கும் போது அவளுக்கு மிகப்பெருமையாக இருந்தது.
தன்னை இன்னுயிரென சுவாசிக்கும் காதலன் இவன்!
இருவரின் காதலை பற்றி மனதுக்குள் அசை போட்டபடி அவனை அழுத முகத்தோடு பார்க்க… அந்த சிவந்த முகமும் அவனை ஈர்த்தது.
அவள் எப்படி இருந்தாலும் அவளை ரசிப்பானே!
ஆனால் அதை அப்படியே விட்டு விட்டால் அவன் அர்ஜுன் இல்லையே!
“ஆனா… ஒரே ஒரு ரெக்வஸ்ட் டெடி…” மிகவும் சீரியசாக முகத்தை வைத்து கொண்டு கேட்க… என்னவென்பதை போல அவள் பார்த்தாள்.
“தயவு செய்து அழாத… ரொம்ப கேவலமா இருக்க…” என்று கூறிவிட்டு கண்ணடித்தவன்… அவளிடம் மேலும் சிலபல அடிகளை இலவசமாக பெற்றான்… எவ்வளவு தான் வாங்கினாலும் அவன் அடங்க போவதில்லை என்பதை என்றோ உணர்ந்து கொண்டவள் ஸ்ரீநிதி!
“நான் தான் கேவலமா இருக்கேனே… அப்புறம் எதுக்கு என்னை கட்டிக்கற? போ… உனக்கு அழகா அழற எவளாச்சும் கிடைப்பா… அவளை போய் கட்டிக்க…”
அவன் முன்னே விரலை நீட்டி பேச.
“கைநீட்டி பேசாதன்னு எத்தனை தடவை சொல்றேன்…” என்று அவளது கையை இழுத்து தன்னோடு இறுக்கமாக முதுகோடு கட்டி கொண்டவன், அவளை தன்னோடு சேர்த்துக்கொண்டான்.
பின்கழுத்தில் முத்தமிட்டு.
“எவ்வளவு அசிங்கமா இருந்தாலும் எனக்கு உன்னை தானே பிடிக்கும் ரசகுல்லா…” என்று மீண்டும் முத்தமிட முயல… அவனிடம் இருந்து வலுகட்டாயமாக தன்னை பிரித்து கொள்ள முனைந்தாள்!
“இப்படியே என்னை ஏமாத்திகிட்டே இரு அர்ஜுன்… ஒருநாள் நான் உன்னை ஏமாத்தி அழ வைக்கறேன்…”
சிறு பிள்ளையை போன்ற சவால் தான்… ஆனால் அது உடனே பலிக்க போவதை உணர்ந்திருந்தால் அவள் அவ்வாறு கூறியிருக்க மாட்டாளோ?
நடந்த அத்தனையும் மறைவான இடம் என்றாலும் இருவரும் ஓடி பிடித்து விளையாடியது முதல் அனைத்தையும் இரு கண்கள் பார்த்து கொண்டே இருந்தன… அவை கோபத்தில் கொதித்து கொண்டும் இருந்தன!
அது புருஷோத்தமன்!
ஸ்ரீநிதியின் தந்தை!
*****
கடற்கரையில் எதையும் பேசாமல் மெளனமாக அழைத்து வந்திருந்தார் வீட்டுக்கு! தன் மகள் முன் பின் தெரியாத ஒரு வாலிபனுடன் கடற்கரையில் அவ்வளவு நெருக்கமாக விளையாடி கொண்டிருப்பதை பார்த்த புருஷோத்தமனுக்கு ரத்தம் கொதித்தது.
விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்த அவர்களின் முன் சென்று எதுவும் பேசாமல் நிற்க… ஸ்ரீநிதி அதிர்ந்து போய் பார்த்தாள்… தந்தையை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை… என்னவென்று பார்வையால் கேட்ட அர்ஜுனிடம் அப்பாவென கூற… அவன் வெகு இயல்பாக.
“ஹாய் மாமா…” என்று கைகொடுக்க வர… அவனை முறைத்தார்!
“ஓகே ஓகே… இங்க எதுவும் பேசலை… நீங்க முன்னாடி போங்க… நான் ஸ்ரீநிதியை அழைச்சுட்டு வரேன்…” மிகவும் மென்மையாக அவன் கூற… அவனை எரிப்பது போல பார்த்தார்.
“என் பொண்ணை எனக்கு கூட்டிட்டு போக எனக்கு தெரியும்… உன் வேலைய பார்த்துட்டு போ…” என்றவர்… ஸ்ரீநிதியை பார்த்து.
“வண்டிக்கு போ…” வெகு அழுத்தமாக கூறினார்… அவர் பொதுப்பணித்துறையில் இருப்பதால் அவருடைய உபயோகத்திற்கு ஜீப் இருந்தது.
“அப்பா… ப்ளீஸ்…” கெஞ்சுதலாக கேட்ட மகளை மேலும் முறைக்க… அந்த பார்வைக்கு அஞ்சி அவள் பேசாமல் ஜீப்பில் அமர்ந்தாள்!
அதே முக இறுக்கத்தோடு வீட்டிற்கு வந்தவர்… ஸ்ரீநிதியை முன்னே விட்டு பின்னே உள்ளே நுழைந்தார்.
இருவருமாக உள்ளே நுழைவதை கண்ட ஜெயந்திக்கு ஏதோ பிரச்சனை என்று மட்டும் புரிந்தது… கூண்டு புலியை போல அடக்கிவைக்கப்பட்ட கோபத்தோடு நடை பயின்று கொண்டிருந்த கணவனை பார்த்து உள்ளுக்குள் சில்லிட்டது.
“ஏங்க… என்னாச்சு?” மென்மையாக கேட்டவரை முறைத்தவர்.
“பொண்ணு வளர்க்கற லட்சனமாடி இது?” பளாரென அறைந்தார்!





