அத்தியாயம் 15
பக்கத்து வீட்டு சிறுமியோடு
வெகுநேரமாக தாயம் வேண்டி உருட்டுகிறாய்
விழுந்தது என்னவோ நான் தான்!
திருமணம் முடிந்து ஹோட்டலில் சிறு விருந்து வைத்து நண்பர்களையெல்லாம் வழியனுப்பி விட்டு பேருக்கு உணவை உண்டுவிட்டு அர்ஜுனின் அப்பார்ட்மென்ட்டில் அவனது மடியில் தலை சாய்ந்த போது ஸ்ரீநிதிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து.
ஒரே நாளில் மாறிவிட்ட தன் வாழ்க்கையை எண்ணி பார்த்தாள்… ஜீரணிக்க முடியவில்லை… மனைவியை மடியில் தலை சாய்த்து கொண்டவனுக்கும் அதே உணர்வு.
தாத்தாவிடம் நடந்தவற்றை சுருக்கமாக கூறினாலும் அவரது கோபத்தில் இருந்து தப்ப முடியவில்லை.
“டேய் தம்பி… நீ கோபக்காரன்னு தெரிஞ்சு தான் நான் பேசுறேன்னு சொன்னேன்… இப்படி பண்ணிட்டியேடா… என்ன இருந்தாலும் பெத்தவங்க இல்லையா… கோபத்துல நாலு வார்த்தை கூட வர்றது தான்… பேத்தி செய்தது தான் சரி… அவங்களே கல்யாணம் செய்து வைக்கட்டும்ன்னு சொல்லுச்சு பாரு… நல்ல பொண்ணு… அவங்களே கோபம் மாறி கல்யாணம் செய்து வச்சுருப்பாங்க… இப்படி பண்ணிட்டியே கண்ணா…”
செல்பேசியில் ஆதங்கப்பட்டவரிடம் என்ன சொல்வது? அவள் அடி வாங்குவதை தாள முடியவில்லை என்றா? அதையும் கூறினான்.
“இல்ல தாத்தா… அங்க விட்டு வெச்சு இருந்தா அவளை அடிச்சே கொன்று இருப்பாங்க தாத்தா… பெல்ட்ல தாத்தா… அவ வாங்கின அடி எனக்கு வலிக்குது தாத்தா…” அவரிடம் கூறும் போதே அவனது கண்கள் கலங்கி குரல் தழுதழுக்க.
“எப்படி இருந்தாலும் அவங்க பொண்ணுடா… அவங்களுக்கு தெரியாதா?” என்றவரை
“தாத்தா…” அதிர்ந்தான்!
“எவ்வளவோ பேசி பார்த்தேன் தாத்தா… மரியாதையா தான் முதல்ல பேசினேன்… அவங்க அப்பா கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்கலை தாத்தா…”
“புரியுதுடா சாமி… ஆனா இது காலம் முழுக்க கெட்ட பெயர் இல்லையா…”
“எனக்கு மற்றவர்களை பற்றி கவலை இல்லை தாத்தா… நீங்க இல்லாம தாலி கட்டிட்டனேன்னு தான் ரொம்ப வருத்த படறேன்… அங்க கூட்டிட்டு வர்ற அளவு கூட எனக்கு பொறுமை இல்லை தாத்தா… அவ்வளவு தவிச்சு போயிட்டேன்… என்னால அவ அடி வாங்கினதை…” என்று கூறும் போதே அவனது குரல் தழுதழுத்து தேய்ந்து விட.
“டேய் தம்பி… இதுக்கு போய் ஏன் தங்கம் கலங்கற? ஒரு ரெண்டு நாளைக்கு அப்புறம் அவங்க கிட்ட போய் பேசிப்பார்க்கலாம்… நானும் வர்றேன்… முடியலைன்னா நானே ஜாம் ஜாம்ன்னு கல்யாணம் பண்ணி வெச்சுடறேன்… இதுக்கு போய் கலங்கிலாமா?” தாத்தா வெகு சுலபமான தீர்வை கூற… மனதில் இருந்த பெரிய பாரம் இறங்கியது போன்ற உணர்வு!
தன்னுடைய மடியில் தலை சாய்த்து உறங்குவதை போன்ற பாவனை செய்து கொண்டிருந்த மனைவியை பார்த்தான்… அவளது பாவனை தனக்கு தெரியாதா என்ன? கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க அவளை நெஞ்சோடு அணைத்து கண்ணீரை துடைத்தான்!
“ஸ்ஸ்ஸ்… ம்மா…” பெல்டில் அடி வாங்கிய இடங்கள் கன்றி போய் அந்த வலியில் முனகியவளை கண்ட போது மனம் வலித்தது.
திட்டு திட்டாக அடி வாங்கிய வடுக்கள்!
அவளை படுக்க வைத்து விட்டு அவசரமாக மெடிக்கலில் மருந்தை வாங்கி கொண்டு திரும்ப… ஸ்ரீநிதி காய்ச்சலில் அனத்த ஆரம்பித்து இருந்தாள்.
அவசரமாக மாத்திரையை அவளுக்கு கொடுத்தவன் ஒவ்வொரு காயத்துக்கும் மருந்தை இதமாக தடவி விட ஆரம்பித்தான்… உடல் முழுவதும் பெல்ட் வரிவரியாக தடம் பதித்திருக்க… அவனது கண்களில் கண்ணீர்!
ஆண்கள் அழுவது என்பது கோழைத்தனம் என்று எண்ணுபவன்… ஆனால் ஸ்ரீநிதியின் காயங்களை கண்டு அவனால் கண்ணீரை அடக்கி வைக்க முடியவில்லை… தனக்காக வாதிட்டு அத்தனை அடிகளையும் தாங்கியிருக்கிறாள் எனும் போது மனம் வலித்தது.
ஆடைகளை நெகிழ்த்திய போது அந்த காய்ச்சலிலும் அவள் மறுக்க.
அவளது நெற்றியில் இதமாக கண்ணீரோடு முத்தமிட்டவன்.
“லூசு பொண்ணே… இப்ப நீ எனக்கு குழந்தை… அந்த குழந்தைக்கு மருந்து போடறதுதான் முக்கியம்…”
“இல்ல… நானே…” என்று தயங்கியவளை முறைத்து விட்டு முழுவதுமாக அவனே மருந்தை தடவி விட்டு தளர்வாக தன்னுடைய உடைகளை அணிவித்து படுக்க வைக்க விட்டு தானும் அவளோடு படுத்து கொண்டு நெஞ்சில் அவளை தாங்கி கொண்டான்.
காமம் சற்றும் கலக்காமல் பாசத்தை மட்டுமே உரமாக கொண்டு திருமண வாழக்கையின் முதல் நாளினை ஆரம்பித்தான் அர்ஜுன், தன்னுடைய ஸ்ரீநிதியுடன்!
அழுது ஓய்ந்து ஒரு வாராக உறங்க துவங்கியளை கீழே விடவும் மனதில்லை… ஆனால் அவனிடத்தில் அப்போது துளியும் காமம் இல்லை… ஒவ்வொரு சந்திப்பிலும் அவளை அணைத்து கொள்ள துடித்த கைகளும் முத்தமிட்டு முத்தமிட்டு மீண்டும் முத்தமிட துடித்த உதடுகளும் அந்த நினைவே இல்லாமல் அவளை தாங்கி கொண்டிருந்தன!
உனக்கென இருப்பேன்.
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன் கண்மணியே
அழுவதேன் கண்மணியே!
வழித்துனை நான் இருக்க
மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடுகட்டும்.
நம் காதல் தடைகளை தாங்கும்.
வளையாமல் நதிகள் இல்லை.
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வருங்காலம் காயம் ஆற்றும்.
நிலா ஒளியை மட்டும் நம்பி இலை எல்லாம் வாழ்வதில்லை.
மின்மினியும் ஒளிகொடுக்கும்.
தந்தையையும் தாயையும் தாண்டிவந்தாய்… தோழியே.
இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்
தோளிலே நீயுமே சாயும் போது.
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்.
வெந்நீரில் நீ குளிக்க விறகாகி தீ குளிப்பேன்.
உதிரத்தில் உன்னை கலப்பேன்
விழிமூடும் போதும் உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
கனவுக்குள் காவல் இருப்பேன்.
நான் என்றால் நானே இல்லை
நீ தானே நானாய் ஆனேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்.
அவனது கண்களிலிருந்து அவள் மேல் அவன் சிந்திய கண்ணீர் துளியை அவளும் உணர்ந்தாள்… தன் கண்ணீரை பார்த்து அவன் சிந்தும் கண்ணீர் அவளை சொல்லொன்னா விதத்தில் ஆற்றுபடுத்தியது! இவனை விட எனக்கு வேறு யார் சிறந்த கணவனாக அமைத்து விட முடியும் என்று அவளுக்குள்ளே கேட்டு கொண்டாள்.
*****
அடுத்த நாள் காய்ச்சல் விட்டுவிட… சோர்வு மிச்சமிருந்தது!
காலையில் எழும் போது இது என்ன இடம் என்று யோசித்து கொண்டே எழுந்தாள்… சட்டென்று தோன்றும் உணர்வு அது!
தனக்கு திருமணமாகி விட்டதையும் கணவனோடு அவனது வீட்டிலிருப்பதையும் உணர்ந்தவள்… அவசரமாக எழுந்தாள்.
அவள் அணிந்திருந்த உடையை பார்க்கையில் முகம் சிவந்தது… அணிவித்து விட்டவனை அறையில் காணவில்லை.
அவசரமாக முகம் கழுவி சுத்தம் செய்து கொண்டு ஹாலுக்கு போக… அங்கே அர்ஜுன் கண்களை மூடி சோபாவில் சாய்ந்து இருந்தான்.
“அர்ஜுன்…”
கண்களை திறந்து அவளை பார்த்த பார்வையில் குற்ற உணர்ச்சி!
“டெடி… குளிச்சுட்டு உன்னோட சுடிதாரை எடுத்து போட்டுட்டு வா…” எதை பற்றியும் பேசாமல் அதை மட்டும் கூறியவனை விசித்திரமாக பார்த்தாள்… உள்ளுக்குள் பயபந்து உருண்டது!
“ஏன் அர்ஜுன்?”
“ஒரு சின்ன வேலை… கிளம்புடா…”
“ஓகே…” மனமே இல்லாமல் ஓகே கூறிவிட்டு குளித்தவளுக்கு உடல் எரிந்தாலும்… காயங்கள் வெகுவாக ஆறியிருந்தன!
கழுத்தில் புதியதாக இருந்த மாங்கல்யம் அவளை அர்ஜுனின் மனைவி என்பதை அறிவிக்க… அதை தொட்டு பார்த்தவளுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி அலை!
பெருமிதம்!
தன்னுடைய கணவனாகி விட்டவனை நினைத்த போது வந்த பெருமிதம்!
வெட்கமாக இருந்தது… மருந்தை தடவி விட்டபோது தோன்றாத வெட்கம் இப்போது தோன்ற… குளித்து முடித்து விட்டு அவளுடைய சுடிதாரையே அணிந்து கொண்டு வந்தவளை நிமிர்ந்தே பார்க்காமல் அழைத்து கொண்டு வெளியேறினான்!
*****
அவளை அழைத்து கொண்டு அவன் வந்த இடம் வேளச்சேரியில் உள்ள பிரபலமான மருத்துவமனை… அங்கு காலடி எடுத்து வைத்தபோதே என்னவாயிகியதோ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை… யாருக்கு என்னவாயிற்று என்றும் தெரியவில்லை.
ஒரு வேலை தாயோ தந்தையோ… என்று நினைக்க ஆரம்பித்தபோது மனம் கலவரத்தில் ஆழ்ந்தது… முகம் வெளரிப்போய் அர்ஜுனை பார்க்க.
அவன் அவளது கைகளை இருக்க பிடித்து கொண்டு.
“நான் இருக்கேன் டா டெடி… பயப்படாதே…” சப்தமில்லாமல் கூறியவன்… இரண்டாம் மாடிக்கு அவளை அழைத்து சென்றான்.
“அர்ஜுன்… யாருக்கு என்னாச்சு?”
கேட்க தைரியமில்லாமல் இருந்தாலும் அவனுடைய வாயால் கேட்டுவிட்டால் நன்றாக இருக்கும் போல தோன்றியது.
அவனோ பதில் கூறாமல் அவளையே பார்த்து கொண்டிருக்க… அந்த பார்வையில் அவளது படபடப்பு மேலும் அதிகரிக்க.
“சொல்லு அர்ஜுன்…”
“அதெல்லாம் ஒண்ணுமில்லை டெடி… நான் பார்த்துக்கறேன்…”
“அவளை சமாதானப்படுத்தும் விதமாக அவன் கூற… அவளோ வேகமாக தலையாட்டினாள்… மறுதலித்து!
“இல்ல… அர்ஜுன் என் கிட்ட எதையும் மறைக்காதே… என்ன ஆச்சு? ப்ளீஸ் டா…”
“ம்ம்ம்… உங்க அப்பா தான்… ஏதோ பூச்சி மருந்தை சாப்பிட்டுட்டு…” என்று அவன் முடிக்கும் போதே அவளுக்கு தலை சுற்றியது.
கண்கள் சட்டென கலங்கியது… அடித்தாலும் அணைத்தாலும் தந்தை தந்தைதானே!
பெற்ற தந்தை உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என்ற செய்தியில் சகலமும் ஒடுங்க விதிர்விதிர்த்து போனாள்!
“கவலைப்படும் படி ஒண்ணுமில்லடி… நைட்டே நான் தான் அட்மிட் செய்தேன்… உன் தம்பி ஊர்ல இல்லை போல… ஸ்டமக் வாஷ் பண்ணிட்டாங்க… இப்ப ட்ரிப்ஸ் போயிட்டு இருக்கு… அவ்வளவு தான்!”
அவளிடம் எளிமையாக கூறிவிட்டாலும் அட்மிட் செய்வதற்குள் தான் பட்ட துன்பம் வார்த்தைகளில் வடிக்க முடியாதே.
ஸ்ரீநிதியின் தந்தைக்கு ஏதாவது என்றால் காலம் முழுக்க குற்ற உணர்ச்சியில் அல்லவா தவிக்க வேண்டும்… அதோடு எப்படி இருந்தாலும் ஒரு உயிர்… அது போக தான் காரணமாக வேண்டுமா? அர்ஜுன் கலங்கி போனது அவனது மனது மட்டுமே அறிந்த உண்மை.
இரவு ஸ்ரீநிதியின் செல்பேசியில் அழைத்த ஜெயந்தி… அவர் பூச்சிமருந்தை உண்டு விட்டதை சொல்ல கூட முடியாமல் கதற… அவளை அறையில் விட்டு விட்டு அவசரமாக அவளுடைய வீட்டிற்கு ஓடினான் அர்ஜுன்.
அங்கே நுரை தள்ளியவாறு படுத்திருந்த புருஷோத்தமனை பார்க்கையில் அவனுக்கு பகீரென்றது!
இது என்ன முட்டாள்தனம்?
தான் நினைத்தது நடக்கவில்லை என்ற கோபத்தினால் வந்த வெளிப்பாடா?
தன் மகள் தன்னை மீறி சென்று விட்டாளே என்ற ஆற்றாமையா?
சமூகத்தின் போலித்தனமான மரியாதைக்கு பயந்து இந்த காரியத்தை செய்து விட்டாரா?
என்ன மனிதர்கள் இவர்கள் என்று தோன்றியது அவனுக்கு! தான் இறந்தாவது மகளுக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சியை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமா என்ன?
இவையெல்லாம் தோன்றியதே அன்றி அவன் வெளிப்படையாக பேசிவிடவில்லை… அவனை தனியாக அங்கு முதலில் எதிர்பார்க்கவில்லை ஜெயந்தி… ஆனால் அவரால் மீனம் மேஷம் அப்போது பார்க்க முடியவில்லை.. அவருக்கு தெரிந்ததெல்லாம் கணவனின் உயிர்!
அதே நினைவு மட்டுமே அர்ஜுனிடமும்!
அவசரமாக அவரை அள்ளிபோட்டு கொண்டு அந்த மருத்துவமனையில் அட்மிட் செய்து ஸ்டமக் வாஷ் செய்யும் வரை அவனது உயிர் அவனிடம் இல்லை.
மருத்துவர் கவலை இல்லையென்று கூறிவிட்டாலும் இருபத்திநான்கு மணிநேரம் கழிய வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து விட்டு போக… அர்ஜுன் மனதளவில் உடைந்தான்… அருகில் ஜெயந்தி அழுது கரைந்து கொண்டிருந்தார்!
அவரிடம் பேசாமல் அங்கிருந்த சேரில் அமர்ந்தவாக்கிலேயே இருந்தவனுக்கு விடியற்காலையில் மருத்துவரிடம் இனி கவலையில்லை என்ற வார்த்தையை வாங்கும் வரை நிம்மதியாகவே இல்லை அவன்.
அதே உணர்வோடு அப்பார்ட்மென்ட் சென்றவனை எப்போதுமில்லாத வெறுமை தாக்கியது… ஸ்ரீநிதியை நினைத்து மனம் கலங்கியது… அவளது தந்தையின் இந்த நிலைக்கு தன்னை தான் காரணமாக எண்ணுவாளா?
கண்டிப்பாக தன்னுடைய பொறுமையின்மையும் ஒரு காரணம் என்று தோன்றியது… ஆனால் அந்த இடத்தில் அதற்கும் மேல் எப்படி பொறுமையாக இருப்பது என்று தெரியவில்லை அவனுக்கு!
ஒரு வேளை தாத்தா வந்து பேசியிருக்க வேண்டுமோ? அவளை இழந்து விடுவோம் என்ற பயத்தினால் இப்படி ஆகி விட்டதோ?
பலவாறு குழம்பியது மனது!
இனி என்ன?
எதிர்காலத்தை நினைத்தவனுக்குள் பெரிய இருள் சூழ்ந்தது!






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!