அத்தியாயம் 14
யாருக்கும் கேட்டிராத
மௌனம் நான்
என் தனிமையில்
வந்து போகும்
பிம்பம் நீ!
“பொண்ணு வளர்க்கற லட்சனமாடி இது?” என்று பளாரென அறைய… ஜெயந்தி சுருண்டு விழுந்தார்… அவருக்கு எதுவுமே புரியவில்லை… ஆனால் அதை கண்ட ஸ்ரீநிதிக்கு பகீரென்றது!
கண்டிப்பாக இந்த எதிர்ப்பை சமாளித்து தான் ஆக வேண்டும்… ஆனால் இவ்வளவு விரைவில் வருமென்று அவள் நினைக்கவில்லை… ஒரு புறம் படிப்பும் அவளது கண் முன் வந்து போக… மறுபுறத்தில் பெற்றோரின் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டுமே என்ற பயம் அவளது மனதை பிசைந்தது… ஆனால் அனைத்தையும் மீறி அர்ஜுன் கண்டிப்பாக தனக்கு தேவை என்பதை அவளது மனது முழுவதுமாக உணர்ந்த தருணமது!
அர்ஜுன் இல்லாத வாழ்கையை அவளால் நினைத்தும் பார்க்க முடியவில்லை… உயிரோடு கலந்து உணர்வோடு ஒன்றிவிட்டவனை எப்படி விட்டு கொடுக்க முடியும்?
இதை தந்தை புரிந்து கொள்வாரா?
அவர்களை பொறுத்தவரை பிள்ளைகளுக்கு பாதுகாப்பான வாழ்க்கை அமைத்து கொடுக்க வேண்டுமென்பது மட்டுமே ஒரே எண்ணமாக இருக்கையில், திடீரென்று காதலென்று வந்து நிற்பது அவர்களுக்கு எத்தகைய அதிர்வினை தருமென்று எண்ணினாள்.
அர்ஜுனை தனக்கு தான் பழக்கம்… அவனை பற்றி தனக்கு தான் தெரியும்… அவர்களுக்கு தெரியாதே!
அப்படி இருக்கும் போது எப்படி அவர்களால் சட்டென்று சம்மதம் தெரிவிக்க முடியும் என்று தோன்றியது.
அவர்களுக்கு புரிய வைக்க வேண்டியது தன்னுடைய கடமை என்று முடிவெடுத்து கொண்டாள்.
எப்படி இருந்தாலும் தன்னை பெற்று இத்தனை நாட்கள் வளர்த்த தாய் தந்தை அல்லவா!
அவர்களின் ஆசி இல்லாத வாழ்க்கை தனக்கு சரி வருமா என்று கேள்வியும் எழுந்தது!
எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் எந்த நிலைக்கு சென்றாலும் அர்ஜுன் மட்டுமே தனக்கு என்பதை மனதில் திண்ணமாக எண்ணி கொண்டாள்!
தன்னுடையது உண்மையான காதலென்பதை அவர் உணர்ந்து கொண்டால் போதுமே.
தந்தையின் எத்தகைய அடிகளையும் சமாளிக்க துணிந்து அவர் முன்பு நின்றாள்.
“அப்பா… உங்களை பொறுத்தவரை நான் தானே தப்பு செய்தேன்… என்னை என்ன வேண்டுமானாலும் கேளுங்க… அடிங்க… அம்மா பாவம்…”
துணிந்து சொல்லிவிட்டாளே தவிர உள்ளுக்குள் தடதடத்தது!
நெஞ்சுக்குள் ரயில் வண்டி ஓடியது!
“அவ்வளவு பெரிய ஆளாகிட்டீங்க இல்லையா… நீங்க எல்லாம்…” என்று அவரது பெல்ட்டை உருவியவர்… பளாரென அதை கொண்டே அடிக்க… ஸ்ரீநிதியின் கண்களில் பூச்சி பறந்தது!
அம்மாவென கத்த போன வாயை அவளாகவே அடைத்து கொண்டாள்.
கூடாது… பெற்றோரின் முன் தன் மனஉறுதி தளர கூடாது என்று ஏனோ தோன்றியது! கத்திவிட்டால் மனஉறுதி காற்றோடு கரைந்து விடும்… அது கரைய கூடாது.
அர்ஜுன் வேண்டும்! தனக்கு அர்ஜுன் வேண்டும்!
மந்திரம் போல அவள் தனக்குள் முணுமுணுத்து கொள்ள… புருஷோத்தமனுக்கு கோபம் ஏறியது!
“இன்னமும் மூன்று பேருமே எங்களுக்கு குழந்தைங்க தான்… நாங்க அப்படிதான் நினைக்கறோம்… உங்களை பற்றியெல்லாம் எவ்வளவு கனவு கண்டு வெச்சுருப்போம்… அதையெல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு நீயா ஒருத்தனை தேடிக்கிட்டு வருவ… அதை நான் ஒத்துக்கனுமா?” ரவுத்திரமாக அவள் முன்பு நின்று கேட்டவரை கண்களில் நீரோடு பார்த்தாள் ஸ்ரீநிதி!
அவர் கூறுவதும் உண்மைதானே!
குழந்தை பிறந்தது முதல் அது வைக்கும் முதல் எட்டிலிருந்து வாழ்க்கையில் அந்த குழந்தைக்காக எத்தனையோ விட்டு கொடுத்து வாழ்கின்றனர் பெற்றவர்கள்,… அவர்களுக்கு ஆயிரம் கனவுகள்!
பிள்ளைகளுக்காக!
ஆனால் அர்ஜுன் நல்ல சாய்ஸ் தானே… இவர்களாக தேடினால் கூட இப்படிப்பட்டவனை கண்டு கொள்ள முடியுமா?
மனதோடு பேசத்தான் முடிந்தது… அதை அப்படியே தந்தையிடம் கூற முடியாது!
புரிய வைக்க வேண்டும்!
“அப்பா… கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்கப்பா… அர்ஜுன் ரொம்ப நல்லவர்… என்னை ரொம்ப விரும்பறார்ப்பா… ப்ளீஸ் பா… எங்களுக்கு இப்ப கல்யாணம் செய்துக்கவெல்லாம் இஷ்டம் இல்லை… படிப்பு முடிஞ்சவுடனே உங்க கிட்ட நானே வந்து சொல்லனும்ன்னு நினைச்சேன்…” என்று அழுகையில் கரைந்து கொண்டே கூறியவளின் வார்த்தைகள் புருஷோத்தமனின் காதுகளை சென்றடைய மறுத்தன!
“அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்… உன்னை பெற்று வளர்த்த எங்களுக்கு தெரியாதா உன்னை எப்ப கட்டி தரனும்? யாருக்கு கட்டி தரணும்னு… அதுக்குள்ள உனக்கென்ன அவசரம்? எவ்வளவு தைரியம் இருந்தா இப்பவே கல்யாண பேச்செல்லாம் பேசுவ?” சரமாரியாக அடித்து கொண்டே கேட்டவரை தடுக்கும் வழி தெரியாமல் விழித்தார் ஜெயந்தி.
“ஸ்ரீநிதி சொன்னா புரிஞ்சுக்குவாங்க… வயசு வந்த பெண்ணை இப்படி அடிக்காதீங்க…” ஜெயந்தி அவரை தடுக்க பார்க்க… மீண்டும் அவரையும் அறைந்தார் புருஷோத்தமன்.
“நீ வாயை மூடு… இவ செய்துட்டு வந்த வேலைக்கு…” என்று ருத்திரதாண்டவம் ஆட… முடிந்தவரை ஸ்ரீநிதியை காப்பாற்ற தான் நடுவில் புகுந்து கொண்டார்.
அவருக்கும் தன் மகளின் காதல் மிகப்பெரிய அதிர்ச்சிதான் எனும் போது என்ன பேச முடியும் அவரால்!
“படிக்கற வயசுல கல்யாணத்தை பற்றி பேசற அளவு வந்துட்டியா நீ?”
சரமாரியாக அடி விழுந்தது அவளுக்கு!
நடுவில் வந்து தடுத்த ஜெயந்திக்கும் பாதி அடி விழ… அவரும் துவண்டு போனார்… உள்ளுக்குள்.
“இது என்ன மிருகத்தனம்…” என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை… ஸ்ரீநிதியிடம் நல்ல மாதிரியாக கூறினாலே புரிந்து கொள்வாளே என்ற தவிப்பு வேறு அவருக்கு!
அத்தனைக்கும் வாய் மூடி பல்லை கடித்து கொண்டு பொறுத்து கொண்டாள் ஸ்ரீநிதி!
பள்ளியிலிருந்து வந்திருந்த ஸ்ரீமதி தந்தையின் வெறியாட்டத்தை பார்த்து பயந்து போயிருந்தாள்! பயத்தில் உறைந்து மூலையோடு அடங்கி போயிருந்தாள்!
விவேக் ஹாஸ்டலில் இருந்ததால் அவன் இதையெல்லாம் அறியவில்லை.
அவர்களுக்கு இதெல்லாம் புதிது!
“அப்பா… அர்ஜுனை கூப்பிட்டு வெச்சு பேசிப்பாருங்கப்பா… உங்களுக்கே பிடிக்கும்… நல்லா படிச்சு இருக்கார்… நல்ல தொழில் பண்றார்… இதுக்கு மேல என்னப்பா வேணும்?” கதறினாலும் அர்ஜுனை எப்படியாவது தந்தைக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்ற நினைவில் கூறிய வார்த்தைகளனைத்தும் விழலுக்கு இறைத்த நீரானது.
அடித்து ஓய்ந்து அமர்ந்தவருக்கும் கண்களில் கண்ணீர்!
“அவனை என்ன பார்த்து பேசுறது? நல்லா அழகா இருக்க பொண்ணுங்களை மயக்கி கடத்தி கொண்டு போய் பாம்பேல இல்லன்னா கல்கத்தால வித்துடுவானுங்க அது தெரியுமா உனக்கு? இப்போ என்ன வயசு உனக்கு? வெறும் இருபது முடிஞ்சு இருக்கு… அதுக்குள்ளே உனக்கு வாழ்க்கைய பற்றி என்னம்மா தெரியும்?”
“எனக்கு நாப்பத்தி ஏழு வயசுன்னா அவ்வளவு வருஷ அனுபவம்… என் அனுபவத்துல எத்தனை பேரை பார்த்து இருக்கேன்… பிடிச்சுதுன்னு கட்டிக்கிட்டு மூணாவது மாசமே அத்து விட்டுட்டு போற எத்தனையோ பேரை பார்த்து இருக்கேன்… காதலிக்கற வரைக்கும் தான் எல்லாமே அழகா தெரியும் ஸ்ரீநிதி… கல்யாணம்ன்னு ஒன்னு முடிஞ்சுதுன்னா அவனுங்க வேலைய காட்ட ஆரம்பிச்சுடுவானுங்க ம்மா… அப்பா சொல்றேன்… புரிஞ்சுக்கோ ஸ்ரீநிதி…”
ஓய்ந்து போய் அவள் முன்பு அமர்ந்தவர் நல்லபடியாக அவளுக்கு எடுத்து கூற ஆரம்பித்து இருந்தார்.
தன்னுடைய வழிக்கு அவளை கொண்டு வந்து விடலாம் என்று அவரும்… அவருடைய வழிலேயே சென்று அவரை தன் வழிக்கு கொண்டு வரலாம் என்று அவளும் நினைக்க… யார் தான் வெற்றி பெற முடியும்?
“அப்பா… நீங்களா கட்டி வைக்கிற கல்யாணத்துலயும் இந்த ரிஸ்க் இருக்குப்பா… அவரை பற்றி எனக்கு நல்லா தெரியும்..அவர் ரொம்ப ஜென்யுயின்… ப்ளீஸ் ப்பா… ஒரு தடவை… எனக்காக ஒரு தடவை அவர் கிட்ட பேசிப்பாருங்கப்பா… ப்ளீஸ்…”
முழங்காலிட்டு கதறி அழுது கொண்டிருந்தவளை பார்க்கும் போது ஜெயந்தியின் அடி வயிறு கலங்கியது… பிறந்தது முதல் எதற்காகவும் அவளை அடித்ததே இல்லையென்று கூறுமளவு அனைத்தையும் புரிந்து நடந்து கொள்ளும் பெண் எப்படி இந்தளவு இதில் பிடிவாதமாக இருக்கிறாள்? மனம் வலித்தது.
ஒரே நொடியில் தான் பெற்று வளர்த்த பெண் தன்னை விட்டு வெகு தூரம் சென்று விட்டது போன்ற உணர்வு.
“எத்தனை தடவை சொன்னாலும் கேட்க மாட்ட தானே…” என்று மீண்டும் கோபாவேசமாக கூறியவர்… மீண்டும் பெல்ட்டினால் பதம் பார்க்க ஆரம்பித்தார்.
ஜெயந்திக்கு தடுத்தே ஆக வேண்டும் என்று தோன்றினாலும் கணவனுக்கு இந்த அளவு கோபம் வருவதென்பது மிகவும் அரிது… ஆனால்… கோபம் என்று வந்துவிட்டால் நரசிம்ம அவதாரம் எடுத்து விடுபவரின் நடுவில் செல்ல அவருமே அஞ்சுவார்!
பல்லை கடித்து கொண்டு அடிகளை வாங்கிகொண்டிருந்தவளை காரை அவசரமாக நிறுத்தி விட்டு வந்த அர்ஜுன் பார்த்து துடித்து போனான்… அவனை யாரும் வாவென்று அழைக்கவும் இல்லை!
அதை அவன் எதிர்பார்க்கவும் இல்லை.
முகமெல்லாம் அழுது சிவந்து கைகளில் பெல்ட் அடி வாங்கியதன் அடையாளம் வரிகளாக!
உயிரே போய்விட்டது போல உணர்ந்தான் அர்ஜுன்.
ஒரு அரைமணி நேரமாகி இருக்குமா? அதற்குள் அவர் ஆடிய வெறியாட்டத்தை பார்த்தவனுக்கு கட்டுபடுத்த முடியாத கோபம் வந்தது! எப்படி ஸ்ரீநிதியை அவர் இப்படி அடிக்கலாம் என்று! இவள் என்ன மாடா? அதற்கும் ப்ளுக்ராஸ் இருக்கிறதல்லவா?
அதை விடவா இவள் குறைவாகி விட்டாள் என்ற கோபம்!
திருப்பி அடிக்க முடியாத நிலையில் இருப்பவர்களை அடித்து தான் அடக்கி வைக்க வேண்டுமா?
தான் பெற்ற பிள்ளைகளிடம் காட்டும் கோபத்தை போல கோழைத்தனம் வேறெதுவும் இல்லையே!
இது மனிதாபிமானமா? முதலில் இதுதான் மகளாபிமானமா?
பாய்ந்து வந்தவன் அவரது கையிலிருந்த பெல்ட்டை பிடுங்கி எறிந்தான்.
“இன்னொரு அடி அவ மேல பட்டுச்சுன்னா நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…” பற்களை கடித்து கொண்டு கூறியவனை முறைத்து பார்த்தவர்… வாசலை காட்டினார்.
“வெளிய போ…”
“சர்… ஒரு நிமிஷம் பொறுமையா பேசுங்க… எங்க தரப்பு நியாயத்தை சொல்றோம்… என்னை பற்றி விசாரிங்க… அப்புறமும் என்னை பிடிக்கலையா? சொல்லுங்க… நானே கௌரவமா ஒதுங்கி போய்டறேன்..ஆனா ஏன் இவளை இப்படி மாட்டை அடிக்கற மாதிரி அடிக்கறீங்க?”
கோபம் கனன்றாலும் அதை காட்ட வேண்டிய நேரமல்ல இது என்பதை உணர்ந்தவன்… பொறுமையை இழுத்து வைத்து கொண்டு பேச… புருஷோத்தமனுக்கு மேலும் கோபம் பீறிட்டது.
“உன்னோட விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை…”
“சர்… இது வறட்டு பிடிவாதம்…”
“ஆமா… பிடிவாதம் தான்… நீ என்னவா வேண்டுமானாலும் இருந்துட்டு போ… ஆனா எங்க ஜாதியா? அதை சொல்லு…” மிக வெளிப்படையாக அவர் கேட்டுவிட… அவனே அதிர்ந்தான்.
கேவலம் ஜாதிதான் முக்கியமா? அவருடைய ஜாதியில் அயோக்கியனாக இருந்தாலும் திருமணம் செய்து கொடுத்து விடுவாரா? அவ்வளவு எளிதாக போய் விட்டாளா தன்னுடைய ஸ்ரீநிதி?
அதை அவனும் கேட்டுவிட.
“ஆமாம்… ஜாதியும் முக்கியம்… இவளுக்கு பின்னால இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க… அவங்களை எங்க கொண்டு போய் தள்ள சொல்ற?”
“சர்… நான் பார்த்துக்கறேன்… கல்யாணமாகிடுச்சுன்னா இது என்னோட குடும்பம் இல்லையா?” தகைந்து வந்து பேசிய அர்ஜுனை கண்களில் நீரோடு பார்த்தாள் ஸ்ரீநிதி… அவளால் பேச முடியவில்லை… வாங்கிய அடி ஒவ்வொன்றும் அவளை பதம் பார்த்து இருந்தது!
அவனை பார்த்து கையெடுத்து வணங்கினார் புருஷோத்தமன்.
“வேண்டாம் சாமி… நீ ஒன்றும் செய்ய வேண்டாம்… இன்னைக்கு பெரிய இவனாட்டம் வசனம் பேசி எங்க பொண்ணை கொண்டு போய்டுவ… அப்புறம் அவளை ஏமாத்தி நடுத்தெருவுல விட்டா யார் பார்ப்பாங்க? அதுவும் எங்க தலைல தானே விழும்…”
அவருக்கு தெரிந்த சமூக கோட்பாடுகளை… தான் பிடிவாதமாக கடைபிடிக்கும் அந்த கோட்பாடுகளை மகளும் பின்பற்றியே ஆக வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
“நீங்க நினைக்கற மாதிரி நாங்க கெட்டு போய்ட மாட்டோம் சர்… என் கைல தொழில் இருக்கு… எங்க தாத்தா பேர்ல சொத்து இருக்கு… எங்க ஊர்ல எங்க தாத்தா பேர் சொல்ற அளவு பெரிய ஆள் தான்… அதனால உங்க பொண்ணை நடுத்தெருவுல விட்டுடுவேன்னு கனவுல கூட நினைக்காதீங்க…”
அழுத்தமான குரலில் கூற.
“இப்போ நல்லா தான் பேசுவீங்க… கல்யாணம் ஆச்சுன்னா மோகம் முப்பது நாள் ஆசை அறுவது நாள்… அப்புறம் தானே இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் கசக்குதா இல்ல இனிக்குதான்னு தெரியும்?”
“சர்… எனக்கு ஸ்ரீநிதி நாலு வருஷ பழக்கம்… இன்னும் நாற்பது வருஷம் கழிச்சு கேட்டாலும் இப்படித்தான் நான் பதில் சொல்வேன்… உங்க பயம் எல்லாம் நியாயம் தான்… உன் பொண்ணு லைப் பற்றி நீங்க தான் முடிவு செய்யணும்… ஆனா எங்களையும் புரிஞ்சுக்கங்க… நாங்க சும்மா பழகிட்டு டாட்டா சொல்லிட்டு போற கேட்டகரி இல்ல…”
“இப்படியெல்லாம் பேசித்தான் என் மகளையும் ஏமாற்றி வைத்திருக்கிறாயா?” கோபமாக அவர் கேட்க.
“சர்… அவளை நான் ஏமாற்ற மாட்டேன்… அவள் என்னோட ஸ்ரீநிதி…”
“அவள் என்னோட பொண்ணு…”
“அதை அவ சொல்லட்டும்…” இதற்கும் மேல் பொறுமையாக பேச முடியுமென்று அவனுக்கு தோன்றவில்லை.
“அவ என்ன சொல்றது? நான் சொல்றேன்… என் வார்த்தைய தாண்டி ஒரு அடி எடுத்து வைக்க மாட்டா? அப்படி எடுத்து வைச்சா அவளை வெட்டிடுவேன்…”
“சர்… உங்க மிரட்டலை வேற எங்கயாவது வெச்சுக்கோங்க…” என்றவன்… ஸ்ரீநிதி புறம் திரும்பி.
“ஸ்ரீ… வா போகலாம்…” வெகு தெளிவாக அழைத்தான்… புருஷோத்தமனின் முகம் கோபத்தில் கொந்தளித்து கொண்டு இருந்தது.
“இப்ப வரைக்கும் அவ என்னோட பொண்ணுதான்…” அடக்கப்பட்ட கோபத்தோடு அவர் கூற.
“நானும் இல்லைன்னு சொல்லலை… ஆனா அவ என்னை லவ் பண்றா… அதோட இப்போ மேஜர்… சோ அவளுக்கு அத்தனை ரைட்ஸ்சும் இருக்கு…”
குழப்பமே இல்லாமல் கூறியவனை… வெறித்த பார்வை பார்த்தாள் ஸ்ரீநிதி.
“இல்ல அர்ஜுன்… இப்படியெல்லாம் நான் வர மாட்டேன்…” வலியை பொறுத்து கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக அவள் கூற… அதிர்ந்து பார்த்தான் அவன்!
“நான் என்ன தப்பு பண்ணிட்டேன்… உன்னை பிடிச்சு இருந்துது… லவ் பண்ணினேன்… இதில் என்ன தப்பு? பெத்தாங்க இல்லையா… அதான் அடிக்கறாங்க… நீ தப்பானவனா இருந்துடுவியோன்னு அவங்களுக்கு பயம்… அதை இப்படி காட்டறாங்க அர்ஜுன்… உன்னை பற்றி புரிஞ்சுகிட்டு அவங்களே நமக்கு கல்யாணம் செய்து வைக்கட்டும்… அதை விட்டுட்டு இப்படி போனா எனக்கு காலம் முழுக்க ஓடி போய்ட்டாங்கற பேர் தான் இருக்கும்… அது எனக்கு வேண்டாம் அர்ஜுன்…” தெளிவாக கூறியவளை பார்க்கும் போது அர்ஜுனின் மனதில் ஓரத்தில் பெருமை!
தன்னுடைய காதலி எவ்வளவு பொறுப்பானவள் பார் தாத்தா என்று அவனுடைய தாத்தாவிடம் அப்போதே கூற வேண்டும் போல இருந்தது… ஆனாலும் இங்கு இருக்கும் சூழ்நிலைகள் சற்றும் உவப்பாக இல்லையே!
அவனுடைய அடிமனதில் பயம் எழுந்தது!
“நான் இவனை உனக்கு கல்யாணம் செய்து வைக்கணுமா? அது இந்த ஜென்மத்துல நடக்காது… இனியும் உன்னை வீட்ல வெச்சுட்டு இருந்தா என்ன வேண்டுமானாலும் செய்வ… எவனாவது ஒருத்தன் தலைல கட்டி விட்டுடறேன்… போதுமப்பா சாமி… பொண்ணை பெத்ததும் வளர்த்ததும்!” பெரும் ஆயாசமாக இருந்தது அவருக்கு! அவரை பொறுத்தவரையில் அது அவருக்கான நியாயம்!
“அப்படி எவனோ ஒருத்தன் தலைல கட்டறதுக்கு எனக்கு கொடுத்துடுங்க சர்… மகாராணி மாதிரி வெச்சு காப்பாத்துவேன்…” கடைசி முயற்சியாக அவரிடம் கேட்ட அர்ஜுனை பிச்சை காரனை பார்ப்பது போல பார்த்தார் புருஷோத்தமன்.
“உனக்கு கொடுக்கறதுக்கு பதிலா அவளை வெட்டி கூட போட்டுடுவேன்…” மிகத்தீவிரமான குரலில் கூறியவரின் தொனி அர்ஜுனின் அடி மனதில் பயத்தை பெருமளவில் விதைத்தது… ஸ்ரீநிதியும் வர மறுக்கின்ற நேரத்தில் இவரது இந்த வார்த்தைகள் அவனை திரிசங்கு நிலையில் தள்ளியது.
“ஸ்ரீ… இப்ப கிளம்பறியா இல்லையா?” அழுத்தமான குரலில் அழைத்தவனை கண்ணில் பயத்தோடு பார்த்தாள்… அய்யனாராக ஒரு புறம் காதலன்… மறுபுறம் முனீஸ்வரனாக தந்தை… !
“இப்ப கிளம்பலைன்னா நானே உன்னை கொன்னுட்டு போய்டுவேன்… இத்தனை வருஷமா ஆசை வெச்ச உன்னை விட்டு கொடுத்துட்டு போய்டுவேன்னு மட்டும் நினைச்சுடாத… இப்ப வர்றியா இல்லையா?… ரெண்டுல ஒன்னை சொல்லு…” அவனுக்கு இருந்த கோபத்தில் வெடித்து விடும் நிலையில் இருந்தான்!
“அர்ஜுன்… ப்ளீஸ்… கொஞ்சம் பொறுமையா இரு…”
“என்னையும் அடிக்க வெச்சுடாத ஸ்ரீ… என்னோட பொறுமை பறந்துட்டு இருக்கு… இங்க இருந்தா உன்னை அடிச்சே கொன்னுடுவாங்கடி… இப்ப வர்றியா இல்லையா…” ஆத்திரத்தின் மிகுதியில் கத்தியவனை பார்த்து மிரண்டாள் ஸ்ரீநிதி.
அவளால் அர்ஜுனை எந்த காரணம் கொண்டும் விட்டு கொடுத்துவிடவும் முடியவில்லை.
பெற்றோர்களை பார்வையால் தொடர்ந்தாவாறே அர்ஜுனை தொடர்ந்தவள்… பதில் பேசாமல் காரில் அமர்ந்தாள்.
புருஷோத்தமனுக்கு தான் வாழ்க்கையில் மிகவும் பரிதாபமாக தோற்று விட்டது போல தோன்றியது!
ஸ்ரீநிதிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது!
பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு இப்படி வெளியேறுவோம் என்று அவள் கனவிலும் நினைத்ததில்லையே!
அடுத்த ஒரு மணி நேரத்தில் நண்பர்கள் முன்னிலையில் தெய்வ சன்னிதானத்தில் ஸ்ரீநிதியின் கழுத்தில் பொன் தாலியை அணிவித்து மனைவியாக்கி கொண்டான் அர்ஜுன்!






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!